“இதான் கடைசிக் கரடு“ என்றார் ஸ்ரீநிவாஸன். என் முகத்தில் கேள்வியைப் பார்த்து “கரடுன்னா குன்று மாதிரி” என்றார். “இதான் கடைசி ஏத்தம் - ஏறிட்டோம்னா உச்சிதான். இன்னும் அரை மணியில் போயிரலாம்“.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலான மலையேற்றத்தில் இப்போது கால்களும் இதயத்துடிப்பும் ஒரு நிதானத்திற்கு வந்து விட்டிருந்ததால் அந்தக் கரடைக் கடப்பது அவ்வளவு கடினமாகத் தெரியவில்லை. ஏற்றம் முடிந்து சற்று மேல்நோக்கிச் சென்ற அந்த ஒற்றையடிப் பாதையில் நடந்தோம். காஃபிச் செடியை முதன்முதலாகப் பார்த்தேன். மகா எளிமையான அழகானதொரு குடிசையைக் கடந்தோம். குலை தள்ளியிருந்த வாழைமரம், அதையடுத்து நெடிதுயர்ந்த பலாமரம், பின்னணியில் மாமரம் என்று முக்கனிகள் தரும் மர வரிசையைப் பார்த்தேன். வல்வில்ஓரி மாதிரி ஒரே கல்லில் வாழை, பலா, மாம்பழங்களை அடிக்கமுடியுமா என்று யோசனை தோன்றியது. தோப்புக்காரர் யாராவது கழுத்தில் துண்டைப் போட்டு இழுத்துக்கொண்டு போய்விடுவார் என்ற பயத்தில் வல்கல்எறியனாகும் வாய்ப்பைக் கைவிட்டேன். மஞ்சள்பை காரர் எங்களிடம் விடைபெற்றுப் பிரிந்து சென்றார்.
இப்போது பாதை ஏற்றமில்லாது கிட்டத்தட்ட சமதரையாகச் செல்ல உச்சியை அடைகிறோம் என்று உணர்ந்தேன். மரங்களற்ற பரந்த புல்வெளி. மலைச்சரிவில் பெரிய படிக்கட்டுகளாகத் தேயிலை போட்டிருந்தார்கள். பாதையின் முடிவில் கற்சுவரும் தார்ச்சாலையொன்றும் தெரிந்தது. அதையடைந்ததும் எனது கையைக் குலுக்கி “Welcome to Kolli Malai" என்றார் ஸ்ரீநிவாஸன். பயங்கரமாய்ப் பசிக்க அந்தக் கற்சுவரில் உட்கார்ந்து புளியோதரையை விழுங்கினோம். நாங்கள் கொண்டு வந்த தண்ணீர் பாட்டில்களில் இரண்டைக் காலி செய்தோம். கையில் பரவியிருந்த எண்ணையைப் பாறையில் துடைத்தேன்.
கற்சுவரின் ஓரமாக ஒடிசலான இன்னொரு ஆள் உட்கார்ந்திருந்தார். அதான் நாங்களெல்லாம் வெளியூர் என்ற நெற்றியில் எழுதி ஒட்டியிருக்கிறதே! ”பஸ்ஸூ பத்தரை மணிக்கு வந்துரும்” என்றார். நாமக்கல்லிலிருந்து கொல்லிமலைக்கு பேருந்து விட்டிருக்கிறார்கள். அரப்பளீஸ்வரர் கோவில் வரைக்கும் செல்லலாம். இருபதோ என்னவோ கிலோமீட்டர் தூரம்தான் - அட அவசரப்பட்டு சந்தோஷப்படாதீர்கள். சும்மா ஒரு எழுபது கொண்டைஊசி வளைவுகள்தான் இருக்கின்றன - மலையைச் சுற்றிச் சுற்றி ஏறும் பேருந்து - தலைசுற்றி அரப்பளீஸ்வரர் கோவிலில் சாமியாடவேண்டிவரும்! நான்கைந்து மணி நேரம்தான் ஆகும்!
அந்த நபரிடம் கொஞ்ச நேரம் பேச்சுக்கொடுத்துக்கொண்டிருந்துவிட்டு, அங்கிருந்து மெதுவாக நடந்து களூர் போய் இறங்கும் பாதையைக் கண்டுபிடித்து இறங்கி விடலாம் என்று முடிவு செய்தோம். அவரிடமும் பசு சிறிது பணம் கொடுக்க அவரும் ஏகமாக மறுத்துவிட்டு பின் தயங்கி வாங்கிக்கொண்டார். நாங்கள் “பெரப்பர்றோம்ணே” என்றதும் “வாங்க, வீட்டுக்கு வந்துட்டுப் போங்க. நாட்டுக்கோழியடிச்சு சாப்ட்டுட்டுத் தங்கிட்டு நாளைக்குப் போலாம்” என்று வற்புறுத்தியவரை சமாதானப்படுத்திவிட்டு விடைபெற்றுக்கொண்டு அந்தத் தார்ச்சாலையில் மெதுவாக நடந்தோம்.
கொல்லிமலை பற்றி ஏகமாகக் கதைகள் உலவுகின்றன. உண்மையில் நடந்த சம்பவங்கள் செவிவழியாகச் சொல்லப்பட்டு வரும் கதைகளா, இட்டுக்கட்டியவையா என்று இனம்பிரிக்கமுடியாக் கதைகள். பசுபதியும் அவன் நண்பர்களும் பல முறை பல வழித்தடங்களில் கொல்லிமலைத் தொடர்களில் ஏறியிருக்கிறார்கள். அவன் கேள்விப்பட்ட ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு நடந்ததாகச் சொல்லப்படும் சம்பவத்தைப்பற்றிச் சொன்னபோது அதை நம்பிவிடலாம் போலத்தான் இருந்தது.
விறகுவெட்டும் சிறுவர்களில் ஒருவன் மலையில் எங்கேயோ ஒரு மரக்கிளையை வெட்டியபோது தவறுதலாக இடது முழங்கைக்குக் கீழே வெட்டுப்பட்டு கை தொங்கியதாம். அலறித்துடித்த அந்தச் சிறுவனை மற்ற சிறுவர்கள் தூக்கிக்கொண்டு கிராமத்திற்குத் திரும்பிச்செல்லும்போது இரத்தப்போக்கை நிறத்துவதற்காக போகும் வழியில் இருந்த செடிகொடிகளின் இலைகளைப் பறித்துக் கசக்கி வெட்டுப்பட்ட இடத்தில் அமுக்கி வைத்திருக்கிறார்கள். ஒருவழியாக ஊருக்கு வந்து சேர்ந்து பெரியவர்களைக் கூவியழைக்க பதறியடித்து வந்து பார்த்தவர்களுக்கு ஆச்சரியத்தில் மூச்சே நின்று விட்டது. காயம்பட்ட சுவடே கிட்டத்தட்ட தெரியாமல் - ஒரு வேளை பையன்கள் விறகுவெட்டச் சோம்பல்பட்டுக் கதையடிக்கிறார்களோ என்று அவர்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. “டேய்! என்னங்கடா ஆச்சு?” பையன்களாலும் நம்பமுடியவில்லை. அவர்களைக் கூட்டிக்கொண்டு போய் வெட்டுப்பட்ட இடத்தையும் ரத்தச் சிதறல்களையும் காட்டி இலைகளைப் பறித்து கட்டுப்போட்டதையும் சொல்ல, அவர்களக்கு இலைகளில் ஏதோ ஒன்று சக்திவாய்ந்த மூலிகை என்பது உடனடியாகப் புரிந்து போனது.
விறகு வெட்டுவதையும், பழங்கள் பறிப்பதையும் வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் அம்மக்களுக்கு தொழிலில் விபத்து என்பது அன்றாட நிகழ்வு. மருத்துவ வசதி இல்லாத, நகரங்களின் நாகரிகங்களும், வசதி வாய்ப்புகளும் இல்லாத ஆயிரக்கணக்கான கிராமங்கள் தார்ச்சாலைகளின் கரங்களுக்கு எட்டாத தொலைவில் இன்னும் இருக்கின்றன. அம்மக்கள் அனைவரும் தற்கால அறிவியலையும், மருத்துவத்தையும்விட இயற்கையளிக்கும் மூலிகைகளையே சார்ந்திருக்கும் நிலை. தகுந்த நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காத நிலையில் இன்றும் மரணங்கள் நிகழ்கின்றன. நகரத்தில் மட்டும் என்ன வாழ்கிறதாம்? மருத்துவம் சேவையாக இருந்த காலங்கள் மலையேறிவிட்டன. நகரச் சாமான்யர்களுக்கும் மருத்துவம் எட்டாக்கனியே. அரசு நிறுவனங்களில் சாஸ்வதமான ஊழல் மருத்துவத்துறையிலும் மலிந்திருக்கிறது. அதிலும் தத்தமது நிறுவனத் தயாரிப்புகளை விற்க மருந்து நிறுவனங்களின் “சந்தைப்படுத்தும் உத்திகள்” கேவலமானவை. சட்டத்திற்குப் புறம்பானவை. மதுரையில் எனது நண்பன் ஒருவன் (வேண்டா வெறுப்பாக வேலையில் ஒட்டிக்கொண்டிருக்கும்) மருத்துவப் பிரதிநிதி. விடுமுறைக்குச் சென்றிருந்தபோது அவன் கைப்பேசியில் காட்டிய வீடியோவில் ஏதோ ஒரு மலைவாசஸ்தலத்தில் முழங்கை நீள மது பாட்டில்களுடன், அரை டிராயர்களில், பட்டப்பகலில் பொதுவிடத்தில் நடனமாடிக்கொண்டிருந்தது அவன் அன்றாடம் வேலைநிமித்தமாகச் சந்திக்கும் மருத்துவர்கள்! “கம்பெனி காசு கொடுத்து இவனுங்களைக் இம்மாதிரி ட்ரிப்புக்குக் கூட்டிக்கொண்டு போகச்சொல்லும். இவனுங்க காசு வாங்கிக்கிட்டு பண்ற அழும்பு தாங்கவே முடியாது, டூர் போறேன்னு வீட்ல சொல்லி்ட்டு கும்பலா நாங்க எடுத்துக்கொடுக்கற வாடகைக்கார்ல உக்காந்துக்கிட்டு தண்ணியடிக்க ஆரம்பிச்சாங்கன்னா மூணு நாள் கழிச்சுத் திரும்பற வரைக்கும் தண்ணிலதான் இருப்பாங்க. குடி, கும்மாளம், சில கம்பெனிங்கள்ல இன்னும் பல வசதிகள் கொடுக்கப்படும்.” என்றான். இம்மாதிரி பேர்வழிகளிடம் அவர்களைக் கடவுளாகப் பாவித்துக்கொண்டு வரும் நோயாளிகளை நினைத்துப் பார்த்தேன். ஐயய்யோ... இதைப்பற்றிப் பேச ஆரம்பித்தால் எனக்கு இரத்தக்கொதிப்பு அதிகரித்துவிடும் என்பதால் இத்தோடு நிறுத்திக்கொண்டு கொல்லிமலைக்குப் போகிறேன்.
“டேய் எந்தெந்த எலைங்களைப் பறிச்சீங்க?” என்று பெரியவர்கள் குடைய சிறுவர்களுக்குச் சொல்லத்தெரியவில்லை. அவசரத்திலும் பதற்றத்திலும் வெட்டுப்பட்டவனைக் கொண்டுசென்ற வேகத்தில் அவர்களுக்கு எந்த மூலிகைகளைப் பறித்தார்கள் என்று தெரியவில்லை. மறுபடியும் ஊருக்குச் சென்று மற்றவர்களிடம் அந்த அதிசயத்தைச் சொல்ல மொத்த கிராமமும் மலை முழுவதும் பரவி அந்த மூலிகையைக் கண்டுபிடிக்கத் தேடினார்களாம். சும்மா தேடவில்லை. கையை, காலை கீறிக்கொண்டு இலைகளைப் பறித்துக் கசக்கி கீறல்களில் தேய்த்து காயம் ஆறுகிறதா என்று பார்த்து. கடைசிவரை அந்த மூலிகை அவர்களுக்குத் தட்டுப்படவில்லையாம்.
நான் “நல்ல வேளை! தலை வெட்டுப்படவில்லை”!
(தொடரும்)
நன்றி : தென்றல்.காம்