Tuesday, October 12, 2010

இந்தியத் தூத(த்தேறி)ரகங்கள்


அடிமாடுகள் லாரிகளில் ஏற்றப்பட்டு கேரளாவுக்குக் கடத்தப்படுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அனாயசமாக வைக்கோல்போர் ஏற்றிச் செல்வதுபோல மாடுகளை லாரியின் இண்டு இடுக்களில் நிரப்பி அடைத்துக் கொண்டுபோவார்கள். வளைகுடா நாடுகளுக்குக் கூலிவேலைக்காகச் செல்லும் படிப்பறிவற்ற, வசதியற்ற பெரும்பாலான இந்தியத் தொழிலாளர்களின் நிலை அந்த அடிமாடுகள் மாதிரிதான். இருக்கும் நகை, நிலம், மானம் எல்லாவற்றையும் அடகு வைத்தோ விற்றோ, அல்லது திரும்பக் கட்டவே முடியாத கடன்களை வாங்கியோ இடைத்தரகர்களுக்குப் பணம் கொடுத்து எப்படியாவது தன்னை நம்பியிருக்கும் வீட்டு ஜீவன்களைக் காப்பாற்றவேண்டும் என்று திரைக்கடலோடித் திரவியம் தேட விழையும் அம்மனிதர்களைச் சந்தித்திருக்கிறீர்களா?  கல்யாணமான இரண்டாவது மாதத்தில் மனைவியை விட்டுவிட்டு விமானம் பிடிப்பவர் குழந்தைக்கு நான்கைந்து வயதாகியிருக்கையில் இந்தியாவுக்கு விடுமுறையில் வருவார். அல்லது கைக்குழந்தையுடன் மனைவி இருக்கும்போது செல்பவர் அந்தக் குழந்தை அப்பா என்ற பிம்பத்தை மறந்து வளர்ந்திருக்கையில் அப்பாவானவர் திரும்ப விடுமுறைக்கு வந்து தந்தைப் பாசத்தைக் கொட்ட முயல, அது ஒட்டாது அம்மாவின் முந்தானைக்குள் ஒளிந்துகொள்ளும்.

சிறிய நைந்த பர்ஸ் ஒன்றில் மனைவி குழந்தைகளின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு அங்கிருக்கும் மணி எக்சேஞ்ச் அலுவலகங்களில் மாதம் ஒண்ணாந்தேதியானதும் ஐம்பது, அல்லது நூறு ரியால், அல்லது திர்ஹாம் பணத்தை இந்தியாவிலிருக்கும் குடும்பத்தினருக்கு அனுப்புவதற்காக ஃபாரம் நிரப்பத் தெரியாது அல்லாடிக்கொண்டு அலைமோதுவார்கள்.

ஷேர் ஆட்டோ போன்று அடைக்கப்பட்ட ”லேபர் கேம்ப்”களில் வாசம் செய்யும் அவர்களின் நிலை பரிதாபம். ”வீட்டு வேலைக்கு” என்று ”எடுக்கப்பட்டு” வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்படும் பெண்களின் நிலை இன்னும் பரிதாபம். சொல்லவொண்ணா துயரங்களை அனுதினமும் அனுபவித்துக்கொண்டு பாஸ்போர்ட்டை ஸ்பான்ஸர்களிடமோ அல்லது ஏஜண்ட்டுகளிடமோ பறிகொடுத்துவிட்டு சிறைவாழ்க்கை வாழும் அப்பெண்களின் நிலை கொடியது. அவர்களுக்கு நேரும் துர்ச்சம்பவங்கள் ஊடகத்தில் வெளிவருவதில்லை. நூற்றில் ஒன்றிரண்டு சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்தால் அதிசயம். மற்றபடி எல்லாமே மூடி மறைக்கப்பட்டு விடுகின்றன.

வளைகுடா நாடுகளின் விமான நிலையங்களில் கும்பல் கும்பலாக ஏஜண்ட்டுகளுக்காகக் காத்திருக்கும் ஆசியர்களைப் பார்த்திருக்கிறீர்களா? விமான நிலையத்திலேயே சில நாட்கள் வாசம் செய்வார்கள். பெரும்பாலானவர்கள் (ஏமாற்றிய) ஏஜண்ட்டுகள் வராத காரணத்தினால் தாய்நாட்டுக்குத் திருப்பியனுப்பப் பட்டுவிடுவார்கள். சிலர் போதைகடத்தல் என்று ஏதாவது வழக்கில் மாட்டிக்கொண்டு அந்தந்த நாடுகளின் நரக சிறைகளுக்குள் வாழ்நாளைக் கழிக்கவேண்டிவரும். யாருக்கும் அவர்களுக்கு என்ன ஆகிறது என்று தெரியாது.

அப்படித் தப்பித் தவறி விசா பிரச்சினையின்றி நாட்டுக்குள் நுழைந்து எங்கோ தங்கிக்கொண்டு கூலி வேலை செய்து பிழைத்தாலும் எப்போதாவது இந்தியத் தூதரகம் என்ற அவமரியாதைக்கூடத்திற்குள் ஒவ்வொரு வெளிநாட்டுவாழ் இந்தியனும் ஒரு தடவையாவது நுழைந்துதான் ஆகவேண்டும். ஒரு டிபிக்கல் இந்திய அரசாங்க இயந்திரம் எப்படி இயங்குகிறது என்பதற்கு அவை அத்தாட்சிகள். உள்ளே நுழைவதிலிருந்து வெளியே காரியம் முடித்து வருவது வரை துச்சமாகப் மதிக்கப்படுவதையும், அவமரியாதைகளுக்குட்படுவதையும், தாமதங்களையும், பொறுப்பற்ற பதில்களையும் அனுபவித்துத்தானாக வேண்டும். வளைகுடாவில்தான் இப்படியென்று நினைத்துக் கொண்டிருந்தேன். இங்கு நியூயார்க்கில் இருக்கும் இந்தியத்தூதரகத்தைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்துப் பாருங்கள் - அப்போது நான் சொல்வது புரியும். ஒரு கடவுச்சீட்டை புதுப்பிக்க வேண்டிருந்தால் ஆயிரத்தெட்டு குழப்பமான விதிமுறைகள் - எவ்வளக்கெவ்வளவு ஒரு விஷயத்தைக் Complicated ஆகக் கையாளவேண்டுமோ அவ்வளவு சிக்கல்களை வைத்திருக்கிறார்கள். அவர்கள் யாரையும் தொலைபேசியில் தப்பித்தவறியும் பிடிக்க முடியாது. அப்புறம் எதற்கு தொலைபேசியை வைத்திருக்கிறார்கள்?

மற்ற நாடுகளில் அரசு, தனியார் என்று பாரபட்சமில்லாது வாடிக்கையாளர்களுக்கு துரித சேவையை வழங்கி அவர்களைத் திருப்திப்படுத்துவதையே முதற்குறிக்கோளாக வைத்து இயங்கிக்கொண்டிருக்க, நமக்கு மட்டும் வாடிக்கையாளர்களின் திருப்தி என்பது Priority List-லேயே இல்லை. இந்நிலை இழிவானது. அரசாங்க ஊழியர்கள் என்றாலே இப்படித்தான் என்ற இழிவான நிலையை, பிம்பத்தை தொடர்ந்து அவர்கள் வெற்றிகரமாகத் தக்கவைத்துக்கொண்டிருப்பது அவமானமான விஷயம்.

Tom Hanks நடித்த The Terminal படத்தில் நாடிழந்த அனாதையாக அமெரிக்க விமானநிலையத்தில் அல்லாடும் கதையைச் சுவாரஸ்யமாகச் சொல்லியிருப்பார்கள். பார்ப்பதற்குத்தான் சுவாரஸ்யம். நிஜவாழ்வில் அம்மாதிரியான சம்பவம் சமீபத்தில் ஒரு பெண்ணின் மரணத்தில் முடிந்திருக்கிறது. கீழே இரு செய்தித் துணுக்குளைத் தந்திருக்கிறேன். படித்துப் பாருங்கள்.
***
துபாய்: பாஸ்போர்ட்டை பறி கொடுத்து விட்டு 5 நாட்களாக பரிதவித்து வந்த சென்னையைச் சேர்ந்த பணிப்பெண், மஸ்கட் விமான நிலையத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது பெயர் பீபி லுமடா. 40 வயதான இவர் மஸ்கட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். மஸ்கட்டிலிருந்து சென்னை செல்வதற்காக இவர் கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தார். அதன்படி மஸ்கட்டிலிருந்து விமானம் சென்னை கிளம்பியது. வழியில் தோஹாவில் அது இறங்கியது.

தோஹாவில் இறங்கி இணைப்பு விமானத்தைப் பிடிப்பதற்காக பீபி சென்றபோது அவரது பாஸ்போர்ட் தொலைந்து போய் விட்டது. இதனால் அவரால் தோஹாவிலிருந்து விமானத்தைப் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அவர் மீண்டும் மஸ்கட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.

ஆனால் அவர் ஏற்கனவே ஓமனில் குடியிருப்பதற்கான விசாவை ரத்து செய்திருந்ததால் மஸ்கட் விமான நிலையத்தை விட்டு வெளியேற அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.

இதனால் பீபியால் எங்குமே போக முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவரது நிலையை விளக்கி இந்தியத் தூதரகத்திற்கு விமான நிலைய அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். ஆனால் இந்தியத் தூதரகத்திலிருந்து ஒருவர் கூட வந்து பார்க்கவில்லை. இதனால் ஐந்து நாட்களாக அந்த அப்பாவிப் பெண் விமான நிலையத்திலேயே முடக்கப்பட்டிருந்தார்.

அவரது நிலையைப் பார்த்து பரிதாபப்பட்ட கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தினர் அவருக்கு சாப்பாடு, தண்ணீர், படுக்கை உள்ளிட்டவற்றை கொடுத்து உதவியுள்ளனர். மேலும், இந்தியத் தூதரகத்திற்கும் தகவல் தெரிவித்து உடனடியாக அவருக்கு உதவுமாறு கோரியுள்ளனர். ஆனால் மனிதாபிமானம் கொஞ்சம் கூட இல்லாத இந்திய தூதரக அதிகாரிகள் யாருமே வந்து பார்க்கவில்லை.

இந்த நிலையில் தற்போது அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மன உளைச்சல் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என விமான நிலைய மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கத்தார் ஏர்வேஸ் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், நாங்கள் பலமுறை இந்திய தூதரகத்திற்கு தகவல் அளித்தும் ஒருவர் கூட வந்து பார்க்கவில்லை. விமான நிலையப் போலீஸாரும் பலமுறை இந்திய தூதரகத்தை அழைத்தும் கூட யாருமே வரவில்லை. ஏன் இந்தியத் தூதரகம் இப்படி நடந்து கொண்டது என்று தெரியவில்லை என்றனர்.

எல்லாம் நடந்து முடிந்த பின்னர் பீபியின் மரணம் குறித்து இந்தியத் தூதரகம் வருத்தமும், கவலையும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியத் தூதர் அனில் வாத்வா கூறுகையில், இது மிகவும் சோகமானது. எக்ஸ்டி பாஸ் தருவதற்குள் அவர் உயிரிழந்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நிர்வாக தாமதங்களே இந்த மரணத்திற்குக் காரணம் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் உள்ள பீபியின் உறவினர்களுக்குத் தகவல் தரப்பட்டுள்ளது.

தனது நாட்டுக் குடிமகளைக் காக்கக் கூட முன்வராத இந்திய தூதரகத்தின் இந்த இரக்கமற்ற செயல் சக இந்தியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நன்றி தட்ஸ்தமிழ்.காம்
****

MUSCAT: The body of Beebi Lumada, who died at Muscat International Airport on Friday, will be flown to her native place in Kerala today evening if post-mortem examination is completed and the Indian Embassy gets possession of the body.

An Indian Embassy official said that all the expenses of transporting the body will be borne by the embassy.
It may be recalled that an Indian domestic maid died at Muscat International Airport on Friday after she was left stranded for four days because of lost passport.
The embassy official said preparations are being made to send the body of the deceased to her native town today.
The Royal Oman Police has assured that the post-mortem examination will be done today morning, after which the embassy will transport the body to Chittoor in Andhra Pradesh, where the deceased’s relatives live, he added.
Meanwhile, repeated calls to the relatives of the deceased in Chittoor were not answered.
The incident which took place on Sunday attracted substantial media attention in India with all major print media and TV channels reporting the news.
Beebi Lumada, 40, (PP No. G4679737) worked in Muscat on a maid contract. She had changed her sponsor in August and the new sponsor had asked her to leave the job and go back to India since she was suffering from some illness.   She lost her passport while travelling to Doha from Muscat.


Courtesy: www.TimeofOman.com  
***

அமெரிக்கக் குடிமகனாகியிருக்கும் தென்கொரியர்கள் வடகொரியாவில் மாட்டிக்கொண்டு சிறையிலிருக்கும்போது அமெரிக்க முன்னாள் ஜனாபதி வடகொரியாவுக்குச் சென்று அவர்களை மீட்டு அழைத்துவருகிறார். இத்தனைக்கும் அவர்கள் சாதாரண பொதுஜனங்கள்தான் - விவிஐபிக்கள் அல்ல. 


வெளிநாட்டில் இருக்கும் குடிமகன்களைக் காக்கவேண்டியது ஒரு அரசாங்கத்தின் முதன்மையான கடமையல்லவா? யாராவது ஒரு முக்கியப் (கரும்)புள்ளியோ அல்லது ஒரு சினிமா நட்சத்திரமோ கடவுச் சீட்டைத் தொலைத்திருந்தால் இப்படி ஐந்து நாட்கள் விமான நிலையத்தில் அல்லாடவிட்டுச் சாகடித்திருப்பார்களா? ஷாருக்கானை வெளிநாட்டு விமான நிலையத்தில்  சோதனைக்குட்படுத்தியது பெரும்செய்தியாகி நாடே கொந்தளித்தது. இங்கு ஒரு அப்பாவி இந்தியக் குடிமகள் கேட்பாரற்று விமானநிலையத்தில் மாட்டிக்கொண்டு செத்துப் போகிறார். தூதரக மயிராண்டிகள் அறிக்கைவிட்டு சவப்பெட்டியை இந்தியாவுக்கு அனுப்பும் செலவுகளை ஏற்றுக்கொள்கிறார்களாம்! அதில் நூறில் ஒரு பங்கு மட்டும் செலவழித்து ஒரு புதிய கடவுச்சீட்டை அந்தப் பெண்மணிக்கு உடனடியாகக் கொடுத்திருந்தால் இந்நேரம் ஊர்போய் சேர்ந்திருப்பார். 


இவ்வளவு ஏன். அந்தத் தூதரக அதிகாரிகளின் இஷ்டமித்ரபந்துக்களில் யாராவது இப்படி கடவுச்சீட்டைத் தொலைத்துவிட்டு மாட்டிக்கொண்டிருந்தால் இப்படி ஐந்து நாட்கள் அல்லாடுவார்களா? தூதரகத்தில் செய்துகொண்டிருக்கும் வேலையை எல்லாம் அப்படியே போட்டுவிட்டு முதல் காரியமாக அவர்களுக்கான கடவுச்சீட்டை உடனடியாக வழங்கி அவர்கள் பிரயாணத்தைத் தொடரச் செய்து விமானத்தில் அவர்கள் கிளம்பியதை உறுதிப்படுத்திக்கொண்டுதான் மோளவே போவார்கள் இல்லையா? ஆனால் இங்கு மாட்டிக்கொண்டது யாரோ ஒரு வீட்டுவேலைசெய்யும் கூலிப் பெண்மணி - காத்திருக்கட்டும் - சாகட்டும் - யாருக்குக் கவலை? யார் கேட்பார்கள்? சவப்பெட்டியை மக்களின் வரிப்பணத்தில் இந்தியாவுக்கு அனுப்பிவிட்டு வருத்தம் தெரிவித்தால் போதுமே?

இந்தியர்களின் உயிர்களுக்கு மதிப்பில்லை என்று அரசாங்கமே ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறது மறுபடியும். எவன் செத்தாலென்ன என்று ஊழல் செய்து நாட்டைச் சுரண்டிக்கொண்டிருக்கும் கொள்ளைக் காரர்கள் ஒரு பக்கம், மக்கள் செத்தாலென்ன என்று இப்படி மெத்தனமாக இருக்கும் புரையோடிப்போன அரசாங்க இயந்திரம் என்று இன்னொரு பக்கம் - நம் நிலையை நினைத்தால் பரிதாபமாகவும் பயமாகவும் இருக்கிறது. 

இப்போதெல்லாம் கோபமே வருவதில்லை. எதுவுமே புதிசில்லை என்பதான ஆயாசமே மிஞ்சுகிறது. கோபப்பட்டு ஒரு மயிரும் பிடுங்க முடியாது என்ற நிதர்சனம் இன்னொரு காரணம்.

நாம் இந்தியர்கள் - நம் இந்தியா என்று நெஞ்சு நிமிர்த்திப் பெருமைப் படுவதற்கான காரணங்கள் அருகிக்கொண்டே வருவது மிகவும் வருத்தத்தை தரும் விஷயம்.

****
picture courtesy: psdblog.worldbank.org

Friday, October 01, 2010

இளைஞர்களே!

"இளைஞர்களே இந்நாட்டின் தூண்கள்
இளைஞர்களே இந்நாட்டின் எதிர்கால மன்னர்கள்
இளைஞர்களே இந்நாட்டின் முதுகெலும்பு
இளைஞர்களே 2020-இல் இந்தியாவை வல்லரசாக்கப் போகிறார்கள்!


ஒளி படைத்த கண்ணினாயே வா வா வா
இளைய பாரதத்தினாயே வா வா வா


நாளைய உலகின்....”




”யோவ். யாருய்யா அது பகல்ல கனா கண்டுக்கிட்டு இருக்கறது? நவருய்யா. படம் பாக்கப் போம்போது குறுக்கால....தலிவாஆஆஆஆஆஆ!”