Saturday, May 11, 2019

நீ ஒரு காதல் சங்கீதம்

காதல் என்றாலே பம்மல்.உவ்வேக்.சம்பந்தம் என்று காத தூரம் ஓடும் இலக்கிய எழுத்தாளினி, படிப்பாளினி உஷாவிற்கானது இல்லை இப்பதிவு! ;-)

எண்பதுகளின் இறுதியில் "எஸ்பிபி மாதிரியே பாடறான்” என்றுதான் புதிதாக மனோவின் குரல் அறிமுகம். சில பாடல்களில் பாடுவது பாலுவா மனோவா என்று சாதாரணமாக் கேட்டுப் பிரித்தறிந்துவிடமுடியாத அளவு மனோ பாடியிருப்பார். மதுரை சுப்ரமணியபுரத்தில் இருந்தபோதுதான் ராஜாதி ராஜா வந்தது (1989). பாலுவுக்குப் பதில் எல்லாப் பாடல்களுமே மனோ. வித்தியாசமாக ஜூனியர் பாலையா மாதிரி ஜூனியர் பாலு குரல். அப்புறம் ஒரே படத்தில் ரெண்டுபேரும் பாடியிருப்பதும் தொடர்ந்து நடந்தது. என்னதான் இருந்தாலும் நகல் நகல்தானே. ஆனாலும் மனோ அருமையான பாடகர். பாலுவைப் போலப் பாடாமல் மனோவைப் போலவே பாடிய பிரமாதமான பாடல்கள் இருக்கின்றன. எளிதாக சில பத்துப் பாடல்களைப் பட்டியலிட்டுவிடலாம். அதில் ஒரு பாட்டைப் பற்றியே இந்தப் பதிவு.

நாயகன் தமிழ்த் திரையுலக வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் (1987). நாயகனின் வித்தியாசமான சுவரொட்டிகள். பீரியட் ஃபில்ம் என்ற அளவில் அதன் பாடல்களுக்கும் பின்னணிக்கும் ராஜா உபயோகித்த இசைக்கருவிகள், பாடகர்கள் (ஜமுனா ராணி, எம்.எஸ்.ராஜேஸ்வரி, டி.எல். மஹாராஜன்) என்பதெல்லாம் ஒரு வித்தியாசமான பேரனுபவத்தை ரசிகர்களுக்குக் கொடுத்தது. படத்தின் தீம் இசையாக வரும் தென்பாண்டிச் சீமையிலே - ராஜா ‘யார் அடிச்சாரோ’வாகவும் கமல் ‘யார் அடித்தாரோ’வாகவும் பாடியிருக்க - பரத்வாஜ் ரங்கனின் நேர்காணலில் இதைப் பற்றி மணிரத்னத்திடம் கேட்க அதற்கான காரணத்தை மணிரத்னம் விளக்கியிருப்பது கூகுள் தேடலில் எளிதாகக் கிடைக்கும், தேடியெடுத்துக்கொள்ளுங்கள், நான் கொஞ்சம் பிஸி! - படம் நெடுகத் தேவையான இடங்களில் அதன் ட்யூனை ராஜா உபயோகித்திருப்பார்.

கமல் இளம் வயதில் முதிய வேடத்தில் நடித்த அல்லது வாழ்ந்த இரண்டு படங்கள் முக்கியமானவை - சலங்கை ஒலி, நாயகன். நாயகனில் வேலுநாயக்கரின் நடுவயது வேடத்திற்கு தலையில் வழுக்கைக்காக முடியை வழித்துக்கொண்டு, அப்புறம் மொத்தமாக மொட்டையடித்து, கொஞ்சூண்டு முடிவளர்ந்த நிலையில் 1988 ஜனவரியில் ‘சத்யா’ :-). இப்போதிருக்கும் பணவசதியும் பெரிய பட்ஜெட்டில் எடுக்கும் சாத்தியங்களும், தொழில்நுட்பமும் அப்போதிருந்திருந்தால் நாயகன் உலக அளவில் பேசப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. கமலின் வேலுநாயக்கர் பாத்திரப் படைப்பு, கமலின் நடிப்பு பற்றியெல்லாம் ஆயிரக்கணக்கானவர்கள் எழுதிக் குவித்திருப்பதால் திரும்பவும் சிலாகிக்கவேண்டியதில்லை.

இளையராஜா ஒரு மந்திரவாதி. அவரது ஆர்கெஸ்ட்ரா கண்டக்ட் செய்யும் கோல் ஒரு மந்திரக் கோல். அதை வைத்து சில குறிப்பிட்ட பாடல்களுக்கு மட்டும் மந்திரம் போட்டு ஆரம்ப இசையிலேயே ஒரு தெய்வீகத்தன்மையைக் கொண்டுவைத்து, அதிர்வுகளை ஏற்படுத்தி, அப்படியே கேட்பவர்களைத் தன்னிலை இழக்கச் செய்துவிடுவார். இது கமல் படங்களுக்கான பாடல்களுக்கு அடிக்கடி நிகழும். மற்றவர்களுக்கு எப்போதாவது நிகழும். அப்படிப்பட்ட மந்திரப் பாடல்களில் ஒன்றான, மனோவின் சிறந்த பாடல்கள் என்று பட்டியலிட்டால் நான் முதலிடம் கொடுப்பதுமான பாட்டு "நீ ஒரு காதல் சங்கீதம்". இது கல்யாணி ராகமா, அல்லது ஷ்யாமா கல்யாணி ராகமா என்று Lalitha Ram போன்ற விற்பன்னர்கள்தான் சொல்லவேண்டும். ரெண்டும் பூ, புய்ப்பம் மாதிரி என்று சொன்னாலும் தேவலை!

நீ ஒரு காதல் பாடல் அமைக்கப்பட்ட காட்சிகள், பாடலுக்கு முந்தைய காட்சிகள் எல்லாம் தமிழ்ச் சினிமா கண்டிராத, அபாரமான உணர்வலைகளையெழுப்பும், மிகவும் அழுத்தமான காட்சிகள். சரண்யாவைக் கமல் சந்திக்கும் சூழல், அந்த மணிரத்னச் சுருக்க உரையாடல்கள், அதைத் தொடரும் காட்சிகள், இருவரும் மறுபடியும் சந்திப்பது, திருமணம் என்று “காட்சி ஊடகம்” என்ற கலையைச் செம்மையாகப் பயன்படுத்திக் காண்பித்த காட்சிகள். நாயகன் படத்தை காஞ்சிபுரத்தில் பாலாஜி வீட்டில் தீபாவளிக்குச் சென்றிருந்தபோது முதல்நாள் மாலைக்காட்சிக்குப் போய்ப் பார்த்தேன்.

நீ ஒரு காதல் சங்கீதம் ஒரு உன்னத பாடல். புலமைப் பித்தனின் ஆழமான, உணர்வுப் பூர்வமான வரிகளைத் தாங்கியது. வழக்கமான தமிழ்ச் சினிமாக்களின் மரத்தைச் சுற்றிக் "காற்றைப் புணரும்” (phrase courtesy: Kamal) நடன அசைவுகள் இல்லாது, நாயகியும், நாயகனும் முத்தம் கொடுக்கும் அரை நொடிக்கு முன்னால் கேமரா முன்பு ரெண்டு பூக்களை உரசும்படி க்ளோசப்பில் காட்டும் கண்றாவிக் காதல் காட்சிகள் இல்லாமல், ஒரு கவிதை மாதிரி இப்பாடலைக் காட்சியாக்கியிருப்பார் மணிரத்னம். ‘கடற்கரைக் காற்றே வழியை விடு, தேவதை வந்தாள் என்னோடு’ என்று கடற்கரைக் காற்றில் எதிரொலிக்கும் அற்புத வரிகளைவிட ஆழமாக ஒரு பெண்ணை நேசிப்பதையும், பூவைப் போலத் தாங்குவதையும் யாரால் எழுதிவிட முடியும்! இசையமைத்துவிட முடியும்! காட்சியாக்க முடியும்! நடித்துவிடவும் முடியும்!

பாடலின் ஆரம்ப இசையே அப்படியே நம்மை உள்ளிழுத்துக்கொண்டுவிடும். மனோவின் சீரான, நிதானமான குரல், அதைத் தொடரும் சித்ராவின் கெஞ்சும்/இறைஞ்சும், லேசாக விசும்பும் (சரண்யாவின் பாத்திரப்படைப்பைப் பிரதிபலித்து, அந்தப் பாத்திரத்தின் மனநிலையைப் பிரதிபலித்து) குரல், பின்னணியில் வாத்தியங்களின் சாகசங்களோடு இளையராஜாவின் இசை - எந்த அரவமும் இல்லாத இரவில் இந்தப் பாடலைக் கேட்பது ஒரு out of the world experience-ஐத் தரும்.

இந்தப் பாடலைத்தான் முதன்முதலில் சென்ற வருடம் ஸ்ம்யூலில் பாடிக் கணக்கைத் துவக்கினேன்! Stop blaming me! :-)

சமீபத்தில் இந்தப் பாடலை மறுபடியும் பாடிப் பார்த்தேன். தட்டையாக இருந்தது. நமக்கு வாய்த்தது அவ்வளவுதான் என்று விட்டுவிட்டேன். Ravpri என்கிற சக ஸ்ம்யூலியன் பற்றி ஏற்கனெவே நிறைய எழுதியாகிவிட்டது - எனது மானசீக mentor, guru and inspirer. நான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துத் திக்கித் திண்டாடிப் பாடுவதையெல்லாம் ப்பூவென ஊதித் தள்ளிவிட்டு அலட்டாமல் பாடுவதில் மன்னி (மன்னருக்குப் பெண்பால்)! தமிழ்ப் பாடல்களில் ஒரு வசதி. சங்கீதம் தெரியாவிட்டாலும் இசை தெரிந்தவர் பாடியதைக் கேட்டுக் காப்பியடித்து ஒப்பேற்றிவிடலாம். முதல் சரணத்தில் ‘வானம்பாடி..’ என்று அவர் பாடியிருப்பதை அப்படியே காப்பியடித்து ‘காதல் காதல்’ என்று சமாளித்தேன். அடுத்த சரணத்தில் நான் தான் ஆரம்பிக்கவேண்டும். ஸ்ருதி ஒழுங்காக இருக்கிறதா என்று தெரியாமல் திண்டாடியபோது எனது வரிகளை விட்டுவிட்டு அவர் பாடிய வரிகளுக்குத் தாவி எப்படிப் பாடியிருக்கிறார் என்று கேட்டுவிட்டுப் பிறகு rewind செய்து ‘செவிவழி’ பயிற்சியோடு அப்படியே பாடித் தப்பித்தேன். அப்படியும் சரியாக வரவில்லை. ஆனால் இந்த ட்ரிக்கெல்லாம் ஓரளவுக்குத்தான் உதவும். பாடலைப் பாடி முடித்துவிட்டுக் கேட்கும்போது ‘வாய்மொழி’ என்பதை எவ்வளவு தட்டையாகப் பாடியிருக்கிறேன் என்பதை அவர் அதை எப்படி ஒரு nuance-உடன் பாடியிருக்கிறார் என்று கேட்கும்போதுதான் புரிந்தது. இதிலிருந்து நான் அறிந்துகொண்ட நீதி: ஒழுங்காகப் பாடவேண்டுமானால் பயிற்சி தேவை. பயிற்றுவிப்பும் தேவை - என்பதே. பார்க்கலாம். இப்படியே சங்கீதம் தெரிந்தவர்களுடன், நன்றாகப் பாடக்கூடியவர்களுடன் தொடர்ச்சியாகப் பாடி, என்றைக்காவது ஒரு நாள் ஓரளவுக்காகவாவது சரியாகப் பாட வந்து, யாராவது ஒருவராவது நல்லா பாடியிருக்கே என்று சொல்லும்போதுதான் ஜென்ம சாபல்யம் அடைவேன்! :-) "அப்படிச் சொல்லிட்டா இந்தப் பாட்டோட பாடறதை நிறுத்திடுவியா?" என்று கேட்டால் நிறுத்த மாட்டேன்! இப்பாடல்களையெல்லாம் நான் இங்கே உங்களுடன் பகிர்வதே, இப்பாடல்களை நான் ரசிப்பது ஏன் என்பதற்கும், Ravpri போன்ற திறமையாளர்களின் குரல்களை நீங்களும் கேட்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான்.

இனி நீ ஒரு காதல் சங்கீதம்… வாய்மொழி சொன்னாலும், விழிவழிப் பார்த்தாலும், செவிவழி கேட்டாலும் தெய்வீகம்!


No comments: