Monday, April 30, 2018

Bijli

கிட்டத்தட்ட எனக்கு பனிரெண்டு வயதாகும்வரை எங்கள் வீட்டில் மின்சாரம் கிடையாது. கூரையும், களிமண் தரையும், மண்சுவரும் எழுப்பிய வீட்டில் எண்ணை விளக்கொளியில்தான் நூற்றுக்கணக்கான இரவுகள் கழிந்தன. ஹரிக்கேன் விளக்கைச் சுற்றி வட்டமாக அமர்ந்து படிப்போம் - பூச்சிகளைத் துரத்திக்கொண்டு. இத்தனைக்கும் அப்பா தமிழக மின்சார வாரியத்தில் வேலை செய்துகொண்டு இருந்தார் என்பது நகைமுரண்!
வற்றாயிருப்பின் நடுத்தெருவில் நாங்களிருந்த வீடு ஒன்றுதான் அந்தத் தெருவிலேயே ஒரே கூரை வீடு. பெருமாள் கோவிலின் சொர்க்கவாசலுக்கு நேரெதிராக இருந்ததால் ஊரில் எல்லாருக்கும் எங்கள் வீட்டைத் தெரியும். வீடு என்றால் ஒரு திண்ணை, அதையடுத்து ஒரு பத்துக்குப் பத்து 'ஹால்'. மூங்கில் கம்புகளான பரண். அதில் பல்லாண்டுகளாக இறக்கப்படாமல் உறைந்திருந்த ட்ரங்குப்பெட்டிகள், நவராத்திரிக்கு மட்டும் இறங்கும் கொலுப் பெட்டிகள், நிறைய ஒட்டடையும் தூசும். பிறகு ஒரு மிகச்சிறிய சமையலறை - விறகடுப்பு களிமண்ணாலானது, சுவரோரம் அமைக்கப்பட்டிருக்கும். விறகு எரிந்த புகையும் இருளும் சேர்ந்து அச்சமையலறை மையிருட்டாகவே எப்போதும் பார்த்த நினைவு. அதில் தரையிலமர்ந்து புகையினூடே ஊது குழலால் எந்நேரமும் அடுப்பை ஊதிக்கொண்டிருக்கும் பாட்டியின் பிம்பம் எனது நிரந்தர நினைவுகளில் தேங்கியிருப்பவற்றில் ஒன்று. எனது தங்கை பிறந்தபோது வீட்டில்தான் பிரசவம் பார்த்தார்கள் - எண்ணை விளக்கொளியில். திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்த என்னைப் பின்னிரவொன்றில் எழுப்பி 'ஒனக்குத் தங்கச்சி பொறந்திருக்கா' என்று உறவினப் பெண்மணி சொன்னது இன்னும் நினைவிலிருக்கிறது.
'வீட்டுக்கு எலக்ட்ரிசிடி வரப்போவுது' என்று ஒரு நாள் திடீரென்று அறிவித்தார் அப்பா. ஊழியர் ஒருவர் வந்தார். திண்ணைக் கூரை மேல் வளைந்த கைப்பிடியுடன் இருக்கும் கைத்தடி போன்ற வடிவத்தில் சாம்பல் நிற பைப் ஒன்றைச் சொருகினார். ஆண்டெனா மாதிரி அது கூரைக்கு மேலே நின்றது. சொர்க்கவாசல் அருகில் இருந்த மின்கம்பத்திலிருந்து வயர் ஒன்றை இழுத்து பைப்பில் நுழைத்து திண்ணைச் சுவற்றில் பதித்த மீட்டர் ஒன்றில் இணைத்தார். சுவற்றில் துளையிட்டு ஹாலில் ஒரு சுவிட்ச் போர்ட் ஒன்றைப் பதித்தார். பச்சை, மஞ்சள் நிறங்களில் பின்னிப் பிணைந்திருந்த இன்னொரு வயர் ஒன்றை அந்தச் சுவிட்ச் போர்டிலிருந்து மேல் நோக்கிச் செலுத்தி பனை மரச் சட்டம் வழியாக நடு ஹால் வரை இழுத்து ஒரு ஹோல்டரில் முடித்து ஒரு 40 வாட்ஸ் குண்டு பல்பு ஒன்றைப் பொருத்தினார். நான் இவையனைத்தையும் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். 'சாயங்காலம் கனெக்‌ஷன் கொடுத்துர்றேன்' என்று சொல்லிவிட்டுப் போனார். ஏமாற்றத்துடன் வெளியில் சென்று நண்பர்களுடன் விளையாடிவிட்டு அந்தி சாய்ந்ததும் ஆறரை மணி வாக்கில் தெருவிளக்குகள் கண்சிமிட்டி எரியத் துவங்கியவுடன் வீட்டுக்கு ஓடிவந்து நடு ஹாலில் அந்தக் குண்டு பல்புக்குக் கீழே நின்றுகொண்டேன். சுவிட்ச் போர்டைக் கைக்கெட்டாத உயரத்தில் பொருத்தியிருந்தார்கள்.
மாலை ஏழு மணி அளவில் அப்பா வந்தார். வந்ததும் வழக்கமான கைகால் கழுவிக்கொள்ளுதல் ஆடை மாற்றுதல் என்பதையெல்லாம் முடிக்க, நான் பொறுமையிழந்திருந்தேன். பிறகு மெதுவாக வந்து ஸ்விட்ச் போர்டை உற்று நோக்கினார். தந்த நிறத்தில் ஒரேயொரு சுவிட்ச், சிகப்புப் புள்ளியுடன். அதன் மேல் ஆள்காட்டி விரலை வைத்தார். பல்பைப் பார்த்தார். சற்றுத் தயங்கினார். நான் கால்களை மாற்றி மாற்றி வைத்தேன். சுவிட்சை அழுத்தினார். கண்களைக் கூசி அந்த 40 வாட்ஸ் பல்பு அறையை ஒளிவெள்ளத்தால் நிரப்பிய அந்தக் காட்சியை என்னால் மறக்கவே முடியாது. அந்த அறையை அம்மாதிரி ஒளியில் நான் முதன்முறையாகப் பார்க்கிறேன். திடுக்கிட்டு சமையலறையிலிருந்து வெளிப்பட்ட பாட்டி, திண்ணையிலிருந்து உள்ளே வந்த தாத்தா, அத்தைமார், என்று எல்லார் முகத்திலும் அடக்கவியலாப் புன்னகை. நான் டங்க்ஸ்டன் இழையையே உற்று நோக்கிக்கொண்டிருந்தேன். பிறகு சுதாரித்து ஓடிப்போய் மூலையில் இருந்த ஹரிக்கேன் விளக்கின் காதைத் திருகி திரியை வற்றச் செய்து அணைத்தேன்.
'ரொம்ப செலவாகும். ஒண்ணு அல்லது ரெண்டு மணி நேரத்துக்கு மேல போடக்கூடாது' என்று உத்தரவிட்டார் அப்பா.
அன்று தரையிலிருந்து இடம்பெயர்ந்து உத்தரத்திற்குச் சென்றன பூச்சிகள். அன்றிலிருந்து அறையின் எந்த மூலையில் உட்கார்ந்தாலும் என்னால் புத்தகத்தைப் படிக்கமுடிந்தது.

ஸ்வதேஷ் படத்தை முதன்முறையாகப் பார்த்தபோது எனது வற்றாயிருப்பு வாழ்க்கையை முழுவதுமாகக் காட்சிப்படுத்திய படமாக அதை உணர்ந்தேன். அதில் மலை உச்சியில் நீரைத் தேக்கி அது கீழ்நோக்கிப் பாயும் வேகத்தில் மோட்டார் வைத்து ஷாருக்கான் மின்சாரம் உற்பத்தியாக்க வீட்டினுள் ஒரு குண்டுபல்பை வெறித்துக்கொண்டிருக்கும் மூதாட்டி பல்பு எரியத்துவங்கியதும் 'வெளிச்சம் (ஒளி)' என்று புன்னகையுடன் சொல்வாள். அந்த மூதாட்டியின் இடத்தில் நான் இருந்திருக்கிறேன். 
ஒருவர் வீட்டில் லிட்டரலாக ஒளியேற்றுவது என்பது அவ்வீட்டில் வசிப்பவர் வாழ்வில் விளக்கேற்றுவதற்குச் சற்றும் குறைவானதல்ல.

இத்திட்டத்தைத் தொடங்கிய முந்தைய அரசுக்கும், விரைவில் முடித்த இன்றைய அரசுக்கும் இருள் நீங்கிய மக்கள் நன்றியுடையவர்களாக இருப்பார்கள். மத்திய அரசுக்கும், அமைச்சகத்துக்கும் நன்றிகள். பாராட்டுகள்.