Wednesday, August 17, 2005

*** நினைவலைகள் - நூலகம் ***

*** நினைவலைகள் - நூலகம் ***

இப்பொழுது என்னத்தையாவது "எழுதிக் கொண்டிருப்பதன்" ஆதார காரணத்தை யோசித்துப் பார்க்கையில் அது சந்தேகத்திற்கிடமில்லாமல் சிறு வயதிலேயே துவங்கிவிட்ட புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினால்தான் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடுவேன்.

ரொம்பவும் தோண்டவேண்டிய அவசியமில்லாமல் வத்திராயிருப்பு கடைத்தெருவில் காவல்நிலையத்திற்கு அடுத்து காம்பவுண்டு சுவரில் வளைவு வளைவாக இருக்கும் ஜெயமாலினி சுவரொட்டியையும், அடுத்தடுத்து நடப்பட்டிருக்கும் கட்சிக் கொடிக்கம்பங்களையும் (கம்பங்களில் நான்கடி உயரம் வரை மதிய வெயிலில் தொடைகள் சுட ஏறிப் பார்த்தது நினைவிருக்கிறது) தாண்டி இருளோவென்றிருக்கும் பொது நூலகத்தில் புத்தகங்கள் படித்தது துல்லியமாக நினைவிலிருக்கிறது.

ஒரு ஆள் குறுக்கே படுக்கமுடியாத அளவுக்கு ஒடுங்கிய பொந்துக் கட்டிடத்தில் இயங்கியது அந்த நூலகம். பழைய அக்ரஹாரத்து வீடுகளைப் போல நீளமாக இருக்கும்.

நூலகத்தின் குறுகிய படிக்கட்டுகளில் நுழையும் போதே எலிப் புழுக்கை, பழைய புத்தகங்கள், குருவி எச்சங்கள், உத்திரமெங்கும் நிரம்பியிருக்கும் நூலாம்படை, பழைய மரப் பெஞ்சுகள், அலமாரிகள் என்று எல்லாம் கலந்த வாசனை நாசியைத் தாக்கும். அந்த வாசனை மிகவும் பிரத்யேகமானது. அதை நூலகங்களில் மட்டுமே நுகர முடியும்.

திண்ணையில் போடப்பட்டிருக்கும் பெஞ்சுகளில் தினசரி வார இதழ்களை ஐந்தாறு பேர் சுவாரஸ்யமாக மேய்ந்து கொண்டிருக்க குகையில் நுழைவது போல உள்ளே அடியெடுத்து வைக்க வேண்டும். அடுத்ததாக இருந்த அறையில் வரிசையாக நான்கு அலமாரிகள். அலமாரிகளுக்கும் வலப்புறச் சுவருக்கும் இடையே இரண்டு நபர்கள் இடித்துக்கொண்டு நடக்கக்கூடிய இடைவெளி. வலப்புறச் சுவரில் இரண்டு ஜன்னல்கள் - அதன்மூலம் வரும் வெளிச்சமே நூலகத்திற்கு வெளிச்சம். சுவரோரமாக மூலையில் ஒரு சிறிய மேஜையும் நாற்காலியும் - நூலகருக்கு. அதன் மேல் பிரித்து வைத்திருக்கும் கோடு போட்ட பழுப்புக் காகிதப் பதிவேடு. உறுப்பினர்கள் எடுத்துச் செல்லும், திருப்பிக் கொடுக்கும் புத்தகங்களின் விவரங்களை அவர் அதில் எழுதி வைப்பார். திரும்பிய புத்தகங்களின் பட்டியல் சின்னதாகவே இருக்கும். மூடியில்லாத மைப் பேனா ஒன்று மேஜையின் காலில் ட்வைன் நூலால் கட்டப்பட்டு பதிவேட்டின் நடுவில் படுத்திருக்கும். உள்ளே பூச்சிபூச்சியாய் முட்டை வடிவத்தில் ஒரு கண்ணாடி பேப்பர் வெயிட். கழுத்து நனைந்த இங்க் பாட்டில். ஓரடி ஸ்கேல் ஒன்று.

புத்தகங்கள் ஒவ்வொன்றிலும் அட்டைக்கு உட்புறம் காகிதம் ஒட்டப்பட்டு உள்ளே வந்து வெளியே போன விவரங்கள் எழுதப் பட்டிருக்கும். எந்தப் புத்தகத்தைப் படிப்பது என்று தீர்மானிக்க புத்தகத்தின் தலைப்பையோ எழுத்தாளரையோ கவனத்தில் எடுத்துக் கொண்டதில்லை. உள்ளட்டையின் காகிதத்தில் அதிகப் பதிவுகள் இருந்தால் அது நிறைய பேரால் படிக்கப்பட்ட புத்தகம் - ஆகையால் நல்ல புத்தகம் - என்ற அளவுகோலிலேயே எனது புத்தகத் தேர்வுகள் இருந்தன. நிறைய புத்தகங்களில் அக்காகிதம் வெறுமையாக இருக்கும். யாராலும் படிக்கப் படாத புத்தகங்கள் அவை. அவற்றில் புதைந்திருக்கும் படைப்புகளையும், எழுத்தாளர்களின் உழைப்பையும் பின்னாளில் நினைத்துப் பார்த்திருக்கிறேன்.

மரத்தடியில் முன்பு எழுதப்பட்டு விவாதிக்கப்பட்ட பிரசன்னாவின் "
கவனிப்பாரற்ற மூலை" நினைவுக்கு வருகிறது. அதோடு நூலகங்களின் "படிக்கப் படாத புத்தகங்களை"யும் சேர்த்துக் கொள்ளலாம்.

அந்நூலகத்தில் மொத்தமாக ஆயிரம் புத்தகங்கள் இருந்தால் அதிகம். அதுவும் வாங்கிப் பல வருடங்களானவை. புதிதாக ஒரு புத்தகம் கூடப் பார்த்ததாக நினைவில்லை. வெள்ளியாகப் பளபளக்கும் புத்தகப் பூச்சிகள் பக்கங்களைத் திருப்புகையில் சட்டென்று ஓடி மறையும். அவை சுதாரிக்குமுன் சட்டெனப் புத்தகத்தை மூடித் திரும்பத் திறந்து கீழே உதிர்த்திருக்கிறேன். சில புத்தகங்கள் அபாயகரமாக காகிதங்கள் பொடிப்பொடியாக உதிரக்கூடிய நிலையில் இருக்கும். அவை அந்நூலகத்தின் பழைமையைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன.

மாஸ்கோ பதிப்பகத்திலிருந்து வெளியான ரஷ்ய மொழி பெயர்ப்புக் கதைகள் சில அங்கு இருந்தன. வத்திராயிருப்பையும் அதைச் சுற்றிய கிராமங்களை மட்டுமே பார்த்திருக்கும் எனக்கு மாஸ்கோவின் பனிக்காலங்கள் பற்றிய விளக்கங்களுடன் இருக்கும் கதைகளைப் படிக்கும்போது அது வேறு உலகத்தில் நடப்பது போன்று இருந்தது. "சே.அங்கு இருந்தால் பால் ஐஸ் ஓஸியாகவே கிடைக்குமே" என்று தோன்றியிருக்கிறது. வழிய வழிய நுரை போல ஐஸ் வண்டிக்காரன் எடுத்துக் கொடுக்கும் பால் ஐஸ் அப்போது பதினைந்து பைசாக்கள். அது கழுதைப் பாலில் செய்தது என்ற வதந்தி நீண்ட நாள்களாக எங்கள் வட்டத்தில் உலவியது.

வாரத்தில் ஓரிரு நாட்களாவது பள்ளி முடிந்ததும் நூலகத்திற்கு வந்து ஒரு மணி நேரமாவது ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து படித்து விட்டுத்தான் வீட்டுக்கு வருவேன். நூலக அலமாரியில் புத்தக வரிசையை நிரடி புத்தகத்தை எடுக்கையில் நூலகர் ஏதாவது திட்டிவிடுவாரோ என்று உள்ளூர உதறும். ஜன்னலருகே நின்று கொண்டே படிப்பேன்.

முசிறியில் நட்ராசு வாத்தியார் வீட்டுக்கு எதிரில் இருந்தது நூலகம். வத்திராயிருப்பு நூலகத்தைவிட இரண்டு மடங்கு பெரியது. ஒன்பதாம் வகுப்பு படிக்கையில் என் அண்ணனின் தூண்டுதலில் இன்னும் நிறைய புத்தகங்கள் படிக்கத் தொடங்கினேன். முசிறி நூலகத்தில் படித்த மறக்க முடியாத தடித்த புத்தகங்களில் "குரூஸோ" என்ற அமெரிக்காவில் குடியேறிய வெள்ளையருக்கும் செவ்விந்தியர்களுக்கும் நடந்த சண்டைகளை விவரிக்கும் நூல் முக்கியமானது.

வெள்ளையர் கூட்டத்தின் நாயகன் சிவப்பிந்தியர்கள் நெருப்பில் வாட்டத் துவங்கிய நாய்க் குட்டியொன்றை மீட்டு வளர்ப்பான். அது வளர்ந்து அவர்களோடு நாடோடி வாழ்க்கை வாழ்ந்து செவ்விந்தியச் சண்டைகளில் அதுவும் பங்கு பெற்றுச் செய்யும் சாகஸங்கள் அடங்கிய நாவல் அது. அந்த நாயின் பெயர் குரூஸோ. முஸ்டாங்குப் பள்ளத்தாக்குக் குதிரைகளைப் பற்றியும், அவற்றை எப்படி வெள்ளையர்கள் சுருக்கிட்டுப் பிடித்து அடக்கி, சவாரிக்குப் பழக்கினர் என்பதைப் பற்றியும் விவரித்திருப்பார்கள். காட்சிகள் கண் முன்னே விரியும் அழகான கதை அது. அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த "
ராபின்ஸன் குரூஸோ" என்ற சாகஸக் கதையின் கதாநாயகனின் நினைவாக அந்நாவலில் நாய்க் குட்டிக்கு "குரூஸோ" என்று பெயரிட்டிருப்பார்கள்.

"குரூஸோ" என்ற அந்நியப் பெயரினால் கவரப்பட்டு எங்கள் வீட்டு முன் வழக்கமாகத் தங்கியிருக்கும் மணியையும், ஜிம்மியையும் குரூஸோ என்று பெயர் மாற்றம் செய்து ஒரு வாரம் அழைத்துப் பார்த்தோம். மணிக்கும் ஜிம்மிக்கும் குரூஸோ என்ற பெயர் ஏனோ பிடிக்கவில்லை. "குட்டிலருந்தே கூப்ட்டு பழக்கணும்" என்று குரூஸோ குட்டியைத் தேடிக்கொண்டிக்கையில் என் தந்தைக்கு முசிறியிலிருந்து மதுரைக்கு மாற்றலாகிவிட, மதுரை மாநகரத்தில் கிடைத்த காம்பவுண்டு ஒண்டுக் குடித்தனத்தில் நாங்கள் வளர்வதே அதிகம் என்றிருந்ததால் குரூஸோவை உருவாக்கும் முயற்சியைக் மிகுந்த துக்கத்துடன் கைவிட வேண்டியிருந்தது.

கிராமங்களில் தனி வீட்டுக்குக் கொடுத்த வாடகையில் நகரங்களில் கழிவறை கூட வாடகைக்குக் கிடைக்காது போன்ற நிதர்சனங்கள் முகத்தில் அறையத் துவங்கிய காலகட்டம் அது.

முசிறி நூலகத்தில் படித்த ரஷ்ய மொழி பெயர்ப்புக் கதைகள் நிறைய. "மறைந்த தந்தி" படித்தவற்றில் குறிப்பிடத் தகுந்தது - சுவாரஸ்யத்தில். சிறுவர்கள் கதை தவிர, பெரியவர்கள் படிக்கும் நாவல்களைக் கூடக் கலவையாக நானும் என் அண்ணனும் வாசித்திருக்கிறோம். தொழிலாளர் புரட்சிகளின், கம்யூனிஸத்தின் உச்சகட்டங்களில் வெளி வந்த பல்வேறு நாவல்களைப் படித்தோம். போர்க் காலங்களில் வெளி வந்த நாவல்களைப் படித்தோம். அதில் விரவியிருக்கும் வலிகளை அந்த வயதிலும் புரிந்து கொள்ள முடிந்தது.

மந்திரவாதி மாண்ட்ரேக்கினால் கவரப்பட்டு மெஸ்மரிசம், ஹிப்னாடிஸம் கற்றுக் கொள்ளுங்கள் புத்தகங்களை விழுந்து விழுந்து படித்தோம். பெரிய வெள்ளை cardboard-இல் மையமாக ஒரு ரூபாய் காசை வைத்து வட்டம் போட்டு கருப்படித்து, சுவரில் ஒட்டி, மனதை ஒருமுகப் படுத்தி அந்தக் கருவட்டத்தில் பார்வையை நிலை குத்திப் பயிற்சி செய்து வட்டம் சுருங்கிப் புள்ளியாகி, எல்லாம் வெள்ளையாகத் தெரியும் வரை பயிற்சி செய்தோம். மனதை ஒருமுகப் படுத்த வேட்டி ஒன்றைப் முக்காடாகப் போர்த்திக் கொண்டோம்.

ஒரு மாத பயிற்சிக்குப் பின்பு சுவரில் இருக்கும் பல்லி, செடியில் இருக்கும் தட்டான், பட்டாம்பூச்சி என்று எல்லாவற்றையும் ஓரிரு நிமிடங்கள் உற்றுப் பார்த்து, அவை அசையாமல் பறக்காமல் ஓடாமல் நின்றதைப் பார்த்து எங்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமாகச் சக்தி வருகிறது என்று நம்பினோம். என்னை விட அண்ணன் இன்னும் தீவிரமாகப் பயிற்சி செய்வதைப் பார்க்கையில் அவன் மாண்ட்ரேக் ஆகிவிடுவான் போல இருந்தது. புத்தகத்தைப் பிரித்தால் எழுத்துகள் தெரியாமல் வெள்ளைக் காகிதமாகத் தெரிகிறது என்று அவன் கூப்பாடு போட்டதில் மருத்துவரிடம் ஓடியதில் "கண்ல பவர் ஜாஸ்தியா இருக்கு. குறைக்கணும்" என்று அவர் கொடுத்தக் கண்ணாடியை மூன்று மாதம் அவன் அணிந்து கொள்ள வேண்டியிருந்தது. "பவர் ஜாஸ்தியா இருக்கு" என்று மருத்துவர் சொன்னதிலிருந்து எங்களுக்கு ஹிப்னாடிஸத்திற்கான "பவர்"வரத் தொடங்கியிருந்தது என்று உணர்ந்து கொண்டோம்! ஆனால் மந்திரவாதியாக வேண்டுமானால் படிக்க முடியாது; படித்தால் மந்திரவாதியாக முடியாது என்ற நிலையில் படிப்பா மேஜிக்கா என்று கேள்வி கேட்டுக் கொண்டு, "நாமெல்லாம் மிடில் க்ளாஸ். நம்ம படிக்காம இருந்தா சோறு கிடைக்காது" என்ற தாரக 'மந்திரத்திற்குப்' பணிந்து, ஹிப்னாடிஸப் பயிற்சியை டிஸ்கண்டினியூ செய்தோம். நம் நாடு இரண்டு மாபெரும் மந்திரவாதிகளை இழந்தது.

"உடல் உறுதி பெற உடற்பயிற்சி முறைகள்" போன்ற புத்தகங்களைப் படித்து அகண்ட காவிரியில் இக்கரையிலிருந்து அக்கரை குளித்தலை வரை மணல் ஓடிய கோடைக் காலங்களில் பாதங்கள் புதையப்புதைய ஓடி உடற்பயிற்சிகள் செய்தோம். "பையா" மாமா வீட்டு டைகர் நாயை குரூஸோவாகப் பாவித்துக்கொண்டு அதற்கு காவிரி மணலில் பலவித பயிற்சிகள் கொடுத்து பழக்கினோம். பயிற்சிகளில் ஒன்று கல்லை முழங்கால் நீருக்குள் போட டைகர் தலையை முக்கி அதை வெளியில் கவ்வி எடுக்கும். எனக்குத் தெரிந்து தண்ணீரில் அவ்வளவு சுலபமாகப் புழங்கிய ஒரே நாய் டைகர். உங்களுக்கு விழுப்புண்கள் தேவையென்றால் பூனையொன்றைப் பிடித்து தண்ணீரில் இறக்குவது போன்று அருகே கொண்டு போய் பாவலா செய்து பாருங்கள்.

மதுரைக்குக் கிளம்பியதற்கு முன் தினம் நூலகத்திலிருந்து சுட்ட குரூஸோ புத்தகம் எப்படியோ தொலைந்து போனது. திருடியதற்குக் கிடைத்த தண்டனை அது என்று சமாதானம் செய்து கொண்டேன்.

கிராமங்களைவிட நகரங்களில் எல்லாம் பெரிது இல்லையா? மதுரை சிம்மக்கல்லில் அட்டகாசமான பெரிய பொது நூலகம் இருக்கிறது. ஆனால் கிராமங்களைப் போல நடை தூரத்தில் இல்லாததால் அடிக்கடி டிவிஎஸ் நகரிலிருந்து சிம்மக்கல்லுக்குப் போக முடியாமல் போய்விட்டது. கல்லூரியில் மாலை வகுப்பு முடிந்ததும் கிடைக்கும் ஒரே நகரப் பேருந்தை விட மனதில்லாமல் அங்கும் நூலகத்திற்குச் செல்லவியவாமற் போனது. இப்படியாக பொது நூலகங்களுக்கும் எனக்குமான தொடர்பை முற்றிலும் இழந்தேன்.

நினைவில் நிற்கும் மனிதர்களில் வத்திராயிருப்பு நூலகரும் ஒருவர். இதோ அவிழப் போகிறது என்று போக்குக் காட்டும் மடித்துப் பொதிந்திருக்கும் வேட்டியுடனும், முழுக்கை வெள்ளைச் சட்டையுடனும், லேசாக முறுக்கி விடப்பட்ட சன்ன மீசையுடனும், முன் நெற்றியில் விழாமல் சுருள்சுருளாக எழும்பியிருக்கும் தலை முடியுடனும் இருப்பார் அவர். சட்டையின் முழுக் கையை மடித்துச் சுருட்டி வலது முழங்கைக்கு மேலே ஏற்றியிருப்பார். இடது முழுக்கை அதே அளவு சுருட்டப்பட்டு தோளிலிருந்து ஊசலாடிக் கொண்டிருக்கும். ஆம். அவருக்கு இடது கை கிடையாது. வாசகர்கள் அலமாரிகளிலிருந்து எடுத்துப் படித்துவிட்டு திரும்ப வைத்த இடத்தில் வைக்காமல் மேசையின் மீது போட்டு விட்டுப் போயிருக்கும் புத்தகங்களை அதற்குரிய பிரிவுகளில் அதனிடத்தில் ஒற்றைக் கையால் எடுத்து வைத்துக் கொண்டேயிருப்பார்.

அவரின் இடக்கையை எப்படி இழந்தார் என்று மனதை அரித்த கேள்வியை அவரிடம் கேட்க முடியாமலேயே போய் விட்டது.

***