துபாய்க்குச் செல்லவேண்டுமென்றாலே ஒரே சமயத்தில் சலிப்பும் சந்தோஷமும் சேர்ந்து வரும். சலிப்பு - சாலையில் வாகனக் குவியல்களின் மெதுவான ஊர்வலம். எந்நேரமும் போக்குவரத்து நெருக்கடி என்பது இப்போதெல்லாம் மிகவும் சகஜமாகிவிட்டது. சந்தோஷம் துபாயின் முடிவற்ற அசுர வளர்ச்சி கண்டு ஒவ்வொரு முறையும் பிரமிப்பது. வருடம் முழுக்க எதையாவது கட்டிக்கொண்டே இருக்கிறார்கள். உலகத்தின் உயரமான கட்டிடம், வெளிநாட்டவர்களும் சொத்து வாங்கும் வசதி, சாலைகள், ரயில் போக்குவரத்துத் திட்டம்என்று அவர்களது அடுத்த பத்தாண்டு திட்டங்களைப் பார்த்தால் அதிலுள்ள தொலை நோக்கும் தெளிவும் ஆச்சரியப்பட வைக்கும். புதிதாக குடியிருப்புகள், அதற்குத் தேவையான சாலை, மின்சாரம், தண்ணீர் என்று அனைத்தையும் கச்சிதமாகத் திட்டமிட்டு ஒரே சமயத்தில் பல வேலைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. வீடுகள் விற்றுத் தீர்கின்றன. எங்கிருந்துதான் அவர்களுக்கு பணம் கிடைக்கிறதோ என்று வழக்கம் போலவே யோசித்தேன்.
பர்ஜுமான் ஷாப்பிங் மால்-ஐ அதன் அளவைவிட பன்மடங்கு விரிவாக்கியிருக்கிறார்கள். ஒரு கிலோ மீட்டர் நீளம் இருக்கும் போல. ஜனங்கள் ஷாப்பிங் செய்துகொண்டே இருக்கிறார்கள். பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாகப் பெருகி; ஆடைகள் குறைந்திருப்பது கண்கூடாகத் தெரிகிறது. கிட்டத்தட்ட நூற்றைம்பது நாட்டைச் சேர்ந்த மக்கள் துபாயில் குடியிருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. உடை விஷயத்தில் எவ்வித சட்ட திட்டமும் பின்பற்றப்படுவதாகத் தெரியவில்லை. சுதந்திரமாக உடையணிந்து காற்றோட்டமாக இருக்கிறார்கள். அவர்கள் பாணியில் உடையணிகிறார்களா அல்லது அழைப்பு விடுப்பவர்களா என்று இனங்கண்டு கொள்வது மிகவும் கடினம்.
பர்ஜுமானில் சிறிது நேரம் அலைந்து திரிந்துவிட்டு, வழக்கம்போல் அங்கு டாக்ஸி ஓட்டிக்கொண்டிருக்கும் நண்பர் எட்வினை அழைத்து அவருடன் சிறிது தமிழ் விஸிடிக்களைத் தேடி அலைந்தேன். முன்பு தெருக்குத் தெரு பரப்பி வைத்து பகிரங்கமாக விற்றுக் கொண்டிருந்தவர்களைக் காண முடியவில்லை. கெடுபிடி செய்திருக்கிறார்கள் போல. எட்வின் என்னை அழைத்துச் சென்றது முடிதிருத்தும் தொழிலகங்கள்! அங்கு கத்திரிக் கோலுடனும் வாடிக்கையாளருடனும் மும்முரமாக இருந்த அன்பர் வேலையைச் சற்று நிறுத்திவிட்டு, அலமாரியைத் திறந்து சில காகிதங்களைக் கொடுத்து 'எது வேணுமோ டிக் பண்ணிக் கொடுங்க' என்றார். அது ஒரு கையெழுத்துப் பிரதி கேட்டலாக். 'சிவாஜி, எம்ஜியார், ரஜினி, கமல்' என்று வகைப்படுத்தி அவர்களது திரைப்படங்களின் பெயர்கள் வரிசைப் படுத்தப்பட்டிருந்தன. கமல்-இன் வசூல்ராஜாவும் இருந்தது. 'விஸிடின்னா அஞ்சு திர்ஹாம். டிவிடின்னா பத்து. எது வேணுமோ குறிச்சுக் கொடுத்துட்டு, ஒங்க மொபைல் நம்பர் தாங்க. நாளைக்கு ரெடிபண்ணிட்டு கூப்பிடறோம். வந்து வாங்கிக்குங்க' என்றார் அவர். நான் அன்றே கிளம்ப வேண்டியிருந்ததால் மறுநாள் வந்து வாங்கிக் கொள்வது சாத்தியமில்லை; அடுத்தமுறை வந்து பார்க்கிறேன் என்று தெரிவித்துவிட்டுக் கிளம்பினேன். இன்னொரு மு.தி.கடையில் 'மதுரெ-யும், அளகேசனும் இருக்கு வேணுமா?' என்று கேட்டு அதிர்ச்சியளித்தார்கள்.
திருட்டு விஸிடிக்களை ஒழிப்பது சாத்தியமேயில்லை என்று தோன்றுகிறது. இப்போது டிஜிட்டல் சினிமா வரப்போகிறது என்று பேசிக்கொள்கிறார்கள். தொழில் நுட்ப எத்தர்கள் முன்பு எந்த நுட்பமும் பயனளிக்காது என்று தோன்றுகிறது. திரையரங்குகளில் திரையிடும் நேரத்திலேயே அதிகாரப்பூர்வ விஸிடிக்களையும், டிவிடிக்களையும் சகாய விலையில் வெளியிட்டு விடுவது நல்லது என்றே தோன்றுகிறது. தியேட்டருக்குச் சென்று எல்லாராலும் பார்க்கமுடியாது. அதே நேரத்தில் வரிசையில் நிற்பவர்கள் தோள் மீது ஏறிச் சென்று முதல் காட்சிக்கு டிக்கெட் வாங்கும் ரசிகர் கூட்டமும் என்றும் இருக்கும். காகிதங்களைக் கத்தரித்து மழை பொழிவதும், பட்டாசு வெடிப்பதும், தீபாராதனை காட்டுவதும், கட்-அவுட், கொடி தோரணங்கள் எல்லாம் திரையரங்குகளில் மட்டுமே சாத்தியம். இரு தரப்பு ரசிகர்களையும் திருப்திப் படுத்துவதே திரையுலகினர் செய்யும் நல்ல காரியமாக இருக்கும். இது திருட்டைத் தடுக்க உதவாது; குறைக்க உதவும் என்பது என் சொந்தக் கருத்து. டிவி சானல்களிலும் திரை விமர்சனம் என்ற பெயரில் முக்கால் படத்தையும் துண்டுதுண்டாகக் காட்டி விடுகிறார்கள். அப்படியிருக்க திருட்டு விஸிடி என்று அழாமல், மரியாதையாக நல்ல விஸிடியையே வெளியிட்டுவிடுவது நல்லது.
கம்ப்யூட்டர் ப்ளாசாவிலும், கலீஜ் ஷாப்பிங் செண்ட்டரிலும் அனைத்தும் கிடைக்கிறது. ஐ-மேட் என்ற கைப்பேசி/கைக்கணினி என்று எல்லாம் சேர்ந்த ஒரு புதிய வஸ்துவைப் பற்றி விசாரித்து விவரங்கள் கேட்டுக் கொண்டிருக்கையில் கடைக்காரர் (மலையாளி என்று சொல்லத் தேவையில்லை), 'எதாவது சினிமா வேணும்னா சொல்லுங்க. ஒரு டிவிடி மூவியை 256 எம்பி இருக்கற ஐமேட்-ல ஓடற மாதிரி மாத்தித் தர்றேன்'என்று திடுக்கிட வைத்தார். 'எப்படி?' என்று கேட்டால் 'எல்லாம் டெக்னாலஜிதான்' என்றுவிட்டுக் கண்ணடித்தார். தொலைக்காட்சிப் பெட்டிகளை ஒழித்து, தட்டையான திரைகளிலேயே டிவியும் பார்த்துக் கொள்கிற மாதிரி (எல்ஸிடி) நிறைய குவித்து வைத்து விற்கிறார்கள். ஐ-மேட் போன்றே, க்யூ-டெக், டங்க்ஸ்டன், ஐ-பேக் என்று கால்குலேட்டர் அளவிற்கு அனைத்தையும் உள்ளடக்கிய எலெக்ட்ரானிக் வஸ்துகள் மலிந்து கிடக்கின்றன. இன்னும் கொஞ்சம் விலை குறையக் காத்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் சிபியூவில் முன்பெல்லாம் ஒரு ·ப்ளாப்பி ட்ரைவ்; ஒரு ஸிடி/டிவிடி ட்ரைவ் மட்டும் இருக்கும். இப்போது சிபியூவில் இடமே இல்லாமல் பத்து பதினைந்து டிவிடி ரைட்டர்களை அடைத்து விற்கிறார்கள். எதாவது ஒரு ட்ரைவில் ஒரு டிவிடியைப் போட்டு மற்ற ரைட்டர்களில் ஒரே சமயத்தில் பத்துப் பிரதிகள் எடுக்கலாம். ஒருபுறம் புதிது புதிதாக டிவிடி ரைட்டர், விஸிடி-ட்டு-டிவிடி கன்வர்ட்டர் என்று தொழில்நுட்ப வசதிகள் பெருகி, டிவிடி ப்ளேயர், டிஸ்க்குளைக் கிலோக் கணக்கில் சல்லிசாக விற்றுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் திருட்டு விஸிடியை ஒழிக்க வேண்டும் என்று கோஷமிட்டும் ஊர்வலம் போயும் உண்ணா விரதமிருந்தும், குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுபவர்களை நினைத்துப் பார்க்கையில் பரிதாபமாக இருக்கிறது.
பிரசன்னாவிடம் தொலைபேசியில் பேசி வழக்கமாகச் சந்திக்கும் கடற்சிப்பி (Sea Shell) ஹோட்டல் முன்பு டாக்ஸியிலிருந்து இறங்கிக்கொண்டு அவர் வந்ததும் அளவளாவிக்கொண்டே பர்-துபாயின் நெருக்கடித் தெருக்களில் நடந்தோம். ப்ரெளசிங் செண்ட்டருக்குச் சென்று மரத்தடி ஆண்டுவிழாக் கொண்டாட்ட நிறைவு நாள் மாலையில் அருளின் அரட்டை அரங்கத்தில் சு.ரா. என்ற பெயரில் அரட்டையடித்து (கணேஷ் கடைசிவரை நான் பிரசன்னா என்று நம்பினார். உஷா முதலில் கண்டுபிடித்துச் சொன்னார்) விட்டு, பின்பு வசந்த பவனுக்கு நடந்தோம்.
நடுவில் பலமுறை ஆசி·ப்-ஐ தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. அவர் வேலையில் மும்முரமாக இருந்திருப்பார் போல.
வசந்த பவனுக்குக் குறுகிய சந்து ஒன்றைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. கடைகளெங்கும் ஓடிக் கொண்டிருக்கும் குளிர்சாதன இயந்திரங்களின் வெப்பம் தெருக்களில் வியாபித்து, ஈரப்பதமும், வெப்பமும் சேர்ந்து வியர்க்கவைத்துக் கொண்டிருந்தது. அச்சந்தில் - எதிரெதிரே இரண்டு நபர்கள் மட்டுமே கடக்குமளவு குறுகிய சந்து - இருளில் மெதுவாய் நடந்து கொண்டிருக்கையில் சற்று தூரத்தில் கீழே யாரோ அமர்ந்திருப்பது புலப்பட்டது. முதலில் இருளில் சரியாகத் தெரியவில்லை. அருகில் நெருங்கியதும் அது பெண் என்று தெரிந்தது. இன்னும் அருகே சென்றதும் அப்பெண் அரைகுறை ஆடையுடன் கீழே குத்துக்காலிட்டு அமர்ந்துகொண்டு ஒரு தெருப்பூனையின் தலையைக் கோதிவிட்டுக் கொண்டிருந்தது தெரிந்தது. அது ஒரு அழுக்கான வெள்ளைப் பூனை. முக அமைப்பை வைத்து அவள் ஒரு ·பிலிப்பினோவாக இருக்கலாம் என்று நினைத்தேன். அந்தத் தெருவின் அழுக்கிற்கும், இருளிற்கும், அந்நேரத்திற்கும், அந்த அழகான பெண் பொருத்தமற்று இருந்தாள். அவள் அங்கிருக்க எந்த முகாந்திரமும் இல்லை. துபாய் எங்கும் நிறைந்திருக்கும் விலைமாதுகளில் அவளும் ஒருவளாய் இருக்கலாம். வாடிக்கையாளர்கள் யாராவது அழைப்பார்களா என்று எதிர்பார்த்து அங்கு இருக்கலாம். சமூகத்தின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையொட்டி, பல தரப்பட்ட விலைமாதுகள் எங்கும் மலிந்து கிடக்கின்றனர் என்று எட்வின் ஒருமுறை சொல்லியிருக்கிறார். அப்பெண் கடந்து போய்க் கொண்டிருந்தவர்கள் யாரையும் ஏறிட்டும் பார்க்கவில்லை - அவளை எல்லோரும் பார்க்கிறார்கள் என்பதை நிச்சயமாய் அவள் உணர்ந்திருந்தாள். பூனையும் அவளுடைய வருடலில் சுகமாய் அரைக்கண் மூடி தலையைச் சாய்த்துக் காட்டிக்கொண்டிருந்தது. அவள் மனதில் என்ன எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும் என்று கற்பனை செய்ய முனைந்தேன். அப்பெண்ணின் முகத்தில் உணர்ச்சிகளெதுவும் தென்படவில்லை. பூனையையே பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தத் தருணத்தில் அவளும் அப்பூனையும் மட்டுமே அவள் உலகமாய் இருந்திருக்க வேண்டும். இருவரும் அனாதைகள். அவளின் அவ்வருடலில் அப்பூனை கிறங்கிக் கொண்டு அமர்ந்திருந்தது. அப்பூனையின் ஆமோதிப்பே அவளுக்கும் ஒரு வடிகாலாக, ஒருவித ஆதரவாக இருந்திருக்க வேண்டும். அதீத முகப்பூச்சுடன், உதட்டுச் சாயத்துடன், தெருக்களென்றும் அலைந்துகொண்டு கண்களால் அழைப்புவிட்டு உயர் வகைக் கார்களில் தொற்றிக்கொண்டு செல்லும் பெண்களின் மத்தியில் இப்படி இருளில் ஒரு அழுக்குச் சந்தின் தரையில் அமர்ந்து கொண்டிருந்த அப்பெண்ணைப் பார்க்க மனம் வல்லித்தது. பிரசன்னாவுடன் பேசிக்கொண்டு, அவளையும் கவனித்துக்கொண்டே சற்றே ஒதுங்கி அவளைக் கடக்கையில் ஒரு கணம் கையை நீட்டி அவளின் கூந்தலைக் கோதிவிடத் தோன்றியது. நின்று அவளைப் பற்றி விசாரிக்கவேண்டும் என்று தோன்றியது. இவையனைத்தும் நடந்தது ஒரு சில வினாடிகளே. மனம் அங்கேயே நிற்க, தொடர்ந்து நடந்து வசந்த பவனில் இரவு உணவைச் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் பின் என் இருப்பிடத்திற்குச் சென்றேன்.
மறுநாள் காலையில் துபாயிலிருந்து கிளம்பினேன். மேலெழுந்த விமானத்தின் சன்னல் வழியே தூசுப் படலம் மூடி ஆங்காங்கே தலைநீட்டிக் கொண்டிருந்த காங்க்ரீட் கட்டிடங்கள் நிறைந்திருக்கும் துபாய் நகரத்தைப் பார்த்துவிட்டுக் கண்மூடி இருக்கையில் சாய்கையில், முந்தைய இரவு பார்த்த அப்பெண்ணின் அந்த உணர்ச்சியற்ற முகமும் அரைக்கண் மூடிய பூனையின் முகமும் நீண்ட நேரம் மனதில் நிழலாடின.
No comments:
Post a Comment