Tuesday, November 30, 2004

*** நினைவலைகள் - வற்றாயிருப்பில் ஒரு தீபாவளி ***

*** நினைவலைகள் - வற்றாயிருப்பில் ஒரு தீபாவளி ***

தீபாவளிக்கு சில வாரங்களுக்கு முன்பாக ஆங்காங்கே கேட்கும் வெடிச் சத்தம், தீபாவளி நெருங்க நெருங்க தெருக் கோடியில் தொடங்கி, அடுத்த வீட்டு வாசல் வரை வீடு வீடாக அதிரும். என் வயதொத்த பையன்கள் யானை வெடி, கழுதை வெடி மற்றும் மத்தாப்புக்களை விட்டுக் கொண்டிருக்க, மீசை முளைத்த பெரியவர்கள் பச்சை வண்ண சணல் கயிறில் உருட்டிக் கட்டப்பட்ட அணுகுண்டு, நீளமான ராக்கெட், 100 சரம், 500சரம் மற்றும் லஷ்மி வெடிகளை, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சாவதானமாகக் கொளுத்திவிட்டு ஓடாமலும் காதை மூடிக் கொள்ளாமலும் ஒரு அடி தூரத்தில் நின்று அலட்டிக் கொள்ளாமல் மறுபடியும் தொடர்வார்கள்.

வீட்டில் இனிப்பு மற்றும் கார பட்சணங்கள் முதல் நாளே செய்யப்பட்டு தயார் நிலையில் இருக்கும். சாம்பிள் கூட கொடுக்க மாட்டார்கள். எனக்குத் தான் தாத்தா இருக்கிறாரே. பாட்டியிடம் அதிகாரமாகக் கேட்டு காரா பூந்தியும் லட்டுக்களையும் கொஞ்சம் வாங்கிக்கொண்டு, கோயில் சொர்க்க வாசல் படிக்கட்டில் அமர்ந்து என்னை அழைத்துக் கொடுப்பார். அதைத் தின்னவே மனசு வராது. அப்படியே அதை வருடம் பூராவும் வைத்துக் கொண்டு வாசனை பிடித்துக் கொண்டிருந்தாலே போதும் என்று தோன்றும்.

தீபாவளிக்கு நானும், தாத்தாவும் நிறைய ஆயத்தங்கள் செய்வோம். கொல்லைப்புறத்தில் இருந்த நன்னீர் கிணற்றிலிருந்து வாளி வாளியாக நீரிறைத்து வீட்டுக் கூரை மேல் தினமும் தெளிப்போம். மழை பெய்த நாட்களில் இதைச் செய்ய தேவையில்லை. மற்ற நாட்களில் கட்டாயமாக ஒரு பத்து வாளி நீரை பக்கத்து காரை வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டு எங்கள் வீட்டுக் கூரையில் தெளிப்போம். எரிந்து விழும் ராக்கெட் வெடிகளின் புகையும் மிச்சங்களினால் ஒரு முறை கூரை தீப்பிடித்ததால் பின் அனைத்து தீபாவளிகளிலும் இந்த முன்னேற்பாட்டைச் செய்து கொண்டோம். ஓவ்வொரு வீட்டுக் கொல்லைப்புறத்திலும் இல்லாவிட்டாலும் இரு வீடுகளுக்கு ஒரு கிணறு கட்டாயம் உண்டு. எங்கள் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் நீர் தளும்பிக் கொண்டு கிணறு ஒன்று இருந்தது. பின்னாளில் நீர் வற்றி குழாய் இறக்கி மோட்டார் போட்டு நீர் எடுக்கும் நிலை வந்து அப்புறம் மோட்டாருக்கு வேலையில்லாமல் எடுத்துவிட்டதும் வேறு கதை.

வெடியோ மத்தாப்போ வாங்க வசதியில்லாவிட்டாலும் அதற்காக வருந்தியதில்லை. `காசக் கரியாக்கறது இதாண்டா' என்பார் தாத்தா. தீபாவளி வாரத்தில் நானும் என் நண்பர்களும் ஒரு குழுவாக நான்கு தெருக்களிலும் வலம் வருவோம் (தெற்குத் தெரு, வடக்குத்தெரு, நடுத்தெரு மற்றும் தலகாணித் தெரு). எங்கள் குழுவைப் போலவே பல சிறுவர் குழுக்கள் சுற்றிக் கொண்டிருக்கும். எங்கள் வேலை கீழ்க்கண்டவாறு:

  1. சரவெடிகளில் வெடிக்காமல் சிதறிக்கிடக்கும் உதிரி வெடிகளைப் பொறுக்கிச் சேகரிப்பது
  2. திரி மட்டும் எரிந்து வெடிக்காமல் ஏமாற்றிய அனைத்து வகை வெடிகளையும் சேகரிப்பது. இத்தகைய வெடிகள் பற்றவைத்ததும் திரி புசுபுசுவென்று எரிந்துவிட்டு, இதோ வெடிக்கப்போகிறது என்று பற்ற வைத்தவரை ஓரிரு நிமிடங்கள் நகத்தைக் கடிக்கச் செய்துவிட்டு தேமேயென்று இருக்கும். சந்தேகத்துடன் சற்று அருகே நெருங்கி, சிறிய கல்லொன்றை அதன் மீது எறிந்து பார்த்து, வள்ளென்று குரைத்தும் பார்த்துவிட்டு அப்படியும்வெடிக்காவிட்டால் வெறுப்புடன் காலால் ஒரு உதை உதைத்துவிட்டு அடுத்த வெடிக்குப் போய்விடுவர். சில தைரியசாலிகள் (நானும்தான்) வெடியிலிருந்து மில்லிமீட்டரைவிடக் குறைவான நீளத்தில் லேசாகத் தெரியும் வெள்ளைநிறத் திரியை அதைவிட தடிமனான ஊதுபத்தியின் `கங்கை' (கங்கு-ஊதுபத்தியின் முனையில் கனன்றுகொண்டிருக்கும் நெருப்பு) வைத்து ஒத்த கண்ணிமைக்கும் நேரத்தில் அது வெடிக்கும். காதில் லேசாக கீய்ங் என்று இரைய, கண்ணுக்கு நீர் வட்டங்களாகச் சில வினாடிகள் தெரியும். அதன் திரில்லே தனி.
  3. பாதி எரிந்து அணைந்த தரைச் சக்கரங்களைக் கண்டுபிடித்து எடுத்துக் கொள்வது.

அப்பா அவர் சக்திக்கு ஏற்றவாறு ரெடிமேட் டிரெளசரையும் பூப் போட்ட சட்டை ஒன்றையும் ஏதாவது ஒரு தீபாவளிக்கு வாங்கிக் கொடுப்பார். ஆடைகளின் வகைகளோ, மதிப்போ அறிந்திராத பருவம் அது. வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது சில வருடங்களுக்கு ஒரு முறையோ இவ்வாறு கிடைக்கும் புத்தாடையை சந்தோஷமாக தீபாவளியிலிருந்து பல நாட்களுக்கு துவைக்காமல் அணிந்து திரிந்திருக்கிறேன். புத்தாடை கிடைக்கா விட்டாலும் அதற்காக வருந்தியதேயில்லை. செருப்பு என்ற ஒன்றின் தேவையே இருந்ததில்லை. முசிறியில் ஒன்பதாவது சேர்ந்தபோதுதான் முதன் முதலில் ஹவாய் செருப்பு ஒரு ஜோடி கிடைத்தது. ஆனால் அதைப் போட்டுக் கொண்டு நடக்க ரொம்பவும் சிரமப் பட்டேன். வெட்கமாகவும் இருந்தது. நான் நடந்தால் செருப்பு என்காலிலிருந்து விடுபட்டு சில அடிகள் முன்னே போகும். பின்பு கால் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் (அந்த விரலை வைத்து ஆளைக்காட்ட முடியுமா என்ன? :) ) ஒருவாறு மடக்கி செருப்பை இறுக்கி பிடித்துக் கொண்டு நடந்து பழகினேன். என்ன இருந்தாலும் வெறும் கால்களில் மண்ணின் குளிர்ச்சியை அனுபவித்துக்கொண்டு நடக்கும் சுகத்தை செருப்பு தரவில்லை. நிற்க.

இவ்வாறு சேகரித்து மிச்சங்களைக் குவித்து ஆளுக்கு பிரித்துக் கொள்வோம். வெடிக்காதிருந்த உதிரி வெடிகளை தீபாவளியன்று உபயோகப் படுத்த வைத்துக் கொண்டு, அரைகுறையாக எரிந்த வெடிகளைப் பிரித்து ஒரு செய்தித் தாளில் வெடி மருந்தைக் கொட்டிக் கொள்வோம். எங்கள் கைகளெல்லாம் வெடி மருந்தின் அலுமினிய வண்ணத்தில் குளித்திருக்கும.; எல்லாரும் சுற்றி நின்று கொண்டு இரவில் ஒரு தீக்குச்சியைக் கொளுத்திப் போட, மின்னலுக்கான ஈடான ஒளியுடன் ஓரிரு வினாடிகள் குப்பென்று எரிந்து நாய்க்குடை புகை கிளம்பும்.

நாங்கள் மிகவும் விரும்பி விளையாடும் விளையாட்டு கள்ளன் போலீஸ் விளையாட்டுதான். நான் துப்பாக்கி இல்லாததால் திருடன் அணியில் இருந்து கொள்ள, துப்பாக்கி கிடைக்கும் பாக்கியம் பெற்றவர்கள் போலீஸ் அணியில் இருக்க, துரத்தல் துவங்கும். பகலில் விளையாடினாலும், இரவில் விளையாடுவது தான் மிகுந்த குஷியைத் தரும்.

போலீஸ் காரர்கள் கும்பலாக என் வீட்டுத் திண்ணையில் சுவரை நோக்கி முகம் பொத்தி நின்றுகொண்டு ஒன்றிலிருந்து பத்து வரை எண்ண, திருடர்களெல்லாம் பத்து எண்ணப்படுவதற்குள் தெருவில் சிதறி ஓடி ஒளிந்து கொள்வார்கள். பின்பு போலீஸ் குழு பிரிந்து திருடர்களைக் கண்டுபிடிக்கத் தேடுவார்கள். திருடனை முன் பக்கமாகவோ அல்லது பின் பக்கமாகவோ வந்து கண்டுபிடித்து Point Blank Range-லிருந்து போலீஸ் சுட்டுவிட்டால் அந்தத் திருடன் செத்துவிட்டதாகக் கருதப்பட்டு ஆட்டத்திலிருந்து அவுட்டாக்கப் படுவான்.

ரோல்கேப் மற்றும் பொட்டு கேப் `தோட்டாக்கள்' பரவலாக போலீஸ் காரர்களால் உபயோகப் படுத்தப் பட்டன. போலீஸின் பின்புறம் வந்து திருடன் பிடித்து விட்டால் அந்த போலீஸ் அவுட். நெருங்கிய நண்பன் திருடன் கட்சியில் மாட்டிக்கொண்டுவிட்டால் அவனை நீண்ட நேரம் ஓடி அலைய விடாமல் 'என்கவுண்ட்டர்' செய்து ஓய்வு கொடுத்துவிடுவதும் உண்டு.

ரோல் கேப்பும், பொட்டுக் கேப்பும் சிறிய டப்பிகளில் அடைக்கப்பட்டு அது போல ஒரு டசன் டப்பிகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு Pack செய்து விற்கப் படும். சிலசமயம் அப்பா ஒரு டசன் ரோல் கேப்பும், ஒரு டசன் பொட்டுக் கேப்பும், ஒரு பாக்கெட் உதிரிவெடியும் (நூறு உதிரிகள் இருக்கும்) வாங்கிக் கொடுப்பார். அத்தைமார்களுக்காக ஒரு பாக்கெட் பூச்செட்டியும், கம்பி மத்தாப்பும், சாட்டை மத்தாப்பும் கொஞ்சம் வாங்கி வருவார்.

ரோல் கேப் எனக்குப் பிடித்தாலும் எனக்கு ரொம்பப் பிடித்தது அதிர்ஷ்ட வசமாகக் கிடைக்கும் பாம்புமாத்திரைகள் தான். அத்தனை சிறிய மாத்திரையைக் கொளுத்தும்போது கரும்பாம்பு நெருப்பைக் கக்கிக்கொண்டு படமெடுத்து வெளியே வரும் அழகே தனி. எரிந்து முடிந்ததும் நெளிநெளியாக இருக்கும் கருஞ்சாம்பல் பாம்பை உடையாமல் மிக மெதுவாக எடுத்துப் பார்க்கும் இன்பமே அலாதி.

எங்கள் வீட்டிலிருந்து மூன்றாவது வீடு கிராம்சீப் (கிராம முன்சீப் என்று பின்னாடி தெரிந்தது) வீட்டில் ஒரு ரங்கனும் எங்கள் வீட்டின் வலது புறம் அப்பால் இருந்த தலைகாணித்தெரு வீட்டில் இன்னொரு ரங்கனும் இருந்தார்கள். கிராம்சீப் ரங்கன் எல்லார் வீட்டுக்கும் எந்த வேலையானாலும் முன்னால் நின்று செய்வான். பற்கள் தேய்க்காமல் பல ஆண்டுகளானதால் மஞ்சள் காரை படர்ந்திருக்கும். அவனை எல்லாரும் `கோமாளி' ரங்கன் என்று அழைத்தார்கள். என்னைவிட பலவருடம் பெரியவனாக இருந்தாலும் நானும் அவனை `போய்யா, வாய்யா' என்றே அழைத்துக் கொண்டிருந்தேன். சிறுவர்முதல் பெரியவர்வரை எல்லோரிடமும் ஒரே மாதிரியாகப் பழகும் வெகுளி. சற்று படபடவென்று பேசுவான். தலகாணித்தெரு ரங்கனை `கூட்டு' ரங்கன் என்று அழைத்தார்கள். அந்த பெயர்க்காரணம் தெரியவில்லை. கூட்டு ரங்கன் எல்லோர் போல சீரியஸான பெரிய மனிதன் என்பதால் அவனை நான் `அண்ணா' என்றே அழைத்தேன். அவன் தம்பி வெங்கட் என்னுடன் பள்ளியில் படித்தான்.

கோமாளி ரங்கனின் வீடு மிகப் பெரியது. அவன் வீட்டுத் திண்ணையில்தான் பெரியவர்களின் சீட்டுக் கச்சேரி நடக்கும். அவன்தான் எனக்கு ரம்மி மற்றும் ஆஸ் விளையாடக் கற்றுத் தந்தான். தீபாவளிக்கு அவன் துப்பாக்கி வாங்கி கொஞ்ச நேரம் வெடித்துவிட்டு சலித்துப் போனதால் என்னிடம் இரவல் கொடுத்தான். வாழ்க்கையில் முதன்முதலாக துப்பாக்கியைத் தொட்டது அப்போதுதான். அதன் பளபளக்கும் கரிய உடலை ஆசையுடன் வருடிக் கொடுத்தேன். அலுமினியக் குழாயை ஆவலுடன் திறந்து பார்த்தேன். ஒரு ரோல்கேப்பை லோட் செய்து மெதுவாக குதிரையை இழுத்துவிட்டு முதல் வெடிப்பொட்டு மேலெழும்பி சட்டென்று உலோகம் அதைத் தட்டி வெடித்ததை ஆச்சரியத்துடன் கவனித்தேன். நெருப்புப் பொறி கையில் பட்டுவிடுமோ என்று லேசாக பயமாக இருந்தது.

கூட்டு ரங்கன் ஒரு ரோல் கேப்பை நீளமாக வால் போல கையில் திருப்பிப் பிடித்துக் கொண்டு வெடிப் பொட்டுக்களுக்கு சற்று கீழே ஆள்காட்டி விரல் நகத்தை வைத்து அழுத்தி, சுவற்றில் தேய்த்து அனாயசமாக சட்சட்டென்று ஒவ்வொன்றாக வெடித்தான். கை பொசுங்காமல் செய்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

கோமாளி ரங்கன் துப்பாக்கியை திரும்ப வாங்கிக்கொண்டு விட்டதால் நான் வழக்கம் போல் என் துப்பாக்கியான இடுக்கியை சமையலறையில் இருந்து எடுத்துவந்து ஒவ்வொரு பொட்டு கேப்பாக இடுக்கியில் பிடித்து தரையிலடித்து வெடிக்கச் செய்வேன். சற்று சத்தம் பலமாக வேண்டுமென்றால் ஒரே சமயத்தில் மூன்று நான்கு பொட்டுக்கள் சேர்த்து வைத்து அடிப்பேன். `டேய்.. இடுக்கி லூசாயிடும்டா' என்ற அம்மாவின் கத்தலை சட்டை செய்யாமல் தொடர்வேன்.

இதைத் தவிர மிக முக்கிய தீபாவளி சாகசம் என்னவென்றால், உதிரி வெடியின் திரியைச் சுற்றியிருக்கும் வெள்ளைக் காகிதத்தைப் பாதி கிள்ளி விட்டு கையில் பிடித்துக்கொண்டு பற்ற வைத்து விட்டு, கருப்பு நூல்திரி மெதுவாக எரிந்து முடித்து, அதைச் சுற்றியிருக்கும் காகித கவசத்தை அடைந்ததும் சுறுசுறுவென்று எரிந்து வெடியின் உள்ளே போகும் கடைசி வினாடியில் சட்டென்று மேலே விட்டெறிய அது அந்தரத்தில் வெடிப்பதை கண்டுபெருமிதம் கொள்வோம். இதற்கு டைமிங் ரொம்ப முக்கியம். தப்பினால் போயிற்று.

வெடிப்பவர்களின் வயதுக்குத் தகுந்தவாறு வெடியின் வகைகள் வேறுபடும். கூட்டுரங்கன் சாதாரணமாக அணு குண்டையே கையில் பிடித்து பற்று வைத்துத் தூக்கிப் போடுவான். கையில் வெடியை வைத்துக் கொண்டு யாரிடமும் பேச்சு மும்முரத்தில் இருந்தால் போச்சு. சந்தடியில்லாமல் அருகே வந்து நமக்கே தெரியாமல் நம் கையில் இருக்கும் வெடியைப் பற்ற வைத்து விடுவார்கள்.

வீட்டின் கொல்லைப் புறத்தில் வெந்நீர் அடுப்புக்காக பாட்டி சேகரித்து வைத்திருக்கும் கொட்டாங்கச்சிகளை எடுத்துக் கொண்டு வந்து, பாதி சிரட்டைகளை வெடியின் மீது கவிழ்த்து பற்ற வைப்போம். வெடித்த வினாடியில் சிரட்டை காணாமல் போயிருக்கும். மண்ணெண்ணெய் வைக்கப் பயன்படும் பாட்டில்கள்தான் ராக்கெட் லாஞ்ச்சர்கள். தரையில் பாட்டிலை வைத்து, ராக்கெட்டை அதில் செருகிப் பற்ற வைத்ததும், அது சீறிட்டு விண்ணில் செல்லும் அழகே அழகு. குறும்பர்கள் கடைசிவினாடியில் கல்லெறிந்து பாட்டிலைக் கவிழ்த்து விடுவார்கள். ராக்கெட் தரையின் மேல் தறிகெட்டுச் செல்ல வாசலில் நின்று கொண்டிருப்பவர்கள் அலறி அடித்து துள்ளுவார்கள். சிலசமயம் வீட்டினுள் புகுந்து உள்ளே இருப்பவர்களை ஒரு வழி பண்ணிவிடும்.

தீபாவளி பட்சணம் தின்ற அவஸ்தையுடன் தொந்தியைத் தள்ளிக்கொண்டு வாசலில் நின்று கொண்டிருந்த சீனு மாமாவின் வேஷ்டிக்குள் ஒரு ராக்கெட் புகுந்துவிட அவர் ஆடிய ஆட்டமும், அதைத் தொடர்ந்த களேபரமும்...நான் கோமாளி ரங்கன் வீட்டுத் திண்ணையிலிருந்த மரப்பெட்டிக்குள் எலிப் புழுக்கை வாசனையுடன் ஒரு மணி நேரம் பதுங்கியிருந்தேன்.

துப்பாக்கியைத் தவிர இன்னொரு முக்கியமான ஆயதத்தைப் பற்றிச் சொல்கிறேன். நீண்ட கம்பியின் முனையில் ஒரு நட்டும் போல்ட்டும் இரண்டு வாஷர்களுடன் இருக்கும். போல்ட்டை லேசாகத் தளர்த்தி, இரு வாஷர்களுக்கு இடையில் பொட்டுக் கேப்பை வைத்து போல்ட்டை மறுபடியும் இறுக்கி விட்டு, கம்பியின் இந்த முனையைப் பிடித்துக்கொண்டு தரையில் அடித்தால் அழுத்தத்தில் பொட்டுக் கேப்பு வெடிக்கும். இது மிகவும் பாதுகாப்பான ஏழைகளின் துப்பாக்கி. ஆனால் ஒவ்வொரு முறையும் `தோட்டா' நிரப்ப பொறுமை வேண்டும். இந்த துப்பாக்கியும் கூட வாங்க முடியாமல் ஈர்க்குச்சியின் முனையில் உதிரிவெடியைச் செருகி வெடிப்பதும் உண்டு. ஆனால் இந்த முறையில் பிருஷ்டத்தில் துளையிடப்படுவதால் வெடிக்காமல் போகும் வாய்ப்புக்கள் அதிகம்.

"ரயில் வெடி" என்று இன்னொன்று இருந்தது. தீப்பெட்டியைப் போலவே இருக்கும் இதை நூலில் செருகி நூலை இரு சுவர்களுக்குக் குறுக்காக நீளமாக கட்டி, பற்ற வைத்தால் ரயில் அநாயசமாக குறுக்கேயும் நெடுக்கேயும் நூல் தண்டவாளத்தில் பயணிக்கும். தொங்கு ரயில். "ஓலைப் பட்டாசு" என்று ஒன்று இருந்தது எங்கள் காலத்தில் அது பிரபலமிழந்திருந்தது. மேலும் செய்கூலி அதிகம் என்பதால் தயாரிப்பு குறைந்துவிட்டது என்று தாத்தா சொன்னார். "வெங்காய வெடி" என்ற பெயரைக் கேட்டதும் சத்தம் குறைந்து கூட்டம் கலைந்துவிடும். அது அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட வெடியாம். வற்றாயிருப்பில் தங்குதடையின்றி ஆனால் ரகசியமாகக் கிடைத்தது. விலை அதிகம். விசேஷம்? அதற்குத் திரி கிடையாது. வெடிக்கச் செய்யக் கொளுத்த வேண்டியதில்லை. சும்மா கையில் பிடித்து தரையிலோ சுவரிலோ எறிந்தால் போதும். மோதிய நொடியில் பெருஞ் சத்தத்துடன் வெடிக்கும். எனக்கும் கோமாளி ரங்கன் மூலமாக மூன்று வெங்காய வெடிகள் கிடைத்து, எதிரே இருந்த பெருமாள் கோயில் சுவரில் எறிந்து வெடிக்கச் செய்தேன்.

சினிமாவைக் காப்பியடித்து கழுதை வாலில் சரத்தைக் கட்டிக் கொளுத்த முயன்ற ராமுவுக்கு அது அவன் தாடையில் விட்ட உதையில் வாய் இறுக மூடி அடித்து முன்பற்கள் உடைந்தது மிச்சம்.

லஷ்மி வெடியை விட குண்டான பெரிய வெடியொன்றில் கவர்ச்சி நடிகைகளின் படம் ஒட்டியிருக்கும். அதை வெடிக்காமல் அம்பி மாமா நீண்ட நேரம் தடவிப் பார்த்துக் கொண்டேயிருந்து மனமேயில்லாமல் அடுத்த நாள்தான் வெடித்தார்.

தீபாவளிக்கு முதல் நாளிரவு புத்தாடைகளனைத்தையும் அப்பா சாமி படத்துக்கு முன் வைத்து விடுவார். இரவு தூக்கமே வராது. அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம் தாத்தா எழுந்து கொல்லைப்புறத்திலிருக்கும் பெரிய வெந்நீர் அண்டாவில் நீரிறைத்து நிரப்பி அடுப்பைப் பற்ற வைத்து விடுவார். மூன்று மணி வாக்கில் அனைவரையும் எழுப்பிவிட்டு பெரிய பாய் ஒன்றை விரித்து வரிசையாக உட்கார வைப்பார்கள். நான் தூக்கக் கலக்கத்தில் சாமியாடிக் கொண்டிருப்பேன். பாட்டி எல்லோரின் உச்சந்தலையிலும் சாம்பிளுக்குஎண்ணை வைத்து குங்குமப் பொட்டிட்டு விட்டு, கையில் வெற்றிலை பாக்கை திணிப்பார்கள். அப்பா எல்லோருக்கும் சில்லறை காசுகளை விநியோகிப்பார். அம்மாவும் பாட்டியும் எல்லோருக்கும் பொதுவாக ஆரத்தி எடுக்க, வெற்றிலைபாக்கைத் திரும்ப ஆரத்தித் தட்டில் வைத்துவிட்டு, கொடுக்கப்பட்ட காசுகளை தட்டில் போடுவோம்.

பாட்டியும் அம்மாவும் பாடிக் கொண்டே ஆரத்தி எடுக்க, நான் கடைசிவரை போக்கு காட்டிவிட்டு காசு போடுவேன். ஆரத்தி முடிந்ததும், கிடுகிடுவென்று ஒவ்வொருவராக எண்ணெய் தேய்த்துக் குளிக்கத் தொடங்குவார்கள். அதிகாலைக் குளிரில் ஆவிபறக்க வெந்நீரில் குளிக்கும் சுகத்துக்கு ஈடு இணையே இல்லை. கொல்லைப் புறத்தில் கிணற்றங்கரையில் நின்று கொண்டு வாளியில் வெந்நீர் வைத்துக் குளிப்பேன். பெண்களுக்காக தாத்தா மண்ணைக் குழைத்து நான்கடி உயரத்திற்கு நான்கு புறமும் சுவரெழுப்பி பாத்ரூம் கட்டியிருந்தார். கதவில்லாத கூரையில்லாத எளிய பாத்ரூம். பெண்கள் அதன் உள்ளே உட்கார்ந்து குளிப்பார்கள்.

என்னதான் சீக்காப்பொடி (சிகைக்காய்ப் பொடி) தேய்த்துக் குளித்தாலும் எண்ணை போகாமல் காது மடல்களிலும் அக்குளிலும் வழவழவென்றுதான் இருக்கும்.

நான்கு மணிக்குள் அனைவரும் குளித்து முடித்து, ஒவ்வொருவராக தாத்தாவிடம் புத்தாடை வாங்கிக் கொள்வார்கள். நான் வீட்டின் அனைத்து பெரியவர்களுக்கும் வரிசையாக விழுந்து கும்பிட்டுக் கொள்வேன். புத்தாடை அணிந்ததும் எங்களைக் கையிலேயே பிடிக்க முடியாது.

நன்றாகச் சுற்றிவிட்டு பதினொரு மணிவாக்கில் பசி வயிற்றைக் கிள்ள, உள்ளங்கைகள் முழுவதும் வெடி மருந்து அப்பியபடி, வீட்டுக்குத் திரும்ப வருவேன். வெடிச்சத்தங்களும் சற்று குறைந்திருக்கும். ஆடையைக் களைந்து பழைய ஆடையொன்றை அணிந்து கொண்டு கைகால்களை நன்றாகக் கழுவிவிட்டு வந்தமர்ந்தால் அருமையான டிபன் பலகாரங்கள் கிடைக்கும். சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு மாலை நான்கு மணிவாக்கில் மறுபடியும் வீதி உலா.

அனைத்து மத்தாப்புக்களும் மாலை மற்றும் இரவில் தான் உபயோகப் படுத்தப்படும்.பகல் வெளிச்சத்தில் `ஒலி'களும் இரவில் `ஒளி'யும் நிரம்பிய இனிய தீபாவளி அது. இரவில் தெருமுழுவதும் பூச்சட்டிகள் நீரூற்று போல ஒளியூற்றாகச் சீறிட (அவ்வப்போது சில பூச்சட்டிகள் வெடித்து அதிர்ச்சி ஏற்படுத்துவதும் உண்டு), தரைச்சக்கரங்கள் சுழல, கம்பி மத்தாப்புகளும், சாட்டைகளும் ஒளித்துளிகளைச் சிதறவிட ஆனந்தமான நினைவுகள் அவை.

வீட்டுத் திண்ணையில் தரைச் சக்கரங்களை கொளுத்திவிட்டு சூரியன் போல ஒளிசிந்திச் சுழலுகையில் அதன் ஒளி ஆரங்களின் நடுவே நாங்கள் குதித்து நாட்டியமாடுவோம். பின்னாளில் இது போலவே சூரியனும் அதன் வீரியம் குறைந்து ஒளியிழந்து அணைந்து நின்று போகுமோ என்று யோசித்திருக்கிறேன்.

ஏழு மணிவாக்கில் கோமாளி ரங்கனின் வீட்டு மொட்டை மாடிக்குச் சென்று விடுவோம். தெருவில் சற்று உயரமான வீடாதலால், மூன்று தெருக்களின் வீட்டு மொட்டை மாடிகளையும் பார்க்கலாம். பெரும்பாலான ராக்கெட்டுகள் பாதுகாப்பு கருதியோ அல்லது அதிக உயரம் பெறவோ மொட்டை மாடியிலிருந்தும் ஏவப்படும். ரங்கன் வீட்டு மாடியில் நின்று கொண்டு சுற்றிப் பார்த்தால் ஆங்காங்கே ஒளி சிந்தியவாறே ராக்கெட்டுகள் விண்ணில் சென்று வெடிக்கும் கண்கொள்ளாக் காட்சியைக் காணலாம்.

கோமாளிரங்கன் தீபாவளி முடிவதை உணர்த்த ஆயிரம்வெடியுள்ள சரமொன்றை தெருவின் முச்சந்தியில் கொண்டு வந்து விரிப்பான். எல்லோரும் வேடிக்கை பார்க்க ரங்கன் அவன் பற்ற வைக்காமல் கண்ணில் படும் நண்பனொருவனைப் பற்ற வைக்கச் சொல்வான். சரம் பற்ற வைக்கப்பட்டதும் சில நிமிடங்கள் தொடர்ச்சியாக வெடித்து முடிக்க, ஒரு அமைதி நிலவும். தீபாவளி முடிந்து விட்டது என்ற சோகத்துடன் வீட்டுக்குத் திரும்புவேன்.

ஊரெங்கும் லேசான புகை மூட்டம் பரவியிருக்க, தெருவெங்கும் காகிதக் குப்பைகள் சிதறியிருக்க, இனிதே முடியும் தீபாவளி.

மறுநாள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று இன்னும் சோகப் பட்டாலும் அன்று சீருடை அணியாமல் தீபாவளி உடையையே அணிந்து வரலாம் என்பதால் சற்று ஆறுதலாக இருக்கும். பள்ளியில் ஆங்காங்கே சீருடை அணிந்து நடமாடிக் கொண்டிருக்கும் ஏழை மாணவர்களைக் காணும்போது குற்றவுணர்வாக இருக்கும். அடுத்த தீபாவளிக்கு அடுத்த நாள் தீபாவளி உடையை அணிந்து வரக்கூடாது என்று தீர்மானம் செய்து கொள்வேன்.

அன்புடன்.

சுந்தர்.
04-நவம்பர்-2002

நன்றி : மரத்தடி இணையக் குழுமம்


1 comment:

Anonymous said...

Very Nostalgic.....reminded me of my own childhood days!