Friday, August 31, 2007

நினைவலைகள் - காசு மேலே காசு வந்து

காசுகள் எப்போது கையில் புழக்கத்திற்கு வந்தது என்று நினைவில்லை. ஆனால் பள்ளிக்குச் செல்லத் துவங்கிய தினத்திலிருந்து தாத்தா நாள்தோறும் தவறாது ஐந்து பைசா கொடுத்தனுப்புவது நினைவிருக்கிறது. அறுகோண மூன்று பைசா ஒன்று, அப்றம் பூ வடிவ (?) இரண்டு பைசா ஒன்று. சில சமயத்தில் டைமண்ட் ஐந்து பைசாவாகவும் கிடைக்கும். அலுமினியப் பைசாவை ஆள்காட்டி விரல் நுனியில் வைத்து அண்டா நீரில் மெதுவ்வ்வ்வ்வாக இறக்கி மிதக்க வைத்து விளையாடுவோம்.

அந்தப் பைசாக்களை வைத்து உலகத்தை வாங்கும் தீராத ஆசை இருந்து கொண்டே இருந்தது. கொடிக்காப்புளி என்ன, ஜிங் ஜிங்கென்று மூங்கிலின் உச்சியில் பொம்மை கைதட்ட அதை வைத்திருப்பவர் மிட்டாயைப் பிய்த்துக் கையில் கட்டிவிடும் வாட்ச்சு மிட்டாய் என்ன, கடலை மிட்டாய் என்ன, கல்கோனா என்ன, எத்தனை எத்தனை வாங்கலாம் தெரியுமா? 'அவனுக்குக் காசு கொடுத்து நீங்கதான் கெடுக்கறீங்க' என்று அப்பா தாத்தாவைக் கடிந்து கொள்வார். ஆனால் ஒரு நாளும் பாக்கெட் மணி இல்லாமல் பள்ளிக்குச் சென்றதில்லை. தாத்தா நாலு வீடு தள்ளி நின்றுகொண்டு பள்ளிபோகும்போது கொடுத்துவிடுவார் - அப்பாவுக்குத் தெரியாமல். தெரிந்தால் அவருக்குச் சிறுவயதில் பாக்கெட் மணி கிடைக்காத ஆத்திரமெல்லாம் என் முதுகில் விடியும்!

தாத்தா மடியில் நிறைய சில்லறைக் காசுகளைக் கட்டி வைத்திருப்பார். கேட்டு இல்லை என்று சொன்னதேயில்லை. திரையரங்கத்தில் அவர் டிக்கெட் கொடுக்கும் அறையில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும்போது மேசை மீது உயரமாக காசுவாரியாக எல்லாக் காசுகளையும் அழகாக அடுக்கி வைத்திருப்பதைப் பார்க்க பிரமிப்பாக இருக்கும். நாலணாக் காசுகளின் நெளிந்த தூண் கீழே விழுந்துவிடுமோ என்று பயமுறுத்திக்கொண்டே இருக்கும். ஒரு ரூபாய் காசின் கனம் பிடித்தமானது. பிந்நாளில் இரண்டு ரூபாய் காசும் இன்னும் கனமான ஐந்து ரூபாய் காசும் பார்த்து பிரமித்தேன்.

எந்தக் காசாக இருந்தாலும் முதலில் கவனிப்பது அதில் அச்சிடப்பட்டிருக்கும் வருடத்தைத் தான். வெவ்வேறு வருடங்களில் வெளியிடப்பட்ட நாணயங்களை ஒப்பிட்டுப் பார்ப்பேன். சிலவற்றில் சில படங்கள் அச்சிடப்பட்டிருக்கும்.

தங்கக் காசு ஏதோ ஒன்றில் ஒளிந்திருக்கிறது என்ற வதந்தியை நம்பி அலுமினியக் காசுகளைத் தேய்த்து மொண்ணையாக்கியதும் நடந்திருக்கிறது.

நடக்கையில் புதையல் போல மண்ணில் புதைந்து லேசாக நீட்டிக்கொண்டிருக்கும் காசுகள் கிடைத்தபோது லாட்டரியில் கோடிரூபாய் கிடைத்த ஆனந்த அதிர்ச்சியும் கிட்டியிருக்கிறது. ஆனால் வெட்டுப்பட்ட காசுகளைக் கண்டால் எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப் பட்டிருந்தோம் - "சூனியம் வைத்த காசு அது. தொட்டே ஒனக்குச் சூனியம்தான்" என்று பயமுறுத்தப்பட்டிருந்தோம். ரத்தம் கக்கிச் சாக விருப்பமில்லாமல் அதே சமயத்தில் அரை மனதோடு அம்மாதிரிக் காசுகளை எடுக்காது போவோம்.

இப்போதெல்லாம் எந்த வெட்டுப்பட்ட காசையும் தொடாமலே இணையத்தில் எளிதாக சூனியத்திற்கு ஆளாகிவிடலாம்.

ஆண்டுக்கொருமுறை நடக்கும் முத்தாலம்மன் திருவிழாவுக்கு மட்டும் ஒரு ரூபாய் நோட்டு ஒன்று தாத்தாவிடமிருந்து கிடைக்கும். கருப்புக் கலர் நோட்டு. இரண்டு ரூபாய் சிவப்பு. ஐந்து ரூபாய் பச்சை. பத்து ரூபாய் கருப்பு! அடுத்த வருடம் எப்படியும் இரண்டு ரூபாய்க்கு உயர்வு பெற்றிட வேண்டும் என்று ஒவ்வொரு வருடமும் முத்தாலம்மனிடம் வேண்டிக்கொள்வேன். ஒரு ரூபாய்த் தாள் கையில் புழங்கிய தினத்தில் முகத்தில் ஒரு 'கெத்து' ஏறியிருப்பதாகக் கூட வரும் நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

ரூபாய் நோட்டுகளின் வெள்ளை வட்டங்களில் ஏதாவது எண்கள், அல்லது பெயர்கள், அல்லது புரியாக வாக்கியங்கள் எழுதியிருக்கும். அப்படி எழுதப்பட்ட நோட்டுகளைப் பார்த்தாலே எரிச்சலாக இருக்கும்.

பெரும்பாலான ரூபாய் நோட்டுகள் பல மடி மாறி, சட்டைப் பைகள், சுருக்குப் பைகள் மாறிக் கசங்கி அழுக்காக இருக்கும். சில சமயம் தாத்தா ரூபாய் நோட்டை நனைத்து பறவைக் குஞ்சைக் கையாளுவது போல, லேசாகச் சோப்புக் கரைசலைப் பட்டும்படாமலும் தேய்த்துக் காயவைத்து, இஸ்திரிப் பெட்டியால் ஒரு இழு இழுப்பார். என்ன ஆச்சரியம்! அப்படியே மொறமொறப்பாக ஆகிவிடும் அது.

அது மாதிரி நானும் ஒன்றைச் செய்து பேச்சி கடையில் பொட்டுக்கடலை வாங்கியதற்குக் கொடுத்தபோது உயர்த்திப் பிடித்து, திருப்பிப் பார்த்துவிட்டு மறுபடியும் என்னிடமே கொடுத்துவிட்டாள். "கள்ள நோட்டு மாரியல்லா இருக்கு ராசா. நோட்டு அடிச்சியா? ராசா சாமிகிட்ட சொல்லவா?" என்று முறைத்துப் பார்க்க, நான் கோன் பொட்டலத்தை அரிசி மேலே வைத்துவிட்டுத் திரும்பி சோகமாக நடந்தேன். கள்ள நோட்டைக் கையால் வரையவே வசதியில்லை. இதில் அச்செல்லாம் எங்கிருந்து அடிப்பது?. ஒர்ரூவாய் கள்ள நோட்டு அடிக்க ஏகமாகச் செலவாகுமே. இது கூட பேச்சிக்குத் தெரியாதா? என்று கடுப்பாக இருந்தது.

தாத்தாவிடம் அதைத் திருப்பிக் கொடுத்துவிட அவர் கொட்டகைக்குச் சென்று மாற்றிக் கொள்கிறேன் என்று நான்கு காலணாக்களைக் கொடுத்தார். ஆனால் என்னை அவமானப் படுத்திய பேச்சி கடைக்குச் செல்வதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு கீழக் கடைத்தெருவிற்குச் சென்று பொட்டுக் கடலை வாங்கிக்கொண்டேன். என்ன நாலணாவுக்கு பொட்டுக்கடலை அளவு குறைவாக இருக்கும் - தன்மானத்தை விடுவதைவிட அளவு குறைந்தால் பரவாயில்லை என்று தேற்றிக் கொண்டேன்.

1-ந்தேதி தாத்தாவிற்குச் செட்டியார் சம்பளம் கொடுப்பார். அறுபது ரூபாயோ என்னவோ - மாசச் சம்பளம் வாங்குவார் தாத்தா. ஒரு சம்பள நாளில் என்னை அழைத்து மடியில் இருத்திக்கொண்டு அவர் சட்டைப்பையிலிருந்து எடுத்துக்காட்டியது அப்பழுக்கற்ற சலவை ஒரு ரூபாய்த் தாள்கள்! முதன்முறையாகச் சலவைத்தாளைப் பார்க்கையில் பரவசமாக இருந்தது. அதைத் தாத்தா கையிலிருந்து வாங்கவே மனசில்லை - அழுக்காகிவிடுமோ என்று அச்சமாக இருக்க சூரிய ஒளியில் பளபளத்த அதைக் கண்வாங்காமல் பார்த்தேன். சீட்டாட்டத்தில் சீட்டுகளைப் பிரிப்பது போல அவற்றில் ஒரு தாளை கட்டிலிருந்து விலக்கி என்னிடம் கொடுக்க அதை நுனிவிரலால் பிடித்து வாங்கிக்கொண்டேன். அதை மடக்க மனம் வரவில்லை. மடக்காமல் கால்சராய் பையில் வைக்க முடியாது. அப்படியே மெதுவாக நடந்துசென்று பள்ளிக்கூடப் பைக்கட்டிலிருந்து ஒரு நோட்டை எடுத்து விரித்துத் தாளை அலுங்காமல் வைத்து நோட்டை மூடியதும்தான் மூச்சே விட்டேன்! 'தொலைச்சுடப் போறே' என்று எச்சரிக்கை செய்தார் தாத்தா. அடுத்த சில வாரங்களுக்கு அந்த நோட்டைக் கண்ணுங்கருத்துமாகப் பாதுகாத்தேன். வகுப்பறையில் அடிக்கடி அந்தப் பக்கத்தைப் புரட்டி அது இருக்கிறதா என்று சோதித்துக் கொள்வேன். நண்பர்களுக்கும் தொடவிடாமல் காட்டி அவர்களைப் பொறாமைப்படச் செய்தேன். மொத்தத்தில் தரையில் கால் பாவாமல் இருந்தேன்.

ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்பிற்கு உயர்நிலைப் பள்ளிக்கு மாற வேண்டியிருந்தது. ஊக்கத்தொகை பெறுவதற்கு ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்த ஒரு அறக்கட்டளைக்குச் சென்று பரீட்சை எழுத வேண்டியிருந்தது. தயிர் சாதம் எலுமிச்சை ஊறுகாயைக் கட்டி எடுத்துக்கொண்டு அதிகாலைப் பேருந்தைப் பிடித்து நானும் அப்பாவும் போனோம். அந்த இருளடைந்த வகுப்பறையில் தேர்வு முடித்துவிட்டு சன்னல் குரங்கை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே சாப்பாட்டை முடித்துவிட்டு மாலை பேருந்தைப் பிடித்து ஊர் திரும்பினோம்.

அன்று இரவுக்காட்சிக்காக திரையரங்கத்திற்குச் சென்றால் டிக்கெட்டுகளை வேறொருவர் கொடுத்துக்கொண்டிருந்தார். 'தாத்தா?' என்று கேட்டதற்கு, 'சாமி இன்னிக்கு வரலை தம்பி' என்று சொல்லிவிட, மறுபடியும் வீட்டுக்கு வந்து தாத்தாவைத் தேடியபோது அவர் நான்கு வீடுகள் தள்ளியிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் நண்பர்களோடு சீட்டு விளையாடிக்கொண்டிருந்தார். நடுவில் சீட்டுகள் சிதறிக்கிடக்க அவரவர் மடிக்கு முன்பாக நாணயங்களும் சிதறியிருந்தன. புகையிலையை அடக்கிக்கொண்டு தாத்தா விளையாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். கண்களால் 'என்ன?' என்று வினவ 'படத்துக்குப் போகணும்' என்றேன். 'நான் சொன்னேன்னு சொல்லி மணிகிட்டச் சொல்லிட்டுப் போ' என்றார். எனக்குத் தாத்தா இல்லாமல் படத்துக்குப் போக பயம். உள்ளே இருக்கும்போது யாராவது டிக்கெட் எங்கே என்று கேட்டால் என்ன செய்வது என்று. 'நான் போ மாட்டேன்' என்று உறுதியாகச் சொல்லிவிட்டு அங்கேயே நின்றுகொண்டிருந்தேன். அவர் சீட்டைச் சுருட்டி அடுக்கிக் கீழே வைத்துவிட்டு கையிலிருந்த சில்லறைகளையும் போட்டுவிட்டு என்னை அழைத்துக்கொண்டு விறுவிறுவென்று நடந்து திரையரங்கத்திற்குச் சென்று உள்ளே அமர்த்திவிட்டு 'இடைவேளை விட்டதும் வெளில வா - முறுக்கு வாங்கித் தாரேன்' என்று சொல்லி விட்டு செட்டியாரைப் பார்க்கப் போய்விட்டார். அது ஏதோ ஒரு அறுவையான படம். கண்களை மூடிய விரல்களின் இடைவெளியினூடே ஜெயமாலினி பாடலைப் பார்த்து முடித்ததும் இடைவேளை வந்துவிட தாத்தாவோடு வீட்டுக்குத் திரும்பிவிட்டேன்.

அந்த வருட பள்ளி ஆண்டுவிழாவில் முதல் மாணவனுக்கான பரிசு எனக்குக் கிடைத்தது. பரிசு ஒரு உறைக்குள் ஐம்பது ரூபாய்த் தாள் ஒன்று. அதோடு 'ஒரு மரப்பாச்சியின் கதை' என்ற (பினாக்கியோ) புத்தகம். என் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய பரிசாக அந்தப் புத்தகத்தை கருதுகிறேன். படிப்பு, வீடு என்றிருந்த மாணவ நிலையில் 'கதைப் புத்தகம்' என்ற வரையில் எனக்குக் கிடைத்த அறிமுகம் அப்புத்தகத்திலிருந்துதான் துவங்கியது. அதே போல அன்றைய தினத்திற்கு ஐம்பது ரூபாய் பெரிய தொகை. அதை வைத்திருக்க பயந்துகொண்டு மேடையிலிருந்து இறங்கியதும் அப்பாவிடம் கொடுத்துவிட்டேன்.

என்ன இருந்தாலும் நோட்டுப் புத்தகத்தில் வைத்திருந்த அந்த ஒரு ரூபாய் சலவைத்தாள் எனக்கு உற்ற நண்பனாக நீண்ட நாட்கள் இருந்தது. அதை எதற்கோ எடுத்துச் செலவு செய்ய நேர்ந்தபோது விழியோரத்தில் துளிர்த்த நீர் - அதன் விலை மதிப்பற்ற தன்மையை எனக்கு இன்னும் உணர்த்திக்கொண்டே இருக்கிறது.

****