Thursday, February 22, 2007

துக்ளக்கா சோ? # 1

Image and video hosting by TinyPic
பல வருடங்களாக துக்ளக்கை வாசித்து வந்தாலும் அவர் சொல்வது சரியா, தவறா, என்றெல்லாம் சிந்தனையைச் செலுத்தியதில்லை. ஆனால் சொல்ல நினைத்ததை தனக்கேயுரித்தான பாணியில் வெளிப்படுத்தும் சோ -வை ஒரு வாசகனாகப் பிடிக்கும். ஆடையில் ஊடாடும் நூலைப்போல அவரது எழுத்தின் ஆதார இழையாக இருக்கும் நையாண்டி மிகவும் பிடிக்கும். வாசகனாக அவர் கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொள்வதும், புனைவு என்று புன்சிரித்துப் போவதும் என்னிஷ்டம்.

Image and video hosting by TinyPic
இப்பதிவின் நோக்கம் நான் நம்புவதை ஆதரித்து எழுதவோ மறுப்பதை விமர்சிப்பதோ அல்ல. முதலில் சோ -வின் நெடுநாள் வாசகன் என்ற அடையாளத்தைக் குறிப்பிடவேண்டுமா என்பதையே நீண்டநேரம் யோசித்தேன். எழுத்தாளருடைய சாயல் அவரது தீவிர வாசகர்களிடையே லேசாகவாவது பிரதிபலிக்கும். அந்த வகையில் சோ -வின் சாயலை என் தலை இன்னும் லேசாகக்கூடப் பிரதிபலிக்கவில்லை என்றாலும் அவரது வாசகன் என்ற அடையாளத்தைக் குறிப்பிடுவதில் தவறில்லை என்று தோன்றிய எண்ணத்தை இப்போது வெளிப்படுத்திக்கொண்டிருப்பதில் காணலாம்.

"ஆஹா இவனும் சோ -வோட ஆளா?" என்று தலைதெறிக்க ஓடிவந்து என்னிடம் குடுமியையும் முப்புரி நூலையும் தேடாமல், சொல்லப்பட்ட கருத்துகளில் மட்டும் கவனம் செலுத்தி அதற்குத் தொடர்பான விஷயங்களை மட்டும் பேசுமாறு வலைப்பதிவு கும்மியடிப்பாளர்கள் சங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

துக்ளக் 37-ஆம் ஆண்டுவிழாவின் நிறைவுரை ஆற்றிய சோ குறிப்பிட்ட கருத்துகளை இங்கே வெட்டி ஒட்டியிருக்கிறேன் (நன்றி. துக்ளக்.காம்). அவரது பேச்சைக் கேட்டதில்லை. ஆனால் இதைப் படிக்கும்போது அவர் நல்லதொரு பேச்சாளராக இருக்கவேண்டும். ஏன் இப்படி துக்ளக்கோடு தனது எல்லைகளைக் குறுக்கிக்கொண்டுவிட்டார் என்று அடிக்கடி தோன்றும். தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு செய்த நற்பணிகளுக்கு முன்பு துக்ளக்கில் கணக்கு காட்டியதைப் படித்திருக்கிறேன். நிறைய கருத்துகளைச் சொல்வதோடு நிற்காமல் மக்கள் பிரதிநிதியாக வந்து அதிகாரத்தைப் பயன்படுத்தி இன்னும் நல்லது செய்யலாமே என்றும் தோன்றும். ஆனால் இத்தனை வருட அரசியல் சதுரங்க விளையாட்டுப் போதையிலிருந்து - ஒரு செளகர்யமான அந்த நிலையிலிருந்து - அவரால் மீண்டு வெளியே வரமுடியவில்லை என்றும் தோன்றுகிறது. "அரசியல் சாணக்கியனாகவோ" அல்லது "அரசியல் விதூஷகனாகவோ" காலந்தள்ள முடிவுசெய்துவிட்டதாகக் தோன்றுகிறது. அவருக்குத் துக்ளக் என்ற பிம்பமே போதுமானதாக இருக்கிறது போலத் தோன்றுகிறது.

Image and video hosting by TinyPic
***

(ஆசிரியர் தனது நிறைவுரையை தொடங்கும் சமயத்தில், வாசகர் ஒருவர் ஏதோ குரல் எழுப்பினார். அதே சமயம் "துக்ளக்' நிருபர் ரமேஷ், ஆசிரியரிடம் ரங்காச்சாரியை அறிமுகப்படுத்துமாறு கூறினார்.)

சோ :

அங்கிருந்து (அரங்கத்திலிருந்து) நீங்கள் ஏதோ பேசுகிறீர்கள். இங்கே இவர் (ரமேஷ்) அப்போதிலிருந்தே என்னிடம் எதையோ சொல்லிக் கொண்டே இருக்கிறார். நான் என்ன செய்வேன்? பெரியார் ஒரு காதிலேயும், அண்ணா ஒரு காதிலேயும் பேசுகிற மாதிரி இருக்கிறது எனக்கு. எனக்கு இதுவே தாங்க முடியவில்லை. அவர் (கலைஞர்) எப்படித்தான் சமாளிக்கிறாரோ? (அரங்கத்தில் இருப்பவரைப் பார்த்து) நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதும் புரியவில்லை; இவர் என்ன சொல்கிறார் என்பதும் புரியவில்லை. இரண்டு பேரும் ஒரே சமயத்தில் பேசுகிறீர்கள். அவரிடம் (கலைஞரிடம்) பெரியார் ஒரு பக்கம் "பொங்கி எழு' என்று கூறுவாராம். இன்னொரு பக்கம் அண்ணா, "பொறுமையாக இரு' என்பாராம். இதில் எது காதில் விழும்? "பொறுமையாக பொங்கி எழு' என்று காதில் விழுமா? "பொங்கி பொறுமையாக இரு' என்று விழுமா? அதுதான் தெரியவில்லை. அதனால்தான் ராமதாஸ் மீது பொங்குகிற மாதிரி வருகிறார். பிறகு பொறுமையாக இருந்து விடுகிறார்.

என்னென்னவோ சொல்கிறார். விநோதமாக இருக்கிறது. இவர் (ரமேஷ்) என்னை விடப் போவதில்லை. பெரியார் காது இது. இதில் வந்து அவர் "ரங்காச்சாரியை அறிமுகப்படுத்த விட்டு விட்டேன்' என்கிறார். அதைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார். "ரங்காச்சாரி... ரங்காச்சாரி...' அவர் என் நண்பர். அவர் வரத்தான் வருவார். வரட்டுமே... வந்து விட்டுப் போனால் என்ன இப்போது? என்ன இருந்தாலும் அவர் வருவார். என்னவோ இரண்டு எம்.பி.க்கள் என் பக்கம் வந்துவிட்ட மாதிரி அல்லவா அமர்க்களம் செய்கிறார், இந்த ரமேஷ்! என்னவோ இவர்தான் ஆற்காடு வீராசாமி மாதிரியும், நான்தான் கலைஞர் மாதிரியும் "வந்துட்டாங்க... வந்துட்டாங்க..' என்றால்..?

தி.மு.க.விற்கு ஒரு சிலர் போகிறார்கள் என்றால் அதில் அர்த்தம் இருக்கிறது. அங்கெல்லாம் எம்.பி.க்கள் போவார்கள். என்கிட்டேயா வருவார்கள்? ஆனால் அங்கே போக சில நிபந்தனைகள் உண்டு. "மானத்தை விட்டு விட வேண்டும். வைகோ மீது இருக்கிற அபிமானத்தை விட்டுவிட வேண்டும். தனியாக வர வேண்டும். அப்போது வந்து உள்ளே சேர்ந்து விட்டால், அதன் பிறகு ஜாலிதான். எல்லாம் கிடைக்கும். பதவிகள் கிடைக்கும். மந்திரியாகலாம். ஜனாதிபதியாகலாம். உள்ளே வந்து சேர்ந்தால் போதும். என்ன வேண்டுமானாலும் ஆகலாம்.

"மானாபிமானம் விட்டு, தானாகி நின்றவர்க்கு, சேனாதிபதி போல ஞானாதிபதி உண்டு! பாருமே! கட்டிக் காருமே! உள்ளே சேருமே! அது போறுமே! செம்மங்குடி சீனிவாச ஐயர் சாகும்போது, "சோ நீதான் கர்நாடக சங்கீதத்தைக் காப்பாற்ற வேண்டும்' என்று என்னிடம் சொல்லி விட்டுப் போனார். என்ன... ஜோக் அடிச்ச மாதிரி சிரிக்கிறீர்கள்? அவர், கலைஞர் யார் யார் செத்துப் போனார்களோ, எல்லார் லிஸ்ட்டையும் போட்டு – அவர் அப்படிச் சொன்னார், இவர் இப்படிச் சொன்னார் என்கிறார். அதையெல்லாம் சீரியஸாகக் கேட்டுக் கொள்கிறீர்கள். நான் சொன்னால் சிரிக்கிறீர்கள்.

காய்தே மில்லத் சாகும் தறுவாயில், கலைஞரிடம் "மைனாரிட்டி மக்களை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்' என்றார். காமராஜ் சாகும் தறுவாயில் "தேசம் போச்சே... தேசம் போச்சே... நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்' என்றார். ராஜீவ் காந்தி இறப்பதற்கு முன்னால், "நீங்கள்தான் இலங்கை தமிழர் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும்' என்றார்... செத்துப் போறதுக்கு முன்பு எல்லோரும் எப்படியாவது இவர் தலை மீது பாரத்தை வைத்து விட்டுத்தான் போவார்கள். உயிரோடு இருக்கிறவர் சொன்னார் என்று எதையும் சொல்வது கிடையாது. அது வைகோதான். பைத்தியம் மாதிரி, "மன்மோகன் சிங் சொன்னார்' என்று சொல்ல வேண்டியது. செத்துப் போனவர்கள் என்று சொன்னால், சொன்னது சொன்னதுதான். செம்மங்குடி சீனிவாச ஐயர் என்னிடம் "கர்நாடக சங்கீதத்தைக் காப்பாற்ற' சொன்ன மாதிரிதான் அதுவும். உயிரோடு இருப்பரைச் சொன்னால், பிரச்சனை வருகிறது.

யாராவது செத்துப் போனால் ரங்காச்சாரி விட மாட்டார். இவரோடு துக்கம் விசாரிக்க ஒரு வீட்டுக்குப் போகிற மாதிரி மடத்தனம் வேறு எதுவும் கிடையாது. அங்கே போனால் "கடைசியா என்ன சொன்னான்?' என்று கேட்பார். இதெல்லாம் வேணுமா? கடைசியா என்னத்தையோ சொல்லி விட்டுப் போகிறான். இவர் என்ன கலைஞரா? கடைசியா பொறுப்பை சுமந்து கொண்டு போகப் போகிறாரா?. ஒரு நண்பர் இறந்து விட்டார். அவர் வீட்டுக்குப் போய் இருந்தோம். "கடைசியா என்ன சொன்னான்?' என்று கேட்டார் ரங்காச்சாரி. அவருடைய மனைவி திரும்பிப் பார்த்து விட்டு பேசாமல் இருந்து விட்டார். இவரோ (ரங்காச்சாரி) அதைத் தெரிந்து கொள்ளாமல் விட மாட்டார். "கடைசியா என்ன சொன்னான்?'.

எனக்கா என்ன செய்யலாம், எழுந்து ஓடலாமா – என்று யோசனை! அங்கே இருந்து எப்படி ஓடறது? ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிற இடம். இவர் இப்படிச் செய்கிறாரே? இவர் இந்த மாதிரி இவ்வளவு பெரிய கலைஞரா இருக்கிறாரே? மீண்டும் "கடைசியா என்ன சொன்னார்...?'.... இப்படி ஐந்து, ஆறு முறை கேட்டு விட்டார். ஆறாவது முறையோ, ஏழாவது முறையோ, கேட்கும்பொழுது அந்த அம்மா திரும்பிப் பார்த்தார். "ஒரு பாட்டில் பிராந்தி கேட்டார்' என்றார். தேவைதானா இது? கடைசியில் ஒருநாள் கலைஞருக்கு இந்த மாதிரி ஆகிவிடப் போகிறது! யாராவது ஒருவர் சாவதற்கு முன்னால், "கலைஞரே! நீங்கள் அரசியலை விட்டு விலகி விடுங்கள்' என்று சொல்லப் போகிறார்.

இப்பொழுது எந்தத் தேர்தலும் நடக்க இருக்கவில்லை. தேர்தல் காலத்தில்தான் நமக்கு அரசியலில் மதிப்பீடு செய்கிற வழக்கம் வரும். தேர்தல் இல்லாத நேரங்களில், நாம் அப்படி அப்படியே அதை ஏற்றுக் கொண்டு சென்று கொண்டிருப்போம். அவ்வப்பொழுது ஒரு சின்ன ரியாக்ஷன். ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு சின்ன ரியாக்ஷன். அதோடு போய்விடுவோம். தேர்தல் வந்தால்தான் இந்த கட்சி நல்லதா, அந்தக் கட்சி நல்லதா என்ற பார்வையெல்லாம் நமக்கு வருகிறது.


இல்லை என்றால் என்ன நடக்கிறது? விலைவாசி உயர்ந்தவுடன், "இந்த அரசாங்கம் போக வேண்டும்' என்போம். அடுத்த நாள் ஒரு பேப்பரில், தேசிய வருமானம் 0.2 சதவிகிதம் ஏறியிருக்கிறது என்று படிப்போம். "பரவாயில்லை. அரசாங்கத்தை நன்றாகத்தான் நடத்துகிறார்கள்' என்று நினைப்போம். தேசிய வருமானம் என்ன என்பதும் தெரியாது. அது எவ்வளவு இருந்தது என்பதும் தெரியாது. இந்த 0.2 சதவிகிதம் என்ன என்பதும் புரியாது. ஆனால் அரசாங்கம் நன்றாகத்தான் செயல்படுகிறது போல் இருக்கிறது என்று நினைத்துக் கொள்வோம். அத்துடன் விட்டு விடுவோம். இதெல்லாம் கிரிக்கெட்டை ரசிக்கிற மாதிரி ஆகி விட்டது. கிரிக்கெட்டில் என்ன செய்கிறோம்? ஒருவர் செஞ்சுரி அடித்து விட்டால், அவரை மாதிரி உண்டா என்கிறோம். உலகத்திலேயே அவரை மாதிரி ஆட்டக்காரர் கிடையாது என்போம்.

"அவர் எப்படி விளையாடினார்? இதற்கு முன்னால் அவருக்கு எவ்வளவு "சான்ஸ்' கிட்டியது? எத்தனை பௌன்ஸர்களை எதிர் கொண்டார்? ஸ்லிப்பில் எத்தனை கேட்ச் விட்டார்? இவையெல்லாம் அனாவசியம். செஞ்சுரி அடித்தார். சரி. அவரே அடுத்த இரண்டு ஆட்டங்களில் சரியாக ஸ்கோர் செய்யவில்லை என்றால், "சே.... இவரை சேர்த்ததே தவறு. இவரை தூக்கிவிட வேண்டும்' என்போம்.

இந்த மாதிரி அரசியலை அணுகக் கூடாது. சில பந்து வீச்சாளர்களுக்கு "ஃபுல் டாஸி'ல் கூட விக்கெட் விழுந்து விடுகிறது. பவுண்டிரியில் பந்தைப் பிடித்து அவுட் ஆகிறார்கள். அதில் நான்கு விக்கெட் வந்து விடுகிறது. உடனே இவரைப் போல் பௌலர் உண்டா என்கிறோம். இந்த மாதிரி அரசியலை அணுகக் கூடாது.

அவ்வப்பொழுது அரசியலை கணித்துக் கொண்டே இருக்க வேண்டும். எப்போதும் நம் கண்காணிப்பை நாம் தளர விடக் கூடாது. தொடர்ந்து கண்காணிப்பதுதான் ஜனநாயகத்தின் விலை. அந்த மாதிரி இந்த மத்திய அரசைப் பற்றி பார்க்கும்பொழுது, பொருளாதார நிர்வாகம் பெரும்பாலும் சரியாகத்தான் இருக்கிறது. எந்த கூட்டணி அரசாங்கமாக இருந்தாலும் பின்னால் இழுப்பவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். இந்த அரசாங்கத்திலும் அப்படி இருக்கிறார்கள். கம்யூனிஸ்ட்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். மேற்கு வங்காளத்தைத் தவிர வேறு எல்லா இடங்களிலும் அவர்களுக்கு கம்யூனிஸம் வேண்டும்.

மேற்கு வங்காளத்தில் மட்டும் கேபிடலிஸம் இருக்க வேண்டும். "அங்கே நிலத்தை அரசு கையகப்படுத்தலாம். நிலத்தை டாடாவுக்குக் கொடுக்கலாம். இன்னும் 20,000 ஏக்கர் எடுத்து சிறப்புப் பொருளாõர மண்டலத்திற்குக் கொடுக்கலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். வேறு இடத்தில் அதைச் செய்தால், அது பாட்டாளி மக்களுக்குத் துரோகம். அமெரிக்கக் கைக்கூலி, அது, இது எல்லாம் வந்து விடும். அவர்கள் ஒரு பக்கம். இன்னும் சில பேர் அங்கே உள்ளே இருந்து கொண்டு தகராறு.

இந்த மாதிரியெல்லாம் இருப்பதால், பொருளாதார விஷயங்களில் கொஞ்சம் கட்டுப்பாடுடன்தான் இந்த அரசாங்கம் செயல்பட வேண்டியிருக்கிறது. அப்படி
இருந்தும் கூட மன்மோகன் சிங்கும், சிதம்பரமும் சேர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை திறம்படத்தான் நிர்வகித்து வருகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

இப்பொழுது கூட்டணி அரசை சமாளிக்க வேண்டிய நிலை வந்து விட்டது. கூட்டணி அரசை எப்படி தளுக்காக சமாளிப்பது என்ற நிலை. தளுக்காக சமாளிப்பது என்றால் என்ன? கேட்கிறவர்களுக்கெல்லாம் அடி பணிந்து கொண்டிருக்க வேண்டும். கலைஞர் முதலில் என்ன செய்தார்? இன்ன இன்ன அமைச்சரக பதவிகள் கொடுத்தால் வருகிறோம். இல்லை என்றால் வர மாட்டோம் என்று சொன்னார். அதை முல்லைப் பெரியாறுக்கு அவர் சொல்லவில்லை. அமைச்சரக பதவிகளுக்குத்தான் அதைச் சொன்னார். அதற்கு மத்திய அரசு அடிபணிய வேண்டி வந்தது. இப்படி சொல்வதை எல்லாம் கேட்டு, தளுக்காக சமாளித்துக் கொண்டு, போக வேண்டி இருக்கிறது. அதையும் மன்மோகன் சிங் செய்து கொண்டிருக்கிறார். மன்மோகன் சிங்கை பிரதமர் என்று சொன்னால், யாருக்காவது கோபம் வருமா என்று தெரியவில்லை. ஆனால் நான் சோனியா காந்தியின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடவில்லை. அவருடைய அனுமதியுடன் மன்மோகன் சிங்கை "பிரதமர்' என்று சொல்கிறேன். ஆனால் ஒரு பலவீனமான அரசாங்கம் இது. இந்த அரசு செய்திருக்கிற தவறுகள் ஏராளம்.

ஜனநாயக ஆட்சி முறை என்று பார்த்தால், பீஹாரிலும், ஜார்க்கண்டிலும் இவர்கள் செய்த அட்டூழியம் கொஞ்சம் நஞ்சமல்ல. போன ஆண்டு விழாவிலேயே அதைப் பற்றி பேசி இருக்கிறேன். யாருக்கு பெரும்பான்மை இருக்கிறதோ, அவர்கள் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக என்னென்னவோ செய்தார்கள். நீதிமன்றங்கள் குறுக்கிட வேண்டியதாகி விட்டது. இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

சிபுசோரன் ஒரு கொலைகாரப் பேர்வழி என்று நீதிமன்றம் சொல்லி விட்டது. அவர் இத்தனை நாள் மத்திய அமைச்சரவையில் இருந்திருக்கிறார். அப்பொழுதே அவர் மீது கொலை வழக்கு இருந்தது. அவர் தலைமறைவாக போய்விட்டார். மத்திய அமைச்சர் ஒருவர் தலைமறைவாகச் சென்றது இதுதான் முதல் முறை. நியாயமாக எல்லா
அரசியல்வாதிகளுமே தலைமறைவாகலாம்; தவறில்லை. ஆனால் இவர் தலைமறைவானார். அப்பொழுதும் மத்திய அமைச்சராகவே தொடர்ந்தார். என்னவென்றால், இது கூட்டணி தர்மம். அவரைத் தவிர இன்னும் சில பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்றைக்கு வழக்கு நடந்து முடியுமோ தெரியாது. என்றைக்கு தண்டனை கிடைக்குமோ தெரியாது. இந்த மாதிரி குற்ற சக்திகளை ஒரு பக்கம் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

க்வோட்ரோச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். பிரிட்டிஷ் அரசும் ஒப்புக் கொண்டு, முடக்கி வைக்கப்பட்டிருந்த அவருடைய வங்கிக் கணக்கை நமது அரசாங்கம் விடுவித்தது. அந்தக் கணக்கில் இருந்த பணத்தை அவர் எடுத்துக் கொண்டு விட்டார். அவர் சோனியா காந்தியின் குடும்பத்தினருக்கு வேண்டியவர் என்பதைத் தவிர, இதற்கு வேறு எந்தக் காரணமும் இருந்திருக்க முடியாது. இந்த அளவுக்கு குற்றவாளிகளுக்கும், இந்த நாட்டுக்கு இழைக்கப்படும் துரோகத்திற்கும், இந்த அரசு ஊக்கமளித்தது மிகவும் வேதனையான விஷயம்.

ஆனால் இந்த க்வாட்ரோச்சி விவகாரம் வந்த போது என்ன சொன்னார்கள் – ஸி.பி.ஐ. அந்த மாதிரி செய்து விட்டது – எங்களுக்குத் தெரியாது என்றது அரசாங்கம். அதாவது ஸி.பி.ஐ. அருகிலேயே இவர்கள் போகாதது மாதிரியும், ஸி.பி.ஐ. என்ன செய்தாலும் இவர்களுக்கு சம்பந்தம் இல்லாதது மாதிரியும் பேசினார்கள். அத்வானிக்கு எதிரான வழக்கில் சாரமில்லை என்பதால் ஸி.பி.ஐ. அப்பீல் செய்யாத போது, "ஏன் அப்பீல் செய்யவில்லை?' என்று அரசாங்கம் தாக்கீது பிறப்பித்தது. அப்பொழுது ஸி.பி.ஐ.யை அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். அதாவது நேர்மை இல்லை.

மாயாவதியை எடுத்துக் கொள்வோம். நடத்து விசாரணையை என்று நீதிமன்றம் சொல்ல வேண்டியிருக்கிறது. வழக்கைப் போடு என்று கோர்ட் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனென்றால் உத்திரப் பிரதேசத்தில் கூட்டணி வருமோ, என்னவோ? நாளை அரசுக்கு ஆதரவு தேவைப்படலாம். ஆகையால் மாயாவதி மீது வழக்கு நடக்கக் கூடாது. இவ்வளவு நேர்மையற்ற முறையில் ஒரு அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது. இதைத் தவிர பார்த்தோமென்றால், குஜராத்தில் நரேந்திர மோடிதான் மிகப் பெரிய கொலைகாரர் என்று எப்படியாவது நிரூபிக்க வேண்டும் – என்று இந்த அரசுக்கு இருக்கிற ஆதங்கம் சொல்லி முடியாது. பெஸ்ட் பேக்கரி வழக்கு ஒன்றும் இல்லாமல் ஆகி விட்டது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் – "ரயிலின் உள்ளே இருந்தவர்களே, எங்கிருந்தோ பெட்ரோலைக் கொண்டு வந்து தங்கள் மீது ஊற்றிக் கொண்டு எல்லோரும் செத்தார்கள்' என்று நிரூபிப்பதற்காக ஒரு கமிஷன்.

"அது செல்லுபடியாகாது. அந்த கமிஷனை நியமித்ததே பைத்தியக்காரத்தனம்' என்று நீதிமன்றமே கூறி விட்டது. எப்படியாவது நரேந்திர மோடியின் பெயரைக் கெடுக்க முடியாதா என்று அந்த அலை அலைகிறார்கள். எதற்காக? நரேந்திர மோடிக்கு குஜராத்தில் அவ்வளவு செல்வாக்கு ஓங்கி இருக்கிறது.

வெளிநாட்டு இந்தியர்கள் அங்கே முதலீடு செய்வதற்காக எப்படி பணத்தைக் கொட்டுகிறார்கள் என்பது, இன்றைய பத்திரிகையில் கூட வந்திருக்கிறது. குஜராத்தில் பணத்தைப் போடக் கூடாது என்பதற்காக என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள். காங்கிரஸும், மத்திய அரசும், பத்திரிகைகளும், டெலிவிஷன் சேனல்களும் முனைந்து எவ்வளவோ செய்தும் கூட, அவர் அதையும் தாண்டி மேலே நிற்கிறார். அவருடைய நிர்வாகத் திறன் அப்படிப்பட்டதாக இருந்திருக்கிறது. ஒரு ஊழல் குற்றச்சாட்டு அவர் மீது கிடையாது.

அந்த அரசை எப்படியாவது தொலைத்துக் கட்ட வேண்டும். மற்ற மாநிலங்களுக்கெல்லாம் உதாரணமாக ஒரு மாநில அரசு நடக்கிறதே – எல்லா மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக இருக்கும்போல இருக்கிறதே – இதை ஊக்குவிப்போம் என்று ஒரு மத்திய அரசு நினைத்தால், அது அரசு. அந்த மாதிரி இல்லாமல், இப்படி நன்றாக வளர்ந்து விடும் போல் இருக்கிறதே என்று நினைத்து, அதை கெடுக்க வேண்டும் என்று நினைத்தால், நடப்பது அரசே அல்ல. அது ஒரு துரோகம்.

இங்கே முல்லைப் பெரியாறு விஷயம். மத்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்கிறதா? "பேசுங்கள்... பேசுங்கள்...' என்று மத்திய அரசு சொல்கிறது. வேறு எதுவுமே சொல்லவில்லை. மத்திய அரசு தலையிடுவதற்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் மத்திய அரசு தலையிட மாட்டேன் என்கிறது. ஏனென்றால் கம்யூனிஸ்ட் ஆதரவு போய்விடும். அந்த தைரியமும் கிடையாது. அதுவும் கூட்டணி தர்மத்தில் வருகிறது. சரி, கலைஞராவது "நீங்கள் முல்லை பெரியாறில் உதவி செய்யவில்லை என்றால், நான் ஆதரவை வாபஸ் வாங்குவேன்; நான் மந்திரி சபையில் இருக்க மாட்டேன்' என்று சொன்னாரா? கிடையாது. அதை நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் விஷயத்தில் சொன்னார். இதற்கு அவர் சொல்லவில்லை.

ஆனால் அதைப் பற்றி சொன்னால் அவருக்குக் கோபம் வரும். ஏனென்றால் பெட்ரோல் விலை உயர்ந்தபொழுது ஒரு நிருபர் கேட்டார். "நீங்கள் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் விஷயத்தில் ஆதரவை வாபஸ் வாங்கப் போகிறேன் என்ற அளவுக்குப் பேசினீர்களே! இதற்கு ஏன் சொல்லவில்லை?' என்றார். "வர்றியா? நீயும் நானும் தீக்குளிக்கலாம், வர்றியா?' என்று கேட்டார். அதனால் நான் ஏதாவது முல்லைப் பெரியாறு என்று பேசப் போக, "வர்றியா? நீயும் நானும் அந்த டேம்லேர்ந்து கீழே குதிக்கலாம். வர்றியா?' என்று கேட்டால் என்ன ஆவது? அவருக்கு அந்த அளவிற்குக் கோபம் வந்தாலும் வரும்.

மேலும் மாநிலங்களை எப்படி அழுத்துகிறார்கள் என்று பாருங்கள். தமிழ்நாட்டையே எடுத்துக் கொள்ளுங்கள். ஜெயலலிதா ஆட்சி இருந்தவரையில், கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தில், உதவியே கிடையாது. தடங்கல்தான். கடைசியாக சுற்றுப்புறச் சூழல் என்று கூறிவிட்டார்கள். என்ன அது என்று பார்த்தால் மீனுக்கெல்லாம் ஆபத்து வந்துவிடும் என்று சொன்னார்கள். கடல்நீரை வெளியில் எடுத்து, அதில் உள்ள உப்புத் தன்மையை அகற்ற வேண்டுமாம். அதில் எப்படி மீனெல்லாம் செத்துப் போகும் என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் இவர்கள் கணக்குப்படி மீனெல்லாம் செத்துப் போய் விடும். ஒருவேளை கடலே வற்றிப் போய் விடும் போல் இருக்கிறது – என்று அதை நிறுத்தினார்கள். பைகாரா மின்நிலையம். அதை விரிவுபடுத்த வேண்டும் என்றால் சுற்றுப்புறச் சூழல். அதற்கு டி.ஆர். பாலு போன்றவர்களை மத்தியில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் எதுவாக இருந்தாலும் நிறுத்தி விடுகிறார்கள்.

ஆனால், அதே மாதிரி சேது சமுத்திரத்தில் ஆயிரம் ஆட்சேபனைகள் வந்து இருக்கின்றன. "அதற்கு சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு இருக்கிறது. மீன்கள் பெரிய அளவில் உயிரிழக்க நேரிடும். மீன்களே அந்தப் பகுதியில் இல்லாமல் போய் விடும். மேலும் பொருளாதார ரீதியில் பெரிய பயன் எதுவும் இல்லை. பலரும் இலங்கையைச் சுற்றிக் கொண்டு வரும் வழியைத்தான் விரும்புவார்களே தவிர, இதை விரும்ப மாட்டார்கள்' என்று நிறைய நிபுணர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து விட்டார்கள். ஆனாலும் அது தொடர்ந்து நடைபெறும்.

ஏனென்றால் அதில் நிறைய கான்ட்ராக்ட்கள் எல்லாம் வரும். பெரிய திட்டம். அங்கே ராமர் கட்டிய பாலம் சமுத்திரத்திற்கு அடியில் இருக்கிறது என்று – பா.ஜ.க.வோ, ஆர்.எஸ்.எஸ்.ஸோ, ஹிந்து முன்னணியோ அல்ல – நாஸாவே சொல்லி விட்டது. அதுவும் போய்விடும் போல் இருக்கிறது. ஆனால் இது இவர்கள் திட்டம் என்பதால், இவர்கள் ஆட்சி நடக்கும்போது நிறைய வாய்ப்பு கிடைக்கும் என்பதால், அதுவும் சரியாகப் போய்விட்டது. அங்கே சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு எதுவும் கிடையாது.

அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தை எடுத்துக் கொண்டால், அன்புமணி அதில் புகுந்து விளையாடி விட்டார். அந்த டாக்டர் வேணுகோபாலை உண்டு இல்லையென்று பார்த்துக் கொண்டிருந்தார். மத்திய அரசு அதில் எதுவும் செய்யவில்லை. பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. நடப்பது அனைத்தும் அநீதி என்று தெரியும். ஒரு டாக்டரின் பெயரைக் கெடுத்து, இழிவுபடுத்தி, ஹிம்ஸை செய்தார்கள். உலகிலேயே புகழ்பெற்ற சர்ஜன்களில் ஒருவர் என்று நான் கேள்விப்பட்டேன். அப்படி இருந்தவரை எவ்வளவு தூரம் மட்டம் தட்ட முடியுமோ, அவ்வளவு தூரம் மட்டம் தட்டி, அவரை ஹிம்ஸை செய்தார்கள். அதற்கும் இந்த மத்திய அரசு பேசாமல் இருந்தது. ஏனென்றால் அது கூட்டணி தர்மம்.

***

நன்றி: துக்ளக்.காம்

6 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நானும் ஓர் சோவின் ரசிகன் என்பதில் வெட்கப்படுவதில்லை. சில கருத்து வேறுபாடுகள் அவருடைய கருத்தில் குறிப்பாக ஈழத் தமிழர் பற்றிய கருத்தில் இருந்தபோதும்; ஆரம்பகாலத்தில் இருந்து வாசிக்கிறேன். எதிர் கருத்தைத்தான் படிக்கவேண்டுமென்பதால். இந்தப் பேச்சு நேற்றிரவு படித்தேன்.
யார் என்ன? சொன்னாலும் "சோ" விசயஞானம் மிக்கவர்.அதில் ஐயம் இல்லை.அவர் கிண்டல் நினைத்துச் சிரிக்கக் கூடியது.

Sundar Padmanaban said...

யோகன் பாரிஸ்.

நன்றி. ஏற்புடைய கருத்துகளோடு ஏற்க முடியாக் கருத்துகளையும் புரிந்துகொள்ளுதல் நல்ல அணுகுமுறை. நீங்கள் அதைக் கடைப்பிடிப்பதில் மகிழ்ச்சி.

dondu(#11168674346665545885) said...

ஒரு சக சோ ரசிகனுக்கு டோண்டு ராகவனின் பாராட்டுகள். நான் சோ அவர்கள் பற்றி எழுதியது இங்கே (8 posts).
http://dondu.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AF%8B

அன்புடன்,
டோண்டு ராகவன்

Sundar Padmanaban said...

டோண்டு ஸார். பின்னூட்டத்திற்கு நன்றி.

//ஒரு சக சோ ரசிகனுக்கு டோண்டு ராகவனின் பாராட்டுகள். நான் சோ அவர்கள் பற்றி எழுதியது இங்கே (8 posts).
http://dondu.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AF%8B
//

சோவுக்கு ரசிகனாக இருக்கறதுல உங்களுக்குச் 'சமீபத்துல' நான் வரவே முடியாது. :-)

உங்களோட பதிவுகளைத் தொடர்ந்து வாசிக்கறேன். சோம்பலினால் அடிக்கடி பின்னூட்டமிடறதில்லை. மன்னிச்சுக்குங்க.

Anonymous said...

//..மேற்கு வங்காளத்தில் மட்டும் கேபிடலிஸம் இருக்க வேண்டும். "அங்கே நிலத்தை அரசு கையகப்படுத்தலாம். நிலத்தை டாடாவுக்குக் கொடுக்கலாம். இன்னும் 20,000 ஏக்கர் எடுத்து சிறப்புப் பொருளாõர மண்டலத்திற்குக் கொடுக்கலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். வேறு இடத்தில் அதைச் செய்தால், அது பாட்டாளி மக்களுக்குத் துரோகம். அமெரிக்கக் கைக்கூலி, அது, இது எல்லாம் வந்து விடும். ...///

இது ஸ்ரீலங்கா/ஈழ பொதுவுடமை வாதிகளுக்கும் பொருந்தும். அமெரிக்கா இலவசமாக போர்க்கப்பல் கொடுத்தால் பல்லை இளித்து வாங்குவார்கள், புலிகளை அழிக்கத்தானே என்று. தமிழருக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்றால் போச்சு!!!!
அதிலும் நம்ம ஈழ மாற்றுக்கருத்தாளர் , பொதுவுடமை வாதிகள் ஒருபடி மேலே போய் "புலிகளுக்கு கழுகுகள் எச்சரிக்கை" என்று புழுகாங்கிதம் அடைவார்கள். ஆனால் ஈராக்கில் ஏகாதிபத்தியம் அட்டூழியம் என்பார்கள்!!!
இவர்களுக்கும் சோசலிசம் வேண்டும், ஈழத்தில். ஆனால் குந்தியிருந்து வலைபதிவதோ பிரான்ஸ், ஜேர்மனி, கனடா, இங்கிலாந்து!!!!!

//...இங்கே முல்லைப் பெரியாறு விஷயம். மத்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்கிறதா? "பேசுங்கள்... பேசுங்கள்...' என்று மத்திய அரசு சொல்கிறது. வேறு எதுவுமே சொல்லவில்லை. மத்திய அரசு தலையிடுவதற்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் மத்திய அரசு தலையிட மாட்டேன் என்கிறது. ஏனென்றால் கம்யூனிஸ்ட் ஆதரவு போய்விடும். அந்த தைரியமும் கிடையாது. அதுவும் கூட்டணி தர்மத்தில் வருகிறது....///

இங்கே ஈழ விஷயம். ஸ்ரீலங்கா அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்கிறதா? "பேசுங்கள்... பேசுங்கள்...' என்று இந்திய அரசு சொல்கிறது. வேறு எதுவுமே சொல்லவில்லை. ஆனால் இந்திய அரசு தலையிட மாட்டேன் என்கிறது. ஏனென்றால் ஸ்ரீலங்கா பாகிஸ்தான் சீனா பக்கம் போய்விடும் என்ற பயம்( அது நடந்துகொண்டுதானிருக்கிறது என்பது வேறு விடயம்). அதை சொல்லும் தைரியமும் கிடையாது. அதுவும் 'இறையாண்மை" தர்மத்தில் வருகிறது!!!!!!!
இதுதான் ஈழத்தமிழ் விடயத்தில் சோவின் வக்காலத்தும் கூட!!!!

ஓகை said...

//அவரது பேச்சைக் கேட்டதில்லை. ஆனால் இதைப் படிக்கும்போது அவர் நல்லதொரு பேச்சாளராக இருக்கவேண்டும்.//

துக்ளக் ஆண்டுவிழாவிற்கு மூன்று முறை சென்றிருக்கிறேன். சோ மிகச் சிறந்த பேச்சாளர். துக்ளக் ஆண்டுவிழா என்பதே ஒரு தனியான அனுபவம்.

இந்தப் பதிவுக்கு நன்றி.