Saturday, March 02, 2019

மெளனமான நேரம்

சலங்கை ஒலி படத்தைப் பற்றி பல நூறு பேர் அக்குவேறு ஆணிவேறாக பல முறை பிரித்து மேய்ந்துவிட்டார்கள். புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை என்று நினைத்தால் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் ஏதாவது ஒன்று மனதில் தோன்றிக்கொண்டேயிருக்கிறது. எனக்கு இந்தப் படத்தின் இயக்குநர் கே.விஸ்வநாத்தைப் பற்றி ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. கமல் என்ற மகாநடிகனை விஸ்வரூபம் எடுக்கவைத்ததில் முதன்மையானவர் கே.விஸ்வநாத். 1980-1990 என்ற பத்தாண்டு காலகட்டத்தில் கமல்ஹாஸனின் திரையுலக வாழ்க்கையின் பல முக்கிய மைல்கற்கள், பல சாதனைகள் எட்டப்பட்டன. 25-35 வயதுக்குள் பல உச்சங்களைத் தொட்டிருக்கிறார். வேறு எந்த நடிகராலும் செய்யமுடியாத சாதனைகளைச் செய்திருக்கிறார் - சிவாஜியால்கூட. இதே வயது காலங்களில் இருக்கும் / இருந்த தலை, தளபதி, விரல் வித்தை, பிக்கப் நடிகர், என்று ஒரு பெரிய பட்டாளமே இருந்தும், கமலின் சாதனைகளின் ஒன்றின் பக்கத்தில்கூட எவராலும் நெருங்கமுடியவில்லை. சலங்கை ஒலி செய்தபோது அவருக்கு 29 வயதுதான் . சரியாக 3 வருடங்கள் கழித்துப் புன்னகை மன்னன், விக்ரம் (1986), 1987-இல் நாயகன், 1988-இல் சத்யா. இன்னும் வரிசையாக, அருமையான படங்கள். அவருடைய கலைப் பயணத்தின் உச்சம் இந்தக் காலகட்டத்தில்தான்.
சலங்கை ஒலியின் தெலுங்கு மூலம் சாகர சங்கமம். கமலின் திறமைகளை முழுவதும் வெளிக்கொண்டுவந்து உளியால் தத்ரூபமாய்ச் செதுக்கப்பட்ட சிற்பம் போல உருவாக்கப்பட்டது சலங்கை ஒலி. விஸ்வநாத் ஒரு தேர்ந்த சிற்பி. நூறு கோடி, இருநூறு கோடி என்று செலவில்லை. வீணாய் பணத்தை வாரியிறைத்து பிரம்மாண்ட செட்டுகள் இல்லை. வெளிநாட்டில் குத்துப் பாடல்கள் இல்லை. நாயகிகளில் கவர்ச்சியில்லை. ஒரு கதையைத் திறமையாய்ப் பின்னி, கச்சிதமாய்க் காட்சிகளை அமைத்து, பெரும் பட்டாளம் இல்லாமல், தேர்ந்த கலைஞர்களை ஒன்று சேர்த்து வடித்த சிலைக்கு உயிர்கொடுக்கும் ஜீவனாய் இளையராஜாவின் இசையை வைத்து இந்தச் சாதனையைச் செய்திருக்கிறார் விஸ்வநாத். இந்தப் படம் திரைத்துறையில் நுழைய விரும்புபவர்களுக்கு ஒரு பாடம்.
தளபதி படத்தை நட்புக்கு அடிக்கடி உதாரணம் காட்டி நண்பேண்டா என்று மீம்ஸ் போட்டுக்கொண்டிருக்கிறோம். இந்தப் படம் சரத்பாபு - கமல் இடையேயான நட்பை, அதன் இன்னொரு பரிமாணத்தை அழகாகச் சத்தம் போடாமல் காட்டியிருக்கும். சலங்கை ஒலியில் அதிகம் பேசப்படாமல் போனது இந்த நட்பு மட்டும்.
நாட்டியக் கலை, சிறந்த படமாக்கம், கதை, இயக்கம், இசை என்பதற்கு மட்டுமல்ல - காதலுக்கும் இந்தப் படம் ஒரு சிறந்த பாடம். சொல்ல எவ்வளவோ விஷயங்களிருக்கின்றன. பாடல்கள் ஒவ்வொன்றையும் செதுக்கித் தந்திருக்கிறார் இசைஞானி. எல்லாப் பாடல்களுமே முத்து முத்தான பாடல்கள் என்றாலும், 'மெளனமான நேரம்' பாடலைப் பற்றிச் சொல்லியாகவேண்டும். காதல் என்பதை பல விதமாகத் திரைப்படங்களில் காட்டியிருக்கிறார்கள். பார்த்துக் காதல், பார்க்காமல் காதல், விடலைப் பருவக் காதல், வயசாளிகளின் காதல், வன்முறைக் காதல் என்று எத்தனையோ வகை. ஆனால் காதலை நடிப்பு என்று சொல்லமுடியாதபடி அற்புதமான கோணங்களில் திரையில் இயல்பாக வெளிப்படுத்திய ஒரே கலைஞர் கமல்ஹாஸன் என்று தயங்காமல் சொல்வேன்.
ஓம் நமசிவாயா பாடலை ஷைலஜா ஆடியவிதத்தை விமர்சித்துப் பத்திரிகையில் எழுதிய கமலை மன்னிப்புக் கேட்கக் கோரி அலுவலகத்திற்கு ஆடிட்டர் மகனுடன் வரும் ஷைலஜாவிடம் கமல் பரதம், கதக், கதக்களி என்று எப்படி ஆடவேண்டும் என்று பாடமெடுக்கும் புகழ்பெற்ற காட்சியை மறக்கவே முடியாது. ரஜினிக்கு 'என் பேரு மாணிக்கம், எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ என்ற காட்சி எப்படி இன்று வரை பேசப்படுகிறதோ, கமலுக்கு சலங்கை ஒலியின் இந்தக் காட்சியைச் சொல்லலாம். (ஸாரி, கேவலமான ஒப்பீடுதான்!). ஷைலஜாவுக்குப் பாடம் புகட்டி முடித்ததும் உடைந்த குரலில் நாட்டிய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருப்பதை எடுத்துச் சொல்வார்.
யதோ ஹஸ்த ததோ திருஷ்டி
யதோ திருஷ்டி ததோ மன
யதோ மன ததோ பாவ
யதோ பாவ ததோ ரச
Where the hands(hasta) are, go the eyes (drishti);
where the eyes are, goes the mind (manah);
where the mind goes, there is an expression of inner feeling (bhaava)
and where there is bhaava, mood or sentiment (rasa) is evoked.
“கண்ணு, மனசு, பாவம் செய்யற கலைகளோடயே கலக்கணும். அப்பத்தான் ரச சித்தி கிடைக்கும்” என்று சைலஜாவிடம் கமல் சொல்வது, நாட்டியக் கலைக்கு என்று மட்டுமல்ல. நாம் வாழ்வில் எடுத்துக்கொள்ளும் எந்த முயற்சிக்கும் பொருந்தும். "உன் கண்ணு பார்வையாளர்கள் மேல, மனசு அவங்க அடிக்கப்போற அப்ளாஸ்ல, ஆசை கெடைக்கப்போற பட்டங்கள்ல” என்று ஷைலஜாவிடம் சொல்வதும் எல்லாருக்கும் பொருந்தும். கலையோ, விளையாட்டோ, வேலையோ - இலக்கை அடைவது என்பது அப்ளாஸ்களிலும், பட்டங்களிலும், விருதுகளிலும், ப்ரொமோஷன்களிலும், பேங்க் பாலன்ஸிலும் இல்லை. அது வெற்றியல்ல.
என்னைக் கேட்டால் இது காதலுக்கும் பொருந்தும் என்று சொல்வேன். கண், மனம், உடலின் ஒவ்வொரு அசைவும், சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும், உணர்வுகளும் காதலிப்பவரை நோக்கிக் குவிந்திருக்கும்போது காதல் உன்னத நிலையை அடைகிறது. புற அழகில் வீழ்ந்து அல்லது படுக்கையில் வீழ்த்தும் எண்ணத்துடன் பழகுவது காதல் அல்ல. இச்சை.
இதுவரை யாரையும் காதலித்ததில்லை என்று சொல்பவர்களில் 99% பொய் சொல்கிறார்கள். 1% இன்னும் நடக்க, பேச வராத குழந்தைகள்.
என்ன ஒரு அற்புதமான உணர்வு அது! காதல் என்றாலே பாலினக் கவர்ச்சி என்று புறந் தள்ளிவிடுபவர்களின் சங்காத்தம் எனக்கு வேண்டாம். 30 - 35 வயதில் வாழ்க்கையே முடிந்துவிட்டதுபோல் காலத்தை ஓட்டுபவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது எனக்கு. காதல் என்றால் உடனே கிளம்பி புதுக்கவிதைகளாய் எழுதுவதும் அல்ல. ‘காதல் என்றால் இனக்கவர்ச்சி, ஹார்மோன்களின் விளையாட்டு, அதெல்லாம் ஒன்றுமேயில்லை, கடைசியில் படுக்கையில்தான் முடியும்' என்று புறங்கையை வீசும் இண்டலெக்சுவல்களுக்கு - I feel sorry for you guys!
மெளனமான நேரங்கள் மிகவும் அரிதாகிவிட்ட வாழ்க்கைச் சூழலில்தான் இருக்கிறோம். மிகவும் இரைச்சலான உலகத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். அதிகாலையிலும் அதிமாலையிலும், இரவுகளிலும் வரும் இந்தியத் தொலைப்பேசி அழைப்புகளில், பின்னணியில் எப்போதும் வாகனங்களின் இரைச்சல் கேட்டுக்கொண்டேயிருக்கின்றன. தொலைக்காட்சிகள் இரைகின்றன. யாராவது ஆட்கள் இரைந்துகொண்டிருக்கிறார்கள். இந்தத் தொடர்ச்சியான அ-மெளன உலகில் இத்தனை கோடிப் பேர் பைத்தியம் பிடிக்காமல், பாயைப் பிறாண்டாமல் இருப்பதே உலக அதிசயம். அனைத்து அரவங்களும் அடங்கிய மெளனமான நேரங்களில்தான் மனம் விழித்துக்கொள்கிறது. அப்படி விழித்துக்கொள்ளும் மனம், காதலிக்கும் இன்னொரு மனத்துடன் உரையாடத் தொடங்கிவிடுகிறது. அந்த உரையாடல் நேரம், காலம், தொலைவு என்று என்ற வரையறைகளும் இல்லாமல் முடிவற்ற வெளியில் பயணிப்பதைப் போல் கட்டற்றுப் பாயும் வெள்ளம் போல் செல்கிறது. அந்த உரையாடல் முடிவற்றதாக இருக்கக்கூடாதா என்று இரு மனங்களும் ஏங்கிக்கொண்டேயிருக்கின்றன. இப்படியான உணர்வுகளை அனுபவித்திருக்கிறீர்களா?
ஏதோ ஒரு ஜென் கதையில் - ஜென் துறவி வசிக்கும் கிராமத்துக்கு நகரத்திலிருந்து அந்தி சாய்ந்ததும் வந்திருந்த ஒருவர் துறவியின் வீடு இருளில் இருப்பதையும், கிராமத்தில் விளக்குகளே இல்லாமலிருப்பதையும் கவனித்து ‘இவ்வளவு இருட்டாக இருக்கிறதே’ என்றாராம். அதற்குத் துறவி ‘இது இரவல்லவா?’ என்றாராம். நாம் இருளைப் பகலாக்க மெனக்கெட்டு ஒளி மாசு ஏற்படுத்தி இயற்கையின் இயல்பைப் பிறழச் செய்துகொண்டிருக்கிறோம். அதேபோல் அமைதியான, மெளனமான நேரங்களையும் கலைத்து ஒலி மாசால் நிரப்பிக்கொண்டிருக்கிறோம்.
இந்தப் பாடல் ஓர் அழகியல் கவிதை. தமிழ்த் திரைப்படங்களிலிருந்து தலைசிறந்த 10 காதல் பாட்டுகள் என்று பட்டியலிடச் சொன்னால் அந்தப் பத்துமே கமல்ஹாசன் படங்களிலிருந்து அமையக்கூடிய சாத்தியங்கள் அதிகம். அதில் மெளனமான நேரம் நிச்சயம் இடம் பெறும்.
மாடிவீட்டு முன்னால் இருக்கும் முற்றத்தில் மெளனமாக நிற்கும் கமல், வெட்கத்துடன் நிற்கும் புதுமாப்பிள்ளை சரத்பாபு. பின்னணியில் கரிய வானும் தொங்கும் முழுநிலாவும். இங்கே புதுப்பெண்ணை மெள்ளமாக அழைத்து முதலிரவு அறைக்குள் விடும் ஜெயப்ரதா. சரத்பாபுவைக் கமல் அழைத்துக்கொண்டு வந்து அறையில் தள்ள, ஆளுக்கொரு கதவாக மெதுவாக மூட, தாழ்ப்பாளில் இருவரின் விரல்களும் உரசிக்கொள்ளும். வேறு யாராவது படமெடுத்திருந்தால், அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி அறைக்கு வெளியேவே நாயகனும், நாயகியும் குத்துப்பாட்டு ஆடி, முதலிரவே கொண்டாடி முடிப்பது போல் விரசமாக இப்பாடல்காட்சியை எடுத்திருப்பார்கள். ஆனால் இங்கே இயக்குநர் விஸ்வநாத். ஒரு கலைஞன், கலாரசிகை இருவருக்குள் விதைந்து, துளிர்த்து, மொட்டு உருவாகி, மலரும் காதலை இருவரும் பேசிப் பேசி மாயாமல், பின்னணியில் இந்தப் பாடலை வைத்து, மெளனத்தை முன்னணியில் வைத்து எடுத்தார். இம்மாதிரி காதலின் உயர்வான நிலைகளில் வார்த்தைகள் தோற்கும் என்பதை அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பார்.
பாடல் மிக மெதுவாக ஜானகியின் ஆரம்ப ஆலாபனையுடன் தொடங்கும். அது முடிந்ததும் ஒரு கனத்த மெளனம் நிலவும். பிறகு பல்லவியின் முதல் வரியை - மெளனமான நேரம் - என்று மெதுவாகப் பாடி நிறுத்த இன்னும் கொஞ்சம் மெளனம் - அந்த நொடிகளுக்கு மட்டும் மெளனத்தையே இசையாகத் தோன்றும்படி வைத்திருப்பார் இளையராஜா. அதைக் கேட்கும்போது நமது இதயத் துடிப்பும் கேட்கும். பிறகு புல்லாங்குழல் மொத்த மெட்டையும் தாங்கி இரவு நேரத் தென்றல் போலக் கொண்டு செல்லும். ஜானகி பல்லவியைத் தொடங்கும் விதம், பாலு முதற் சரணத்தை பாடும் விதம் - மொத்தப் பாடலும் ஒலிக்கும் விதம் - எல்லாவற்றையும் கூர்ந்து அவதானித்தால் எங்கே அந்த இசையும் சொற்களும் குரல்களும் கமல், ஜெயப்ரதா காதுகளில் விழுந்து அந்த மெளனமான இரவு நேரத்தையும், காதலுணர்வுகள் அலைகளாக நிரம்பித் ததும்பும் இரு மனங்களையும் கலைத்துவிடக்கூடாதே என்ற எண்ண வைக்கும்.
சலங்கை ஒலியில் பாலு என்கிற அந்த அற்புதக் கலைஞன் வாழ்நாள் பூராவும் தோல்விகளையே சந்திப்பான். இந்தப் பாழாய்ப் போன காதலிலும் தோற்பான். மெளனமான நேரங்கள் மீது எனக்கு அதனாலேயே கோபமும் உண்டு! காதலர்களுக்குள் மெளனமான நேரங்கள் என்பது அலாதியானதொரு அனுபவம். ஆனால் அது காதலைத் தெரிவித்தபிறகுதான். காதலையே சொல்லாமல் மெளனமாக இருப்பதால் இழப்புகளே மிஞ்சும். காதலில் இணைந்த மனங்கள் அறுபடுவதில்லை. ஆனால் மனங்களின் சங்கமம் மட்டும் காதலை முழுமை செய்வதில்லை. யதோ, திருஷ்டி, மன, பாவ, ரச என்று எல்லாமும் ஒருங்கிணைந்து இருக்கவேண்டும்.
நான் அந்த பாலுவாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று யோசித்ததுண்டு. என்ன செய்திருப்பேன்? இப்படியொரு தேவதை கண் முன்னே இருக்க, தூரத்தில் பராக்கு பார்த்துக்கொண்டு, தேரையும், சக்கரங்களையும் சுற்றி வராமல், விரலால் தரையில் கோலம் போடாமல், ஓரக்கண்ணால் பார்க்காமல், நேரத்தை விரயம் செய்யாமல், நேராக அவளிடம் போய் ‘I think I love you’ என்று தயங்காமல் சொல்லியிருப்பேன். ஆனால் அவள் என்னை விரும்புகிறாளா என்று தெரியாமல் சொல்ல மாட்டேன். அது எப்படித் தெரியும் என்றால் - தமிழில் சொல்வதானால் - ஃபீலிங்ஸ்!  தெரியும். அதுவும் சும்மா சொல்ல மாட்டேன். என் விரல்களால் அவள் கூந்தலை ஊடுருவி, அந்த அழகு முகத்தினை என் இரு கைகளில் தாங்கி, அவள் கண்களைத் தீர்க்கமாகப் பார்த்து, நிதானமாக, ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்வேன். அவளுக்கு ஒரு வேளை ஆங்கிலம் தெரியாதென்றால் தமிழில் சொல்வேன்! 
ஆதலினால் காதல் செய்வீர் என்று சொல்லியிருக்கிறார்கள். இல்லாவிட்டால் வலி மட்டுமே மிஞ்சும். காதல் வயப்பட்டவர்களின் உலகு வேறு. அவர்களின் மொழி வேறு. அவர்களின் உணர்வுகளும் வேறு. அதற்கு அக, புற எல்லைகள் கிடையாது. காலம் கிடையாது. காதல் என்றால் என்ன, உணர்வுகளின் கலவையா? வலியா? அவஸ்தையா? இது என்று சொல்லவியலாத, எவ்வளவு மொழிப்புலமை இருந்தாலும், எவ்வளவு வார்த்தை ஜாலங்களால் வர்ணித்தாலும், இன்னும் ஏதோ கொஞ்சம் சொல்ல / செய்ய விட்டுப்போன நிறைவற்ற உணர்வைத் தருவது காதல். மொழிகளின் எல்லைகளைக் கடந்த நிலை அது. ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நடக்கும் மாயாஜாலத்தைக் கோர்வையாக எப்படிச் சொல்வது?
இவ்வளவு எழுதினாலும் சொல்ல நினைத்தது திருப்தியாக வரவில்லை. சரி. விட்டுவிடுவோம்.
**
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்
இளமைச் சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ
புலம்பும் அலையை கடல் மூடிக் கொள்ளுமோ
குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த்துளி
ஊதலான மார்கழி நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி
இவளின் மனதில் இன்னும் இரவின் ஈரமோ
கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
காதலான நேசமோ கனவு கண்டு கூசுமோ
தனிமையோடு பேசுமோ
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
**
இந்தப் பாடலைப் பாட விரும்பாதவர்கள் யார்! ஸ்ம்யூலில் புகழ்பெற்ற பாடல்களில் இதுவும் ஒன்று. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பாடியிருக்கிறார்கள். இதை ஏற்கனவே ஓரிரு முறை முயற்சி செய்து நொந்துபோய் விட்டுவிட்டேன். இந்தமுறை ravpri-யின் குரலில். கல்லெடுத்து அடித்தாலும் பரவாயில்லை என்று சேர்ந்துகொண்டேன். நிறைய இவரின் குரலைப் பற்றிச் சொல்லியாகிவிட்டது. இந்தப் பாடலின் ரெண்டே ரெண்டு இடத்தில் இவர் பாடிய விதத்தை மட்டும் சொல்லியாகவேண்டும். பல்லவியின் இறுதியில் ‘ஏனென்று கேளுங்கள்’, அப்புறம் முதல் சரணத்தின் இறுதியில் ‘நீ வந்து ஆதரி’. இதில் என்ன இருக்கிறது என்றால் கேட்டுப் பார்க்கவும்! எல்லாவற்றையும் விளக்கிக்கொண்டே இருக்க முடியாது!
நான் ரொம்பவும் ஈடுபாட்டுடன் பாடுவதாக நினைத்துக்கொண்டு, அவலை நினைத்து உரலை இடித்த கதையாகிவிட்டது! இன்னும் பயிற்சி எடுத்து முயற்சி செய்திருக்கலாம். இரண்டாம் சரணம் முடியும்போது தண்டவாளத்திலிருந்து தடம் புரண்ட ரயில் மாதிரி ஸ்ருதியிலிருந்து புரண்டு விட்டேன். மன்னிச்சு!

No comments: