Monday, February 14, 2005

Formula One and WTA Title

Formula One and WTA Title

அரசல் புரசலாக குமுதத்திலும் விகடனிலும் சில கட்டுரைகளில் படித்ததோடு சரி. நடிகர் அஜீத் தயவால் நரைன் கார்த்திகேயனைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்தது. இப்போது 2005 க்ரேண்ட் ப்ரிக்ஸ் ·பார்முலா ஒன்-இல் தமது நாட்டுக் குழுவில் சேர்ந்து பங்குபெற ஜோர்டான் அவரை அழைத்திருக்கிறது. ரேஸ் வீரர்களின் கனவு ·பார்முலா ஒன்-இல் பங்கேற்பது. அதில் பங்கு பெறும் முதல் இந்தியன் நரைன் கார்த்திகேயன். அடுத்த மாதம் நடைபெறும் பந்தயத்தில் அவருடன் ஓட்ட இருப்பது போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ட்டியாகோ மான்ட்டிரோ. இரண்டு ·பார்முலா ஒன் அனுபவமில்லாத ஓட்டுனர்களை ஜோர்டான் தேர்ந்தெடுத்திருப்பது தற்கொலைக்குச் சமானம் என்று ·பார்முலா ஒன்-இல் பழம் தின்று கொட்டை போட்ட போட்டிக்குழு சொல்லிக் கொண்டிருக்கிறது. வெற்றியோ தோல்வியோ அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருப்பதே பெரிய விஷயம்தான்.

நரைன் வெற்றி பெற வாழ்த்துவோம்.

***

கடைசி ஆட்டத்தில் ஏஸ் அடித்து ஜெயித்துவிட்டார் என்று அவரும் ரசிகர்களும் ஆர்ப்பரிக்க, அது ஏஸில்லை என்று கை தூக்கிய நடுவரை டிவி கேமரா மட்டும் கவனித்து ஆட்டத்தைத் தொடர்ந்தபோது, ஒரு நம்பரில் லாட்டரியில் முதல் பரிசு விழாமல் போனது மாதிரி இருந்தது. திரும்ப ட்யூஸ் வந்து - நம்மவர் கிரிக்கெட்டில் கடைசி ஓவர் வரை ஜெயிப்பதாக இருந்து கோட்டை விடுவார்களே அது போல - இவரும் விட்டு விடுவாரோ என்று கவலையாக இருந்தது. நல்ல வேளை விட்டு விடாமல் கேம்-ஐயும் செட்-ஐயும் கைப்பற்றி, முதல் WTA பட்டத்தையும் கைப்பற்றி, இந்திய மகளிர் டென்னிஸ்ஸில் புதிய அத்தியாயத்தையும் எழுதியிருக்கிறார் ஸானியா மிர்ஸா (மிஸ்ரா அல்ல).

அசப்பில் கங்குலியின் தங்கச்சி மாதிரி இருக்கிறார்.

அன்னா கார்னிக்கோவாவை கொஞ்சம் மறந்து ஸானியாவின் படம் இணையத்தில் உலவும் அளவிற்குக் கவர்ச்சியாகவும் இருக்கிறார்.

***

இந்தியாவில் மற்ற அனைத்து விளையாட்டுகளையும் பிருஷ்டத்தின் கீழ் அமுக்கி அமர்ந்து கொண்டிருக்கும் கிரிக்கெட்டின் கால் விரலிடுக்குகள் வழியாக ஸானியாவும் நரேன் கார்த்திகேயனும் எலிக்குஞ்சுகளாக தரிசனம் தந்திருக்கிறார்கள். இனிமேல் நமது விளையாட்டு ரசிகர்களும் மீடியாவும் அரசாங்கமும்தான் மனது வைக்க வேண்டும்.

இந்த ஒரு விஷயத்தில் மட்டும் கிரிக்கெட்டை மட்டும் வெறித்தனமாகக் காதலிக்காமல், மற்ற விளையாட்டுகளையும் காதலிக்கவேண்டும்.

ஆனாலும்....

கிரிக்கெட் வீரர்கள் பணத்தில் புரண்டாலும் தென்னை மட்டை, சணல் பந்து, முள் ஸ்டம்பு வைத்துக் கொண்டு கிராமச் சிறுவர்கள் கூட விளையாட முடிவதால்தான் அது இந்த அளவு பிரபலமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

டென்னிஸ் அதிகமாகச் செலவு பிடிக்கும் சமாச்சாரம். கார் ரேஸ் - கேட்கவே வேண்டாம்.

அதிகப் பட்சம் தேய்ந்து போன சைக்கிள் டயரையும், துருப்பிடித்த ரிம்-ஐயும் தள்ளிக்கொண்டு ஓடும் ரேஸ் தான் நம் சிறுவர்களுக்குச் சாத்தியம். பழைய மோட்டார் சைக்கிள் டயர் அல்லது ஸ்கூட்டர் டயர் வைத்திருப்பவன் தாதா-பணக்காரன்.

நூறு மீட்டர் இடைவெளியில் எதிரும் புதிருமாக நின்று கொண்டு நேர்க் கோட்டில் ஓட்டிக்கொண்டு வந்து மோதச் செய்யும் விளையாட்டு விளையாடியிருக்கிறேன்.

சில சமயம் சைக்கிள் டயரின் விளிம்புக் கம்பி உடைந்திருந்து, அது லொடுக்கு பாண்டி போன்று காற்றில் எட்டு போட்டுக்கொண்டே கொண்டே ஓடி, எதிரே வரும் டயரை ஏமாற்றிவிட்டுச் செல்லும். கிட்டிப்புள், எறிபந்து, பேந்தா போன்ற விளையாட்டுகளுக்கும் யாராவது அவசரமாக உயிர் கொடுத்தால் தேவலை.

எதையோ சொல்ல வந்து நினைவலைகளுக்குத் தாவி விட்டேன்.

நரைன்-க்கும் ஸானியாவுக்கும் வாழ்த்துகள். பாராட்டுகள்.

அன்புடன்
சுந்தர்

No comments: