*** நினைவலைகள் - பொங்கலோ பொங்கல் ***
சுண்ணாம்புக் கற்கள் நிரம்பிய அந்தக் குட்டிச் சாக்குப் பை சூடாகவே இருக்கும். ஊர்க் கோடியிலிருக்கும்சுண்ணாம்புக் காளவாயிலிருந்து வாங்கிக் கொண்டு வர வேண்டும். கொல்லைப்புறத்தில் தொட்டியில் நிரப்பிவைத்துள்ள தண்ணீரில் கற்களை ஒவ்வொன்றாகத் தூக்கிப் போட்டு அவை புஸ்ஸென்று புகை எழுப்பிக் கொதித்துமூழ்குவதை வேடிக்கை பார்ப்பது உற்சாகமான விஷயம். "பாத்து. தண்ணி தெறிச்சா தோலு வெந்துடும்"என்பார் தாத்தா. சாக்குப் பையைக் காலி செய்து முடித்தும் தண்ணீர் சில நிமிடங்களுக்குக் கொதித்துக்கொண்டே இருக்கும். முதல் கல்லைத் தூக்கிப் போடுவதற்கு முன் தொட்டியின் விளிம்பில் சுற்றிக் கொண்டிருக்கும்பிள்ளையார் எறும்புகளை ஊதி இடம் பெயர்க்க வேண்டும். சில சமயம் உற்றுப் பார்த்தால் தவளைக் குட்டி ஒன்றுதென்படலாம்.
தேரை எனப்படும் பலூன் போல் உப்பிய தவளை ஜந்து அவ்வப்போது இரவு நேரத்தில் கொல்லைப்புறக் கதவைத்திறந்ததும் தத்தி உள்ளே வரும். "வெரட்றா அதை. மேல பட்டா தேமல் வரும்" என்று பாட்டி அலற, அதைத்தொடாமல் வெளியே துரத்தி, படிக்கப்பால் நிறைந்துள்ள இருளில் அது மூழ்கி மறைந்ததும் கதவைச் சாத்தி நிம்மதிப் பெருமூச்சு விடுவேன். காலையில் கொல்லைக் கதவைத் திறந்து பார்த்தால் இரவில் பயந்த தவளை,தேரை, மண்ணுளி எதுவும் இருக்காது.
தொட்டியில் கற்கள் இரண்டு மூன்று நாட்கள் ஊறியதும் இட்லி மாவு போன்று ஆகிவிடும். பொங்கலுக்கு இன்னும்இரண்டு நாள்களே பாக்கி இருக்கிறது.
பழனி வந்து "நா அடிச்சித் தரட்டுங்களா சாமி" என்று கேட்டதற்கு "வேண்டான்டா.பேரன் அடிக்கறேங்கறான்.. அடிச்சுப் பாக்கட்டும்" என்று தாத்தா சொல்லி விட்டதில் பெருமையாக இருந்தது.பழனி முனகிக் கொண்டே சென்று விட்டார். பழனி தான் ஆல் இன் ஆல் அழகுராஜா. விறகு பிளக்க வேண்டுமென்றால் கோடாலியுடன் நிற்பார். புளிய மரத்தை உலுப்ப வேண்டுமென்றாலும் கூப்பிடு பழனியை.காய்கறித் தோட்டத்தைக் கொத்திவிடவேண்டுமென்றால் பழனி. வெள்ளையடிப்பதற்கும் வழக்கமாகப் பழனிதான். அந்த வருஷம் மட்டும் இல்லை.
காய்ந்த பனங்கட்டை ஒன்றை எடுத்து நீரில் நனைத்து, விளிம்பில் சுத்தியலால் மெதுவாகத் தட்டித் தட்டி பிரஷ்ஷாக மாற்ற வேண்டும். தாத்தா வெள்ளை வெளேரென்று ஏதோ ஒரு பொடியையும் நீலத்தையும் வாங்கி வந்து தொட்டியில் சுண்ணாம்புக் குழம்போடு கலக்க, அது மக்கிய நிறத்திலிருந்து வெளிர் நீலமாக மாறும். ஆனால் வெண்மை குறைவுதான்.
ஆளுக்கொரு வாளியில் சுண்ணாம்புக் குழம்பை எடுத்துக் கொண்டு சற்று நீர் கலந்து கொள்வோம். முதலில் கொல்லைப்புறத்தில் இருக்கும் பிருந்தாவனத்திற்கு வெள்ளை அடித்துத் துவங்குவேன். ஒரு கை தேர்ந்த பெயிண்ட்டரின் லாகவத்துடன் மேலிருந்து நேர் கோடாகக் கீழ் நோக்கி ஒரு இழு. அப்படியே கீழிருந்து மேல் நோக்கி ஒரு இழு. நான்கு பக்கமும் முடித்துவிட்டு நிமிர முதலில் அடித்த பக்கம் அதற்குள் காய்ந்து வெள்ளை வெளேரெனச் சிரிக்க, மனதுக்குள் சந்தோஷம் பொங்கத் தாத்தாவைப் பார்ப்பேன். "கைய நல்லாக் கழுவிட்டு வா. சாப்டலாம்" என்று அவர் சொல்ல, கிணற்றில் அதிவேகமாகத் தண்ணீர் இறைத்துக் கையைக் கழுவ, உள்ளங்கைகள் சிவந்து தோல் கன்றிப் போயிருக்கும். தாத்தா ஒரு ஸ்பூன் 'தேங்காண்ணையை' ஊற்றி 'பரபரன்னு தேய்ச்சுக்கோ' என்பார். தேய்க்கத் தேய்க்கச் சூடு பறக்கும்.
வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டு வாளியைக் கையிலெடுத்தால் மலைப்பாக இருக்கும்-அவ்வளவையும் அடித்து முடிப்பதற்குள் பொங்கல் முடிந்துவிடும் போலிருக்கிறதே என்று.
இப்படித்தான் வீராவேசமாக சில சாகசங்களைஆரம்பித்து விட்டுப் பாதியிலிருக்கையில் திடீரென்று எழும் அவநம்பிக்கையால் அடிவயிற்றில் ஜிலீரென்று குளிர்ந்து நிறுத்திவிடலாமா என்று யோசித்துப் பின்பு சுய தைரியத்தை பிரயத்தனப்பட்டு வரவழைத்து முடித்திருக்கிறேன். அவற்றில் சில:
அ) மதுரையிலிருந்து எலும்புக்கூட்டுச் சைக்கிளில் வத்திராயிருப்புக்குச் சென்றது (80 கி.மீ.). போய்ச் சேர்ந்து இரவு படுத்து மறுநாள் எழுந்தபோது கால்களை அகட்டி வைத்துத்தான் நடக்க முடிந்தது. தாத்தாவும் "போம்போது ஜெயக்குமார்ல லக்கேஜ் போட்டு எடுத்துக்கிட்டுப் போயிர்றா" என்று சொல்லியும் வீம்பாக மறுபடி எதிர்க்காற்றில் மிதித்து மதுரை வந்து சேர்ந்தேன். அடுத்த பதினைந்து நாள்களுக்கு சைக்கிளின் கண்ணில் படாமல் போய் வந்து கொண்டிருந்தேன்.
ஆ) வத்திராயிருப்புக் குளத்தில் பெரியவர்களெல்லாம் வானத்தையும் அவ்வப்போது படித்துறைப் பெண்களையும் பார்த்துக்கொண்டே அக்கரைக்கு நீந்திப் போகிறார்களே என்று நானும் நீந்தத் தொடங்கி, மல்லாக்கு நீச்சல், முங்கு நீச்சல், கடப்பாரை நீச்சல், கைகளை மட்டும் அல்லது கால்களை மட்டும் அசைத்து நீச்சல், மூச்சடக்கி மிதத்தல் என்று தெரிந்த வித்தைகளையெல்லாம் நீரில் கரைத்துவிட்டு, பாதி குளத்தில் மல்லாந்து ஆகாசத்தைப் பார்த்தபோது குளத்து நீரோடு கண்ணீரும் சேர்ந்து கொண்டு, 'அப்படியே நின்று விடலாமா?'என்று ஒரே ஒரு வினாடி யோசித்து, பிறகு ஆழ் மூச்சு வாங்கிக்கொண்டு வலியைப் பொருட்படுத்தாது அடித்து எதிர் கரையை அடைந்தது; ஒரு மணி நேரம் தங்கி விட்டுப் பிறகு எச்சிரமமும் இல்லாமல் திரும்ப நீச்சலடித்து வந்தது.
நிற்க.
சுவற்றில் சுண்ணாம்பு அடிப்பது அத்தனை இலகுவான சமாச்சாரம் இல்லை. மண் சுவரானதால் நேராக இல்லாமல் சாய்ந்தும் ஆங்காங்கே புடைத்தும் இருக்கும். சில இடங்களில் சுண்ணாம்பு பூசும் போது ஏற்கெனவே பல வருடங்கள் பூசியதும் சேர்ந்து பெயர்ந்து விடும். அண்ணாந்து பூசும்போது பனங்கட்டை பிரஷ்ஷிலிருந்து சுண்ணாம்பு வழிந்து சர்ரென்று அக்குளுக்கு வந்து விலாவில் இறங்கும். கண்ணில் தெறிக்கவும் வாய்ப்புகள் அதிகம். அனைத்துச் சவால்களையும் சந்தித்து ஒருபக்கச் சுவரை அடித்து முடிப்பதற்குள் ஒரு நாள் முடிந்து கைகளெல்லாம் இரத்தம் சுண்டிப் போய் வலி உயிரை எடுக்க "போதுண்டா. நாளைக்கு பழனிய வரச் சொல்லிரலாம்" என்று தாத்தா சொல்லவும் "சரி" என்று மனது ஆடினாலும் "வேண்டாம்" என்று தலையாட்டுவேன். தாத்தாவுக்குத் தெரியும் நான் எவ்வளவு பிடிவாதப் பையன் என்று - அவர் போலவே!
மறுநாள் எழும்போது விரல்களும், உள்ளங்கைகளும், மணிக்கட்டு, தோள் என்று ஒரு வலி வலிக்கும் பாருங்கள். பிரஷ்ஷைத் தூக்கவே சிரமமாக இருக்கும். ஆனால் அந்த வலி சற்றுச் சுகமான வலியும் கூட.
இதைச் சொல்லும்போது இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. பள்ளியில் வருடத்திற்கு ஒரு முறை ஏதாவது ஒரு தடுப்பூசி போடுவார்கள். சட்டையை மடக்கிக் கொண்டு வரிசையில் நின்று வீராவேசமாக புஜத்தில் போட்டுக் கொள்ளும்போது, ஏதோ எறும்பு ஊர்வது போல் முகத்தில் புன்னகையைத் தவழ விட்டு, வலியைப் பொறுத்துக்கொண்டு ஊசி போட்டுக் கொள்வோம். மறுநாள் தோள்ப் பட்டை வீங்கிக் கொண்டு தொட்டாலே வலி எடுக்கும். அசந்த நேரத்தில் முரட்டுப் பையன்கள் முஷ்டியை மடக்கி டம்மென்று ஊசி போட்ட இடத்தில் ஒரு குத்து விட, சில வினாடிகள் கிறுகிறுவென்று சுற்றிக் கொண்டு வரும். வலி தாங்க முடியாமல் அலறுவோம்.
இப்படிப் புதிதாக ஒரு வேலையைச் செய்கையில் எடுக்கும் வலி அதே வேலையை மறுபடி செய்வதன் மூலம் தசைகள் பழகிக் கொண்டு சரியாகிவிடும் என்று தாத்தா சொல்லிக் கொடுத்தார். பிற்காலத்தில் எல்லா இள இளைஞர்களுக்கும் வரும் ஆர்ம்ஸ் ஸிண்ட்ரோம் வந்து ஜிம்முக்குச் சேர்ந்த போதும் அந்த அறிவுரை கைகொடுத்தது.
மறுநாள் கிடுகிடுவென்று எல்லாச் சுவர்களுக்கும் வெள்ளை அடித்து முடித்து ஓய்கையில் பெருமூச்சொன்று எழும். சுவர்கள் ஈரம் காய்ந்து வெண்மை பளீரிடத் தொடங்குவதைப் பார்ப்பது ஒரு ஆனந்தம். வீட்டின் முன்புறச் சுவரில் மட்டும் கிரிக்கெட் ஸ்டம்ப் உயரத்திற்கு செம்மண்ணில் பட்டை போட வேண்டும். தெரு முழுக்க வரிவரியாக ஒரே மாதிரி இருக்கும். பெருமாள் கோயிலின் பதினைந்தடி சுவர் முழுவதும் தூண் அகலத்திற்குச் செம்மண் பட்டி அடித்திருப்பார்கள்.
பாட்டியிடம் புதுச் சுவற்றில் வறட்டி தட்டவேண்டாம் என்று கடுமையாக உத்திரவு போட்டு விடுவார் தாத்தா.
பொங்கலுக்கு வாங்க வேண்டிய சாமான்களுக்காக கடைத்தெருவுக்குச் சென்றால் தெருவே ஜேஜே என்று இருக்கும். மாட்டு வண்டிகளில் வந்து இறங்கியிருக்கும் கரும்புகள், இலையுடன் மஞ்சள் கிழங்குகள், வாழை மரங்கள் என்று அமளி துமளிப் படும். ஆங்காங்கே முறுக்கேறிய மாடுகளின் கொம்புகளுக்குப் பெயிண்ட் அடித்துக் கொண்டிருப்பார்கள். பக்கத்துக் குக்கிராமங்களிலிருந்து வந்து குவிந்திருக்கும் ஜனங்கள் என்று கடைத்தெருவே சந்தையாக மாறியிருக்கும். வெளியூர்களிலிருந்து வரும் பேருந்துகளை தெரு முக்கிலேயே நிறுத்திவிடுவார்கள். கடைத்தெரு முத்தாலம்மன் சாவடிதான் ஸிடி செண்ட்டர். பஞ்சு மிட்டாய்க் காரன், பலூன் காரன், ஒற்றை மூங்கில் கம்பில் சுற்றியிருக்கும் கோடு போட்ட ரோஸ் மிட்டாயும் அதன் உச்சியில் கையில் ஜிங்சாங் என்று அடிக்கும் பொம்மை, செருகிய ரப்பர் நூல் கோடுபோட்ட, கட்டம் போட்ட பந்துகள் விற்பவன், ஆடைகள் விற்பவன், சோன் பப்டி விற்பவன், உயர்ந்த மூங்கில் வேலிபோல் எங்கு காணினும் நிமிர்த்தி வைக்கப்பட்டிருக்கும் கரும்புக்கட்டுகள், என்று அப்படியே கூட்டம் அம்மும்.
இரண்டு கரும்புகள் மற்றும் உதிரி சாமான்கள் வாங்கிக் கொண்டு, தாத்தா பையைக் கொண்டு வர, என்கைகளுக்குப் பிடிபடாது இருக்கும் கரும்புகளைத் தோளில் பேலன்ஸ் செய்து தூக்கிக் கொண்டு - ஒன்று கீழே சாய்ந்தால் இன்னொன்று மேலே போகும்- தோகை தரையில் தேயாமல் (தாத்தா "தெருவைக் கூட்டாம வாடா") வீட்டுக்கு வந்து மூலையில் நிமிர்த்தி வைத்து விடுவேன். மறுநாள் பொங்கல் முடியும் வரைக்கும் அவை மடி. முகர்ந்து கூடப் பார்க்கக் கூடாது.
காலையில் எல்லோரும் குளித்து பிருந்தாவனம் முன்னால் கூடிவிட, வெண்கலப் பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்குச் செடியைக் கட்டி, அதன் தொப்பையில் சந்தனத்தைச் சுற்றிப்பற்று போட்டு, குங்குமம் வைத்து, பிருந்தாவனத்திற்கு முன்னால் கோலம் போட்டு வைத்திருக்கும் இடத்தில் அடுப்பை வைத்துத் தயாராக்கி விடுவேன். கரும்புகளுக்கும் சந்தனம் குங்குமத்தில் பொட்டு வைத்து பிருந்தாவனம் பக்கத்தில் சுவற்றில் சாய்த்து வைப்பேன்.
அம்மா வெண்கலப் பானையில் பால் நிரப்பி அடுப்பைப் பற்ற வைத்ததும், என் பொறுமை மெதுவாகக் கலையத் துவங்கும். கண்கள் சாய்ந்திருக்கும் கரும்புகளை மானசீகமாக வெட்டி கடைவாய்ப் பற்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும்.
பால் பொங்கி வரும் வேளையில் 'பொங்கலோ பொங்கல்' என்று என் தந்தை எடுத்துக் கொடுக்க, நாங்கள் காட்டுக் கத்தல் போடுவோம். அனைவரின் முகங்களிலும் வெட்கப் புன்னகை நிறைந்திருக்கும் - இப்படி வாய்விட்டுச் சேர்ந்து கத்திய பழக்கமில்லாததால். சூரியனை அனைவரும் வணங்க, பொங்கிய பாலை அரை டம்ளர் அளவுக்கு எல்லாருக்கும் வினியோகம் செய்வார் அம்மா. நீர் கலக்காது காய்ச்சிய அந்தப் பாலின் சுவையே தனி. இப்படிக் குடிக்க பொங்கலன்று மட்டும்தான் முடியும்.
பெரியவர்கள் அனைவரும் - தாத்தா தவிர - வீட்டுக்குள் சென்றுவிட நாங்கள் குபீரென்று கரும்புகள் மீது பாய்வோம். "இருங்கடா.. வெட்டித் தரேன்" என்று தாத்தா அதட்டி அடக்கி விட்டு, கரும்பை எடுத்து முதலில் தோகையை வெட்டி எறிந்து விடுவார். அடிக்கரும்பு வேர்களுடன் முள்ளாக இருக்கும் அதில் ஓரடி அளவுக்கு ஒரே வெட்டில் வெட்டித் தனியே எடுத்து வைத்து விட்டு ஆளுக்கு ஒரு துண்டை வெட்டிக் கொடுப்பார். நல்ல தடிமனான உறுதியான கரும்பு. கரும்பை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு எதிரே இருக்கும் பெருமாள் கோவில் சொர்க்கவாசல் படிக்கட்டில் உட்கார்ந்து கொள்வோம்.
முன்பற்களில் தோலைப் பிடித்து இழுத்து உரித்து, கடைவாய்க்குக் கொடுத்து, கடித்துச் சுவைத்து சாற்றை அப்படியே ஊறும் உமிழ் நீரோடு முழுங்குகையில் இனிப்பாகத் தொண்டைக்குள் இறங்கும் பாருங்கள் -அமுதம் அது. கரும்பின் கணுப் பகுதிதான் பற்களுக்குச் சவால். தடை ஓட்டத்தில் சில அடி தூரத்திற்கு ஒன்றாக வைக்கப் பட்டிருக்கும் தடை போல கணுக்கள். உதடோரங்களெல்லாம் எரிந்து நாக்கும் கரும்புச் சக்கை குத்திப் புண்ணாகி விடும். மறுநாள் வெறும் மோர் சாதத்தை மட்டும் தின்ன வேண்டும்.
அடிக்கரும்புத் துண்டின் தோலை லாகவமாகச் சீவிவிட்டு, அதை மேலும் பல துண்டுகளாக வெட்டிச் சாப்பிடுவார் தாத்தா. 'அடிக்கரும்பின் இனிப்புக்குச் சமானமே இல்லை' என்பார்.
போகிக்கு முதுகெலும்பு போன சைக்கிள் டயர்களை கொளுத்திப் போட்டு விளையாடுவார்கள் மேலப்பாளையப் பையன்கள். அவர்கள் அக்ரஹாரத் தெருக்களுக்குள் வருவதில்லை. மேலப்பாளையத்திலிருந்து எரியும் டயர்களைப் பிடித்துக் கொண்டே புகைவண்டி மாதிரி வந்து, தலைகாணித் தெரு வழியாகச் சென்றுவிடுவார்கள்.
பொங்கலுக்கு மறுநாள் ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு ஊர்க் கோடி மைதானத்தில் நடந்தாலும், எங்கள் தெருவே ஆள் நடமாட்டமில்லாது காலியாக இருக்கும். ஜல்லிக்கட்டுக்குச் செல்லாத சில மாடுகளை அக்ரஹாரத்தில் அவிழ்த்து விட்டு விடுவார்கள். ஓரமாக நடந்து போய்க் கொண்டிருந்த தாத்தாவை தெருவுக்குள் ஓடி வந்த வெளியூர் மாடு ஒன்று அவர் முதுகில் கெந்தி முள்ளுச் செடிக்குள் எறிந்ததில் பத்து நாள்கள் திண்ணையில் படுத்த படுக்கையாக உடல் முழுதும் சந்தனம் பூசிக்கொண்டு படுத்திருந்தார்.
பொங்கலின் பிரதான விசேஷம் வானொலியில் வரும் புதிய நிகழ்ச்சிகளும், கூடுதல் நேரத்திற்கு ஒலிபரப்பாகும் திரைப் பாடல்களும்.
சொர்க்க வாசல் படிக்கட்டில் சாய்ந்து ஒயிலாக அமர்ந்து கொண்டு கரும்பைச் சுவைத்து சக்கையைத் துப்பிக் கொண்டே வெண்மையாகப் பளீரிடும் எங்கள் வீட்டுச் சுவரைப் பார்க்கையில் உள்ளத்தில் உவகை பொங்கும்! அதுவே நல்ல பொங்கலோ பொங்கல்.
நண்பர்களுக்கு மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.
அன்புடன்
சுந்தர்
4 comments:
அன்புள்ள சுந்தர்,
வழக்கம்போல 'நினைவலைகள்' எங்கள் எல்லோருடைய நினைவுகளையும் வரவழைத்துவிட்டது!
//பொங்கிய பாலை அரை டம்ளர் அளவுக்கு எல்லாருக்கும் வினியோகம் செய்வார் அம்மா.
நீர் கலக்காது காய்ச்சிய அந்தப் பாலின் சுவையே தனி. இப்படிக் குடிக்க பொங்கலன்று
மட்டும்தான் முடியும்.//
வெறும் பால் மட்டும்தானா? பொங்கல் செய்ய மாட்டார்களா? இது நான் இதுவரை கேள்விப்படாத
ஒன்று.
கரும்பு தின்னுவதில்தான் எத்தனை சுகம்! மறுநாள் நாக்கு எரிய எரிய..... அப்பாடா!
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே... நண்பனே...
அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்!!!
என்றும் அன்புடன்,
துளசி.
சுந்தர்!
நீங்கள் எழுதும் விடயங்களோடு ரொம்பவும் ரிலேட் செய்ய முடிகிறது என்னால். குறிப்பாக, இவற்றை அனுபவித்தேன்:
//சுண்ணாம்புக் கற்கள் நிரம்பிய அந்தக் குட்டிச் சாக்குப் பை சூடாகவே இருக்கும்.//
//திடீரென்று எழும் அவநம்பிக்கையால் அடிவயிற்றில் ஜிலீரென்று குளிர்ந்து நிறுத்திவிடலாமா என்று யோசித்து //
//அனைவரின் முகங்களிலும் வெட்கப் புன்னகை நிறைந்திருக்கும் - இப்படி வாய்விட்டுச் சேர்ந்து கத்திய பழக்கமில்லாததால்//
வாழ்த்துக்கள்...
நன்றி துளசி.
முதலில் பால் காய்ச்சிவிட்டு அப்புறம்தான் பொங்கல் எல்லாம்.
நன்றி கண்ணன்
நல்ல நினைவுகள்.
அன்புடன்
சுந்தர்.
சுந்தர், சுண்ணாம்படித்த கதை படிக்க நிறைய நினைவுகளை மீட்டது. ஆனால் எங்கள் வீட்டில் பொங்கல் சமயத்தை விட, சரசுவதி பூஜை சமயத்தில் தான் சுண்ணாம்படிக்கப் படும். கல் சுண்ணாம்பு, கிளிஞ்சல் சுண்ணாம்பு இவையெல்லாம் இத்தனை நாட்களில் மறந்தே போயிருந்தது.
Post a Comment