நினைவலைகள் - *** நவராத்திரி ***
சேந்தி என்பது கிட்டத்தட்ட மர ஊஞ்சல் மாதிரிதான். நல்ல பலகையும், இரும்புச் சங்கிலியும் இல்லாது, சுமாரான பலகை ஒன்றை நார்க்கயிற்றில் இருபக்கமும் பிணைத்து, கூரையிலுள்ள மூங்கில் கம்புகளில் ஏற்றிக் கட்டி, சுவரையொட்டி ஒரு க்ளாம்ப் அடித்துவிட்டால் பரண் தயார். இன்றைய நவநாகரீக சிமெண்ட் பெட்டி வீடுகளில் ஸ்டோர் ரூம் என்று பெட்டிக்குள் இன்னொரு தீப்பெட்டி வைத்குக் கொள்வது போல் அன்றைய வீடுகளில் வசதிகளில்லை. ஏன், இன்றும் சிமெண்ட் ஸ்லாப்புகளை வைத்து பரண் கட்டாத வீடுகள் மிகவும் குறைவே.
வத்திராயிருப்பு வீட்டிலும் மரப்பலகைப் பரண்கள் இருந்தன. வீட்டில் புழங்குவதைவிட அதிக சாமான்கள் பரண்களில் இருக்க வேண்டுமென்பது நியதி. அதுவும் கூட்டுக் குடும்பங்களில் குடி புகும் பெண்கள் பிறந்த வீடுகளிலிருந்து கொண்டு வந்த பாத்திரங்களையும், மற்ற சாமான்களையும் வைத்துப் பாதுகாக்க இருக்கும் ஒரே இடம் பரண்தான். இன்றும் ஸ்ரீரங்கத்து ·ப்ளாட் பரண்களில் இடைவெளியில்லாது பெட்டிகள் அடைக்கப் பட்டிருக்கின்றன. என் அம்மா அவரது திருமணத்திற்கு பாட்டி வீட்டிலிருந்து கொடுத்த வெண்கலப் பாத்திரங்களும் - இன்றைய தேதிகளில் திருமண மண்டப சமையலறையில் மட்டும் பார்க்க முடியுமளவிற்குப் பெரிய பாத்திரங்கள்! அக்காலக் கூட்டுக் குடும்ப வீடுகளில் சமைக்கத் தேவையான பெரிய பாத்திரங்களும் - டிரங்குப் பெட்டிகளும், மரப்பெட்டிகளும் (இதைப் 'பெட்டாரம்' என்று தாத்தா சொல்வார்) நிறைந்திருக்கின்றன். அக்கால மரப் பரண்களுக்கும், இக்கால சிமெண்ட் பரண்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தாலும் மாறாதது ஒட்டடை-எனப்படும் நூலாம்படை-யே!
பரணில் தூங்கிக் கொண்டிருக்கும் பெட்டிகளைப் பற்றிய நினைவு பறந்துபோகும் நிலையில் நவராத்திரி வந்துவிடும். வீட்டுக் கொல்லையில் கைவிடப்பட்ட படகைப் போல மண்ணில் பதிந்து கிடக்கும் ஏணியைக் கழுவி கொண்டு வந்து சாய்த்து நிறுத்தி, ஒவ்வொரு பெட்டியாக மெதுவாகக் கீழே இறக்குவதிலிருந்து நவராத்திரி களை கட்டத் தொடங்கி விடும். அதுவரை வீட்டில் பல்வேறு விதமாகப் பயன்பட்ட பெட்டிகளும், ஸ்டூல்களும், பலகைகளும் விடுவிடுவென்றுப் படிகளாக மாறிவிடும். அன்றாடப் பயன்பாட்டுக்குத் தேவையான எந்தப் பொருளும் அப்படிகளுக்குள் மாட்டிக்கொண்டு விடாமல் வேட்டிகளைப் போர்த்தி மூடுவதற்குள் சோதித்துக் கொண்டு விட்டால் நல்லது. இல்லையென்றால் நவராத்திரி முடிய காத்திருக்கவேண்டும். இப்படித்தான் ஒருமுறை புத்தகங்களைப் பெட்டியில் வைத்துவிட்டு என் அப்பாவிடம் அடிவாங்கியது நினைவிருக்கிறது.
வேட்டிகளைப் போர்த்தியவுடன் படிகளுக்கு ஒரு தனி அழகு வந்துவிடும். அவ்வப்போது கூரையிலிருந்து விழும் தூசிகளைத் துடைத்துவிட்டுக் கொண்டிருப்பேன். இதெல்லாம் கொலு பொம்மைகள் படிகளில் வைக்கப்படும் வரைதான். பொம்மைகள் வைக்கப்பட்டு, பூஜை செய்த வினாடியிலிருந்து, அந்தப் பகுதியைச் சுற்றிக் கண்ணுக்குத் தெரியாத பக்தி வேலி ஒன்று முளைத்து எல்லாம் 'மடி'யாகிவிடும். தப்பித் தவறியும் பொம்மைகளையோ, படிகளையோ தொடக்கூடாது. தொட்டால் போயிற்று. பக்தி வேலி மின்சார வேலியாக மாறி அப்பாவின் கைகள் மூலமாக முதுகில் பளீரென்று இறங்கும்.
கொலு பொம்மைகள் அடைந்து கிடக்கும் மரப்பெட்டிகளைத் திறந்து, கத்தரித்த காகிதத் துணுக்குகள், வைக்கோல் பிரிகள், கிழிந்த துணி போன்றவற்றில் சுற்றிக் கொண்டிருக்கும் பொம்மைகளை ஒவ்வொன்றாய் எடுத்து துடைத்துக் கொடுக்கக் கொடுக்க அத்தைமார்கள் படிகளில் அவற்றை ஏற்றத் தொடங்குவார்கள். செட்டியார் பொம்மையும், தசாவதார வரிசையில் குழலூதும் கிருஷ்ணன் பொம்மையும் எனக்குப் பிடித்த பொம்மைகள். செட்டியார் அவரது தொந்திக்காகவும், கிருஷ்ணர் அந்த நீல நிறத்திற்காகவும். தனித்துத் தாழ்ந்து நிற்கும் வாமனர் பொம்மையும்தான். பின்பு மான்கள், யானைகள் போன்ற மிருகங்களும், மற்ற கடவுளர் பொம்மைகளும் வைக்கப் பட்டு, நடுநாயகமாக ஒரு செம்பில் தேங்காயைச் சுற்றி மாவிலைகள் நீண்டிருக்க கொலு களைகட்டி விடும். மரப்பாச்சி பொம்மைகள் கீழ்ப்படியில் வீற்றிருக்க, அவற்றுக்கு கிழிந்த சேலைத் துணியும், வேட்டித் துணியும் அணிவித்து ஆண்பெண் வித்தியாசங்களைக் கொண்டுவந்து விடுவார்கள்.
எனது அனைத்து உடைந்த, நல்ல நிலையிலிருந்த செப்புச் சாமான்கள் அனைத்தும் கொலுவில் குடிகொண்டுவிடும். கொலுப் படிகளைத் தவிர்த்து தரையில் மணலால் சிறு சுவர் எழுப்பி, அதற்குள் இலை, தழைகளையும், மரச்சாமான்கள், பிளாஸ்டிக் பெஞ்சுகள் கொண்டு சிறிய பூங்கா ஒன்றை எழுப்பிவிடுவேன். ஒரு நீச்சல் குளம் கூட கட்டி அதில் காகிதப் படகுகள் விட்டிருந்தேன்.
சிலுவையில் அறையப்பட்டிருக்கும் ஏசுநாதரின் உருவம் எனக்கு மிகவும் பிடித்தமானது. காசிக் கயிற்றில் சிலுவையைக் கட்டி, கழுத்தில் தொங்கவிட்டுக் கொள்ளவேண்டும் என்ற எனது அந்நாளைய இலட்சியம் நிறைவேறவே இல்லை. பீங்கான் பொம்மைகள் வெகு விசேஷம். சந்தடி சாக்கில் ஒரு மேரிமாதா பீங்கான் பொம்மையை படியில் பொம்மைகளுக்கிடையில் ஏற்றிவிட்டு நவராத்திரி தொடங்கிவிட்டதில் அப்புறம் கவனிக்கப்பட்டு அடிவாங்கினாலும், மேரிமாதா நவராத்திரி முடியும் வரை கொலுவீற்றிருந்தார்.
அந்தி வேளையில் வீட்டு வாசல்களில் ஏற்றப்படும் அகல் விளக்குகள் தெருவெங்கும் ஜெகஜ்ஜோதியாக இருக்க, ஆங்காங்கே ஊதுவத்தி வாசனை காற்றில் மிதந்துவர கோயில் மணியோசை கேட்டுக் கொண்டேயிருக்க, கோபுரத்திலிருந்து அவ்வப்போது சடசடத்துப் பறந்து, வட்டமிட்டுவிட்டுத் திரும்பும் புறாக் கூட்டங்களின் பின்னணியோசையுடன் சூழ்நிலையே ரம்யமாக இருக்கும் அந்தச் சொர்க்கங்கள் காணாமல் போனதில் எனக்கு நிரந்தர வருத்தமுண்டு. அவ்வப்போது கடந்து செல்லும் மிதிவண்டிகளும், மாட்டு வண்டிகளும் மட்டுமே வாகனப் போக்குவரத்தாக இருந்த காலகட்டம் தொலைந்து போய் இப்போது தெருக்களில் தார் போடப்பட்டு, இருசக்கர வாகனங்கள் இடைவிடாது சீறிக்கொண்டிருக்க, வீட்டுக் கதவுகள் எந்நேரமும் பூட்டப்பட்டேயிருப்பது சோகம்.
பெண்மணிகள் பரஸ்பரம் ஒருவரையொருவர் அவரவர் வீட்டு கொலுவைப் பார்ப்பதற்கு வெற்றிலை பாக்குத் தட்டுடன் அழைப்பு விடுத்துக்கொண்டு, அலங்கரித்துக் கொண்டு வீடுவீடாகச் சென்று அவரவர் சங்கீத ஞானத்தையும், பாடும் திறனையும் பரிசோதித்துக் கொள்ளும் களமாக கொலு வைக்கப் பட்ட வீடுகள் விளங்கும். விசேஷத்திற்கென்றே பூட்டிவைத்திருக்கும் புடவைகள் பீரோவிலிருந்து வெளிக் கிளம்பி வீதிகளில் உலா வரும். அத்தைகளுடனும், அம்மாவுடனும் ஒட்டிக்கொண்டு அழைப்பு விடுத்த உறவினர்கள், அக்கம் பக்கத்து வீடுகளுக்குச் செல்வேன். என் அம்மா கர்நாடக சங்கீதம் முறைப்படி கற்றுப் பாடுபவர். கணீரென்று பாடுவார். அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. கொலு முன் கும்பலாக அமர்ந்ததும் அவர் சம்பிரதாயமாகப் பாடுவார். கூடவே ஏகப்பட்ட பெண்மணிகளும் ஆடாது அசையாது பாடுவார்கள். என் கண்கள் கொலு பொம்மைகளில் உறைந்திருக்க, மூக்கு 'இங்கு என்ன சுண்டல் இன்று?' என்று வாசனையைத் தேடி அலைந்து கொண்டிருக்கும். அந்த வீட்டுக்கார பெண்மணியொருவர் பவ்யமாக வந்திருக்கும் பெண்களுக்கு வெற்றிலைபாக்கு குங்குமம் கொடுத்துவிட்டு, சுண்டல் பொட்டலம் ஒன்றையும் கொடுக்க, பொட்டலத்தின் வடிவத்தை வைத்தே அது எந்தச் சுண்டல் என்று பெரும்பாலும் கண்டுபிடித்துவிடுவேன். முண்டுமுண்டாக இருந்தால் நன்றாக ஊறிய கொண்டைக்கடலை சுண்டல்; எண்ணெய் படிந்திருந்து, வளைவுகளின்றி இருந்தால் பருப்புச் சுண்டல். மிகப்பெரிய பொட்டலமாக இருந்தால் கால்கிலோ பொரியும், ஒரு ஸ்பூன் கடலையும் கலந்த பொரிகடலை ; ஈரம் படிந்திருந்தால் வேகவைத்த வேர்க்கடலை - இப்படிப் பலவிதம்.
பெண்மணிகளுடன் தொற்றிக் கொண்டு குழந்தைகளுடன் வந்திருந்தால் வீட்டுக்காரப் பெண்மணிக்கு இரத்த அழுத்தம் எகிறிவிடும். 'அதைத் தொடாதே இதைத் தொடாதே' என்று எச்சரித்துக்கொண்டும் அதட்டிக்கொண்டும் இருக்க, குழந்தைகளைக் கொண்டுவந்த பெண்மணிகள் அரட்டைகளில் ஆழ்ந்திருப்பார்கள். அவ்வளவையும் மீறி, பொம்மைகளை எடுத்தும், உடைத்தும் சில குழந்தைகள் செய்த விஷமங்களினால் இருவீடுகளுக்கிடையே ஜென்மப் பகை நிலவியதும் உண்டு. பகை கொலுவோடு முடியாமல் நல்ல தண்ணீர் பொதுக்குழாயின் குடங்களின் வரிசைகளில் குடத்தை இடித்து நெளிவு ஏற்படுத்துவதுவரை வந்து முடியும். எவர்சில்வர் குடங்களின் விளிம்புப் பகுதியில் உள்கூட்டில் பால்ரஸ் எனப்படும் மணிகளை நிரப்பி குடங்களைக் கையாளுகையில் சிலிங் சிலிங் என்று அவை ஏற்படுத்தும் சத்தம், அதைச் சுமந்து இடை நனைய வரும் பெண்களுக்கு இன்னும் அழகு சேர்க்கும்!
அம்மாவுடனோ அத்தைகளுடனோ போவதில் பெரிய சிரமம் குறைந்த வீடுகளையே அடைய முடிவது. மாலை ஆறுமணிக்குத் தொடங்கினால் ஐந்தாறு வீடுகளில் பாடிமுடித்து அரட்டை முடித்து சுண்டல் வசூல் முடிப்பதற்குள் ஒன்பது மணியாகிவிடும். நவராத்திரியின் முதல் சிலதினங்களில் இத்தகைய உலாக்களை முடித்துக்கொண்டு பின்பு நண்பர்களோடு வீடுகளுக்கு வெட்கங் கெட்ட விஜயத்தைத் தொடங்கி விடுவேன். ஆமாம் - நானும் நண்பர் படையும் சுண்டல் வசூலுக்குக் கிளம்பி விடுவோம். அழைப்பு இருக்கிறதோ, இல்லையோ எதைப் பற்றியும் கவலைப் படாமல் எங்கள் நடுத்தெருவிலிருக்கும் வீடுகளில் ஒன்று விடாமல் நுழைந்து வெளி வருவோம். ஜிம்மி மட்டும் வாலை ஆட்டிக் கொண்டு வீடுகளின் வாசல்களில் காத்திருக்கும். அனேகமாக தெருவில் நாங்கள் வளர்த்த நாய்கள் எல்லாமே சைவ நாய்கள்தான். சுண்டல், வாழைப் பழம், அப்பளம் என்று எல்லாவற்றையும் தின்பவைதான். புலியொன்று இருந்தால் அதையும் புல் தின்ன வைத்திருப்போம்.
இப்படி அழைப்பின்றி திடுமென வீடுகளில் நுழைந்ததும் மூன்றுவிதமான வரவேற்புகள் கிட்டும். ஒன்று - சுண்டலை அளவு தெரியாமல் நிறைய செய்துவிட்டு வந்தவர்களுக்குத் தாராளமாகக் கொடுத்தது போக இன்னும் பாதி பாத்திரம் மீதியிருக்கும் வீடுகளில் கிடைப்பது - முகம் நிறைய சிரிப்புடன் 'அம்பீ... வா...வா.... வந்து சுண்டல் வாங்கிக்கோ' என்று கொலுவைக் கூட பார்க்க விடாமல் திண்ணையிலேயே நிறுத்தி, பெரிய செய்தித்தாள் நறுக்கில் சுண்டலை நிரப்பிக் கொடுத்துவிடுவார்கள். அன்றைய கோட்டா அத்துடன் முடிந்து வேறு வீடுகளுக்குச் செல்லவேண்டிய அவசியமே இராது - அவ்வளவு சுண்டல். இரண்டாவது அளவாகச் சுண்டல் செய்து பெற்றோர், தாத்தா, பாட்டியில் முகதாட்சண்யத்திற்காக எங்களை உள்ளே விட்டு கையை நீட்டச் சொல்லி ஸ்பூனில் சுண்டலை உள்ளங்கை நெல்லிக்கனியளவிற்குக் கொடுத்தனுப்புவது - இல்லாவிட்டால் பொரிகடலை கொடுத்து நிரப்பியனுப்புவது. மூன்றாவது ஒரு வயசாளியைத் திண்ணையில் காவலுக்குப் போட்டு, திண்ணைக் கதவை மூடிவிட்டு, வாசலிலேயே நிற்கவைத்து, "கொலு கிடையாது - போங்கப்பா" என்று துரத்துவது - நீளமான அவ்வீடுகளின் உள்ளே பெண்கள் அமர்ந்து பாடிக்கொண்டிருப்பது தெரியும்.
அழைத்தும் யாரும் வராத ஏழைபாழை (அதென்ன பாழை?) வீடுகளில் சிலசமயம் ஊசிப்போன சுண்டல் கிட்டும் - முகஞ்சுளிக்காது அவர்கள் முன்பே தின்று அவர்களை மகிழச் செய்வோம்.
சில நாட்கள் கையில் தூக்குச்சட்டி ஒன்றை வைத்துக்கொண்டு வசூலான சுண்டல்களைச் சேர்த்துவைத்து (பொரி கடலையும் தான்) மூடி போட்டு மொத்தமாகக் குலுக்கி 'கதம்பச் சுண்டலாகச்' சாப்பிடுவோம்.
பணக்கார வீடுகளில் பிரம்மாண்டமாக கொலுப்படிகள் கட்டி நூற்றுக் கணக்கில் பொம்மைகளும், தரையில் பூங்கா, காடுகள், பொருட்காட்சி, ராட்டினங்கள், திருடன் போலீஸ் என்று தூள் பறக்கும். சீரியல் செட் விளக்குகள் மின்னிக்கொண்டு வண்ணவண்ணமாக வெளிச்சம் தூவும்.
சில வீடுகளை நெருங்கும் முன்பே நண்பர்களில் யாராவது ஒருவன் 'டே, இங்க இந்த வருஷம் கொலு கிடையாதுடா! மூணு மாசம் முன்னாடிதான் அந்தத் தாத்தா செத்துப் போனாரு' என்று எச்சரிக்கை விட, நாங்கள் அமைதியாக அந்த வீட்டைக் கடந்து செல்வோம். கடந்து செல்கையில் திண்ணையில் முக்காடிட்டு மொட்டைத்தலையுடன் கால்களை நீட்டிக் கொண்டு தடிமனான கண்ணாடியணிந்து அமர்ந்திருக்கும் பாட்டியை ஓரக் கண்ணால் பார்க்கத் தவறுவதில்லை.
உறவினர்கள் வீட்டுக்குப் போனால் ஒரு தொல்லை. 'யாரு? சுலோச்சனா மகனா? வா.. வா... ஒங்க அம்மா நன்னா பாடுவாளே. நீயும் ஒரு பாட்டுப் பாடு. கேப்போம்' என்று தவறாது கேட்க நானும் எனக்குத் தெரிந்த (கேள்வி ஞானம்!) 'மருக்கே ல ரா'வை பாடிவிட்டுச் சுண்டல் வாங்கி வருவேன். நேயர் விருப்பம் எதுவாயினும் எப்போதும் 'மருக் கே ல ராஆஆஆ' தான். முசிறிக்குச் சென்றதும் சற்று முன்னேற்றமடைந்து 'நமோ நமோ பிருந்தாவன'வும் 'பண்டூ..ரீ...த்தி...கோலு'-வும் பாடியிருக்கிறேன். 'நமோ நமோ'வின் வேகமான தாள லயம் மிகவும் பிடிக்கும்.
கொத்துக் கடலைச் சுண்டலைவிட சுண்டல் பாத்திரத்தின் அடியில் மிஞ்சியிருக்கும் எண்ணையும், காரமும், நீரும், கடுகும் கலந்திருக்கும் திரவத்தின் சுவை அபரிமிதமானது. அதை அப்படியே குடித்தும், சோற்றில் போட்டு குழம்புபோல் பாவித்துப் பிசைந்தும் எச்சிலூறத் தின்பேன். அதீதமாகச் சுண்டல் தின்றதின் 'பின் விளைவு'கள் மறுநாள் காலையில் கொல்லைப் புறத்தில் வேகமாகத் தெரியும் - இருந்தாலும் சுண்டல் தின்ன அலுத்ததே இல்லை.
நவராத்திரி சமயத்தில் ஒவ்வொரு வருடமும் வத்திராயிருப்பு இராமகிருஷ்ணா டூரிங் கொட்டகையில் 'நவராத்திரி' படத்தைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். தொலைக்காட்சி வந்த பிறகு, தூர்தர்ஷனில் அதே படத்தைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது சாட்டிலைட் தொலைக்காட்சி ஊடகங்கள் வந்தும் இன்னும் ஆங்கிலப் புத்தாண்டு அன்று, பாடல் முதல் வரி பொருந்தியிருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக சகலகலா வல்லவனில் வரும் 'இளமை இதோ இதோ' பாடலைப் போடுவதைப் போல.
சட்டென்று நவராத்திரி முடிந்து தெருவில் அமைதி குடிகொண்டுவிடும். பெண்களும் மாலைவேளை வீதியரட்டைகளுக்குத் திரும்பிவிடுவார்கள். பூஜை முடித்துவிட்டு அப்பா சைகை காண்பிக்க, பரணிலிருந்து காலிப் பெட்டிகளை இறக்கி, பொம்மைகளை ஒவ்வொன்றாய் காகிதம், துணி கொண்டு சுற்றி பவ்யமாக எடுத்து வைப்போம். பெட்டிகள் பரண் ஏறியதும், படிகளைப் போர்த்தியிருக்கும் வேட்டித் துணிகளை - நிறைய அட்சதைகளும், குங்குமமும் படிந்து கலவையானதொரு வண்ணத்திலிருக்கும் - எடுத்து உதறிச் சலவைக்குப் போடுவதற்காக மூலையில் போடுவேன். சிலசமயம் வேட்டியின் ஓரங்களில் சுண்டலின் எண்ணைப் பசை தேய்க்கப் பட்டிருக்கும்.
படிகளை - பெட்டிகளையும் மரப்பலகைகளையும் - ஒவ்வொன்றாகப் பிரித்து அதனதன் இடங்களில் வைத்துவிட்டுத் தரையைக் கூட்டினால் முடிந்தது. சுவற்றையொட்டி வைக்கப்பட்ட உயரமான பெட்டாரத்தைக் கடைசியில் நகர்த்தி மூலையில் தள்ள வேண்டும். பெட்டாரம் முழுவதும் பாத்திரங்கள் நிறைந்து கனமாக இருக்கும். சில சமயம் பெட்டாரத்தை நகர்த்தியதும் அதற்கும் சுவருக்கும் இடையிலான இடைவெளியில் ரோஜாநிற எலிக்குட்டிகள் தரையில் கண்மூடி புரண்டு கொண்டிருப்பதுண்டு. அப்பொழுது பெட்டாரம் அங்கேயே நிலைகொண்டுவிடும் - அவை வளர்ந்து, இடைவெளியிலிருந்து வெளிவந்து ஓரிரவில் காணாமல் போகும் வரை.
அக்காலங்களில் வீடுகளைத் தொலைக்காட்சிகளும் மெகா சீரியல்களும் ஆக்கிரமிக்கவில்லை. தெருக்களை வாகனங்கள் ஆக்கிரமிக்கவில்லை. தனிக் குடித்தனங்கள் பெருகி 'உனக்கு நான்; எனக்கு நீ' என்று உழக்குப் பெட்டிகளில் வாழவில்லை. அடுக்கடுக்காகக் கட்டிடங்கள் கட்டியதில் வாசலில் சாண நீர்த் தெளித்துக் கோலம் போடுவது என்பது தொல்பொருள் விஷயமாக ஆகி விடவில்லை. பிளாஸ்டிக் பூஞ்செடித்தொட்டிகள் ஆங்காங்கே மூலையில் சாய்ந்திருக்கவில்லை.
இன்றைய தலைமுறைக் குழந்தைகள் கொலுவென்றால் என்னவென்று தெரிந்துகொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை அடுக்குமாடி வீடுகளில் அவர்களை சோபாக்களில் ஸோனி ப்ளே ஸ்டேஷனில் ஆழ்த்தி, தனிக்குடித்தன, வேலைக்குச் செல்லும் அப்பாவும் அம்மாவும் ஆளுக்கொரு புத்தகத்திலோ கணினியிலோ 'நீயும் பொம்மை நானும் பொம்மை நினைத்துப் பார்த்தால் எல்லாம் பொம்மை' என்று காதுகளுக்குக் கேட்காமல் மனதிற்குள் அனிச்சையாய் பாடிக் கொண்டு நவராத்திரியை நினைவுறுத்தி, பீங்கான் கிண்ணத்தில் ஸ்பூன் ·போர்க்குகளுடன், மென் தாள் சகிதமாகச் சமையல்காரப் பெண்மணி கொண்டுவந்து தரும் சுண்டலை அசைபோட்டு கோக்கையோ பெப்ஸியையோ உறிஞ்சிக் கொண்டிருக்கலாம்.
***
2 comments:
சுந்தர்!
உங்களின் இந்தப் பதிவை ரொம்பவும் அனுபவித்துப் படித்தேன். நானும் "வெட்கங்கெட்ட விஜயங்களுக்குப்" போயிருக்கிறேன். கேள்வி ஞானத்தில் சரியாக வராத பாட்டெல்லாம் பாடியிருக்கிறேன். படி கட்டுவதிலிருந்து, பாட்டுப் பாடி சுண்டல் வாங்கும் வரை எல்லா நிகழ்வுகளோடும் எனக்கு relate செய்ய முடிந்தது. நன்றி!
ரொம்பவும் nostalgic ஆக உள்ளது. அந்தக் கால நவராத்திரி நிகழ்வுகளைப் பற்றிச் சொல்வதற்கு எல்லாருக்கும் ஏதாவது சுவாரசியமான ஒன்று இருக்கும் போல.
நாக்குல எச்சில் சுரக்க அந்தகால சுண்டல் நினைவுகளை கிளறிவிட்டுட்டீங்க. இப்ப அமெரிக்காவில இருக்கறதால நவராத்திரியாவது, சுண்டலாவது. இந்த தடவை இந்தியா போகும்போதுதான் கொஞ்சம் பொம்மைகளாவது கொண்டுவரனும்.
Post a Comment