
சமீபத்தில் சக வலைப்பதிவர்கள் நிறைய பேர் சமையல் குறிப்புகள் கொடுத்திருப்பதைப் பார்த்தேன். கோ.ராகவன் (பா.ரா. மாதிரி உங்களைக் கோ.ரா.ன்னு கூப்பிடலாமா?) கூட ஹிண்டி மொசுரு பற்றி எழுதியிருந்தார். அவரே செய்து பார்த்தாரா அல்லது யாராவது மண்டபத்தில் செய்து கொடுத்தார்களா என்பது எம்பெருமானுக்கே வெளிச்சம்! :) என்னே ஆண்களுக்கு வந்த சோதனை என்று நானும் முயற்சிசெய்து பார்த்து யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்ற ஒரே "நல்லெண்ணத்தில்" உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்! முன்பு இதனால் "பலன"டைந்தவர்கள் மரத்தடி நண்பர்கள்! எனக்கு மிகவும் பிடித்த காய்கறி "பாகற்காய்"!! ஆதலால் ஆய்கலைகளில் (தட்டச்சுப் பிழையில்லை) ஒன்றான பாகற்காய் பிட்லை செய்வதெப்படி என்ற இந்தப் பதிவைத் தமிழ்கூறும் நல்லுலகிற்குச் சமர்ப்பிக்கிறேன்.
தேவையான பொருள்கள் (இரண்டு நபர்களுக்குப் பரிமாறுவதற்கு. நிச்சயமாக நான் அந்த இரண்டு நபர்களில் ஒருவனில்லை!)
1. கொத்தமல்லி விதை - 4 டேபிள்ஸ்பூன் (நாலு டேபிளுக்கு எங்க போறது? ஸ்பூன் போறாதா என்று கேட்கும் ஆத்மாக்கள் மேலத்தெரு முக்கு மீட்டிங்கில் வந்து சந்திக்கவும்!)
2. கடலைப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் (ஐயா சாமி. இது நிலக்கடலை இல்லை. சமையலுக்கு உபயோகிக்கும் கடலைப்பருப்பு)
3. மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
4. மிளகாய் வற்றல் - 6 அல்லது 7 உதிரிகள்
5. தேங்காய் துருவல் - 5 டேபிள்ஸ்பூன்
6. வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
7. எலுமிச்சம்பழம் - பாதி மூடி(பிழியாதது)
8. உப்பு - தேவையான அளவு
9. பாகற்காய் - கால் கிலோ
10. பெருங்காயம் - கால் அல்லது அரை டீஸ்பூன்
11. பேதி மாத்திரைகள் - ஒரு கைப்பிடி (இது யாராவது வேண்டாதவர்களுக்குச் சமைப்பதாக இருந்தால் மட்டும்)
12. தீயணைக்கும் கருவி மற்றும் முதலுதவிப் பெட்டி!
தாளித்துக்கொள்ளத் தேவையான பொருள்கள்:
அ. கடுகு - 1 டீஸ்பூன்
ஆ. உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்
இ. மிள்காய் வற்றல் - ஒன்று
ஈ. கருவேப்பிலை - ஒரு 'ஆர்க்கு'. இதற்கு முதலில் 'கிளை' என்று எழுதினேன். மனைவி முறைக்கவே பயன்பாட்டில் இருக்கும் 'ஆர்க்கு' ('எல்லாம் அவங்களுக்குப் புரியும்')!!
முன்னெச்சரிக்கையாகச் செய்ய வேண்டியவை:
a. டிவி மெகாசீரியல் நேரத்தில் இதைச் செய்யாதீர்கள்.
b. தலையுச்சியில் செருகியிருக்கும் சீப்பை எடுத்துவிடுங்கள்.
c. ஜலதோஷமாக இருந்தால் தற்காலிகமாக பஞ்சு வைத்து மூக்குக் கணவாய்களை அடைத்துக்கொள்ளவும். அப்படியும் அணை உடைந்துவிட்டால், மேற்சொன்ன பொருட்களில் உப்பு தேவையில்லை.
துவரம்பருப்பு - 1 கப் மற்றும் கொத்துக்கடலை ஊறவைத்தது- அரை கப் இரண்டையும் தனித்தனிப் பாத்திரத்தில் வேகவைத்துக் கொள்ளவும்
புளி- ஒரு எலுமிச்சை அளவு எடுத்துக்கொண்டு நீரில் ஊற வைத்துக்கொள்ளவும் (கொட்டை எடுத்ததா எடுக்காததா என்று கவுண்டர் ஸ்டைலில் கேட்கக்கூடாது!)
பாகற்காயை நீளவாக்கில் நறுக்கிக்கொண்டு எலுமிச்சம்பழத்தை அதன்மேல் பிழிந்துகொள்ளவும். மூடியை பத்திரமாக வைத்துக்கொண்டால் உச்சந்தலையில் பின்பு தேய்த்துக் கொள்ள வசதியாக இருக்கும். வெயிட் அ மினிட் ஃபார் 15 மினிட்ஸ்.
1. சிறிய வாணலியில் (சீனாச்சட்டி, கடாய் அப்புறம் இன்னும் என்னென்னவோ பெயர்களில் இதைச் சொல்றாங்கப்பா. சென்னை "பாஷை"லயும் இதுக்கு எதாச்சும் வச்சிருப்பியே கொசப்பேட்டை?) அரை டீஸ்பூன் கடலெண்ணை அல்லது சூரியகாந்தி எண்ணையில் மேற்குறிப்பிட்டுள்ள பொருட்களில் 1 லிருந்து 6 வரைக்கும் உள்ளவற்றைப் போட்டு வறுத்துக்கொள்ளவும் (அதற்கு முன் அடுப்பை பற்றவைத்துக் கொள்ளுங்கள்.. ஹி.. ஹி..)
2. பெரிய வாணலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணையை நடு சென்ட்டரில் விட்டு அதில் பாகற்காயைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும். வதக்கியபின் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி தூவிக்கொள்ளுங்கள். விரல்களில் ஒட்டியுள்ளவற்றை முகத்தில் தடவிக்கொண்டு, சமைத்து முடித்ததும் குளியுங்கள்.
3. புளியை நீரில் கரைத்து வடிகட்டி, புளி நீரை பாகற்காய் இருக்கும் வாணலியில் ஊற்றுங்கள். கொதி நிலை வரும்வரை காத்திருக்கவும்.
4. அதுவரை வெட்டியாக வேடிக்கை பார்க்காமல், வறுத்த பொருட்களை நீர்விட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். விழுதை பாகற்காய் கொதிக்கும் வாணலியில் போட்டுக் கலக்கிக் கொள்ளுங்கள்.
5. வேகவைத்த துவரம்பருப்பையும் கொத்துக்கடலையையும் அதோடு சேர்த்துக் கலக்குங்கள். உப்பைச் சேருங்கள்.
6. இரண்டு நிமிடம் வாணலியை மூடிவைத்துவிட்டு, 'ஹரே ராமா ஹரே க்ருஷ்ணா' ஸ்லோகம் சொல்லுங்கள். அல்லது 'ஸ்ரீராம ஜெயம்' இருபத்தைந்து முறை எழுதுங்கள். அப்புறம் மூடியைத் திறந்து கிளறிவிட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள்.
7. தாளித்துக்கொள்வதற்காக வைத்திருக்கும் பொருள்களை இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணையில் தாளித்துக்கொள்ளுங்கள் (ஸ்பூனிலேயே தாளித்துத் தொலைக்காதீர்கள்).
8. வாணலியில் இருந்து பாகற்காய் பிட்லையை ஒரு பாத்திரத்துக்கு மாற்றிக்கொண்டு அதில் தாளித்ததை சேர்க்கவும்.
மணமணக்கும் பாகற்காய் பிட்லை ரெடி.
இஷ்ட தெய்வத்தை வணங்கிவிட்டு கடைசியாக ஒருமுறை சிரித்துவிட்டு, 'பிட்லை.. வட்லை.. கட்லை.. எட்லை.. சட்லை.. இட்லை' என்று முன்பு எப்போதோ ஆசாத் பாய் எழுதிய கானாவை ஒருமுறை பாடிவிட்டு, பிட்லையை ஒரு பிடிபிடியுங்கள்!
கீழ்க்கண்ட முக்கிய குறிப்புகளை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
1. பாகற்காயை என்றாலே பி.டி.உஷா கணக்காக ஓடும் உங்கள் கணவர் அல்லது (கணவர் சமைக்கும் பட்சத்தில்) மனைவி உங்கள் பின்னாலேயே நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அலைவார்.
2. செய்முறையில் நடுவில் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டு மனக்கலக்கத்துடன் இருந்தால், நீண்ட நாட்களாய் வீட்டில் நங்கூரம் பாய்ச்சியிருக்கும் விருந்தாளிக்குப் பரிமாறுங்கள். ஒருவேளை நீங்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்து தொலைத்திருக்கும் பட்சத்தில், நங்கூரம் மேலும் ஆழமாகக்கூடிய அபாயமும் இருக்கிறாது.
3. அதுவரை நாகரீகமாகச் சாப்பிட்டுப் பழகிய நீங்கள், முதன் முறையாகச் சாப்பிட்டு முடித்தும், தட்டை இன்னும் வழித்து நக்குவீர்கள்!
***
நன்றி: மரத்தடி.காம்