*** நினைவலைகள் - டைப் ரைட்டிங் ***
எண்பதுகளின் மத்தியில் பத்தாவது படிக்கும்போதே என் அப்பா (கிட்டத்தட்ட எல்லா அப்பாக்கள் மாதிரியே) வாரத்திற்கு இரு முறையாவது நினைவூட்டுவது "பரீட்சை முடிஞ்சதும் ஊர் சுத்த ஆரம்பிச்சுடாதே. ஒழுங்கா டைப் ரைட்டிங், ஷார்ட் ஹேண்ட் கத்துக்கோ, ப்ளஸ் டூ முடிக்கறதுக்குள்ள அதையும் முடிச்சிட்டா டிஎன்பிஎஸ்ஸி இல்லாட்டி எஸ்எஸ்ஸில எக்ஸாம் எழுதி கடவுள் புண்ணியத்துல ஒரு கவெர்மெண்ட் குமாஸ்தா வேலைக்குச் சேந்துட்டியானா அப்றம் வாழ்க்கை பத்திரமாயிடும்" என்பதுதான்.
அரசாங்க வேலை என்றாலே என்னைப் பொருத்தவரை 'உவ்வேக்' சமாசாரம் - சில அலுவலகங்களுக்குப் போய் நிகழ்வுகளைப் பார்த்ததிலிருந்து (வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் போன்றவை). என் அப்பாவே அவர் துறையில் நடக்கும் ஊழல்களைப் பற்றிக் கதைகதையாய் சொல்லுவார். 'அரசாங்க வேலையில் சேருவதற்குப் பதில் பாழுங் கிணற்றில் விழுவேனே' என்று மனதில் நினைத்துக் கொண்டேன். சொல்லவில்லை. ஆனாலும் அவர் சொல் மீது இருந்த மரியாதையால் போய் பார்த்துவிட்டு வரலாம் என்று மதுரை பெரியார் மேம்பாலத்திற்குக் கீழே ஓடும் தண்டவாளத்தை ஒட்டிய சந்தில் கீழே டீக்கடை, மெக்கானிக் கடைகளோடு முதல் மாடியில் இருளோவென்றிருந்த, தூசி வாடையடிக்கும் புராதான தட்டச்சுப் பயிற்சிப் பள்ளிக்கு ஓராள் மட்டும் செல்லக்கூடிய படிகளில் ஏறி.... ஏறும் போதே காதில் விழுந்த பட..பட..இரைச்சல் சத்தம் த்ரில்லாகவே இருந்தது.
உள்ளே மூன்று பக்கச் சுவர்களையொட்டி வரிசையாக வீற்றிருந்த தட்டச்சு இயந்திரங்களின் முன் வீற்றிருந்த மாணவர்கள். குழல் விளக்குகள். அவற்றை மொய்த்திருந்த பூச்சிகள். மரப்பாச்சிப் பொம்மைகள் போன்று தாவணிப் பெண்கள். இவர்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லவேண்டும்.
இந்த மாதிரி டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட், க்ளினிக்குகள், லேப்புகள், ஜெராக்ஸ் அல்லது ஸ்டூடியோ கடைகள், பல்பொருள் அங்காடிகள், சில ஆரம்பப் பள்ளிகள் என்று பெரும்பாலான இடங்களில் இந்த மரப்பாச்சி பொம்மைகளைக் குறைந்த கூலி கொடுத்து அமர்த்தி வைத்திருப்பார்கள். கிட்டத்தட்ட பார்க்கக் கூட ஒரே மாதிரி இருப்பார்கள். மால் ந்யூட்ரிஷன் பிரச்சினையால் முப்பதை நெருங்கினாலும் பள்ளிக்குச் செல்லும் பெண்கள் போல இருப்பார்கள். பார்க்கவே பாவமாக மனது கஷ்டப்படும்.
இடது பக்கம் இருக்கும் அச்சிட்ட தாள்களைக் கழுத்தை லேசாகத் திருப்பிப் பார்த்துக் கொண்டே விரல்களால் விசைகளில் விளையாடிக்கொண்டிருந்த மாணவர்கள். அவர்கள் விசைப்பலகையைப் பார்க்காமலே தட்டச்சுவதை சிறிது நேரம் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, உரிமையாளர்-ஆசிரியரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு மறுநாளிலிருந்து வருவதாகச் சொல்லி (மாதம் முப்பது ரூபாய்) விடைபெற்று அன்றிரவு கனவில் விசைப்பலகையைப் பார்க்காது என் காதலிக்கு அதிவேகத்தில் கடிதமொன்றைத் தட்டச்சி அனுப்பினேன்.
மறுநாள் சாணித்தாள்கள் இரண்டினைக் குழல் போலச் சுருட்டிக்கொண்டு சென்று, a...s....d...f ஆரம்பித்தேன். முதல் சில நிமிடங்களுக்கு a......s......d......f......;.......l.......k.......j அடிக்க ஆரம்பித்து விரைவில் பொறுமை இழந்து a..s..d..f ;..l..k..j என்று வேகமாகி அரைமணி நேரத்தில் asdf ;lkj வந்துவிட்டேன்.
மாஸ்டர் தோளில் தட்டி, 'எல்லாரும் பண்ற மாதிரி உனக்கும் ஆர்வக் கோளாறாயிடுச்சா? பொறுமை இல்லையா? வேகம் முக்கியமில்லை இப்போ. தப்பு இல்லாம கீய பாக்காம நிதானமா அடிச்சுப் பழகு. வேகம் தன்னால வரும்' என்று அறிவுறுத்த, விரல்கள் சற்று நிதானப்பட்டன.
பயிற்சி ஆரம்பிக்கு முன், காகிதத்தை நுழைத்து நடு சென்ட்டரில் 2, அடுத்த வரியில் அதே பொசிஷனில் = அடித்து பிள்ளையார் சுழி போட்டு, காகிதத்தின் வலதோரத்தில் விசைப்பலகையில் தேடித்தேடி என் பெயரை எழுத்துக்கூட்டி அடித்துக்கொண்டு ஆரம்பிப்பேன்.
'இதையெல்லாம் பரீச்சைல அடிச்சா எல்லாத்தையும் க்ராஸ் பண்ணி பெயில் போட்ருவான். குடுக்கற ஷீட்டை அப்படியே ஈயடிச்சான் காப்பி மாதிரி அடிக்கணும். எக்ஸ்ட்ராவா ஒரு புள்ளி வச்சாக்கூட மார்க் போச்சு. பஸ்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணலைன்னா டைப்ரைட்டிங் கத்துக்கறதே வேஸ்ட்டு' என்று எச்சரித்தார் மாஸ்டர்.
ஒரு வழியாக அனைத்து விசைகளையும் உபயோகிக்கும்படி பயிற்சிகளை முடித்துக் கொண்டு pack my box with five dozen liqour jugs வந்ததும், கட்டுரைகள் தட்டச்சும் பயிற்சியைத் துவங்கிவிட்டேன்.
பேரிளம் பெண்களுக்கு மத்தியில் இளம்பெண் மாதிரி கற்கால ரெமிங்டென்களுக்கு நடுவில் ·பேஸிட் மெஷின்கள் ஒன்றிரண்டையும் வைத்திருந்தார்கள். கருஞ்சாம்பல் கலரில் அழகாக புதிதாக அவை இருந்தன. சத்தமே கேட்காமல் பூவாக தட்டச்சும் போன்றிருந்தது. டக்கென்று அதைப் பிடித்துக் கொண்டு அடிக்க ஆரம்பித்ததும்தான் ஏன் யாருமே அம்மெஷினுக்குப் போட்டிபோடவில்லை என்று தெரிந்தது. ஸ்பேஸ் பார்-ஐத் தொட்டால் ஓர் இடம் மட்டும் காகிதத்தை நகர்த்தாமல் கரகரவென்று கேரியேஜ்-ஐ முழுவதும் இடப்புறம் தள்ளிவிட்டது. எவ்வளவு மெதுவாக அடித்தாலும் எழுத்துகள் இரண்டிரண்டு தடவை பதிந்தது, அல்லது பதியாமல் காகிதம் நகர்ந்தது. பக்கத்து ரெமிங்டன் காரன் நமுட்டுச் சிரிப்புச் சிரித்து எரிச்சலை இன்னும் அதிகப்படுத்த அதற்கப்புறம் ·பேஸிட் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.
தட்டச்சு செய்யும் போது, எழுத்துக்களுக்கான அச்சுகள் எழுந்து லொட்டென்று சிறிய இடைவெளியில் காகிதத்தில் அச்சைப் பதிக்கும். அந்த இடைவெளியில் ஒவ்வொரு விரலாக வைத்து S U N D A R என்று பெயரை விரல்களில் அடித்துக் கொள்வேன்.
நிறையப் பிழைகள் செய்யும் நேரத்தில் ஆத்திரம் தலைக்கேறி மாஸ்டர் பார்க்காத சமயம் பார்த்து இரு கைகளையும் விசைப்பலகையில் வைத்து அனைத்து விசைகளையும் மொத்தமாக அமுக்க, அச்சுக் கம்பிகள் தேனீக் கூட்டம் போன்று மொத்தமாக எழும்பி கோர்த்துக் கொண்டு அடையாக நிற்கும். விட்டதும் ஒவ்வொன்றாக அதன் இடத்திற்குத் திரும்பும்.
கார்பன் காப்பி வைத்து அடிக்கக் கற்றுக்கொண்டது அடுத்த நிலை. இரு காகிதங்களை சிலிண்டரில் நுழைத்து லேசாக அதன் காதைத் திருகி, காகிதங்களின் இடைவெளியில் புது கார்பன் தாளைச் செருகி பின்பு மறுபடியும் காதைத் திருகி சரியான பொசிஷனில் வைத்துக் கொள்ள வேண்டும். புதுக் கார்பன் தாளின் வாசனையே தனி. அதன் முதல் பிரதி இன்னும் விசேஷம். அச்சுக் குண்டாக இருக்கும். கார்பன் தாளைத் தவறாகத் திருப்பி வைத்து அடித்து முடித்ததும் பிரதி விழாமல் போனதும் நிகழ்ந்திருக்கிறது.
கொடுத்த பயிற்சியைத் தவிர வேறு எதைத் தட்டச்சினாலும் மாஸ்டருக்குப் பழியாகக் கோபம் வரும். இருந்தாலும் காகிதங்களுக்குள் ஒளித்துக் கொண்டுவந்து இன்லாண்ட் கவருக்கு முகவரியைத் தட்டச்சுவது, நோட்டுப் புத்தக அட்டையில் ஒட்டுவதற்காக லேபிளில் பெயர் விவரங்களைத் தட்டச்சிக் கொண்டுபோவது போன்ற திருட்டுத்தனங்களின் த்ரில் தனி.
தட்டச்சுத் தேர்வு ஏதாவது ஒரு பள்ளியில் நடக்கும். மதுரை செளராஷ்ட்ரா பள்ளியை எங்களுக்குத் தேர்வு மையமாகக் கொடுத்திருந்தார்கள். அங்கு போய் பார்த்தால் ஏகப்பட்ட பயிற்சிப் பள்ளிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள். வண்டி வண்டியாக தட்டச்சும் இயந்திரங்களைக் கொண்டுவந்து அடுக்கிக் கொண்டிருந்தார்கள். ஒருவழியாக என் மெஷினைக் கண்டுபிடித்து ஸ்டூலில் அமர்ந்துகொள்ள கரங்கள் நடுங்கின. எங்கும் அமைதி. திடீரென்று விசில் ஒன்று ஒலிக்க சடசடவென்று பனிக்கட்டி மழை பெய்வது போல் அனைவரும் அந்த நொடியில் தட்டச்ச ஆரம்பிக்க, பதற்றமாக இருந்தது. ஆனால் நான் தேர்வுக்காகப் பயிற்சி செய்தபோது கடைப்பிடித்தது முதல் ஐந்து வினாடிகளுக்கு மெஷினைத் தொடாது மனதை ஒருமுகப் படுத்துவதுதான். அதையே அன்றும் கடைப்பிடித்து, காதுகளைத் தற்காலிகமாகச் செவிடாக்கிக் கொண்டு விரல்களை விசைப்பலகையில் வைத்துச் சீரான வேகத்தில் தட்டச்சி முடித்தேன். பதினைந்து நிமிடத் தேர்வில் ஐந்து வினாடிகளை இழப்பது சற்று அதிகப்படியான ரிஸ்க்தான். ஆனால் முதல் வகுப்பில் தேறினேன். உயர்நிலையிலும்.
ஆங்கில தட்டச்சு முடித்ததும் தமிழ்த் தட்டச்சைத் தொடங்கியதும் ஓரிரு நாட்களிலேயே போதும் போதுமென்று ஆகிவிட்டது. 247 எழுத்துகளையும் இம்முட்டூண்டு விசைப்பலகையில் அடக்கி, அதைக் கற்றுக் கொள்வது அவ்வளவு சுலபமில்லை. யளனகபக, ட்மதாத என்று அடிக்கத் துவங்கி, எத்தனை அடிக்கவேண்டியிருந்தது ! கிட்டத்தட்ட எல்லா எழுத்துகளுக்கும் இரண்டிரண்டு விசைகளை அடிக்கவேண்டும். மண்டை காய்ந்து விட்டது. ஆனால் இந்தக் கஷ்டமெல்லாம், எழுத்துகள் எந்தெந்த விசைகளில் இருக்கின்றன என்று கற்றுக் கொள்ளும் வரைதான். ஆங்கிலத் தட்டச்சு செய்ய பக்கத்தில் மேட்டர் இருந்தால் மட்டுமே பார்த்து அடிக்கமுடியும். சொந்தமாக யோசித்து அடிக்கும் அளவிற்கு நான் பீட்டரில்லை. ஆனால் தமிழ்த் தட்டச்சில் அந்தச் சிரமமில்லை. சிந்தனை விரல்கள் வழியாகக் காகிதத்தில் இறங்கி நிறைத்துவிடும். நினைப்பதை அப்படியே அடிக்க முடியுமே. முதலில் பிடித்த திரைப்படப் பாடல்களாக அடித்துத் தள்ளினேன். எழுதுவதை நிறுத்தி அனைத்துக் கடிதங்களையும் தமிழில் தட்டச்சு செய்தே கையொப்பமிட்டு அனுப்பினேன். இதுஇதுதான் என்று கணக்கில்லாமல் தமிழில் நிறைய அடித்துத் தள்ளினேன். ஆங்கில உயர்நிலைத் தட்டச்சு முடித்திருந்ததால், தமிழில் நேரடியாக உயர்நிலைத் தேர்வு எழுதி, முதல் வகுப்பில் தேறினேன்.
எனது சுருக்கெழுத்துப் பயிற்சி சுருக்கென்று ஓரிரு தினங்களிலேயே முடிந்துவிட்டது. என்னால் சுருக்கெழுத்தில் கவனம் செலுத்தவே முடியவில்லை. Pitman என்னை pity man-ஆக ஆக்கிவிட்டது. :)
ப்ளஸ் டூ முடிக்கும்போதே தமிழ், ஆங்கிலத் தட்டச்சையும் முடித்தாகி விட்டது. பின்பு அப்பா ஒருமுறை கொண்டுவந்து கொடுத்த S.S.C விண்ணப்பதைப் பூர்த்தி செய்து அனுப்பி - ஏதோ ஒரு தேர்வு நடந்தது; போகவில்லை. கல்லூரி படிக்கையில் கொஞ்சம் தைரியம் பெற்று 'கவர்மெண்ட் ஜாப்லாம் வேணாம்ப்பா. எதாச்சும் ப்ரைவேட்டா சேந்துக்கறேன்' என்று சொன்னதும், என்னைத் தண்ணீர் தெளித்து விட்டுவிட்டார்.
ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தட்டச்சைப் பயிற்சி செய்து கொண்டே இருந்தேன்.
தினமலரின் தீபாவளி மலருக்கு அப்போது மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பலாம். மதுரை பழங்காநத்தத்தில் தினமலர் அலுவலகம் இருந்தது. தினமும் நூற்றுக்கணக்கில் மணியார்டர்கள் வரும். டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள் பகுதி நேர வேலைக்குத் தேவை என்று விளம்பரம் பார்த்து அன்று மாலையே சென்று கேட்டதில் தட்டச்சுத் தேர்வு ஒன்றை வைத்துச் சேர்த்துக் கொண்டார்கள். Foxpro மென்பொருளில் எழுதப்பட்ட ஒரு ஜன்னலைத் திறந்து கொடுத்து ஒரு பெரிய மணியார்டர் கட்டையும் கொடுத்து அடிக்கச் சொன்னார்கள. கிட்டத்தட்ட நானூறு மணியார்டர்கள் இருக்கும். வாசகர் பெயர், முகவரி, மணியார்டர் எண்ணை அடிக்கவேண்டும் அவ்வளவுதான். இரவு எட்டு மணியிலிருந்து மறுநாள் காலை நான்கு மணிவரை வேலை. என்னைப் போல இன்னும் சில நபர்களும் வேலைக்குச் சேர்ந்திருந்தார்கள். நான் பத்து பதினொரு மணிக்கெல்லாம் முடித்துவிட்டு, பன்னிரண்டு மணிவரை தாக்குப்பிடித்துவிட்டு அதற்கப்புறம் சாமியாடத் தொடங்கி கடைசியில் தூங்கிவிட, மறுநாளுக்கான செய்தித்தாள் பதிப்பு அசுர வேகத்தில் நள்ளிரவில் அச்சிடப்படும்போது எழும் அதீதச் சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்துவிடுவேன். பகலிலும் விழித்திருந்து இரவிலும் வேலைபார்க்க விழித்திருந்த அந்த நாட்கள் நரகம். அதிகாலை இரண்டுமணிநேரம் மட்டுமே தூங்கக் கிடைக்கும். தூக்கம் பாதிக்கப்பட்டதால் பயங்கரமான கனவுகளில் உடல் தூக்கிப் போடும். தீபாவளிக்குச் சில நாட்கள் முன்பு தினமலர் வேலை முடிந்ததும், கையில் வாங்கிய நூற்றைம்பது ரூபாய் சம்பளத்தில் பட்ட கஷ்டம் கரைந்துதான் போனது.
கல்லூரி முடித்து வேலைக்குச் சேர்ந்ததும் என் அதிவேகத் தட்டச்சும் திறனைப் பார்த்து "நீ கம்ப்யூட்டர் ·பீல்டுக்குப் போனா நல்லா வருவே" என்று அறிவுரை சொன்ன என் முதலாளிக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். ஒரு எக்ஸ்.ட்டி மெஷினைக் கொடுத்து, லோட்டஸ் 1-2-3-யைக் காட்டி "இதுல கணக்கு வழக்கெல்லாம் அடிச்சு வச்சுக்கோ" என்று சொல்லிவிட்டார். கணிணியை முன்பின் பார்த்ததில்லை. அதில் சினேகிதமான ஒரே விஷயம் அதன் விசைப்பலகை. மெதுவாக ஆரம்பித்துக் கற்றுக் கொண்டு, அப்புறம் வேர்ட் ஸ்டாருக்கு வந்து, பின்பு ப்ரின்ஸ் விளையாடும் வரை முன்னேறினேன்.
அதுவரை மறந்திருந்த தமிழ்த் தட்டச்சு தாஸ் (DOS)-க்கான பாரதி மென்பொருள் மூலமாக உயிர் பெற்றது. மறுபடியும் தட்டச்சத் துவங்கினேன். கணிணியில் தட்டச்சும் வேகம் இன்னும் கூடி 90 வார்த்தைகள் வரை அடித்தேன். பக்கத்தில் அமர்ந்திருப்பவர்கள் பிரமிப்போடு பார்த்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு என் விரல்கள் மாயாஜாலம் செய்வது போலிருக்கும். இன்றும் தட்டச்சும் திறமை இணையத்தில் புழங்குவதற்குக் கைகொடுக்கிறது. முதலில் மரத்தடியில் சேர்ந்து பாமினி எழுத்துருவைக் கொண்டு தட்டச்சி, கோப்பாக இட்டுக்கொண்டிருந்தோம். பின்பு திஸ்கி வந்ததும், எ-கலப்பையை வைத்து கொஞ்ச நாள் ட்ரான்ஸ்லிட்ரேஷன் முறையில் 'அம்மா'வை ammA என்று அடித்துப் பழகித் தொலைத்து, மறுபடியும் தமிழ்விசைப் பலகையை நிறுவிக்கொண்டு பழைய தமிழ்த் தட்டச்சு முறையில் அதே வேகத்தில் தட்டச்சிக் கொண்டிருக்கிறேன்.
ஆரம்ப காலங்களில் அலுவலகத்தில் எதற்கெடுத்தாலும் என்னைக் கூப்பிடுவார்கள். செக்ரட்டரியை ஓரங்கட்டி "இவனை நேரடியா அடிக்கச் சொல்லு. ஷார்ட்ஹேண்டுக்கே வேலையில்லை" என்பார் மேலாளர். அது உயர்வு நவிற்சியாக இருந்தாலும், வேகம் எப்போதும் தனித்துக்காட்டுகிறது என்பதும் உண்மைதான். அலுவலகத்தில் "கீ போர்ட் நின்ஜா" என்று பட்டப்பெயர் வைத்திருக்கிறார்கள்.
தட்டச்சுத் திறன் கணிணியை இயக்குவதற்கு எந்த அளவு கைகொடுக்கிறது என்பது முறையாகத் தட்டச்சும் பயிற்சி பெற்றவர்களுக்குத் தெரியும்.
பக்கத்து சீட் ஆசாமி ஆள்காட்டி விரல்களால் கோழி குப்பையில் தேடுவதைப் போலத் தேடித்தேடித் தட்டச்சுவதைப் பார்த்தால் தமாஷாக இருக்கும்.
இன்று நல்ல பதவியில் இருந்தாலும் தட்டச்சுவதைப் பொருத்தவரை அதே பழைய வேகம்தான். "So you can type without seeing the keyboard?" என்ற கேள்வியை என் கணித்துறை வாழ்வில் நூறு பேராவது கேட்டிருப்பார்கள். :)
"டைப்ரைட்டிங் கத்துக்கோ" என்று என்னைக் கற்றுக்கொள்ள வைத்த என் தந்தைக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்.
அன்புடன்
சுந்தர்.
எண்பதுகளின் மத்தியில் பத்தாவது படிக்கும்போதே என் அப்பா (கிட்டத்தட்ட எல்லா அப்பாக்கள் மாதிரியே) வாரத்திற்கு இரு முறையாவது நினைவூட்டுவது "பரீட்சை முடிஞ்சதும் ஊர் சுத்த ஆரம்பிச்சுடாதே. ஒழுங்கா டைப் ரைட்டிங், ஷார்ட் ஹேண்ட் கத்துக்கோ, ப்ளஸ் டூ முடிக்கறதுக்குள்ள அதையும் முடிச்சிட்டா டிஎன்பிஎஸ்ஸி இல்லாட்டி எஸ்எஸ்ஸில எக்ஸாம் எழுதி கடவுள் புண்ணியத்துல ஒரு கவெர்மெண்ட் குமாஸ்தா வேலைக்குச் சேந்துட்டியானா அப்றம் வாழ்க்கை பத்திரமாயிடும்" என்பதுதான்.
அரசாங்க வேலை என்றாலே என்னைப் பொருத்தவரை 'உவ்வேக்' சமாசாரம் - சில அலுவலகங்களுக்குப் போய் நிகழ்வுகளைப் பார்த்ததிலிருந்து (வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் போன்றவை). என் அப்பாவே அவர் துறையில் நடக்கும் ஊழல்களைப் பற்றிக் கதைகதையாய் சொல்லுவார். 'அரசாங்க வேலையில் சேருவதற்குப் பதில் பாழுங் கிணற்றில் விழுவேனே' என்று மனதில் நினைத்துக் கொண்டேன். சொல்லவில்லை. ஆனாலும் அவர் சொல் மீது இருந்த மரியாதையால் போய் பார்த்துவிட்டு வரலாம் என்று மதுரை பெரியார் மேம்பாலத்திற்குக் கீழே ஓடும் தண்டவாளத்தை ஒட்டிய சந்தில் கீழே டீக்கடை, மெக்கானிக் கடைகளோடு முதல் மாடியில் இருளோவென்றிருந்த, தூசி வாடையடிக்கும் புராதான தட்டச்சுப் பயிற்சிப் பள்ளிக்கு ஓராள் மட்டும் செல்லக்கூடிய படிகளில் ஏறி.... ஏறும் போதே காதில் விழுந்த பட..பட..இரைச்சல் சத்தம் த்ரில்லாகவே இருந்தது.
உள்ளே மூன்று பக்கச் சுவர்களையொட்டி வரிசையாக வீற்றிருந்த தட்டச்சு இயந்திரங்களின் முன் வீற்றிருந்த மாணவர்கள். குழல் விளக்குகள். அவற்றை மொய்த்திருந்த பூச்சிகள். மரப்பாச்சிப் பொம்மைகள் போன்று தாவணிப் பெண்கள். இவர்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லவேண்டும்.
இந்த மாதிரி டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட், க்ளினிக்குகள், லேப்புகள், ஜெராக்ஸ் அல்லது ஸ்டூடியோ கடைகள், பல்பொருள் அங்காடிகள், சில ஆரம்பப் பள்ளிகள் என்று பெரும்பாலான இடங்களில் இந்த மரப்பாச்சி பொம்மைகளைக் குறைந்த கூலி கொடுத்து அமர்த்தி வைத்திருப்பார்கள். கிட்டத்தட்ட பார்க்கக் கூட ஒரே மாதிரி இருப்பார்கள். மால் ந்யூட்ரிஷன் பிரச்சினையால் முப்பதை நெருங்கினாலும் பள்ளிக்குச் செல்லும் பெண்கள் போல இருப்பார்கள். பார்க்கவே பாவமாக மனது கஷ்டப்படும்.
இடது பக்கம் இருக்கும் அச்சிட்ட தாள்களைக் கழுத்தை லேசாகத் திருப்பிப் பார்த்துக் கொண்டே விரல்களால் விசைகளில் விளையாடிக்கொண்டிருந்த மாணவர்கள். அவர்கள் விசைப்பலகையைப் பார்க்காமலே தட்டச்சுவதை சிறிது நேரம் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, உரிமையாளர்-ஆசிரியரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு மறுநாளிலிருந்து வருவதாகச் சொல்லி (மாதம் முப்பது ரூபாய்) விடைபெற்று அன்றிரவு கனவில் விசைப்பலகையைப் பார்க்காது என் காதலிக்கு அதிவேகத்தில் கடிதமொன்றைத் தட்டச்சி அனுப்பினேன்.
மறுநாள் சாணித்தாள்கள் இரண்டினைக் குழல் போலச் சுருட்டிக்கொண்டு சென்று, a...s....d...f ஆரம்பித்தேன். முதல் சில நிமிடங்களுக்கு a......s......d......f......
மாஸ்டர் தோளில் தட்டி, 'எல்லாரும் பண்ற மாதிரி உனக்கும் ஆர்வக் கோளாறாயிடுச்சா? பொறுமை இல்லையா? வேகம் முக்கியமில்லை இப்போ. தப்பு இல்லாம கீய பாக்காம நிதானமா அடிச்சுப் பழகு. வேகம் தன்னால வரும்' என்று அறிவுறுத்த, விரல்கள் சற்று நிதானப்பட்டன.
பயிற்சி ஆரம்பிக்கு முன், காகிதத்தை நுழைத்து நடு சென்ட்டரில் 2, அடுத்த வரியில் அதே பொசிஷனில் = அடித்து பிள்ளையார் சுழி போட்டு, காகிதத்தின் வலதோரத்தில் விசைப்பலகையில் தேடித்தேடி என் பெயரை எழுத்துக்கூட்டி அடித்துக்கொண்டு ஆரம்பிப்பேன்.
'இதையெல்லாம் பரீச்சைல அடிச்சா எல்லாத்தையும் க்ராஸ் பண்ணி பெயில் போட்ருவான். குடுக்கற ஷீட்டை அப்படியே ஈயடிச்சான் காப்பி மாதிரி அடிக்கணும். எக்ஸ்ட்ராவா ஒரு புள்ளி வச்சாக்கூட மார்க் போச்சு. பஸ்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணலைன்னா டைப்ரைட்டிங் கத்துக்கறதே வேஸ்ட்டு' என்று எச்சரித்தார் மாஸ்டர்.
ஒரு வழியாக அனைத்து விசைகளையும் உபயோகிக்கும்படி பயிற்சிகளை முடித்துக் கொண்டு pack my box with five dozen liqour jugs வந்ததும், கட்டுரைகள் தட்டச்சும் பயிற்சியைத் துவங்கிவிட்டேன்.
பேரிளம் பெண்களுக்கு மத்தியில் இளம்பெண் மாதிரி கற்கால ரெமிங்டென்களுக்கு நடுவில் ·பேஸிட் மெஷின்கள் ஒன்றிரண்டையும் வைத்திருந்தார்கள். கருஞ்சாம்பல் கலரில் அழகாக புதிதாக அவை இருந்தன. சத்தமே கேட்காமல் பூவாக தட்டச்சும் போன்றிருந்தது. டக்கென்று அதைப் பிடித்துக் கொண்டு அடிக்க ஆரம்பித்ததும்தான் ஏன் யாருமே அம்மெஷினுக்குப் போட்டிபோடவில்லை என்று தெரிந்தது. ஸ்பேஸ் பார்-ஐத் தொட்டால் ஓர் இடம் மட்டும் காகிதத்தை நகர்த்தாமல் கரகரவென்று கேரியேஜ்-ஐ முழுவதும் இடப்புறம் தள்ளிவிட்டது. எவ்வளவு மெதுவாக அடித்தாலும் எழுத்துகள் இரண்டிரண்டு தடவை பதிந்தது, அல்லது பதியாமல் காகிதம் நகர்ந்தது. பக்கத்து ரெமிங்டன் காரன் நமுட்டுச் சிரிப்புச் சிரித்து எரிச்சலை இன்னும் அதிகப்படுத்த அதற்கப்புறம் ·பேஸிட் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.
தட்டச்சு செய்யும் போது, எழுத்துக்களுக்கான அச்சுகள் எழுந்து லொட்டென்று சிறிய இடைவெளியில் காகிதத்தில் அச்சைப் பதிக்கும். அந்த இடைவெளியில் ஒவ்வொரு விரலாக வைத்து S U N D A R என்று பெயரை விரல்களில் அடித்துக் கொள்வேன்.
நிறையப் பிழைகள் செய்யும் நேரத்தில் ஆத்திரம் தலைக்கேறி மாஸ்டர் பார்க்காத சமயம் பார்த்து இரு கைகளையும் விசைப்பலகையில் வைத்து அனைத்து விசைகளையும் மொத்தமாக அமுக்க, அச்சுக் கம்பிகள் தேனீக் கூட்டம் போன்று மொத்தமாக எழும்பி கோர்த்துக் கொண்டு அடையாக நிற்கும். விட்டதும் ஒவ்வொன்றாக அதன் இடத்திற்குத் திரும்பும்.
கார்பன் காப்பி வைத்து அடிக்கக் கற்றுக்கொண்டது அடுத்த நிலை. இரு காகிதங்களை சிலிண்டரில் நுழைத்து லேசாக அதன் காதைத் திருகி, காகிதங்களின் இடைவெளியில் புது கார்பன் தாளைச் செருகி பின்பு மறுபடியும் காதைத் திருகி சரியான பொசிஷனில் வைத்துக் கொள்ள வேண்டும். புதுக் கார்பன் தாளின் வாசனையே தனி. அதன் முதல் பிரதி இன்னும் விசேஷம். அச்சுக் குண்டாக இருக்கும். கார்பன் தாளைத் தவறாகத் திருப்பி வைத்து அடித்து முடித்ததும் பிரதி விழாமல் போனதும் நிகழ்ந்திருக்கிறது.
கொடுத்த பயிற்சியைத் தவிர வேறு எதைத் தட்டச்சினாலும் மாஸ்டருக்குப் பழியாகக் கோபம் வரும். இருந்தாலும் காகிதங்களுக்குள் ஒளித்துக் கொண்டுவந்து இன்லாண்ட் கவருக்கு முகவரியைத் தட்டச்சுவது, நோட்டுப் புத்தக அட்டையில் ஒட்டுவதற்காக லேபிளில் பெயர் விவரங்களைத் தட்டச்சிக் கொண்டுபோவது போன்ற திருட்டுத்தனங்களின் த்ரில் தனி.
தட்டச்சுத் தேர்வு ஏதாவது ஒரு பள்ளியில் நடக்கும். மதுரை செளராஷ்ட்ரா பள்ளியை எங்களுக்குத் தேர்வு மையமாகக் கொடுத்திருந்தார்கள். அங்கு போய் பார்த்தால் ஏகப்பட்ட பயிற்சிப் பள்ளிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள். வண்டி வண்டியாக தட்டச்சும் இயந்திரங்களைக் கொண்டுவந்து அடுக்கிக் கொண்டிருந்தார்கள். ஒருவழியாக என் மெஷினைக் கண்டுபிடித்து ஸ்டூலில் அமர்ந்துகொள்ள கரங்கள் நடுங்கின. எங்கும் அமைதி. திடீரென்று விசில் ஒன்று ஒலிக்க சடசடவென்று பனிக்கட்டி மழை பெய்வது போல் அனைவரும் அந்த நொடியில் தட்டச்ச ஆரம்பிக்க, பதற்றமாக இருந்தது. ஆனால் நான் தேர்வுக்காகப் பயிற்சி செய்தபோது கடைப்பிடித்தது முதல் ஐந்து வினாடிகளுக்கு மெஷினைத் தொடாது மனதை ஒருமுகப் படுத்துவதுதான். அதையே அன்றும் கடைப்பிடித்து, காதுகளைத் தற்காலிகமாகச் செவிடாக்கிக் கொண்டு விரல்களை விசைப்பலகையில் வைத்துச் சீரான வேகத்தில் தட்டச்சி முடித்தேன். பதினைந்து நிமிடத் தேர்வில் ஐந்து வினாடிகளை இழப்பது சற்று அதிகப்படியான ரிஸ்க்தான். ஆனால் முதல் வகுப்பில் தேறினேன். உயர்நிலையிலும்.
ஆங்கில தட்டச்சு முடித்ததும் தமிழ்த் தட்டச்சைத் தொடங்கியதும் ஓரிரு நாட்களிலேயே போதும் போதுமென்று ஆகிவிட்டது. 247 எழுத்துகளையும் இம்முட்டூண்டு விசைப்பலகையில் அடக்கி, அதைக் கற்றுக் கொள்வது அவ்வளவு சுலபமில்லை. யளனகபக, ட்மதாத என்று அடிக்கத் துவங்கி, எத்தனை அடிக்கவேண்டியிருந்தது ! கிட்டத்தட்ட எல்லா எழுத்துகளுக்கும் இரண்டிரண்டு விசைகளை அடிக்கவேண்டும். மண்டை காய்ந்து விட்டது. ஆனால் இந்தக் கஷ்டமெல்லாம், எழுத்துகள் எந்தெந்த விசைகளில் இருக்கின்றன என்று கற்றுக் கொள்ளும் வரைதான். ஆங்கிலத் தட்டச்சு செய்ய பக்கத்தில் மேட்டர் இருந்தால் மட்டுமே பார்த்து அடிக்கமுடியும். சொந்தமாக யோசித்து அடிக்கும் அளவிற்கு நான் பீட்டரில்லை. ஆனால் தமிழ்த் தட்டச்சில் அந்தச் சிரமமில்லை. சிந்தனை விரல்கள் வழியாகக் காகிதத்தில் இறங்கி நிறைத்துவிடும். நினைப்பதை அப்படியே அடிக்க முடியுமே. முதலில் பிடித்த திரைப்படப் பாடல்களாக அடித்துத் தள்ளினேன். எழுதுவதை நிறுத்தி அனைத்துக் கடிதங்களையும் தமிழில் தட்டச்சு செய்தே கையொப்பமிட்டு அனுப்பினேன். இதுஇதுதான் என்று கணக்கில்லாமல் தமிழில் நிறைய அடித்துத் தள்ளினேன். ஆங்கில உயர்நிலைத் தட்டச்சு முடித்திருந்ததால், தமிழில் நேரடியாக உயர்நிலைத் தேர்வு எழுதி, முதல் வகுப்பில் தேறினேன்.
எனது சுருக்கெழுத்துப் பயிற்சி சுருக்கென்று ஓரிரு தினங்களிலேயே முடிந்துவிட்டது. என்னால் சுருக்கெழுத்தில் கவனம் செலுத்தவே முடியவில்லை. Pitman என்னை pity man-ஆக ஆக்கிவிட்டது. :)
ப்ளஸ் டூ முடிக்கும்போதே தமிழ், ஆங்கிலத் தட்டச்சையும் முடித்தாகி விட்டது. பின்பு அப்பா ஒருமுறை கொண்டுவந்து கொடுத்த S.S.C விண்ணப்பதைப் பூர்த்தி செய்து அனுப்பி - ஏதோ ஒரு தேர்வு நடந்தது; போகவில்லை. கல்லூரி படிக்கையில் கொஞ்சம் தைரியம் பெற்று 'கவர்மெண்ட் ஜாப்லாம் வேணாம்ப்பா. எதாச்சும் ப்ரைவேட்டா சேந்துக்கறேன்' என்று சொன்னதும், என்னைத் தண்ணீர் தெளித்து விட்டுவிட்டார்.
ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தட்டச்சைப் பயிற்சி செய்து கொண்டே இருந்தேன்.
தினமலரின் தீபாவளி மலருக்கு அப்போது மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பலாம். மதுரை பழங்காநத்தத்தில் தினமலர் அலுவலகம் இருந்தது. தினமும் நூற்றுக்கணக்கில் மணியார்டர்கள் வரும். டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள் பகுதி நேர வேலைக்குத் தேவை என்று விளம்பரம் பார்த்து அன்று மாலையே சென்று கேட்டதில் தட்டச்சுத் தேர்வு ஒன்றை வைத்துச் சேர்த்துக் கொண்டார்கள். Foxpro மென்பொருளில் எழுதப்பட்ட ஒரு ஜன்னலைத் திறந்து கொடுத்து ஒரு பெரிய மணியார்டர் கட்டையும் கொடுத்து அடிக்கச் சொன்னார்கள. கிட்டத்தட்ட நானூறு மணியார்டர்கள் இருக்கும். வாசகர் பெயர், முகவரி, மணியார்டர் எண்ணை அடிக்கவேண்டும் அவ்வளவுதான். இரவு எட்டு மணியிலிருந்து மறுநாள் காலை நான்கு மணிவரை வேலை. என்னைப் போல இன்னும் சில நபர்களும் வேலைக்குச் சேர்ந்திருந்தார்கள். நான் பத்து பதினொரு மணிக்கெல்லாம் முடித்துவிட்டு, பன்னிரண்டு மணிவரை தாக்குப்பிடித்துவிட்டு அதற்கப்புறம் சாமியாடத் தொடங்கி கடைசியில் தூங்கிவிட, மறுநாளுக்கான செய்தித்தாள் பதிப்பு அசுர வேகத்தில் நள்ளிரவில் அச்சிடப்படும்போது எழும் அதீதச் சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்துவிடுவேன். பகலிலும் விழித்திருந்து இரவிலும் வேலைபார்க்க விழித்திருந்த அந்த நாட்கள் நரகம். அதிகாலை இரண்டுமணிநேரம் மட்டுமே தூங்கக் கிடைக்கும். தூக்கம் பாதிக்கப்பட்டதால் பயங்கரமான கனவுகளில் உடல் தூக்கிப் போடும். தீபாவளிக்குச் சில நாட்கள் முன்பு தினமலர் வேலை முடிந்ததும், கையில் வாங்கிய நூற்றைம்பது ரூபாய் சம்பளத்தில் பட்ட கஷ்டம் கரைந்துதான் போனது.
கல்லூரி முடித்து வேலைக்குச் சேர்ந்ததும் என் அதிவேகத் தட்டச்சும் திறனைப் பார்த்து "நீ கம்ப்யூட்டர் ·பீல்டுக்குப் போனா நல்லா வருவே" என்று அறிவுரை சொன்ன என் முதலாளிக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். ஒரு எக்ஸ்.ட்டி மெஷினைக் கொடுத்து, லோட்டஸ் 1-2-3-யைக் காட்டி "இதுல கணக்கு வழக்கெல்லாம் அடிச்சு வச்சுக்கோ" என்று சொல்லிவிட்டார். கணிணியை முன்பின் பார்த்ததில்லை. அதில் சினேகிதமான ஒரே விஷயம் அதன் விசைப்பலகை. மெதுவாக ஆரம்பித்துக் கற்றுக் கொண்டு, அப்புறம் வேர்ட் ஸ்டாருக்கு வந்து, பின்பு ப்ரின்ஸ் விளையாடும் வரை முன்னேறினேன்.
அதுவரை மறந்திருந்த தமிழ்த் தட்டச்சு தாஸ் (DOS)-க்கான பாரதி மென்பொருள் மூலமாக உயிர் பெற்றது. மறுபடியும் தட்டச்சத் துவங்கினேன். கணிணியில் தட்டச்சும் வேகம் இன்னும் கூடி 90 வார்த்தைகள் வரை அடித்தேன். பக்கத்தில் அமர்ந்திருப்பவர்கள் பிரமிப்போடு பார்த்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு என் விரல்கள் மாயாஜாலம் செய்வது போலிருக்கும். இன்றும் தட்டச்சும் திறமை இணையத்தில் புழங்குவதற்குக் கைகொடுக்கிறது. முதலில் மரத்தடியில் சேர்ந்து பாமினி எழுத்துருவைக் கொண்டு தட்டச்சி, கோப்பாக இட்டுக்கொண்டிருந்தோம். பின்பு திஸ்கி வந்ததும், எ-கலப்பையை வைத்து கொஞ்ச நாள் ட்ரான்ஸ்லிட்ரேஷன் முறையில் 'அம்மா'வை ammA என்று அடித்துப் பழகித் தொலைத்து, மறுபடியும் தமிழ்விசைப் பலகையை நிறுவிக்கொண்டு பழைய தமிழ்த் தட்டச்சு முறையில் அதே வேகத்தில் தட்டச்சிக் கொண்டிருக்கிறேன்.
ஆரம்ப காலங்களில் அலுவலகத்தில் எதற்கெடுத்தாலும் என்னைக் கூப்பிடுவார்கள். செக்ரட்டரியை ஓரங்கட்டி "இவனை நேரடியா அடிக்கச் சொல்லு. ஷார்ட்ஹேண்டுக்கே வேலையில்லை" என்பார் மேலாளர். அது உயர்வு நவிற்சியாக இருந்தாலும், வேகம் எப்போதும் தனித்துக்காட்டுகிறது என்பதும் உண்மைதான். அலுவலகத்தில் "கீ போர்ட் நின்ஜா" என்று பட்டப்பெயர் வைத்திருக்கிறார்கள்.
தட்டச்சுத் திறன் கணிணியை இயக்குவதற்கு எந்த அளவு கைகொடுக்கிறது என்பது முறையாகத் தட்டச்சும் பயிற்சி பெற்றவர்களுக்குத் தெரியும்.
பக்கத்து சீட் ஆசாமி ஆள்காட்டி விரல்களால் கோழி குப்பையில் தேடுவதைப் போலத் தேடித்தேடித் தட்டச்சுவதைப் பார்த்தால் தமாஷாக இருக்கும்.
இன்று நல்ல பதவியில் இருந்தாலும் தட்டச்சுவதைப் பொருத்தவரை அதே பழைய வேகம்தான். "So you can type without seeing the keyboard?" என்ற கேள்வியை என் கணித்துறை வாழ்வில் நூறு பேராவது கேட்டிருப்பார்கள். :)
"டைப்ரைட்டிங் கத்துக்கோ" என்று என்னைக் கற்றுக்கொள்ள வைத்த என் தந்தைக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்.
அன்புடன்
சுந்தர்.
9 comments:
தலைவா, என்னை பழைய நினைவுக்கு கொண்டு போய்டீங்க.
அப்படியே எடத்து பேர், ஊர் பேரு மாத்தினா, என்ற கதை மாதிரியே கீது.
என்ன என்ற கதைல, தமிழ் தட்டச்சு நம்மல ரெம்ப தட்டிடிச்சி.
அழகாக எழுதி இருக்கிறீர்கள், படிக்க இனிமையாக உள்ளது.
அன்புடன்
இரமேசு தியாகராசன்
15 வருடமாக கணினியோடு வேலை என்றாலும் சாதாரண வேலை எதிலும் நான் இதை ஒரு குறையாக உணர்ந்ததில்லை. ஆனால் இந்த 'தமிழ்' அடிக்கும்போதுதான் ஏன் கத்துக்கொள்ளவில்லை என்று நொந்துகொள்வேன். நிஞ்ஜாவுக்கு வாழ்த்துக்கள்.
-'ஒருவிரல்' காசி ராவ்:-))
Kasi,
You can learn typing online. Practicing 15 to 30 minutes a day is just enough, which will ease you in touch typing within 2 months.
http://www.typing-lessons.org
Dear Sundar
As usual excellent narration of nostalgia. I also went for a typewriting class when my college was closed for more than 3 months. Though I did not appear for any exam, till date it helps me much in fast typewriting. I agree 100% on our malnutrioned sisters.
Rgds
S.Thirumalai
அன்புள்ள சுந்தர்,
பிரமாதம்! நானும்( அக்கா வீட்டுக்கு ஸ்கூல் ஃபைனல் லீவுலே போனப்ப)ஒரு மாசம் டைப்ரைட்டிங் க்ளாஸ் போனேன்.
பக்கத்துத் தெருப் பையன் கூடவே வந்ததைப் பார்த்து, அத்திம்பேர் பயந்து என்னை நிறுத்திட்டார்.
அப்புறம் தபால்தந்தியிலே 'ஃபோனோக்ராம்' வேலையிலே சேர்ந்தப்ப, அப்படியே கீபோர்டைப் பார்த்து அடிச்சே கொஞ்சம்
வேகம் வந்துருச்சு!
( பழைய நினைப்பு.... அடடா அதுவே ஒரு சுகம்.... ஹூம்....
என்றும் அன்புடன்,
துளசி.
//மறுநாள் சாணித்தாள்கள் இரண்டினைக் குழல் போலச் சுருட்டிக்கொண்டு சென்று// இதில் வெள்ளை, மஞ்சள், நீலம் என்று பல ஜிங்குச்சா வண்ணங்களுடன் எத்தனை தாள்கள்!
//ரெமிங்டென்களுக்கு நடுவில் ·பேஸிட் மெஷின்கள் ஒன்றிரண்டையும் வைத்திருந்தார்கள். // எங்களுக்கு ஃபேஸிட்டுகளுக்கு நடுவில் கோத்ரேஜை வைத்திருந்தார்கள் :)
//சீரான வேகத்தில் தட்டச்சி முடித்தேன். பதினைந்து நிமிடத் தேர்வில் ஐந்து வினாடிகளை இழப்பது சற்று அதிகப்படியான ரிஸ்க்தான்.// இரண்டாம் தாளில் 'பேலன்ஸ் ஸீட்'டிற்கு நடக்கும் கூத்துகளை சொல்லாமல் விட்டுவிட்டீர்களே!
//ஆங்கிலத் தட்டச்சு செய்ய பக்கத்தில் மேட்டர் இருந்தால் மட்டுமே பார்த்து அடிக்கமுடியும். சொந்தமாக யோசித்து அடிக்கும் அளவிற்கு நான் பீட்டரில்லை.// :))
//ஆனால் தமிழ்த் தட்டச்சில் அந்தச் சிரமமில்லை.// வாஸ்தவம்தான்.
//எனது சுருக்கெழுத்துப் பயிற்சி சுருக்கென்று ஓரிரு தினங்களிலேயே முடிந்துவிட்டது.// ஒன்றும் நஷ்டமில்லை விடுங்கள், கஷ்டப்பட்டுக் கற்றுத் தேறியும் உபயோகிக்காமல் வீணாகத்தான் போயிருக்கும்.
sundar,
I don't read the "ninaivalaigal" posts now a days.. but due to the number of recomendations, i thought of reading. & Really enjoyed.
Good Article. Keep it up.
1962-ல் இரு மாதங்கள் தட்டச்சுப் பழகி அதை தொடர முடியாது விட்டுவிட்டேன். என் மொழி பெயர்ப்புகள் தட்டச்சு செய்யப்பட வேண்டும் என்ற நிலை வந்த போது அந்த வேலையைத் தொழில் முறை தட்டச்சாளர்களிடம் கொடுத்து விட்டேன். தட்டச்சுச் செய்யும் நேரத்தில் மொழிபெயர்ப்பைத் தொடர்ந்துப் பன்மடங்குப் பணம் ஈட்டலாம்.
இப்போது கணினியில் நானே தட்டச்சு செய்துக் கொள்கிறேன். தமிழுக்கு ஆங்கில எழுத்துக்களிலேயே அடித்துக் கொள்கிறேன். வேகமும் குறை கூறும் அளவுக்கில்லை. என்னுடையது ஜெர்மன் விசைப் பலகை y மற்றும் z இடம் மாறியிருக்கும். அதன் பாதிப்பு நான் என் வாடிக்கையாளர் அலுவலகத்தில் இருக்கும் கணினியில் தட்டச்சு செய்யும்போது வெளிப்படுகிறது. அவ்வளவுதான்.
மற்றப்படி, "குறையொன்றுமில்லை, மறைமூர்த்திக் கண்ணா"
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்போடு மறுமொழியளித்த நண்பர்களுக்கு மிக்க நன்றிகள்.
* ஒரு விரல் ராவ்காரு :) - 'யாரோ' கொடுத்த சுட்டி பயனுள்ளது. முயற்சியும் ஆர்வமும் இருந்தால் போதும். ஜமாயுங்க.
* இன்னொரு 'யாரோ' - ஆமாம் ஸார். நினைவலைகள் படிப்பது அறுவையான விஷயமாகிவிடும். என்ன செய்வது? தன்மை ஒருமையில் எழுதுவது சுகமாகவும் எளிதாகவும் இருப்பதால் நினைவலைகள் எழுதுகிறேன். உங்களுக்குப் பிடித்திருக்கிறதென்றால் மகிழ்ச்சிதான். உங்களுக்கு நன்றி.
* 'டோண்டு' ராகவன் ஸார். ஜெர்மன் விசைப்பலகையிருந்த மடிக்கணிணி ஒன்றை உபயோகித்திருக்கிறேன். தடவித்தடவிக் கண்டுபிடித்து அடிக்கவேண்டும்!! :( அதாவது பரவாயில்லை. இந்தத் தோஷிபா காரர்கள் இருக்கிறார்களே - படு மோசம். மத்த கம்பெனிக் காரங்கள்ளாம் ஒழுங்கா Standard Keyboard Layout-ஐ Laptops-களில் வைத்திருக்கிறார்கள் என்றால் தோஷிபா காரர்கள் வைத்திருக்கும் லே-அவுட் எப்பொழுதும் வித்தியாசமாக இருக்கும். Del, Home, Ins விசைகள் கன்னா பின்னாவென்று எங்கிட்டோ இருக்கும். இப்ப பயன்படுத்தற புது டெக்ராவிலயும் இதே பிரச்சினை. இதுக்காகவே ஒரு வாரம் தட்டச்சுப் பயிற்சி எடுத்துக்க வேண்டியிருந்தது :)
* ராதாகிருஷ்ணன் ஸார் - பேலன்ஸ் ஷீட் - அய்யோ கடவுளே. சரியான கூத்து அது. ஹ¤ம். எழுத விட்டுட்டேன். :( கோத்ரெஜ் மெஷினா - ஆளை விடுங்க சாமி!!
மனமார்ந்த நன்றிகள்.
சுந்தர்
Post a Comment