இந்தியா சீனாவுக்கு பயிற்சி பெறுவதற்காக 107 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு விஸா வேண்டி விண்ணப்பித்திருந்தது. 107-இல் ஒருவர் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தியர். அவருடைய விண்ணப்பத்தை மட்டும் நிராகரித்த சீனத் தூதரக அதிகாரிகள் நிராகரிப்புக்குக் குறிப்பிட்ட காரணம்தான் மேலே குறிப்பிட்ட செய்தி!!
'ஏற்கனவே மாநிலத்தின் பல பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்துள்ளது. இப்போது மாநிலமே எங்களுடையது என்று சொல்கிறது. இது கண்டனத்துக்குரியது என்று அருணாச்சல மாநில முதல்வர் தெரிவித்திருக்கிறார்.
அடுத்ததாக சர்வ வல்லமை பொருந்திய, வெளிநாடுகள் சீண்டிப் பார்க்கவே அஞ்சும் நம் தேசத்தை ஆளும் தலைவர்கள் கீழ்க்கண்ட அதிரடி நடவடிக்கைகளை எடுக்கப் போகிறார்கள் என்று ஊகிக்கிறேன்.
1. எல்லா செய்தித்தாள்களிலும் 'அருணாச்சலம் எங்கள் மாநிலம். அதில் கையளவு நிலத்தைக் கூட - 'ஏழைகளுக்கு இலவச நிலம்' போன்ற திட்டம் மூலமாகக் கூட - யாருக்கும் விட்டுத் தர மாட்டோம்' என்று நாள் தோறும் மத்திய அரசு அறிக்கை வெளியிடும்.
2. சீனாவின் அருணாச்சலப் பிரதேச ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஐ.நா. சபையில் இந்தியத் தூதர் பிரச்சினை எழுப்புவார்.
3. அரசியல்வாதிகள் ராஜஸ்தானில் அடையாள உண்ணாவிரதம் இருப்பார்கள்
4. உள்நோக்கத்துடன் அருணாச்சல மாநிலத்தை சீனாவின் பகுதியாக வரைபடத்தில் சித்தரித்திருந்த அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்திய அரசு கண்டனம் வெளியிடும்
5. 2020-இல் இந்தியப் பிரதமர் அருணாச்சல மாநிலத்திற்கு 'அமைதிப் பேருந்து' ஒன்றின் முதல் 'வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணத்தைக்' கொடியசைத்துத் துவக்கி வைப்பார்.
6. IoAP-க்கும் CoAP-க்கும் சர்வதேச எல்லை ஒன்றை வரையறை செய்ய இந்தியாவும் சீனாவும் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளும்.
7. அனுதினமும் அந்தச் சர்வதேச எல்லையில் 'ஒப்பந்தத்தை மீறுவதாக' இந்தியா மீது சீனாவும், சீனா மீது இந்தியாவும் குற்றம் சாட்டிக் கொள்ளும்.
8. 'அருணாச்சல மாநிலத்தின் சட்டசபையைத் தவிர அனைத்துப் பகுதிகளையும் சீனா ஆக்கிரமித்துள்ளது. இப்போது சட்டசபையையும் சீனாவைச் சேர்ந்தது என்கிறது. இது கண்டனத்துக்குரியது' என்று அருணாச்சலப் பிரதேச முதல்வர் அறிக்கை வெளியிடுவார்.
9. 'அருணாச்சல மாநிலத்தில் நுழைவதற்கு இந்தியர்கள் விஸா வேண்டி விண்ணப்பிக்கும் நடைமுறை 2021 ஜனவரியிலிருந்து அமலுக்கு வருகிறது' என்று சீனா செய்தித் தாள்களில் செய்தி வரும்.
10. சீனப் பிரமர் இந்தியாவுக்கு விஜயம் செய்து சிவப்புக் கம்பளத்தில் நடந்து தாஜ்மஹாலைச் சுற்றிப் பார்த்துவிட்டு 'சந்திப்பு தோல்வி' என்று பத்திரிகைகளுக்குப் பேட்டியளிப்பார்.
11. அஸாமில் நமக்குத் தெரியாமல் ஊடுருவிய சீனப்படைகளுடன் போரிட்டு ஐந்தாயிரம் படைவீரர்களைக் காவுகொடுத்து சீனப் படையை அருணாச்சலப் பிரதேசத்துக்குள் ஓட ஓட விரட்டி வெற்றிபெற்றது இந்தியா!
12. அருணாச்சலப் பிரதேசத்தில் "அதாண்டா இதாண்டா அருணாச்சலம் எங்களுதுடா!" என்று 60-வருடமாகத் தமிழ்த் தி்ரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழும் நடிகர் ஆடிப்பாடி நடித்துப் படமாக்க விரும்பிய பகுதியில் படபிடிப்பு நடத்த சீன அரசு அனுமதி மறுத்துவிட்டது! ஆனால் பாடல் பெருவெற்றி பெற்று தமிழகத்தின் பட்டி தொட்டிகளெங்கும் டீக்கடைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
****
வயிறு எரிகிறது ஐயா! வயிறு எரிகிறது! இம்மாதிரி முதுகெலும்பேயில்லாத, முடிவு எடுக்கும் , கடும் நடவடிக்கை எடுக்கும் திராணியில்லாத தலைவர்கள் கையில் சிக்கி இந்தியா இப்படிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதை நினைக்கையில் - ஏதோ ஒருவிதத்தில் இதற்கு நானும் ஒரு மறைமுகக் காரணகர்த்தன் என்று நினைக்கையில் - வயிறு எரிகிறது!
****
இந்தப் பிரச்சினை தொடர்பான கட்டுரை ஒன்று ரீடிப் தளத்தில் இங்கு இருக்கிறது.