Showing posts with label Travel. Show all posts
Showing posts with label Travel. Show all posts

Friday, December 28, 2012

கொல்லி மலை # 2


கொல்லி மலை -2

காற்றுகூட அடிக்கவில்லை. ஆக அந்த நூல்* அசைவது நிஜம்தான். ஆச்சரியம் தாங்காமல் சற்று குனிந்து கண், காது, மூக்கு என்று ஏதாவது தெரிகிறதா என்று பார்த்தேன். தலையெது வாலெதுவென்றே தெரியவில்லை. பசுவையும் ஸ்ரீநிவாஸனையும் கூவியழைக்க, ஸ்ரீநிவாஸன் சிறிய சுள்ளியால் அதை லாவி எடுத்து உயர்த்திப் பிடிக்க அது அதிகமாக நெளிய ஆரம்பிக்கவும் திரும்பக் கீழே விட்டுவிட்டார். “செவிட்டுப் பாம்பா இருக்கும்! காதுவழியா மூளைக்குள்ள போச்சுன்னா ஆள் காலி!” என்றதும் நான் பெரிதாக அடுத்த அடியை வைத்து அதைக் கடந்தேன். இது வரை பார்த்திராத வண்டுகள், பூச்சிகள், பட்டாம்பூச்சிகள், சிறு பறவைகள் என்று வனவுலகத்தின் அந்த வாசனை ரம்யமாக இருந்தது. எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும் பறவைகளின் கரைதல்கள் கூடுதல் புத்தணர்ச்சி. பொதுவாகவே மனிதன் புழங்காத பகுதிகள் நன்றாகத்தான் இருக்கின்றன.




ஆனாலும் ஆங்காங்கே பிளாஸ்டிக் குப்பைகள். பசு “இதையெல்லாம் சாப்ட்டுட்டு நெறய பிராணிங்க செத்துப்போய்டுதுங்க” என்று வருத்தப்பட்டுவிட்டு கவுண்டமணி செந்திலைத் திட்டுவது மாதிரி குப்பை போட்டவர்களைக் காற்றில் பார்த்துத் திட்டினான். யாராவது அவன் கண் முன்னால் போட்டிருந்தால் பிடித்துக் குழிக்குள் தள்ளிவிட்டாலும் விட்டிருப்பான்.

பொதுவாகவே  வளைந்து வளைந்து செல்வதாலும் மரங்களின் அடர்வினாலும் பாதையில் பத்திருபது அடிதூரம் வரைக்கும்தான் பார்க்க முடிந்தது.  சற்று தூரம் நடந்திருப்போம். பாதை கவட்டை மாதிரி இரண்டாகப் பிரிய பசுபதியும் ஸ்ரீநிவாஸனும் அந்தப் பாதையில் முதல்தடவை வருவதால் அவர்களுக்கும் எந்தப்பக்கம் போவதென்று தெரியவில்லை., பாதை பிரியும் முனையில் குத்துக்காலிட்டு தூக்குச்சட்டி, மஞ்சள் பை சகிதமாக ஒரு ஆள் உட்கார்ந்திருந்தார். டார்ட்டாய்ஸ் கொசுவர்த்திச் சுருள் மாதிரி மெலிதான புகையை பீடியிலிருந்து வெளியே செலுத்திக்கொண்டிருந்தார்.

“அண்ணே. இந்தப் பாதை எங்க போவுது?”

அவர் எழுந்து நின்றுகொண்டு கைகளை வீசி “இங்கிட்டுப் போனீங்கன்னா ஒத்தக்கடை. அங்கிட்டு களூர்!”.

“ஒத்தக்கடையா? அது மதுரைப் பக்கமாச்சே!” என்று முணுமுணுத்த என்னை பசு முறைத்தான். அந்த நபருக்கு நன்றிசொல்லி பசு கொடுத்த ரூபாயை வாங்க மறுத்தவரை மிகவும் வற்புறுத்திக் கொடுக்க ஏகமாகத் தயங்கி வாங்கிக்கொண்டார். இடப்புறப் பாதையில் சென்று உச்சியை அடைந்ததும் வலப்புறப் பாதை வழியாக இறங்குவது என்று முடிவாயிற்று. நாங்கள் பயணத்தைத் தொடர, மஞ்சள் பை நபரும் எங்களைத் தொடர்ந்தார். “நானும் அங்கிட்டுத்தேன் வாரேன்“. ஆங்காங்கே ஒரிரு அடி உயரத்திற்கு கூழாங்கற்கள் பிரமிடுகள் அமைப்பில் குவித்து வைத்திருந்ததைச் சுட்டிக்காட்டி கேட்டதற்கு ”மலையேர்றவங்க ஒரு அடையாளத்துக்கு வச்சிட்டுப் போறது” என்றார்கள்.

வறண்ட நாவினை லேசான நீரில் நனைத்து நனைத்து மலையேற்றத்தைத் தொடர்ந்தேன். தண்ணீர் நிறைய குடித்தால் நடக்க முடியாது. ஏற்கெனவே முதுகுப்பை வேறு மலையையே முதுகில் சுமப்பதைப் போன்று கனத்துக்கொண்டிருந்தது. காலையில் கிளம்புவதற்கு முன் “மூணு லிட்டர் தண்ணி போதுமா? பை ரொம்ப லைட்டா இருக்கே?” என்று கேட்டதற்கு ஸ்ரீநிவாஸன் “மேல ஏற ஏற போட்ருக்கற டவுசரோட வெயிட்டே தாங்கமுடியாதுங்க. எல்லாத்தையும் களட்டியெறிஞ்சுரலாம்போல கனக்கும்” என்றதை ரொம்ப அதீதப் படுத்திச் சொல்கிறார் என்று நினைத்தது மடத்தனம் என்பது புரிந்தது. “லேசா முன்னால சாஞ்சு ஏறுங்க. தள்ளாம இருக்கும்” என்றார். அவர்களிருவரும் ஏதோ வாக்கிங் போவது போல மூச்சிரைக்காமல் ஏறிக்கொண்டிருந்தார்கள். எனக்குத்தான் அது என்னவோ சொல்வார்களே - ஆங் - பகீரதப் பிரயத்தனமாக இருந்தது.

பக்கத்துப் புதரிலிருந்து “ம்மேஏஏஏ“ என்ற ஒலி கேட்டது. ஒரு வேளை எந்திரன் சிட்டியோ என்று நினைத்தேன். சொல்லமுடியாது. இந்தியாவில் நிகழும் செல்பேசி புரட்சியில் யாராவது நபர் எந்திரன் சிட்டியின் வில்லத்தன ம்மேஏஏஏயை காலர் டோனாக வைத்துக்கொண்டு கொல்லிமலைப் புதரில் ஒதுங்கியிருக்கிறார் என்று சொன்னால் கட்டாயம் நம்பியிருப்பேன். என்ன. இங்குமா என்று ஆயாசமாக இருந்திருக்கும். நல்லவேளை. புதரிலிருந்து வெளியே வந்து ஒரு வெள்ளாடு. அதைத் தொடர்ந்து இன்னும் ஏழெட்டு ஆடுகள் வரிசையாகக் கடந்தன. மலையில் வாழும் ஆடுகள். கால்தடுக்காமல் லாகவமாக சரிவில் இறங்கிச் சென்றன. பசு அந்த மலைகிராமத்துவாசியிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டு வந்தான். சுற்று வட்டார மலைகள், கிராமங்கள் என்று அவர் சொன்ன பெயர்கள் எதுவும் நான் கேள்விப்படாதவை. எம்ஜியார் நகர், கலைஞர் நகர் போன்றில்லாது நல்ல தமிழ்ப்பெயர்கள் கொண்ட கிராமங்கள். வட்டார வழக்கில் அவர் சொன்ன மருவிய ஊர்களின் பெயர்களின் உச்சரிப்பே புரிந்துகொள்ளக் கடினமாக இருந்தது. உதாரணத்திற்கு: மேலமாத்தி - தாமரைக்குளம் - வளப்பூர் நாடு - செல்லிப்பட்டி - நரியங்காடு - பூசணிக்குழி - மேட்டு விளாரம் - வாசலூர்பட்டி - செம்மேடு.

கொல்லிமலைப் பெயர்க்காரணத்தைக் கேட்டதும் பசு சொன்னான். “இந்த மலைக்கு வந்த மக்களை டிஸ்டர்ப் பண்ற பூதங்களை விரட்றதுக்காக கொல்லிப்பாவைக் கிட்ட வேண்டினாங்களாம்.  பூதத்தைப் பாத்து கொல்லிப்பாவை நக்கலா சிரிச்சு வம்பிழுக்கும்.  பூதம் கடுப்பாகி அட்டாக் பண்ணும் போது  கொன்னுடும். அதையொட்டி வந்தது கொல்லிமலைங்கற பேரு”. பேச்சு வல்வில்ஓரியைப் பற்றித் திரும்பியது. தமிழரின் வீரம் என்று வந்துவிட்டால் இக்காலத் தலைமுறையினருக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதுதான் நினைவுக்கு வரும் என்று நினைக்கிறேன். சற்று அழுத்திக்கேட்டால் புலியை முறத்தால் அடித்துவிரட்டிய மறத் தமிழச்சியைக் குறிப்பிடுவார்கள். வல்வில் ஓரி என்றால் மதுரை ஜிகர்த்தண்டா மாதிரி ஒரு வஸ்து என்று சொன்னாலும் சொல்லலாம். ஓரி கொல்லிமலையையும் அது சார்ந்து பகுதிகளையும் ஆண்டவன். கடையெழு வள்ளல்களின் ஒருவன். மிகச்சிறந்த வில்லாளி! ஒரு நாள் வேட்டையாடுவதற்காகச் சென்றவன் கண்டது மதயானையையும், அதன் பின் உறுமிக் கொண்டிருந்த புலியையும், தூரத்தே துள்ளியோடிய புள்ளி மானையும், காட்டுப்பன்றியொன்றையும், உடும்பு ஒன்றையும். அவன் தொடுத்த அம்பு யானையைத் துளைத்து, புலியை ஊடுருவி, மான், பன்றி, உடும்பு ஆகியவற்றையும் துளைத்துக் கடந்து மரத்தில் குத்தி நின்றதாம். “அப்பேர்ப்பட்ட தில்லாலங்கடிப்பா அவன்” என்றான் பசு. அக்காட்சியைக் கண்டு ஆச்சரிப்பட்ட வன்பரணர் ஓரியைப் பற்றி புகழ்ந்து பாடியிருக்கிறார். சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, போன்ற பழந்தமிழ்நூல்களில் கொல்லிமலைப் பற்றி குறிப்புகள் உண்டு. வன்பரணர் வல்வில்ஓரியைப் பற்றி புறநானூற்றில் ஆதன் ஓரி என்று குறிப்பிட்டிருக்கிறார். ஓரியுடைய தந்தையாக ஆதன் இருக்கவேண்டும் என்பது ஊகம். கழைதின் யானையார் என்ற புலவரும் ஓரியைப் பற்றிப் புறநானூற்றில் பாடியிருக்கிறார். பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேர மன்னன் கொல்லிமலையைக் கைப்பற்ற கடையெழு வள்ளல்களில் இன்னொருவனாகிய காரியை (திருக்கோவிலூரை ஆண்டவன்) ஏவி, காரிக்கும் ஓரிக்கும் நடந்த போரில் மார்பில் அம்புபட்டு மடிந்தான் வீரன் ஓரி. காரி கொல்லிமலையை பெருஞ்சேரல் இரும்பொறையிடம் அளித்தான். பாரிவள்ளல் பற்றி எல்லாருக்கும் தெரியும். ஓரியும் ஈகைகுணம் நிரம்பியவன். ஓரியைப் பற்றி நற்றிணையில் பரணர் குறிப்பிட்டிருக்கிறார். பாரி, ஓரி ரெண்டு பேரையுமே மற்ற அரசர்களுக்குப் பிடிக்கவில்லை போல. பொறாமை.  கூட்டம் சேர்ந்து சதித்திட்டம் போட்டு ஜெயித்தார்கள். அது சரி. ஏன் கடையெழுவள்ளல்களில் அல்மோஸ்ட் எல்லாரும் மலையமான்களாகவே இருக்கிறார்கள்? மலைக்கும் ஈகைக் குணத்திற்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்று தெரியவில்லை. தரைக்கு வந்துவிட்டாலே தலைகால் தெரியாமல் ஆடுகிறோம் போல. அறிஞர்கள் யாராவது விளக்கினால் மதி!

”கீழ பாத்தமே பழனியப்பர் கோவில். அருணகிரிநாதர் திருப்புகழ்ல அந்தக் கோவிலைப் பத்திச் சொல்லிருக்காரு! முருகனும் வள்ளியும் இந்த மலைக்கு தேனிலவுக்காக வந்திருக்காங்க. நம்ம போறமே - இதே பாதைலதான் ஏறியிருக்காங்க. கொல்லிப்பாவைக்கும் கோவில் இருக்கு. மேல இருக்கிற அரப்பளீஸ்வரர் கோவிலுக்கு later chola ராஜராஜனுடைய சித்தி செம்பியன் மாதேவி வந்திருக்கிறார். Fund sanction பண்ணியிருக்கிறார்”. எப்படித் தொலைந்தன இந்த பெருமைகளெல்லாம். ஏன் மாமனிதர்கள் இந்த மண்ணில் மறுபடியும் உதி்க்கவில்லை. எதற்காக நம்நாடு இன்றும் இப்படி இருக்கிறது என்று பல கேள்விகள் மனதைக் குடைந்தன.

எங்கு பார்த்தாலும் பசுமை. அடுக்கடுக்காக மலைத்தொடர்கள். நடுநடுவே நின்று ஓய்வெடுத்த தருணங்களில் நட்சத்திரங்களை மனக்கோடால் இணைத்து உருவம் கொடுப்பது போல, அந்த மலைத்தொடரின் மலைகள், முகடுகள், குன்றுகள் சிலவற்றுக்கு வடிவம் கொடுத்துப் பார்த்தோம். அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் வடிவம்கூட தனியாக, செங்குத்தாக நின்ற மலையொன்றில் தெரிந்தது. உயரே ஏற ஏற கீழே பரந்து விரிந்திருந்த சமவெளிப்பகுதியின் காட்சி பரவசமேற்படுத்தியது. சுண்ணாம்படித்த மைல்கல் அளவிற்குப் பொடிதாக பழனியப்பர் கோவில்கூட தெரிந்தது.

“ஸெண்ட் எதுவும் அடிச்சியா?“ என்று திடீரெனக் கேட்டான் பசு. “ஆமாம். ரொம்ப லைட்டாதான்“ என்றேன். “ஸெண்ட் அடிக்கக்கூடாது. பரவாயில்லை. வேர்த்து ஊத்திருக்கறதால ஸெண்ட் வாடை குறைஞ்சிருக்கும். ஆனா நெக்ஸ்ட் டைம் அடிச்சட்டு வராதே” என்றான். புழுக்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள் என்று நிறைந்திருக்கும் அந்த வனப்பகுதியில் எங்களைத்தவிர மனிதவாடையெதுவுமற்றிருந்தது. ”ஆனா நம்மை ஓராயிரம் கண்கள் பாத்துக்கிட்டே இருக்கும்” என்று அவன் சொன்னதைக் கேட்டதும் அந்த நினைப்பே சிலிர்ப்பேற்படுத்தியது. “நாம ஒழுங்கா இருக்கற வரைக்கும் பிரச்சினையில்லைப்பா. டவுன்ல இருந்து இங்கு பிக்னிக் வர்றேன் பேர்வழின்னு வந்து அநியாயம் பண்றாங்க. அவங்களால மனுசங்க மேலயே மிருகங்களுக்கு வெறுப்பு வந்துடுது” என்று சொல்லிவிட்டு மண்ணில் புதைந்திருந்த உடைந்த பியர் பாட்டில் சில்லைக் காலால் நெம்பியெடுத்து தூக்கி வீசினான். “பிளாஸ்டிக்கைப் போடறாங்க. தண்ணியடிச்சுட்டு பாட்டிலை உடைச்சு வீசறாங்க. மிருகங்க கால்ல கண்ணாடி ஏறி கொஞ்சநாள் அவஸ்தைபட்டு புரையோடி கடைசில செத்துப் போதுங்க” என்றான். ”ஆனா நல்ல எண்ணத்தோட வர்றவங்களை உணர்ந்துக்கற சக்தி அதுங்களுக்கு இருக்கு. நம்மை ஒண்ணும் பண்ணாதுன்னு நினைக்கிறேன். ஸ்ரீநிவாஸன். இங்க கரடி இருக்குல்ல?”

“என்னது கரடியா?”

“கருங்கரடின்னா பிரச்சினை. மரத்துலகூட ஏறித் தப்பிக்க முடியாது” என்று கிலியேற்படுத்தினான். நிறைய தேன்கூடுகள் நிறைந்த மலைகள். “அது கெடக்கு. ஆறேழு வகைக் கரடிங்க. கொல்லி மலைலயும், மேற்கு தொடர்ச்சி மலைலயும் இருக்கறது sloth bear. இமய மலைல கருங்கரடியும் இருக்கு. மோப்ப சக்தி ஜாஸ்தி. கொஞ்சம் முரட்டு மிருகம். மலையேர்றவங்களுக்கு ஆபத்துன்னு பாத்தா பாம்புதான் டாப். அப்றம் யானை, காட்டெருமை, காட்டுத்தேனீ, கடைசியாதான் கரடி.

"அடப்பாவி. கரடில ஆரம்பிச்சு காட்டெருமைக்கு வந்து யானைல நிக்கறியே! அது சரி. இதையெல்லாம் எங்கிட்ட ஏம்ப்பா சொல்றே?”

“சும்மா ஒரு ஜி.கே.க்குத்தான். மலையேர்றேல்ல. இதையெல்லாம் தெரிஞ்சுக்கோணும். பச்ச கலர் ட்ரெஸ் போட்டுக்கிட்டு வரச்சொன்னேன்ல. இதுக்குத்தான். பச்சக் கலர் போட்டுக்கிட்டு வந்தா அதிக பட்சமா பறவைங்களைத்தான் பயமுறுத்துவோம். இந்த மாதிரி மிருகங்கள் “நம்மாளு போலருக்கு”ன்னு கண்டுக்காது. கருப்பு அவ்வளவு உசிதம் இல்லை. இப்படித்தான் நைன்ட்டிநைன்ல ஆந்திரா நாகலாபுரம் மலைல மூணு பசங்க கருப்பு டிஷர்ட் போட்டுக்கிட்டு ஏறினானுங்க. காட்டெருமை மேல மொய்க்கற ஈக்கள் அவனுங்களைக் காட்டெருமைன்னு நெனச்சு மொய்ச்சு.....காட்டெருமைத் தோல் எங்கே. நம்ம தோல் எங்கே.... ம்ஹூம்.. அதை ஏன் கேக்கற” என்றான். சின்ன வயதில் “அடேய் எருமை!” என்று திட்டு வாங்கியதெல்லாம் நினைவுக்கு வந்து லேசாக வயிற்றைக் கலக்கியது. .

முக்கனிகளும் கொல்லிமலையில் ஏராளமாக விளைகின்றன. வழியிலிருந்த மாமரங்களிலிருந்து ஆயிரக்கணக்கில் மாம்பழங்கள் மண்ணில் விழுந்து எடுப்பாரற்றுப் புதைந்திருந்தன. மலைச்சரிவில் நிறைய வாழைமரங்களையும் கண்டேன். வற்றாயிருப்பில் இருந்த காலகட்டங்களில் மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து எங்கள் வீதிகளுக்கு மலைத்தேன், மலைவாழைப் பழங்கள், வகைவகையான மாம்பழங்கள் என்று விற்பனைக்கு வரும். சைக்கிள் கேரியரில் பெரிய எவர்சில்வர் தூக்குச்சட்டியில் தேனடைகளை வைத்துக்கொண்டு வழக்கமாக ஒருவர் வருவார். தூய்மையான வேட்டித் துணியில் அடையை வைத்து நாம் கொடுக்கும் பாத்திரத்தில் பிழிந்து தருவார். நிறைய தேனீக்கள் அந்த ஆளைச் சுற்றி ஒட்டிக்கொண்டு, பறந்துகொண்டிருக்கும். என்னைக் கொட்டிவிடப்போகிறதோ என்று பயத்துடன், அதே சமயம் மலைத்தேனின் ருசியை நினைத்து வாயில் எச்சிலூற பார்த்துக்கொண்டிருந்த நாட்கள் நினைவில் வந்தன. கிழவன் கோவிலுக்கும், காட்டழகர் கோவிலுக்கும் செல்லும்போதெல்லாம் எங்களில் யாராவது ஒருவரின் துண்டை விரித்து மாம்பழங்களை நிரப்பிக் கொண்டு வருவோம்.

“இதான் கடைசிக் கரடு“ என்றார் ஸ்ரீநிவாஸன். என் முகத்தில் கேள்வியைப் பார்த்து “கரடுன்னா குன்று மாதிரி” என்றார். “இதான் கடைசி ஏத்தம் - ஏறிட்டோம்னா உச்சிதான். இன்னும் அரை மணியில் போயிரலாம்“.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலான மலையேற்றத்தில் இப்போது கால்களும் இதயத்துடிப்பும் ஒரு நிதானத்திற்கு வந்து விட்டிருந்ததால் அந்தக் கரடைக் கடப்பது அவ்வளவு கடினமாகத் தெரியவில்லை. ஏற்றம் முடிந்து சற்று மேல்நோக்கிச் சென்ற அந்த ஒற்றையடிப் பாதையில் நடந்தோம். காஃபிச் செடியை முதன்முதலாகப் பார்த்தேன். மகா எளிமையான அழகானதொரு குடிசையைக் கடந்தோம். குலை தள்ளியிருந்த வாழைமரம், அதையடுத்து நெடிதுயர்ந்த பலாமரம், பின்னணியில் மாமரம் என்று முக்கனிகள் தரும் மர வரிசையைப் பார்த்தேன். வல்வில்ஓரி மாதிரி ஒரே கல்லில் வாழை, பலா, மாம்பழங்களை அடிக்கமுடியுமா என்று யோசனை தோன்றியது. தோப்புக்காரர் யாராவது கழுத்தில் துண்டைப் போட்டு இழுத்துக்கொண்டு போய்விடுவார் என்ற பயத்தில் வல்கல்எறியனாகும் வாய்ப்பைக் கைவிட்டேன். மஞ்சள்பை காரர் எங்களிடம் விடைபெற்றுப் பிரிந்து சென்றார்.

பாதை நேராகச் செல்ல, மரங்களற்ற பரந்த புல்வெளி வந்தது. மலைச்சரிவில் பெரிய படிக்கட்டுகளாகத் தேயிலை போட்டிருந்தார்கள். பாதையின் முடிவில் கற்சுவரும் தார்ச்சாலையொன்றும் தெரிந்தது. அதையடைந்ததும் எனது கையைக் குலுக்கி “Welcome to Kolli Malai" என்றார் ஸ்ரீநிவாஸன். பயங்கரமாய்ப் பசிக்க அந்தக் கற்சுவரில் உட்கார்ந்து புளியோதரையை விழுங்கினோம். கற்சுவரின் ஓரமாக ஒடிசலான இன்னொரு ஆள் உட்கார்ந்திருந்தார். அதான் நாங்களெல்லாம் வெளியூர் என்ற நெற்றியில் எழுதி ஒட்டியிருக்கிறதே! ”பஸ்ஸூ பத்தரை மணிக்கு வந்துரும்” என்றார். நாங்கள் கொண்டு வந்த தண்ணீர் பாட்டில்களில் இரண்டைக் காலி செய்தோம். கையில் பரவியிருந்த எண்ணையைப் பாறையில் துடைத்தேன். அவரிடம் கொஞ்ச நேரம் பேச்சுக்கொடுத்துக்கொண்டிருந்துவிட்டு, அங்கிருந்து மெதுவாக நடந்து காரவல்லி போய் இறங்கும் பாதையைக் கண்டுபிடித்து இறங்கி விடலாம் என்று முடிவு செய்தோம். அவரிடமும் பசு சிறிது பணம் கொடுக்க அவரும் ஏகமாக மறுத்துவிட்டு பின் தயங்கி வாங்கிக்கொண்டார். நாங்கள் “பெரப்பர்றோம்ணே” என்றதும் “வாங்க, வீட்டுக்கு வந்துட்டுப் போங்க. நாட்டுக்கோழியடிச்சு சாப்ட்டுட்டுத் தங்கிட்டு நாளைக்குப் போலாம்” என்று வற்புறுத்தியவரை சமாதானப்படுத்திவிட்டு விடைபெற்றுக்கொண்டு அந்தத் தார்ச்சாலையில் மெதுவாக நடந்தோம்.

நாய் ஒன்று எங்களைச் சந்தேகமாகப் பார்த்துவிட்டு மலைச்சரிவில் நாசூக்காக ஓடியது. மலையில் வேட்டையாடிப் பழகிய நாய் - அது நடப்பது ஜாக்கிசான் மாதிரி கராத்தே நடையாக இருந்தது. ஆங்காங்கே வெகுசில மலைகிராமத்து மக்கள் மட்டும் தட்டுப்பட்டார்கள். வழியில் பார்த்தீனியச் செடி ஒன்றைப் பார்த்துவிட்டு பசு “எவ்வளவு மூலிகைகள் இருக்கற இடம் இது! பார்த்தீனியத்தைக் கொண்டு வந்து பரப்பிட்டானுங்க. இதெல்லாம் water guzzlers. இங்க இருக்கவே கூடாத செடி இது. இப்படியும் இயற்கையைச் சாவடிக்கறானுங்க” என்று இன்னம் யாரையோ திட்டினான்.  ஒரு பக்கம் மலை. மறுபக்கம் மலைச்சரிவு. அச்சரிவில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரவியிருந்த பசுமை நிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். லேசாகத் தழுவிச் சென்ற மலைக்காற்று. அடிவாரத்தில் புள்ளியாக பழனியப்பர் கோவில்கூட தெரிந்தது. நாங்கள் ஏறிவந்த கரடுகள் தெரிந்தன. நாங்களிருந்த உயரத்தைவிடக் குறைவான உயரத்த்தில் மேகங்கள் மலைமீது படர்ந்து நகர்ந்துகொண்டிருந்தன. எதிரே ஒற்றைக் கருடன் ஒன்றைப் பார்த்தோம். இடதோர மலையிலிருந்து வலதோர மலைக்குப் படுவேகமாக ஆனால் இயல்பாகப் பறந்தது கருடன். அதன் சுதந்திரம் உண்மையான சுதந்திரம். நாமெல்லாம் சுதந்திரம் என்ற பெயரில் நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம் என்று ஏனோ தோணியது. ஓரிருமுறை வட்டமடித்த அது கண்ணை விட்டு மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தோம்.

சாலையோரத்தில் யாரோ ஒரு டஜன் பலாப்பழங்களை அடுக்கிவைத்திருந்தார்கள். “யாரும் எடுத்துர மாட்டாங்களா?” என்று கேட்டேன். “எடுத்துட்டு எங்க ஓடறது?” என்று பசு சிரித்தான். மலை முழுதும் பலா மரங்கள் அதீதமாக இருப்பதால் யாரும் அவற்றைக் கண்டுகொள்வதில்லை. இரண்டு கிலோமீட்டர்கள் நடந்திருப்போம். சிறிய குடியிருப்புப் பகுதி சாலையோரமாக இருந்தது. பத்திருபது வீடுகள் இருக்கும். அவற்றைத் தாண்டி நடக்க தார்ச்சாலை சட்டென்று முடிந்து எட்டிபபார்த்தால் படு பாதாளம்!

(தொடரும்)

பி.கு.;- *அந்த நூல் உயிரினம் என்னவென்று தெரிந்துகொள்ளாவிட்டால் மண்டை வெடித்துவிடும்போல இருந்தது. வழக்கம்போல கூகுளாண்டவரைச் சரணடைந்தில் அது Horsehair Worm என்றழைக்கப்படும் குதிரைமுடி மாதிரி சன்னமாக, நீளமாக இருக்கும் ஒரு வகைப் புழு என்று தெரிந்தது. பாம்பெல்லாம் இல்லை! அப்பாடி. என் காது தப்பித்தது. காது குறுகுறுவென்று இருந்தால் இங்கே வீடியோ!


Wednesday, November 28, 2012

கொல்லி மலை # 1


ஒரு கமர்ஷியலுக்காகக் “கொல்லிமலைக் கள்ளி” என்றுதான் இக்கட்டுரைக்குத் தலைப்பிடலாம் என்று நினைத்தேன். “கொல்லி மலை“ மட்டுமே வற்றாயிருப்பில் சிறுவயதில் பார்த்த விட்டலாச்சார்யா படத்தலைப்புகளை நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டதால் அதோடு விட்டாயிற்று. ஆனாலும் இக்கட்டுரையில ஜெயமாலினி வரமாட்டார் என்று முன்னெச்சரிக்கையாகச் சொல்லிவிடுகிறேன் (போய் புள்ளைக்குட்டிங்களைப் படிக்க வைங்கய்யா!).

“இது மட்டும் நெனச்சபடி நடந்துச்சுன்னா நீ மொட்டை போடுவேன்னு வேண்டிக்கிட்டேன்” என்று நம் தலையை அடகு வைக்கும் நண்பர்/உறவினர் கூட்டம் எல்லாருக்கும் உண்டு. ஒவ்வொரு முறை விடுமுறைக்குக்குப் போகும்போதும் எதெதெல்லாம் செய்யவேண்டும் என்று எவ்வளவு திட்டமிட்டாலும் நமக்குத் தெரியாமல் நம்மைவைத்து யாராவது ஏதாவது திட்டம்போட்டு வைத்திருப்பார்கள். நாசூக்காகக்கூட மறுக்கமுடியாமல் உம்மாச்சி கண்ணைக் குத்திடும் என்ற பயத்தால் திட்டங்களில் சிலவற்றைத் தியாகம் செய்யவேண்டிவரும்! இதற்காகவே மீனம்பாக்கத்திலிருந்து வெளியில் வந்தவுடன் யார் கண்ணிலும் படாமல் முக்காடோடுடன்தான் நடமாடுவேன்.

அவசரமாக ஒரு வாரம் சென்னைக்கு அலுவல் நிமித்தமாகச் செல்ல வேண்டியிருந்தது. அதற்கு இங்கிட்டும் அங்கிட்டும் இருந்த இரண்டு சனி ஞாயிறுகளில் ஸ்ரீரங்கத்திற்குச் சென்று பெற்றோரையும் உறவினர்களையும் நண்பர்களையும் பறக்கும் படை மாதிரி பார்த்துவிட்டு ஓடிவந்து விடலாம் என்று திட்டம் போட்டுக்கொண்டு சனியன்று மதியம் குருவாயூர் எக்ஸ்பிரஸ்ஸில் போய் இறங்கினேன். நண்பன் பசுபதி, பிரகாஷ் இருவரையும் ராஜகோபுர முனையில் கூட்டமும் ஈக்களும் மொய்க்கும் கடையில் சந்தித்து காஃபி ஆர்டர் செய்தோம். டவரா டம்ளரில் பாதி நுரைக்குக்கீழே இரண்டு ஸ்பூன் காஃபி வந்தது. தகிக்கும் வெயில் வாட்டியெடுக்க மின் தடை வேறு. எப்படித்தான் இப்படிச் சுடச்சுட குடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு என்னை வேற்றுகிரகவாசி மாதிரி அவர்கள் பார்த்த பார்வையிலேயே “ஒரு காலத்துல நீயும் இப்படிக் குடிச்சிட்டிருந்தவன்தானப்பா” என்ற கேலி இருந்தது.

பசுபதி பள்ளி காலத்திலிருந்து நண்பன். என்சிசியில் தீவிரமாகச் செயல்பட்டு டெல்லி சென்று ஜனாதிபதியிடம் மெடல் வாங்கியிருக்கிறான். ஆண்டு இறுதித் தேர்வுகளுக்கு மொத்த தெருவே அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து திண்ணைகளில் சத்தமாக மனப்பாடம் செய்ய இவன் வீட்டிலிருந்து புல்லாங்குழல் சத்தம் கேட்கும். அசுர சாதகம் - எதிலும். முசிறி-திருச்சி சாலையில் சைக்கிளில் நான் நாக்குதள்ளிக்கொண்டு ஓட்ட, கூடவே பத்து கிலோமீட்டர் அசராது ஓடிவருவான். தபேலா, மோர்சிங், கிடார் என்று சகலமும் வாசிப்பான். என் அம்மாவிடம் பாவயாமி மொத்தத்தையும் ஒரே வாரத்தில் கற்றுக்கொண்டான். இம்மாதிரி அபாரமான ஆசாமிகளுக்கெல்லாம் லேசாக மறைகழண்டிருக்குமோ என்று எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் உண்டு. பசுபதியும் அவனது நண்பர் குழாமும் சுற்றுவட்டாரத்தில் பக்கத்து மாநிலங்களில் மலைகள் மலைகளாக ஏறிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னதும் ஆச்சரியப்படவில்லை - பசுபதியின் சுபாவம் தெரிந்ததால். ஆனால் எத்தனை மலைகளை இதுவரை ஏறியிருக்கிறார்கள் என்று அவன் சொன்னது மகா ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. “நாளைக்கு மலை ஏறலாம் வரயா?“ என்று கேட்டதும் ஆர்வமெழுந்து சரியென்று சொல்லிவி்ட்டேன். கடைசியாக மலை ஏறி பதினைந்து வருடங்களாயிற்று. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக சபரிமலைக்கு எரிமேலியிலிருந்து செல்லும் பெரிய பாதை வழியாக மட்டும் சென்றதுண்டு. கரி மலையும், அழுதை மலையும் தந்த வலியில் கண்கள் கலங்கியதுண்டு. மலை ஏறாமல் நின்றாலே பின்னால் வரும் சாமிகள் நம்மைத் தள்ளி ஏற்றிவிட்டுவிடுவார்கள். அவ்வளவு கூட்டம் அம்மும். இரண்டாவது வருடம் சென்றபோது பெரிய பாதையில் எங்கள் குழுவிலிருந்து பிரிந்து இரண்டு நாட்கள் நான் தொலைந்துபோனது தனிக்கதை - இன்னொரு நாள் சொல்கிறேன்.

“எந்த மலை பசு?”

“ஒனக்கு பழக்கம் இல்லைங்கறதால எதாவது குட்டி மலையா பார்த்துக் கூட்டிட்டுப் போறேன். தலமலைக்குப் போலாம். திருச்சியைச் சுத்தி நெறய குட்டிகள் இருக்கு. குளித்தலை தாண்டி திருஈங்கோய் கூட போலாம்”.

எங்கள் உரையாடல் பெரும்பாலும் இப்படித்தான் நிகழும். மேற்கண்ட இரண்டு வாக்கிய சம்பாஷணையை மட்டும் கேட்பவர்களுக்கு என்ன தோன்றும் என்பதை உங்கள் ஊகத்திற்கு விடுகிறேன்.

அம்மாதிரிச் சின்ன மலைகளெல்லாம் என் வீரத்திற்க இழுக்காகப் படவே “குட்டி மலையெல்லாம் வேணாம். கொஞ்சம் மீடியம் சைஸா கூட்டிட்டுப் போப்பா” என்றேன்.

கொல்லி மலை ஏறுவதென்று முடிவாயிற்று. கொல்லி மலை பெயரைக் கேட்டதும் சிலிர்ப்பாக இருந்தது.

“காலைலை மூணு மணிக்குக் கிளம்பிரலாம். வாடகைக்கார் எடுத்துட்டு வந்து பிக்கப் பண்ணிக்கறேன். நாமக்கல் தாண்டி ராசிபுரம் ரூட்லருந்து போவணும். அஞ்சு அல்லது ஆறு மணிக்குப் போய்ச் சேந்துட்டோம்னா வெயிலேர்றதுக்கு முன்னாடி மலையேற ஆரம்பிச்சுரலாம்” என்று சொல்லிவிட்டு மலையேற்ற முன்னேற்பாடுகளையும் சொன்னான். ”நான் புளியோதரை கொண்டு வந்துர்றேன். மூணு லிட்டர் தண்ணி பாட்டில் மட்டும் எடுத்துக்க” என்றான். குறிப்பாக “பச்சக் கலர் ட்ரெஸ் போட்டுக்கோ. சென்ட் அடிக்காதே” என்றான். எதற்குப் பச்சைக் கலர் என்று புரியாமல் தலையாட்டிவைத்தேன்.

உரையாடல் முடிந்து உச்சந்தலையில் அக்னி இறங்க வீட்டுக்குத் திரும்பியாகிவிட்டது. இரண்டு மணிக்கு எழுந்தால்தான் மூன்றுக்குக் கிளம்பமுடியும். அலாரம் வைத்து எழுந்து கைவசம் எதேச்கையாக எடுத்துப்போயிருந்த camouflage கால்சராயையும் ஸ்னீக்கர்ஸையும், டிஷர்ட்டையும் அணிந்து முதுகுப்பையுடன் தயாராக இருந்தேன். மூன்று மணிக்கு வண்டி வராமல் அரைமணி கழித்து ஃபோன் வந்தது. “தில்லை நகர்லருந்து நானும் ஸ்ரீநிவாஸனும் கௌம்பிக்கிட்டே இருக்கோம். வெளில வந்து வெயிட் பண்ணு. பத்து நிமிஷத்துல வந்துடுவோம்“ எனச் சொல்ல அரவமின்றி யாரையும் எழுப்பாமல் வெளியேறி தெருவில் நின்ற போது எதிராக்கிரமிப்புக்குடிசையிலிருந்து ஒரு நாய் மட்டும் வாலாட்டிக்கொண்டு வந்து ஐந்து நிமிடத்திற்கொருதரம் ஊளையிட்டுக்கொண்டிருந்தது. அடையும் பூச்சிகைளைத் தாண்டி மஞ்சள் விளக்குகளின் ஒளி வடிய தெரு அமைதியாக இருந்தது, பகலிலும் இப்படியே இரைச்சலின்றி இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். மூன்றரை மணிவாக்கில் டாக்ஸி தெருவில் நுழைந்து என்னை நோக்கி வர பசுவும் ஸ்ரீநிவாஸனும் கைகாட்ட பின்னிருக்கையில் அமர்ந்துகொள்ள உடனே புறப்பட்டோம். ஓட்டுனர் சலாம் வைக்க, பசு “நீ ஆஃபிஸர். லேட்டானதால கோவமா இருக்கேன்னு சொல்லிருக்கேன். அப்படியே மெயின்டெய்ன் பண்ணு“ என்று காதில் கிசுகிசுத்தான். எனக்கு ஏனோ இந்தியன் படத்தில் செந்திலை கவுண்டமணி ”குட்மார்னிங் ஆஃபிஸர் ஸார்” என்று சதிக்கூழைக்கும்பிடு போடும் காட்சி நினைவுக்கு வந்தது.

”ஏம்பா லேட்டு?”

“நாங்க டயத்துக்கு எழுந்து ரெடியாயிட்டு டாக்ஸிக்கு வெயிட் பண்ணோம். மூணு மணிக்கு அண்ணன் சைக்கிள்ல மெதுவா போயிக்கிட்ருக்காரு. அலாரம் வச்சுட்டு மறந்து தூங்கிட்டாராம். ஓனர் வீட்டுக்குப் போய் வண்டி எடுத்துவர லேட்” என்று கிசுகிசுத்தான். இக்காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் அவசரமாகப் போக டாக்ஸி எல்லாம் சொல்லிவிட்டு வெகுஅதிகாலையில் ஆளரவமற்ற தெருவில் முனையில் வண்டி வருகிறதா என்று காத்துக்கொண்டிருக்கையில் ஓட்டுனர் சைக்கிளில் எதிர் திசையில் போய்க்கொண்டிருந்தால்?

கம்பரசம்பேட்டையைத் தாண்டி சாலையோரக்கடையில் நிறுத்தி தேனீர் சாப்பிட்டுவிட்டுத் தொடர்ந்தோம். இடதுபுறம் வரும் Ramp எடுத்து குறுக்குப் பாலத்தில் இணைந்து நாமக்கல் சாலையைப் பிடிக்கவேண்டும். Ramp-ஐக் காணவில்லை. ஏதோ சாலைப்பணிகள் நடந்துகொண்டிருந்ததால் (?) அதை அடைத்து கம்பி போட்டிருந்தார்கள். அதை லேசாக விலக்கிப் புகுந்து ஒருவழியாகப் பயணத்தைத் தொடர்ந்து நாமக்கல் நகர் அடைந்து ராசிபுரம் சாலையைப் பிடித்து குக்கிராமங்கள் சிலவற்றைக் கடந்து சாலையோரத்து பலாப்பழக்குவியலைத் தாண்டி வலதுபுறம் சென்ற வழியில் இன்னொரு தேனீருக்காக நிறுத்தினோம்.. தார்ப்பாய் போட்ட சாலையோரக் கசாப்புக் கடையில் ஆட்டிறைச்சி மும்முரமாக விற்பனையாகிக்கொண்டிருக்க சற்று தள்ளி சாலையருகே சாக்குவிரித்து அதில் ஈக்கள் மொய்க்க தனியாக இருந்த ஆட்டின் தலை மட்டும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது. அப்போதுதான் வெட்டிய இன்னொரு ஆட்டை ஒரு சிறுவன் லாகவமாகத் தோலுரித்துக்கொண்டிருந்தான். 'நாலு காலுதாண்ணே இருக்கு. எல்லாரும் லெக் பீஸ் கேட்டா இது என்ன ரயில்பூச்சியா?“

போக்குவரத்தற்ற அப்பாதையில் நாங்கள் தொடர வானம் மோடம் போட்டு லேசாக நீலம் பாவியிருந்த மேகப்பரவலின் முடிவில் சாம்பல் நீலத்தில் அந்த மலைத் தொடர் கண்ணுக்குத் தெரிந்தது. வண்டியின் ஜன்னல்களூடாக வந்த குறிஞ்சிக் காற்று நகரத்தின் புழுக்கத்திலிருந்து உடலையும் ஆன்மாவையும் விடுவித்து ஆனந்தமாக வருடியது. ஒளி, ஓலி, காற்று மாசு எதுவுமற்ற அந்தப் பிரதேசத்தை விட்டுவிட்டு மனிதர்கள் ஏன் இப்படிப் பைத்தியக்காரத்தனமாக நாகரிகம் என்ற பெயரில் உடல் ஆரோக்கியத்தை அடகுவைத்து நகரங்களில் குவிந்து மூச்சுமுட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று யோசித்தேன்.

கொல்லிமலைத் தொடரைப்பற்றி பசுபதி சொல்லிக்கொண்டிருந்தான். மலையேற கிட்டத்தட்ட 17 வழிகள் இருக்கின்றனவாம். அவர்கள் குழு பத்து வழிகளில் ஏற்கெனவே ஏறியிருக்கிறார்கள். “இன்னிக்கு நம்ம பழனியப்பர் கோவில் ரூட்லருந்து ஏறலாம் என்று சொல்லி முடிக்கவும் மரங்களுக்குப் பின் ஒளிந்திருந்த அந்தக்கோவில் வந்தேவிட்டது. அந்த இடத்தின் மகா அமைதியில் காதுகள் அடைத்துக்கொண்டது போன்ற பிரமை. இருபது படிகள் தாண்டி கொடிமரம் தெரிந்தது. யாரோ ஒரு பெண்மணி படிகளைக் கழுவிவிட்டுக்கொண்டிருக்க நுனிக்காலில் ஏறி கொடிமரம் தாண்டிச் சுற்றி வந்தால் சன்னிதி கதவு மூடியிருந்தது. அந்தக் கோவிலை முழுவதுமாகப் புகைப்படம் எடுக்கமுடியாதபடி ஒரு அமைப்பில் ஒரு மினி மலைமுகடு மாதிரி கொல்லிமலைத்தொடரின் அடிவாரத்தில் கோழியின் கால்களுக்கிடையே ஒளிந்திருக்கும் குஞ்சுபோன்று இருந்தது. 'Yet another Murugan temple?' என்ற என் மனக்கேள்வியைப் பசு படித்திருக்கவேண்டும்.

“இவரு வித்தியாசமான ஆளு. ஆண்டாள் மாதிரி கொண்டை. முறுக்கிய மீசை. வேலுக்குப் பதிலா வஜ்ராயுதம். பிச்சவா கத்தி ஒண்ண. இன்னொரு கைல சேவல். கால்ல செப்பல் வேற. இங்க வள்ளியோட வந்து ஹனிமூன் கொண்டாடினதா கதை. வேட்டை வேற ஆடியிருக்காரு!”

அந்தப் பெண்மணி வந்து “இந்தக் கோவில் ரொம்ப பிரசித்தம். இங்க வந்து தங்குனவங்களுக்கு மறுபிறவியே கிடையாதாம்” என்றார். நல்ல வேளை. நான் போன ஜென்மத்தில் இந்தக் கோவிலுக்குப் போகவில்லை. போயிருந்தால் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கவே மாட்டேன்.

எனக்கு கூட்டமில்லாக் கோவில்களுக்குச் செல்லவே எப்போதும் விருப்பம். இங்கு மீசை முருகனைப் பார்க்க ஆசையாக இருந்தாலும் அர்ச்சகர் குளிக்கப் போயிருந்ததால் மேலும் காலதாமதம் செய்யாமல் திரும்பவந்து பார்த்துக்கொள்ள முடிவுசெய்து வண்டி ஓட்டுநரிடம் சொல்லிக்கொண்டு கோவிலின் பின்னால் புதர்களின் நடுவே கற்களும் பாறைகளும் நிரம்பிய அந்த காட்டாற்று வெள்ளப் பாதையில் நீர் அடித்துத் துவைத்து எறிந்திருந்த பாறைக்குவியலில் கால் வைத்து ஏறத் தொடங்கினோம்.


சிறிது தூரம் சென்றதும் சற்றே தட்யைான பாறைப்பிரதேசம் வந்தது - சிறு நதியின் அளவுக்கு அகலம். கோடைக்காலமானதால் பூனை குளிக்கும் அளவிற்கே தண்ணீர் ஓடியது.

பசு “இருக்கறதுலயே தூரம் கம்மியான ரூட்டு இது - ஆயிரம் மீட்டர் உயரத்துல உச்சி. போய் சேர்றதுக்கு ஒரு மூணி மணி நேரம் ஆகும்” என்றான். பாறைகளில் கவனமாகக் கால்வைத்து அவர்களைத் தொடர்ந்தேன். அரைமணி நேரத்திலேயே வியர்வையில் தொப்பலாக நனைந்தோம். உயரம் செல்லச் செல்ல காற்றின் வேகம், அடர்த்தி, தட்பவெப்பம் என்று எல்லாமே மெதுவாக மாறுவதை உணர முடிந்தது. நல்லவேளை தகவல்தொழில்நுட்பத்துறையில் இருந்தாலும் காலையிலிருந்து மாலைவரை இருக்கை தேய்க்கும் வேலையை மட்டும் செய்யாமல் கடந்த இரு வருடங்களாக ஓரளவுக்கு உடற்பயிற்சி செய்து வந்ததில் கால்கள் தொய்வடையாமல் ஒத்துழைக்கத் தொடர்ந்து ஏறினேன்.


ஒரு பாறையிலிருந்து இன்னொரு பாறையில் கால்வைத்து ஒவ்வொரு அடியாக நடக்க ஏராளமான பூச்சிகள், வண்டுகள், ஊர்வன, சிறு பறவைகள் என்று இதுவரை கண்டிராத உயிரனங்களைப் பார்த்து ரசித்துக்கொண்டே தொடர்ந்தேன். பாதையின் அமைப்பு இப்படித்தான் செல்லும் என்று ஊகிக்கவே முடியாமல் சட்சட்டென மாறிக்கொண்டே இருந்தது. மலையிலிருந்து மழைநீர் காட்டாற்று வெள்ளமாய் வரும் வழியல்லவா? அது மழைக்காலத்தில் பெரிய ஏரியொன்றுக்கு நீர்சேர்ப்பதும் உண்டு என்று பசு சொன்னான்.


ஒரு பாறையிலிருந்து அடுத்ததற்குக் கால்வைத்துத் தாண்டும்போது இரண்டு பாறைகளுக்கும் இடைப்பட்ட தரைப்பகுதியில் ஒரு வெள்ளை நூல் துண்டு கிடந்தது. இரண்டு அல்லது மூன்று அங்குல நீளம்தான் இருக்கும். யாராவது சட்டையிலிருந்து பிய்த்துப் போட்டிருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டே அடுத்த அடி வைக்க முயற்சிக்கையில் அந்த நூல் சட்டென்று அசைந்தது. ஸ்பிரிங் போலச் சுருண்டது, நெளிந்தது.


தொடரும்...

நன்றி : தென்றல்.காம்