Wednesday, May 15, 2019

கூட்டத்திலே கோவில் புறா

மதுரை அழகப்பன் நகர் தாண்டி வரும் பைக்காராவிலில் இறங்கி இடதுபுறம் செல்லும் பாதையில் சென்றால் கொஞ்ச தூரத்திலேயே விவசாய நிலங்கள் ஆரம்பித்துவிடும் (எண்பதுகளின் மத்தியில். இப்போது எல்லாவற்றையும் ப்ளாட் போட்டு விற்றிருப்பார்கள்). வரப்பு வழியாக நெடுக நடந்தால் தூரத்தில் ஒதுங்கியிருந்தது சரவணா டூரிங் தியேட்டர். அங்கே தான் நானும் என் நண்பர்களும் சேர்ந்து இரண்டாம் ஆட்டத்திற்குப் போய் இதய கோவில் படம் பார்த்தோம். 1985-இல் வந்த படம். சரவணாவுக்கு ஒரு வருடம் கழித்து கடைசிச் சுற்று ரிலீஸில் வந்தது. சரவணாவில் ஒரு வசதி - கம்புகள் ஊன்றி கூரை பிரமிடைக் கவிழ்த்து வைத்திருந்ததால் சுவர்களின்றி காற்றோட்டமாக இருக்கும். சுற்றி கட்டிடங்கள் எதுவும் இல்லாததால் ஜில்லென்ற காற்றுக்குப் பஞ்சமே இருக்காது. நான் பார்த்தது 1986-இல். இப்போது தியேட்டர் இருக்கிறதா என்று தெரியவில்லை.

இதய கோவில் படம் பார்த்தது ஒரு அற்புத அனுபவம். சரவணாவில் பெரிய ஸ்பீக்கர் பெட்டிகளை ஒவ்வொரு கம்பிலும் கட்டியிருந்ததாலும், இரவு இரண்டாம் ஆட்டம் என்பதால் வேறு அரவம் எதுவுமில்லாமல், ஒலி மகா துல்லியமாகக் கேட்டது. இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களும் மகா இனிமைமயான பாடல்கள். இசை மழையில நனைந்த ஆனந்த அனுபவத்தைத் தந்தது. இதை இன்னும் மணிரத்னம் இயக்கியது என்பதை நம்பாமல் இருக்கிறேன். வழக்கமாக கிராமத்துப் பின்னணியில் இரட்டைக் கதாநாயகிகளுடன் சுந்தரராஜன் (மெ.தி.கதவு வகையில்) படமெடுப்பார். மணிரத்னத்தின் படங்களில் இது மகா எளிய படம். இளையராஜாவின் ராஜாங்கத்தில் பாலுவின் இனிய குரலில் மோகனின் நல்ல நடிப்பில் நன்றாக அமைந்த படம்.

இதயம் ஒரு கோவில் பாடலை பாலு தனிப் பாடலாகப் பாடியிருந்தாலும், அதையே இன்னொரு முறை ராஜாவும் பாடி அதில் மட்டும் ஜானகியும் குரல் கொடுத்திருப்பார். ஊரோரமாய் ஆற்றுப் பக்கத்தில் சித்ரா. மற்றபடி பெண் குரலில் வேறு பாடல்களே இல்லாத ஆணாதிக்கப் படம்! :)

இது சிறந்தது, அது சிறந்தது என்று வரிசைப்படுத்த முடியாதபடி எல்லாப் பாடல்களும் மிகவும் அருமையான பாடல்கள். எல்லாம் நல்ல பாடல்களாக இருந்தாலும் நான் அந்த பதின்ம வயதில் அடிக்கடி போகும்போதும் வரும்போதும் முணுமுணுத்துக்கொண்டிருந்த பாடல் இந்தப் பாடல். ரொம்பப் பிடித்த பாடல். இரவில் கேட்பதற்கு இனிய ராஜாவின் எத்தனையோ பாடல்களில் இதுவும் ஒன்று. பாடலில் இசையும் குரலும் போட்டி போட்டுக் கொண்டு கபடி ஆடும். இரண்டாம் சரணம் முடிந்ததும் பாலுவும் ராஜாவும் ஒரு விளையாட்டு விளையாடியிருக்கிறார்கள்.

இந்தப் பாடலில் ஒன்றைக் கூர்ந்து கவனித்திருக்கிறேன். நீங்கள் யாராவது கவனித்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. வழக்கமாக ஒலிக்குத்தான் எதிரொலி கேட்கும் இல்லையா? பாடல் ஆரம்பத்தில் "கூட்டத்திலே கோவில் புறா" என்று பாலு அழைத்து நிறுத்துவார் இல்லையா? ஒரிஜினல் ட்ராக்கை ஹெட்போனில் கேட்டுப் பாருங்கள். அவர் ஆரம்பிப்பதற்கு முன்பே அந்த வரி எதிரொலியாக முதலில் கேட்கும்! :-) அதே போல் "யாரை இங்கு தேடுதம்மா” என்று அவர் பாடுவதற்கு முன்பாகவே அது எதிரொலியாகக் கேட்கும்! சாதாரணமாக ஸ்பீக்கரில் கேட்கும்போது யாரும் இதை கவனிக்க வாய்ப்பே இல்லை. சந்தேகமிருந்தால் இது ஒரிஜினல் ட்ராக் - ஹெட்ஃபோனில் கேட்டுப் பாருங்கள்! :-)

https://www.youtube.com/watch?v=NpW5tM3IgFI

நான் பாடும் மெளனராகம் பாட்டின் மெளனராகம் வார்த்தையே பின்னாளில் மெளனராகம் படத் தலைப்புக்குத் தூண்டுகோலாக இருந்தது என்று மணிரத்னம் சொல்லியிருக்கிறார். மணிரத்னத்திற்கு இந்தப் படம் எடுத்தது நல்ல அனுபவத்தைத் தரவில்லை, தயாரிப்பாளர் கோவைத் தம்பியின் அதீத தலையீட்டால். மணியைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கவில்லை என்ற காரணத்திற்காக. படத்திற்காக நிறைய சமரசங்களைச் செய்யவேண்டிய கொடும் அனுபவமாக இருந்தது என்று பரத்வாஜ் ரங்கன் எழுதிய புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். கோவைத்தம்பி அதைப் பார்த்துக் கடுப்பாகி மணிரத்னத்திற்கு வாய்ப்பு கொடுத்தற்கு வருந்துவதாகச் சொல்லியிருக்கிறார். மூன்று படங்கள் எடுத்திருக்கவேண்டிய நேரத்தையும், செலவையும் இந்த ஒரு படத்திற்காக மணிரத்னத்தால் செலவழிக்க நேர்ந்தது என்றும் சொல்லியிருக்கிறார். எப்படியோ படம் வெளிவந்த மட்டில் ரசிகர்களாகிய நமக்கு மகிழ்ச்சி. மணி ரத்னம் இன்றும் படமெடுக்கிறார். கோவைத் தம்பி?

இளையராஜா முதன்முதலில் பாடலாசிரியராக அவதாரம் எடுத்ததும் இந்தப் படத்தின் இதயம் ஒரு கோவில் பாட்டெழுதித்தான். ராஜா தனது மனைவி திருமதி. ஜீவாவிற்கு இந்தப் பாடலை அர்ப்பணித்திருக்கிறார். பாடலிலும் அடிக்கடி ஜீவன் என்ற வார்த்தை வரும். ராஜா சாமியாரின் ஆன்மீகக் காதல்!

கூட்டத்திலே கோவில் புறா கமாஸ் ராகத்தில் அமைந்த பாடல்! இளையராஜா சரணங்களுக்கு இடையே வரும் கோரஸ் குரல்களில் ஸ்வரம், ஜதி என்று ராகத்தின் எல்லைகளையும், ஆழங்களையும் பயன்படுத்துவதைப் பற்றி அருமையான கட்டுரை ஒன்று இந்த வலைப்பூவில் பார்த்தேன். எத்தனை அருமையான தகவல்கள்! http://geniusraja.blogspot.com/2011/10/ இசைப் ப்ரியர்கள் அவசியம் வாசிக்கவேண்டிய கட்டுரை!

முதல் தடவை இந்தப் பாட்டை வானொலியில் கேட்டதும் அசந்து போக வைத்த பாட்டு. எளிமையான ஆனால் அருமையான காட்சியமைப்பு. கிராமத்து இரவுகளில் பாடல் கச்சேரியின் இனிமையையும் திறந்த வெளிக் குளுமையையும் எல்லாவிதத்திலும் கொண்டுவந்து ராஜா பாலு கூட்டணி போட்டு அசத்தியிருப்பார்கள். இன்றைய தலைமுறைக்கு இப்பாடல் கேலிக் கூத்தாகத் தெரியலாம். ஆனால் அன்றைய கிராமங்கள் அப்படித்தான் இருந்தன.

இந்தப் பாடலைக் கேட்ட போதெல்லாம் புத்துணர்ச்சியும், உற்சாகத்தையும் தந்து புல்லரிக்கவைத்த பாட்டு. இப்போதும் அந்த உற்சாகம் என்னைப் பற்றிக் கொள்கிறது. இதைப் பாடி பல வருடங்கள் ஆகிறது. நிறைய தயக்கத்துடன் முயற்சி செய்து பாடியது. பிழைகளைப் பொருத்தருள்க.





No comments: