Wednesday, August 25, 2004

சுஜாதா - வலைப்பூ - கற்றதும் பெறாததும்

'வந்துட்டான்யா வந்துட்டான்' என்று வடிவேலு ஸ்டைலில் எகிறிக் குதிக்காததுதான் குறை.

பாய்ஸ் படத்திற்காக வாங்கிய சொல்லம்புகளின் காயமே இன்னும் மறைந்திருக்காது. இப்போது உயிர்மை இணையத்தைப் பற்றி எழுதி அப்படியே இணையப் பதிவுகளின் சாராம்சத்தைத் தொட்டுவிட்டு, வலைப்பதிவு/வலைப்பூக்-களைப் பற்றி லேசாக, சுஜாதா விகடன் கற்றதும் பெற்றதும்-இல் எழுதினாலும் எழுதினார். வலைப்பதிவாளிகள் வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பிவிட்டனர்.

சுஜாதா க.பெ.-இல் சொன்னது இரு விஷயங்கள். ஒன்று 'உயிர்மை' போன்று இக்கால கட்டத்தில் ஒன்றை நடத்துவதும் அதன் வெற்றிக்கான சாத்தியங்களும். அதை இப்படிச் சொல்லியிருக்கிறார்:

"வாரப் பத்திரிகைகளில் சினிமாச் செய்திகள் விரிவாகப் படிக்கப்படுகின்றன. யார் கர்ப்பமாக இருக்கிறார்கள்; யார் கர்ப்பமாகப் போகிறார்கள் என்பதெல்லாம் சுவாரஸ்யமான விஷயங்கள். "சங்க இலக்கியத்தில் தாவரங்கள்" என்றால் எஸ்கேப். காதல் கவிதைகளும் மூன்று வரிகளுள்ள ஹைக்கூ என்ற பெயரில் நிகழும் பாவச்செயல்களும் படிக்கப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில் 'உயிர்மை' போன்ற பத்திரிகைகள் உயிர் வாழ்வதே அதிசயம்தான்."

"வலையில் யார் பத்திரிகை படிக்கிறார்கள் என்பது பற்றி எனக்குச் சந்தேகங்கள் உள்ளன. ஹிட் ரேட் ஒரு மாயை. வலையில் என்னைக் கவர்வது அதன் சாஸ்வதம்தான். இன்று வலைக்குள் போட்டுவிட்டால் அது கி.பி.2014 ஆகஸ்டில் கூட யாரோ ஒரு தனியனால் படிக்கப்படலாம். உறைந்த நிரந்தரம் அதன் சிறப்பு. இதனால் வலைப்பதிவுகளை நம் பழங்காலத்துக் கல்வெட்டுகளுக்கு ஒப்பிடலாம்."

இரண்டாவது விஷயம் வலைப்பதிவுகளும் அதன் வாசிப்புகளும். அதைப் பற்றி:

"இப்போது புதிதாக பிலாக்ஸ் என்று வந்திருப்பது ஒரு விதத்தில் சின்ன வயசில் நாங்கள் எல்லோரும் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையின் மறுவடிவம்தான். 'இதோ பார் என் கவிதை' 'இதோ பார் என் கருத்து' 'இதோ பார் உலகுக்கு என் உபதேசம்' என நானும் இருக்கிறேன் நண்டுவளையில் என்று. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப் பிரகடனப் படுத்த கைகளைக் குவித்து ஏதோ ஒரு திசையில் குரல் கொடுத்துவிட்டு, யாராவது பதில் தருகிறார்களா என்று அவரவர் பதினைந்து நிமிஷப் புகழுக்குக் காத்திருப்பதுதான் இது! பிரபஞ்சத்தில் வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இருக்கிறதா என்பதை இப்படித்தான் தேடுகிறார்கள்".

இது அவர் கருத்து. உடனே 'எப்படிச் சொல்லப்போச்சு?' என்று ஏன் இப்படி எதிர்வினைகள் வீசப்படவேண்டும்? அவர் சொன்னது 'தவறு' 'சரி' 'உதிர்த்த பொன்மொழிகள்' என்று வரையறுக்கவேண்டியதில்லை. வலைப்பதிவுகளில் காணப்படும் ஆதாரப் பிரச்சினைகளைப் பற்றிச் சிந்தித்து விடை காண முயல்வது நலம்.

அவர் குறிப்பிட்டுள்ள 15 நிமிட புகழ்-இல் எனக்கு(ம்) உடன்பாடில்லை. பதினாறு நிமிடங்களாவது புகழ் நிலைக்கும் என்று நினைக்கிறேன். சிலவற்றுக்குப் பதினைந்து நிமிடப் புகழ்; சிலவற்றுக்கு 30 நிமிடங்கள்; சிலவற்றுக்கு அதிகபட்சமாக 300 நிமிடங்கள் கிடைக்கலாம். இப்போதைய புகழும், செய்தியும், புதிதாக இன்னொரு புகழும் செய்தியும் வரும் வரையே! கும்பகோணத்து விபத்தன்றுகூட வானொலியில் நேயர் விருப்ப நிகழ்ச்சிகளும் மன்மத ராசாக்களும் ஓடிக்கொண்டிருக்கும் சொரணையற்ற சமூகச் சூழ்நிலை நிலவும் இக்காலகட்டத்தில், நல்ல விஷயங்களுக்கெல்லாம் பதினைந்து நிமிடப் புகழே அதிகம் என்றுதான் தோன்றுகிறது!

ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையிலிருந்த வலைப்பதிவுகள் இப்போது மண்டிக்கிடக்கின்றன. ஒவ்வொன்றும் எத்தகைய உள்ளீடுகளைக் கொண்டிருக்கும் என்று வலைப்பதிவாளிகளுக்கே வெளிச்சம். வாசகர்கள் படும்பாடு கொஞ்சநஞ்சமில்லை. 'புடிக்கலைன்னா அடுத்ததுக்குப் போய்க்கோ' என்று எளிதாகச் சொல்லிவிடலாம். இப்படி ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்து, தேடிப் படிக்கவேண்டுமென்றால், வாசகன் ஆயுள் முழுமைக்கும் வலைப்பதிவுகளில் அலைந்துகொண்டேயிருக்கவேண்டும்.

வலைப்பதிவுகளில் இப்போதிருக்கும் எந்த சஞ்சிகைகளையும் விட மிக நல்ல விஷயங்களும் படைப்புகளும் கிடைக்கின்றன என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இணையத்தில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் தமிழ்க்குழுமங்களிலும் பொக்கிஷங்கள் கிடைக்கின்றன. குழுமங்கள் - குழுமங்களாக இருக்கும் வசதியினால் ஒரே இடத்தில் மேய்ந்து வேண்டியதைப் படித்துக்கொண்டு வேண்டாததைத் தள்ளிவிட்டுக்கொண்டு போவது ஓரளவுக்கு சுலபமாகிவிட்டது. வலைப்பூக்கள்/பதிவுகள் அப்படியல்ல. இதைத்தான் சுஜாதா சொல்கிறார்.

வலைப்பதிவுகள் (Blog) பற்றி, முன்பு ஒரு முறை (29-Dec-03) அவர் அளித்த பதில்:

**blogs are nothing but handwritten magazines and non personal diary entries Searching them is equally tedious There must be a blog selection blog Are there any?**

தற்போது திரு காசி அவர்கள் அமைத்திருக்கும் தமிழ் மணம் Portal (http://www.thamizmanam.com) சுஜாதாவின் பதிலின் கடைசி வாக்கியக் கேள்விக்குத் தகுந்த பதிலாக இருக்கும் என்று நம்புகிறேன். தமிழ் மணம் ஒரு நல்ல ஆரம்பம்.

வலைப்பதிவுகளை/பூக்களை "அறிவியல், தொழில்நுட்பம், விளம்பரவியல்.." என்று காசி அவர்களின் Portal போன்ற ஒரு தளத்தில் 'வகைப்படுத்தப்பட்டு தொகுக்கப்படும் வரை' வாசகர்களுக்கு விஷயங்கள் போய்ச் சேராது. சுஜாதாவின் கருத்துகளில் குறையேதும் இல்லை.

ஒவ்வொருவரும் நூற்றுக்கணக்கான வலைப்பதிவுகளைப் படித்து விஷயமறிந்துகொள்வதென்பது சாத்தியமில்லை. அதே போல் பெரும்பாலான வலைப்பதிவுகள் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் (விளம்பரவியல், தொழில்நுட்பம்) மட்டும் விஷயங்களைக் கொண்டிருக்கவில்லை. தமிழில் நான் படித்தவரையில் வெகுசில வலைப்பதிவுகள் தவிர, பெரும்பாலான வலைப்பதிவுகள் கதம்பமான பல விஷயங்களையே கொண்டிருக்கின்றன. இவை இப்படி "ஒழுங்காக ஒழுங்கற்று" இருக்கும்வரை யார் யாருக்கு விஷயங்கள் போய்ச் சேருகிறது என்றும், எந்த விஷயங்களை எந்த வலைப்பதிவுகளில் போய்த் தேடுவது என்றும் வலைப்பதிவாளிக்கும் வாசகர்களுக்கும் தெரியாமலே போகும்.

வலைப்பதிவுகள் இன்னும் வளர்ச்சியடையும் என்பதில் சந்தேகமில்லை. தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியின் காலகட்டங்களில் வலைப்பதிவும் ஒரு பரிமாணம். டாப், திஸ்கி என்று பஸ்கி எடுத்துக்கொண்டிருந்தபோது யூனிகோடு வந்திருக்கிறது. இணையதளம், இணையக்குழுமம், இப்போது வலைப்பதிவு/வலைப்பூக்கள் - நாளைக்கு இன்னொன்று முளைக்கலாம்.

க.பெ.யில் அவர் சொன்னதன் சாராம்சம் 'இணையத்தின் உள்ளீடுகள் சாஸ்வதம்' என்பதே. இதை வசதியாக விட்டுவிட்டு "(வலைப்)பூக்களைப் பறிக்காதே" - என்று உச்சஸ்தாயியில் பாடுவது தேவையல்ல என்பது எனது கருத்து.

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.

2 comments:

rajkumar said...

சுஜாதா சார் கூறியதை முழுவதுமாக தப்பு என்று சொல்லவில்லை. மேம்பொக்கான க்ருத்து என்பதிலதான் வருத்தம். இதனை சிற்ப்பாக வடிவமக்க ஆலோசனை திரிவித்திருக்கலாம்.

Unknown said...

சுந்தர், அவர் போகிறபோக்கில் சொல்லும் சில கருத்துகளை தான் வேண்டாமென்கிறோம். அவரை போன்ற Reach உள்ள எழுத்தாளர்கள் இப்படி சொல்லுவதால் வலைப்பதிவுகளைப் பற்றிய தவறான அபிப்பிராயங்கள் அதனைப் பற்றி தெரியாதவர்களுக்கு உருவாகும். இதற்கு பதில் அவர் வலைப்பதிவுகளில் உள்ள நல்ல விஷயங்களை சொல்லலாம்.

நம்ம ஊர் உணவகங்கள்ல ஒரு வாசகம் பார்த்திருப்பிங்களே "குறைகளை எங்களிடம் சொல்லுங்கள், நிறைகளை மக்களிடம் சொல்லுங்கள்"ன்னு. அது உணவகங்களுக்கு மட்டுமில்லை, இதுலே கூட பொருந்தும். அப்படி அவர் செய்தால் இன்னும் 100 பேர் தமிழில் புதிதாக வலைப்பதிவார்கள்.