Saturday, April 27, 2019

20


I love BCT because of the endless opportunities it offers to make a dent on status quo! What started as a plain canvas 20 years ago has evolved into a beautiful (state-of-the-) Art-work! #WeAreBCT #Selfie #AtWork#me #Selfienation #smile Bahwan CyberTek
ஐந்திணைகளையும் கொண்டிருக்கும் தாய்நாட்டையும், பெற்றோர், உற்றோர், நட்புகளையும் விட்டுவிட்டு புலம்பெயர்ந்து பாழ்நிலம் - பாலை என்றறிந்திருந்த இடத்தை வாழ்நிலமாய்க் கொள்ள விமானமேறிச் சென்று இறங்கி ஒரு சிறிய அலுவலகத்தில் எதிர்காலம் குறித்து பெரும் நம்பிக்கையும், முகங்களெங்கும் பிரகாசமும், வென்று தீர வேண்டும் என்ற தீர்க்கமான, தீவிரமான பாவனைகளுடனும் கூடியிருந்த சிறு குழுவொன்றில் இணைந்து 20 வருடங்களுக்கு முன்னால் துவங்கிய பயணம் இது. ஓமானின் மஸ்கட்டிலிருந்த ஐந்தரை வருடங்களும் ஒரு ரோலர் கோஸ்டர் சாகசப் பயணம் போல வேகமாய்ச் சென்றன. ஓமான் அனுபவங்களைப் பற்றி ஏற்கெனவே வலைப்பதிவுகளில் நிறைய எழுதியிருக்கிறேன் (ஓமானே மானே!).
புலம்பெயர்வது என்பது வேர்களையும், வளர்த்த மரக்கிளைகளையும் துறந்து காற்றில் திக்கு தெரியாமல், அனாதையாகப் பறக்கும் இலைகளுக்கு ஒப்பானது. மதுரை விளாங்குடியிலிருந்து ஆட்டோவில் ஏறி பெங்களூருக்குச் செல்வதற்காக உட்கார்ந்து - அது வரை கூட்டுக்குடும்பமாக இருந்து பெற்றோர், தாத்தா பாட்டியென்று சுற்றிக் கடவுளர்களுடன் இருந்ததுபோலிருந்த, கோவில் போலிருந்த இல்லத்தை விட்டுக் - கிளம்பியபோது அவர்களின் கையசைப்பைப் பார்க்கத் திராணியில்லாமல் மறுபக்கம் திரும்பிக்கொண்டு விழியோரம் வழிந்த கண்ணீரைத் துடைக்காமல் எதிர்காற்றை வெறித்துப்பார்த்துக்கொண்டு ரயில் நிலையம் சேரும்வரை எதுவும் பேசாமலிருந்த அந்த நாள் இன்னும் நினைவிலிருக்கிறது. அந்த இழப்புகளின் வலியும், வடுவும் நிரந்தரமாக ஆழ்மனதில் தங்கியிருக்கும் ஒன்று. வலியில்லாமல், தியாகம் செய்யாமல் எதையும் பெற்றுவிடமுடியாது என்பது வாழ்க்கைப் பாடம்!
நேர்காணலின் போது என்னை வேலைக்கு அழைத்துச் சேர்த்த என் மேலாளர் நிறுவனத்தைப் பற்றியும் ஊர், நாட்டைப் பற்றியும் ஒன்றும் அறியாது நிச்சயமின்றி இருந்த என்னிடம் சொன்ன ஒரே வாக்கியம் "இது ஒரு வெற்றுக் காகிதம். நீ என்ன ஓவியம் வரையவேண்டும் என்று நினைக்கிறாயோ அதை வரைந்துகொள்" என்று சொன்னதும் மேலும் தாமதிக்காமல் சேர்ந்த வேலை இது. இதை வேலையாக நினைத்ததில்லை. சலித்ததில்லை. வாழ்வின் பிரதான அங்கமாகிப்போன அன்றாட நிகழ்வு Bahwan CyberTek
தகவல் தொழில்நுட்பத்துறையின் மிகப்பெரிய வரமே மாற்றமே நிரந்தரமாக இருப்பதுதான். மற்ற எல்லாத் துறைகளையும் விட அதிவேக மாற்றங்கள் நிகழ்வது இங்கே. கல்லூரிப் படிப்பை வைத்து வாழ்நாள் முழுதும் ஓட்ட முடியாது. ஒருவர் தனது அறிவையும் திறமையும் தினந்தினம் மேம்படுத்திக்கொள்ளவேண்டிய புதுப்பித்துக் கொள்ளவேண்டிய கட்டாயமுள்ள துறை, வேலை இது. அசந்து அடுத்த மாதம் பார்த்துக்கொள்ளலாம் என்று சாய்ந்து உட்கார்ந்தால் 'பெரிசு ஏதோ அந்தக் காலத்தைப் பத்திப் பொலம்புது' என்று நம்மைத் திண்ணையில் உட்கார வைத்துவிட்டு முன்னால் மொத்த கூட்டமும் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்க்க நேரிடும். ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது. சுருக்கமாக வாத்தியார் பாணியில் சொல்வதானால் ஜல்லியடித்தல் ரொம்பநாள் தாங்காது!
இந்த வாழ்க்கை அளித்ததைப் பட்டியலிட்டு மாளாது. குடும்பம் வேறு வேலை வேறு என்று பார்க்கத் தேவையில்லாத ஒரு பெரிய குடும்பமாகப் பாவிக்கவைத்த நிறுவனம் இது. வேலைக்குச் சேர்ந்த ஓரிரு ஆண்டுகளிலேயே சம்பளம் போதவில்லை, மேடை சரியில்லை, மைக்கில் எக்கோ அடிக்கிறது என்று அடுத்தடுத்து வேறு நிறுவனம், வேறு வேலை என்று தவளை போல் தாவித்தாவிச் செல்வதையே 'மாற்றம்' என்றும் 'முன்னேற்றம்' என்றும் கருதுபவர்கள் நிறைந்த தொழிலில் திறமையான நபர்களைக் கண்டுபிடித்து வேலைக்குச் சேர்ப்பது சவால் என்றால் அவர்களைத் தக்கவைப்பது இன்னும் பலமடங்கு பெரிய சவால். அப்படிப்பட்ட பெரும் சவால்களை எதிர்கொள்ளும், மூளையை மூலதனமாக வைத்து வருவாய் ஈட்ட வேண்டிய தொழிலில் ஈடுபட்டிருக்கும் எங்கள் நிறுவனத்தில் சராசரிக்கும் மேலான அளவில் 10 வருடங்களுக்கும் மேலாக, 15 வருடங்களுக்கும், ஏன் 20 வருடங்களாக இன்னும் கடமையுணர்ச்சியுடன் நிறுவனத்தின் பல்வேறு நிலைகளில், பதவிகளில் ஆட்கள் பணிபுரிகிறார்கள் என்பதற்கு இருக்கும் நேர்மறைக் காரணங்கள் பல.
இது ஒரு பெரும் குடும்பக் கட்டமைப்பு - ஒரு வார்த்தைகூட பேசாது லேசாகக் குனிந்த தலையுடன் தேனீர்க் கோப்பைகளைக் கொண்டுவந்து சத்தமெழுப்பாமல் மேசை மீது வைத்துவிட்டுச் செல்லும் பணியாட்களின் பெயரையும் நலனையும் மனதில் வைத்திருக்கும், அக்கறையுடன் விசாரிக்கும், "அதெல்லாம் முடியாதுப்பா. இது நிறுவன பாலிஸி, இதான் நடைமுறை. ஸாரி" என்று கண்ணைச் சந்திக்காமல் மறுப்பு சொல்லாமல், கையை விரிக்காமல், உண்மையாகவே பணியாட்களின் தனிப்பட்ட வாழ்வுச் சிக்கல்களைத் தீர்க்க முயலும் - அது பணியாளர்களின் தகுதிக்கு மீறியதாகவே இருந்தாலும் - மேலதிகாரிகள் இருக்கும் நிறுவனத்தைவிட்டுச் செல்ல சுலபத்தில் எப்படி மனம் வரும்? எனது தனிப்பட்ட அனுபவத்திலேயே அளவிடமுடியாத, தாங்கமுடியாத பெரும் துயரத்தைச் சந்திக்க நேர்ந்தபோது அதில் பங்கெடுத்துத் தோள்கொடுத்துத் தாங்கிக்கொண்ட நபர்களை விட்டுவிட்டு எப்படி விலக முடியும்? எனக்கிருப்பது போல் இங்கு இருக்கும் ஒவ்வொரு நெடுநாள் பணியாளர்களுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட அனுபவம் நிச்சயம் இருக்கும்.
அதற்காக இங்கு பாலும் தேனும் 24 மணி நேரமும் ஓடுகிறது என்று சொல்லவில்லை. இங்கும் சவால்கள் இருக்கின்றன, பிரச்சினைகள் இருக்கின்றன. குறைகளில்லாத மனிதன் ஒருவனைக் காட்டுங்கள், நான் குறைகளில்லாத நிறுவனத்தைக் காட்டுகிறேன். அப்படி மனிதர்கள் உருவாக்கும் எந்த நிறுவன அமைப்பிலும் குறைகள் இருக்கத்தான் செய்யும். பிரச்சினையில்லாத மனிதன் இல்லை, பிரச்சினையில்லாத குடும்பமோ சமூகமோ நாடோ இல்லை. பிரச்சினையில்லாத நிறுவனமும் இல்லை. அதுதான் இயற்கை. கல்லைப் பார்க்கிறோமா, சிற்பத்தைப் பார்க்கிறோமா என்பது பார்க்கிறவரின் பார்வையில்தான் இருக்கிறது.
A job is a love-hate relationship between the employee and the employer. Sustaining in it depends on how much one loves his/her job and the people they work with than how much they hate what they're doing and whom they're working for. People always quit their managers, not the company!
20 நபர்கள்கூட இல்லாமல் சிறு குழுவாக ஆரம்பித்தது 2000 கடந்து 3000 தாண்டி விருட்சமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. இன்னும் பிரம்மாண்டமாக வளரும்.
அதற்குள் 20 வருடங்களாகிவிட்டதா என்று பிரமிப்பாக இருக்கிறது. ஆரம்ப நாட்களில் உழைத்ததுபோலவே இன்றும் உழைத்துக்கொண்டிருக்கிறோம். போதும் என்று மனம் சோம்பித் தேங்கிவிடவில்லை.
இப்படி ஒரு நிறுவனத்தை உருவாக்கக் கனவு கண்ட நிறுவனத் தலைவிக்கும், அவருக்கு வலதுகரமாக இருந்து வாகனத்தைச் செலுத்தும் இயந்திரம் போல உந்து சக்தியளித்து செலுத்தி, நகரவைத்து, ஓட வைத்து, எழும்பிப் பறக்கவும் வைத்த தலைமை முதன்மை அதிகாரிக்கும், உடன் கைகோர்த்து ஒரே நோக்கத்துடன் உழைத்த ஆயிரக்கணக்கான சக பணியாளர்களுக்கும், பின்னணியில் அவர்கள் செய்திருக்கும் தியாகங்களுக்கும், இந்தக் கூட்டு முயற்சியை வரவேற்று வாழ்வளித்த வாடிக்கையாள நிறுவனங்களுக்கும் 20 வருடங்களை நிறைவு செய்யச் சில வாரங்களே மீதமிருக்கும் இத்தருணத்தில் எனது மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்!
🙏👍💐
(பெரிய) பி.கு. முகநூலிலிருந்து தற்காலிகமாக வெளியேறி இரண்டு வாரங்கள் ஆகின்றது. இத்தற்காலிகப் பிரிவு முழுமையாக முடிந்துவிடவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் இந்த இருவார விலகலில் உணரமுடிந்தது.
வெறும் வெட்டிப்பேச்சும், மீம்ஸ் போடுவதிலும் நேரத்தை விரயம் செய்துகொண்டிருக்கும் இடத்தைவிட்டு விலகினால் அதில் எந்த உணர்வுப் பூர்வமான பந்தமும் இருக்காது. நான் இணையத்தை அப்படிப்பட்ட ஒரு இடமாக நினைத்ததில்லை. முகநூலை அப்படி நினைத்ததேயில்லை. எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் உறவுகளுக்கும், நட்பு வட்டத்திற்கும் மதிப்பு கொடுக்கும், பெறும் ஒரு மெய்நிகர்சன உலகாகவே இதுவரை கருதி வந்திருக்கிறேன்.
ஆனால் 20 ஆண்டு இணைய வாழ்விலும், புழக்கத்திலும் கற்றதும் பெற்றதும் பல. இழந்தது நேரம் மட்டுமே. இதனால் கிடைத்த நட்புகளை அவ்வளவு எளிதாக உதறிவிட்டு விலகியிருக்கமுடியாது. இது உணர்வுப் பூர்வமான பந்தம். வெறும் கேளிக்கையும், வெட்டிக்கூச்சலும் அல்ல. இதைத் தவிர்ப்பதால் பெறக்கூடியது ஒன்றும் இல்லை. இருப்பதால் இழக்கக்கூடியதும் ஒன்றும் இல்லை. உலகைச் சுருக்கிக் கையில் கொடுத்து, தொலைதூரத்தில் இருக்கும் நட்புகளையும், உறவுகளையும் விரல் நுனியில் காட்டி, உரையாட வைத்து, இருபது முப்பது வருடங்களுக்கும் மேலாக எங்கிருக்கிறார்கள் என்று தெரியாமலிருந்த பழைய, பால்ய நட்புகளையும் உறவுகளையும் மறுபடியும் கண்டெடுத்து, கண்டுபிடித்து இம்மெய்நிகர்சன உலகில் உரையாடி, பார்த்துப் பேசி, எழுதிப் படிக்கச் செய்யும் சாத்தியத்தை ஏற்படுத்திய தொழில்நுட்பத்தை உதறுவது மடமை என்று மட்டும் புரிகிறது.
இங்கும் நட்பும், அன்பும், நேசமும், பாசமும் இருக்கிறது. புதிய உறவுகள் முகிழ்க்கின்றன. இந்த வெட்டி அரட்டை மடமா அல்லது நிகழுலகிற்குச் சமமான மெய்நிகர்சன உலகா என்பதும் நம் கண்ணோட்டத்தில் மட்டுமே இருக்கிறது.
இதைவிட்டு விலகியதில் பெருமை இல்லை. திரும்பியதில் வெட்கமில்லை. மறுபடியும் நட்புச் சூழலுக்குள் வந்ததில் மகிழ்ச்சியே!

Saturday, April 06, 2019

கற்பூர பொம்மை

வசந்த் முதன் முதலில் இயக்கி 1990 இல் வெளிவந்த கேளடி கண்மணி படத்திற்கு பெரிதாக அறிமுகம் தேவையில்லை. நன்றாக ஓடிய பெருவெற்றிப் படம் அது. பாடும் நிலா மூச்சு விடாமல் (அப்படிப் பாடவில்லை என்று அவரே பல நேர்காணல்களிலும் இசை நிகழ்ச்சிகளிலும் சொல்லிவிட்டு அவரே மூச்சு விடாமல்) பாடிய மண்ணிலிந்த காதலன்றி பாடல் பட்டி தொட்டியெங்கும் எல்லா வானொலிகளிலும் மூச்சு விடாமல் ஒலிபரப்பித் தீர்த்தார்கள்.
நன்றாக தம் கட்டி முழு சரணத்தையும் பாட முடிகிறதா என்று நானும் என் அண்ணனும் சில வாரங்கள் முயன்று பார்த்திருக்கிறோம். மூச்சுவிடாமலும் பாடினோம். நான் பாடியது நீரில்லாக் கிணற்றுக்குள் விழுந்து தீனமாகக் கேட்கும் வகையில் கத்தும் பூனையின் குரலில் இருந்தது.
பாலு, கீதா, ராதிகா, ரமேஷ் அர்விந்த், அஞ்சு, ஸ்ரீவித்யா, மற்றும் சோகமான கதையம்சம் நிரம்பிய படம். இசைஞானியின் இசையில் முத்து முத்தான பாடல்கள். பாலுவின் கதாபாத்திரப் பெயர் ARR (A.R. Rangaraj!)  இன்னும் சில சுவாரஸ்ய தகவல்கள் (உதவி கூகுளாண்டவர்). நீ பாதி நான் பாதி (சக்கரவாக ராகத்தில்), தென்றல்தான் பாடல்களை ஜேசுதாஸ் பாடியிருக்கிறார். மண்ணிலிந்த காதலன்றி பாடல் கீரவாணி ராகத்தில் அமைந்ததாம். இந்தப் பாடல் தவிர, படத்தின் மொத்த இசைக் கோர்வைகளையும் உருவாக்க இசைஞானி எடுத்துக்கொண்டது 45 நிமிடங்கள் மட்டுமேயாம்!
வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து என்று ஆண்டாள் பாடலை ஜானகி மனம் நெகிழும் வண்ணம் பாடியிருக்கிறார். இதே பாடலை பாலு அவர் பாணியில் பாடியதும் யுட்யூபில் இருக்கின்றன. ரெண்டையும் ஆயுசு பூராக் கேட்டுக்கொண்டேயிருக்கத் தோன்றும்.
இப்படத்தின் பிரபலப் பாடல்கள் எல்லாம் எனக்குப் பிடித்திருந்தாலும், பாலு ஒரு காட்சியில் இசைப் பின்னணி எதுவும் இல்லாமல், உடைந்த குரலில், கண்ணாடியைக் கழட்டிவிட்டு, "முத்தே என் முத்தாரமே சபையேறும் பாடல் நீதானம்மா.. கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று” என்று சில வரிகள் மட்டுமே பாடிய கற்பூர பொம்மையொன்று பாடல் என்னைப் பல நாட்கள் தூங்கவிடாமல் செய்தது. மனதைப் போட்டுப் பிசைந்தது. இதயத்தில் சொல்லமுடியாத வலியையும், துயரத்தையும் எழுப்பியது.
பாடல்கள் என்றாலே வேகம், அல்லது காதல் என்று விரும்பும் அந்த வயதில் (20) ஏனோ காரணத்தால் இந்தப் பாடல் தான் என் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தது. கற்பூர பொம்மை என்பதை என்ன அர்த்தத்தில் மு.மேத்தா எழுதியிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு அந்தக் கற்பூர பொம்மை நான் மிகவும் நேசிக்கும் குழந்தைகள், பெண்கள், ஆண்களை நினைவூட்டியது. நான் நேசிக்கும், என்னை நேசிக்கும் ஜீவன்களை இழக்க நேரிட்டால் எழப்போகும் தாங்கவொண்ணா வலியைக் கற்பனை செய்ய வைத்தது. இனம்புரியாத தவிப்பை எழுப்பியது. கற்பூரம் எரியாவிட்டாலும் காற்றில் கரையும். அதுபோன்றுதான் மானுட வாழ்வும். நானும், நான் பேரன்பு கொண்ட உயிர்களும் கற்பூரம் போன்று என்றோவொரு நாள் காற்றில் கரைந்துபோகப் போகிறோம் என்ற நிதர்சனத்தை உணர்ந்தாலும் ஏன் இறைவன் இப்படி இவ்வளவு அலகிலாப் பிரேமை கொள்ளச் செய்கிறான் என்று பெரும் ஆதங்கதங்கத்தையும் எழுப்புகிறது கற்பூர பொம்மை.
அன்பையும், நட்பையும், காதலையும் இழப்பதுபோன்று ஒரு கொடுந்துயரம் வேறில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். ஏன் அப்படித் தோன்றுகிறது கேட்டால் என்னிடம் பதிலில்லை.
முழுப்பாடலையும் பி.சுசீலா அருமையாகப் பாடியிருப்பார். ஆனால் என்னைத் தாக்கியது பாலு பாடியிருக்கும் சில வரிகள்.
இந்தப் பாடலை உருவாக்குவதற்கு ஊக்கியாக இருந்தது இரண்டு பாடல்களாம். ஒன்று Albela என்ற படத்தில் ஸி. ராமசந்திரா இசையமைத்த Dheere Se Aaja Ri Ankhiyon Mein என்ற பாடல். இரண்டாவது அன்னை படத்தில் ஆர். சுதர்சனம் இசையமைத்த 'பூவாகி காயாகி’ பாடல்!
இதைப் பாடியது மனதில் கரைபுரண்டு ஓடும் எண்ண அலைகளுக்கு ஒரு வடிகாலாக. எனக்குப் பாட வருகிறதோ இல்லையோ, எனது உணர்வுகளை வெளிப்படுத்த இந்த முயற்சி உதவியது. கூட இணைந்து பாடிய இசை தேவதையாக நான் கருதும் ravpri க்கும் எனது சிரந்தாழ்ந்த வந்தனங்கள்.