Saturday, July 24, 2004

*** ஜே.ஜே. சில குறிப்புகள் பற்றிய சில குறிப்புகள் - 2 *** 

இன்னும் நினைவிருக்கிறது. ஆறாம் வகுப்பு ஆண்டிறுதியில் முதல் மாணவனாக வந்ததற்காக ஆண்டுவிழா நிகழ்ச்சியில் புது ஐம்பது ரூபாய்த் தாளையும் ஒரு புத்தகத்தையும் பரிசாகக் கொடுத்தார்கள். புத்தகத்தின் கதை 'ஒரு மரப்பாச்சியின் கதை'. ஆமாம் பினாக்கியோவேதான். அக்கதையில் தச்சன் செய்துவைத்த மரப்பாச்சி உயிர்பெற்று நடமாடுவதுபோல் கதை செல்லும். பினாக்கியோ ஒரு குறும்புப் பையன். பொய் சொல்லச்சொல்ல மூக்கு நீளமாக வளரும்! 

மரப்பாச்சி வைத்து விளையாடியிராத குழந்தைகள் அரிது எனலாம். செலவில்லாத, பேட்டரிகள் வேண்டியிராத, தீங்குவிளைவிக்காத எளிமையான பொம்மை, விளையாட்டுப் பொருள் என்று சொல்வதைவிட, மரப்பாச்சியை குழந்தைகளின் உற்ற தோழன்/தோழி எனச் சொல்லலாம். பெண் மரப்பாச்சியென்றால் ரவிக்கைத் துணியில் தைத்தது போக மிச்சம் விழுந்திருக்கும் துண்டுத்துணியில் அரையடி நீளத்திற்கு வைத்து முன்புறத்தை மறைத்து கக்கங்களில் துணி நுனிகளைத் திணித்துவிட்டால் போதும்.  ஆண் பொம்மைக்கு வெகுசில சமயங்களில் கலர் வேஷ்டி கட்டிய நினைவு. கோவணம் கட்ட வாகாக இல்லை. இத்தகைய மரப்பாச்சி பொம்மைகளுடன் தனியொரு உலகத்தில் நாம் ஒவ்வொருவரும் வாழ்ந்திருப்போம். குழந்தைகளும் மரப்பாச்சி பொம்மைகளும் மட்டுமே இருக்கும் உலகம் அது. நாங்கள் கூடி விளையாடும் விளையாட்டுகளில் மரப்பாச்சியையும் ஒரு கை சேர்த்துக்கொள்வோம். நான் சைக்கிள் ஓட்ட, தம்பி பின்னால் அமர, இருவருக்கும் நடுவில் மரப்பாச்சி பத்திரமாக இருக்கும். 'கெட்டியா பிடிச்சுக்கடா' என்று அடிக்கடி தலைதிருப்பாமல் சொல்லிக்கொண்டே இருப்பேன். 

ஜே.ஜே. சில குறிப்புகளிலும் மரப்பாச்சி வருகிறது. சு.ரா. குழைந்தையாகி அதை விவரித்திருப்பதைப் படிக்க நினைவலைகள் பின்னோக்கி தலைதெறிக்க ஓடுகின்றன.  

"என் சகோதரி ரமணிக்கு அப்போது ஏழு அல்லது எட்டு வயதிருக்கும். எனக்கு வயது ஐந்து அல்லது ஆறு. எங்களுக்கு ஒரு மரப்பாச்சி இருந்தது. இந்த வாக்கியம் எவ்வளவு பெரிய பொய். நாங்கள் ஒரு மரப்பாச்சியினால் உயிர்வாழ்ந்து கொண்டிருந்தோம் என்று சொல்லவேண்டும். உலகத்தின் சகல துக்கங்களையும் அந்த மரப்பாச்சியினால் தாங்கிக்கொண்டிருந்தோம். இதை மறுக்கும் தருக்க சாஸ்திரி மீது எனக்குத் துளிகூட மதிப்பு கிடையாது. அந்த மரப்பாச்சியின் புறத்தோற்றத்தை நாங்கள் அப்போது பார்த்திருக்கவில்லை. அதன் வெட்டு, சிராய்ப்பு, தடங்கள் எதுவும் எங்களுக்குத் தெரியாது. அதைக் குழந்தையாகக் கண்ட எங்கள் கற்பனையைத்தான் நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம். என்ன காரணம் என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. அந்தக் குழந்தையை நோய் பிடுங்கித் தின்றுகொண்டிருந்தது. (என் தாய் நோயுற்றுப் படுக்கையிலேயே இருந்ததாலோ என்னவோ). காலை நேரங்களில் பயங்கரமான காய்ச்சலும், பிற்பகல்களில் பயங்கரமான வயிற்றுப்போக்கும். நாசித் துவாரமும் கண்களும் மட்டும் வெளியே தெரியும்படி ரமணி அதைப் போர்த்தி வைத்திருப்பாள். அரை மணிக்கு ஒரு தடவை தெர்மாமீட்டர் வைத்துப் பார்க்கவேண்டும். கால் மணிக்கு ஒரு தடவை மருந்து. கசக்காமல் இருக்கத் துண்டுச் சர்க்கரை. மாத்திரையை அதற்கு முழுங்கத் தெரியாததால் பொடிபண்ணிக் கொடுப்போம். நெற்றியில் ஈரத் துணியை மாற்றி மாற்றிப் போட்டுக்கொண்டிருப்பாள் ரமணி. பத்தரை மணிக்கு டாக்டர் பிஷாரடி வருவார். 'டாக்டர் வந்தாச்சு' என்று ரமணி சொன்னதும் நாங்கள் இருவரும் கேட் வரையிலும் ஓடிச்சென்று அவரை வரவேற்று, அவருக்கு இரு பக்கமுமாக வருவோம். அவர் கேட்டைத் திறந்து முதல் காலடி வைத்ததும், நான் தயார் நிலையில் நின்று, அவருடைய மருந்துப்பெட்டியை வாங்கிக்கொண்டுவிடவேண்டும். இதில் ரமணி கண்டிப்பு. இதைச் செய்யத் தவறியதற்கு அவள் என்னை பயங்கரமாகக் கிள்ளியிருக்கிறாள். கிள்ளலில் வலியால் துடித்து மரத்தடியில் உட்கார்ந்து துடையைப் பார்த்துக்கொண்டே அழுவேன். ஆனால் அவள் செய்தது தவறு என்று ஒருபோதும் நினைத்ததில்லை. டாக்டர் கையிலிருந்து மருந்துப்பெட்டியை தவறிப்போனேன் என்றால் என்னைக் கொன்றுவிட வேண்டும். குழந்தையின் உயிரைக் காப்பாற்ற ரமணி தன்னை உருக்குலைத்துக்கொண்டிருக்கும்போது இதுகூட எனக்குச் செய்யத் தெரியவில்லை என்றால், என்னைக் கொன்றுவிடுவதுகூட நியாயம்தானே. 

நான் மருந்துப்பெட்டியை வாங்கிக்கொண்டது ரமணி பேச ஆரம்பிப்பாள். விடியற்காலை ஐந்து மணிக்கு அவள் அசப்பில் எழுந்து பார்க்கும்போது ஜூகியின் (குழந்தையின் செல்லப்பெயர். பெயர் சுகன்யா) உடம்பு பொரிந்துகொண்டிருந்ததாம். 'நேற்று இரவுகூட கொட்டக்கொட்ட முழித்துக்கொண்டு நன்றாக விளையாடிற்றே. என்ன டாக்டர்? ஒவ்வொரு தடவை எண்ணை தேய்த்துக் குளிப்பாட்டும்போது இந்தக் குழந்தைக்கு மலையாய் வந்துவிடுகிறதே. எப்படி இதை வளர்ப்பேன்? எப்படி நான் இதைக் காப்பாற்றி எடுப்பேன்?' என்று கேட்பாள் ரமணி. அவள் தொண்டை இடறும். 

மத்தியானம் எங்கள் உடல்கள் அடுக்களையில் இருக்கும்போது எங்கள் முன் தட்டுகளில் கை விரல்கள் அசையும். நிழல்கள். வீடு, அப்பா, அம்மா, மரங்கள், பசு அனைத்தும் நிழல்கள். மரத்தடிக் குழந்தை நிஜம். அதன் நோய் நிஜம். அதற்கு நாங்கள் எங்கள் உயிரைக் கரைத்துச் செய்யும் சிகிச்சை நிஜம். அடுக்களையில் 'எப்போது குழந்தைக்குக் காய்ச்சல் குறையும்?' என்று நான் பாவனையால் கேட்கிறேன். ரமணி சிறிது யோசித்துவிட்டு, எச்சில் விரல்கள் இரண்டை நிமிர்த்தி, பாம்பு விரலை ஒரு தடவை மடக்கி, மீண்டும் நிமிர்த்துகிறாள். இதற்கு அர்த்தம் இரண்டரை மணி என்பது.  

அதேபோல் இரண்டரை மணிக்குக் காய்ச்சல் குறையும். நன்றாகக் குறைந்துவிடும். குழந்தைக்கு வேர்த்துவிடும். போர்வையை அகற்றிவிட்டு பஞ்சுபோன்ற துணியால் ரமணி உடலைத் துடைப்பாள். கட்கம், புறங்கழுத்து, துடையிடுக்கு எல்லாம் துடைப்பாள். குழந்தை முகம் பார்த்துச் சிரிக்கும்." 

குழந்தையாகி விடுகிறோம். எத்தனை யதார்த்தம். ஜே.ஜே. என்று ஒரு, உலகத்து நம்பிக்கைகளை உடைத்தெறிந்து உண்மைகள் வேறு என்பதை கிழித்துக்காட்டும், தீவிர சிந்தனையாளனின் எண்ண ஓட்டங்களிலிருந்து, குழந்தையின் மனநிலைக்குத் தாவி கடப்பாரை நீச்சல் நீந்துகிறார் சு.ரா. இரு துருவ மனோநிலைகளை அடுத்தடுத்த பக்கங்களில் எழுதுவது எவ்வளவு அசாதாரணமானது என்று மலைத்துப் போகிறேன். 

கோட்டயம் முன்னேற்ற எழுத்தாளர் மாநாட்டுக்கு ஜே.ஜே. வருவான்; சந்தித்துவிடலாம் என்று ஆர்வத்துடன் வரும் பாலு அங்கு திருச்சூர் கோபாலன் நாயரைச் (சரித்திர நாவலாசிரியர்) சந்தித்து மாநாட்டுக்குப் போகிறான். ஜே.ஜே.யைச் சந்திக்கவிரும்புகிறேன் என்றதும் அவனை வினோதமாகப் பார்த்த திருச்சூர் ஜே.ஜே.யின் எழுத்துகள் புரிவதில்லை என்கிறார். அவரது சரித்திர நாவலைப் பற்றி ஜே.ஜே. சொல்லியிருந்தது அவரை போர்க்குதிரையிலிருந்து குப்புற விழுந்த வீரனின் மனோநிலைக்குக் கொண்டுசென்றுவிட்டது. ஜே.ஜே.யின் அந்தக் குறிப்பில் 'கற்பனைக் காட்டில் வேட்டியைக் கிழித்துக்கொண்டு அங்குமிங்கும் பாயும் பைத்தியங்களின் முதுகில் ஐந்தாறு சாத்து சாத்தியிருந்தான்' என்று பாலு நினைத்துப் பார்க்கிறார். குறிப்பாக திருச்சூரின் நாவலைப் பற்றி ஜே.ஜே. இப்படிச் சொல்லியிருக்கிறான். 

"கொல்லங்கோட்டு இளவரசி உம்மிணிக்குட்டியை அவளைத் துரத்திய அரசர்களிடமிருந்தும் முடிவில் அவளைக் காப்பாற்றிய இளவரசனிடமிருந்தும் விடுவித்து, திருச்சூர் கோபாலன் நாயருக்கே மணம் முடித்து வைக்க என்னால் முடியுமென்றால், சரித்திர நாவல் எழுதும் அவஸ்தையிலிருந்து அவருக்கு நிரந்தர விமோசனம் கிடைக்கும். ஆனால் கடவுளே! எனக்கு அந்தச் சக்தி இல்லையே!" 

திருச்சூரின் புலம்பலில் ஜே.ஜே.யின் மீதுள்ள மறைமுக மதிப்பும் நிதானமாக வெளிப்படுகிறது என்று படிக்கையில் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை. 

"ஜே.ஜே.யைப் படித்தபோது நான் நம்பும் உலகத்தை இல்லாமல் ஆக்கிவிடுவானோ என்ற பயம் ஏற்பட்டது. கனவுகளுக்கு அவன் எதிரியென்றால் எனக்கு அவை தின்பண்டம்". 

'உலகநியதிகள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறையில் இருக்கின்ற ஒவ்வொன்றையும் மறுத்துப் பரிகசிக்கும் ஜே.ஜே.யைப் போன்று ஒரு நண்பன் இருந்திருந்தால் நான் என்னவாகியிருப்பேன்' என்று பாலு போலவே யோசிக்கிறேன்.  

"நமது நம்பிக்கைகளுக்கும் உண்மைக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்லி உரித்துக்கொண்டே போனால் எதை நம்பி நான் உயிர் வாழ்வேன்?"

இக்கேள்வி பாலுவிற்கு எழுந்தது போலவே எனக்குள்ளும் எழுந்தது. மேற்கொண்ட வாக்கியத்தை மனதில் சிலமுறை சொல்லிப்பாருங்கள் - தனிமையில். அதிர்ச்சியாக இல்லை? 

"நமது நம்பிக்கைகளுக்கும் உண்மைக்கும் சம்பந்தமே இல்லை". இது உண்மையென்று திடீரென்று நிரூபிக்கப்பட்டுவிட்டால் அந்த அதிர்ச்சியை நாம் தாங்குவோமா? நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு பொருளையும் பற்றிக்கொண்டு ஏறும் வாழ்க்கையில் அவ்விதப் பற்றுதல்களனைத்தும் பொய்யெனச் சொன்னால் மேல்கீழ் இல்லா ஆதியந்தமில்லா சூன்யத்தில் தொங்க ஆரம்பித்துவிட மாட்டோமா? என்ன இது? இப்படியெல்லாம் யோசிப்பானா ஒருத்தன்? 

"ஜே.ஜே.யின் ஈவிரக்கமற்ற தன்மையில் மாற்றமே இல்லை. சமரசத்தின் இடைவெளிகள் அற்ற மரணப்பிடி, எதைப் பிடித்துப் பேசும்போதும். இல்லாததை இருப்பதாகக் கற்பனை செய்துகொள்வதில் நாம் பெறும் சிறு ஆசுவாசத்தை அவன் நமக்குத் தரவே மாட்டான். அவன் உண்மையை நிர்தாட்சண்யமாகப் பிடிக்கும்போது எனக்கு பயமாக இருக்கிறது". பாருங்கள் பாலுவும் நம்பிக்கைகளுக்கும் உண்மைக்கும் சம்பந்தமில்லையென்று எண்ணத் துவங்கிவிட்டான்.  

நான் முழுதும் ஜே.ஜே.சில குறிப்புகளைப் படித்து முடித்ததும் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று நான் நம்புவதற்கும், உண்மைக்கும் சம்பந்தமில்லையென்று கணிணித் திரையில் ஜே.ஜே.வும் பாலுவும் கைகொட்டிச் சிரிப்பது போன்று பிரமை எனக்கு. எனக்கும் பயமாக இருக்கிறது.  

தொடரும் 

*** 

No comments: