அன்பு வணக்கம். வற்றா இருப்பிலிருந்து எழும்பிச் சிதறும் நினைவலைகளையும், கற்பனைக் குதிரையின் பயணத் தடங்களையும் உங்கள் வாசிப்பிற்கு வைக்கிறேன். சிந்தனைச் செங்கற்களை அடுக்கி நான் கட்டும் இச்சிறிய தமிழ்க் குடிலுக்கு வருகை தந்தமைக்கு நன்றிகள். மீண்டும் வருக! என்றும் அன்புடன் - வற்றாயிருப்பு சுந்தர்
Friday, September 15, 2006
அனுமார் வடை
மாலை ஐந்து மணியாயிற்று. ஆனாலும் வெயில் இன்னும் உக்கிரமாகத்தான் அடிக்கிறது. கோவிலின் வாசலில் இதற்கு மேல் உட்கார முடியாது. கற் படிகள் வேஷ்டியை மீறி பிருட்டத்திலும் தொடையிலும் நன்றாகவே சுடும். இன்னும் உட்கார்ந்தால் சூடு பிடித்துக்கொண்டு ராத்திரி சொட்டுசொட்டாக சிறுநீர் கழிக்கவேண்டும் - அது பெரிய அவஸ்தை. பசிப்பது போல இருந்தது.
பிரதான கதவுகளை மூடி ஆள் நுழையும் சி்ன்னக் கதவை மட்டும் திறந்து வைத்திருக்கிறார்கள். வியாழக் கிழமை ஆனதால் இன்று கூட்டம் அம்மும். இப்போதே கார்களை நிறுத்த இடமில்லாமல் அங்குமிங்கும் கோவிலைச் சுற்றி ஓட்டிக்கொண்டு குடும்பத்துடன் அலைந்துகொண்டிருக்கிறார்கள். சற்று தூரத்தில் நிறைய இடமிருக்கிறது. அங்கு நிறுத்திவிட்டு நடந்துவர மனதில்லை. கோவிலருகில் நிறுத்தி கதவைத் திறந்து கோவிலுக்குள் காலை வைத்து இறங்கினால்தான் அவர்களுக்குத் திருப்தி. எப்படியும் நிறுத்த இடமில்லாமல் சுற்றிவிட்டு கடைசியில் அங்குபோய் நிறுத்திவிட்டு நடந்துதான் வருவார்கள் என்று நினைக்க சிரிப்பு வந்தது.
பையன்கள் தெருவில் கால் பந்தை உதைத்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். காற்றில் சூடு நன்றாகவே ஏறி உஷ்ணமாக அடிக்கிறது. எழுந்து மெதுவாக நெடுநேரமாக நிழலடித்த எதிர் பக்கச் சுவற்றை நோக்கி நடக்க உடல் தள்ளாடியது. நெடுநேரமாக உட்கார்ந்திருந்ததால் கால்கள் மரத்துப் போனது போல கட்டையாக இருந்தன.
உள்ளே பலவித குரல்கள். மணி அடித்துக்கொண்டே இருக்கிறது. ஆட்கள் வந்தும் போய்க்கொண்டும் இருக்கிறார்கள். இன்று கோவில் ஒன்பது மணிவரை திறந்திருக்கும். நாளை விடுமுறைக்கு ஈ காக்கா இருக்காது. வார நாட்களில் மாலை வேளைகளில் சிலர் வந்து போவார்கள். எல்லாருக்கும் வாரயிறுதி மாலையில்தான் இறைவனைத் தொழ நேரம் கிடைக்கிறது.
அந்தப் பெண் கையில் வைத்திருந்த வாளியில் மாலையாக அது என்ன? பின்னால் குடும்பத்தினர் புடைசூழ உள்ளே நுழைந்து போகிறாள். வித்தியாசமான வாசனை. நிறைய பேர் அந்த மாலையை உள்ளே கொண்டு போவதைப் பார்த்ததுண்டு. வெளியே வரும்போது மாலை களையப்பட்டு பாத்திரத்தில் நிரப்பியிருப்பார்கள். போவோர் வருவோருக்கு பிய்த்துக் கொடுப்பார்கள். ஏதோ சைவ உணவு.
இறைவனுக்கு நிறையப் படைத்து உண்கிறார்கள். பளபள உடைகளுடன் குழந்தைகள் அழகாக இருக்கிறார்கள். கோவிலுள்ளும் ஓடி விளையாட அப்பாவோ அம்மாவோ சதா அதட்டிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.
கடந்து சென்ற ஒருவர் வணக்கம் தெரிவிக்க பதில் வணக்கம் சைகையில் செய்ய வெண்டியதாக இருந்தது. என் குரல் அவரை எட்டுவதற்குள் அவர் வேகமாகக் கோவிலுக்குள் போய்விடுவார் என்பதால். சிலர் ஒரு ரியாலைக் கொடுத்துவிட்டுப் போவார்கள்.
ஏழு மணியளவில் சூரியன் இறங்கிவிட கோவில் கோபுரத்தின் வெண்கலக் கும்பம் பளபளக்கிறது. காவிக்கொடி ஓரத்தில் படபடத்துக்கொண்டிருக்கிறது. தெருப்பூனைகள் குப்பைத் தொட்டியைக் கிளறிக் கொண்டிருந்தன.
தரைச் சூடு இப்போது குறைந்திருக்கும். வாசலில் உட்காராவிட்டால் வேலை செய்த மாதிரியே இருக்காது. மெதுவாக திரும்ப நடந்துசென்று அமர்ந்ததும் 'யம்மாடி' என்று இருந்தது. மனம் உடலைச் சுமையாக உணரத் துவங்கிவிட்டது. வயதாகிறது. தளர்ச்சியை இப்போது அடிக்கடி உணரமுடிகிறது. இரவு வீட்டில் உணவு சாப்பிட்டுவிட்டு உறங்க பதினொன்றாகிவிடும். அவளுக்கும் இப்போது முன்போல் முடிவதில்லை.
கதவிலிருந்து குபீரென கையில் சிறிய பாத்திரத்துடன் அந்தச் சிறுவன் பாய்ந்து வெளியே வர பின்னாடியே துரத்திக்கொண்டு வெளியே வந்தாள் அந்தப் பெண்மணி. சிறுவன் மேலும் பாய்வதற்குள் அவனைப்பிடித்துவிட்டாள். கண்டிக்க ஆரம்பிக்குமுன்னர் அவன் இங்கு பார்த்துவிட்டு வேகமாக வர அந்தப் பெண்மணி திகைத்து நின்றுவிட்டாள்.
பையன் அருகில் வந்து சிரிக்க புன்னகை எழுந்தது. உதடுகள் பளபளவென்று எண்ணையாக இருக்க கையில் அதை வைத்திருந்தான். அவன் அம்மா இப்போது மெதுவாக வந்து அவன் பின்புறம் தோள்களைப் பிடித்து நின்றுகொண்டு சிநேகமாகச் சிரித்தாள். குனிந்து அவனிடம் 'தாத்தாடா' என்றாள்.
பையன் 'தாத்தா' என்றான்.
நான் சிரித்து அவன் தலையைத் தடவிக்கொடுக்க 'இந்தா' என்று அதை நீட்டினான். அம்மா 'டேய்' என இழுத்துத் தயங்க நான் அதைப் பார்த்தேன். எனக்கு அவர்கள் மொழியில் ஓரிரண்டு வாக்கியங்கள் தெரியும். 'யே க்யா?' என்றேன். அவன் அம்மாவைப் பார்க்க 'என்னன்னு கேக்கறாரு' என்றாள்.
'வதை'
'ம்?'
'வதை.. அனுமான் வதை'
நான் அவளைப் பார்த்தேன். அவள் புன்னகைத்து 'திஸ் இஸ் ஹனுமான் வடை' என்றாள். பையன் கன்னங்களை உப்பிக் காட்டினான். எனக்குப் புரியவில்லை. எல்லாரும் நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்கள்.
பையன் இன்னும் கையை நீட்டிக் காண்பிக்க நான் அதைப் பிடித்தேன் மென்மையாக இருந்தது. பையன் சட்டென்று இன்னொரு கையால் அதைப்பிடித்து, நான் பிடித்துக் கொண்டிருக்கையிலேயே பாதியாகப் பிய்த்து அவன் வாயில் போட்டுக்கொண்டான். அவள் 'டேய் டேய்' என்று கலவரமாக அலற எனக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது. குழந்தைளே இப்படித்தான் என்று நினைத்துக்கொண்டேன்.
என் விரல்களில் இருந்தத் துண்டத்தை வாயில் போட்டுக்கொண்டேன். லேசாக உப்பாக வித்தியாசமான சுவையுடன் இருந்தது. 'ம் ம்' என்று சுவையை ஆமோதித்துத் தலையாட்ட அவள் பாத்திரத்திலிருந்து மூன்று 'வடை'களை எடுத்துத் தயக்கத்துடன் என்னிடம் நீட்ட பெற்றுக்கொண்டு நன்றி சொன்னேன். பையனை இழுத்துக்கொண்டு அவள் மறுபடியும் கோவிலினுள் புக, பையன் எண்ணைக் கையாட்டி 'பை பை' சொன்னான்.
வடையில் மிளகை விதைத்தது போல ஆங்காங்கே இருந்தது. உப்பும் காரமும் சேர்ந்து வித்தியாசமான சுவைதான். நடுவிலிருந்த ஓட்டையில் விரலை நுழைத்து உயர்த்தினேன். இதே பாவத்தில் சுவற்றில் ஒரு கடவுளின் படத்தை வரைந்திருக்கிறார்கள். கடவுள் விரலில் வடையை நுழைத்துக்கொண்டு உயர்த்திக் காட்டுவது போல - ஏகமான ஆபரணங்களுடன். அவர்கள் நம்பிக்கை சுவாரஸ்யமானது. ஆனால் பல உருவங்களை வழிபடுவது புரியவில்லை. கண்ணுக்குத் தெரியாத இறையை ஏன் உருவகித்துக் கொள்கிறார்கள் என்றும் புரியவில்லை. அவர்கள் வழி அது. நம்பிக்கை அது. உலகில்தான் மனிதர்களுக்கு எத்தனை நம்பிக்கைகள். 'அல்லாஹ்' என்று முனகிக்கொண்டேன். என் தந்தை மும்பைக்குத் தோணியில் போயிருக்கிறார். ஆனால் திரவிய வியாபாரத்தில் போட்டி அதிகமாகிவிட இருந்த குதிரைகளையும் விற்றுவிட்டுச் சமாளித்து பிறகு நொடித்துப் போனார்.
ஆயிற்று மணி ஒன்பது. என் விரல்களிலும் வாயிலும் எண்ணை இன்னும் மிச்சமிருந்தது. கதவுகளைப் பூட்டிக்கொண்டு அரவமடங்கிய தெருவில் மெதுவாக நடந்து சென்றேன். 'அஸ்ஸலாமு அலேகும்' என்ற குரல்களுக்கு பதில் வணக்கம் தெரிவித்துக்கொண்டு நடந்து சென்று வீட்டையடைந்தேன். இரவுத் தொழுகையை முடித்துவிட்டுத் தூங்கவேண்டும்.
என்னவோ சுல்தானைப் பற்றிய நினைவு வந்தது. முப்பது வருடங்களில் மஸ்கட்தான் எப்படி மாறிப்போனது என்று நினைத்துக் கொண்டேன். அவரது தந்தை காலமே வேறு. எழுபதுகளில் இவர் வந்ததற்குப் பின்பு எல்லாமே அசுர வேகத்தில் மாறிற்று. இந்தக் கோவில் வந்து சில வருடங்களாகிறது. இன்னொரு கோவில் தார்ஸேத்தில் இருக்கிறதாம். எதிரேயே கிறிஸ்தவக் கோவிலும் கட்டியிருக்கிறார்கள்.
வீட்டினுள் மங்கலாக ஒரேயொரு பல்பு மட்டும் எரிய சுஹைலா படுத்திருந்தாள். நான் நுழைவதைப் பார்த்து எழுந்து இருமினாள். நல்ல கபம் கட்டியிருக்கிறது. கபத்திற்கு மிளகு நல்லது. சராய் பையிலிருந்து பொட்டலத்தை எடுத்துப் பிரித்து அவளிடம் நீட்டினேன். 'என்ன இது?' என அவள் வினவினாள்.
தரையில் அமர்ந்துகொண்டு சொன்னேன் 'ஹிந்த்களின் அனுமான் வடை. தின்னு'.
உறங்கச் சென்றேன். அல்லா எப்போது அழைத்துக்கொள்வாரோ தெரியவில்லை. உடல் படுத்துகிறது. நாவில் வடையின் வாசனை இன்னும் மிச்சமிருந்தது. சுஹைலா இருமுவது கேட்டது.
***
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நல்லா இருந்தது சுந்தர். உங்கள் கதைகளில் சூழ்நிலைகளை நல்லா விவரிக்கிறீங்க. அது புடிச்சிருக்கு..
கதைக் களன் மஸ்கட் என்பதையும்.. உட்கார்ந்திருந்தவர் ஒரு பெரியவர் என்பதையும் இன்னும் ஆரம்பத்திலேயே கோடி காட்டியிருக்கலாம்.. நடுவில் 'ரியால்' வரும்போது சவுதியோ-ன்னு ஒரு சந்தேகம் வந்தது.. சவுதியில்தான் கோயில் கிடையாதே..!
கோடை விடுமுறையில் நாங்கள் பசங்கள் எல்லாரும் கோயில் வாசலில் அல்லது குளத்தங்கரையில் அல்லது காவிரிக் கரையில் கருங்கற் படிகளில் உட்கார்ந்து கதைகள் பல பேசியதுண்டு...
அப்புறம் 'சங்கராபரணம் பாடல்களுக்கு இன்னும் மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை போல இருக்கிறதே..'
அன்புடன்,
சீமாச்சு...
விவரணைகள் மிக அழகாக வெளிப்படித்தியிருக்கிறீர்கள் சுந்தர்!
முதலில் கதை புரியாவிட்டாலும்.போக போக புரிந்தது!
மாற்றுமதத்தாருக்கு எழும் அசாதாரண சந்தேகம் எனக்குள்ளும்
எழுந்திருக்கிறது இந்த கதையில் தாத்தாவுக்கு வருவது போன்று.
அதையெல்லாம் யாரிடமும் கேட்டுக்கொண்டதில்லை. இறையை
விவாத பொருளாக்க விரும்பாமையே காரணம்.
அன்புடன்
தம்பி
நன்றி சீமாச்சு. கடகடன்னு எழுதிப் போட்டது - இன்னும் திருத்திப் போட்டிருக்கலாம்னு இப்பத் தோணுது.
//'சங்கராபரணம் பாடல்களுக்கு இன்னும் மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை போல இருக்கிறதே..'//
ஒரு தெலுங்கு நண்பர் - பாலு குழுமத்தின் உறுப்பினர் - தயவில் கிடைத்துவிட்டது. விரைவில் பதிகிறேன். உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
நன்றி.
வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி தம்பி.
நான் எழுதுவதில் கற்பனையின் சதவீதத்தைவிட அனுபவத்தின் சதவீதமே அதிகம் (90% க்கும் மேல்). கதை என்று குறிவைத்து எதையும் எழுதுவதில்லை என்பதால் விவரணைகள் நிரம்பியிருக்கும். இதுவே என் பலவீனமும் கூட.
மறுபடி வாருங்கள்.
கதை மிக நன்றாக இருந்தது சுந்தர்
Post a Comment