Friday, January 22, 2016

Hero Puch

எனது இரு சக்கர வாகனங்கள் குறித்த அனுபவங்களை முன்பு எழுதியிருக்கிறேன். ஆனால் இது விடுபட்டுப் போன ஒரு சம்பவம். 
பஜாஜ் எம்-80 கோலோச்சிய காலம். நூறு ஸிஸிக்களில் யமஹாவுக்கு தனி மவுசு. டிவிஎஸ் சுசுகியும், ஹீரோ ஹோண்டாவும் இன்னும் சில உதிரி பைக்குகளும் சந்தையில் குவிந்திருந்தன. ஸ்கூட்டர்கள் ஓட்டுபவர்கள் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் போல பாலன்ஸ் செய்து ஓட்டிச் சலித்து பஜாஜ் எம்-80-க்குத் தாவ ஆரம்பித்திருந்தார்கள். அதில் ஸ்கூட்டரைப் போலவே இடது கைப்பிடியில் கியர் மாற்றவேண்டும். சில சமயம் ஒன்றிலிருந்து நேரடியாக மூன்றுக்கு வழுக்கிக்கொண்டு ஸ்லிப்பாகும். இல்லாவிட்டால் மூன்றிலிருந்து ஒன்றுக்குச் சரிந்துவிடும். இருந்தாலும் அதன் பிரபலம் குறையவில்லை. ஆட்கள், பலசரக்கு, கோழி, நாய், பன்றி, கன்றுக்குட்டியெல்லாம் வைத்துக்கொண்டு அதில் போவார்கள். 
நான் வண்டி ஓட்டக் கற்றுக்கொண்டதே யெஸ்டியில் தான். பிறகு பெப்ஸியில் வேலைக்குச் சேர்ந்ததும் தினமும் யெஸ்டியில் பழங்காநத்தத்திலிருந்து பரவை சென்று வர மாத சம்பளத்தில் பாதிக்கு மேல் பெட்ரோலுக்கு அழ வேண்டியிருந்ததால் அதில் செல்ல முடியவில்லை. யெஸ்டியில் மண்ணெண்ணை, டீசல் என்று ராமர் பெட்ரோல் மாதிரி ஆளாளுக்கு எதையாவது கலந்து ஓட்டிக்கொண்டிருந்தார்கள். எனக்கு அம்மாதிரி செய்ய மனது வரவில்லை. பஸ்ஸில் போய்ப் பார்த்தேன். சரி வரவில்லை. பெப்ஸி நிறுத்தத்தில் நிறுத்த மாட்டார்கள். பரவையில் இறக்கிவிட திரும்ப நடந்து வரவேண்டும். நேரத்துக்குப் போய் வரமுடியாமல் ரொம்பவும் அசெளகரியாமாக இருந்தது. ஓரிரு நாளிலேயே வங்கிக்கு தினமும் சென்றுவரவேண்டிய வேலை எனக்குக் கொடுக்கப்பட்டதால் முதலாளி இருசக்கர வாகனம் வாங்கிக்கொள்ள அனுமதிகொடுத்ததும் சட்டென்று பாண்டியன் மோட்டார்ஸ் சென்று ஒரு டிவிஎஸ் 50-ஐத் தள்ளிக்கொண்டு வந்தோம். சாலையில் சைக்கிள்கூட என்னை முந்திச் செல்வதைப் போன்ற பிரமை. யெஸ்டியிலிருந்து டிவிஎஸ் -50க்கு இறங்கிய கழிவிரக்கம் சேர்ந்துகொள்ள இரண்டாம் நாளே ஏதோ காரணம் சொல்லி அந்த வண்டி வேண்டாம் வேறு வண்டி வாங்கவேண்டும் என்று அடம்பிடித்து ARASPVPV-Co க்குப் போனால் கடையை இழுத்து மூடும் தறுவாயில் விற்காது ஒரு சில யெஸ்டிகள் பளபளவென நின்றுகொண்டிருந்தன. அதில் ஒன்றுக்கு கொட்டேஷன் வாங்கிக்கொண்டு முதலாளியிடம் கொண்டுபோய் கொடுத்ததும் என்னை ஏற இறங்கப் பார்த்து (இக்காலத்திலும் நூறு சிசி பக்கம் போகாத இளைஞனா?) - இது வேண்டாம்பா. கம்பெனியே மூடியாச்சு. ரொம்ப பெட்ரோல் குடிக்கும் என்று நிராகரித்துவிட்டார். 
மறுபடி பாண்டியன் மோட்டார்ஸ் போனேன் - அன்று காலைதான் வந்திறங்கியிருந்த அந்த வசீகர வாகனத்தைப் பார்த்தேன். மான்குட்டி போல இருந்தது அந்த வண்டி. ரெண்டே கியர்தான். முதல் கியர் போட்டு எடுத்ததும் முன்சக்கரம் துள்ளி மேலே எழுந்தது. அவ்வளவு சின்ன வண்டியில் சுலபமாக வீலிங் செய்ய முடிவது அதிசயமாக இருந்தது. அது Hero Puch. 


ஸூப்பர் வேகம். அபார பிக்கப். உடனடியாகப் பிடித்துப்போய் அதை வாங்கிக்கொண்டு பரவைக்கு விரட்டி முதலாளியிடம் காட்ட அவர் அதை வினோத ஜந்து போல பார்த்தார். ‘என்னப்பா வண்டி இது?” என்று கேட்டுவிட்டு பெட்ரோல் டாங்க்கில் எழுதியிருந்ததை மனதுக்குள் படித்துப் பார்த்துவிட்டு அவசர வேலையாக வெளியே கிளம்பிச் சென்றுவிட்டார். 
அன்று மாலையே அதை எடுத்துக்கொண்டு வைகையில் வெள்ளம் வந்து செல்லூர் சாலையெல்லாம் நீர் ஓடிய நேரத்தில் விரட்டிக்கொண்டு விரைந்து வைகைப்பாலத்தைத் தாண்டி சிம்மக்கல் வழியாக மேலமாசி வடக்குமாசி வீதி சந்திப்புக்கு வந்து - அங்குதான் அன்று மாலை ரஜினி பெப்ஸியை அறிமுகப்படுத்தவிருந்தார் - எல்லா ஏற்பாடுகளையும் செய்தோம். அருமையான வண்டி. ரஜினி வந்துபோய் கூட்டம் கலைந்து எல்லாம் முடிந்ததும் வீட்டுக்குப் போய் உறங்க நள்ளிரவாகிவிட்டது. 
மறுநாள் காலை வண்டியில் பெட்ரோல் மிகவும் குறைவாக இருந்ததாலும், தாமதமாகிவிட்டதாலும் பரவாயில்லை ஒரு நாள் தானே என்று அதை வீட்டிலேயே நிறுத்திவிட்டு யெஸ்டியை எடுத்துக்கொண்டு பேக்டரிக்குப் போனேன். முதலாளி அவருடைய காண்டஸா காரில் அப்போதுதான் வந்து இறங்கினார். என் வண்டிச் சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்துவிட்டு நுழைவாயில் அருகிலேயே நின்றார். நான் வண்டியை நிறுத்திவிட்டு அவசர அவசரமாய் விரைந்து அவரருகில் சென்று ‘வணக்கம் ஸார்’ என்றேன். அவருக்குப் பின்னால் சூசை சாரும், கணேசன் சாரும் பவ்யமாக நின்றிருந்தார்கள். முதலாளியின் கைத்தடிகள் ரெண்டு பேர் சற்று தள்ளி காரருகே நின்றிருந்தார்கள். ‘என்ன இந்த வண்டில வந்துருக்கே? புது வண்டி என்னாச்சு?’ எனக் கேட்க நாள் பதில் சொல்ல முற்படுவதற்குள் அவரே தொடர்தார் ‘அது என்ன வண்டி? ம்ம்ம்ம்ம்… ஆங்.. ஹீரோ பொச்சு. அதை எடுத்துட்டு வர்லியா?’ என்றார். 
***

சுந்தர்ராஜன் ஸார்!


என் சொந்த ஊர் வற்றாயிருப்புக்குச் சென்று 20-25 வருடங்களுக்கு மேலாகிறது. ஊருக்கு ஒரு முறையாவது போகவேண்டும் என்ற உந்துதல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அதே சமயத்தில் பால்ய நினைவுகளில் பதிந்திருக்கும் வற்றாயிருப்பின் பிம்பம் கலைந்துவிடுமோ என்ற அச்சமும் கூட. கடந்த ஜூலையில் விடுமுறைக்குச் சென்றிருந்தபோது எவ்வளவோ முயற்சி செய்தும், ஸ்ரீவில்லிப்புத்தூர் வரை வந்தும்கூட வற்றாயிருப்பு செல்லமுடியாமல் போனது வருத்தமே. ஊரைப் பற்றி அதிகம் விசாரிக்காமலும், இணையத்தில் தேடாமலும் இருந்தேன். முகநூலில் தொடர்ச்சியாக வற்றாயிருப்பு நிகழ்வுகளைப் பதிந்து வரும் உறவினர் திரு. கண்ணன் மாமா Beema Rao Kannanஅவர்கள் மூலமாக நான் படித்த இந்து உயர்நிலைப் பள்ளியின் இணையதளத்தை இப்போதுதான் கண்டுகொண்டேன் (http://www.hhssalumni.org/index.php
இந்தத் தளத்திலிருக்கும் புகைப்படங்களை ஒரு வித பதற்றத்துடனே பார்த்தேன். ஆறாம் வகுப்பில் முதல் மாணவனாக ஆண்டுவிழாவில் ரூ.50 பரிசு வாங்கிய அந்த மேடை அப்படியே இருக்கிறது. வண்ணப் பூச்சுகளும் திறந்த வெளியில்லாது ஆஸ்பெஸ்டாஸ் கூரையும் மட்டும் புதிதாகச் சேர்ந்திருக்கின்றன. புகைப்படங்களை ஆவலுடன் ஆராய்ந்தபோது கண்ணில் பட்ட இந்தப் படம் என் மனதில் எழுப்பிய அலைகளை எழுதி மாளாது. வலது புறத்திலிருந்து இரண்டாவதாக நிற்பவர் எனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களில் ஒருவரான திரு. சுந்தரராஜன் ஸார் அவர்கள். அதே பாரதியின் முறுக்கு மீசை. அதே சிகையலங்காரம். அதே தீட்சண்யமான கண்கள். நரைகூடியிருப்பது ஒன்றுதான் வித்தியாசம். அப்படியே இருக்கிறார். அப்போது அவர் பிரபல வாலிபால் ஆட்டக்காரர். வற்றாயிருப்பில் வாலிபால் குழுவின் பிரதான ப்ளேயர். தலைகாணித் தெரு வழியாகப் பள்ளிக்குச் செல்லும் வழியில் பால் சொஸைட்டிக்கு வலதுபறம் சிதிலமான நிலையில் ஒரு திரையரங்கம் இருந்தது. அதற்கு முன்னால் இருந்த காலியிடத்தில் வலை கட்டி விளையாடுவார்கள். அவருக்கு லேசாகக் கூன் விழுந்ததைப் போன்று முதுகு இருக்கும். உயரமானவர். தெற்குத்தெருவில் அவர் வீட்டு மொட்டை மாடியில் தினமும் மாலை நாங்களெல்லாம் வந்து சேர பொறுமையாக யோகாசனங்கள் அனைத்தையும் சொல்லிக்கொடுப்பார். உக்கிரமாக சுதந்திரத்தைப் பற்றியும் நம்மை அடிமைப்படுத்தி ஆண்டவர்களுக்கு எதிராகவும் தினமும் சொற்பொழிவாற்றுவார். சிலம்பம் சொல்லிக்கொடுத்தார். அவரை முன்மாதிரியாகக் கொண்டுதான் வாலிபால் விளையாட்டில் தீவிரமாக இறங்கி முசிறியில் படித்தபோது பள்ளி வாலிபால் குழுவின் தலைவனாக இருந்தேன். 
சுந்தரராஜன் ஸாரின் வகுப்பில் நானும் இன்னொரு பூனைக்கண் பையனும் அவர் பெயருடன் இருந்தோம். வருகைப் பதிவின் போது அகர வரிசையில் ஒவ்வொருரின் பெயராகச் சொல்லிக்கொண்டே வந்து எங்கள் பெயரை அழைக்கும்போது லேசாக அவர் முகத்தில் புன்முறுவல் தோன்றும். ஒவ்வொரு நாளும் எங்களில் ஒருவர் எழுந்து ஒரு பாடத்தை வாசிக்கவேண்டும். வாசித்து முடித்ததும், விவரமாக அந்தப் பாடத்தை விளக்குவது அவரது பாணி. நானும், வடக்குத் தெரு மகேஷும்தான் தடுமாறாமல், திக்காமல் வாசிப்பதில் போட்டி போடுவோம். 
அவரை இப்புகைப்படத்தில் பார்க்கமுடிந்தது அளவிலா மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்த முறை இந்தியா வரும்போது என்ன ஆனாலும் பரவாயில்லை என்று எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்து முதல் காரியமாக வற்றாயிருப்பு செல்ல வேண்டும். ஆசானைச் சந்திக்கவேண்டும். அவரது ஆசிகளைப் பெறவேண்டும்.
கண்ணன் மாமாவைப் பற்றியும் கொஞ்சம் சொல்லவேண்டும். பள்ளியின் மேடைக்கு இந்தப் புறம் வெட்ட வெளியாக இருக்கும். இருபுறமும் வகுப்பறைகள். பெரிய பெரிய வேப்ப மரங்கள் இருந்தன. வாரயிறுதியில் அங்கு அவர் வருவார். மேலப்பாளையத்திலிருந்து இளைஞர்கள் ஒரு குழுவாக அங்கு வந்து சேருவார்கள். அவர்கள் வரிசையாக ஒழுங்குடன் நிற்க, கண்ணன் மாமா உற்சாகத்துடன் அவர்களுக்குக் கராத்தே சொல்லிக்கொடுப்பார். இன்னும் நினைவிலிருக்கிறது. அவர்கள் வரிசையாக முஷ்டியை மடக்கிக் கைகளை பக்கவாட்டில் விலாவுடன் சேர்த்து விறைப்பாக மூச்சடக்கி நிற்க, கண்ணன் மாமா ஒவ்வொருவர் எதிரிலும் நின்றுகொண்டு கராத்தே முறையில் அவர்களின் வயிற்றில் பலமாக ஒரு குத்து விடுவார். ய்யேஏஏ என்று கூட சத்தமாக பின்னணி குரலுடன். அவர்கள் முகத்தில் சலனமில்லாது நிற்பார்கள். பின்னர் மாமா நின்றுகொள்ள அவர்கள் ஒவ்வொருவராக வந்து அவர் வயிற்றில் குத்துவார்கள். எனக்கு அடிவயிற்றில் வலித்தது போன்ற பிரமை. அவர் கராத்தேயில் கருப்புப் பட்டை பெற்றவர் என்று நினைக்கிறேன். அமைதியான காலைப்பொழுதுகளில், வேம்பு இலைகள் பரவியிருந்த மண்தரையில், குருவி, குயில், காக்கைகளின் கரைதல்களோடு அவ்வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்றன. 
இவ்வளவு வருடங்களுக்குப் பிறகும் ஓரளவாவது ஆரோக்கியத்தைப் பேணமுடிகிறது என்றால் அதன் ஆதார உந்துதல்களாகவும், முன்மாதிரியாகவும் இருந்தவர்கள் சுந்தரராஜன் ஸாரும், கண்ணன் மாமாவும், இன்னும் சில ஆசான்களும்தான்.

+++

Tuesday, January 05, 2016

400-லிருந்து 1000...


1987 - தீபாவளியன்று காஞ்சிபுரத்தில் பாலாஜி வீட்டில் இருந்தேன். அதிகாலை எண்ணைக் குளியல், பலகாரம், லஷ்மி வெடி அமளி துமளியெல்லாம் முடிந்ததும் மதியம் திரையரங்கு ஒன்றுக்குச் சென்றோம் (பெயர் நினைவிலில்லை). வழக்கம்போல் தீபாவளி ரிலீஸ் படங்களின் சுவரொட்டிகள் எங்கெங்கும். அவற்றில் தனித்து நின்றது இரண்டு. ஒன்று கருப்பு வெள்ளை. முழுக்கைச் சட்டையை புஜம் வரை மடக்கிவைத்து, அயர்ன் செய்த Relaxed Fit பேண்ட்டில் இன் செய்து, நமக்கு முதுகைக் காட்டிக்கொண்டு கமல் நிற்பார். சுவரொட்டியின் வடிவமே வித்தியாசமாக ஆளுயர செவ்வகம் (நான் சிரித்தால் தீபாவளி). இன்னொன்றில் வட இந்திய பாணி தலைப்பாகை கட்டியிருக்கும் கமலின் க்ளோஸப் முகம் முழுதும் பல வண்ணங்களைச் சிதறியடித்தாற்போல் ( அந்தி மழை மேகம்!) வண்ண மயமாகவிருந்தது. தமிழ்ச் சினிமா சுவரொட்டிகளில் அவை தனித்து நின்றவை. பிற்பாடு கோபுர வாசலிலே படத்திற்கு மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் வெளியே - எதிரே வரிசையாக கட் அவுட் வைத்திருப்பார்கள் - தபால் தலையின் கத்தரித்த விளிம்புகளின் டிசைனில் போஸ்டர் அடித்திருந்தார்கள். இரண்டிற்கும் பிஸி ஸ்ரீராம் ஒளிப்பதிவு என்று நினைக்கிறேன்.


நாயகன் படம் ஆரம்பித்து டைட்டில் ஓடிக்கொண்டிருக்கையில் ‘இசை’ என்று போட்டு ‘இளையராஜா’ என்றும் போட்டு அடைப்புக்குறிக்குள் “(400-வது படம்)” என்று போட்டிருந்தார்கள். ஒரு கணம் புல்லரித்தது நினைவிலிருக்கிறது. அந்தப் படத்தின் பின்னணியிசையும் பாடல்களும் நம்மை முப்பது வருடங்கள் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிடும். 
சென்ற வாரயிறுதியில் யூட்யூபில் தாரை தப்பட்டை பாடல்களைக் கேட்க உட்கார்ந்தேன். இளையராஜாவின் 1000-வது படம் என்று டைட்டிலுடன் அந்த ஆல்பம் தொடங்கியது. ஆயிரம் படங்கள் என்று சுலபமாகப் படித்துவிடுகிறோம். அதற்குப் பின் அந்த இசைக் கலைஞனின் நாற்பதாண்டு கால உழைப்பு அடங்கியிருக்கிறது! 


அபரிமிதமாக ஒன்று கிடைக்கும்போது அதன் மதிப்பு தெரியாத ஜென்மங்களாகத்தான் நாம் இருக்கிறோம். அதனால்தான் வாய் கூசாமல் ‘மைக்கேல் ஜாக்ஸன் பாடல்கள் மொத்தமே ஐம்பதுக்குள்தான் இருக்கும். ஆனால்….’ என்று இளையராஜாவின் படைப்புகளின் எண்ணிக்கையை மட்டும் ஒப்பிட்டுச் சிறுமை செய்ய முடிகிறது. இளையராஜா இனிமேல் சினிமாவை விட்டுவிட்டு என்னென்ன செய்யவேண்டும் என்று பட்டியல் போட முடிகிறது. இவர்களின் தலையாய பிரச்சினையே எல்லாவற்றையும் மேற்கத்தியக் கண்ணாடிகள் போட்டுக்கொண்டு பார்ப்பதும், எல்லாவற்றையும் மேற்கத்திய அளவுகோல்களைக் கொண்டே அளப்பதும்தான். 
நல்லவேளை ‘ஆயிரம் படங்கள் இசையமைத்து என்ன பிரயோஜனம்? பிரிட்னி ஸ்பியர்ஸ் கிஸ் மி பேபி என்றே ஒரே ஆல்பத்தில் போன உயரத்தை ராஜாவால் தொட முடியாது. அவ்வளவு ஏன்! ஒய் திஸ் கொலைவெறிக்கு யூட்யூபில் கிடைத்த ஹிட்டில் பத்தில் ஒரு பங்குகூட ராஜாவின் எந்தப் பாடலுக்கும் கிடைக்கவில்லை!’ என்று சொல்லாமல் விட்டார்கள்! 
தாரை தப்பட்டை - நொறுக்கியிருக்கிறார் ராஜா!