*** ஜே.ஜே.சில குறிப்புகள் பற்றிச் சில குறிப்புகள் - 1 ***
"உலகமெங்கும் எவன் எவன் தன் உள்ளளியைக் காண எழுத்தையோ, கலைகளையோ, அல்லது தத்துவத்தையோ, விஞ்ஞானத்தையோ, அல்லது மதத்தையோ (இக்காலத்தில் நான் எப்படி அரசியலைச் சேர்க்க முடியும்?) ஆண்டானோ அவன் எல்லாம் நம்மைச் சேர்ந்தவன். நம் மொழிக்கு உடனடியாக அவன் மாற்றப்பட்டு நம் உடம்பின் உறுப்பாகிவிடவேண்டும். இவ்விணைப்பையும் பரவசத்துடன் உணர்ந்து, மேற்கொண்டு நாம் சிந்திக்க வேண்டும். நமக்குச் சிந்திக்கத் தெரியும் என்றால். முடியும் என்றால்".
பாக்கெட் நாவல்களையும், ஜனரஞ்சக சஞ்சிகைகளையும் படித்துக்கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், என் மூத்த சகோதரர் திடீரென்று சில புத்தகங்களைக் கொடுத்து 'இதைப் படி' என்று சொன்னபோது முதலில் இருந்த புத்தகத்தில் தலைப்பையும், ஆசிரியர் பெயரையும் பார்த்தேன். 'ஜே.ஜே. சில குறிப்புகள்' 'சுந்தர ராமசாமி' - இரண்டையும் பார்த்துவிட்டு அசிரத்தையாக சகோதரரை நோக்கியபோது 'உனக்குத் தமிழ் படிக்கத் தெரியும்தானே? நிறைய மதிப்பெண் எடுத்திருக்கிறாய் என்று பெருமைப்பட்டுக்கொள்கிறாய் தானே? உன் தமிழறிவை வைத்து இப்புத்தகத்தைப் படித்துவிட்டு எனக்குக் கதை சொல்லு' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். 'இது என்ன பெரிய விஷயமா?' என்று நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது உணர்கிறேன். அவரிடம் இன்று வரை படித்துவிட்டுக் கதை சொல்ல முடியவில்லை.
சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே. சில குறிப்புகள்' முதன்முதலில் படித்தது கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன். 'படித்தது' என்று சொன்னது தவறு. 'படிக்கத் தொடங்கியது' என்று வாசித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அதைப் படித்து முடிக்கவேயில்லை. என்னவோ முயன்றும் முதல் பத்துப் பக்கங்களைத் தாண்டமுடியவில்லை.
கடலில் விரைந்து செல்லும் படகின் பின்புறம் சில அடிகள் தூரமே படகு பயணித்த தடம் நீரில் தெரியும். பின்பு சலனமற்ற கடல். அதைப்போலவே ஜே.ஜே.சில குறிப்புகள் படிக்கும்போதும் நிகழ்ந்தது. வாசிப்பின் தொடர்ச்சியையும், புரிந்துகொண்டதையும் நினைவில் தக்கவைக்க பெரும்போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. ஒரு பத்தியின் முதல் சில வாக்கியங்களைப் படித்துக்கொண்டே வருகையில், அதன் பொருள் ஓரளவு பிடிபடத் துவங்கிய வேளையில், தொடக்கம் மறந்து போக, பரமபத சோபன படம் விளையாட்டுபோல் முதலிலிருந்து வாசிக்க வேண்டியிருந்தது. சில சமயங்களில் நிசப்தம் நிலவிய இடங்களில் மட்டுமே சில அத்தியாயங்களைப் படிக்க முடிந்தது. ஆனால் ஒருபோதும் முழுவதையும் படிக்கமுடிந்ததில்லை.
பழுப்பேறிப்போன காகிதங்களோடு அலமாரியில் உறங்கிக் கொண்டிருந்த புத்தகத்தை சென்ற வாரம் சிரியா செல்ல நேர்ந்தபோது படித்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் எடுத்துப்போய் படித்து முடித்தே விட்டேன் - என்பதை இன்னும் நம்பமுடியவில்லை. 'மொத்த புத்தகத்தில் இருப்பதையும் சுருக்கமாகச் சொல்லேன். பார்க்கலாம்' என்று நீங்கள் கேட்கும் பட்சத்தில் நான் செய்யப்போவது - புத்தகத்தின் முதல் பக்கத்தைத் திறந்து மறுபடியும் படிக்கத்தொடங்குவதுதான்.
ஜோஸப் ஜேம்ஸ் (ஜே.ஜே.) என்ற எழுத்தாளனைப் பற்றி பாலு என்ற கதைசொல்லியைக் கொண்டு இந்நாவல் எழுதப்பட்ட விதம் அபாரமானது. ஜே.ஜே.யின் மன வீச்சினை கதை சொல்லியின் பார்வையில் வெற்றிகரமாகச் சொல்லியிருக்கிறார் சு.ரா.
எண்ணங்களின் அலைகளைப் படிக்கையில் வேறொரு உலகத்திற்குச் சென்ற மனநிலையே எனக்கு இருந்தது. சில நேரங்களில் தலை கடுமையாக வலிக்கவும் செய்தது. முதன்முறையாக படிக்கும்போது தலைக்குள் வலியை உணர்ந்தது இப்புத்தகத்தை வாசிக்கையில். எழுத்தின் ஓட்டத்தை எட்டிப் பிடிக்க முயன்றதில் ஏற்பட்ட சிரமங்களின் விளைவே அது.
ஜே.ஜே. சில குறிப்புகள் படிக்கும் முன்னர் சு.ரா.-இன் 'ஒரு புளியமரத்தின் கதை'-யை முழுவதும் படித்தேன். அவ்வளவு எளிமையான எழுத்தில் ஒ.பு.ம.கதையைப் படைத்த அதே சு.ரா., ஜே.ஜே.சில குறிப்புகள்-இல் இவ்வளவு ஒரு கடின களனை எடுத்துக்கொண்டு அதைவிடக் கடின நடையில் எழுதியது ஆச்சரியமாக இருக்கிறது. மனிதர்களின் மனங்கள் அவர்களைவிட விஸ்வரூபம் எடுத்து, அவற்றின் எண்ண ஓட்டங்களை அவர் சொல்லிக்கொண்டு போகும் விதம் அசாத்தியமானது.
புரிந்துகொள்ளக் கடினமான தத்துவச் சிந்தனைகளையும், மனங்களின் விசாரங்களையும் எழுதிக்கொண்டு போகும் வேகத்திலும் 'ஒரு புளியமரத்தின் கதையில்' காணப்பட்ட அவரது நையாண்டி கலந்த நகைச்சுவையையும் ஆங்காங்கே தூவிச்செல்ல மறக்கவில்லை. அந்நையாண்டிகளில்தான் சு.ரா.வை அடையாளம் கண்டுகொள்ளமுடிகிறது.
மேலைநாட்டு எழுத்தாளர்களைப் பற்றியும், அவர்களது மேலைமொழி ஆக்கங்களைப் பற்றியும் நம்மவர்கள் பீற்றிக்கொள்வதைப்பற்றியும், அண்டைய மாநில எழுத்தாளர்களைப் பற்றியோ, அம்மொழியில் வந்துள்ள இலக்கியங்கள் பற்றியோ எதுவும் தெரிந்துகொள்ளாமல் இருக்கும் அவர்களது அறியாமையைப் பற்றியும் சாடுவதிலிருந்து தொடங்கி ஜே.ஜே.சில குறிப்புகள் ஒரு எரிமலைகளைத் தொடர்களைக் குடைந்தமைத்த பாதையில் பயணிக்கும் உணர்வைக் கொடுக்கிறது.
"இந்தியக் குடியரசுச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பதினான்கு மொழிகளின் வரிவடிவத்தையாவது யாராவது ஒருதடவையேனும் பார்த்திருக்கிறீர்களா எனச் சில எழுத்தாளர்களிடம் கேட்டபோது, எல்லாருமே ஆயாசத்துடன் 'இல்லை' என்றார்கள். *நானும் பார்த்ததில்லை* என்ற உண்மையைச் சொல்லியும்கூட அவர்களை உற்சாகப்படுத்தமுடியவில்லை. இத்தாலிய எழுத்தாளனைத் தெரிந்தவனுக்கு கன்னட எழுத்தாளனைத் தெரியவில்லை. கா·ப்கா என்கிறோம். சிமோன் த பூவா என்கிறோம். போர்ஹே என்கிறோம். குட்டிக்கிருஷ்ண மாராரைத் தெரியாது என்கிறோம். கோபாலகிருஷ்ண அடிகாவைத் தெரியாது என்கிறோம்" என்பதிலிருந்து சாட்டையடி துவங்குகிறது.
"இந்திய மொழிகள் ஒவ்வொன்றின் இலக்கியத்தைப் பற்றியும், அம்மொழி பேசும் மக்களின் கலாசாரத்தைப் பற்றியும், அடுத்த மொழிகளில் அறிமுகப்படுத்தும்விதமாக தனித்தனிப் பத்திரிகைகள் துவக்கப்படவேண்டும் என்று நண்பர்களிடம் இருபதாண்டுகளாகச் சொல்லிவருகிறேன். இதற்கு 13 * 13 = 169 பத்திரிகைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற என் பேச்சைத் தீவிரமாக எடுத்துக்கொண்டவர்கள் என்னைச் சந்திப்பதைக் குறைத்துக்கொண்டுவிட்டார்கள். 'வெறும் கனவு' என்று எடுத்துக் கொண்டவர்கள் என்னைக் கண்டதும் முகத்தில் கவலையைப் படரவிட்டு, 'எத்தனை பத்திரிகைகளுக்கு ஏற்பாடுகள் முடிந்திருக்கின்றன?' என்று கேட்பார்கள். இக்கேலியை நான் பொருட்படுத்தவில்லை. இதைவிடச் சிறிய திட்டங்களைச் சொல்லி, இதைவிடப் பெரிதாகக் கேலிக்கு ஆளானவர்கள் உண்டு. இத்திட்டத்தின் முதல்படியாக பிறமொழி இலக்கியம் அறிமுகப்படுத்தும் தமிழ்ப் பத்திரிகையொன்றை ஆரம்பிக்கலாம் என்று சொன்னபோது என் எழுத்தாள நண்பர் 'தமிழ் வாசகன் எவனும் பிறமொழி இலக்கியம் படிக்கமுடியாவிட்டால் உயிரை விட்டுவிடுவேன் என்று சொல்லவில்லையே' என்று சொன்னதும் எனக்கு முகத்திலறைந்தாற் போலாயிற்று. 'நீங்கள் எழுதவில்லை என்று உண்ணாவிரதம் இருக்கும் வாசகன் எவன்?' என்று நான் கேட்டிருந்தால் எங்கள் உறவு அந்த நிமிஷத்திலேயே முறிந்துபோய் விடும். அவரும் பேசாவிட்டால் அப்புறம் நான் தனியே பேசிக்கொள்ள வேண்டிய நிலை இன்று. இந்நிலையில் நான் செய்யக்கூடியது என்ன என யோசித்ததன் விளைவு 'ஜே.ஜே.சில குறிப்புகள்'. "
என்று துவங்கும் இதை சு.ரா. சொல்லியிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு தொடர்ந்தால், சொன்னது 'பாலு' என்ற கதை சொல்லி!
பெரிய பாம்பில் கால்வைத்து சர்ரென்று வழுக்கி ஆரம்பக் கட்டத்திற்கு மறுபடியும் வந்து படிக்கத் துவங்குகிறேன் - பெருமூச்சு விட்டு!
No comments:
Post a Comment