Monday, January 17, 2005

*** நினைவலைகள் - 'நீதான் என் தேசிய உணவு' ***

*** நினைவலைகள் - 'நீதான் என் தேசிய உணவு' ***

தேங்காய்ச் சில் வாங்க மேலப்பாளையத்திலிருக்கும் பேச்சி கடைக்குச் செல்வேன். பேச்சிக்கு மட்டும் அவ்வளவு பெரிய தேங்காய் எங்கிருந்து கிடைக்கிறது என்று ஆச்சரியமாக இருக்கும். நான் வீட்டில் பார்த்த தேங்காய்களெல்லாம் எலி மாதிரி உள்ளங்கையில் அடங்கிவிடும். பேச்சி பாதி மூடித் தேங்காயை கால் கட்டை விரலில் கவ்விக் கொண்டு, குறுவாள் போன்ற ஆயுதத்தால் தேங்காயில் இரு ஆரங்கள் போட்டதும், முக்கோணச் சில் எகிறி வெளியில் குதிக்கும். இரண்டு சில் கொய்ததும், விரலளவுக்கு எனக்கு ஒரு கொசுறு ஒன்றைக் கொடுப்பாள். கொசுறு மேலப்பாளையம் தாண்டி தலைகாணி தெருவுக்குள் நுழைவதற்குள் வாய்க்குள் கரைந்து விடும். வீட்டிற்கு வந்து சேர்வதற்குள் பையிலிருக்கும் இரு சில்களின் முனைகள் மழுங்கியிருக்கும். "பேச்சி அவ்ளோதான் கொடுத்தா" என்று நெற்றிக் கண் திறக்கும் அம்மாவிடம் சொல்வேன் - நாக்கு நுனியினால் கடைவாய்ப் பற்களுக்கிடையில் சிக்கியிருக்கும் தேங்காய்த் தூளை எடுக்க முயன்று கொண்டே.

பருப்புச் சட்னி என்றால் ரொம்ப இஷ்டம். எண்ணையில் வறுத்த பருப்பும், மிளகாய் வற்றலும் பளபளக்க, தேங்காய்த் துருவலையும் உப்பையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொண்டு கிளம்பும் அம்மாவை மடக்கி "நான் அரைக்கறேன் தா" என்று பிடுங்கிக்கொண்டு வீட்டின் கொல்லைப்புறத்தில் மண்ணில் அழுந்தி அமர்ந்திருக்கும் அம்மி, குழவியை நோக்கிப் பறப்பேன்.

சில சமயம் தேங்காய்த் துருவலுக்குப் பதில் தேங்காய் சில்லைக் கொடுத்து சட்னி அரைக்கச் சொல்வார் அம்மா. அம்மி மீது சில்லைப் படுக்க வைத்து, குழவியை நெட்டுக் குத்தலாய் நிற்க வைத்து ணங் ணங்கென்று அதை நசுக்கிவிட்டு, பிறகு பருப்பு மிளாகாய் வற்றலைப் போட்டு லேசாக நீர் ஊற்றி விட்டு அரைக்கத் தொடங்க வேண்டும்.

அத்தைமார்கள் அம்மியை இழுத்து அரைக்கும் லாவ..சட்...லாகவத்தைக் கண்டு வியந்திருக்கிறேன். முதன் முதலில் அம்மியை கால்களகட்டிப் பிடித்து உட்கார்ந்து கொண்டு சட்னிக்கான பொருள்களைக் கொட்டிக் கொண்டு அரைப்பதற்காகக் குழவியை முதல் இழுப்பு இழுத்தபோது மொத்தமும் அம்மியை விட்டு மடியில் வந்து சேர்ந்து கொள்ள, "பாத்துடா... மொளகா பட்டுச்சுன்னா குஞ்செல்லாம் எரியும்" என்று எச்சரிக்கை விடுத்த பாட்டியை நோக்கி "அதான் ட்ரவுசர் போட்ருக்கேன்ல" என்று கத்தினேன். மறுபடியும் அவற்றை அம்மியில் அள்ளிப் போட்டு, கொஞ்சம் மெதுவாக, தேய்த்து இழுக்காமல் சற்று தூக்கி நசுக்கி இழுத்து, தண்ணீர் விட்டு, திருப்பி நசுக்கி அரைத்து, ஓரிரு நிமிடங்களில் அரை விழுதானதும், அரைப்பது சுலபமாகி விட்டது.

அரைப்பதற்கு முன் ரா மெட்டீரியல்களைக் காலி செய்து, அரைத்த பின்பும் ·பினிஷ்டு குட்ஸ்ஸில் கொஞ்சத்தைத் தின்று முடித்து விட்டுத்தான் (அரைத்ததற்குக் கூலி!) பாத்திரத்தை சமையலறையில் வைப்பேன். "இப்படி வெறும் சட்னியத் தின்னா வயித்தால போகும். குண்...." என்று தொடங்கும் பாட்டியின் வாக்கியம் முடியும் முன் நான் வீட்டிலிருந்து தெருவுக்குப் பறந்திருப்பேன்.

"இட்லிக்குச் சட்னியத் தொட்டுக்கறியா? இல்ல சட்னிக்கு இட்லியா?" என்ற கேள்விகளையெல்லாம் சட்னி... சே... சட்டை செய்ததே இல்லை.

பருப்புச் சட்னி ஒருவிதமான அபார ருசி என்றால், தேங்காய்ச் சட்னி... அடடா... தெருமுக்கில் சீனு மாமா இட்லி, வடை செய்து விற்பார். தேங்காய்ச் சட்னியை அப்படியே சாப்பிடலாம். நன்கு அரைக்கப்பட்ட சட்னியில் தாளித்துக் கொட்டிய கடுகின் சுவையும், லேசான பச்சை மிளகாய் காரமும் சேர்ந்து அப்படியே ஆளைத் தூக்கும் ருசி. கெட்டிச் சட்னி போக, வாளியில் கரைத்தும் வைத்திருப்பார். அதை ஊற்றி இட்லியைப் பிசைந்து சாப்பிடுவேன். சாம்பாரையெல்லாம் கண்டு கொண்டதே இல்லை. அவர் தரும் உளுந்து வடையை ஆள்காட்டி விரலில் பெருமாள் சக்கரம் மாதிரி செருகிக் கொண்டு வெளி வட்டத்திலிந்து ஆரம்பித்துத் தின்பேன்.

மதுரை மேலமாசி வீதி முருகன் இட்லிக் கடையில் இலை போட்டு இத்தினிக்கூண்டு இட்லியை நடுநாயகமாக வைத்துவிட்டு, கிரிக்கெட் மைதானத்தில் களம் காக்கும் வீரர்கள் மாதிரி அதைச் சுற்றி விதம் விதமாகச் சட்னிகளை நிரப்பி விடுவார்கள். பாட்டம் லெப்·ட் கார்னரில் எண்ணை கலந்த மிளகாய்ப் பொடி. எனக்குச் சாதாரண மிளகாய்ப் பொடியைக் காட்டிலும் எள்ளு மிளகாய்ப் பொடியே உயிர். முருகன் இட்லிக் கடைக்காரர்கள் பயணிகளின் ஆபத்பாந்தவர்களாக, ரயில் நிலையத்தின் மூன்றாம் ப்ளாட்·பாரத்தில் கடை போட்டதும் வியாபாரம் தூள் பறந்தது. அழகாகப் பேக்கிங் செய்து தருவார்கள். இடையில் ஏதோ (அரசியல்) பிரச்சினையில் முருகன் இட்லிக் கடை மூடப்பட்டது என்று கேள்விப் பட்டேன். மறுபடியும் திறந்து விட்டார்களா என்று தெரியவில்லை.

சேதுபதி ஹை ஸ்கூலையும் இரயில்வே சரக்ககத்தையும் பிளந்தது போல அமைந்திருக்கும் பர்மா பஜாரின் வலது கோடியில் 'அக்கா கடை' என்று கடையிருப்பதே தெரியாத கடையொன்று உண்டு. வெளியில் 'அக்கா' ஆவி பறக்கும் பானைகளில் சளைக்காது இட்லிக்களை வேகவைத்துக் கொண்டிருக்க, குகைக் கதவிற்குள்ளே வரிசையாகப் பெஞ்சுகள் போட்டு இடது பக்கம் மெகா தோசைக் கற்களில் எண்ணை வழிந்து கொண்டே இரு ஆள்கள் தோசைகளை வார்த்துக் கொண்டிருப்பார்கள் - எல்லாவித தோசைகளும். அங்கேயும் தக்காளிச் சட்னி தூள் பறக்கும்.

நண்பர்கள் 'ஒரே அடில சட்னிடா' என்று அடித்த ஈ, எறும்பு, கொசுவுக்கெல்லாம் சட்னியை உவமையாக உபயோகிப்பது எனக்குக் கடுப்பாக இருக்கும். 'தாளிச்சுத் தின்றா' என்று திட்டுவேன்.

மதுரையில் புரோட்டாக் கடைகளுக்கு ஈடாகப் பரவியிருப்பது சாலையோர இட்லிக் கடைகள். ஒவ்வொரு தெருவிலும் குறைந்தது ஒரு 'அக்கா கடை'யைப் பார்க்கலாம். அக்கா கடைகளுக்கு 'கையேந்தி பவன்' போன்ற சுமாரான பெயர்களை வைத்து அவற்றின் பெருமையைக் குலைக்கிறார்கள். வேலை முடிந்து தாமதமாக வீடு திரும்பும் போது, அப்படியே சாலை ஓரத்தில் வண்டியை சாய்த்து நிறுத்திவிட்டு (ஸைடு ஸ்டாண்டு கண்டு பிடிச்சவய்ங்களை ஒதைக்கணும்; எவனுமே மெயின் ஸ்டாண்டப் போர்றதில்லை. போய்க்கிட்டுருக்கயிலேயே அப்படியே ஸைடு ஸ்டாண்டை இழுத்து வண்டிய நிப்பாட்டிச் சாய்ச்சிட்டு ஓடிர்றாய்ங்க. அம்புட்டு அவசரம் - வெடி...வடி..வேலு விகடனில்) ப்ளாட்·பாரத்திலிருக்கும் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு அக்கா தட்டில் இலை வைத்து நிரப்பித் தரும் இட்லியைத் தின்னும் சுகமே தனி. புரோட்டா கடைகளுக்குச் சால்னா சப்ளை செய்யவே ஒரு குழு தள்ளு வண்டியில் பெரிய பாத்திரங்களில் நிரப்பப் பட்ட சால்னாவுடன் நகர்வலம் காட்சியைப் பார்த்திருக்கிறீர்களா? மதுரையில் எங்கு சாப்பிட்டாலும் சுவை ஒரே மாதிரியாக இருப்பதன் இரகசியம் இதுவே. சில புகழ் பெற்ற கடைகளில் கொஞ்சம் அதிகப்படியாகச் சுவை கூட்டி வேல்யூ அடிஷன் செய்வார்கள்.

எழுபதுகளின் இறுதியில் வத்திராயிருப்பு தலைகாணித் தெரு வழியாக நான் பார்த்த முதல் அரசியல் ஊர்வலம் ஐம்பது பேர்களுடனும் கொடிகளுடனும் சென்றது. 'இருபது அம்சத் திட்டம் அது இந்திராவின் சட்டம்' என்றும் 'பாத்தியாப்படி பாத்தியா? பயாஸ்கோப்ப பாத்தியா? இட்டிலிக்குக் காச்சல் வந்து எளச்சுப் போனதப் பாத்தியா?' என்ற ராகமான கோஷம் மட்டும் மாவாக நினைவிலிருக்கிறது.

மாவரைத்தல் என்பது போன்ற 'அறுவை'யான வேலையைப் பார்த்ததேயில்லை. புஜங்கள் பலம் பெறும் (ஏதோ ஒரு கருப்பு வெள்ளைப் படத்தில் கமல் கும்மென்ற திறந்த மேனியுடன் மாவரைக்கும் காட்சி வரும் - அந்தரங்கம்? அவர்கள்?) என்ற ஒரே காரணத்திற்காக மாவரைக்கும் வேலையைச் சலிக்காமல் செய்திருக்கிறேன்.

ஊறின அரிசி, உளுந்தின் சுவையே அலாதி. தேங்காயும் ஊறின அரியையும் மென்று தின்றால் ஆஹா. ஊறின உளுந்து நிறையத் தின்றால் காது மந்தமாகிவிடும் என்று தாத்தா எச்சரித்திருக்கிறார். கொஞ்சமாக உளுந்தைச் சேர்த்துக் கொண்டால் என்னை மாதிரி இருக்கலாம் என்றும் சொன்னார். எனக்கு அவரை மாதிரி ஆகவேண்டும் என்று ஆசையாக இருந்தது. உளுந்து தப்பித்தது.

வீட்டுப் பெண்மணிகள் ஏதோ பூத் தொடுப்பது போன்று மாவரைத்ததைப் பார்த்து மிகவும் இலகுவான விஷயம் போல - மென்மையாக மாவு இருப்பதால் எளிதாகக் கல்லைச் சுற்ற முடிகிறது என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டேன். களமிறங்கி அரிசியை முதலில் போட்டு நிரப்பிக் கொண்டு கல்லின் தலையில் ஆசிர்வதிப்பது போல் வலது உள்ளங்கயை வைத்துச் சுற்றலாம் என்று அசைத்தால் அது புத்தர் மாதிரி கம்மென்று இருந்தது. இரண்டு கைகளாலும் பிடித்து பிரயத்தனப்பட்டு அசைத்தால் கல் வட்டமாக ஆடாமல் அறுகோண வடிவில் இடித்து இடித்துச் சுழன்றது. பின்பு அசைக்கவே முடியவில்லை. அம்மா ஒரு டம்ளரில் தண்ணீரை வைத்து 'கொஞ்சமா ஊத்திக்கோ. ஒரேயடியா ஊத்தாம கொஞ்சம் கொஞ்சமா விடணும்.' என்று சொன்ன லாஜிக் புரியாமல் லேசாக ஊற்றிச் சுற்றிப் பார்க்க, கல் நகர்ந்தது. கடும் முயற்சிக்குப் பின் கல் ஒருவழியாக வட்டப்பாதையில் ஆடத் துவங்கி, அரிசியும் அதன் உருவத்தை இழந்து முதலில் குருணையாக மாறிப் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மாவாகத் தொடங்கியது. இடையில் பட்ட அவஸ்தைகள்!!! திடீரென்று ஆட்டுக்கல்லின் குழவி வெளியே தெறித்து வந்துவிடும். 'இடது கையால ஆட்டிக்கிட்டே, வலது கையால கொஞ்சம் கொஞ்சமா அரிசிய உள்ள தள்ளணும்' என்ற வழிமுறைகளைப் பின்பற்றும் போது, டைமிங் தவறி விரல்கள் அரிசிக்குப் பதிலாக நிறைய தடவைகள் நசுங்கியிருக்கின்றன.

அரிசியைப் போலப் பிடிவாதம் பிடிக்கும் ஜீவனல்ல உளுந்து. பரமசாது அது. சில சுற்றுகள் முடித்ததும் மென்மையாகிவிடும். ஆனால் அம்மா 'இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கே. இன்னும் அரை மணியாவது அரைக்கணும்' என்று குண்டைத் தூக்கிப் போட்டபோது தான் உளுந்தின் 'மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது' என்ற உண்மை உறைத்தது. இரண்டு டம்ளர் உளுந்து ஒரு படியளவு மாவாக மாறும் அதிசயத்தைக் கண்டபோது திகைத்துப் போனேன்.

அதெப்படி வட்டமாக ஒட்டாமல் தோசை செய்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கும். நான் ஒரு தடவை முயற்சித்து தோசை சுனாமி சாப்பிட்ட கடற்கரை போல ஆகிவிட்டது. இட்லி அளவிற்கு தோசை என்னை அவ்வளவாக ஈர்த்ததில்லை.

இட்லியும் சட்னியும் எந்த அளவிற்கு நம் வாழ்வில் 'ஊறி'யிருக்கிறது என்று நினைத்துப் பார்க்கையில்......

பசிக்கிறது!

அன்புடன்
சுந்தர்

4 comments:

துளசி கோபால் said...

ஐய்யோ சுந்தர், எப்ப்டித்தான் எழுதறீங்களோ? நானும் அப்படியே சின்னவயசு காலத்துக்குப் போயிட்டேன்!

வீட்டுலே தேங்காய் மூடி வச்சிருப்பாங்களே, அதை எலி கடிச்ச மாதிரி சுத்திவரக் கடிச்சுத்தின்னதும், அக்காங்க கேக்கறப்ப எலி மேல பழியைப் போட்டதும்......
அவுங்களுக்கும் நல்லாவே தெரியும் அந்த எலி யார்ன்னு!

என்றும் அன்புடன்,
துளசி.

Muthu said...

சுந்தர்,
அசத்தல். தேங்காய்ச் சில்லில் முனைமட்டுமட்டுமல்ல கிட்டத்தட்ட பாதியைக் கரும்பிவிட்டு அம்மாவிடம் திட்டு வாங்கிய ஞாபகம். உரலில் ஆட்டி கையை நசுக்கிய ஞாபகம்.. எனக்கு அப்படியே வருது. கலக்கிட்டிங்க போங்க. :)

Thangamani said...

நல்ல சுவையான பதிவு. நன்றி!

Anonymous said...

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே!
சுந்தர்ஜி, மாவாட்டிக்கிட்டிக் கொண்டே அம்மா, மாவை தள்ளும் பாட்டிக்கு கட்டாயம் சினிமா கதை சொல்ல ஆக வேண்டும்.
அதுவும் சீன் பை சீனாய். பிளேபேக் இசையுடன்! அப்பொழுது அம்மாக்கு கை கொடுத்த நான், சமீபத்தில் காவிய புதனில் பார்த்த படம் சீனுக்கு சீன் பார்த்தா மாதிரியே இருந்தது. ஆனால் பார்க்கவில்லை என்ற உண்மை தெரிந்தப் பொழுது,இந்த மாவாட்டல் கதை என்பது தெரிந்தது.
இப்பொழுதும் முற்றிய தேங்காய் என்றால் பாதி தின்றுவிடுவேன். சின்ன வயதில் நாடார் கடையில் சட்னிக்கு நான் வாங்கி வந்த தேங்காயைப் பார்த்த பாட்டி, "இவளுக்கு தென்னந்தோப்பு வெச்சி இருக்கிறவனா பார்த்து கல்யாணம் செய்யணும்" என்று அலுத்துக் கொண்டதும், ஊரில் இருந்து வந்த அத்தை, " தென்னந்தோப்புக்கு சொந்தக்காரன்னா, ஒரு தேங்காயை வீட்டுக்குக் கொண்டு வரமாட்டான். விற்று காசாக்கி விடுவான். மரம் ஏறிபவன் என்றால் திருட்டு தனமாய் மரம் ஏறி பறித்து பெண்டாட்டிக்கு கொண்டு வந்து தருவான்" என்றதும் ஞாபகம் வருகிறது.
நாங்கள் கோயம்பத்தூர், எல்லாவற்றுக்கும் தேங்காய் வேண்டும். ஆனால் கல்யாணம் கட்டிய மாயவரத்தான் வீட்டு பின்புறத்தில் ஒரு தென்னந்தோப்பே இருக்கிறது. ஆனால் இவர்கள் சமையலில் தேங்காவே கிடையாது என்பதுதான் ஆச்சரியம்! கறி, சாம்பார், கூட்டுக்கு தேங்காய் போட்டால்,சமையலின் டேஸ்டே போய்விட்டது என்பார்.
usha