"தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்"! என்ற வாசகங்கள் கோவிலில் எழுதப்பட்டிருந்தால் அது தமிழுக்கு அவமானம். அவ்வாசகங்கள் அழிக்கப்படும் என்று முதல்வர் கூறியதாகச் செய்தியைப் படித்தேன். கட்டாயம் அழிக்க வேண்டிய விஷயம்தான்.
இது மாதிரி அழிக்க வேண்டிய ஒழிக்கவேண்டிய அசிங்கங்கள் நிறையவே நம் கோவில்களில் நிறைந்திருக்கின்றன. என்னுடைய பட்டியலில் முதலிடத்தில் இருப்பது தமிழ், தெலுங்கு, கன்னட, சமஸ்க்ருத, ஆங்கில அர்ச்சனைகள் இல்லை! எந்த மொழியில் அர்ச்சனை இருந்தாலும் அர்ச்சகர் என்னவோ 'ஙஞணநமன' என்று தான் சொல்லப் போகிறார். எப்படியும் புரியப் போவதில்லை. என்னத்தையோ அர்ச்சித்துவிட்டுப் போகட்டும். நாம் போவது கடவுளைக் கும்பிட. அவருக்கும் நமக்கும் நடுவே அர்ச்சகர்களிலிருந்து நந்தி வரை நிறைய விஷயங்களிருக்கின்றன.
"தர்ம தரிசனம்" என்ற பலகையை எல்லாரும் பார்த்திருப்போம். இது திரையரங்குகளின் தரை டிக்கெட் போன்றது. ஸ்பெஷல் தரிசனம், சிறப்பு ஸ்பெஷல் தரிசனம், என்று ஆரம்பித்து இறைவனின் தோளில் கைபோட்டு நின்று கொண்டு தரிசிக்கும் வரையில் பணம் கொடுத்து, கூட்டத்தில் நசுங்காது சொகுசாகச் சென்று பார்க்கும் தரிசனங்கள் ஏகமாகக் கோவில்களில் இருக்கின்றன. திருவாளர் 'பொதுஜனம்' என்கிற 'பிச்சைக் காரர்' மட்டும் 'தர்ம தரிசனம்' என்ற ஆட்டுமந்தைக்குள் அடைபட்டு, மிதிபட்டு, நசுங்கி, வியர்த்து, 'நகரு நகரு போ போ' என்று சந்நிதானத்தின் கும்மிருட்டு பழகி இறைவனைப் பார்ப்பதற்குள் வெளியில் தள்ளப்பட்டு விடுவார். பின்பு காற்றாட தூணருகே சாய்ந்து உட்கார்ந்து புளியோதரை பொங்கலைத் தின்றுவிட்டு நடையைக் கட்டுவார்.
இன்னும் சில கோவில்களில் தர்மத்துக்குக் கூட தரிசனம் கிடையாது. காசு கொடுத்துப் பார்ப்பது கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. கஷ்டங்களைச் சொல்லிப் புலம்பி ஆறுதல் தேட வருவதே கோவில். அங்கும் இம்மாதிரி இல்லாதவர்களை ஏளனம் செய்வது அந்த ஆண்டவனுக்கே அடுக்காது.
"தர்ம தரிசனம்" என்ற உச்சக்கட்ட வக்கிரத்தை அறிமுகம் செய்தவன் எவன் என்று தெரியவில்லை. இறைவன் முன்பு அனைவரும் சமம் என்ற அடிப்படை நம்பிக்கையையே சிதறடித்து கேலிக்கூத்தாக்கும் இந்த தரிசன முறையை உடனடியாக ஒழித்துக் கட்ட வேண்டும். அனைவருக்கும் ஒரே வரிசை. வரிசையில் முன்னுரிமை தரவேண்டியது முடியாத வயசாளிகளுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் மட்டுமே இருக்க வேண்டும்.
சினிமா தரை டிக்கெட்டிலாவது திரைக்கருகில் ரசிகனை இருக்க விடும். இங்கே தர்ம தரிசனம் இறைவனிடமிருந்து பக்தனை எங்கோ தூரத்தில் தள்ளுகிறது.
நான் ஒன்றும் தர்ம தரிசனத்தில் மட்டும் வீம்பாக நின்று சாமியை தரிசித்த "பெரிய புடுங்கி" இல்லை. இந்த எழவுகளுக்காகவே கோவில்களுக்குச் செல்வதில்லை என்று இருந்தாலும் சில நேரங்களில் பெரியவர்கள் மனம் கோணாது இருக்கச் சென்ற நேரங்களில் காசு கொடுத்துப் போய் கசங்காமல் பார்த்ததுண்டு. ஆனால் அப்படி இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கையில் எனக்குப் பின்னே கூட்டமாகக் குழுமியிருக்கும் தர்ம தரிசன வரிசை பக்தர்களின் பார்வையிலிருந்து இறைவனை நான் மறைத்துக் கொண்டிருக்கும் குற்ற உணர்ச்சி முதுகில் ஊசிகளாக ஒவ்வொரு முறையும் குத்தியிருக்கிறது.
இந்தக் கட்டண தரிசன முறையை ஒழிக்கும் அரசு கடவுளால் ஆசிர்வதிக்கப்படும்.
***