Friday, February 23, 2007

துக்ளக்கா சோ? # 2

Image and video hosting by TinyPic
துக்ளக் 37-ஆம் ஆண்டு விழாவின் நிறைவு உரையில் சோ தொடர்ந்து பேசியது இங்கே. நன்றி: துக்ளக்.காம்

***
இதெல்லாம் போதாதென்று ரிசர்வேஷன், ஒரு எல்லையே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அதை எப்படியாவது மத ரீதியாகவும் கொண்டு வந்துவிட வேண்டும் என்றும் பார்க்கிறார்கள். அதை நேரடியாகச் செய்ய முடியாது. மத ரீதியான இடஒதுக்கீட்டுக்கு அரசியல் சட்டத்தில் இடமில்லை. ஆகையால் அதற்கு வேறு ஏதாவது வழி கண்டுபிடிக்க முடியுமா என்று ஒரு சச்சார் கமிட்டியை நியமித்தார்கள்.

"முஸ்லிம்கள்தான் நிறைய படிக்காமல் இருக்கிறார்கள் – என்று அக்கமிட்டி கூறியது. ஆனால் அதன் பிறகு ஒரு சென்ஸஸ் கணக்கே வந்திருக்கிறது. ஹிந்துக்களை விட, முஸ்லிம்களின் படிப்பு நன்றாக இருக்கிறது என்று. இப்பொழுது எல்லோருக்கும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது.

இதற்கு முன்னால் சில சமுதாயத்தினர் வியாபாரத்தைத்தான் விரும்பினார்கள்.
ஹிந்துக்களில் செட்டியார்கள் வியாபாரத்தை விரும்பினார்கள். நாடார்கள் வியாபாரத்தை விரும்பினார்கள். மார்வாடிகள் வியாபாரத்தை விரும்பினார்கள். அவர்கள் எல்லாம் படிப்பதை விட வியாபாரத்தில் தங்கள் பையன்களை விடுவதில்தான் அவர்களுக்கு விருப்பம் இருந்தது. அப்பொழுதுதான் அவர்கள் எல்லாவற்றையும் கற்றுக் கொள்வார்கள் என்று நினைத்து அப்படிச் செய்தார்கள்.

அந்த மாதிரி முஸ்லிம் சமுதாயமும் கூட வியாபாரத்தையும், அந்த மாதிரி சேவைகளையும் – ஸர்வீஸஸ் – முக்கியமாக நினைத்தார்களே ஒழிய, படிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. இப்பொழுது எல்லோருக்கும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது. முஸ்லிம்களும் மற்றவர்களுக்குச் சமமாக வந்து கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு சமூகமும் பாதிக்கப்பட்டு நிற்க வேண்டும் என்பது, நாட்டின் அமைதிக்கு நல்லதல்ல. ஆனால் அதற்காக, முஸ்லிம்கள் ஒரு ஓட்டு வங்கி, அதை நாம் இழந்து விடக் கூடாது என்பதற்காக, இவர்கள் செய்து வருகிற அட்டூழியங்களில் இதுவும் ஒன்று.

அஸ்ஸாமில் வெளிநாட்டவர் சட்டத்தை மாற்றினார்கள். எதற்கு? ஒருவர் இந்தியர் இல்லை என்றால் – நான் இந்த மாநிலத்துக்கு வந்து இவ்வளவு வருடம் ஆகிறது என்று அவர் நிரூபிக்க வேண்டும். அதை மாற்றி, அரசுதான் அவர் இந்தியரல்ல என்று நிரூபிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தார்கள். இது செல்லுபடியாகாது என்று நீதி மன்றம் சொல்ல வேண்டிய தாகி விட்டது. இவர்கள் பங்களாதேசத்திலிருந்து வந்த அகதிகள். மேலும் யார் யார் வருகிறார்கள் என்று யாருக்குத் தெரியும்? இத்தனையும் எதற்காக? "இந்த மைனாரிட்டி ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அது தங்களிடம் கொஞ்சம் இருக்கிறது. உத்திரப் பிரதேசத்தில் முலாயம் சிங்கிடம் நிறைய இருக்கிறது. அதையும் பிடுங்கி விட வேண்டும் என்பதற்காக, எவ்வளவு தூரம் சமுதாயங்களுக்கிடையே பகைமையையும், துவேஷத்தையும், அவநம்பிக்கையையும் வளர்த்து வருகிறோம்' என்பது பற்றி கவலைப்படாமல் செயல்படுகிறார்கள்.

தீவிரவாதம் பற்றி பேசினால் கூட, பா.ஜ.க. ஒன்றுதான் தீவிரவாதம் பற்றி பேசுகிறது. தீவிரவாதம் பற்றி பேசினால், உடனே முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசுகிறார்கள் என்கிறார்கள், காங்கிரஸாரும் மற்றவர்களும். தீவிரவாதத்தைப் பற்றி பேசினால், அது ஏன் முஸ்லிம்களுக்கு எதிராக இருக்க வேண்டும்? அப்படி என்றால் இவர்கள் தீவிரவாதமும், முஸ்லிம்களும் ஒன்றுதான் என்று நினைக்கிறார்கள். அப்பொழுது யார் உண்மையான மதச்சார்பின்மைவாதிகள்? இவர்களா, பா.ஜ. க.வா?

தீவிரவாதத்தை பா.ஜ.க. தீவிரவாதமாகப் பார்க்கிறது. இவர்கள் முஸ்லிம்கள் என்று பார்க்கிறார்கள். ஆகையால் இவர்களைப் பார்த்துத்தான் முஸ்லிம்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மதச்சார்பின்மை கட்சிகள் என்று தங்களை சொல்லிக் கொள்கிற கட்சிகள்தான், தீவிரவாதிகள் என்றால் முஸ்லிம் மதத்தையும், முஸ்லிம்களையும் அடையாளம் காட்டுகிறார்கள். இந்தக் காரியத்தை பா.ஜ.க. செய்யவில்லை. இந்தக் காரியத்தை இவர்கள்தான் செய்கிறார்கள்.

காஷ்மீரை எடுத்துக் கொண்டால், "இன்று காஷ்மீரில் குண்டு வெடிப்பு இல்லை' என்றுதான் செய்தி வர வேண்டும். தினமும் ஏதாவது நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் பாகிஸ்தானுடன் இணைந்து ஏதாவது செய்ய வேண்டுமாம். பாகிஸ்தானிய உளவுத் துறையுடன் தகவல்களையெல்லாம் பகிர்ந்து கொண்டால் நமது கதி என்ன ஆவது?

அந்தத் தீவிரவாதிகள் எல்லாம் தப்பிப்பதற்கும், உள்ளே நுழைவதற்கும்தான் அது வசதி செய்து தருமே தவிர, தீவிரவாதிகளை அடக்கவா அது உதவும்? பாகிஸ்தானியர்கள்தான் தீவிரவாதிகளை அனுப்புகிறார்கள் என்பதும் தெரியும். அவர்கள்தான் பயிற்சியும் கொடுக்கிறார்கள் என்பதும் தெரியும். இருந்தும், நீங்களும், நானும் போலீஸ்காரர்களாகச் செயல்படுவோம் என்றால் என்ன அர்த்தம்? அதைச் செய்கிறார்கள். ஏனென்றால் பாகிஸ்தானுடன் உறவை "சரியாக' வைத்துக் கொண்டால் மேற்கத்திய நாடுகளின் ஆதரவு கிடைக்கும் என்று இந்தியா நினைக்கிறது. மேற்கத்திய நாடுகளில் அப்படி அணுகுமுறை எதுவும் இல்லை.

முஸ்லிம்களில் எவ்வளவோ தேசியவாதிகள் எல்லாத் துறைகளிலும் இருக்கிறார்கள். அப்துல்கலாமை விட்டு விடுங்கள். அவர் புகழ் பெற்றவர். ஆசிரியர்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். தேசத் தொண்டிலிருந்து பல துறைகளிலும் முஸ்லிம்களின் பணி இருக்கிறது –விளையாட்டுக்களில் கூட. பாவம் கெய்ஃப். மற்றவர்கள் விளையாட்டில் தொடர்ந்து தோற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வீட்டை யாரும் தாக்க வில்லை; கெய்ஃப் வீட்டை தாக்கினார்கள்.இவற்றை எல்லாமும் கண்டிக்க வேண்டும்.

நரேந்திர மோடி
அந்தக் காலத்தில் – முஷ்டாக் அலி காலத்திலிருந்து மொஹம்மது நிஸ்ஸார் காலத்திலிருந்து – இன்று வரை, கிரிக்கெட்டுக்கு முஸ்லிம்கள் நிறைய பேர் தங்கள் பங்கை செலுத்தி இருக்கிறார்கள். ஹாக்கியிலும், தங்கள் பங்களிப்பை முஸ்லிம்கள் செய்திருக்கிறார்கள். இங்கே ஒரு வாசகர் பேசும்போது சொன்னார் – கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்த முஸ்லிம்கள், அந்த குத்தகைப் பணத்தை ஒழுங்காகக் கட்டி வருகிறார்கள் என்று சொன்னார். மேலும் அவர்கள் எல்லாம் இந்த நாடு தங்களுடையது என்று நினைக்கிறபோது, அவர்களை விரோதிக்கிற வகையில், அவர்கள் மனதை பழுதாக்குகிற வகையில், அவர்கள் மனதில் வக்கிரம் தோன்றுகிற வகையில் நடந்து கொள்வது நல்லதல்ல.

இன்னொரு பக்கம், "பாராளுமன்றத்தை தாக்கிய அஃப்ஸலை தூக்கில் போடக் கூடாது; கருணை காட்ட வேண்டும்' என்கிறார்கள். எங்கேயாவது உண்டா இது? பாராளுமன்றத்தைத் தாக்கியதற்கு அவன் காரணமாக இருந்திருக்கிறான். அவனை தூக்கிலிடக் கூடாது. எத்தனை பேர் பாராளுமன்ற வளாகத்தில் இறந்தார்கள்? அவர்களின் மனைவிகள் எல்லாம் மெடல்களை திருப்பிக் கொடுக்கப் போகிறோம் என்கிறார்கள். அரசுக்கு வெட்கம், மானம்... வேண்டாம். இதைவிட அரசாங்கத்திற்கு ஒரு இழுக்கு உண்டா?

நான் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் சிதம்பரத்தில் சுமார் 70 பேர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுத்தேன். அவர்களில் ஒருவர் கூட அந்த பட்டத்தை திருப்பித் தரவில்லை. சும்மா எல்லோரும் "டாக்டர், டாக்டர்' என்று போட்டுக் கொள்கிறார்கள் என்று அப்படிச் செய்தேன். ஏழு வயது பையனுக்குக் கூட "டாக்டர்' பட்டம் கொடுத்தேன். என்னை மாதிரி ஒரு சமதர்மவாதியை உலகத்திலேயே பார்க்க முடியாது. அவர்கள் கூட திருப்பித் தரவில்லை.

எதற்குச் சொல்கிறேன் என்றால், அந்தளவுக்கு மனது நொந்து போய், வாங்கிய மெடல்களையே திருப்பித் தருகிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள். அரசாங்கத்தை அவமதிக்க வேண்டும் என்று அவர்கள் அப்படிச் செய்யவில்லை. மனது நொந்துபோய் அப்படிக் கூறியிருக்கிறார்கள். "எங்களின் கணவன், பையன் ஆகியோர் இறப்பதற்குக் காரணமாக இருந்தவனுக்கு, நீங்கள் கருணை காட்டப் போகிறோம் என்று சொன்னால், எங்களுக்கு உங்கள் மெடல் வேண்டாம்' – என்கிறார்கள். இதை விட ஒரு தெளிவான தகவல் இருக்க முடியுமா? அப்படியும் இந்த அஃப்ஸல் விவகாரத்தை சிலர் விடவில்லை. அவனை தூக்கில் போடக் கூடாது என்று இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே நளினி விவகாரம் வேறு. "நளினியை விட்டு விட்டால் எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்' என்று கலைஞர் சொல்கிறார். ஏன் என்றால் ராஜீவ் காந்தியின் உயிர் ஒன்றுமே இல்லை, பாருங்கள். போகட்டும்! தீவிரவாதம் பற்றி என்ன கேவலமான அணுகுமுறை பாருங்கள்? ஆகையால் இந்த அரசாங்கம் தொடர்ந்தால் வரக்கூடிய மிகப் பெரிய ஆபத்து, தீவிரவாதம் வளர்வதுதான். பெங்களூர் வரைக்கும் வந்தாகி விட்டது. இந்த மாநிலத்திற்கு வருவதற்கு இன்னும் ரொம்ப நாள் ஆகாது. பா.ஜ.க. ஆட்சியில்
இருந்தால் இந்த தீவிரவாதம் வராது என்று நான் சொல்லவில்லை. ஆனால் இந்த மாதிரி அசடு வழிய மாட்டார்கள். மேலும் பா.ஜ.க. அரசு இருந்தால் உறுதியாக தீவிரவாதத்தை அடக்க முயற்சிக்கும் என்று தெரியும். அதற்கு தீவிரவாதிகள் பயப்படாமல் இருக்கலாம். ஆனால் தீவிரவாதத்திற்கு உதவுகிறவர்கள் எல்லோரும் அஞ்சும்படியாக அரசு நடக்கும். அந்த உதவிகள் எல்லாம் கிடைக்கவில்லை என்றால், இங்கு தீவிரவாதம் வெகுவாகக் குறைந்து விடும்.

தங்கும் இடம் முதற்கொண்டு, அவர்களுக்கு நிறைய உதவி தேவைப்படுகிறது. தீவிரவாதிகளுக்கு உதவினால் நம் கதி என்னவென்று உதவி செய்ய நினைக்கிறவர்கள் பயப்படுவார்கள். இந்த பயம் பா.ஜ.க. அரசிடம் இருக்கும்; ஜெயலலிதா அரசிடம் இருக்கும். மன்மோகன் சிங்கிடம் தீவிரவாதிகளுக்கு இந்த பயம் இருக்காது. கலைஞரிடமும் இந்த பயம் இருக்காது. சோனியா காந்தியின் தயவில்லாமல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தால் அவரும் தீவிரவாதிகளிடம் கடுமை காட்டுவார். ஆனால் இப்போது நிஜ பிரதமர் சோனியா காந்தி; நிழல் பிரதமர் மன்மோகன் சிங். ஆகையால் இப்படித்தான் நடக்கும்.

மன்மோகன் சிங் நல்லவர்; நேர்மையாளர். மாட்டிக் கொண்டு முழிக்கிறார். அவ்வளவுதான். ஆனால் பதவியை விடுவதற்கு மனதில்லை. பிரதமர் பதவி என்பது சாதாரண பதவி இல்லை. ஆகையால் விட்டு விடுவதற்கு மனது வரவில்லை. சரி, இதற்கெல்லாம் மாற்று என்ன?

தேசிய அளவில் பா.ஜ.க.தான் இந்த அரசுக்கு மாற்று வழி. இந்த மூன்றாவது அணி என்பது உருப்படாத சமாச்சாரம். தேர்தலில் மூன்றாவது வரும் அணிக்குப் பெயர் மூன்றாவது அணி. ஏற்கெனவே அந்த மூன்றாவது அணியில் இடம் பெற்றிருந்தவர்கள் பலவீனமாகி விட்டார்கள். முலாயம் சிங் பலவீனமாகி விட்டார்; மாயாவதி அந்த அணியில் சேருவாரா என்பது சந்தேகம்.

பிறகு மம்தா பானர்ஜி. அவர் மேற்கொண்ட உண்ணாவிரதத்தைப் பார்த்து நான் பிரமித்து விட்டேன். 25 நாட்கள் அதைத் தொடர்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நமக்குத் தெரிந்த உண்ணாவிரதம் என்பது – காலையில் டிஃபன் சாப்பிட்டு விட்டு, இனிமேல் உள்ளே தள்ள முடியாது என்ற அளவுக்கு சாப்பிட்டு முடித்து விட்டு, அங்கே போய் உட்கார்ந்தால், மாலை 4 மணிக்கு எழுந்து திரும்பவும் சாப்பிட ஆரம்பித்து விட வேண்டியதுதான். அப்படிப்பட்ட உண்ணாவிரதம்தான் நமக்குத் தெரியும். இப்படிச் செய்து விட்டு "வெற்றி... வெற்றி...உண்ணா விரதம் வெற்றி...' என்று சொல்லிக் கொள்ளும் காலத்தில், இந்த 25 நாள் உண்ணாவிரதம் ஆச்சரியம்தான். முன்பு காந்தி இருந்திருக்கிறார். பிறகு குஜராத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக மொரார்ஜி உண்ணாவிரதம்
இருந்தார். மொரார்ஜி உண்ணாவிரதத்தைத் தொடங்கி 17, 18 நாட்கள் கடந்த பிறகு, இந்திரா காந்தி கூறினாராம் – "அவர் செத்தால் என்ன ஆகிவிடும்?' என்று. அதற்கு
சந்திரசேகர், "அதன் பிறகு நாம் குஜராத்தை மறந்து விட வேண்டியதுதான்' என்று கூறியுள்ளார். அதன் பிறகுதான் எல்லோரும் விவாதித்து, குஜராத்தில் தேர்தல்களை நடத்துவது என்று முடிவெடுக்க, மொரார்ஜி உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். இதை சந்திரசேகரே பின்னர் என்னிடம் தெரிவித்தார்.

இந்த மம்தா பானர்ஜியின் உண்ணாவிரதத்தினால், அவருக்கு பெரிய அளவில் ஆதரவு கூடி விடும் என்று நான் நினைக்கவில்லை. மூன்றாவது அணியில் பிறகு யாரை வைத்துக் கொள்ளப் போகிறார்கள்? முலாயம் சிங் சைஃபராகிக் கொண்டிருக்கிறார். மாயாவதிக்கு இந்த அரசின் தயவு தேவை. தாஜ் வணிக வளாக வழக்கு இருப்பதால், அவரும் ஒன்றும் செய்யப் போவதில்லை. பிறகு யாரை வைத்துக் கொண்டு மூன்றாவது அணி? அதனால்தான் இது உருப்படாத விஷயம் என்று நான் சொல்கிறேன்.

காங்கிரஸுக்கு மாற்று பா.ஜ.க. என்று கூறும்போது, பா.ஜ.க.வில் என்ன பிரச்சனை என்றால், அதில் உள்ள உட்கட்சி மோதல். அக்கட்சி பெற்ற தோல்வி தந்த அதிர்ச்சியிலிருந்து, அதன் தலைவர்கள் இன்னும் மீண்டபாடில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். அதனால் மீண்டும் பதவிக்கு வருவோம் என்பதையே அவர்கள்
மறந்து விட்டார்கள். "இந்தியா ஒளிர்கிறது' என்று கூறியதால், தோற்று விட்டோமோ என்று கூட அவர்களிடையே ஒரு அபிப்பிராயம். பத்திரிகைக்காரர்கள் அப்படி கிளப்பி விட்டு விட்டார்கள். ஏதோ கிராமத்தில் இருப்பவர்கள் எல்லாம் "இந்தியா ஒளிர்கிறது என்று சொல்கிறாயா, வா உன்னை தோற்கடிக்கிறேன்' என்று முடிவு செய்தது போல, பா.ஜ.க. தலைவர்கள் நினைத்துக் கொண்டு விட்டார்கள். அப்படியானால் குஜராத்தில் பா.ஜ.க. எப்படி வெற்றி பெற்றது? அங்கு இந்தியா ஒளிர்கிறது என்பதை ஏற்றுக் கொண்டு விட்டார்களா? மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் எப்படி பா.ஜ.க. வெற்றி பெற்றது? அங்கெல்லாம் இந்தியா ஒளிர்கிறது என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்களா? அதுவல்ல உண்மை.

பா.ஜ.க.வுக்கு சரியான கூட்டணி அமையவில்லை. அவ்வளவுதான். இன்று எந்தக் கட்சியும் தனியாக நின்று வெற்றி பெறும் அளவுக்கு தேசிய அளவிலும் சரி, மாநில அளவிலும் சரி, இல்லை. பா.ஜ.க. மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் அந்த நிலையில் உள்ளது. குஜராத்தில் தற்போது நரேந்திர மோடி அந்த நிலைக்கு கட்சியைக் கொண்டு வந்திருக்கிறார். மற்றபடி எந்தக் கட்சியும் தனியாக நின்று வெற்றி பெறப் போவதில்லை. அதனால் கூட்டணிதான் முக்கியம். கூட்டணியை தேர்தல் நேரத்தில் தேடாமல், இப்போதே பா.ஜ.க. அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

அத்வானி ஒரு உறுதிமிக்க தலைவர். பிரதமர் பதவிக்கு நிறுத்தப்படும் வேட்பாளரைப் பார்த்தால் மக்களுக்கு ஒரு நம்பிக்கை வர வேண்டும். மன்மோகன் சிங்கைப் பார்த்தால் பச்சாதாபம் வருகிறது. நம்பிக்கை வரவில்லை. அவர் நல்லவர். நாம் எல்லோருமே நல்லவர்கள்தான். நாம் யாருக்கும் கெடுதல் செய்யப் போவதில்லை. ஆனால் ஒரு பள்ளி ஆசிரியர் சொன்னால், அதற்கு கட்டுப்பட்டு நடப்பது போல, ஒரு பிரதமர் செயல்படுவது அந்தப் பதவிக்கு அழகல்ல. அதனால் அத்வானி போன்ற ஒருவர் பிரதமராக வந்தால், நமக்கே ஒரு தெம்பு வரும்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தார். அவரும்தான் கூட்டணி அமைச்சரவையை நடத்தினார். ஒரே ஒரு குறை. பொழுது விடிந்து பொழுது போனால், யாராவது ஒருவரை ஜெயலலிதாவுக்கு தூது அனுப்பிக் கொண்டிருந்தார்கள். மற்றபடி அந்த ஆட்சி, கூட்டணி கட்சிகளுக்கு டான்ஸ் ஆடவில்லை. வாஜ்பாயின் அந்த ஆட்சி செய்த திட்டங்களின் பயன்களைத்தான், தற்போதை மத்திய அரசு அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

என்னிடம் ஒருவர் ஒரு தகவலைச் சொன்னார். நம்பத் தகுந்த வட்டாரம் என்று வைத்துக் கொள்ளுங்கள். "லாலு பிரஸாத் யாதவ் ரயில்வே துறையில் மிகத் திறமையாகச் செயல்படுகிறார். நிர்வாகத்தை நிமிர்த்தி விட்டார்' என்கிறார்களே, அது பற்றிய விவரம் என்ன என்றும், அது போல வேறு ஓரிரு இலாகாக்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் கூறினார். "இவை அத்தனையும் பா.ஜ.க. ஆட்சியில் தொடங்கப்பட்டவை. இவை பற்றிய விவரங்களை நான் ஆதாரங்களுடன் கொண்டு வருகிறேன்' என்று கூறியிருக்கிறார். அது கிடைக்கும்போது நான் வெளியிடுகிறேன்.

எதற்குச் சொல்ல வந்தேன் என்றால், அது போல அர்த்தமுள்ள வகையில் செயல்படும் ஒரு அரசை வாஜ்பாய் அளித்தார். பொக்ரானில் அணுகுண்டை வெடித்தார். இந்த அரசுக்கு அதுபோல் தைரியம் வருமா? வாஜ்பாய் ஆட்சி அதைச் செய்தபோது, அதுபற்றி முன்கூட்டியே யாருக்கும் தெரியவில்லை. சாட்லைட் மூலம் அறிந்து கொள்ளும் வசதி அமெரிக்காவிடம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் அந்த அணுகுண்டு சோதனை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவ்வளவு ரகசியமாக வைத்து, வெற்றிகரமாக முடிக்க முடிந்தது. "கூட்டணி தர்மம்' என்று எல்லோரிடமும் விவாதிக்கக் கூடிய விஷயமா இது?

மன்மோகன் சிங்காக இருந்தால், சோனியா காந்தியிடமிருந்து, கூட்டணி கட்சியினரிடமெல்லாம் கருத்து கேட்பார். அணுகுண்டு சோதனை நடத்தலாமா? என்று ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொண்டிருப்பார். இப்படிக் கேட்டுக் கொண்டிருந்தால், நம்மால் தீபாவளி பட்டாசு கூட வெடிக்க முடியாது. ஆக, உறுதி உள்ள ஒரு அரசு அமைய வேண்டும். அப்படிப் பார்த்தால், பா.ஜ.க.தான் அந்த மாற்று சக்தி. அவர்களுக்குத்தான் வாய்ப்பும் உள்ளது. அதற்கு அவர்கள் தங்களை சரி செய்து கொள்ள வேண்டும்.

இந்த உமாபாரதி ஒரு சந்நியாசி. அவர் பா.ஜ.க.வுக்கு எவ்வளவு பிரச்சனைகளை ஏற்படுத்தினார். துறவி அல்லவா? உண்மையையும் சேர்த்து துறந்து விட்டார். அவரை ஒருமுறை டெல்லியில் சந்திக்க வேண்டி வந்தது. அப்போது குருமூர்த்தியும் அங்கு இருந்தார். "எனக்கு எதிராக நீங்கள் எழுதிக் கொண்டிருக்கிறீர்களாமே?' என்று கேட்டார். "ஆமாம்' என்று சொன்னேன். குருமூர்த்தி வேறு இருந்ததால், "நமக்கு ஏன் வம்பு? என்று உண்மையைச் சொல்லி விடுவோம்' என்று சொல்லி விட்டேன். எந்த இடத்தில் உண்மையைச் சொல்ல வேண்டும் என்று பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா? "உங்களுக்கு எதிராக அவர் கடுமையான விமர்சனங்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்' என்று குருமூர்த்தியும் சொன்னார்.

"ஏன்?' என்று உமாபாரதி கேட்டார். "உங்களை கட்சியிலிருந்து வெளியேற்றா விட்டால், பா.ஜ.க. செயல்பட முடியாது' என்று நான் பளிச்சென கூறி விட்டேன். இப்படி சொன்னதால் அவருக்கு என் மீது மிகவும் கோபம். "சரி. எத்தனை பெண்கள் நம்மை ஆதரிக்கிறார்கள். அதில் இவரது ஆதரவு இல்லாவிட்டால் என்ன ஆகிவிடப் போகிறது?' என்று விட்டு விட்டேன்.

எதற்குச் சொல்ல வந்தேன் என்றால், பா.ஜ.க.வில் இப்படிப்பட்ட கட்டுப்பாடின்மை காணப்படுகிறது. இதற்கு ஆர்.எஸ்.எஸ்.ஸும் பெரும் காரணம் என்று நான் சொல்வேன். அனாவசியமாக பா.ஜ.க. தலைவர்களைப் பற்றியெல்லாம் ஆர்.எஸ்.எஸ். வெளிப்படையாக விமர்சனங்களை செய்யத் தொடங்கியது பெரும் துரதிர்ஷ்டம். ஆனால் பா.ஜ.க.வுக்கும் சரி, ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கும் சரி, இது இப்போது புரிய ஆரம்பித்திருக்கிறது. அவர்கள் தங்களின் தவறுகளை சரி செய்து கொண்டு வருகிறார்கள் என்று நினைக்கிறேன். விரைவில் இத்தகைய பிரச்சனைகள் தீர்ந்து விடும் என்று நினைக்கிறேன். அப்படிப்பட்ட நிலையில் பா.ஜ.க.வுக்கு ஒரு நல்ல எதிர்காலம் வரும் என்றுதான் நான் நம்புகிறேன்.

சமீபத்தில் உத்திரப் பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பா.ஜ.க. நன்றாகச் செயல்பட்டிருக்கிறது. யாருமே எதிர்பார்க்கவில்லையே! உத்திரப் பிரதேசத்தையும், பீஹாரையும் (பா.ஜ.க.) கைப்பற்ற வேண்டும். இல்லையென்றால் பயன் இல்லை. போன தேர்தலில் அது வேறு பிரச்சனையாகி விட்டது.

(தொடரும்)

Thursday, February 22, 2007

துக்ளக்கா சோ? # 1

Image and video hosting by TinyPic
பல வருடங்களாக துக்ளக்கை வாசித்து வந்தாலும் அவர் சொல்வது சரியா, தவறா, என்றெல்லாம் சிந்தனையைச் செலுத்தியதில்லை. ஆனால் சொல்ல நினைத்ததை தனக்கேயுரித்தான பாணியில் வெளிப்படுத்தும் சோ -வை ஒரு வாசகனாகப் பிடிக்கும். ஆடையில் ஊடாடும் நூலைப்போல அவரது எழுத்தின் ஆதார இழையாக இருக்கும் நையாண்டி மிகவும் பிடிக்கும். வாசகனாக அவர் கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொள்வதும், புனைவு என்று புன்சிரித்துப் போவதும் என்னிஷ்டம்.

Image and video hosting by TinyPic
இப்பதிவின் நோக்கம் நான் நம்புவதை ஆதரித்து எழுதவோ மறுப்பதை விமர்சிப்பதோ அல்ல. முதலில் சோ -வின் நெடுநாள் வாசகன் என்ற அடையாளத்தைக் குறிப்பிடவேண்டுமா என்பதையே நீண்டநேரம் யோசித்தேன். எழுத்தாளருடைய சாயல் அவரது தீவிர வாசகர்களிடையே லேசாகவாவது பிரதிபலிக்கும். அந்த வகையில் சோ -வின் சாயலை என் தலை இன்னும் லேசாகக்கூடப் பிரதிபலிக்கவில்லை என்றாலும் அவரது வாசகன் என்ற அடையாளத்தைக் குறிப்பிடுவதில் தவறில்லை என்று தோன்றிய எண்ணத்தை இப்போது வெளிப்படுத்திக்கொண்டிருப்பதில் காணலாம்.

"ஆஹா இவனும் சோ -வோட ஆளா?" என்று தலைதெறிக்க ஓடிவந்து என்னிடம் குடுமியையும் முப்புரி நூலையும் தேடாமல், சொல்லப்பட்ட கருத்துகளில் மட்டும் கவனம் செலுத்தி அதற்குத் தொடர்பான விஷயங்களை மட்டும் பேசுமாறு வலைப்பதிவு கும்மியடிப்பாளர்கள் சங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

துக்ளக் 37-ஆம் ஆண்டுவிழாவின் நிறைவுரை ஆற்றிய சோ குறிப்பிட்ட கருத்துகளை இங்கே வெட்டி ஒட்டியிருக்கிறேன் (நன்றி. துக்ளக்.காம்). அவரது பேச்சைக் கேட்டதில்லை. ஆனால் இதைப் படிக்கும்போது அவர் நல்லதொரு பேச்சாளராக இருக்கவேண்டும். ஏன் இப்படி துக்ளக்கோடு தனது எல்லைகளைக் குறுக்கிக்கொண்டுவிட்டார் என்று அடிக்கடி தோன்றும். தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு செய்த நற்பணிகளுக்கு முன்பு துக்ளக்கில் கணக்கு காட்டியதைப் படித்திருக்கிறேன். நிறைய கருத்துகளைச் சொல்வதோடு நிற்காமல் மக்கள் பிரதிநிதியாக வந்து அதிகாரத்தைப் பயன்படுத்தி இன்னும் நல்லது செய்யலாமே என்றும் தோன்றும். ஆனால் இத்தனை வருட அரசியல் சதுரங்க விளையாட்டுப் போதையிலிருந்து - ஒரு செளகர்யமான அந்த நிலையிலிருந்து - அவரால் மீண்டு வெளியே வரமுடியவில்லை என்றும் தோன்றுகிறது. "அரசியல் சாணக்கியனாகவோ" அல்லது "அரசியல் விதூஷகனாகவோ" காலந்தள்ள முடிவுசெய்துவிட்டதாகக் தோன்றுகிறது. அவருக்குத் துக்ளக் என்ற பிம்பமே போதுமானதாக இருக்கிறது போலத் தோன்றுகிறது.

Image and video hosting by TinyPic
***

(ஆசிரியர் தனது நிறைவுரையை தொடங்கும் சமயத்தில், வாசகர் ஒருவர் ஏதோ குரல் எழுப்பினார். அதே சமயம் "துக்ளக்' நிருபர் ரமேஷ், ஆசிரியரிடம் ரங்காச்சாரியை அறிமுகப்படுத்துமாறு கூறினார்.)

சோ :

அங்கிருந்து (அரங்கத்திலிருந்து) நீங்கள் ஏதோ பேசுகிறீர்கள். இங்கே இவர் (ரமேஷ்) அப்போதிலிருந்தே என்னிடம் எதையோ சொல்லிக் கொண்டே இருக்கிறார். நான் என்ன செய்வேன்? பெரியார் ஒரு காதிலேயும், அண்ணா ஒரு காதிலேயும் பேசுகிற மாதிரி இருக்கிறது எனக்கு. எனக்கு இதுவே தாங்க முடியவில்லை. அவர் (கலைஞர்) எப்படித்தான் சமாளிக்கிறாரோ? (அரங்கத்தில் இருப்பவரைப் பார்த்து) நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதும் புரியவில்லை; இவர் என்ன சொல்கிறார் என்பதும் புரியவில்லை. இரண்டு பேரும் ஒரே சமயத்தில் பேசுகிறீர்கள். அவரிடம் (கலைஞரிடம்) பெரியார் ஒரு பக்கம் "பொங்கி எழு' என்று கூறுவாராம். இன்னொரு பக்கம் அண்ணா, "பொறுமையாக இரு' என்பாராம். இதில் எது காதில் விழும்? "பொறுமையாக பொங்கி எழு' என்று காதில் விழுமா? "பொங்கி பொறுமையாக இரு' என்று விழுமா? அதுதான் தெரியவில்லை. அதனால்தான் ராமதாஸ் மீது பொங்குகிற மாதிரி வருகிறார். பிறகு பொறுமையாக இருந்து விடுகிறார்.

என்னென்னவோ சொல்கிறார். விநோதமாக இருக்கிறது. இவர் (ரமேஷ்) என்னை விடப் போவதில்லை. பெரியார் காது இது. இதில் வந்து அவர் "ரங்காச்சாரியை அறிமுகப்படுத்த விட்டு விட்டேன்' என்கிறார். அதைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார். "ரங்காச்சாரி... ரங்காச்சாரி...' அவர் என் நண்பர். அவர் வரத்தான் வருவார். வரட்டுமே... வந்து விட்டுப் போனால் என்ன இப்போது? என்ன இருந்தாலும் அவர் வருவார். என்னவோ இரண்டு எம்.பி.க்கள் என் பக்கம் வந்துவிட்ட மாதிரி அல்லவா அமர்க்களம் செய்கிறார், இந்த ரமேஷ்! என்னவோ இவர்தான் ஆற்காடு வீராசாமி மாதிரியும், நான்தான் கலைஞர் மாதிரியும் "வந்துட்டாங்க... வந்துட்டாங்க..' என்றால்..?

தி.மு.க.விற்கு ஒரு சிலர் போகிறார்கள் என்றால் அதில் அர்த்தம் இருக்கிறது. அங்கெல்லாம் எம்.பி.க்கள் போவார்கள். என்கிட்டேயா வருவார்கள்? ஆனால் அங்கே போக சில நிபந்தனைகள் உண்டு. "மானத்தை விட்டு விட வேண்டும். வைகோ மீது இருக்கிற அபிமானத்தை விட்டுவிட வேண்டும். தனியாக வர வேண்டும். அப்போது வந்து உள்ளே சேர்ந்து விட்டால், அதன் பிறகு ஜாலிதான். எல்லாம் கிடைக்கும். பதவிகள் கிடைக்கும். மந்திரியாகலாம். ஜனாதிபதியாகலாம். உள்ளே வந்து சேர்ந்தால் போதும். என்ன வேண்டுமானாலும் ஆகலாம்.

"மானாபிமானம் விட்டு, தானாகி நின்றவர்க்கு, சேனாதிபதி போல ஞானாதிபதி உண்டு! பாருமே! கட்டிக் காருமே! உள்ளே சேருமே! அது போறுமே! செம்மங்குடி சீனிவாச ஐயர் சாகும்போது, "சோ நீதான் கர்நாடக சங்கீதத்தைக் காப்பாற்ற வேண்டும்' என்று என்னிடம் சொல்லி விட்டுப் போனார். என்ன... ஜோக் அடிச்ச மாதிரி சிரிக்கிறீர்கள்? அவர், கலைஞர் யார் யார் செத்துப் போனார்களோ, எல்லார் லிஸ்ட்டையும் போட்டு – அவர் அப்படிச் சொன்னார், இவர் இப்படிச் சொன்னார் என்கிறார். அதையெல்லாம் சீரியஸாகக் கேட்டுக் கொள்கிறீர்கள். நான் சொன்னால் சிரிக்கிறீர்கள்.

காய்தே மில்லத் சாகும் தறுவாயில், கலைஞரிடம் "மைனாரிட்டி மக்களை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்' என்றார். காமராஜ் சாகும் தறுவாயில் "தேசம் போச்சே... தேசம் போச்சே... நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்' என்றார். ராஜீவ் காந்தி இறப்பதற்கு முன்னால், "நீங்கள்தான் இலங்கை தமிழர் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும்' என்றார்... செத்துப் போறதுக்கு முன்பு எல்லோரும் எப்படியாவது இவர் தலை மீது பாரத்தை வைத்து விட்டுத்தான் போவார்கள். உயிரோடு இருக்கிறவர் சொன்னார் என்று எதையும் சொல்வது கிடையாது. அது வைகோதான். பைத்தியம் மாதிரி, "மன்மோகன் சிங் சொன்னார்' என்று சொல்ல வேண்டியது. செத்துப் போனவர்கள் என்று சொன்னால், சொன்னது சொன்னதுதான். செம்மங்குடி சீனிவாச ஐயர் என்னிடம் "கர்நாடக சங்கீதத்தைக் காப்பாற்ற' சொன்ன மாதிரிதான் அதுவும். உயிரோடு இருப்பரைச் சொன்னால், பிரச்சனை வருகிறது.

யாராவது செத்துப் போனால் ரங்காச்சாரி விட மாட்டார். இவரோடு துக்கம் விசாரிக்க ஒரு வீட்டுக்குப் போகிற மாதிரி மடத்தனம் வேறு எதுவும் கிடையாது. அங்கே போனால் "கடைசியா என்ன சொன்னான்?' என்று கேட்பார். இதெல்லாம் வேணுமா? கடைசியா என்னத்தையோ சொல்லி விட்டுப் போகிறான். இவர் என்ன கலைஞரா? கடைசியா பொறுப்பை சுமந்து கொண்டு போகப் போகிறாரா?. ஒரு நண்பர் இறந்து விட்டார். அவர் வீட்டுக்குப் போய் இருந்தோம். "கடைசியா என்ன சொன்னான்?' என்று கேட்டார் ரங்காச்சாரி. அவருடைய மனைவி திரும்பிப் பார்த்து விட்டு பேசாமல் இருந்து விட்டார். இவரோ (ரங்காச்சாரி) அதைத் தெரிந்து கொள்ளாமல் விட மாட்டார். "கடைசியா என்ன சொன்னான்?'.

எனக்கா என்ன செய்யலாம், எழுந்து ஓடலாமா – என்று யோசனை! அங்கே இருந்து எப்படி ஓடறது? ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிற இடம். இவர் இப்படிச் செய்கிறாரே? இவர் இந்த மாதிரி இவ்வளவு பெரிய கலைஞரா இருக்கிறாரே? மீண்டும் "கடைசியா என்ன சொன்னார்...?'.... இப்படி ஐந்து, ஆறு முறை கேட்டு விட்டார். ஆறாவது முறையோ, ஏழாவது முறையோ, கேட்கும்பொழுது அந்த அம்மா திரும்பிப் பார்த்தார். "ஒரு பாட்டில் பிராந்தி கேட்டார்' என்றார். தேவைதானா இது? கடைசியில் ஒருநாள் கலைஞருக்கு இந்த மாதிரி ஆகிவிடப் போகிறது! யாராவது ஒருவர் சாவதற்கு முன்னால், "கலைஞரே! நீங்கள் அரசியலை விட்டு விலகி விடுங்கள்' என்று சொல்லப் போகிறார்.

இப்பொழுது எந்தத் தேர்தலும் நடக்க இருக்கவில்லை. தேர்தல் காலத்தில்தான் நமக்கு அரசியலில் மதிப்பீடு செய்கிற வழக்கம் வரும். தேர்தல் இல்லாத நேரங்களில், நாம் அப்படி அப்படியே அதை ஏற்றுக் கொண்டு சென்று கொண்டிருப்போம். அவ்வப்பொழுது ஒரு சின்ன ரியாக்ஷன். ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு சின்ன ரியாக்ஷன். அதோடு போய்விடுவோம். தேர்தல் வந்தால்தான் இந்த கட்சி நல்லதா, அந்தக் கட்சி நல்லதா என்ற பார்வையெல்லாம் நமக்கு வருகிறது.


இல்லை என்றால் என்ன நடக்கிறது? விலைவாசி உயர்ந்தவுடன், "இந்த அரசாங்கம் போக வேண்டும்' என்போம். அடுத்த நாள் ஒரு பேப்பரில், தேசிய வருமானம் 0.2 சதவிகிதம் ஏறியிருக்கிறது என்று படிப்போம். "பரவாயில்லை. அரசாங்கத்தை நன்றாகத்தான் நடத்துகிறார்கள்' என்று நினைப்போம். தேசிய வருமானம் என்ன என்பதும் தெரியாது. அது எவ்வளவு இருந்தது என்பதும் தெரியாது. இந்த 0.2 சதவிகிதம் என்ன என்பதும் புரியாது. ஆனால் அரசாங்கம் நன்றாகத்தான் செயல்படுகிறது போல் இருக்கிறது என்று நினைத்துக் கொள்வோம். அத்துடன் விட்டு விடுவோம். இதெல்லாம் கிரிக்கெட்டை ரசிக்கிற மாதிரி ஆகி விட்டது. கிரிக்கெட்டில் என்ன செய்கிறோம்? ஒருவர் செஞ்சுரி அடித்து விட்டால், அவரை மாதிரி உண்டா என்கிறோம். உலகத்திலேயே அவரை மாதிரி ஆட்டக்காரர் கிடையாது என்போம்.

"அவர் எப்படி விளையாடினார்? இதற்கு முன்னால் அவருக்கு எவ்வளவு "சான்ஸ்' கிட்டியது? எத்தனை பௌன்ஸர்களை எதிர் கொண்டார்? ஸ்லிப்பில் எத்தனை கேட்ச் விட்டார்? இவையெல்லாம் அனாவசியம். செஞ்சுரி அடித்தார். சரி. அவரே அடுத்த இரண்டு ஆட்டங்களில் சரியாக ஸ்கோர் செய்யவில்லை என்றால், "சே.... இவரை சேர்த்ததே தவறு. இவரை தூக்கிவிட வேண்டும்' என்போம்.

இந்த மாதிரி அரசியலை அணுகக் கூடாது. சில பந்து வீச்சாளர்களுக்கு "ஃபுல் டாஸி'ல் கூட விக்கெட் விழுந்து விடுகிறது. பவுண்டிரியில் பந்தைப் பிடித்து அவுட் ஆகிறார்கள். அதில் நான்கு விக்கெட் வந்து விடுகிறது. உடனே இவரைப் போல் பௌலர் உண்டா என்கிறோம். இந்த மாதிரி அரசியலை அணுகக் கூடாது.

அவ்வப்பொழுது அரசியலை கணித்துக் கொண்டே இருக்க வேண்டும். எப்போதும் நம் கண்காணிப்பை நாம் தளர விடக் கூடாது. தொடர்ந்து கண்காணிப்பதுதான் ஜனநாயகத்தின் விலை. அந்த மாதிரி இந்த மத்திய அரசைப் பற்றி பார்க்கும்பொழுது, பொருளாதார நிர்வாகம் பெரும்பாலும் சரியாகத்தான் இருக்கிறது. எந்த கூட்டணி அரசாங்கமாக இருந்தாலும் பின்னால் இழுப்பவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். இந்த அரசாங்கத்திலும் அப்படி இருக்கிறார்கள். கம்யூனிஸ்ட்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். மேற்கு வங்காளத்தைத் தவிர வேறு எல்லா இடங்களிலும் அவர்களுக்கு கம்யூனிஸம் வேண்டும்.

மேற்கு வங்காளத்தில் மட்டும் கேபிடலிஸம் இருக்க வேண்டும். "அங்கே நிலத்தை அரசு கையகப்படுத்தலாம். நிலத்தை டாடாவுக்குக் கொடுக்கலாம். இன்னும் 20,000 ஏக்கர் எடுத்து சிறப்புப் பொருளாõர மண்டலத்திற்குக் கொடுக்கலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். வேறு இடத்தில் அதைச் செய்தால், அது பாட்டாளி மக்களுக்குத் துரோகம். அமெரிக்கக் கைக்கூலி, அது, இது எல்லாம் வந்து விடும். அவர்கள் ஒரு பக்கம். இன்னும் சில பேர் அங்கே உள்ளே இருந்து கொண்டு தகராறு.

இந்த மாதிரியெல்லாம் இருப்பதால், பொருளாதார விஷயங்களில் கொஞ்சம் கட்டுப்பாடுடன்தான் இந்த அரசாங்கம் செயல்பட வேண்டியிருக்கிறது. அப்படி
இருந்தும் கூட மன்மோகன் சிங்கும், சிதம்பரமும் சேர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை திறம்படத்தான் நிர்வகித்து வருகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

இப்பொழுது கூட்டணி அரசை சமாளிக்க வேண்டிய நிலை வந்து விட்டது. கூட்டணி அரசை எப்படி தளுக்காக சமாளிப்பது என்ற நிலை. தளுக்காக சமாளிப்பது என்றால் என்ன? கேட்கிறவர்களுக்கெல்லாம் அடி பணிந்து கொண்டிருக்க வேண்டும். கலைஞர் முதலில் என்ன செய்தார்? இன்ன இன்ன அமைச்சரக பதவிகள் கொடுத்தால் வருகிறோம். இல்லை என்றால் வர மாட்டோம் என்று சொன்னார். அதை முல்லைப் பெரியாறுக்கு அவர் சொல்லவில்லை. அமைச்சரக பதவிகளுக்குத்தான் அதைச் சொன்னார். அதற்கு மத்திய அரசு அடிபணிய வேண்டி வந்தது. இப்படி சொல்வதை எல்லாம் கேட்டு, தளுக்காக சமாளித்துக் கொண்டு, போக வேண்டி இருக்கிறது. அதையும் மன்மோகன் சிங் செய்து கொண்டிருக்கிறார். மன்மோகன் சிங்கை பிரதமர் என்று சொன்னால், யாருக்காவது கோபம் வருமா என்று தெரியவில்லை. ஆனால் நான் சோனியா காந்தியின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடவில்லை. அவருடைய அனுமதியுடன் மன்மோகன் சிங்கை "பிரதமர்' என்று சொல்கிறேன். ஆனால் ஒரு பலவீனமான அரசாங்கம் இது. இந்த அரசு செய்திருக்கிற தவறுகள் ஏராளம்.

ஜனநாயக ஆட்சி முறை என்று பார்த்தால், பீஹாரிலும், ஜார்க்கண்டிலும் இவர்கள் செய்த அட்டூழியம் கொஞ்சம் நஞ்சமல்ல. போன ஆண்டு விழாவிலேயே அதைப் பற்றி பேசி இருக்கிறேன். யாருக்கு பெரும்பான்மை இருக்கிறதோ, அவர்கள் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக என்னென்னவோ செய்தார்கள். நீதிமன்றங்கள் குறுக்கிட வேண்டியதாகி விட்டது. இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

சிபுசோரன் ஒரு கொலைகாரப் பேர்வழி என்று நீதிமன்றம் சொல்லி விட்டது. அவர் இத்தனை நாள் மத்திய அமைச்சரவையில் இருந்திருக்கிறார். அப்பொழுதே அவர் மீது கொலை வழக்கு இருந்தது. அவர் தலைமறைவாக போய்விட்டார். மத்திய அமைச்சர் ஒருவர் தலைமறைவாகச் சென்றது இதுதான் முதல் முறை. நியாயமாக எல்லா
அரசியல்வாதிகளுமே தலைமறைவாகலாம்; தவறில்லை. ஆனால் இவர் தலைமறைவானார். அப்பொழுதும் மத்திய அமைச்சராகவே தொடர்ந்தார். என்னவென்றால், இது கூட்டணி தர்மம். அவரைத் தவிர இன்னும் சில பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்றைக்கு வழக்கு நடந்து முடியுமோ தெரியாது. என்றைக்கு தண்டனை கிடைக்குமோ தெரியாது. இந்த மாதிரி குற்ற சக்திகளை ஒரு பக்கம் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

க்வோட்ரோச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். பிரிட்டிஷ் அரசும் ஒப்புக் கொண்டு, முடக்கி வைக்கப்பட்டிருந்த அவருடைய வங்கிக் கணக்கை நமது அரசாங்கம் விடுவித்தது. அந்தக் கணக்கில் இருந்த பணத்தை அவர் எடுத்துக் கொண்டு விட்டார். அவர் சோனியா காந்தியின் குடும்பத்தினருக்கு வேண்டியவர் என்பதைத் தவிர, இதற்கு வேறு எந்தக் காரணமும் இருந்திருக்க முடியாது. இந்த அளவுக்கு குற்றவாளிகளுக்கும், இந்த நாட்டுக்கு இழைக்கப்படும் துரோகத்திற்கும், இந்த அரசு ஊக்கமளித்தது மிகவும் வேதனையான விஷயம்.

ஆனால் இந்த க்வாட்ரோச்சி விவகாரம் வந்த போது என்ன சொன்னார்கள் – ஸி.பி.ஐ. அந்த மாதிரி செய்து விட்டது – எங்களுக்குத் தெரியாது என்றது அரசாங்கம். அதாவது ஸி.பி.ஐ. அருகிலேயே இவர்கள் போகாதது மாதிரியும், ஸி.பி.ஐ. என்ன செய்தாலும் இவர்களுக்கு சம்பந்தம் இல்லாதது மாதிரியும் பேசினார்கள். அத்வானிக்கு எதிரான வழக்கில் சாரமில்லை என்பதால் ஸி.பி.ஐ. அப்பீல் செய்யாத போது, "ஏன் அப்பீல் செய்யவில்லை?' என்று அரசாங்கம் தாக்கீது பிறப்பித்தது. அப்பொழுது ஸி.பி.ஐ.யை அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். அதாவது நேர்மை இல்லை.

மாயாவதியை எடுத்துக் கொள்வோம். நடத்து விசாரணையை என்று நீதிமன்றம் சொல்ல வேண்டியிருக்கிறது. வழக்கைப் போடு என்று கோர்ட் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனென்றால் உத்திரப் பிரதேசத்தில் கூட்டணி வருமோ, என்னவோ? நாளை அரசுக்கு ஆதரவு தேவைப்படலாம். ஆகையால் மாயாவதி மீது வழக்கு நடக்கக் கூடாது. இவ்வளவு நேர்மையற்ற முறையில் ஒரு அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது. இதைத் தவிர பார்த்தோமென்றால், குஜராத்தில் நரேந்திர மோடிதான் மிகப் பெரிய கொலைகாரர் என்று எப்படியாவது நிரூபிக்க வேண்டும் – என்று இந்த அரசுக்கு இருக்கிற ஆதங்கம் சொல்லி முடியாது. பெஸ்ட் பேக்கரி வழக்கு ஒன்றும் இல்லாமல் ஆகி விட்டது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் – "ரயிலின் உள்ளே இருந்தவர்களே, எங்கிருந்தோ பெட்ரோலைக் கொண்டு வந்து தங்கள் மீது ஊற்றிக் கொண்டு எல்லோரும் செத்தார்கள்' என்று நிரூபிப்பதற்காக ஒரு கமிஷன்.

"அது செல்லுபடியாகாது. அந்த கமிஷனை நியமித்ததே பைத்தியக்காரத்தனம்' என்று நீதிமன்றமே கூறி விட்டது. எப்படியாவது நரேந்திர மோடியின் பெயரைக் கெடுக்க முடியாதா என்று அந்த அலை அலைகிறார்கள். எதற்காக? நரேந்திர மோடிக்கு குஜராத்தில் அவ்வளவு செல்வாக்கு ஓங்கி இருக்கிறது.

வெளிநாட்டு இந்தியர்கள் அங்கே முதலீடு செய்வதற்காக எப்படி பணத்தைக் கொட்டுகிறார்கள் என்பது, இன்றைய பத்திரிகையில் கூட வந்திருக்கிறது. குஜராத்தில் பணத்தைப் போடக் கூடாது என்பதற்காக என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள். காங்கிரஸும், மத்திய அரசும், பத்திரிகைகளும், டெலிவிஷன் சேனல்களும் முனைந்து எவ்வளவோ செய்தும் கூட, அவர் அதையும் தாண்டி மேலே நிற்கிறார். அவருடைய நிர்வாகத் திறன் அப்படிப்பட்டதாக இருந்திருக்கிறது. ஒரு ஊழல் குற்றச்சாட்டு அவர் மீது கிடையாது.

அந்த அரசை எப்படியாவது தொலைத்துக் கட்ட வேண்டும். மற்ற மாநிலங்களுக்கெல்லாம் உதாரணமாக ஒரு மாநில அரசு நடக்கிறதே – எல்லா மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக இருக்கும்போல இருக்கிறதே – இதை ஊக்குவிப்போம் என்று ஒரு மத்திய அரசு நினைத்தால், அது அரசு. அந்த மாதிரி இல்லாமல், இப்படி நன்றாக வளர்ந்து விடும் போல் இருக்கிறதே என்று நினைத்து, அதை கெடுக்க வேண்டும் என்று நினைத்தால், நடப்பது அரசே அல்ல. அது ஒரு துரோகம்.

இங்கே முல்லைப் பெரியாறு விஷயம். மத்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்கிறதா? "பேசுங்கள்... பேசுங்கள்...' என்று மத்திய அரசு சொல்கிறது. வேறு எதுவுமே சொல்லவில்லை. மத்திய அரசு தலையிடுவதற்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் மத்திய அரசு தலையிட மாட்டேன் என்கிறது. ஏனென்றால் கம்யூனிஸ்ட் ஆதரவு போய்விடும். அந்த தைரியமும் கிடையாது. அதுவும் கூட்டணி தர்மத்தில் வருகிறது. சரி, கலைஞராவது "நீங்கள் முல்லை பெரியாறில் உதவி செய்யவில்லை என்றால், நான் ஆதரவை வாபஸ் வாங்குவேன்; நான் மந்திரி சபையில் இருக்க மாட்டேன்' என்று சொன்னாரா? கிடையாது. அதை நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் விஷயத்தில் சொன்னார். இதற்கு அவர் சொல்லவில்லை.

ஆனால் அதைப் பற்றி சொன்னால் அவருக்குக் கோபம் வரும். ஏனென்றால் பெட்ரோல் விலை உயர்ந்தபொழுது ஒரு நிருபர் கேட்டார். "நீங்கள் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் விஷயத்தில் ஆதரவை வாபஸ் வாங்கப் போகிறேன் என்ற அளவுக்குப் பேசினீர்களே! இதற்கு ஏன் சொல்லவில்லை?' என்றார். "வர்றியா? நீயும் நானும் தீக்குளிக்கலாம், வர்றியா?' என்று கேட்டார். அதனால் நான் ஏதாவது முல்லைப் பெரியாறு என்று பேசப் போக, "வர்றியா? நீயும் நானும் அந்த டேம்லேர்ந்து கீழே குதிக்கலாம். வர்றியா?' என்று கேட்டால் என்ன ஆவது? அவருக்கு அந்த அளவிற்குக் கோபம் வந்தாலும் வரும்.

மேலும் மாநிலங்களை எப்படி அழுத்துகிறார்கள் என்று பாருங்கள். தமிழ்நாட்டையே எடுத்துக் கொள்ளுங்கள். ஜெயலலிதா ஆட்சி இருந்தவரையில், கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தில், உதவியே கிடையாது. தடங்கல்தான். கடைசியாக சுற்றுப்புறச் சூழல் என்று கூறிவிட்டார்கள். என்ன அது என்று பார்த்தால் மீனுக்கெல்லாம் ஆபத்து வந்துவிடும் என்று சொன்னார்கள். கடல்நீரை வெளியில் எடுத்து, அதில் உள்ள உப்புத் தன்மையை அகற்ற வேண்டுமாம். அதில் எப்படி மீனெல்லாம் செத்துப் போகும் என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் இவர்கள் கணக்குப்படி மீனெல்லாம் செத்துப் போய் விடும். ஒருவேளை கடலே வற்றிப் போய் விடும் போல் இருக்கிறது – என்று அதை நிறுத்தினார்கள். பைகாரா மின்நிலையம். அதை விரிவுபடுத்த வேண்டும் என்றால் சுற்றுப்புறச் சூழல். அதற்கு டி.ஆர். பாலு போன்றவர்களை மத்தியில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் எதுவாக இருந்தாலும் நிறுத்தி விடுகிறார்கள்.

ஆனால், அதே மாதிரி சேது சமுத்திரத்தில் ஆயிரம் ஆட்சேபனைகள் வந்து இருக்கின்றன. "அதற்கு சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு இருக்கிறது. மீன்கள் பெரிய அளவில் உயிரிழக்க நேரிடும். மீன்களே அந்தப் பகுதியில் இல்லாமல் போய் விடும். மேலும் பொருளாதார ரீதியில் பெரிய பயன் எதுவும் இல்லை. பலரும் இலங்கையைச் சுற்றிக் கொண்டு வரும் வழியைத்தான் விரும்புவார்களே தவிர, இதை விரும்ப மாட்டார்கள்' என்று நிறைய நிபுணர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து விட்டார்கள். ஆனாலும் அது தொடர்ந்து நடைபெறும்.

ஏனென்றால் அதில் நிறைய கான்ட்ராக்ட்கள் எல்லாம் வரும். பெரிய திட்டம். அங்கே ராமர் கட்டிய பாலம் சமுத்திரத்திற்கு அடியில் இருக்கிறது என்று – பா.ஜ.க.வோ, ஆர்.எஸ்.எஸ்.ஸோ, ஹிந்து முன்னணியோ அல்ல – நாஸாவே சொல்லி விட்டது. அதுவும் போய்விடும் போல் இருக்கிறது. ஆனால் இது இவர்கள் திட்டம் என்பதால், இவர்கள் ஆட்சி நடக்கும்போது நிறைய வாய்ப்பு கிடைக்கும் என்பதால், அதுவும் சரியாகப் போய்விட்டது. அங்கே சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு எதுவும் கிடையாது.

அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தை எடுத்துக் கொண்டால், அன்புமணி அதில் புகுந்து விளையாடி விட்டார். அந்த டாக்டர் வேணுகோபாலை உண்டு இல்லையென்று பார்த்துக் கொண்டிருந்தார். மத்திய அரசு அதில் எதுவும் செய்யவில்லை. பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. நடப்பது அனைத்தும் அநீதி என்று தெரியும். ஒரு டாக்டரின் பெயரைக் கெடுத்து, இழிவுபடுத்தி, ஹிம்ஸை செய்தார்கள். உலகிலேயே புகழ்பெற்ற சர்ஜன்களில் ஒருவர் என்று நான் கேள்விப்பட்டேன். அப்படி இருந்தவரை எவ்வளவு தூரம் மட்டம் தட்ட முடியுமோ, அவ்வளவு தூரம் மட்டம் தட்டி, அவரை ஹிம்ஸை செய்தார்கள். அதற்கும் இந்த மத்திய அரசு பேசாமல் இருந்தது. ஏனென்றால் அது கூட்டணி தர்மம்.

***

நன்றி: துக்ளக்.காம்