அன்பு வணக்கம். வற்றா இருப்பிலிருந்து எழும்பிச் சிதறும் நினைவலைகளையும், கற்பனைக் குதிரையின் பயணத் தடங்களையும் உங்கள் வாசிப்பிற்கு வைக்கிறேன். சிந்தனைச் செங்கற்களை அடுக்கி நான் கட்டும் இச்சிறிய தமிழ்க் குடிலுக்கு வருகை தந்தமைக்கு நன்றிகள். மீண்டும் வருக! என்றும் அன்புடன் - வற்றாயிருப்பு சுந்தர்
Tuesday, July 25, 2006
"தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்"!
"தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்"! என்ற வாசகங்கள் கோவிலில் எழுதப்பட்டிருந்தால் அது தமிழுக்கு அவமானம். அவ்வாசகங்கள் அழிக்கப்படும் என்று முதல்வர் கூறியதாகச் செய்தியைப் படித்தேன். கட்டாயம் அழிக்க வேண்டிய விஷயம்தான்.
இது மாதிரி அழிக்க வேண்டிய ஒழிக்கவேண்டிய அசிங்கங்கள் நிறையவே நம் கோவில்களில் நிறைந்திருக்கின்றன. என்னுடைய பட்டியலில் முதலிடத்தில் இருப்பது தமிழ், தெலுங்கு, கன்னட, சமஸ்க்ருத, ஆங்கில அர்ச்சனைகள் இல்லை! எந்த மொழியில் அர்ச்சனை இருந்தாலும் அர்ச்சகர் என்னவோ 'ஙஞணநமன' என்று தான் சொல்லப் போகிறார். எப்படியும் புரியப் போவதில்லை. என்னத்தையோ அர்ச்சித்துவிட்டுப் போகட்டும். நாம் போவது கடவுளைக் கும்பிட. அவருக்கும் நமக்கும் நடுவே அர்ச்சகர்களிலிருந்து நந்தி வரை நிறைய விஷயங்களிருக்கின்றன.
"தர்ம தரிசனம்" என்ற பலகையை எல்லாரும் பார்த்திருப்போம். இது திரையரங்குகளின் தரை டிக்கெட் போன்றது. ஸ்பெஷல் தரிசனம், சிறப்பு ஸ்பெஷல் தரிசனம், என்று ஆரம்பித்து இறைவனின் தோளில் கைபோட்டு நின்று கொண்டு தரிசிக்கும் வரையில் பணம் கொடுத்து, கூட்டத்தில் நசுங்காது சொகுசாகச் சென்று பார்க்கும் தரிசனங்கள் ஏகமாகக் கோவில்களில் இருக்கின்றன. திருவாளர் 'பொதுஜனம்' என்கிற 'பிச்சைக் காரர்' மட்டும் 'தர்ம தரிசனம்' என்ற ஆட்டுமந்தைக்குள் அடைபட்டு, மிதிபட்டு, நசுங்கி, வியர்த்து, 'நகரு நகரு போ போ' என்று சந்நிதானத்தின் கும்மிருட்டு பழகி இறைவனைப் பார்ப்பதற்குள் வெளியில் தள்ளப்பட்டு விடுவார். பின்பு காற்றாட தூணருகே சாய்ந்து உட்கார்ந்து புளியோதரை பொங்கலைத் தின்றுவிட்டு நடையைக் கட்டுவார்.
இன்னும் சில கோவில்களில் தர்மத்துக்குக் கூட தரிசனம் கிடையாது. காசு கொடுத்துப் பார்ப்பது கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. கஷ்டங்களைச் சொல்லிப் புலம்பி ஆறுதல் தேட வருவதே கோவில். அங்கும் இம்மாதிரி இல்லாதவர்களை ஏளனம் செய்வது அந்த ஆண்டவனுக்கே அடுக்காது.
"தர்ம தரிசனம்" என்ற உச்சக்கட்ட வக்கிரத்தை அறிமுகம் செய்தவன் எவன் என்று தெரியவில்லை. இறைவன் முன்பு அனைவரும் சமம் என்ற அடிப்படை நம்பிக்கையையே சிதறடித்து கேலிக்கூத்தாக்கும் இந்த தரிசன முறையை உடனடியாக ஒழித்துக் கட்ட வேண்டும். அனைவருக்கும் ஒரே வரிசை. வரிசையில் முன்னுரிமை தரவேண்டியது முடியாத வயசாளிகளுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் மட்டுமே இருக்க வேண்டும்.
சினிமா தரை டிக்கெட்டிலாவது திரைக்கருகில் ரசிகனை இருக்க விடும். இங்கே தர்ம தரிசனம் இறைவனிடமிருந்து பக்தனை எங்கோ தூரத்தில் தள்ளுகிறது.
நான் ஒன்றும் தர்ம தரிசனத்தில் மட்டும் வீம்பாக நின்று சாமியை தரிசித்த "பெரிய புடுங்கி" இல்லை. இந்த எழவுகளுக்காகவே கோவில்களுக்குச் செல்வதில்லை என்று இருந்தாலும் சில நேரங்களில் பெரியவர்கள் மனம் கோணாது இருக்கச் சென்ற நேரங்களில் காசு கொடுத்துப் போய் கசங்காமல் பார்த்ததுண்டு. ஆனால் அப்படி இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கையில் எனக்குப் பின்னே கூட்டமாகக் குழுமியிருக்கும் தர்ம தரிசன வரிசை பக்தர்களின் பார்வையிலிருந்து இறைவனை நான் மறைத்துக் கொண்டிருக்கும் குற்ற உணர்ச்சி முதுகில் ஊசிகளாக ஒவ்வொரு முறையும் குத்தியிருக்கிறது.
இந்தக் கட்டண தரிசன முறையை ஒழிக்கும் அரசு கடவுளால் ஆசிர்வதிக்கப்படும்.
***
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
வழிமொழிகிறேன். ஏற்றத்தாழ்வுகளை இறைவனின் சன்னிதானத்தில் ஒழிக்க வேண்டும் என்றால் இதனை ஒழித்தே ஆக வேண்டும். ஆனால் எந்த அரசும் இதனைச் செய்யாது. காரணங்கள்:
1. இதில் அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. இந்து அற நிலையத்துறையின் மூலம் இந்த வருமானத்தை அடைந்து மற்றத் துறைகளில் (கான்ட்ராக்டுகளில் - கட்சிக்காரர்களுக்கு) செலவிடலாமே. அதற்குத் தடை வருமென்றால் எதற்குச் செய்ய வேண்டும்? சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்ள அரசாங்கத்திற்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? இனா வானாவாக இந்து இருக்கும் வரை இந்து அறநிலையத்துறை இருக்கும்; அது இருக்கும் வரை இந்த ஏற்றத் தாழ்வும் இருக்கும்.
2. இது தமிழுக்கு முதலிடம் இல்லை என்று கூறுவதைப் போன்ற உணர்வுடன் கூடிய விதயமில்லையே? தமிழுக்கு என்று செய்தால் தமிழைக் காத்ததாகும். ஆனால் இதனை ஒழித்ததால் ஓட்டு கிடைக்குமா?
இன்னும் பல காரணங்கள் சொல்லலாம்.
//தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்"! என்ற வாசகங்கள் கோவிலில் எழுதப்பட்டிருந்தால் அது தமிழுக்கு அவமானம். அவ்வாசகங்கள் அழிக்கப்படும்//
முட்டாள்தனமான வாதம்... அர்ச்சனை என்றால் சமஸ்கிருத்தம் தான் ந்மக்கு ஞாபகம் வரும்... இப்பொழுது தான் தமிழிலும் செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.. மிக நன்று.. அப்படியிருக்கும் போது 'தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்' எனும் வாக்கியத்தில் என்னய்யா தவறு கண்டீர்...
வர வர கலைஞர் தேவையில்லாத விஷய்த்திற்கெல்லாம் உணர்ச்சிவச படுகிறார்...
that is mistake of our culture and Govt. our tamil children cant learn tamil in tamilnadu. shame.
they speak thamiloenglish.
shame!!!
[பிழை திருத்தியது!]
எந்தப் பிரச்சினையையும் உணர்வு பூர்வமாய் அணுகாமல், நடைமுறையில் சிந்தித்தால் சில நிகழ்வுகள் தெளிவகும் என நம்புகிறேன்.
இறைவன் சன்னிதானத்தில் அனைவரும் சமமென்பதில் கருத்து வேறுபாடு இல்லை.
ஆனால், விளக்கேற்றக் கூட வசதி இல்லாமல் இருந்த ஆயிரக்கணக்கான கோயில்களுக்கு இந்தக் கட்டண முறை பெரும் உதவியாய் இருந்ததென்பதை மறக்கலாகாது.
வசதி படைத்த, கூட்டம் நிறைய வரும் கோயில்களெல்லாம், இதன் மூலம் வருவாய் ஈட்டி, தன் பராமரிப்பில் இருக்கும் வசதியற்ற கோயில்களுக்கு உதவி வருவதை நான் அறிவேன்.
மேலும், இருப்பவர்கள் தான் கொடுக்கப் போகிறார்கள்.
அவர்களிடமிருந்து பெறுவதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.
என்ன, சில முறைகளை மாற்றியமைக்க வேண்டும்.
1.கட்டண சேவையோ, தர்ம தரிசனமோ, இருவரும் சென்று தரிசிக்கும் தூரம் ஒன்றாகவே இருக்க வேண்டும். இது மிக மிக முக்கியம்.
ஏதேனும் ஒரு முன் வாசல் வழியாக அவர்களையும் தர்ம தரிசனக் கூட்டத்தோடு இணைத்து விட்டு, பின் அனைவரும் ஒன்றாய்ச் சென்று தரிசிக்க வைக்க வேண்டும்.
2.அல்லது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கட்டண சேவை என வைக்க வேண்டும்.
அது விசேட கால பூஜை நேரமாக இருந்து தர்ம தரிசனக்காரர்களின் வாய்ப்பைப் பறிப்பதாக இருக்கக் கூடாது.
3. ஆலயங்களில் இருந்து ஈட்டும் வருவாய் அனைத்தும் ஆலய மேம்பாடுகளுக்கும், ஆலயம் மூலம் நடத்தப்படும் சமூக சேவைகளுக்கு மட்டுமே பயன் படுத்தப் பட வேண்டும்.
இதுபோல வேறு சில மாற்றங்களைக் கொண்டு வந்து முயற்சிக்கலாம்.
சுந்தர்
பணக்காரனிடம் காசு வாங்குவதில் தப்பு ஒன்றும் இல்லை.கொடுக்கட்டும்.
அப்படி காசுதரும்போது சில வசதிகளை எதிர்பார்க்கத்தானே செய்வான்?அதற்குதானே காசு தருகிறான்?
செல்வன்
//பணக்காரனிடம் காசு வாங்குவதில் தப்பு ஒன்றும் இல்லை.கொடுக்கட்டும்.
அப்படி காசுதரும்போது சில வசதிகளை எதிர்பார்க்கத்தானே செய்வான்?அதற்குதானே காசு தருகிறான்?//
இதைத்தான் தியேட்டர், ஹோட்டல் என்பதிலிருந்து ஆம்னி பஸ் விமானத்தில் முதல் வகுப்பு என்பது வரை எல்லாவற்றிலும் பகுத்து வைத்திருக்கிறோமே.
இறைவனைப் பார்ப்பதற்கும்கூட ஏழை பணக்காரன் வித்தியாசம் இருக்கத்தான் வேண்டுமா?
ஆக காசு இல்லாவிட்டால் கடவுளைக் கூட பார்க்கமுடியாது. இது கொடுமையில்லையா?
பணக்காரர்களிடம் காசு வாங்குவது தவறில்லை. ஆனால் காசு கொடுப்பதால் மட்டும் அவர்களுக்குத் தனி கவனிப்பு என்பது கோவிலிலாவது வேண்டாம் என்று நினைக்கிறேன்.
இந்த வருமானத்தை வைத்துத்தான் கோவில் பிழைக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நலிந்த கோவில்கள் இன்னும் காற்றாடிக் கொண்டுதான் இருக்கின்றன. தட்டில் விழும் காசு குறைந்து போனதால் நலிந்து போனவை. அங்கெல்லாம் கட்டண தரிசனம் வைத்தால் வரும் ஒன்றிரண்டு ஆசாமிகளும் வர மாட்டார்கள்.
கட்டண தரிசன அட்டூழியங்கள் நடப்பதெல்லாம் பெரும்பாலும் புகழ் பெற்ற பணக்கார கோவில்களில்தான். அங்கு தான் கூட்டம் அம்முகிறது. அவற்றைத்தான் எல்லாவிதங்களிலும் வியாபார கேந்திரங்களாக்கி ஏழைகளின் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏழை படிக்கட்டில் தவழ்ந்தாவது ஏறிவரட்டும். காசு இருப்பவன் விஞ்ச்சில் வரட்டும். அதெல்லாம் கோவிலுக்குள் நுழையும் வரை வைத்துக் கொண்டு அதன் பின்பாவது எல்லாரும் ஒரே வரிசையில் சமமாக வந்து தரிசிக்க வேண்டும் என்று இருக்க வேண்டுமல்லவா?
காசு இருந்தால் கிட்டே வா, இல்லாவிட்டால் எட்டி நில் என்று பக்தர்களை நடத்துவது அசிங்கம்.
அவ்வளவே நான் சொல்ல வந்தது.
இதில் தமிழைக் குழைத்து நாமம் சாத்தும்/சாத்திக் கொள்ளும் எண்ணமெல்லாம் எனக்கில்லை.
பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கும் அவர்களது கருத்துகளுக்கும் நன்றி.
சுந்தர்
பொதுவுடமையை எதில் எதில் புகுத்துவது என்று இல்லையா?
இதுவரை எந்த கோயிலிலும் நான் காசு கட்டி தரிசனம் செய்ததில்லை.தரும தரிசனம் தான்.இதுக்கும் நான் ஏழை எல்லாம் கிடையாது.
தியெட்டர்,ஹோட்டல் இதுக்கும் கோயிலுக்கும் என்ன வித்யாசம் சுந்தர்?மார்க்கெட்டிங்கை பொறுத்தவரை அனைத்தும் சர்வீஸ் துறைதான்.கியூயிங்(queing),மார்கெட்டிங்,விளம்பரம் என சகல யுத்திகளும் இன்று வணிக நோக்கில் அல்லாத சேவைத்துறைகளுக்கு(nonprofit services) பயன்படுத்தப்பட வேண்டியது அவசியம்.இதை அன்றே தமக்கு தெரிந்த முறையில் செய்திருக்கிறார்கள் நம் ஆட்கள்.
காசுதந்தால் பரிவட்டம்,ஸ்பெஷல் தரிசனம் என்று வைத்தால் இப்போது மற்றவர்களுக்கு என்ன நஷ்டம் வந்துவிட்டது?(முட்டாள்தனமான) சோஷலிச கோட்பாடுகளை லாபம் சாரா சர்வீஸ் துறைகளில் புகுத்தினால் அந்த துறையே அழிந்துவிடும்.
We need equality in temples and not socalism
தமிழமணத்தின் சூடு உங்களுக்கும் ஏறிடுச்சா! தர்மதரிசனம் பற்றிய உங்கள் கருத்துகளை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இந்த தடவை இந்தியா போனபோது மனைவி வீட்டார் அன்புத்தொல்லையால் நேரமின்றி பல கோயில்களில் காசு கொடுத்து பார்த்தாயிற்று. எனக்கு கோயிலுக்கு சென்றுதான் கும்பிடவேண்டும் என்பதிலேயே நம்பிக்கையில்லை.
தமிழில் எந்த நாட்டில் செய்யப்படுகிறது? சிங்கப்பூரிலா?
அடப்போய்யா...
தமிழில் அர்ச்சனை செய்தா தோஷமாம். வடமொழிதான் செய்யனுமாம். தமிழ்புரியாத அப்படி ஒரு கடவுள் எங்களுக்கு தேவையே இல்லை.
வெறும் துண்ணூறை கையில் வைத்துக்கொண்டு இந்த அய்யர் பசங்கள் செய்யும் கூத்துக்கு அளவே இல்லை. கத்திவைத்து மிரட்டாத குறையாக காசு பிடுங்குகிறார்கள்!
//இதில் தமிழைக் குழைத்து நாமம் சாத்தும்/சாத்திக் கொள்ளும் எண்ணமெல்லாம் எனக்கில்லை.
//
தலைப்பில தமிழைக் குழைச்சிட்டு இங்க வந்து டிஸ்கி போட்டுட்டிங்க... சரி சரி... ஒரு attraction-க்குனு நினைச்சீங்கப் போல... அதுவே distraction ஆகப் போகுது. பார்த்துக்குங்க.
"காசேதான் கடவுளடா
அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமடா"
சாமியிலும் பணக்கார சாமி /ஏழைச்சாமி
கோயிலிலும் பணக்காரக்கோயில்/ ஏழைக்கோயில்
(-:
Post a Comment