Tuesday, July 26, 2011

சொர்க்க வாசல்



வற்றாயிருப்பு வீட்டு எதிரே பெருமாள் கோவில் சொர்க்கவாசல். கோவில் தெருவைப் பிளந்து கிழக்கு பார்த்து இருக்கும். கோவில் முன்பு நன்னீர் கிணறும் பின்பக்கம் ஒரு தண்ணீர்க்குழாயும் இருக்கும். நான்கு தெருப்பெண்களும் அவரவர் குடங்கள், வாளிகள் கொண்டு வந்து நீர் இறைப்பார்கள். பிடிப்பார்கள். காலையில் முதலாளாகப் போய் நீர் இறைத்தால் வறண்ட கயிறு உராய்ந்து உள்ளங்கை எரியும். சற்று கழித்துப் போனால் நீரில் நனைந்து மிருதுவாகி இறைப்பது சுலபமென்பதால் தாமதமாகத்தான் போவோம். கிணற்றுக்குச் சற்று நடக்கவேண்டும். குழாய்தான் அருகில். ஆனால் கிணற்றில் நீரிறைப்பதை வேடிக்கைபார்ப்பதற்காகப் போவதுண்டு. ஆள்நடமாட்டமில்லா மதிய வேளைகளில் எட்டிப்பார்த்தால் பாதாளத்தில் நெளியும் வானமும் சில்லவுட்டாக என் உருவமும் தெரியும். லேசாக பயமாகக்கூட இருக்கும்.

சொர்க்கவாசலுக்கு முன்பு ஐந்தடி அகலத்தில் ஐந்து கற்படிக்கட்டுகள் இருந்தன. ஒவ்வொரு படிக்கும் ஒரு பெயர் வைத்து விளையாடுவோம். Bank, Ocean, River, Water, Sea என்பதே அவற்றின் பெயர்கள். தரைக்குப் பெயர் Land. டand-ஐ ஒட்டி இருந்தது Sea. மேலே இருக்கும் படி Bank. தரையில் நின்றுகொண்டு பார்த்தால் Bank என் தோளுயரத்தில் இருந்தது.

வரிசையாக படிகளின் ஓரத்தில் நின்று கொள்ள விளையாடுபவன் முதலில் வந்து Land-இல் நின்று கொள்ள எதிராள் சொல்லும் படியில் ஏற வேண்டும். வேறு எந்தப் படியிலும் உடல் படக்கூடாது என்பதே விளையாட்டு. பட்டால் அவுட். கீழே நின்றதும் முதலில் சுலபமாக Ocean என்பார்கள். ஒரே தாண்டில் அந்த மூன்றாவது படிக்குப் போய்விடலாம். பிறகு Water; அப்புறம் Bank என்று மாறி மாறி கொஞ்சநேரம் தாண்டியதும் மறுபடியும் Land-க்குப் போகச் சொல்வார்கள். அங்கிருந்து "Bank" என்பான். இதுதான் சவால். அங்கிருந்து Bank படியில் மற்ற படிகளில் உடல்படாமல் ஏறுவது என்பது அசாதாரணமான விஷயம். ஒருகாலில் நின்று கொண்டு இன்னொரு காலை நீட்டினால் Bank எட்டாது. அங்கு போவதற்கு என்னென்னமோ சர்க்கஸ் வேலைகள் செய்வார்கள்.

சற்று பின்வாங்கி கைகளைத் தரையில் ஊன்றி தலைகீழாக நின்று ஒரு தாவு தாவி Bank-இல் ஏறிவிடுவான் ஜீவா. உயரமான பையன்கள் கைகளைத் தரையிலூன்றித் திரும்பி பாதங்கள் Bank-இல் பட Land-க்கும் Bank-க்கும் பாலம் போல சாய் கோணத்தில் நிற்பார்கள். உடனே "Land" என்று அறிவிப்பு ஒலிக்க, கால்களை நெம்பி எடுக்க முடியாமல் அவுட்டாகிவிடுவார்கள். என்னால் Land-லிருந்து Ocean-க்குத்தான் பெரும்பாலும் போக முடிந்தது. வற்றாயிருப்பில் இருந்த வரை என்னால் Bank-படியை எட்டவே முடியவில்லை.

ராமகிருஷ்ணா திரையரங்கில் இரண்டாம் ஆட்டம் எம்ஜியார் படம் பார்த்துவிட்டு வீட்டுக்குள் நுழையாமல் Bank-இல் படுத்துப் பலமுறை தூங்கியிருக்கிறேன். தாத்தா டிக்கெட் கொடுத்து முடித்துவிட்டு கணக்கையெல்லாம் செட்டியாரிடம் பைசல் பண்ணிவிட்டு வந்து தங்கபஸ்பம் ”போயிலை”யை கொஞ்சநேரம் குதப்பித் துப்பிவிட்டு Ocean-மீது படுத்துத் தூங்குவார். பகல்வெயில் சூடேறிய பாறைப் படிகளின் உஷ்ணம் இரவு முழுதும் முதுகில் இதமாகப் படிந்திருக்கும். அதிகாலை விடியுமுன் தெருப்பெண்மணிகள் வாளிகளுடன் வெளிப்பட்டு மண்தரையில் பளேரென்று நீரைத் தெளித்துக் கோலமிடுவார்கள். நீர் தெளிக்கப்படும் ஓசையில் லேசாக உறக்கம் கலையும். சிலசமயம் அத்தைமார் வாசலிலிருந்து தெளிக்கும் நீரின் சில துளிகள் முகத்தில் பட்டு எரிச்சலாக முணுமுணுத்துக்கொண்டு ஒருக்களித்து முதுகுகாட்டிப் படுப்பேன். பால்காரர் சைக்கிளில் வந்து பால் ஊற்றும் போது எழுந்து தோளில் துண்டைப் போட்டுக்கொண்டு தெற்குத்தெருதாண்டி சிவன்கோவிலுக்கு அப்பால் வயல்வெளிகளில் இருக்கும் பிரம்மாண்ட விவசாயக்கிணறுகளில் குளிக்கக் கும்பலாகக் கிளம்பிவிடுவோம்.

வேலைவெட்டியில்லாத அக்ரஹாரத்து இளைஞர்கள், நடுத்தரவயதுக்காரர்கள் சொர்க்கவாசல் படிக்கட்டுகளில் அமர்ந்து அரட்டையடிப்பார்கள். நாங்கள் பள்ளி முடிந்து வந்ததும் எங்கள் விளையாட்டைத் தொடர்வதற்காக இடத்தைக் காலிசெய்துவிடுவார்கள்.

வருடத்திற்கு ஒரு முறையோ என்னவோ மட்டும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு கருடவாகனம், மயில்வாகனம் என்று வெளிவந்து பல்லக்கில் பெருமாளைத் தூக்கி வலம் வருவார்கள். எங்கள் வீட்டுமுன் கூட்டம் அம்மும். அந்தப் படிகள்தான் எங்கள் விளையாட்டு மைதானம். சொத்து. கோவிலின் பிரம்மாண்ட சுவரையொட்டி இட்லித்தட்டுபோன்று குழிகள் தோண்டி கோலிகள் எறிந்து விளையாடுவோம். “பேந்தா” என்றொரு கோலி விளையாட்டும் பிரபலம். தெருவில் கிட்டிப்புள் தூள் பறக்கும். சைக்கிள் டயர்களையும், ரிம்களையும் குச்சியொன்று வைத்துக்கொண்டு அசுரவேகத்தில் இப்புறமும் அப்புறமும் செலுத்தி ஓடுவார்கள் பையன்கள். எதிரெதிரே நின்றுகொண்டு அவரவர் “வாகனத்தை” வேகமாக உருட்டி மோதச் செய்வது பிரபலம். ஸ்கூட்டர் டயர் ஒன்றை வைத்திருந்த பையன் தான் சாம்பியன். ஸ்கூட்டர் டயருடன் மோதி சைக்கள் சக்கரங்கள் ஜெயிப்பது சாத்தியமே இல்லை. கம்பியுடைந்து உருவமிழந்த சைக்கிள் டயர்களை ஏழைப் பையன்கள் ஓட்டிக்கொண்டு போவார்கள். எட்டு மாதிரி வளைந்து வளைந்து எலும்பில்லா விலங்கு போல ஓடும் அவை.

பம்பரங்களால் பம்பரங்களைக் குத்தி ”ஆக்கர்” வைப்போம். இதயம் மாதிரி வளைவு வளைவாக சந்தனக் கலர் கட்டையில் செய்து மேலே தலையில் வண்ணங்களெல்லாம் தீட்டி அலங்காரமாக வரும் பம்பரங்கள் பார்க்கக் கவர்ச்சியாக இருந்தாலும் எங்களுக்கெல்லாம் பிரமிடைத் திருப்பிப்போட்டது போல இருக்கும் அடர்பழுப்பு கட்டையில் செய்த வளைவுகளற்ற சாதாரண தோற்றத்திலிருக்கும் பம்பரங்கள்தான் பிடித்தமானவை. குறிபார்த்துச் சுண்டி பம்பரங்களைக் குத்திப் பெயர்க்க அவை சிறந்தவையாக இருந்தன. ஜீவா அப்படியே பம்பரத்தைத் தரையில் குத்தியெழுப்பி உள்ளங்கையில் ஏந்தி என் உள்ளங்கையில் இறக்க கிர்ரென்று குறுகுறுக்கும். அதை திண்ணைத் தரையில் விட்டால் சத்தமின்றி நீண்டநேரம் ரொங்கும்.

இருபத்திநாலு மணிநேரமும் படிகள் சொர்க்கவாசலிலேயே கிடந்தன. ஊர்விட்டு வந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்களாகிவிட்டன. அதற்கப்புறம் நடுநடுவே ஓரிரு தடவைகள் மட்டுமே போக வாய்ப்புக்கிடைத்துப் போனபோதும் படிகளைப் பார்க்கவில்லை. வீட்டையும் விற்றுவிட்டதால் சொர்க்கவாசல் பக்கம் எந்த வேலையும் இல்லை.

போனவருடம் என் அண்ணன் மதுரையிலிருந்து குடும்பத்தை அழைத்துக்கொண்டு குழந்தைகளுக்கு “பிறந்த ஊரைக்” காட்டுவதற்காக வற்றாயிருப்புக்குச் சென்று விட்டு வந்தான். “எப்படி இருக்கு வற்றாப்?” என்று கேட்டதற்கு, எட்டிப்பார்த்த பெருமாள்கோவில் முன்புறக் கிணற்றின் கைப்பிடிச் சுவர் இப்போது முழங்கால் உயரமே இருக்கிறதாம். ராட்டினமெல்லாம் காணாமல் போய் கிணற்றுக்குள் போர்வெல் போட்டு குழாயில் தண்ணீர் பிடிக்கிறார்கள் என்றான்.

“நம்ம வீட்டுக்குப் போனேன். இப்ப இருக்கற வீட்டுக்காரர் நல்லா மெயின்டெய்ன் பண்றார். எங்களை வரவேற்று அப்பா பத்தி விசாரிச்சார்”.

சொர்க்கவாசல் பற்றிப் பேச்சு வந்தது.

”இப்ப பாத்தா Bank-ம் Ocean-ம் மட்டும்தான் வெளியே தெரியறது. மத்ததெல்லாம் மண்ணுக்குள். ரோட்டைப் போட்டுப்போட்டு தெருவே மேடாகி வீடெல்லாம் கீழே போயிடுச்சு” என்றான்.

சோகமாக இருந்தது.

***

Thursday, April 07, 2011

Say Cheeeeeeese!


Say Cheeeeeeese!

மூன்று கழுதை வயசு வரை (அப்டீன்னா என்ன? எத்தனை?) கட்டிக் காப்பாற்றிப் பின்பற்றி வந்த வீட்டில் பெரியவர்கள் சொன்ன "லைஃப்ல எதுக்காகவும் யார்கிட்டயும் பல்லைக் காட்டிட்டு போய் நிக்கக் கூடாது” அறிவுரையை கடைசியில் கைவிட வேண்டியதாகிவிட்டது. பல்லைக் காட்டிக்கொண்டு நின்றென்ன.. உட்கார்ந்தேவிட்டேன்.

”கடைசியா எப்ப பல் தேய்ச்சீங்க...ஸாரி... க்ளீன் பண்ணீங்க?” என்றார் அந்த வெள்ளைக் கோட்டு, நெற்றிவிளக்கு பல் டாக்டர். ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று புரியாமல் “காலைலதான்” என்றேன். வாய்க்குள் இடுக்கி இருந்ததால் நான் சொன்னது அவருக்குப் புரிந்ததா தெரியவில்லை.

“இதுக்கு முன்னாடி இங்க வந்துருக்கீங்களா?”

இதுக்கு முன்னாடி நீங்க இங்க டாக்டரா இருந்தீங்களா என்று கேட்காமல் “இல்லை டாக்டர். இதான் முதல் தடவை”

”இதுக்கு முன்னாடி ஹைஜீன் செக்கப், க்ளீனிங் யார்க்கிட்ட செஞ்சுக்கிட்டீங்க?”

“இல்லை டாக்டர். இதான் முதல் தடவை”

சம்பாஷணையைத் தொடருமுன் சிறிய கொசுவர்த்திச் சுருள் ஒன்றைச் சுற்றிக் கொள்கிறேன்.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்று சும்மா படிக்க மட்டும் செய்யவில்லை. வத்திராயிருப்பில் என் சிறுவயதில் அதைக் கடைப்பிடிக்கவும் செய்தேன். எங்கள் வீட்டுக் கொல்லையில் இரண்டு வேப்ப மரங்களும், ஒரு பெரிய்ய்ய புளிய மரமும் இருந்தன. வேம்புக் குச்சியொன்றை தினமும் ஒடித்துக் கொடுப்பார் தாத்தா. அதன் முனையை முதலில் நன்றாகக் கடித்து பிரஷ் மாதிரி செய்துகொண்டு பின்பு துலக்க வேண்டும். எனக்கு வேப்பம் பழங்கள் மிகவும் பிடிக்கும். வேப்பங் குச்சி - அதைச் தின்ன வேண்டியதில்லை என்பதால் கசப்பைத் தாங்கிக்கொண்டு தேய்ப்பேன். அப்படியும் கடைவாய் வழியாக கசப்பு உள்ளிறங்கிவிடும். ”வேணும்னா உப்பு சேத்துக்கோ” என்பார் தாத்தா. நைசான பொடியுப்பெல்லாம் கிராமத்தில் கிடையாது. கல் உப்புதான். அதால் தேய்த்தால் கல்லால் பல்லைத் தேய்ப்பது போல இருந்ததால் உப்பைத் தவிர்த்துவிட்டு வேப்பங்குச்சியொடு நிறுத்திக்கொண்டேன். ஆலங்குச்சிக்கெல்லாம் ஊரெல்லையில் குளத்தங்கரைக்குப் போகவேண்டுமென்பதால் வேப்பங்குச்சியே எனது ஆஸ்தான பிரஷ் கம் பேஸ்ட்டாக இருந்தது. பிறகு கொஞ்சம் “வசதி“ வந்ததும் கோபால் பல்பொடி வாங்கினார்கள். சும்மாவா? இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேஷியா போன்ற எல்லா நாடுகளிலும் விற்கும் “ஃபாரினுக்கெல்லாம் போகும்“ வஸ்துவாயிற்றே! கோபால் பல்பொடி பொட்டலத்தை மூலையில் கிள்ளித் திறந்து உள்ளங்கையில் கால் ஸ்பூன் கொட்டி ஆள்காட்டி விரலில் ஒற்றித் தேய்த்த அந்த முதல் அனுபவத்தை மறக்க முடியாது. கோபால் பல்பொடி கோலப்பொடியில் சர்க்கரை கலந்தது போல் இருந்தது. ஆனால் வேப்பங்குச்சியின் கசப்புக்கு எவ்வளவோ பரவாயில்லை.

தாத்தா மட்டும் கோபால் பல்பொடியைத் தொடவேயில்லையே என்று புலனாய்ந்ததில் அவர் அவருக்கே என்று வைத்திருந்த சிறிய ஷெல்ப் ஒன்றில் ஒளித்து வைத்திருந்த சிறிய அலுமினிய டப்பியைக் கண்டுபிடித்தேன். பயோரியா என்று எழுதியிருந்ததைப் பார்த்தும் லேசாக பயமாக இருந்தது. தாத்தா நிறைய தங்க பஸ்பம் “போயிலை“ போடுவார். கன்னம் உப்பியே இருக்கும். முதலில் பயோரியாவை மருந்து என்று நினைத்தேன். டப்பியைத் திறந்து பார்த்ததில் பாண்ட்ஸ் பவுடர் மாதிரி தூய்மையாக இருந்தது. லேசாக மருந்து வாடை அடித்தது. ஆள்காட்டி விரலை முக்கி முதல் தேய்த்தலிலேயே ஜிவ்வென்று மேலண்ணம் எரிந்து கண்ணில் உடனடியாக நீர் வந்தது. தலைதெறிக்கத் திரும்ப ஓடி வந்தும் நீண்ட நேரம் வாய்க்குள் இன்னொரு லேயர் ஒட்டிக்கொண்டிருந்ததைப் போன்ற பிரமை இருந்தது.

பிறகு கோல்கேட் பேஸ்ட்டெல்லாம் வாங்கித் தேய்க்குமளவிற்குப் பெரிய ஆளாகிவிட்டேன். பேஸ்ட் அணில் முதுகு மாதிரி வரிவரியாக (கலரில்) பிதுங்கி வரும். ட்யூபின் குரல்வளையை நெறித்துக் கடைசித் துளி வரை பிதுக்கிவிட்டுத்தான் தூக்கிப் போடுவோம். ஆரம்ப காலங்களில் பேஸ்ட்டைத் தேய்த்ததைவிட தின்றதே அதிகம். ஒழுங்காகத் தினமும் பல் தேய்த்து கண்ணைக் கூசச் செய்யும் அளவிற்கு டாலடிக்காவிட்டாலும் ஓரளவுக்கு வரிசையான ஆரோக்கியமான பற்கள்தான் எனக்கு. நாவல்களில் படித்த “ரோஜா ஈறுகளுடன் பளீரென்று சிரித்தாள்”  வர்ணனை கொடுக்குமளவிற்கு யாரையும் பார்த்ததில்லை. மாமல்லன் மாதிரி மாபல்லன் அல்லது மாபல்லி தெருவுக்கு ஒருவர் தெத்துப் பற்களுடன் கட்டாயம் இருப்பார்கள். பல்லா அல்லது பல்லீ என்று கூப்பிடுவோம். இது தவிர கோரைப் பல்லன், காரைப் பல்லன், பாறைப் பல்லன் என்று பல வகை சினேகிதர்கள் இருந்தார்கள். பட்டாணியை நொறுக்குவோம். பொங்கல் சமயத்தில் வீட்டெதிர் பெருமாள்கோவில் சொர்க்க வாசல் படிக்கட்டுகளில் அமர்ந்து முழுக் கரும்பையும் வாயோரங்கள் எரிய எரியக் கடித்துத் தின்னுவோம். இவ்வளவு ஏன். கல்கோனாவையே அஸால்ட்டாகக் கடித்துச் சாப்பிடுவோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பொதுவாகவே ஆரோக்கிய வாழ்வு ஆதலால் மருத்துவமனையை நாடவேண்டிய அவசியமில்லாமல் இருந்தது. அரசு மருத்துவமனையை நினைத்தால்தான் லேசாக ஜூரம் வருவது போல இருக்கும்.

பிறகு பெரியவனாகி வேலைக்குப் போன பின்பும் பல்லுக்கெல்லாம் தனியாகவென்று எதையும் பரிசோதித்துக்கொண்டதில்லை.

அமெரிக்கா வந்ததும் ஹெச்ஆர் டிபார்ட்மெண்டிலிருந்து உங்களுடைய டெல்ட்டா டென்ட்டல் இன்ஷூரன்ஸ் கவரேஜ் பற்றிய விவரங்கள் இதோ என்று மின்னஞ்சலில் ஒரு ராமாயணமே அனுப்பியிருந்தார்கள். முதலில் அதை “Please click here to receive the $300 million dollars of unclaimed funds of the deceased to your bank account" வகை நைஜீரியா மின்னஞ்சல் என்று நினைத்துக்கொண்டு ரத்து செய்துவிடலாமா என்று கணிலியை (கணிலி=Mouse ஹிஹி) அமுக்கியே விட்டேன். மதியமே ஹெச்ஆர் ஆள் வந்து “டிசம்பர் முடியப் போவதால் செக்கப் செய்துகொண்டுவிடு இல்லாவிட்டால் இந்த ஆறுமாத கோட்டா வேஸ்ட்டாயிடும்“ என்று சொல்ல ஒன்றும் புரியவில்லை. அதாவது ஆறு மாதத்திற்கொருமுறை வழக்கமாக பல்லைக் காட்டி செக்கப் செய்துகொண்டுவிட வேண்டுமாம். பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத்தான் அந்த டெல்ட்டா டென்ட்டல் பாலிஸியாம். “ஆரோக்கிய வாழ்வை காப்பது லைஃபாய்தானே? எதற்கு பல்லைக் காட்டவேண்டும்?” என்று கேட்டதற்கு என்னை அயல்கிரகவாசி போன்று பார்த்துவிட்டு விலகிப் போனான். அந்த மின்னஞ்சலை மீட்டெடுத்துப் படித்துப் பார்த்ததில் தலைசுற்றி பல்வலி வரும்போல இருந்தது. அப்புறம்தான் இந்தக் கட்டுரையின் முதல் பாரா சம்பவம் நடந்தது. போனது தெருக்கோடியிலேயே இருந்த ஒரு பல் மருத்துவமனைக்கு. மருத்துவர் இளைஞராக இருந்தார். “உங்கள் டெல்லிக்கும் பெங்களூருக்கும் வந்திருக்கிறேன்“ என்றார்.

எக்ஸ்ரேயெல்லாம் (பல்லுக்குத்தான்!) எடுத்து காட்டினார்கள். கருப்பு வெள்ளையில் கலைடாஸ்கோப் பார்த்த மாதிரி பூச்சி பூச்சியாக இருந்தது. மருத்துவர் வாயில் விளக்கடித்துக் சோதித்துவிட்டு ”ஈறுகளுக்குள் ப்ளாக் இருக்கு. அதை எடுக்காவிட்டால் கொஞ்ச நாளில் பற்குழி வந்து பல்லெல்லாம் காலியாகி விடும். நோயெல்லாம் வரும்” என்று பயமுறுத்திவிட்டு Deep Cleaning செய்தேயாக வேண்டும் என்று கழுத்தில் துண்டைப் போட்டு இருக்கையின் முதுகுப் பக்கத்தைச் சாய்த்து படுக்கை வசத்தில் என்னை அழுத்தினார். “ஒரே நாளில் மொத்த வாயையும் சுத்தம் பண்ண முடியாது. இன்னிக்கு வலது பக்கம் மட்டும்” என்றார்கள். அடப் பாவிகளா,  இரண்டு மூன்று விஸிட் வருமளவிற்கு என்ன குகையையா சுத்தம் செய்யப்  போகிறார்கள்? வாய்தானே? என்று நினைத்தேன். வந்திருக்கக்கூடாதோ என்று தோன்றியது.

Ear bud ஒன்றின் கொண்டையில் நீல திரவத்தைத் தோய்த்து ஈறுகளில் தேய்க்க இனிப்பாக இருந்தது. I'll be back in 2-3 minutes என்று அவர் வெளியேறிச் செல்ல வாய்க்குள் ஒருபக்கம் மட்டும் பலூன் போல வீங்கும் பிரமை எழுந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வலது வரிசைகளில் உணர்வு தேய வாயைத் திறந்திருக்கிறேனா மூடியிருக்கிறேனா என்றே உணர முடியவில்லை. சுத்தமாக மரத்துப் போகத் தொட்டுப் பார்த்தால் உணர்வே இல்லை. பக்கவாதம் வந்து ஒரு பக்கம் செயலிழந்தவர்களின் கோணிய முகத்தினைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு இப்படித்தான் உணர்வின்றி இருக்குமோ என்று தோன்றியது.

மருத்துவர் திரும்ப வந்து “Are you doing alright?" என நான் 'Yush. ayam aallite' என்று பதில் சொன்னது எனக்கே புரியவில்லை. டாஸ்மாக் வாசலில் விழுந்து கிடக்கும் தமிழன் போல பேசினேன். அவர் இருக்கையில் பொருத்தியிருந்த தட்டில் மினி அங்குசம் மாதிரி விதவிதக் கருவிகளைப் பரப்பி வைத்து வாயைத் திறக்கச் சொல்ல, மருத்துவரின் அஸிஸ்டெண்ட் இந்தப் பக்கம் நின்றுகொண்டு கிடுக்கியால் என் வாயைத் திறந்துவைத்துப் பிடித்துக்கொள்ள கிலியாக இருந்தது. கண்ணுக்கு நேரே பிரகாசமாக விளக்கைப் போட கண்களை மூடிக்கொண்டேன்.  சிறிது நேரத்திற்கு தொடர்ச்சியாகக் கிணறு தோண்டும்போது கடப்பாரை பாறையில் மோதுவது போன்றும், கத்தியைச் சாணை தீட்டுவது போன்றும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருக்க நெருப்புப் பொறிகூட பறந்திருக்கும் போல. உள்மனதில் பற்களின் உறுதியை நினைத்துப் பெருமையாகவும் இருந்தது. “எவ்வளவு அடிச்சாலும் தாங்குறீங்களேப்பா!” என்று அவற்றைப் பாராட்டிக்கொண்டேன்.

ஒரு வழியாக முடித்துவிட்டு ”அடுத்த வாரம் அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிட்டு வாங்க. லெப்ஃட்டையும் பாத்துரலாம்” என்றார்கள். மரத்துப் போன உணர்வு மீள இரண்டு மணிநேரமாவது ஆகும் என்றார்கள். தினமும் ஃப்ளாஸ் செய்ய வேண்டும் என்று நூல் ஒன்றைப் பல்லிடுக்கில் செலுத்தி மத்து கடைவது போலச் செய்து காட்டினார்கள். முசிறியில் என் நண்பன் பசுபதியின் தாத்தா காவிரியில் இடுப்பளவு நின்றுகொண்டு சூரிய நமஸ்காரம் முடித்துவிட்டு மூக்கில் ஒரு துவாரம் வழியாக நீரை ஊற்றி மறு துவாரம் வழியாக வரச் செய்வார். நல்ல வேளை அதையெல்லாம் செய்யச் சொல்லவில்லை. வாயைக் கொப்பளிக்கச் சொன்னார்கள். வலது பக்கம் இன்னும் உணர்வின்றி இறுகியது போலிருக்க பெயருக்குக் கொப்பளித்துவிட்டு அவர்களுக்கு நன்றிகூறி அறையிலிருந்து வெளியேறினேன்.

வரவேற்பறையில் தொலைபேசியில் பிஸியாக இருந்த அம்மணி பேசிக்கொண்டே அச்சடித்து நீட்டிய பில்லைப் பார்த்தபோது மயக்கம் வரும்போல இருந்தது. பேசவும் பயமாக இருந்தது - வாய் குழறும். அவர் தொலைபேசி முடித்துவிட்டு பில்லிலிருந்த வரிகளைப் பேனாவால் ஓட்டி “மொத்தம் ஆயிரத்து இருநூறு டாலர். அதில் உங்கள் இன்ஷூரன்ஸ் நிறுவனம் எண்பது சதவீதம் கொடுத்துவிடும். பாக்கியில் பாதியை இப்போது செலுத்திவிட்டு அடுத்த வாரம் வரும்போது மீதியைச் செலுத்துங்கள்” என்றார். அந்தக் காசை வைத்து ஆயுசுக்கும் பற்பசை வாங்கலாமே என்று தோன்றியது. வேறு வழி? ஓட்டலில் சாப்பிட்டுவிட்டுக் காசில்லையென்றால் மாவாட்டவாவது செய்யலாம். இங்கே இல்லையென்றால் மறுபடி உள்ளே கூட்டிக்கொண்டு போய் மரத்துப் போக மருந்து கொடுக்காமலேயே பல்லைப் பிடுங்கிவிடுவார்கள் போலிருந்தது. போன ஜென்மக் கடன் என்று நினைத்துக்கொண்டு பேசாமல் கடனட்டையால் செலுத்திவிட்டு வெளியேறினேன். சரி பரவாயில்லை, பற்பசை விளம்பர மாடல்கள் போல ஆகிவிட்டோம் என்று ஆறுதல் படுத்திக்கொண்டு வண்டியிலேறி கண்ணாடியில் பற்களைப் பார்த்தால் அவ்வளவாக வித்தியாசம் தெரியவில்லை.

வீட்டுப் படியேறினதும் சின்னவள் வந்து ”டாடி...ஆ காட்டு? Say Cheeeeeeese...“ என்று செய்முறை விளக்கத்துடன் சொல்ல சிவாஜி மாதிரி சிரித்துக்கொண்டே மனதுக்குள் அழுதேன். பார்த்துவிட்டு “It's clean“ சொல்லிவிட்டு உள்ளே ஓடினாள்.

மறுநாள் ஆபிஸ் போய் அந்த ஹெச்ஆர் ஆளைத் தேடியதில் கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்தார். என்ன ஆயிற்று என்று விசாரித்ததில் விஸ்டம் டூத் (என்னே பெயர்!) பிடுங்கிவிட்டு அது காஸ்மடிக் வகையறா சிகிச்சை என்பதால் இன்ஷூரன்ஸ் கிடையாது என்று கைவிரித்துவிட்டு சொளையாக எழுநூற்றைம்பது டாலர்களையும் பிடுங்கிவிட்டார்களாம். “அது பாட்டுக்கு தேமேன்னு சமத்தா இருந்தது” என்றார் சோகமாக. உள்ளுக்குள் சாத்தான்போலச் சிரித்துக்கொண்டு பேசாமல் என்னிருக்கைக்குத் திரும்பினேன்.

மொத்தத்தில் இந்த ஊரில் இன்ஷூரன்ஸ்காரர்களும் டாக்டர்களும் மருத்துவமனைகளும் நம்மிடம் பிடுங்கோ பிடுங்கு என்று பிடுங்குகிறார்கள். நாம் பல் பிடுங்கின பாம்பாட்டம் அடங்கியொடுங்கியிருக்க வேண்டியிருக்கிறது. சாமான்ய மக்களெல்லாம் என்ன செய்வார்கள் என்றே தெரியவில்லை. மைக்கேல் மூரின் Sicko-வைப் பார்த்திருக்கிறீர்களா?

”வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இர்றா! வாயைக் கொடுத்து மாட்டிக்காதே!” என்று பெரியோர்கள் சும்மாவா சொன்னார்கள்!

***