:: வண்டியிழுக்கும் நல்ல மாடு ::
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீரவிளையாட்டாக இருந்த காலம் போய், இப்போது நடக்கும் ஜல்லிக்கட்டு கண்றாவிகள் சகிக்கவில்லை. பட்டியிலிருந்து திறந்து விடப்படும் இன்றோ நாளையோ என்றிருக்கும் சோப்ளாங்கி மாட்டின் மேல் பத்துப் பேர் பாய்ந்து அதை வீழ்த்தி கொம்பில் கட்டியிருக்கும் குங்குமக் கலர் துண்டை உருவிக்கொண்டு விடுவிப்பார்கள். இல்லையென்றால் கன்றுக்குட்டிகளின் மேல் பாய்வார்கள்.
ஆனாலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்றும் பிரபலம். ஜல்லிக்கட்டு நடக்கும் நாள் உள்ளூர் ஆஸ்பத்திரியும் மதுரை ராஜாஜி மருத்துவமனையும் சுறுசுறுப்பாக இருக்கும். உருப்பெருக்கிக் கண்ணாடியின் மூலம் சேமியா உப்புமாவைப் பார்ப்பது போல், கை நிறைய சரிந்த குடலைப் பிடித்துக்கொண்டு ஆட்கள் வந்து சேருவார்கள். புறமுதுகிட்ட சிலர் முதுகில் ஆழமாக குத்து வாங்கியிருப்பார்கள். எனக்குத் தெரிந்து ஒருவர் கொம்பை மிகவும் உற்றுப் பார்க்க ஆசைப்பட்டு கண்ணுக்குள்ளேயே விட்டுக்கொண்டு மாட்டின் மீது ஆதாரமில்லாமல் தொங்கினார்.
புழுதி பறக்க கருமையும் வெண்மையும் கலந்த புஷ்டியான மாடுகள் மீது இளைஞர்கள் தொங்குவதையும், வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தில் பாயும் மாடுகளையும் இன்று வரை தினமலரில் முதல் பக்கத்தில் வண்ணப் புகைப் படங்களில் பார்க்கலாம். சிவப்பு வண்ணம் அதிகம் இருக்கும் படங்கள்.
அவ்வப்போது ஏதாவது ஒரு திரைப்படத்தில் இதைக்காட்டி இப்படியொரு வீர விளையாட்டு இருக்கிறது என்பதை தமிழர்கூறும் நல்லுலகிற்கு நினைவுறுத்திக்கொண்டே இருக்கவேண்டும் போல இருக்கிறது.
தமிழ்த் திரைப்படங்களில்தான், ஜமீன்தார் தன் மாட்டை மைதானத்தில் விட்டு 'பதினெட்டு பட்டியிலும் ஒரு ஆம்பளை கூட கிடையாதா?' என்று சவால்விட, மாட்டின் வால் அளவிற்கு உடல்வாகு பெற்றிருக்கும் நாயகன், பாடியோ அல்லது க்ளோசப்பில் கொம்புகளைப் பிடித்தோ அந்த மாட்டை மண்ணைக் கவ்வச் செய்ய, ஜமீன்தார் விரோதத்துடன் அவனை முறைத்துக்கொண்டிருக்க, இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் ஜமீன்தாரின் ஒரே பெண்ணான நாயகிக்கு கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாமல் தந்தையை அவமானப் படுத்திய நாயகன்மீது காதல் மலரும். கருமம்!
ஜல்லிக்கட்டு நடத்த மைதானம் கிடையாததால் வத்திராயிருப்பில் ஊர்க்கோடியில் மாடுகளை அலங்கரித்து விட்டுவிடுவார்கள். அடக்குபவர்கள் அடக்கிக்கொள்ளலாம். என்னைப் போன்ற சிறுவர்கள் கடுமையாக பயமுறுத்தப்பட்டிருந்ததால், சிறுநீரை அடக்கிக்கொண்டு வீட்டுத் திண்ணையில் முடங்கியிருப்போம். அவ்வப்போது சில மாடுகள் சாவதானமாக தெருவைக் கடந்து போகும். தாத்தா ஒருமுறை அப்பாவின் எச்சரிக்கையைப் புறக்கணித்து தெருவில் இறங்கி ஓரமாக நடந்துசெல்லும்போது பின்புறம் வந்த மாடு அவர் முதுகில் குத்தி எறிந்ததில் பக்கத்திலிருந்த முள்செடியில் விழுந்து, பிறகு ஒரு மாதம் படுக்கையில் இருந்தார். தாத்தாவின் அப்பா (முத்தாத்தா) ஊரில் மிகவும் செல்வாக்கோடு இருந்தாராம். செல்வந்தர். அவர் சேர்த்த சொத்தையெல்லாம் தாத்தாதான் ஊதாரியாக (என்னைப் பொறுத்தவரை தயாள குணத்துடன்) கரைத்தார் என்று ஊரில் பேசிக்கொண்டார்கள். நான் பிறந்து வளர்ந்த கூரைவீடு, முத்தாத்தா காலத்தில் எங்கள் மாட்டுத்தொழுவமாக இருந்தது என்று தாத்தாவே சொல்லியிருக்கிறார். மண்தரையுடன் மின்வசதியின்றி கீற்றுக்கொட்டகை வீடு அது. சாண நீரில் மெழுகப்பட்டு படுசுத்தமாகவும் குளிர்ச்சியாகவும் எப்போதும் இருக்கும்.
தாத்தா ஒரு வளர்ந்த கன்றை வாங்கி வளர்த்தார். என்னையும் அதனையும் குளிப்பாட்ட குளத்தங்கரைக்கு அழைத்துச் செல்வார். என் கையில் கன்றின் கயிறைக் கொடுத்து 'இழுக்காமல் பிடித்துக்கொண்டே வா' என்று பணித்து பின்தொடர்ந்து நடப்பார். நான் கன்று எப்போது துள்ளிக்குதித்து ஓடப்போகிறது என்று பயத்துடன் வேகமாக நடப்பேன். குளத்தில் இடுப்பளவுதான் ஆழம். வரமறுக்கும் கன்றை இழுத்து, வைக்கோல் கொத்து ஒன்றால் நன்கு தேய்த்துக் குளிப்பாட்டுவார். நானும் என் பங்குக்கு நீரூற்றித் தேய்ப்பேன். ஒரு நாள் எதுவும் சாப்பிடாமல் மந்தமாக இருக்க, மேயப் போன இடத்தில் விஷச் செடிகளைத் தின்று விட்டது என்று தாத்தா சொன்னார். விளக்கெண்ணையில் நனைத்த முழு வாழைப் பழத்தை முழுங்கச்செய்து என்னென்னவோ வைத்தியம் செய்தும் பயனில்லாமல் மறுநாள் இறந்து போனது. அதன்பின் மாடு வளர்க்கவில்லை.
எருமை மாடுகள் ஒரு ரகம். இவற்றைவிட சோம்பேறியான பிராணி இருக்கிறதா என்று தெரியவில்லை. தெருவில் குறுக்காக நின்றுகொண்டு சண்டித்தனம் செய்யும் எருமைகளை அசைப்பதற்கு ஒரு பெரும்பாறையை அசைத்துவிடலாம். எருமைப் பால் பசும்பாலைவிட அடர்த்தி என்பதால், பால்காரர்களின் விருப்பம் அதுவே - நிறைய தண்ணீர் கலக்கலாமே! :) சும்மா ஒரு தமாஷ¤க்குத்தான்.
அனைத்து மாடுகளும் பால் டிப்போவிற்கு கொண்டுசெல்லப்பட்டு கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் பால்கறந்து விற்பதால் தண்ணீர் கலக்கும் பேச்சிற்கே இடமில்லை. கூட்டுறவுச் சங்க மாட்டுத் தொழுவத்தில் வரிசையாக அனைத்து மாடுகளும் கட்டப்பட்டு, கன்றுகள் நக்கிக்கொடுத்து குடிக்க ஆரம்பித்தவுடன் இழுத்து ஓரம்கட்டப்பட்டு (பரிதாபம்!), கறவை துவங்கிவிடும். சில துர்ப்பாக்கியசாலிப் பசுக்களுக்கு வைக்கோல் அடைத்த பொய்க்கன்றுகள்! ஏமாற்றப்படும் நிஜக்கன்றுகளைவிட, வைக்கோல் கன்றுகள் பரவாயில்லை என்று சில சமயம் தோன்றும்.
எருமைப் பால் குடித்தால் புத்தி மந்தமாகிவிடும் என்று ஒரு நம்பிக்கை நிலவியதால், பசும்பால் தான் எப்போதும். வத்திராயிருப்பு மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பால் கிருஷ்ணன் கோயில் நிறுத்தத்திற்குக் பெரிய கேன்களில் கொண்டுபோகப் பட்டு, ராஜபாளையத்திலிருந்து, ஸ்ரீவில்லிப்புத்தூர் வழியாக மதுரைக்கு வரும் ஜெயவிலாஸ் பேருந்துகளில் ஏற்றப்படும்.
நுரைபொங்க கறந்த பாலை அப்படியே பாத்திரத்தில் ஊற்றிக் கொண்டுவந்து காய்ச்சிக் குடித்த காலம் போய், இப்போது நாடு, இனம், வெள்ளை, கறுப்பு, பசு, எருமை வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாமல் அல் ரவாபி, அல் மராய் கேன்களில் வரும் பாலை வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். நம்மூரில் ஓட்டை ஆவின் பால் பாக்கெட்டுகள்! அல்லது பூத்தில் குளிரூட்டப்பட்ட பால் குழாயைத் திறந்தால் வருகிறது.
கோயில் மாடுகள் ஒரு வகை. கோயில் பூசாரியைவிட புஷ்டியாகவே இருக்கும். கேட்கவே ஆளிருக்காது. தெருவில் எப்போதாவது நடைபோட்டுச் செல்லும்போது தெருவே அது போகும்வரை ஸ்தம்பித்திருக்கும். சில தைரியலட்சுமிகள் மட்டும் அதன் இடுப்பைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்ள, அது தலையை ஆட்டிக்கொள்ளும்.
வண்டி மாடுகள் இன்னொரு ரகம். வெள்ளை வெளேரென்று குதிரையின் கம்பீரத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இருக்கும். நல்ல உயரம். கூர் கொம்புகள். ஜோடியாகவோ, தனியாகவோ (வண்டி சுமக்கும் எடையைப் பொறுத்து), வண்டியில் பூட்டி ஓட்டிச் செல்வார்கள். சரியான எடை இருந்தால் அவை ஒரு சீரான ஜதியில் மணிகளலிக்க ஓடிச்செல்லும் அழகே அழகு. 'ஹேக்.. க்க' என்று அதட்ட துள்ளி ஓடும்.
வண்டியிழுத்துக் குளம்பு தேய்ந்த இம்மாடுகளுக்கு Tyre retreading செய்வது போல லாடம் அடிப்பார்கள். அவ்வளவு உயரமான ஒரு சாதுவான ஜீவனை கயிறு கட்டித் தரையில் வீழ்த்தி நான்கு கால்களையும் சேர்த்துக் கட்டி லாடம் அடிக்கத் தொடங்குவார்கள். அதைப் பார்க்கையில் எனக்கு முகத்தில் ஈயாடாது. ஆனால் மாட்டின் முகத்தில் நிஜமாகவே (மாட்டு) ஈயாடும்! உரிமையாளனுக்கு லாடத்திலேயே கவனம். முகத்தில் மொய்க்கும் ஈக்களை ஒரு காதால் விரட்டப் பிரயாசைப் படும் மாட்டின் சிரமம் எப்படிப் புரியும்? நம்மைத் தூணில் அசையாது கட்டிப்போட்டு, முகத்தில் அரிப்பெடுத்தாலோ, ஈ அல்லது கொசு கடித்தாலோ நமக்கு எப்படி இருக்கும்?
பழைய தேய்ந்த லாடத்தை நெம்பி எடுத்து எறிந்துவிட்டு, பளபள புது லாடம் அடிப்பார்கள். அதிகம் ஓடிய மாடாக இருந்தால், குளம்பில் ஆணியடிக்கவே இடம் இருக்காது. சிலசமயம் அடிக்கும் ஆணி குளம்பை மீறி தசையைத் தொடுகையில், அது வலியில் ஒருமுறை சிலிர்க்கும் பாருங்கள்! நகம் வெட்டும்போது சதை லேசாக வெட்டப்பட்டால் உதறிக்கொள்வோமே! அது போல. மனைவியின் நிர்ப்பந்தங்களைப் புறக்கணித்து இன்றுவரை நானே நகம் வெட்டிக்கொள்வேன். ஒருமுறை வற்புறுத்தி கால்விரல் நகங்களை மனைவி நகவெட்டி கொண்டு வெட்டியபோது, எப்போது சதை வெட்டுப்படும் என்ற டென்ஷனில் கை நகங்களைக் கடித்தே காலி செய்திருந்தேன். மருத்துவர் ஊசி போடும் முன், ஊசி எப்போது குத்தப்படும் என்ற ஒரு வினாடி காத்திருப்பு அவஸ்தை இருக்கிறதே!
சற்று இடைவெளி விட்டு மறுபடியும் சீராக அடிக்கத் தொடங்குவார்கள். அடித்து முடித்ததும், கால்கள் விடுவிக்கப் பட்டுத் துள்ளியெழும் மாடு. அது சற்றும் உயரம் கூடியது போன்ற ஒரு பிரமை! புதிய குளம்பொலி பழக சிறிது நேரம் எடுத்துக்கொண்டு அப்புறம் 'ஜல் ஜல் ஜல் என்னும் சலங்கையொலி' தான்.
மனிதர்களுக்கு மட்டும் குளம்புகளை இறைவன் படைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்! கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாக நடந்திருக்கலாமே! -என்று பல தடவைகள் நினைத்திருக்கிறேன். என்ன.... நைக்கியும், அடிடாஸ¤ம் விதவித வண்ணங்களில் லாடம் விற்றுக்கொண்டிருப்பார்கள்!
அன்புடன்
சுந்தர்.
நன்றி: மரத்தடி.காம்
No comments:
Post a Comment