
தீவிரவாதத் தாக்குதலின் போது ஊடகங்கள் நடந்துகொண்ட விதம் பொறுப்பற்ற தன்மையின் உச்சம். செய்தியை முந்தித் தருகிறோம் என்ற பெயரில் அநாகரிகமாக நடந்துகொண்ட அவர்களது செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எந்தவித தணிக்கையுமில்லாமல் எல்லாவற்றையும் அவர்கள் ஒளிபரப்பிக்கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டு எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்த அரசு இயந்திரங்களின் கையாலாகாதத் தனத்தை நினைத்தால் அவமானமாக இருக்கிறது.
உள்ளே எத்தனை தீவிரவாதிகள் பதுங்கியிருக்கிறார்கள் என்று தெரியாது. எத்தனை பேர் பிணைக் கைதிகளாக மாட்டியிருக்கிறார்கள் என்று தெரியாது. கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர் என்றும் தெரியாது. வந்தவர்களின் ஒரே இலக்கு முடிந்தவரை கொல்வதே. இதற்கு முன்பாக இம்மாதிரி நேரடித்தாக்குதல் எதுவும் நடைபெற்றதில்லையாதலால் இத்தாக்குதலின் தன்மையையும் வீரியத்தையும் உணர்ந்து கொண்டு அரசு இயந்திரங்கள் நடவடிக்கைகளைத் துவங்கவே பலமணி நேரமாகிவிட்டது. அதிலும் குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்த நிலை நம் கமாண்டோக்களுக்கு. அவர்களுக்கு ஹோட்டலின் வரைபடம் தரப்படவில்லை. காவல்துறையிடம் போதுமான அளவுக்கு ஆயுதங்கள் இல்லை. நிராயுதபாணியாக, அல்லது கையில் ஒரு லத்திக்கம்புடன்தான் 90 சதவீத காவலர்கள் நடமாடுகிறார்கள்.
இந்த நிலையில் காவலர்களின், காமாண்டோக்களின் ஒவ்வொரு அசைவையும் அணுவணுவாக ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள் ஊடகக்காரர்கள் - ஹெலிகாப்டரிலிருந்து கட்டடத்தின் மேலே கமாண்டோக்கள் இறக்கிவிடப்படுவதையும்கூட. சாட்டிலைட் தொலைபேசிகள், ஜிபிஎஸ் கருவிகள், நவீன ஆயுதங்கள், வெடிபொருட்களுடன், விலைமதிப்பற்ற நூற்றுக்கணக்கான மனித உயிர்களையும் கையில் வைத்துக்கொண்டு உள்ளே பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கு ஊடகங்களின் தயவில் வெளிப்புற நடவடிக்கைகள் எல்லாம் உடனுக்குடன் செய்தியாகப் போய்க்கொண்டேயிருக்க, அவர்கள் - உட்புற அமைப்பை நன்கு அறிந்து வைத்துக்கொண்டு - கமாண்டோக்களுக்கு தண்ணீர் காட்டி மேலும் கொலை வெறியாட்டத்தைத் தொடர்ந்து நடத்தியிருக்கிறார்கள். இதை நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை என்று எவன் அழுதான்? கொஞ்சம் கூட சிந்தித்து செயல்படவேண்டாமா? இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டு தேசிய பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கிவிட்டார்களே? உள்ளே அகப்பட்டிருக்கும் மனித உயிர்களைப் பற்றிக் கவலைப்படாமல், அவர்களைக்காக்க வெளியே இருந்து வந்து திக்கு தெரியாமல் திண்டாடிப் போராடும் கமாண்டோக்கள், காவலர்கள் ஆகியோரது உயிரைப்பற்றியும் கவலைப்படாமல் எத்தனை பிணங்கள் விழுந்தன, எவ்வளவு ரத்தம் சிந்தியது என்பதைப்பற்றி மட்டுமே யோசித்து 20-20 கிரிக்கெட் ஸ்கோர் மாதிரி பிணங்களின், காயமடைந்தவர்களின் எண்ணிக்கைகளை மட்டும் தங்களது ஊடகங்களால் துரத்திய இவர்கள் பிணந்தின்னிக் கழுகுகளாகத்தான் இருக்க முடியும்.
இங்கு ஆஹா எஃப்எம்மில் கோல்மால் என்று ஒரு நிகழ்ச்சி. “மும்பை மாதிரி தீவிரவாதி உங்களைத் தாக்க வந்தால் எப்படிச் சமாளிப்பீர்கள்?” என்று அறிவிப்பாளர் கேள்விகேட்டு அதற்கு நேயர்கள் “நகைச்சுவையாக” பதிலளித்து பின்னணியில் செயற்கைக்குரல்கள் சிரிப்பதையும் ஒலிபரப்பிக்கொண்டிருந்தார்கள். எவ்வளவு கேவலமான செயல்?
ஒரு படையை வழிநடத்திச் செல்லும் தலைவர் இறக்க நேரிட்டால் தளபதிகள் யுத்தத்தை முன்னெடுத்துச் செல்வார்கள். அவர்கள் மரணமடைந்தால் அடுத்த நிலையில் இருப்பவர்கள் தொடர்வார்கள். சிப்பாய்களுக்கு சண்டை ஒன்றே குறிக்கோளாக இருக்கும், தலைவர்கள் செத்த செய்தி அவர்களுக்கு உடனடியாகச் சேராது. தலைவன் செத்தான் என்றால் சிப்பாய் மனதளவில் சோர்ந்துவிடுவான் - தோல்வியைச் சந்திக்குமுன்னேயே மனதளவில் தோல்வியடைந்துவிடுவான். நம் ஊடகங்கள் என்ன செய்தன? தீவிரவாத ஒழிப்புக் குழுத் தலைவர் ஹேமந்த கார்கரேயும், என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டான விஜய் சாலாஸ்கரும் கொல்லப்பட்டதை முந்திரிக்கொட்டைகளாக அறிவித்தார்கள். அறிவுகெட்டத்தனத்தின் உச்சம்! அவர்கள் உத்தரவின் கீழே போராடிக்கொண்டிருந்த மற்ற காவலர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்?
பத்து இடங்களில் தாக்குதல் என்று செய்தி. இவர்கள் 24 மணிநேரமும் காட்டியது தாஜ் ஹோட்டலை மட்டும். அவ்வப்போது ஓபராயைக் காட்டினார்கள். பின்பு நரிமண் ஹவுஸின் மாடியில் கமாண்டோக்கள் ஹெலிகாப்டரிலிருந்து இறங்குவதைக் காட்டினார்கள். வேறு இடங்களில் நடந்தது தீவிரவாத செயலில்லையா? ரயில் நிலையத்தில் செத்தவர்கள் மனிதர்களில்லையா? ஏனென்றால் அங்கேயெல்லாம் “மேட்ச்“ முடிந்துவிட்டது. ஹைலைட்ஸைக் காட்டுவதைவிட நேரடி ஒளிபரப்பில்தான் பரபரப்பு அதிகம் - பார்வையாளர்களும் அதிகம் - ஆகவே தாஜ்!
ஆளாளுக்கு வாய்க்கு வந்ததை அறிவித்துக்கொண்டேயிருந்தார்கள். CNN-ன் தலைமைச் செய்தியதிகாரியொருவர் அமெரிக்காவில் அமர்ந்துகொண்டு மும்பை அதிகாரி ஒருவரைத் தொலைப்பேசியில் அழைத்துக் கேட்டார் “பத்தே பேர் சேர்ந்து எப்படி இத்தனை பேரைக் கொல்ல முடிந்தது?” என்று. எனக்கு வந்த ஆத்திரத்தில் உடலெல்லாம் நடுங்கியது. கொல்வது ஒன்றே நோக்கம் என்றிருப்பவர்கள் தீவிரவாதிகள். குறைந்த எண்ணிக்கையில் வந்து விமானங்களைக் கடத்தி கட்டடங்களில் மோதி மூன்றாயிரம் பேரைக் கொல்லவில்லையா? அவ்வளவு ஏன் வெர்ஜினியா டெக் பல்கலையில் ஒரு வெறி பிடித்த மாணவன் துப்பாக்கி சகிதமாக நுழைந்து இருபதுக்கும் மேற்பட்ட சக மாணவர்கள், ஆசிரியர்களைக் கொல்லவில்லையா? எதிர் பாரா தருணத்தில், எதிர் பாரா நிலையில், எதிர் பாரா முறைகளில் வெறிபிடித்த மனிதர்கள் சக மனிதர்களைத் தாக்கும்போது சேதத்தைத் தடுக்க வல்லரசுகளாலேயே முடியவில்லை.
எதுகைமோனையாகச் செய்தி போடுகிறோம் என்ற பெயரில் “இந்தியாவின் 26/11” என்று ஒரு செய்திச் சானலில் போட்டார்கள். அதாவது அமெரிக்காவுக்கு 9/11 - இந்தியாவிற்கு 26/11. இதைப் பார்க்கும் அமெரிக்கர்கள் எது 26-வது மாதம் என்று குழம்பியிருப்பார்கள். அல்லது சாதாரண இந்தியப் பொதுஜனம் “ஓஹோ அமெரிக்காவுல நவம்பர் ஒம்பதாந்தேதி ஏதோ நடந்திருக்கு போல” என்று நினைத்திருப்பார்கள்!
வலையுலகு - அட அட அட.... ஒலி, ஒளி ஊடகங்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்துக் கொண்டனர் பதிவர்களும் (மனசாட்சி: "அந்தக் கூட்டத்துல நீயும் ஒருத்தந்தேன்")
”கையில் காவிக் கயிறு - ஆக இது இந்துத் தீவிரவாதி”
”இல்லை இல்லை இஸ்லாமியத் தீவிரவாதி”
“இல்லவே இல்லை மொசாத் செயல்”
என்று பொங்கலுக்கு வெள்ளையடிக்கும் ஸ்டைலில் மத, இனச் சாயம் பூசி மகிழும் ஒரு கோஷ்டி! தீவிரவாதத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் அழிவு, கொலை, தீமை இவைதான் நோக்கங்கள் - இவர்கள் மனித வகையில் எந்த வகையிலும் சேராத கொடூர மிருகங்கள். இவர்களை இவர்கள் வழியில் அணுகி அழிப்பது ஒன்றுதான் சரியான முறை. இவர்களுக்கு மதச் சாயம் பூசுவது புண்ணைச் சொறிந்துகொள்ளத்தான் பயன்படும்.
இப்படிக் கேனத்தனமான கேள்விகள், பேட்டிகள், அறிவிப்புகள், செய்திகள் - ஊடகங்களின் வெறியாட்டத்தைத்தான் தாங்க முடியவில்லை.
தீவிரவாதிகளுக்கு பயம் தோன்றச் செய்வதைவிட, அவர்களைத் தேன்குடித்த நரிகளாக்குகின்றன நமது அரசு, ஊடக இயந்திரங்கள். டில்லியிருந்து கமாண்டோக்கள் வருவதற்கான விமானத்தின் விமானி சண்டீகரிலிருந்தாரென்றும் அவர் வந்து சேர்ந்து பின்பு விமானத்தைக் கிளப்பிக்கொண்டு மும்மையிறங்கி தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு வந்து சேர கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது என்று அறிகிறேன் - இதுவே பெரும் குறைபாடு - உடனடியாகச் சரி செய்யப் படவேண்டிய குறைபாடு.
5000 பேரை இலக்கு வைத்து வந்திருப்பார்களேயானால் இந்த இருநூறு கொலைகளைத் தோல்வியாகக் கருதி இன்னும் தீவிரமாகத் திட்டம் தீட்டித் தாக்கத் தயாராவார்கள் அவர்கள். இல்லை 200 பேரைக் கொன்றதே வெற்றியாக அவர்கள் கருதினால் இது போல இன்னும் பல தாக்குதல்களைத் தொடுக்கவும் முனைவார்கள். எப்படிப் பார்த்தாலும் தீவிரவாதிகள் சும்மா இருக்கப் போவதில்லை. மூளைச் சலவை செய்யவும் ஆயுதம் தூக்கவும் ஆட்கள் கிடைப்பதற்கா பஞ்சம்? கிடைப்பார்கள். ஆனால் இனிமேலும் அவர்களை வளரவிடாமல் நசுக்கி அழிப்பது முழுக்க முழுக்க இந்திய அரசின் கையில்தான் இருக்கிறது. வழக்கம்போலப் பாகிஸ்தான் மீது பழி போட்டுவிட்டு - அது முழுக்க முழுக்க உண்மையாகவே இருந்தாலும் - சோம்பியிருந்தார்கள் என்றால் அவர்களை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது. பாகிஸ்தான் பிடுங்குவது இருக்கட்டும். நீங்கள் என்ன பிடுங்கினீர்கள்? ஜார்ஜ் புஷ்ஷை என்னதான் திட்டினாலும் கோமாளியாகச் சித்தரித்தாலும் 9/11 க்கு பிறகு சுதாரித்துக் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்தி வேறு எந்த தீவிரவாத தாக்குதல்களும் அமெரிக்காவில் நடைபெறா வண்ணம் செய்ததை யாரும் மறுக்கமுடியாது. இந்தியாவில் எத்தனையெத்தனை தாக்குதல்கள்? மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்துகொண்டே இருக்கிறார்கள். ஏன் இவ்வளவு மெத்தனம்?
பொது மக்களைக் காக்கத் துப்பில்லாத அரசு எதற்கு? பாக்கிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவி வந்து தாக்குவது பெரும்பிரச்சினையாகவே இருந்தாலும் நம் எல்லைகளைக் காத்து உள்ளூர் ஓட்டைகள் அனைத்தையும் அடைப்பது முதல் கடைமை - அதன் முழுப் பொறுப்பும் இந்திய அரசின் கையில்தான். அதற்கு அலட்சிய மனப்பான்மையை ஒழிக்கவேண்டும். அதற்கு ரயில் நிலையத்தில் சுடப்பட்டுச் சாகும் அப்பாவி பொதுஜனத்தின் வலியை உணரவேண்டும். இரும்புக் கோட்டையாக தடுப்பு அரண் இருந்தால் எந்தத் தீவிரவாதியும் உள்ளே நுழைவதற்கு யோசிப்பான். அப்படியே நுழைந்தாலும் அவர்கள் கொட்டையைப் பிடித்து நசுக்க அதிக நேரம் ஆகக்கூடாது. அவர்களை உடனடியாக எதிர்கொண்டு அதிக சேதமில்லாமல் முறியடிக்கிற எமர்ஜென்ஸி ரெஸ்பான்ஸ் திறனை பலமடங்கு அதிகரித்துக் கொள்ளவேண்டும் - எல்லாத் திசைகளிலும். முழுமையாக தீவிரவாதத்தினை ஒழிக்க முடியாவிட்டாலும், தடுக்க முடியும். கிழிந்து தொங்குகிற புல்லட் புரூஃப் அங்கி, பழைய காலணிகள், கற்கால துப்பாக்கிகள் போன்றவற்றைத் துறந்து மொத்தத்தையும் நவீனப்படுத்த வேண்டும்.
உயிரைப்பணயம் வைத்து தீரமாகப் போராடிய காவலர்களுக்கும் கமாண்டோக்களுக்கும் தீவிரவாதிகள் தந்த நெருக்கடியைவிட அதிக நெருக்கடியை ஊடகங்கள் கொடுத்தார்கள். கிட்டத்தட்ட கட்டடங்களைச் சூழ்ந்துகொண்டு அவர்களை literally நெருக்கியடித்தார்கள். இதனால் திறம்பட எந்தத் திட்டத்தையும் வகுக்க அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்திருக்குமாவென்று தெரியவில்லை. ஊடகங்கள் பார்வையில் இருப்பதைவிட உள்ளே போய் தீவிரவாதிகளை எதிர்கொள்வது மேல் என்று நினைத்துவிட்டார்கள் போலும் - உள்ளே புகுந்துவிட்டார்கள். எவ்வளவு உயிர்ச்சேதம்? நேரடியாகக் கொன்றவர்கள் அந்த பத்து தீவிரவாதிகள். மறைமுகமாகக் கொன்றவர்கள் அனைத்து ஊடகத்தீவிரவாதிகளும்!
மும்பையில் இந்நேரம் ரத்தக்கறைகள் காய்ந்திருக்கும், அல்லது கழுவப்பட்டிருக்கும் - பிணங்களைத் துரத்திய ஊடகக்காரர்கள் இப்போது தாஜ் ஹோட்டலிலிருந்து உயிரோடு தப்பித்து ஓடிய புறாக்களையும் நாய்க்குட்டி ஒன்றையும் பேட்டியெடுத்து “மும்பைத் தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பிய அதிசயம்” என்று தலைப்புச் செய்தியாகப் போட்டுக்கொண்டிருப்பார்கள். ஓரிரு தினங்களில் அதுவும் போரடித்து குலுக்கல் நடனங்களுக்கும், கொலை, கொள்ளைகளுக்கும், வேறு எங்காவது நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கும் திரும்பிவிடுவார்கள். நாமும் வழக்கமான வேலைகளைப் பார்க்கப் போய்விடுவோம். இது வரை பரவாயில்லை. வீராப்பு வசனங்களைப் பேசிய தலைவர்களும்் மயிராப் போச்சு என்று புதிய நெருக்கடிகளுக்கும் வரப்போகும் தேர்தலுக்குத் தேவையான பகடை விளையாட்டுகளுக்கும் திரும்பிவிடுவார்கள்.
வாழ்க கருத்துச் சுதந்திரம்! வாழ்க ஊடகங்கள்!
***