முன்னுரை:
இணையத்தில் முதன்முதலில் எழுதப் பழகத் துவங்கியது மரத்தடி இணையக் குழுமத்தில் - சரியாகச் சொல்லவேண்டுமென்றால் 24 செப்டம்பர் 2002 அன்று குழுமத்தில் இணைந்து எனது முதற்கட்டுரையை இட்டேன். 'அதற்கென்ன இப்போ?' என்கிறீர்களா? அலுவல்பளுவில் ஒன்றும் புதிதாக எழுதவில்லை (பழைய பல்லவிதான்). இடைவெளி விட்டால் எழுத மறந்துபோகுமோ என்று பயமாகவும் இருக்கிறது. 'சரி வலைப்பதிவுக்கு வந்து கொஞ்ச நாள்கள் தானே ஆகிறது; ஆரம்பத்தில் எழுதியவற்றைச் சற்று அசைபோடலாம்' என்ற அவாவில் எனது முதற் கட்டுரையான 'கொய்யாப் பழங்கள்'-ஐ உங்கள் வாசிப்பிற்கு வைக்கிறேன். இன்னும் சில கட்டுரைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக இட உத்தேசம்.
அன்புடன்
சுந்தர்
நினைவலைகள் *** கொய்யாப் பழங்கள் ***
வத்திராயிருப்பு என்ற ஊரை உங்களில் எவ்வளவு பேருக்குத் தெரியும்? தமிழகத்தின் தென்கோடியில் மேற்கு மலைத்தொடரின் அடிவாரத்தில் இருக்கும் ஒரு குக்கிராமம். இப்போதும் குக்கிராமமாக இருக்கவேண்டும். அவ்விடம் விட்டு வந்து இருபது வருடங்களாகிவிட்டது. ஆரம்பப் பள்ளியில் படித்தபோது தமிழ் ஐயா ‘இது ராமநாதபுர மாவட்டத்தின் நெற்களஞ்சியம்’ என்று சொல்லியிருக்கிறார். பெயர்க் காரணம் கேட்டபோது ‘வற்றா இருப்பு’ என்றிருந்தது மருவி ‘வத்திராயிருப்பு’ என்று ஆகிவிட்டது என்றார். ஆங்கிலத்தில் ‘Watrap’ என்று எழுதப்பட்டு ‘வத்ராப்பு’ என்று அழைக்கப் படுகிறது. எப்போதாவது சில சாதி மோதல்களுக்கும், வெள்ளத்தால் சூழப் பட்டதற்கும் செய்திகளில் அடிபட்ட ஊர். மூன்று திசைகளிலும் மலைகள் சூழ்ந்திருக்கும் ஊர். தெற்கே கிருஷ்ணன் கோயிலைக் கடந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் செல்லலாம். வடக்கே தாணிப்பாறை. மேற்கே கூமாப்பட்டியைக் கடந்து சிறிது தூரம் சென்றால் மலையடிவாரத்தில் கிழவன் கோயிலும், பிளவக்கல் அணையும் உள்ளன. மலையைத் தாண்டினால் கேரளா என்று சொல்வார்கள். கிழக்கே சென்றால் தொலைதூரத்தில் மதுரையும் மிச்ச இந்தியாவும்.
கிருஷ்ணன் கோயிலென்பது ஒரு சிற்றூரின் பெயர். மதுரையிலிருந்து ராசபாளையம் செல்லும் வழியில், ஸ்ரீவில்லிப்புத்தூருக்குச் சில காத தூரம் முன்பே நெடுஞ்சாலையில் இருக்கிறது கிருஷ்ணன் கோயில். அனைத்துப் பேருந்துகளும் அங்கு நின்று செல்லும். நிற்கும் சில விநாடிகளில் மூங்கில் கூடைகளிலும், தட்டுக்களிலும் இனிய கொய்யாப் பழங்களை அடுக்கிக் கொண்டு அழுக்கு வேட்டி சட்டை விவசாயிகளும், தபால் பொந்துடன் அரைக்கால் சட்டையணிந்த சிறுவர்களும், குச்சியுடல் சிறுமிகளும், பெண்களும் பேருந்துகளைச் சூழ்ந்து கொள்வார்கள்.
பெரியவர்கள் சன்னல் வழியாக நீட்டி விற்பனை செய்ய, சிறுவர்கள் பேருந்தின் உள்ளே புகுந்து, ‘அக்கா, அண்ணே..டசன் மூணு ரூவா..’ என்று கூவிக் குறுக்கேயும் நெடுக்கேயும் நடத்துனர் மற்றும் ஓட்டுனரின் வசவுகளைப் புறக்கணித்துச் செல்வார்கள். பேரமும் விற்பனையும் சில விநாடிகளில் முடிந்து பேருந்து நகர்ந்து ஓடத் துவங்க, சிறுவர்கள் அபாயகரமாகக் குதித்து (பழங்கள் சிதறாமல்) ஒதுங்க, காலணியில்லா பெரியவர்கள் கூடவே ஓடிவந்து பயணிகளிடம் காசு வாங்கிக் கொள்வார்கள். இந்த நிகழ்ச்சி முடியும் வரை, என் இதயம் அதிகத் துடிப்பில் இயங்குவது வழக்கம் - யார் விழுவார்களோ, அடிபடுவார்களோ என்று. சில வம்பர்கள் பேருந்து நகரும் வரை நீட்டப்பட்ட தட்டுக்களில் இருக்கும் பழங்களை ஆராய்ந்து விட்டு, கடைசி விநாடியில் சிலவற்றை எடுத்துக் கொண்டு, வேகம் பிடித்ததும் சன்னல் வழியாகக் காசுகளை விட்டெறிவார்கள். வண்டியின் பின்புறம் எழும் புழுதியில் அந்த உழைத்துக் களைத்த, கருத்த மனிதர்கள் மறைவதை நான் கழுத்து வலிக்கும்வரை திரும்பிப் பார்த்துக் கொண்டேயிருப்பேன். இதயத்திலும் வலியுடன்.
கிருஷ்ணன்கோயில் இன்றும் அதே நிலைமையில் இருக்கிறது. அன்று நான் பார்த்த சிறுவர்கள் இன்று அழுக்கு வேட்டி சட்டையுடன் சன்னல் வழியாகப் பழத்தட்டு நீட்டி காசு வாங்கக் கூடவே ஓடி வருகிறார்கள், செருப்பில்லாக் கால்களுடன். பழத்தட்டில் கொய்யாவுடன் நீங்கள் ஆப்பிளையும் பார்க்கலாம்.
கிருஷ்ணன் கோயில் நிறுத்தத்தில் வலதுபுறம் செல்லும் வண்டிப் பாதையில் சென்றால் பத்தாவது மைலில் வத்திராயிருப்பு. நான் பிறந்து பதின்மூன்று வயது வரை இருந்த ஊர். எவ்வளவோ பசுமையான நினைவுகள் வற்றா இருப்பாக இன்னும் உள்ளன. அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
தமிழைத் தவிர வேறு மொழி அறியா பருவம். எனக்குத் தெரிந்த உலகத்தில் வத்திராயிருப்பும், மதுரைப் ‘பட்டணமும’, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலும் மட்டுமே இருந்தன. வேறெங்கும் சென்றறியாதிருந்தேன். அப்போதிருந்த என் சில அசைக்கமுடியாத நம்பிக்கைகள் வேடிக்கையானவை. அவற்றில் சில இதோ:
1. வத்திராயிருப்பில் மழை பெய்தால் ‘உலகம்’ முழுதும் மழை பெய்துகொண்டிருக்கிறது என்றும்
2. அங்கு வெயிலென்றால் எங்கும் வெயிலடிக்கும் என்றும்
3. அங்கு இரவானால் எங்கும் இரவு என்றும் நம்பினேன்.
செய்தித்தாள்கள் படிக்கத் துவங்கியும் (ஓசியில்) வானொலியில் செய்திகள் கேட்கத் துவங்கியவுடன், மேற்சொன்ன நம்பிக்கைகள் தகர்ந்தன. மதுரையில் மழை என்று செய்தி படித்தவுடன் ஏன் நம் ஊரில் மழை பெய்யவில்லை என்ற கேள்வி பிறந்தது. தாத்தாவிடம் ஓடிச் சென்று கேட்டவுடன், மடியிலமர்த்தி விளக்கினார். வெண் மேகங்களுக்கும், கார் மேகங்களுக்கும் உள்ள வித்தியாசத்தையும், அவைகளின் பயணத்தையும், கண் கூசச் செய்யும் மின்னலுடனும், ஆர்ப்பாட்டமான இடியுடனும் கூடி மழையருவி பொழிவதையும் விழிகள் விரிய ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டேன். மழைப் பிரளயம் முடிந்ததும், அதன் வலிமையையும் விசையையும் தாங்காமல் சிவந்த செவ்வானத்தைப் பற்றி அறிந்துகொண்டேன். என் கையளவு அறிவு என் தாத்தாவின் கடலளவு அன்பிலிருந்து கிட்டியது. மழை பெய்த விளக்கில்லா இரவுகளில் அருகிலிருக்கும் மரங்களிலிருந்தும் முட்காடுகளிலிருந்தும் சில்வண்டுகளின் உலோகச் சத்தம் இடைவிடாது கேட்கும். நீங்கள் கேட்டதுண்டா? சில்வண்டுகள் பகலிலும் ஆளில்லா முட்காடுகளில் ரீங்கரித்துக் கொண்டிருக்கும். எவ்வளவோ முயன்றும் அவற்றைக் கண்ணால் இதுவரை கண்டதில்லை. நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
தாத்தாவின் விளக்கங்களைக் கேட்டவுடன், எனக்கு உடனடியாகத் தோன்றியது என்னவென்று சொன்னால் சிரிப்பீர்கள். மற்றுமொரு முறை வத்ராப்பில் மழை பெய்தால் ஊர்க் கோடிவரை ஓடிச் சென்று, அதாவது மழை பெய்யும் எல்லை வரை ஓடிச்சென்று, எல்லையைக் கடந்து மழை பெய்யா இடத்தில் நின்று திரும்பிப் பார்த்தால் மழை வானருவியாகப் பெய்வதை நனையாமல் (?) பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். பின்பு மெதுவாக தலையை மட்டும் மழை எல்லையின் உள் நீட்டி, உடல் நனையாமல் நின்று பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். கிட்டத்தட்ட இதேபோல் ஒரே சமயத்தில் இரவாகவும் பகலாகவும் இருக்கும் இரு வேறு இடங்களின் நடுவே நின்று இருளையும் ஒளியையும் மாறிமாறி ரசிக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்தக் குழந்தைத்தனம் இப்போது நினைக்கையில் இனிக்கிறது.
சிற்சில சமயங்களில் நினைத்துப் பார்க்கிறேன். அந்த வயதிலேயே இருந்திருக்கலாமோ என்று.
செப்டம்பர் 24, 2002
நன்றி : மரத்தடி இணையக் குழுமம்
No comments:
Post a Comment