Monday, October 02, 2017

2017-இல் பருவ மழையும் தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைகளும்!

தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 1996-க்குப் பிறகு இந்த வருடந்தான் ஜூன் - செப் காலப் பருவமழை வழக்கத்தைவிட 30% க்கு மேல் பெய்திருக்கிறது. நகரங்களில் மழையளவு 15% மேல் பெய்திருக்கிறது.

தமிழக அரசு சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை எந்த அரசும் செய்யாத வகையில் நீர் மேலாண்மை தொடர்பான நடவடிக்கைகளைத் துரித கதியில் முடுக்கிவிட்டிருக்கிறது. 25000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மாநிலத்திலிருக்கும் பல்லாயிரக்கணக்கான நீராதாரங்களை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி சீரமைத்து, வாய்க்கால்களையும், மற்ற நீர் செல்லும் வழிகளையும், ஜாதி, மதம், கட்சி என் எந்தப் பாகுபாடுமின்றி, ஓட்டுக்காக யார் காலையும் நக்காமல், அரசு இயந்திரங்களை முடுக்கி ஆக்கிரமிப்புகளை கடந்த ஆறுமாத காலமாக அகற்றி வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் மொத்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு நீர்வழித்தடங்கள் சீராகி, பெய்யும் மழையில் ஒரு துளிகூட வீணாகமல் சேமிக்கப்படும்.

தனது வீட்டையும், கார்களையும், நிலங்களையும் விற்றுச் சொந்தக்காசில் இதுவரை தமிழக விவசாயிகளுக்காக இதுவரை தில்லியில் பலவிதங்களில் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ண்ணு, மழை நிறையப் பெய்திருப்பதால் இனிமேல் விவசாயம் தழைக்கும் என்பதால் போராட்டங்களை விலக்கிக்கொண்டு, கைவிட்டு, தமிழகம் திரும்பி வயற்காட்டிற்கு நேரடியாகச் சென்றார்.
தேவையில்லாத ஓட்டு பெறுவதற்காகத் தொடங்கப்பட்ட இலவசத் திட்டங்களை ரத்து செய்து அந்த நிதி இனிமேல் மாநிலக் கட்டமைப்புகளுக்காகச் செலவழிக்கபடும் என்ற அறிவிப்பு நாளை காந்தி ஜெயந்தியன்று வெளியிடுகிறது தமிழக அரசு.
தமிழகத்தில் இருக்கும் அனைத்து மணல் குவாரிகளும், கற் குவாரிகளும் மூடப்பட்டு, மணல் அள்ளும், கல்லுடைக்கும் அனைத்து ஒப்பந்தங்களும் இரத்து செய்யப்படுகிறது. ஆற்று மணலை கையால் அள்ளினாலும் உடனடி சிறை என்ற சட்டம் சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட உள்ளது. யாரேனும் எங்கேனும் மணல் கடத்துவதாகத் தெரியவந்தால் பொதுமக்கள் உடனடியாக 109 என்ற எண்ணுக்கு அழைத்துத் தெரிவித்தால் போதும். 108 ஆம்புலன்ஸ் போலவே 109 என்ற அவசர அழைப்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 கமாண்டோக்களடங்கிய அதிரடிப்படை நிறுவப்பட்டு 25 ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்படும். 109 அழைப்புகளுக்கு இந்த அதிரடிப்படை உடனடியாக களத்திலிறங்கி மணலைக் கடத்துபவர்களைக் கண்டதும் சுட அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதேபோல் 110 எண்ணுக்கு அழைத்தால் மரம் வெட்டுபவர்களையும், கடத்துபவர்களையும் கண்டதும் சுடும் அதிகாரத்துடனான காடு பாதுகாப்புப் படை நிறுவப்பட்டிருக்கிறது. மொத்தம் 10000 அதி உயர் நுட்ப ட்ரோன்களை தமிழகம் அமெரிக்காவிடமிருந்து வாங்க ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இந்த ட் ரோன்களைத்தான் அமெரிக்கா ஆஃப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை வேட்டையாட உபயோகிக்கிறது. இந்த ட்ரோன்களில் லேசர் வழிகாட்டும் சிறு ரக ஏவுகணைகளும் இயந்திரத் துப்பாக்கிகளும் பொருத்தப்பட்டுள்ளன. மரம் கடத்தும் எவரும் கேள்விகேட்காமல் போட்டுத்தள்ள இந்த அமைப்பு உதவும்.
இயற்கை வளங்களை முழுவதும் பாதுகாத்து வருங்கால சந்ததிகள் தழைப்பதே ஆட்சியாளர்களின் ஒரே குறிக்கோள் என்பதை முதல்வர் தெரிவித்தார். இதை தமிழகத்தின் அனைத்து ஊடகங்களும் ஒருமனதாகப் பாராட்டியுள்ளனர். யாரும் இது மோடியின் சதி என்று திட்டவில்லை.
அனைத்து நடுநிலை வகிப்பவர்களும் பாராட்டும் விதமாக, 'கடவுள் இல்லை, கடவுளைக் கும்பிடுகிறவன் காட்டு மிராண்டி' என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட ஆளுயர பெரியார் சிலைகளை தமிழகத்தின் ஒவ்வொரு வழிபாட்டுத் தலங்கள் முன்னும் நிறுவ அரசு உத்தரவிட்டிருக்கிறது. எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான செலவை அந்தந்த மத அமைப்புகள் எவ்வளவு கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் இருக்கின்றனவோ அதற்குத் தகுந்தாற்போல் கணக்கிட்டுப் பங்கிட்டுக்கொள்ள இசைந்திருக்கிறார்கள். 'இவ்வளவு நாள் ஸ்ரீரங்கம் கோவில் முன்பு மட்டும் பெரியார் சிலை வைத்து இந்துக்களை மரியாதை செய்த அரசு, இப்போது சிறுபான்மையினர் மீதும் அதே கரிசனத்தைக் காட்டுவது, தாமதமான முடிவு என்றாலும், வரவேற்கிறோம்' என்று ராமுடன் சேர்ந்து நின்று ரஹீமும் ராபர்ட்டும் கூட்டறிக்கை விட்டிருக்கிறார்கள். 'இச்சிலைகளை ஈமாமும், பாதிரியாரும், பூசாரியும் மட்டும்தான் திறந்து வைக்கவேண்டும். நாங்கள் காசு போட்டிருப்பதால். இதிலும் புகழை மட்டும் எடுத்துக்கொள் திகவினர் முனையக்கூடாது' என்று மூவரும் அன்புக் கட்டளை விடுத்திருக்கின்றனர். 'வேண்டுமானால் பறவை எச்சத்தையும், நாய்கள் பெய்யும் மூத்திரத்தையும், மனிதர்கள் துப்பி, மூக்கு சீந்தி வைத்திருப்பதையும், துடைத்துச் சுத்தம் பண்ணும் அரிய பணியை திகவினருக்கு விட்டுக்கொடுக்கத் தயார்' என்றும் பெருந்தன்மையுடன் அவர்கள் அறிவித்தனர். இதைக்கேட்ட தலைவர் வீரமணி ஆனந்தக் கண்ணீருடன் மூவருக்கும் சால்வை போர்த்திப் பாராட்டி கழகத் தோழர்களுக்கு ப்ரஷ், சோப், வாளித் தண்ணீரை இலவசமாக வழங்க தீவுத் திடலில் மாபெரும் கூட்டம் ஒன்றை நடத்தும் அறிவிப்பை வெளியிட்டார். 'என் துண்டால் சிலையைத் துடைத்து இப்பணியைத் துவக்கிவைப்பேன்' என்று முழங்கினார்.
***
முதல் பத்தி மட்டும் உண்மை. மற்ற பத்திகள் உண்மையாகும் காலம் வெகுதொலைவில் இல்லை! 

Friday, September 29, 2017

The Shitty Bank!


சுற்றலில் விடுவது என்பதை கொஞ்சகாலமாக ஸிட்டி வங்கியிடம் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். அந்த வங்கியில் நான் கணக்கு துவங்கியது 90களில் பங்களூரில் இருந்த காலகட்டத்தில். புலம்பெயர்ந்ததும் அதை வெளிநாட்டுவாழ் இந்தியர் கணக்காக மாற்றிக்கொண்டு தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள். பாஸ்டனிலிருந்து கலிஃபோர்னியாவுக்கு இடம்பெயர்ந்து முதலில் ஒரு அபார்ட்மெண்ட்டில் குடியிருந்தோம். எனது வங்கிக்கணக்கு விவரங்களில் முகவரியை மாற்றி அதற்குரித்தான சான்றிதழ்களையும் (கலிஃபோர்னியா ஓட்டுநர் உரிமம்) கொடுத்து முடித்தாகிவிட்டது.
சென்ற வருடம் உள்ளூரிலேயே இன்னொரு வாடகை வீட்டுக்குக் குடிபெயர்ந்தோம். கடமையே கண்ணாயிரமாக ஸிட்டி இணையத்துக்குச் சென்று எனது முகவரியை மாற்றினேன். அப்போது ஆரம்பித்தது சனி. RBI யின் KYC விதிகளின்படி எனது புதிய முகவரிக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவேண்டும் என்று ஸிட்டியிடமிருந்து கடிதம், மின்னஞ்சல் வந்தது. அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை என்னவென்றால் அவர்கள் கேட்ட ஆதாரங்களில் ஒன்றைக்கூட என்னால் சமர்ப்பிக்கமுடியாது என்பது. நானும் விளக்கம் சொல்லிக் கெஞ்சிக் கதறிக் கூத்தாடிப் பார்த்துவிட்டேன் (ஒற்றெழுத்துகளைச் சரியாகப் போட்டிருக்கிறேனா?). கடைசியாக உங்கள் கணக்கை முடக்கிவைத்திருக்கிறோம் என்று நேற்றுக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.
ஃபோன் செய்தேன். ஒரு அம்மணி எடுத்தார்கள்.
‘நீங்கள்தான் நீங்கள் என்பதற்குச் சில கேள்விகளைக் கேட்போம்’
‘சரி’
‘உங்கள் பிறந்த தேதி’
உண்மையான தேதியைச் சொல்வதா, ‘பள்ளியில் கொடுத்த தேதி’யைச் சொல்வதா என்று வினாடி நேரக் குழப்பம். பள்ளித் தேதியைச் சொன்னேன்.
‘கடைசியாக நீங்கள் உங்கள் வங்கிக்கணக்கில் செய்த இரண்டு பரிவர்த்தனைகளைக் குறிப்பிடுங்கள்?’
யோசித்து ‘ஆமஸானில் முண்டா பனியன் வாங்கியதற்கு இரண்டாயிரம் ரூபாய். எல் ஐ சிக்கு அனுப்பியது அறுநூற்று நாற்பத்தேழு ரூபாய்’
‘உங்களை நீங்கள்தான் என்று நிரூபித்தமைக்கு நன்றி. ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ?’
‘மேம்’ என்று ஆரம்பித்து நான் கொடுத்த விளக்கத்தின் சாரம் இது.
1. கலிஃபோர்னியா ஓட்டுநர் உரிமத்தில் முதன்முறை எடுத்த முகவரி பதிவாகியிருக்கும். உரிமத்தின் காலம் முடிவடையுமுன் முகவரியை மாற்றினால் அவர்களது இணையத்தில் மாற்றலாம். ஆனால் புதிய முகவரியுடன் உரிமத்தை அவர்கள் வழங்குவதில்லை. எனது உரிமம் 2019 வரை செல்லுபடியாகும். அதற்குமுன் அதை புதுப்பிக்க முடியாது. பழைய முகவரியுடன்தான் உபயோகிக்கவேண்டும். உரிமத்தைப் புதுப்பிக்கும்போதுதான் அப்போதைய முகவரியுடன் புதிய உரிமத்தை வழங்குவார்கள்.
2. அமெரிக்க பாஸ்போர்ட்டில் முகவரியை அச்சிடும் வழக்கம் இல்லை.
3. எனக்கு ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, இந்திய ஓட்டுநர் உரிமம் கிடையாது.
4. இது தவிர எனது புதிய முகவரியுடன் வாகனப் பதிவுச் சான்றிதழ், வங்கிக்கணக்கு, மின்சாரக்கணக்கு, வீட்டு வாடகை ஒப்பந்தம், எனது வருமானவரிப் படிவம், சம்பள ரசீது, எனது முதலாளியின் கடிதம், நூலக உறுப்பினர் அட்டை என்று மற்ற ஆவணங்கள் இருக்கின்றன. பாஸ்டன் வீட்டுப் பத்திரமும், அதன் சொத்துவரி ரசீதும் இருக்கின்றன.
"இவற்றைத் தவிர வீடு மாற்றிய கலிஃபோர்னிய வாசியால் வேறு ஒன்றையும் கொடுக்க இயலாது. இது உங்களுக்குப் புரியாவிட்டால் உங்களது மேலதிகாரியிடம் கொடுங்கள். நான் பேசுகிறேன்.”
சற்று மெளனத்திற்குப் பின் ஒரு நபர் வந்தார். நான் ‘தோழர்’ என்று துவங்கி மறுபடியும் 1 லிருந்து 4 வரை ஒப்பித்தேன்.
‘ஸார். இட்ஸ் நத்திங் டு டு வித் அஸ். ஆஸ் பெர் ஆர்பிஐ ரெகுலேஷன்ஸ்…’ என்று அவர் மறுபடியும் மேம் சொன்னதை ஒப்பித்தார்.
எனக்கு திடீர் ஐடியா வந்தது.
‘ஒண்ணு பண்றேன். மறுபடி முகவரியை எனது முந்தைய கலிஃபோர்னியா முகவரிக்கே மாத்திர்ரேன். அதே முகவரியோட என்னோட ஓட்டுநர் உரிமம் இருக்கறதால பிரச்சினை இல்லை - இல்லியா?’
‘ஸாரி சார். முதலில் இப்போது இருக்கும் முகவரியை நிரூபித்துவிட்டுத்தான் நீங்கள் எதையும் மாற்றமுடியும்’
"எனக்கு டிடிவி தினகரனைத் தெரியும்”
‘ஸாரி சார். எங்களுக்கு அவரைத் தெரியாது”
‘அடேய். நீ கேட்கும் ஓட்டுநர் உரிமம் வழங்கும் அதே போக்குவரத்துத்துறைதான் வாகனப் பதிவுச் சான்றிதழ்களையும் வழங்குகிறது. ஆனால் உங்களுக்கு பெட்ரூமாக்ஸ் லைட்டேதான் வேண்டுமா?'
‘ஸாரி சார். அம்மாவின் ஆணைக்கிணங்க… ஸாரி… RBI ஆணைக்கிணங்க ஸிட்டி ஏற்றுக்கொள்ளாது’
எனக்கு வந்த கோபத்தில் 'ஒரு இருபது வருட வாடிக்கையாளரை இப்படித்தான் படுத்துவீர்களா? உங்கள் சகவாசமே வேண்டாம். நான் வேறு வங்கியைத் தேடிக்கொள்கிறேன். உடனடியாகக் கணக்கை முடித்து டிமாண்ட் டிராப்டை அனுப்பவும்’ என்று கத்தினேன்.
‘சார். உங்கள் கணக்கில் மினிமம் பேலன்சுக்குக் கொஞ்சம் குறைகிறது. அதற்கு மாசம் ரூ.400 ஃபைன் போடுவோம். நீங்கள் நீண்டகால வாடிக்கையாளர் என்பதால் அதை வைவ் செய்திருக்கிறோம்’.
‘சரி இருப்பதை அனுப்பித் தொலைங்களப்பா’
‘அதை அனுப்புவதற்கு உங்கள் முகவரி ஆதாரம் வேண்டும்’
அடப்போங்கய்யா!
***