Saturday, April 06, 2019

கற்பூர பொம்மை

வசந்த் முதன் முதலில் இயக்கி 1990 இல் வெளிவந்த கேளடி கண்மணி படத்திற்கு பெரிதாக அறிமுகம் தேவையில்லை. நன்றாக ஓடிய பெருவெற்றிப் படம் அது. பாடும் நிலா மூச்சு விடாமல் (அப்படிப் பாடவில்லை என்று அவரே பல நேர்காணல்களிலும் இசை நிகழ்ச்சிகளிலும் சொல்லிவிட்டு அவரே மூச்சு விடாமல்) பாடிய மண்ணிலிந்த காதலன்றி பாடல் பட்டி தொட்டியெங்கும் எல்லா வானொலிகளிலும் மூச்சு விடாமல் ஒலிபரப்பித் தீர்த்தார்கள்.
நன்றாக தம் கட்டி முழு சரணத்தையும் பாட முடிகிறதா என்று நானும் என் அண்ணனும் சில வாரங்கள் முயன்று பார்த்திருக்கிறோம். மூச்சுவிடாமலும் பாடினோம். நான் பாடியது நீரில்லாக் கிணற்றுக்குள் விழுந்து தீனமாகக் கேட்கும் வகையில் கத்தும் பூனையின் குரலில் இருந்தது.
பாலு, கீதா, ராதிகா, ரமேஷ் அர்விந்த், அஞ்சு, ஸ்ரீவித்யா, மற்றும் சோகமான கதையம்சம் நிரம்பிய படம். இசைஞானியின் இசையில் முத்து முத்தான பாடல்கள். பாலுவின் கதாபாத்திரப் பெயர் ARR (A.R. Rangaraj!)  இன்னும் சில சுவாரஸ்ய தகவல்கள் (உதவி கூகுளாண்டவர்). நீ பாதி நான் பாதி (சக்கரவாக ராகத்தில்), தென்றல்தான் பாடல்களை ஜேசுதாஸ் பாடியிருக்கிறார். மண்ணிலிந்த காதலன்றி பாடல் கீரவாணி ராகத்தில் அமைந்ததாம். இந்தப் பாடல் தவிர, படத்தின் மொத்த இசைக் கோர்வைகளையும் உருவாக்க இசைஞானி எடுத்துக்கொண்டது 45 நிமிடங்கள் மட்டுமேயாம்!
வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து என்று ஆண்டாள் பாடலை ஜானகி மனம் நெகிழும் வண்ணம் பாடியிருக்கிறார். இதே பாடலை பாலு அவர் பாணியில் பாடியதும் யுட்யூபில் இருக்கின்றன. ரெண்டையும் ஆயுசு பூராக் கேட்டுக்கொண்டேயிருக்கத் தோன்றும்.
இப்படத்தின் பிரபலப் பாடல்கள் எல்லாம் எனக்குப் பிடித்திருந்தாலும், பாலு ஒரு காட்சியில் இசைப் பின்னணி எதுவும் இல்லாமல், உடைந்த குரலில், கண்ணாடியைக் கழட்டிவிட்டு, "முத்தே என் முத்தாரமே சபையேறும் பாடல் நீதானம்மா.. கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று” என்று சில வரிகள் மட்டுமே பாடிய கற்பூர பொம்மையொன்று பாடல் என்னைப் பல நாட்கள் தூங்கவிடாமல் செய்தது. மனதைப் போட்டுப் பிசைந்தது. இதயத்தில் சொல்லமுடியாத வலியையும், துயரத்தையும் எழுப்பியது.
பாடல்கள் என்றாலே வேகம், அல்லது காதல் என்று விரும்பும் அந்த வயதில் (20) ஏனோ காரணத்தால் இந்தப் பாடல் தான் என் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தது. கற்பூர பொம்மை என்பதை என்ன அர்த்தத்தில் மு.மேத்தா எழுதியிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு அந்தக் கற்பூர பொம்மை நான் மிகவும் நேசிக்கும் குழந்தைகள், பெண்கள், ஆண்களை நினைவூட்டியது. நான் நேசிக்கும், என்னை நேசிக்கும் ஜீவன்களை இழக்க நேரிட்டால் எழப்போகும் தாங்கவொண்ணா வலியைக் கற்பனை செய்ய வைத்தது. இனம்புரியாத தவிப்பை எழுப்பியது. கற்பூரம் எரியாவிட்டாலும் காற்றில் கரையும். அதுபோன்றுதான் மானுட வாழ்வும். நானும், நான் பேரன்பு கொண்ட உயிர்களும் கற்பூரம் போன்று என்றோவொரு நாள் காற்றில் கரைந்துபோகப் போகிறோம் என்ற நிதர்சனத்தை உணர்ந்தாலும் ஏன் இறைவன் இப்படி இவ்வளவு அலகிலாப் பிரேமை கொள்ளச் செய்கிறான் என்று பெரும் ஆதங்கதங்கத்தையும் எழுப்புகிறது கற்பூர பொம்மை.
அன்பையும், நட்பையும், காதலையும் இழப்பதுபோன்று ஒரு கொடுந்துயரம் வேறில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். ஏன் அப்படித் தோன்றுகிறது கேட்டால் என்னிடம் பதிலில்லை.
முழுப்பாடலையும் பி.சுசீலா அருமையாகப் பாடியிருப்பார். ஆனால் என்னைத் தாக்கியது பாலு பாடியிருக்கும் சில வரிகள்.
இந்தப் பாடலை உருவாக்குவதற்கு ஊக்கியாக இருந்தது இரண்டு பாடல்களாம். ஒன்று Albela என்ற படத்தில் ஸி. ராமசந்திரா இசையமைத்த Dheere Se Aaja Ri Ankhiyon Mein என்ற பாடல். இரண்டாவது அன்னை படத்தில் ஆர். சுதர்சனம் இசையமைத்த 'பூவாகி காயாகி’ பாடல்!
இதைப் பாடியது மனதில் கரைபுரண்டு ஓடும் எண்ண அலைகளுக்கு ஒரு வடிகாலாக. எனக்குப் பாட வருகிறதோ இல்லையோ, எனது உணர்வுகளை வெளிப்படுத்த இந்த முயற்சி உதவியது. கூட இணைந்து பாடிய இசை தேவதையாக நான் கருதும் ravpri க்கும் எனது சிரந்தாழ்ந்த வந்தனங்கள்.


No comments: