Friday, December 21, 2007

ந.ஒ.க. போட்டிக்கு அல்ல -** பலூன் ** - மீள்பதிவு


எங்கூர்ல முத்தாலம்மஞ்ஜாவடி இருக்கு. வருசா வருசம் திருவிளா நடக்கும். சொக்கப்பனை கொளுத்துவாய்ங்க (அவர்: "இன்னிக்கு சொக்கப்பனைக் கொளுத்தும் நாள்" இவர் : "அவரு என்ன தப்பு பண்ணாருங்க?" விகடன் ஜோக்). அது எரியறப்பவே சில பேரு கட்டய புடுங்கப் பாப்பாய்ங்க. பொறிபொறியா செதறும். பக்கத்து கடைகள்ல விளுந்துருமோன்னு பயமா இருக்கும். சொக்கப்பனை எரிஞ்சி முடிஞ்சதும், எல்லாரும் கரிக்கட்டை ஒண்ணை சுடச்சுட எடுத்து அவங்கவங்க வீட்டுக்கு கொண்டு போவாய்ங்க. எல்லாரும் போனதும் கடைசில நானும் தேடிப்பாத்து சின்ன துண்டு கெடச்சா வீட்டுக்கு எடுத்துப்போயி கூரைல செருகி வச்சுருவேன். சாம்பல வீபூதியா பூசிக்குவேன். ரொம்ப நல்லதுன்னு அம்மா சொல்லிருக்காங்க.

முத்தாலம்மந் திருவிளா நடக்கறப்ப, அம்மஞ் ஜாமிய அளகா அலங்காரம் செஞ்சு வச்சுருப்பாய்ங்க. கண்ணுதான் பாக்க பயமா இருக்கும். நெறய அபிசேகம் செய்வாங்க. எளநி, பாலு, தேனு அபிசேகம் செய்யறப்ப மட்டும் நானு, என் பிரெண்ட்ஸ் எல்லாம் சைடுல போயி எல்லாத்தையும் பாட்டில்ல பிடிச்சு குடிப்போம். இனிப்பா இருக்கும். தீர்த்தமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். தண்ணில தொளசி போட்டு சூட வாசனையோட ரொம்ப நல்லா இருக்கும்.

நெறய புதுக்கடை போட்ருப்பாய்ங்க. பொம்மை, டிரஸ்சு, பந்து, பலூன், அப்றம் பூசை ஜாமான் கடையெல்லாம் நெறய இருக்கும். நீலக் கலர்ல கோடுகோடா போட்ட பந்துங்கள குமிச்சி வச்சிருப்பாய்ங்க. அம்பது பைசா ஒரு பந்து. அதுல ஊசியால ஓட்டை போட்டு ரப்பர்நூல் முனில ஈர்க்குச்சி துண்டு ஒண்ண கட்டி ஈர்க்குச்சிய பந்து ஒட்டைல சொருகி உள்ள போட்டுட்டா, குச்சி குறுக்கால விளுந்துகிட்டு ரப்பர் நூல் நல்லா மாட்டிக்கும். நூலோட இன்னொரு நுனிய விரல்ல மாட்டிக்கிட்டு பந்த பிடிச்சி எறிஞ்சா, சொய்ங்ங்னு போயிட்டு திருப்பி கைக்கே வந்துடும். ரொம்ப சூப்பரா இருக்கும். பந்து ரொம்ப கனமா இருந்தா இல்ல ஓங்கி ரொம்ப தூரத்துக்கு எறிஞ்சுட்டா ரப்பர் நூல் அந்துடும். சுள்ளுனு வெரல்ல நூல் அடிச்சி வலிக்கும். பக்கத்து வீட்டு தடியன் கோவிந்து, ரப்பர் நூல இளுத்து விட்டு சுள்ளுன்னு அடிப்பான். எனக்கு கோவமா வரும்.

அன்னிக்கு ராத்திரி சாமிய தூக்கிட்டு மூணு தெருலயும் ஊர்வலம் போவாங்க. சாமி முன்னாடி கரகாட்டம், மயிலாட்டம், பொய்க்கால்குதிரை எல்லாம் ஆடுவாங்க. எனக்கு அதே மாதிரி ஒரு குதிரை பொம்மை வேணும்னு தோணும். ஸ்கூலுக்கு குதிரைல இன்னும் வேகமா போலாம்ல? வீட்ல மரக்குதிர ஒண்ணு இருக்கு. ஆனா சின்னது. கரகாட்டம் ஆடுறவங்க மொகத்துல நெறய பவுடர் போட்டு பளபளன்னு ஜிகினால்லாம் தடவிக்கிட்டு இருப்பாய்ங்க.

அப்றமா சறுக்கு மரம். காலைலேயே பெருமாள் கோயில்ல இருந்து சறுக்கு மரத்த கொண்டு வந்துருவாய்ங்க. அடேயப்பா எவ்ளோ நீளமா இருக்கும் தெரியுமா? ரோட்ல குளி தோண்டி அதுல நெட்டுக் குத்தலா நிக்க வச்சுடுவாய்ங்க. ரொம்ப பெருசா இருக்கும். நான் கட்டிப் பிடிச்சி பார்ப்பேன். ரெண்டு கையையும் சேக்கக்கூட முடியாது. அவ்ளோ பெருசு. ஒரு தடவ கஷ்டப்பட்டு ஒரு அஞ்சடிக்கு ஏறிட்டேன்.கோவிந்து வந்து திடீர்னு என் காலப் பிடிச்சு இளுத்துட்டானா. நான் சறுக்கிக்கிட்டு தொம்முன்னு விளுந்தேன். ஒண்ணுக்குப் போற எடத்துல பயங்கரமா வலிச்சு எனக்கு அளுகை வந்துருச்சு. சாயங்காலம் வரைக்கும் எல்லா பசங்களும் அதுல ஏறி ஏறி வெளையாடுவாங்க. அஞ்சு மணி போல ஒரு ஆளு வந்து மஞ்சத் துணில காசுபோட்டு முடிஞ்சி, கிடுகிடுன்னு சறுக்கு மரத்து மேல ஏறி உச்சில கட்டிட்டு, சர்ருன்னு எறங்கினாரு. அவருக்கு வலிக்கவேயில்லை போல. சிரிச்சிக்கிட்டே போனாரு. என் பிரண்டு மணிகிட்ட கேட்டப்ப, பெரிய ஆளுங்க சறுக்கு மரத்துல ஏறும்போது, இரும்புல ஜட்டி போட்டுகிட்டுதான் ஏறுவாங்கன்னு சொன்னான். நான் டிராயரு மட்டும் தான் போடுவேன். ஜட்டியெல்லாம் இன்னும் பெரியவனா ஆனப்புறம் போடலாம்னு அம்மா சொன்னாங்க. இரும்பு ஜட்டிய பாத்ததே இல்ல. மதுரை டவுன்ல தான் கெடைக்குமாம்.

ஆறு மணி போல அதே ஆளு ஒரு பெரிய வாளி நெறய கஞ்சி பசையோட வருவாரு. இன்னொரு டப்பால ஏதோ எண்ணை இருக்கும். வாளில கயிறு கட்டி, கயிற மட்டும் பிடிச்சுக்கிட்டு மேல ஏறி உச்சில போயி ஒரு குறுக்குக் கட்டயில வசதியா உக்காந்துகிட்டு, கயிற மேல இளுப்பாரு. வாளி கைக்கு வந்ததும், அதுல இருந்து கொளகொள கஞ்சி பசைய எடுத்து மரத்து மேல இருந்து தடவிக்கிட்டே கீள எறங்குவாரு. மொதல்ல எண்ண. அப்றம் கோந்து. எவ்ளோ கோந்து தெரியுமா? அப்படியே கீள வரைக்கும் புல்லா தடவி முடிச்சுருவாரு. அப்றம் எங்களை மரத்து பக்கத்துல விட மாட்டாங்க. சுத்தி முள்ளுச் செடிய போட்டு வச்சிருவாய்ங்க. ஏளு மணிக்கு நெறய ஆம்பளையாளுங்க ஜட்டி மட்டும் போட்டுக்கிட்டு வந்து ஏற ஆரம்பிப்பாங்க. சாதா துணி ஜட்டிதான். இரும்பெல்லாம் இல்ல. தொம்மு தொம்முன்னு விளுவாங்க. அப்றம் நெறய சக்தியோட இருக்கற ஒரு ஆளு கீள நின்னுக்கிட்டு மரத்த கட்டி புடிச்சுக்குவாரு. அவரு தோள் மேல இன்னொரு ஆளு ஏறி, கோந்தெல்லாம் வளிச்சு வளிச்சு கூட்டத்து மேல எறிவாரு. அப்டியே ஒருத்தரு மேல ஒருத்தரா ஏறி மேல போவாங்க. எல்லார் மேலயும் தண்ணிய ஊத்துவாங்க. வீட்டு மாடில நின்னுக்கிட்டு ட்யூப்பு வச்சி தண்ணீய பீச்சி அடிப்பாங்க. கீள இருக்கற ஆளு சில சமயம் வலி தாங்காம வெலகிடுவாரு. எல்லாரும் தொம்முன்னு வளுக்கி விளுவாங்க. இப்படியே ஒருமணி நேரத்துக்கு மேல ஆயிடும். கடைசியா ஒருவளியா ஏறி மஞ்சத் துணி முடிச்ச எடுத்து எறங்கிடுவாங்க. எல்லாத்துக்கும் மாலை போடுவாங்க. முடிச்சுக்குள்ள இருக்கற பணத்த பிரிச்சுக்குவாங்க.

அதுக்கு அப்றமா உரியடி நடக்கும். கண்ணுல துணிய கட்டிக்கிட்டு கைல கம்பு ஒண்ண கொடுத்து சர்ருன்னு சுத்திவிட்டு உரிய அடிக்கச் சொல்வாங்க. உரிய விட்டுட்டு சிலபேரு எங்கேயோ போயி கம்ப வீசிப் பாப்பாங்க. எனக்கு சிரிப்பா வரும். ஒரு ஆளு கோவிந்து தலைல நங்குன்னு அடிச்சார் பாருங்க. நல்லா வேணும்னு நினைச்சிக்கிட்டேன். சுத்தி நின்னு வேடிக்க பாக்குறவங்க சும்மா இருக்காம அங்க போ இங்க போன்னு கண்ணு கட்டுன ஆள இளுத்தடிப்பாங்க. உரியடி ரொம்ப சிரிப்பா இருக்கும்.

எனக்கு பலூன்னா ரொம்ப பிடிக்கும். ஆனா கைல காசில்லயே என்ன பண்றது? நெறய பசங்க பலூன் வாங்கிக்கிட்டு போவாங்க. விதவிதமா பலூன் இருக்கும். ரொம்ப நல்லா இருக்கும். பலூன் விக்கற ஆளு உஸ்ஸ¤ன்னு ஊதி ஊதி டக்குன்னு நூல் கட்டி கொடுப்பான். ஊதும்போது வெடிச்சிரும்னு பயமா இருக்கும். நான் பாத்தவரைக்கும் ஒரு பலூன் கூட வெடிக்கலை. கையில தடி மாதிரி ஒரு பலூன வச்சுக்கிட்டு கிர்ரக் கிர்ரக்னு சவுண்டு விட்டுக்கிட்டே இருப்பான். அதையே முறுக்கி முறுக்கி பொம்மையா செய்வான். எனக்கு ரொம்பஆச்சரியமா இருக்கும்.

ஒரு பலூன் கூட வாங்க முடியலைன்னு சோகமா இருந்தப்பதான் மணி வந்தான்.

'டேய் ராஜா. என்ன இங்க நின்னுகிட்டு இருக்க? ஒன்னோட அப்பத்தா தேடுச்சு'

'போடா. அதுக்கு வேற வேலையில்ல. சாப்பிட கூப்பிடும்'

'வரயா இல்லயா'

'நான் வர்லை. நீ போ'

மணி பலூன் வாங்கிட்டுப் போனத பாத்து எனக்கு ஏக்கமா இருந்துச்சு. அளகா நீலக்கலர் பலூன் அது. எனக்கு நீலக்கலர் ரொம்ப பிடிக்கும். மணி போனதும் இன்னொரு பையன் பலூன் வாங்கி அவனே ஊதறேன்னு ஊதினானா; அது டம்முன்னு வெடிச்சிருச்சி. அவன் அத கீளப் போட்டுட்டு ஓடிப் போயிட்டான். அந்த ஒடஞ்ச பலூன எடுத்து ஒடஞ்ச எடத்துல இன்னொரு முடிச்சு போட்டு ஊதிப் பாத்தேன். குட்டி பலூன் மாதிரி இருந்திச்சு. சரி நமக்கு கிடச்சது அவ்ளவுதான்னு மனச தேத்திக்கிட்டேன்.

பசிக்க ஆரம்பிச்சதால மெதுவா வீட்டுக்கு நடந்தேன். வளக்கம்போல கீள பாத்துக்கிட்டே. கொஞ்ச தூரம் நடந்ததும் கீள லைட் ப்ளூ கலர்ல ஒரு பலூன் காத்து போயி கெடந்துச்சு. மணி பலூன வெடிச்சி கீள போட்டுட்டு போயிட்டானான்னு எடுத்துப் பாத்தா முளுசா ஒடயாம ஆனா கொஞ்சம் மண் ஒட்டிகிட்டு இருந்துச்சி. கலர் கொஞ்சம் வேற மாதிரி புளு கலர். ஆஹா. எனக்கு ரொம்ப சந்தோஷம். சாமி தான் நான் ஆசைப்படறத பாத்துட்டு கொடுத்துருகாருன்னு நினைச்சிக்கிட்டேன். டக்குன்னு எடுத்து மண்ண தட்டி விட்டு பார்த்தேன். ஒரு ஓட்டை கூட இல்லை. நல்ல ஸ்ட்ராங்கா இருந்துச்சு. பக்கத்துல இருந்த நல்லதண்ணிக் குளாய்ல களுவிட்டு சட்டைல தொடச்சிப்பாத்தா புதுசுமாதிரி ஆயிருச்சி. தம் கட்டி ஊதினா எவ்ளோ பெருசா வந்துச்சு தெரியுமா. எனக்கு பயங்கர சந்தோசமா இருந்துச்சு. கைல நூல் இல்லாததால பலூன் வாய முறுக்கி பிடிச்சிக்கிட்டு குடுகுடுன்னு வீட்டுக்கு ஓடினேன். கோவிந்து பாத்தா புடுங்கிருவான்னு பயமா இருந்துச்சு. நல்ல வேளை அவன் பாக்கல. எதுத்த வீட்டு குமார் அண்ணன் பாத்துட்டு 'எங்க கெடைச்சதுடா?'ன்னு கேட்டாரு.

'தெருவுல கீள கெடந்துச்சுண்ணே'

'எங்க?'

'சுப்புணி டாக்டரு வீட்டு முன்னாடி'

'அப்பிடியா?'ன்னு கேட்டுட்டு சிரிச்சுக்கிட்டே உள்ள போயிட்டாரு.

எங்க வீட்டு வாசல்ல தோல் செருப்ப பாத்ததும் அப்பா ஊர்ல இருந்து வந்திருக்காருன்னு தெரிஞ்சு போச்சு. அய்யோ. லேட்டா வந்ததுக்கு திட்டுவாரேன்னு யோசிச்சேன். பலூன பின்னாடி மறச்சுகிட்டு உள்ள போனேன். அப்பா பாத்ததும் சிரிச்சாரு. எனக்கு சந்தோஷமா இருந்துச்சு. 'ராஜா.. வாடா இங்க'ன்னு கூப்பிட்டு கைல ஒரு பொட்டலத்த கொடுத்தாரு. பக்கோடா வாசனை. ஹை. எனக்கு பக்கோடான்னா ரொம்ப பிடிக்கும். பொட்டலத்த வாங்கறதுக்கு கைய நீட்டுனேனா, பலூன் லூசாயி சர் புர்ருன்னு வீட்டுக்குள்ள சுத்திசுத்தி பறந்து அப்பா மடில போயி விளுந்துச்சு. அப்பா அத எடுத்து பாத்ததும் அவரு மூஞ்சி மாறிச்சு. 'எங்கருந்து எடுத்தே இத?'

'தெருவுல கெடந்துச்சுப்பா'

சடால்னு எளுந்து என் தலை முடிய பிடிச்சு சப்சப்னு நாலு அறை விட்டார். எனக்கு சுள்ளுன்னு வலிச்சி அளுதேன். 'அடியே இந்த எச்சக்கலப்பய எத எடுத்து வந்துருக்கான் பாரு'ன்னு கத்தினார். அம்மா சமயல் கட்டுல இருந்து வந்து பாத்துட்டு 'அய்யய்யோ'ன்னாங்க. கீள கெடக்குற சாமானையெல்லாம் எடுக்கக்கூடாதுன்னு அம்மா சொல்லிருக்காங்கதான். ஆனா எனக்கு பலூன் வாங்க காசு கொடுத்தாங்கன்னா நான் ஏன் கீள கெடந்த பலூன எடுக்கப் போறேன்.? 'அப்பா நல்லா களுவிட்டு தான் ஊதினேன்'ன்னு சொன்னேன். 'நாயே.. இனிமே கண்டகண்டதையும் தெருவுல கிடந்தா தொடுவியா?'ன்னு அப்பா மறுபடியும் பளார்னு அடிச்சார். 'கருமம் கருமம். இந்த எழவையெல்லாம் எந்த மடையன் தெருவுல போட்டான்?.'ன்னு அத வீட்டுக் கொல்லப்புறத்துல இருக்கற சாக்கடைல தூக்கிப் போட்டார்.

அவரு ஏன் தலைல அடிச்சிக்கிட்டார்னு எனக்கு புரியலைங்க. நீங்க சொல்லுங்களேன். பலூன் கீள கெடந்தா எடுக்கக் கூடாதா?

***

நன்றி : மரத்தடி.காம் (இக்கதை திண்ணையிலும் வெளிவந்தது)