Sunday, December 24, 2006

பாலைஸ்! கோனைஸ்! கப்பைஸ்!




தலைகாணித் தெருவில் எங்கோ இருந்தாலும் அந்த மணிச் சத்தத்திலிருந்தே ஐஸ் வண்டிக் காரர் வருவது தெரிந்துவிடும்.

எங்கள் வீடு நடுத்தெரு முக்கில் இருந்தது ஒரு வசதி. அதிலும் திண்ணைக்குச் சுவர் இல்லாது வைர வடிவச் சதுரங்களாலான மரத்தட்டி மறைப்பு மட்டும் இருந்ததால் திண்ணையின் குளிர்ச்சியான சதுரச் செங்கல் தரையில் உட்கார்ந்து சுண்ணாம்புச் சுவரில் சாய்ந்து கொண்டு தெருவில் வருவோர் போவோரை வேடிக்கைப் பார்ப்பது மதிய நேர உண்ட மயக்க வேலைகளில் ஒன்று. புதிதாகக் கட்டிய அல்லது சமீபத்தில் புதுப்பித்த வீடுகளில் மட்டும் மரத்தட்டிக்குப் பதில் செங்கல் சுவரெழுப்பி, சிமெண்ட் அச்சுகளில் வேலைப்பாடுகளுடன் கூடிய தட்டியைக் கட்டியிருப்பார்கள். மரத்தட்டிகளில் ஏதாவது பருத்திச் சேலையோ அல்லது வேட்டியோ காயப் போடப் பட்டிருக்கும்.

அவிழ்ந்துவிடுமோ என்று முழங்கால்களில் தவழ்ந்து கொண்டிருக்கும் வேட்டியுடன் கேரியரில் இருக்கும் செவ்வக மரப்பெட்டியை வலது கையால் அணைத்தபடி இடது கையால் சைக்கிள் கைப்பிடியைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு வருவார் அந்த ஐஸ் வண்டிக் காரர். நெற்றியில் வியர்வை வழிய மேலே இரண்டு பொத்தான்கள் திறந்திருக்கும் சட்டையின் பை கனமாகத் தொங்க முக்கில் சைக்கிளை நிறுத்தி கிணுகிணுவென்று மறுபடியும் மணியடிப்பார்.

வீட்டுத் திண்ணைகளிலிருந்து பலவிதங்களில் தலைகள் வெளியே நீட்டப்படும். சில வீட்டுக் கதவுகள் சார்த்தப் படும். சில திறந்து அம்மாக்கள் படியில் இறங்கி நிற்க அவர்கள் சேலைத் தலைப்புகளிலிருந்து பையன்களும் பெண்பிள்ளைகளும் வெளியேறி ஓடத் துடித்துக் கொண்டிருப்பார்கள்.

ஐஸ் என்பது ஒரு வினோதமான வஸ்து எங்களுக்கு. "பாரின்லலாம் ஐஸ் மழையா கொட்டுமாமேடா?" என்பது நாங்கள் அடிக்கடி பேசிக்கொள்ளும் சில ஆச்சரியங்களில் பிரதானமானது. "சே. நம்மூர்ல ஐஸ் மழெ பேஞ்சா எப்படி இருக்கும்! அப்படியே டவரால டம்ளர்ல பிடிச்சு சீனி போட்டுச் சாப்பிடலாம்ல?" என்பான் முத்துலிங்கம். அந்தப் 'பாரின்' நாட்டுக்கு ஏழு ஜென்மங்களில் நான்காம் ஜென்மத்திலாவது ஒரு முறை போய்விட்டு வந்துவிடவேண்டும் என்பது எங்கள் ஆசை. இப்போதைக்கு நான் ஸ்ரீவில்லிப்புத்தூர் மட்டுமே சென்றிருக்கிறேன். அடுத்த வாரம் மதுரைக்குக் கூட்டிச் செல்வதாக அப்பா சொல்லியிருக்கிறார். இந்த ஜென்மத்தில் 'மெட்ராசு'க்குப் போக முடிந்தாலே சாபல்யம் கிடைத்துவிடும்போல இருந்தது. ராமத்தை வீட்டில் சீனுவும் முரளியும் மெட்ராசுக்குப் போய் வேலை செய்கிறார்களாம். போன வாரம் விடுமுறைக்கு வந்திருந்தபோது லுங்கி என்ற கலர் கலரான 'மூட்டிய' வேட்டியைக் கட்டியிருந்தார்கள். தெருவில் யாரும் லுங்கி கட்டி நான் பார்த்ததில்லை. லுங்கி கட்டிய புரட்சியோடு நிற்காமல் தெருவில் நின்று கொண்டு உய் உய்யென்று விசில் வேறு அடித்தார்கள். 'ஒய்' என்று ஓங்கிக் குரலெழுப்பினார்கள். இதெல்லாம் மெட்ராஸ் ஆட்கள் செய்கிற காரியங்களாம். எல்லாவற்றையும் விட எங்களோடு கிட்டிப்புள்ளோ பேந்தாவோ ஆட அவர்கள் வரவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. எங்களைவிட அவர்கள் எவ்வளவோ வயது மூத்தவர்கள் என்றாலும் எங்களோடு சேர்ந்து எல்லாக் காரியங்களும் செய்துகொண்டுவந்தவர்கள் திடீரென்று 'பெரியவர்களாக' நடந்துகொண்டது எங்களுள் தாங்கொண்ணா எரிச்சலை ஏற்படுத்தியது. நிற்க.

ஐஸ்வண்டிக் காரர் அந்தப் பெட்டியைத் திறக்க லேசாக வெளிக் கிளம்பும் புகை ஒரு ஆச்சரியம். அந்தப் பெட்டிக்குள் என்னென்னவெல்லாம் இருக்கிறது என்று எங்கள் கற்பனை சிறகடித்துப் பறக்கும். அதற்குள் எட்டிப் பார்க்குமளவிற்கு நாங்கள் எப்போது உயரமாவோம் என்பது தீராத கவலையாகவும் இருந்தது. ஐஸ்காரரின் கரம் உள்ளே முழங்கை அளவு செல்லும். ஒவ்வொரு முறை கையை வெளியே எடுக்கையிலும் விதவிதமான வண்ணங்களில் குச்சி ஐஸ் வரும். மாஜிக் மாதிரி இருந்தது எங்களுக்கு.

குச்சி ஐஸ் 15 பைசாக்கள். எங்களுடைய தினப்படி பாக்கெட் மணி ஐந்துபைசாக்களைத் தாண்டாது என்பதால் குச்சி ஐஸ் வாங்குவது என்பது மிகவும் ஆடம்பரமான முடிவு. நான் துணிந்து முடிவு எடுத்துவிடுவேன். ரங்கனால் முடியாது. கடலை மிட்டாய்களையும் கல்கோனாக்களையும் இழப்பதில் அவனுக்குச் சம்மதமில்லை. அவன் கிராம்சீப்* வீட்டைச் சேர்ந்தவன். பெரிய வீடு. பெரிய திண்ணை. முன்பெல்லாம் அவன் வீட்டுத் திண்ணையில் பழியாய் கிடப்போம். வரிசையாக கால்நீட்டி அமர்ந்துகொண்டு ஐஸ் தின்போம். சென்ற தடவை ஆசை தாங்காது வாங்கிச் சப்பிய குச்சி ஐஸ் குச்சியிலிருந்து நழுவி அவன் வேட்டிக்குள் விழுந்துவிட்டது. துள்ளிக் குதித்து தெருவுக்கு ஓடியதில் தரையில் விழுந்த ஐஸ் துண்டை ஜிம்மிதான் மண்ணோட நக்கிக் கொண்டிருந்தது. அதிலிருந்து அவன் இனிமேல் ஐஸ் வாங்குவதில்லை என்று சங்கல்பம் செய்து அறிவித்துவிட்டான். ஆதலால் அவன் வீட்டுத் திண்ணையில் ஐஸ் தின்னும் வைபவம் முடிவுக்கு வந்துவிட்டது.

இன்று கொளுத்திய வெயிலுக்கு ஐஸ் வாங்கவேண்டும் போல இருந்தது. தாத்தாவிடம் சொன்னால் திட்டமாட்டார் என்றாலும் பானைத் தண்ணீரைக் குடிக்கவேண்டியதுதானே - அதான் உடலுக்குக் குளிர்ச்சி என்பார். வாஸ்தவம்தான். ஆனாலும் குச்சி ஐஸின் கலர் கவர்ச்சிக்கு முன்பு பானைத் தண்ணீரும் நீர் மோரும் நிற்க முடியவில்லை.

"என்னென்ன கலர் இருக்குண்ணே?" என்று கேட்க அவர் சீட்டை விரிப்பதுபோல எடுத்து விரித்த பஞ்ச வர்ணங்களில் எனக்கு நீலம் மிகவும் பிடித்திருக்க அதையே தேர்ந்தேடுத்து வாங்கிக்கொண்டு திண்ணைக்குத் திரும்பி உட்கார்ந்தேன். குச்சி ஐஸின் மேலுச்சியில் மங்கலாகக் குச்சி தெரிந்தது. உதடுகளில் சில்லிப்பு பரவி வாய் முழுதும் குளிர முதல் உறிஞ்சில் அபரிமிதமாக உற்பத்தியாயிருந்த உமிழ்நீரும் சேர்ந்து தொண்டை வழியாக இறங்க வயிறும் குளிர்ந்தது போல உணர்ந்தேன். சட்டென்று புல்லரிப்பு உணர்வு உடல் முழுதும் பரவ மயிர்க்கால்கள் குத்திட்டன.

அதைப் பல்லால் கடித்துத் தின்னும் ஆசை இன்று வரை நிறைவேறவில்லை. பல்லால் லேசாகத் தொட்டதும் ஈறைத் துளைத்துக்கொண்டு சரேலென்று இறங்கிய குளிர்ச்சியில் கூசியது. உறிஞ்சுவது ஒன்றே ஒரே வழி. ரொம்ப நேரம் ஐஸ் இருக்கும் என்பது இன்னொரு நன்மை. முத்துலிங்கத்துக்குப் பொறுமையே கிடையாது. நான்கே கடியில் காலிசெய்து குச்சியை நக்கிக் கொண்டிருப்பான். நான் மணிக்கட்டுக்குக் கீழே ஒரு டவராவை வைத்துக்கொண்டு மெதுவாக உறிஞ்சுவேன். அது நழுவி என் டவுசருக்குள் விழுந்துவிடும் அபாயத்தைத் தவிர்க்கவும் கீழே சொட்டும் நீரைச் சேமித்துக் கடைசியில் குடிக்கவுமே டவரா.

டம்ளருக்குள் குச்சி ஐஸைப் போட்டு வைத்துக்கொண்டு அது உருக உருக நீரை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்ததும் உண்டு. முக்கால் ஐஸ் கரைந்ததும் பானைத் தண்ணீரை டம்ளருக்குள் ஊற்றிவிட்டு - இனிப்பு குறைந்து போகும் - ஐஸ் தண்ணீரைக் குடித்து முடிப்பதும் உண்டு.

தெருவில் பத்து பேர் குச்சி ஐஸ் வாங்கினால் ஒருவர் பாலைஸ் வாங்குவார். பாலைஸ் என்பது மதிய ஒளியில் அடையடையாக சூரியனிடம் மல்லுக்கட்டிப் பளீரிடும் வெண்மேகக் கூட்டங்கள் போல பால் வெண்மையாக ஆனால் குச்சி ஐஸ் போல் உறுதியாக இல்லாமல் அதிவேகமாகக் கரையும் வண்ணம் இருக்கும். பாலைஸ் குச்சி ஐஸ் வகைதான். ஆனால் பனிக்கட்டியாக இல்லாது பனித்தூளினால் செய்தது போல தெர்மாக்கோல் மாதிரி எடையற்று இருக்கும். உறிஞ்சுவதையும் மென்மையாகச் செய்யாவிட்டால் ஒரே உறிஞ்சலில் முக்கால் பாலைஸ் வாய்க்குள் போய்விடும். அதை நக்கித்தான் தின்ன வேண்டும்.

நான் பாலைஸ் வாங்க நிரம்பத் தயங்கினேன். அது கழுதைப் பாலில் செய்தது என்ற வதந்தி காரணம். ஒரே முறை வாங்கிச் சாப்பிட்டதில் சாப்பிட்டதும் நாக்கில் பரவிய லேசான கசப்புச் சுவையினால் அது கழுதைப்பாலில் செய்தது என்ற சந்தேகம் இன்னும் வலுப்பெற்றுவிட்டது. மேலும் குச்சி ஐஸ் மாதிரி இல்லாது டம்ளரில் போட்டு உருக்கிக் கொடுத்தால் சுவை மட்டமாக இருக்கும். அது மற்ற குச்சி ஐஸ்களைவிட 10 காசு அதிகம் வேறு. பெரிய ஆடம்பரச் செலவாக இருந்ததால் அதை அடிக்கடி வாங்க வசதி ஏற்பட்டிருக்கவில்லை. தாத்தா பாவம். அவரும் எவ்வளவுதான் கொடுப்பார்? ஆனாலும் அதன் மென்மையும் உருகி வழியும் வெண்மையும் ஈர்த்துக்கொண்டே இருந்ததை மறுக்க முடியாது.

ஐஸ்காரர் கிழக்காக நடுத்தெரு முழுக்க போய் கடைத்தெருவில் வலது பக்கம் திரும்பி தெற்குத் தெருவில் நுழைந்து விற்றுவிட்டு மேலப்பாளையம் வழியாக எங்கோ போய்விடுவார். கூமாப்பட்டிக்காக இருக்கும். அவர் எங்கிருந்து வருகிறார் என்று நாங்கள் கேட்டுக்கொண்டே இருந்தோம். யாரும் அவர்பின் போய்ப் பார்க்க விழைந்ததில்லை.

அடுத்தவார ஞாயிற்றுக்கிழமை மதியத்தில் கடைத்தெருவிலிருந்தே எழுந்த மணியோசை ஆச்சரியமாக இருந்தது. ஒன்று மணியோசை வித்தியாசமாக இருந்தது. ரெண்டாவது அது தலைகாணித் தெருவிலிருந்து வராதது. மூன்றாவது சைக்கிள் இல்லாது பெட்டி முன்புறம் இருக்க பின்னால் ஒருவர் அதைத் தள்ளிக்கொண்டு வந்தது. சீரான இடைவெளியில் அவர் "பா....லெஸ்... கோ......னெஸ்.... பா.........லெஸ்..............கப்பைஸ்" என்று குரல்கொடுத்தது புரியவில்லை.



அந்த வண்டி பத்து வீடுகள் தள்ளி நிறுத்தியிருக்க அந்த வீட்டிலிருந்தவர்கள் வெளியே வந்து விசாரித்துக்கொண்டிருந்தார்கள். நாங்களெல்லாம் ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருக்க வண்டிக்காரர் எடுத்துக் கொடுத்த பொருள் குச்சி ஐஸ் இல்லை. அது ஒரு கூம்பு. அப்புறம் சில டப்பாக்கள்! எங்களால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. அவரிருக்குமிடத்திற்கே ஓடினோம். சைக்கிள் பெட்டி போலல்லாது இது கீழிருந்தபடியால் உள்ளே இருப்பனவற்றை எங்களால் பார்க்க முடிந்தது. உள்ளே பகுதிபகுதியாகப் பிரித்து வண்ண வண்ணமாக டப்பாக்கள். கடைசிப்பகுதி நிறைய பாலைஸை நிரப்பி வைத்ததுபோல இருக்க பெட்டிக்கு வெளியே அந்த ஆரஞ்சுக் கூம்புகள் ஒன்றன் மீது ஒன்றாக செருகி வைத்திருக்கப்பட்டிருந்தன. ஓரமாகச் சிறிய சதுரத்தில் கொஞ்சம்போல பாலைஸ்கள் ஆயில்பேப்பரில் சுற்றிவைக்கப்பட்டிருக்க பெட்டியில் புகை நிரம்பியிருந்தது. பிளாஸ்டிக் பை ஒன்றில் ஸ்பூன் வடிவத்தில் மரத்தினால் செய்த ஸ்பூன்களை நிரப்பி வைத்துத் தொங்க விட்டிருந்தார்.

எங்களுக்கு விழிகள் வெளியே தெறித்துவிடும்போல ஆச்சரியமாக இருந்தது.

"என்னண்ணே இது?"

"அதுவா. இது கப்பைஸ். இந்த இது கோனைஸ்" என்றார் கூம்பைச் சுட்டிக்காட்டி.

"எவ்வளவு?" என்றதற்கு வண்டியின் பக்கவாட்டைச் சுட்டிக்காட்டினார்.

அங்கு எழுதியிருந்த விலைப்பட்டியலைப் பார்த்தால் மயக்கமே வந்துவிடும் போலிருந்தது. கப்பைஸ் ஒர்ரூவாயாம். கோனைஸ் 75 காசுகளாம். மனசுக்குள் "நாலிருவத்தஞ்ச நூறு" என்று கணக்கு ஓடி ஒரு கப்பைஸ் = 4 பாலைஸ்-ம் "அஞ்சு பாஞ்ச எழுவத்தஞ்சு" வாய்ப்பாடுடன் ஒரு கோனைஸை ஐந்து குச்சி ஐஸ்களுக்கும் ஒப்பிட்டு பெருத்த ஏமாற்றத்துடன் வண்டியிலிருந்து விலகினோம்.

அவர் கூம்பு ஒன்றை எடுத்து எங்களிடம் நீட்டி 'இதையும் நீங்க சாப்பிடலாம்' என்றதை நம்பவே முடியவில்லை. அது கப்பைஸ் டப்பா மாதிரி அட்டையில் செய்தது என்று நினைத்துக்கொண்டிருந்தோம். லேசாகப் பிய்த்து வாய்க்குள் போட்டுக்கொண்டதில் மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டு பிறகு கரைந்தது. பிஸ்கட் மாதிரியும் இருந்தது. வித்தியாசமான சுவை.

அவர் ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து வருவதாகச் சொன்னார். அடுத்த ஞாயிறு மதியம் மறுபடியும் வருவதாகச் சொன்னார்.

ரங்கன் வீட்டுத் திண்ணையில் கூடிப் பேசினோம். "கப்பைஸ் வேஸ்ட்டுடா. இக்குணூண்டு இருக்கு. அரை டம்ளர் கூட இருக்காது. டப்பாவும் அட்டை. அதுக்குப்போயி ஒர்ரூவாயா?" என்றான் ரங்கன். அவன் சொன்னது சரிதான் என்று எங்களுக்கும் பட்டது. வாழ்நாளில் ஒரு தடவையாவது கோனைஸ் வாங்கிச் சாப்பிட்டுவிடுவது என்று சபதம் செய்துகொண்டோம். அதில்தான் எதையும் எறியவேண்டியது இல்லை. கொடுக்கும் காசுக்கு ஐஸையும் கோனையும் சாப்பிடலாம் என்பது எங்களுக்கு ஒப்புமையாக இருந்தது.

தாத்தாவிடம் நச்சரித்து அவர் சனியன்று இரவு ஒர் ரூவாய் கொடுத்தார். அந்தக் கனமான காசு எனக்கு ரொம்பவும் பிடிக்கும். புஜத்தில் வைத்து அதை நன்கு அழுத்தி மூன்றுதலை சிங்கத்தின் அச்சு தோலில் தெரிகிறதா என்று பார்த்தேன். நன்றாகவே தெரிந்தது. சந்தோஷத்துடன் ஞாயிறை எதிர்பார்த்திருந்தேன்.

ஞாயிறன்று நாங்களெல்லாம் பெருமாள் கோவில் சொர்க்கவாசல் படிகளில் காத்திருக்க அந்த நபர் வந்தார். நாங்கள் ஓடினோம். ஆளுக்கொரு கோனைஸ் வாங்கிக்கொண்டோம். கூம்பு மீது ஐஸ் க்ரீம் ததும்பிக் கூராக முடிந்திருக்க தெருவில் நின்றால் அது வெயிலில் உருகி விழுந்துவிடும் என்பதால் ரங்கன் வீட்டுத் திண்ணைக்கு ஓடினோம்.

என்னவொரு அனுபவம் அது! குச்சி ஐஸ் மாதிரி கல்லாக இல்லாமல் இது குழம்பாக இருந்ததால் சாப்பிட எளிதாக இருந்தது. கோனின் விளிம்பையும் பிய்த்து ஐஸ் குழம்போடு சாப்பிட அந்தச் சுவை அருமையாக இருந்தது.

எங்களைக் கையிலேயே பிடிக்கமுடியவில்லை. தின்று முடித்து அதன் சுவை நீண்ட நேரம் வாயிலேயே இருந்தது. பசித்தாலும் சோறு தின்னப் பிடிக்கவில்லை. அந்தச் சுவையை இழக்க மனம் வரவில்லை.

வெயில் கடுமையாக இருந்ததால் திண்ணைத் தட்டியில் போர்வை போட்டு மறைத்திருந்தோம். நாங்கள் அங்கு இருப்பது தெருவிலிருந்து பார்த்தால் தெரியாது. மதியம் மூன்று இருக்கும். தலைகாணித்தெருவிலிருந்து மணிச்சத்தம் கேட்டது. நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். தெருமுக்கிலிருந்து மறுபடியும் மணிச்சத்தம் கேட்டது. பிறகு அமைதி. பிறகு மறுபடியும் மணியடித்தது. அந்தச் சைக்கிளை நகர்த்திச் செல்லும்போது செயினிலிருந்து கிர்ரென்று ஒரு சத்தம் கேட்கும். அந்தச் சத்தம் தெருமுக்கில் துவங்கி எங்களைச் சமீபத்துத் தயங்கி பிறகு கோவிலைக் கடந்து சென்றது. அவ்வப்போது நிறைய மணிச்சத்தம் கேட்டது.

நாங்கள் பேசாது அமைதியாக இருந்தோம். பிறகு சில நிமிடங்கள் கழித்து தெருவுக்கு வந்து கிழக்கே பார்த்தபோது தூரத்தில் சைக்கிள் நின்றிருந்தது. தெருவே காலியாக இருந்தது. ஐஸ் வண்டிக்காரர் திரும்பி எங்களைப் பார்ப்பது போலத் தோன்ற நாங்கள் சட்டென்று திரும்பி தலைகாணித் தெருவுக்கு நடந்தோம்.

ஏனோ ரொம்பவும் சோகமாக இருந்தது.

***


*கிராம முன்சீப்

14 comments:

Sundar Padmanaban said...

சோதனைப் பின்னூட்டம்.

கதிர் said...

சேமியா ஐஸ் டம்ளர்ல போட்டு தின்னது எல்லாம் ஞாபகம் வந்துடுச்சி!
அம்மா வெங்காயத்துக்கு போடலாம்னு வெச்சிருந்த தட்டு முட்டு சாமானெல்லாம் திருடி ஐஸ்காரனுக்கு போட்டு வாங்கி தின்னுவோம். முடிஞ்சா பக்கத்து ஊட்டு பக்கெட்டு கூட எடுத்து வந்து போட்டு பொது மாத்து வாங்கியிருக்கேன்.

Hariharan # 03985177737685368452 said...

சுந்தர்,

கலக்கல்! போடியில் டவசர்போட்டுத் திரிந்த பள்ளி நாட்களில் முழுப்பரீட்சை லீவு நாட்களை நினைவுக்கு எடுத்துவந்தது!

//பாரின்லலாம் ஐஸ் மழையா கொட்டுமாமேடா?" என்பது நாங்கள் அடிக்கடி பேசிக்கொள்ளும் சில ஆச்சரியங்களில் பிரதானமானது. "சே. நம்மூர்ல ஐஸ் மழெ பேஞ்சா எப்படி இருக்கும்! அப்படியே டவரால டம்ளர்ல பிடிச்சு சீனி போட்டுச் சாப்பிடலாம்ல?" //

டென்மார்க் கோபன்ஹேகனில் ஐஸ்மழை பொழிந்தபோது கோட்டின் மேல் விழுந்த ஐஸ்துளியை யாரும் பார்க்காதபோது சுவைத்தேன் பாக்கெட்டில் சீனி இல்லாத குறை:-))

//கப்பைஸ் ஒர்ரூவாயாம். கோனைஸ் 75 காசுகளாம். மனசுக்குள் "நாலிருவத்தஞ்ச நூறு" என்று கணக்கு ஓடி ஒரு கப்பைஸ் = 4 பாலைஸ்-ம் "அஞ்சு பாஞ்ச எழுவத்தஞ்சு" வாய்ப்பாடுடன் ஒரு கோனைஸை ஐந்து குச்சி ஐஸ்களுக்கும் ஒப்பிட்டு //

கணக்கு வாய்ப்பாட்டின் பயன் உணர்ந்து பயன்படுத்திய இடம்!

குச்சி ஐஸில் மேற்புறத்டில் உதடு குவித்து உறிந்தால் சாயம் கூடுதலாக சிறப்பு ருசியோடு இருக்கும்!:-)))

சித்திரை மாதம் அக்கினி நட்சத்திரக் கோடை,பள்ளி விடுமுறையில் இருக்கும் வாண்டுகளின் தேசிய கீதம்
இந்தப் பாலைஸ்...கோனைஸ்..கப்பைஸ்..

பாலைஸ் பற்றி சூப்பர் வர்ணிப்பு.

சிறார்களாகத் திரிந்த காலங்களில் ஐந்துபைசா பத்துப் பைசாக்கள் தந்த அந்த சந்தோஷம் லட்சங்கள் தருவதில்லை!

labdab said...

உங்களின் அருமையான இந்தப் பதிவு பல நினைவுகளைக் கிளறிவிட்டது...

Anonymous said...

நன்றாய் இருந்தது சுந்தர்

எனக்கும் என் பழைய ஊர் ஞபகங்கள் வந்தன

Sundar Padmanaban said...

தம்பி

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

//சேமியா ஐஸ் டம்ளர்ல போட்டு தின்னது எல்லாம் ஞாபகம் வந்துடுச்சி!
அம்மா வெங்காயத்துக்கு போடலாம்னு வெச்சிருந்த தட்டு முட்டு சாமானெல்லாம் திருடி ஐஸ்காரனுக்கு போட்டு வாங்கி தின்னுவோம். முடிஞ்சா பக்கத்து ஊட்டு பக்கெட்டு கூட எடுத்து வந்து போட்டு பொது மாத்து வாங்கியிருக்கேன்.//

நல்ல அனுபவப் பகிர்வு. சுவாரஸ்யமாக இருக்கிறது. :-)

Sundar Padmanaban said...

ஹரிஹரன் ஸார்.

//சிறார்களாகத் திரிந்த காலங்களில் ஐந்துபைசா பத்துப் பைசாக்கள் தந்த அந்த சந்தோஷம் லட்சங்கள் தருவதில்லை!//

லட்சத்தில் ஒரு வார்த்தை இது. உண்மை.

குழந்தைகளாகவே இருந்திருக்கலாமோ என்று தோன்றும் பலமுறை. அதில் இதுவும் ஒன்று.

Sundar Padmanaban said...

labdab

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

Sundar Padmanaban said...

நன்றி இராஜராஜன்.

Santhosh said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க சுந்தர். உங்களுக்கு சேமியா ஜஸ் புடிக்காதா? எனனோட சின்ன வயசு favourite அது தான் :).

ஜி said...

ரொம்ப பெருசா இருந்ததால முழுசா படிக்கல... என்கூருல பாக்கெட் ஐஸ்ல வாழப்பழத்த வச்சி நச்சித் தருவான். அருமையா இருக்கும். அப்புறம் பழ ஐஸ்னு ஒரு ஐஸ். இந்த பழச்சாருன்னு சொல்வாங்கல்ல... அதுல செஞ்சது.. அட.. அட... அட... என்ன அருமையான காலமது...

Sundar Padmanaban said...

சந்தோஷ்

//உங்களுக்கு சேமியா ஜஸ் புடிக்காதா?//

அட நீங்க வேற. பாலைஸை கழுதைப் பால்ல செஞ்சதுன்னு ஒரு பொரளிய கெளப்புனமாரி, சேமியா ஐஸ்க்கு ஒண்ணைக் கெளப்பிருந்தாய்ங்க. அதவேற சொல்லி ஒங்களுக்கு ஏன் பீதிய கெளப்பணும்?

பின்னூட்டத்திற்கு நன்றி.

Sundar Padmanaban said...

ஜி

//என்கூருல பாக்கெட் ஐஸ்ல வாழப்பழத்த வச்சி நச்சித் தருவான். //

மொதல்ல இத 'நக்கித் தருவான்'னு படிச்சுட்டு ஙேன்னு முழிச்சேன். அப்றந்தான் நச்சி-ன்னு புரிஞ்சது.:)

ஆமாங்க. மதுரைக்கு வந்ததுக்கப்புறம் வகைவகையா ஐஸ் கெடைச்சது. ஐஸ் தூள டப்பால போட்டு என்ன கலர் வேணும்னு கேட்டு அதயும் டிஸைன் டிஸைனா ஊத்தி குச்சியப் போட்டுத் தருவாய்ங்க.

அப்றம் நேதாஜி ரோடு ரவுண்டானா முக்குல இருக்கற ரெண்டு பழச்சாறு கடைங்க ரொம்ப பிரபலம். மிக்ஸி கிர்ருகிர்ருன்னு ஓடிக்கிட்டே இருக்கும். நீங்க சொன்ன பாக்கெட் ஐஸை உருகுனதும் 'குடிச்சு' சுவைச்சிருக்கேன். :)

நன்றி.

Anonymous said...

மனதைத் தொட்ட பால்ய கால நினைவுகளும் யதார்த்தங்களின் தரிசனங்களும்.

மனதுக்குள் ஒரு பெரும் பாரம்!!

மாற்ரங்கல் யார் குற்றம்? பாவம் அந்த குச்சி ஐஸ் வியாபாரி!