Friday, September 28, 2012

திரு. எல். அடைக்கலராஜ்


திரு. எல். அடைக்கலராஜ் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் - திருச்சி) அவர்கள் மறைந்தார் என்ற செய்தியை இப்போதுதான் படித்தேன். பெப்ஸியின் தென்னிந்திய Franchisee-யாக தொண்ணூறுகளின் மத்தி வரை பல தொழிற்சாலைகளை நடத்தினார். எந்த விளம்பரத்திலும் தோன்றாத சூப்பர் ஸ்டாரை பெப்ஸியை அறிமுகப்படுத்துவதற்காக மதுரைக்கு வரச் செய்தவர் - தொழிலதிப
ர். மாதமொருமுறை Business Review-வுக்காக மதுரை தொழிற்சாலைக்கு வருவார். மெதுவாகப் பேசினாலும் கூர்மையாகப் பேசக்கூடியவர். சாய்ந்த ஊசி போன்ற அவருடைய கையெழுத்து எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. நம்பிக்கை வட்டத்துக்குள் இருப்பவர்களை குடும்ப உறுப்பினராகவே நடத்தும் உள்ளம் படைத்தவர். பலமுறை அவரைச் சந்திந்திருக்கிறேன். கிராப்பட்டியில் இருக்கும் அவர் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். அவருடைய மகன்கள் வின்சென்ட், பிரான்சிஸ், லூயிஸ் என்று அனைவருடனும் பழகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 





அவருடைய மருமகன் திரு.பாஸ்டியன் மதுரை தொழிற்சாலையை நிர்வகித்துவந்தவர். அவரிடம்தான் நான்கு வருடங்கள் பணியாற்றினேன். பெப்ஸி நேரடியாக எல்லாத் தொழிற்சாலைகளையும் வாங்கியபோது கிட்டத்தட்ட எல்லாப் பணியாளர்களும் வேறு வேலை பார்த்துக்கொண்டு போக, வெகுசிலரை மட்டும் பெப்ஸி வைத்துக்கொண்டது - அதில் நானொருவன். ஆனால் பாஸ்டியன் அவர்களோடு இருக்கவேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது. ”நீ படிச்சவன். பெப்ஸி பன்னாட்டு நிறுவனம். அங்கு இருந்தேன்னா உன் எதிர்காலம் பிரகாசமா இருக்கும். அதனால நீ அங்கிட்டே இரு” என்று அனுப்பியவர். எட்டாக்கனியாக அன்றிருந்த Thiagarajar School of Management-இல் MBA அனுமதி கிடைத்தபோது, அவ்வளவு பெரிய தொகையை எப்படிப் புரட்டுவது என்று மலைத்தபோது ஒரு நிமிடம்கூட யோசிக்காமல் உடனே உதவித்தொகை வழங்கியவர் அவர். அவர் அப்படிச் செய்திருக்காவிட்டால் நான் இது வரை பெற்ற அனுபவங்களோ, முன்னேற்றங்களோ கிட்டியிருக்காது. 





அரசியல்வாதிகளைப் பற்றி பலதரப்பட்ட கருத்துகள் எல்லாருக்கும் உண்டு. கடுமையான விமர்சனங்கள் உண்டு (எனக்கும்தான்). நான் அந்தப் பக்கங்களுக்குள் போக விரும்பவில்லை. நன்றி விசுவாசத்துடன் உண்மையான அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்தவர்களை நன்றாக ஊக்கப்படுத்தும் குணம் கொண்டவர்கள் அந்தக் குடும்பத்தினர். 





திருச்சி ரயில்வே நிலையம் முன்பு மக்கள் குறை கேட்பதற்காக ஒரு அலுவலகத்தை நடத்தியவர் அடைக்கலராஜ் அவர்கள். அந்த அலுவலகத்தில் மகன்களில் யாராவது ஒருவர் கட்டாயம் சில மணி நேரமாவது அமர்ந்து மக்களைச் சந்தித்துக் குறை கேட்கவேண்டும் - முடிந்த வரையில் உதவவேண்டும் என்று கட்டாயப்படுத்தியவர். 





வேலை கொடுத்ததோடு இல்லாமல் தனிப்பட்ட முறையிலும் அன்பு செலுத்தி எதிர்காலத்தில் நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் நடத்திய அந்த அன்புக் குடும்பத்திற்கு நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். 





அவரது மறைவு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனது பிரார்த்தனைகள். அஞ்சலிகள்!