Thursday, March 17, 2005

*** பேருந்து நிறுத்தம் ***

*** பேருந்து நிறுத்தம் ***


என்னைக் கேட்டால் நான் (முதலமைச்சர் ஆனால்) அனைத்து அப்பாக்களையும், வண்டி நிற்கும் போது தற்காலிகமாக இறங்கிச் சென்று மறுபடியும் வண்டி கிளம்பும் முன் ஏறிக்கொள்வதை உடனடியாகத் தடை செய்வேன். சிறுவயதில் அப்பாவுடன் பயணிக்கும் போதெல்லாம் என்னை அதிகபட்ச மன உளைச்சலுக்கு ஆளாக்கியது இதுதான்.

வத்திராயிருப்பிலிருந்து மதுரைக்குச் செல்லும்போது, பேருந்து ஓட்டுனருக்குத் தூக்கம் வந்தால் (அதை வண்டியின் வேகத்திலும் சாலையில் ஒழுங்கீனமாக ஓடுவதிலும் கண்டு கொள்ளலாம்), கல்லுப்பட்டியில் முன்பே ஒப்பந்தம் செய்திருக்கும் சாலையோர உணவகத்தில் நிறுத்திவிட்டு சத்தமில்லாமல் இறங்கிச் செல்வார். நடத்துனரோ ‘வண்டி பத்து நிமிசம் நிக்கும். டீ சாப்டறவங்க சாப்ட்டு சீக்ரம் வாங்க’ என்று விற்பனைக் குரலில் சத்தமாகச் சொல்லிவிட்டு இறங்கிப் போவார். அவர் குரலிலும் கண்களிலும் லேசான குற்ற உணர்ச்சி தெரிந்ததாக ஞாபகம்.

இத்தகைய சாலையோர உணவகங்களின் கட்டாயமான குணாதிசயங்கள் என்னவென்றால்:·

1. மூக்கைத் துண்டால் இறுக மூடிக்கொண்டாலும் அதையும் மீறி அடிக்கும் சிறுநீர் நாற்றம்

2. இன்றோ நாளையோ என்ற நிலையில் இருக்கும் ஓரிரு நாய்கள்

3. அடுத்து வருவதோ, முன்பு சென்றதோ ஒரு கிராமமென்றால் - ஓரிரு பன்றிகள்· அதிசயமாக ஒரு பூனை·

4. அரிவாள் மீசையுடன், எண்ணெய் வழியும் சிலை போல், வியர்வை வழியும் சமையல் காரரும் பரிமாறுபவர்களும்·

5. என்று செய்தது அல்லது எப்படிச் செய்தது என்று கண்டே பிடிக்க முடியாத பண்டங்கள். அதிலும் மழை பெய்திருந்தால் கேட்கவே வேண்டாம்.

நிற்க. (இந்த வார்த்தையை பெரியவர்கள் அடிக்கடி கடிதங்களில் உபயோகிப்பதைக் கண்டிருக்கிறேன். எதற்காக எழுதுகிறோம் என்று யாராவது விளக்கினால் நலமாக இருக்கும்).
Image hosted by TinyPic.com

நான் சுதாரிப்பதற்குள் அப்பா இறங்கிச் சென்றிருப்பார். அவ்வளவுதான். அதற்குப் பின்பு அவர் வரவே மாட்டார் என்றுதான் ஒவ்வொரு முறையும் நினைத்துக் கொள்வேன். ஒருவேளை அவர் வராமல் வண்டி கிளம்பி விட்டால் என்னென்ன செய்ய வேண்டும் என்று கடுமையாக ஒத்திகை பார்த்துக் கொள்வேன். கை அவ்வப்போது என் அரைக்கால் சட்டைப் பையில் இருக்கும் எட்டணாவைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளும். என் பயணச் சீட்டைக் (அரைச் சீட்டு) கொடுத்து விட்டுப் போங்கள் என்று ஒவ்வொரு முறையும் கெஞ்சுவேன். அதைக் கண்டு கொள்ளவே மாட்டார். ஒருவேளை அவர் வராமலிருந்து நடத்துனரோ அல்லது பரிசோதகரோ என்னைப் பயணச் சீட்டு இல்லாத காரணத்துக்காக அபராதம் விதித்து, சிறையில் தள்ளினால் என்ன செய்வது என்று யோசித்து திகிலடைவேன். சன்னலுக்கு மேலே சிகப்பு வர்ணத்தில் எழுதப்பட்டிருக்கும் பயணச்சீட்டு இல்லாப் பயணிகளுக்குக் கொடுக்கப்படும் தண்டனை எச்சரிக்கையை மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பேன். கிலியுடன் எங்கே என் தந்தை என்று பார்வை அலை பாயும்.

பயணிகள் ஒவ்வொருவராக வந்து அமர்ந்ததும் ஓட்டுனர் பல் குத்திக் கொண்டே அமர்ந்து வண்டியைக் கிளப்ப, நடத்துனர் கடைசியாக (என் அப்பா இன்னும்வரவில்லை) ஏறிக்கொண்டு விரைவாக எல்லா இருக்கைகளிலும் பார்வையை ஓட்டிவிட்டு ‘எல்லாம் வந்தாச்சா?’ என்று பெயருக்கு ஒருமுறை கேட்பார். நான் ‘அப்பா இன்னும் வர்லே’ என்று தீனமாகக் கத்துவது எனக்கே கேட்காது. வண்டி கிளம்ப ‘அய்யோ நான் காலி’ என்று நினைக்கையில் என் அப்பா எங்கிருந்தோ உதயமாகி ஒரு கையால் வேட்டியை தூக்கிப் பிடித்தவாறு இன்னொரு கையில் முறுக்குப் பொட்டலத்துடன் ஓடிவந்து ஏறுவார். அவர் என் அருகில் வந்து அமரும் போது, நான் சன்னல் பக்கம் திரும்பி கண்களில் துளிர்த்திருந்த நீரை துடைத்துக் கொள்வேன்.

அவர் மீது நிறைய கோபம் வரும். ஆனால் ஒருமுறை கூட வெளியே காட்டிக் கொண்டது கிடையாது. அப்பா ‘இந்தாடா’ என்று கொடுக்கும் முறுக்கை, அதன் எண்ணெய் பிசுக்கு வாசனையைச் சகித்துக் கொண்டு, ஓரிரண்டைத் தின்று விட்டு, மீதத்தை மஞ்சள் பைக்குள் திணித்துக் கொள்வேன் - இன்னும் ஓரிரு நாட்களுக்கு வைத்துத் தின்ன.

மீதிப் பயணம் முழுவதும் பேருந்தின் உள்புறங்களைக் கவனிப்பதிலும் சக பயணிகளின் உரையாடல்களையும், கூட்டம் நெருக்கியடித்தால் வசவு மொழிகளையும் கேட்டுக்கொண்டே கழிப்பேன்.

ஓட்டுனரின் பின்புறம் இருக்கும் தடுப்பில் எழுதப்பட்டிருக்கும் திருக்குறளை அருகில் அமர்ந்திருந்தால் படித்தும், பின்புற வரிசைகளில் அமர்ந்திருந்தால் படிக்க முயற்சியும் செய்வேன். கரம் சிரம் புறம் நீட்டாதீர் என்று உட்புறம் எழுதியிருந்தாலும், அநேகமாக சன்னலருகே அமர்ந்திருக்கும் அனைத்துப் பயணிகளும், முழங்கைகளையோ அல்லது தலையையோ புறம் நீட்டியவாறு பயணம் செய்வர்.

கூட்டமில்லாத சமயங்களில் உட்புற நடைபாதை காலியாக இருப்பதால் நடத்துனர் குறுக்கும் நெடுக்கும் பலமுறை நடந்து தலைகளை மறுபடி மறுபடி எண்ணிக் கணக்குப் பார்த்துக் கொள்வார். அவர் எப்படி எதையும் பிடித்துக் கொள்ளாமல், கீழே விழாமல், சில்லறை சிதறாமல், சரியாக சீட்டும் சில்லறையும் கொடுத்து, காதில் செருகியிருக்கும் பேனாவையும் அவ்வப்போது எடுத்து ஏதோ எழுதிக்கொண்டு, நிறுத்தங்களில் பார்க்காமலேயே சரியாக விசிலடித்து நிறுத்துகிறார் என்று மகா ஆச்சரியமாக இருக்கும்.

பிற்பாடு நடத்துனர்களைப் பார்க்கையில் என்றோ விகடனில் படித்த (பார்த்த!) நடத்துனர் வேலைக்காக ஒருவர் ஊஞ்சலில் நின்று கொண்டே இங்கும் அங்கும் ஆடி ஏதோ எழுத பயிற்சி செய்யும் கேலிச் சித்திரம் நினைவுக்கு வந்து (மதன்?) புன்சிரித்துக் கொள்வேன்.

வயதானால் நீண்ட நேரம் இருக்கையில் அமர்வது எவ்வளவு கடினம் என்பது இப்போது எனக்குப் புரிகிறது. அவர் இன்றும் அயராது சுற்றங்களைப் பார்க்கப் பேருந்தில் பயணம் செய்கிறார். என்னால் முடியவில்லை.

வெளிநாட்டில் இப்போது இருந்தாலும், இந்த வசதி வாய்ப்புகள் உறுத்துகின்றன – அங்கே இப்போது அப்பா ஏதாவது ஒரு நகரப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருப்பார் என்று நினைக்கையில்.

***

சுந்தர்

செப்டம்பர் 24, 2002 அன்று எழுதியது

1 comment:

வானம்பாடி said...

நல்ல சுவையான பதிவு!
'நிற்க' - என்பது சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை விட்டு விட்டு வேறொரு விஷயத்திற்கு தாவும்போது பயன்படுத்தப்படுவது.