Friday, February 10, 2006

நளனிடம் பரமார்த்த குருவின் சீடன்!



சமீபத்தில் சக வலைப்பதிவர்கள் நிறைய பேர் சமையல் குறிப்புகள் கொடுத்திருப்பதைப் பார்த்தேன். கோ.ராகவன் (பா.ரா. மாதிரி உங்களைக் கோ.ரா.ன்னு கூப்பிடலாமா?) கூட ஹிண்டி மொசுரு பற்றி எழுதியிருந்தார். அவரே செய்து பார்த்தாரா அல்லது யாராவது மண்டபத்தில் செய்து கொடுத்தார்களா என்பது எம்பெருமானுக்கே வெளிச்சம்! :) என்னே ஆண்களுக்கு வந்த சோதனை என்று நானும் முயற்சிசெய்து பார்த்து யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்ற ஒரே "நல்லெண்ணத்தில்" உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்! முன்பு இதனால் "பலன"டைந்தவர்கள் மரத்தடி நண்பர்கள்! எனக்கு மிகவும் பிடித்த காய்கறி "பாகற்காய்"!! ஆதலால் ஆய்கலைகளில் (தட்டச்சுப் பிழையில்லை) ஒன்றான பாகற்காய் பிட்லை செய்வதெப்படி என்ற இந்தப் பதிவைத் தமிழ்கூறும் நல்லுலகிற்குச் சமர்ப்பிக்கிறேன்.

தேவையான பொருள்கள் (இரண்டு நபர்களுக்குப் பரிமாறுவதற்கு. நிச்சயமாக நான் அந்த இரண்டு நபர்களில் ஒருவனில்லை!)

1. கொத்தமல்லி விதை - 4 டேபிள்ஸ்பூன் (நாலு டேபிளுக்கு எங்க போறது? ஸ்பூன் போறாதா என்று கேட்கும் ஆத்மாக்கள் மேலத்தெரு முக்கு மீட்டிங்கில் வந்து சந்திக்கவும்!)

2. கடலைப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் (ஐயா சாமி. இது நிலக்கடலை இல்லை. சமையலுக்கு உபயோகிக்கும் கடலைப்பருப்பு)

3. மிளகு - 1 டேபிள்ஸ்பூன்

4. மிளகாய் வற்றல் - 6 அல்லது 7 உதிரிகள்

5. தேங்காய் துருவல் - 5 டேபிள்ஸ்பூன்

6. வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

7. எலுமிச்சம்பழம் - பாதி மூடி(பிழியாதது)

8. உப்பு - தேவையான அளவு

9. பாகற்காய் - கால் கிலோ

10. பெருங்காயம் - கால் அல்லது அரை டீஸ்பூன்

11. பேதி மாத்திரைகள் - ஒரு கைப்பிடி (இது யாராவது வேண்டாதவர்களுக்குச் சமைப்பதாக இருந்தால் மட்டும்)

12. தீயணைக்கும் கருவி மற்றும் முதலுதவிப் பெட்டி!

தாளித்துக்கொள்ளத் தேவையான பொருள்கள்:

அ. கடுகு - 1 டீஸ்பூன்

ஆ. உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்

இ. மிள்காய் வற்றல் - ஒன்று

ஈ. கருவேப்பிலை - ஒரு 'ஆர்க்கு'. இதற்கு முதலில் 'கிளை' என்று எழுதினேன். மனைவி முறைக்கவே பயன்பாட்டில் இருக்கும் 'ஆர்க்கு' ('எல்லாம் அவங்களுக்குப் புரியும்')!!

முன்னெச்சரிக்கையாகச் செய்ய வேண்டியவை:

a. டிவி மெகாசீரியல் நேரத்தில் இதைச் செய்யாதீர்கள்.

b. தலையுச்சியில் செருகியிருக்கும் சீப்பை எடுத்துவிடுங்கள்.

c. ஜலதோஷமாக இருந்தால் தற்காலிகமாக பஞ்சு வைத்து மூக்குக் கணவாய்களை அடைத்துக்கொள்ளவும். அப்படியும் அணை உடைந்துவிட்டால், மேற்சொன்ன பொருட்களில் உப்பு தேவையில்லை.

துவரம்பருப்பு - 1 கப் மற்றும் கொத்துக்கடலை ஊறவைத்தது- அரை கப் இரண்டையும் தனித்தனிப் பாத்திரத்தில் வேகவைத்துக் கொள்ளவும்

புளி- ஒரு எலுமிச்சை அளவு எடுத்துக்கொண்டு நீரில் ஊற வைத்துக்கொள்ளவும் (கொட்டை எடுத்ததா எடுக்காததா என்று கவுண்டர் ஸ்டைலில் கேட்கக்கூடாது!)

பாகற்காயை நீளவாக்கில் நறுக்கிக்கொண்டு எலுமிச்சம்பழத்தை அதன்மேல் பிழிந்துகொள்ளவும். மூடியை பத்திரமாக வைத்துக்கொண்டால் உச்சந்தலையில் பின்பு தேய்த்துக் கொள்ள வசதியாக இருக்கும். வெயிட் அ மினிட் ஃபார் 15 மினிட்ஸ்.

1. சிறிய வாணலியில் (சீனாச்சட்டி, கடாய் அப்புறம் இன்னும் என்னென்னவோ பெயர்களில் இதைச் சொல்றாங்கப்பா. சென்னை "பாஷை"லயும் இதுக்கு எதாச்சும் வச்சிருப்பியே கொசப்பேட்டை?) அரை டீஸ்பூன் கடலெண்ணை அல்லது சூரியகாந்தி எண்ணையில் மேற்குறிப்பிட்டுள்ள பொருட்களில் 1 லிருந்து 6 வரைக்கும் உள்ளவற்றைப் போட்டு வறுத்துக்கொள்ளவும் (அதற்கு முன் அடுப்பை பற்றவைத்துக் கொள்ளுங்கள்.. ஹி.. ஹி..)

2. பெரிய வாணலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணையை நடு சென்ட்டரில் விட்டு அதில் பாகற்காயைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும். வதக்கியபின் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி தூவிக்கொள்ளுங்கள். விரல்களில் ஒட்டியுள்ளவற்றை முகத்தில் தடவிக்கொண்டு, சமைத்து முடித்ததும் குளியுங்கள்.

3. புளியை நீரில் கரைத்து வடிகட்டி, புளி நீரை பாகற்காய் இருக்கும் வாணலியில் ஊற்றுங்கள். கொதி நிலை வரும்வரை காத்திருக்கவும்.

4. அதுவரை வெட்டியாக வேடிக்கை பார்க்காமல், வறுத்த பொருட்களை நீர்விட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். விழுதை பாகற்காய் கொதிக்கும் வாணலியில் போட்டுக் கலக்கிக் கொள்ளுங்கள்.

5. வேகவைத்த துவரம்பருப்பையும் கொத்துக்கடலையையும் அதோடு சேர்த்துக் கலக்குங்கள். உப்பைச் சேருங்கள்.

6. இரண்டு நிமிடம் வாணலியை மூடிவைத்துவிட்டு, 'ஹரே ராமா ஹரே க்ருஷ்ணா' ஸ்லோகம் சொல்லுங்கள். அல்லது 'ஸ்ரீராம ஜெயம்' இருபத்தைந்து முறை எழுதுங்கள். அப்புறம் மூடியைத் திறந்து கிளறிவிட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள்.

7. தாளித்துக்கொள்வதற்காக வைத்திருக்கும் பொருள்களை இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணையில் தாளித்துக்கொள்ளுங்கள் (ஸ்பூனிலேயே தாளித்துத் தொலைக்காதீர்கள்).

8. வாணலியில் இருந்து பாகற்காய் பிட்லையை ஒரு பாத்திரத்துக்கு மாற்றிக்கொண்டு அதில் தாளித்ததை சேர்க்கவும்.

மணமணக்கும் பாகற்காய் பிட்லை ரெடி.

இஷ்ட தெய்வத்தை வணங்கிவிட்டு கடைசியாக ஒருமுறை சிரித்துவிட்டு, 'பிட்லை.. வட்லை.. கட்லை.. எட்லை.. சட்லை.. இட்லை' என்று முன்பு எப்போதோ ஆசாத் பாய் எழுதிய கானாவை ஒருமுறை பாடிவிட்டு, பிட்லையை ஒரு பிடிபிடியுங்கள்!

கீழ்க்கண்ட முக்கிய குறிப்புகளை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

1. பாகற்காயை என்றாலே பி.டி.உஷா கணக்காக ஓடும் உங்கள் கணவர் அல்லது (கணவர் சமைக்கும் பட்சத்தில்) மனைவி உங்கள் பின்னாலேயே நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அலைவார்.

2. செய்முறையில் நடுவில் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டு மனக்கலக்கத்துடன் இருந்தால், நீண்ட நாட்களாய் வீட்டில் நங்கூரம் பாய்ச்சியிருக்கும் விருந்தாளிக்குப் பரிமாறுங்கள். ஒருவேளை நீங்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்து தொலைத்திருக்கும் பட்சத்தில், நங்கூரம் மேலும் ஆழமாகக்கூடிய அபாயமும் இருக்கிறாது.

3. அதுவரை நாகரீகமாகச் சாப்பிட்டுப் பழகிய நீங்கள், முதன் முறையாகச் சாப்பிட்டு முடித்தும், தட்டை இன்னும் வழித்து நக்குவீர்கள்!

***

நன்றி: மரத்தடி.காம்

Thursday, February 09, 2006

புதிய பதிவு!



நண்பர்களுக்கு,

எனக்கு இசை என்பது பல சமயங்களில் மருந்தாக இருந்திருக்கிறது; இருந்து கொண்டிருக்கிறது. இசைஞானம் இல்லாவிட்டாலும், மனதை வருடிச் செல்லும் தென்றலாய் அவ்வப்போது வரும் நல்ல திரையிசைப் பாடல்களை ஆழ்ந்து ரசிப்பது வழக்கம். குறிப்பாக திரு. எஸ்.பி.பாலசுப்ரமண்யம் அவர்கள் பாடியது என்றால் நேரங்காலம் பார்க்காமல் கேட்டுக்கொண்டே இருக்கத் தோன்றும். அவரது குரல் மேல் அவ்வளவு பைத்தியம் எனக்கு.
ரசித்ததை மனதுக்குள் வைத்துப் பூட்டிக் கொள்ளாமல் பதிந்துவைக்க வேண்டும் என்று சில நாள்களாய் ஒரு உந்துதல் இருந்தது. அதை இப்போது செயல்படுத்தியாகிவிட்டது. ஆமாம். "பாடும் நிலா பாலு" என்ற பெயரில் ஒரு வலைப்பதிவை ஆரம்பித்திருக்கிறேன்.

வலைப்பதிவின் சுட்டி:
http://myspb.blogspot.com

ஒக்கே ஒக்க ஆல்பத்தைப் போட்டுவிட்டு உலகம் பூராவும் அனைத்து வழிகளிலும் சந்தைப்படுத்திப் பெரும்பணத்தைச் சம்பாதித்துவிட்டு, மீதி நேரம் பூராவும் பழைய புகழ் கஞ்சியையே ஆற்றிக் குடித்துக் கொண்டிருக்கும் சில மேற்கத்திய பாடகர்களின் ரசிககள் என்று சொல்லிக்கொண்டு ஒரு விடலைக் கூட்டமே அலைந்து கொண்டிருக்கிறது நம்மூரில்.

ஏறத்தாழ 36000-க்கும் அதிகமான பாடல்கள்! 39 வருடங்களாகப் பாடிக்கொண்டிருக்கிறார்! பல மொழிகளில்! என்ன மாதிரியான விஷயம் இது!

எப்படி கண்ணுக்கு முன்பாகவே பொக்கிஷங்களாய் எவ்வளவோ இருந்தும் குருடராய் மேலை நாடுகளை ஆவென்று வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கிறோமோ அது போலவே அடக்கமாய் ஆர்ப்பாட்டமேதும் இல்லாது இருக்கும் பாலுவைப் போன்ற நிகரில்லாக் கலைஞர்களைக் கண்டுகொள்ளாமல் சரியான முறையில் நாம் அங்கீகாரம் அளிக்கத் தவறிவிட்டோம் என்று நான் இன்னும் கருதுகிறேன்.

ஒரு வேளை பாலு பெண்ணாய் பிறந்து 18 வயதில் Kiss me Baby one more time என்று அதிரடியாகப் பாடியிருந்தால் இந்நேரம் தலைக்குமேல் தூக்கிவைத்துக்கொண்டு ஆடியிருப்போமோ என்னவோ?

எது எப்படியோ போகட்டும். அவரது குரலின் தீவிர ரசிகன் என்ற முறையில் ஒரு மிக எளிய முயற்சியாக நான் ஆழ்ந்து ரசித்த அவரது பாடல்களைப் பற்றிப் பதிவதே இந்த புதிய வலைப்பதிவின் நோக்கம். இது ஒரு கூட்டு முயற்சியாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். இப்போதைக்கு இந்த வார நட்சத்திரம்
சிவா இணைந்துள்ளார். இன்னும் சில நண்பர்கள் இணைய விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். இந்தக் கூட்டு முயற்சி நல்லபடியாக செயலாக்கம் பெறும் என்று நம்புகிறேன்.

நன்றி.

அன்புடன்
சுந்தர்.

ஆழி சேர் ஆறுகள் முகிலாய் மழையாய் பொழிவது போல்..


ஊடகங்கள் குற்றங்களை மட்டும் பிரதானப்படுத்தி வரும் வேளையில் மனதுக்கு ஆறுதலாய் காணவோ கேட்கவோ எதுவும் கிடைப்பது அரிதாகிவிட்டது. எத்தனை சானல்கள்! எத்தனை செய்தித்தாள்கள். எல்லாவற்றிலும் குற்றச் செய்திகள் அல்லது ஆபாசங்கள்.

இசையாவது ஆறுதலாய் இருக்கிறதா என்றால் தோல் வாத்தியங்கள் காதைக் கிழிக்க ஒளிவிளக்குகள் கண்ணைப் பறிக்க அதிரடியாய் வரும் இசையில் மூழ்கி மூச்சுத் திணறிப் போயிருக்கிறோம். அரிய முத்துகளாய் எப்போதாவதுதான் நல்ல பாடல்கள் கேட்கக் கிடைக்கின்றன.

வலைப்பதிவுகளும் விதிவிலக்கல்ல. மதம் சாதி மொழி என்று எல்லாரும் அடித்துக் கொள்கிறார்கள். இவை தொடர்பான சச்சரவுகளுக்கு கற்றவர்கள் கல்லாதார் என்று பாகுபாடு எதுவும் கிடையாது போலும்!

சண்டை சச்சரவுகளின்றி, சாதி மத வேறுபாடுகளின்றி, "கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டு, கண்களை மூடிக்கொண்டு, மனதைத் திறந்து வைத்து" இனிய முகத்துடன் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வது நடக்க வேண்டும் என்பதே என் கனவு! அது கனவாகவே போய் விடுமோ என்று பயமாகவும் இருக்கிறது.

ஒரு நினைவூட்டலாக, ஒரு காலத்தில் அனுதினமும் பார்த்துக் கேட்டு, மனதை லேசாக்கிய கானத்தைக் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்!

Mile sur(u) mera tumhaaraa
Tooo sur(u) bane hamaraa

sur kee nadhiyaan har disha se
behkee saagar mein mileee

Baadalon ka roop leike
barse halke halke

Mile sur(u) mera tumharaa.. oh...
too sur(u) bane hamaara..

(your) tarang (and) (my) tarang...
ek vat baniye (our) tarang!

Tena sur mele mera sur dena
milke bane ek nava sur da

Mile sur mera tumhara
to sur bane hamaara

Sur ka dariya behke saagar
mein miley

Baadlaan-da roop lehke
Barsanei hole hole....

இசைந்தால் நம்
இருவரின் ஸ்வரமும் நமதாகும்
திசை வேறானாலும்
ஆழிசேர் ஆறுகள்
முகிலாய் மழையாய்
பொழிவது போல் இசை!
நம் இசை.......!

நன்னெ த்வனிகே நிம்ம த்வனியா
சேரிதந்த்தே நம்ம த்வனியா

நா ஸ்வரமு நீ ஸ்வரமு சங்கமமை
மமஸ்வரங் கா அவதரின்ச்சே

எண்டே ஸ்வரமும் நிங்ஙளுடெ ஸ்வரமும்
ஒத்துச் செய்யும் நம்முடெ ஸ்வரமாய்

Tomar shoor modir shoor...
sristi hoouu... hoiko shoor

Tomar moro shoorono milano
shrishti hoo chalo chapano

Maley soor jo taro maro,
bane aapdo soor niralo

Majhya tumchya jultya taara
madhur suranchya barasti dhaara

Sur ki nadiya har disha se
Baadalon ka rooooop leke

barse halke halke

hooo mile sur mera tumhara
toooooo soor bane.... hamaara....

அகலப் பாட்டை வைத்திருக்கும் புண்ணியாத்மாக்கள் இங்கே சுட்டினால் MIT மாணவர்கள் இந்தப் பாடலை வைத்து படமாக்கியிருக்கும் அருமையான ஒளிக்கோப்பைப் பார்க்கலாம்.

ஒலிக்கோப்பு இங்கே!

இசைவோம்.. இசைந்திருப்போம்... இந்தியராக!

ஜெய்ஹிந்த்!

***

(Bad) பாய்ஸ் படத்துக்கு விகடன் விமர்சனம்!

(Bad) பாய்ஸ் படத்துக்கு விகடன் விமர்சனம் (எழுதினால்?)

Friday, February 03, 2006

பழிவாங்கப்படும் விலங்கினச் சேர்க்கையாளர்கள்..

செல்வனின் இந்தப் பதிவைப் படித்ததும் எதிர்காலத்தில் இப்படியும் கூட செய்திகள் / பதிவுகள் வரலாம் என்று தோன்றியது (இது ஒரு கற்பனை: No offense meant.. :))



யுடா மாநிலம் 2030ல் விலங்கினச் சேர்க்கையாளர்களுக்கு முழு திருமண உரிமை அளித்தது. உடனடியாக அமெரிக்காவின் 37 மாநிலங்கள் அவசர அவசரமாக விலங்குத் திருமணங்களுக்கு அனுமதி மறுத்து டோஹ்மா ( Defense of human marriage act) என்ற சட்டத்தை இயற்றின. மனிதர்களுக்குள் (ஆணும் ஆணுமோ, ஆணும் பெண்ணுமோ. பெண்ணும் பெண்ணுமோ) மட்டும்தான் திருமணம் நடக்க வேண்டும் என்ற இந்த பிற்போக்கு சட்டம் இன்னும் பல மாநிலங்களில் அமுலில் இருக்கிறது.

மேற்கத்திய நாடுகள் பலவும் இதுபோல் பிற்போக்குத்தனமான சட்டங்களை ஒழித்துக் கட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

விலங்குகளுடன் உறவு கொள்வதற்கு சட்ட பூர்வ அனுமதி பிரான்ஸ், ஸ்கான்டினேவியா, பிரிட்டன், நியுஸிலாந்து, செக், நெதெர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் வழங்கப்படுகிறது. விரைவில் இந்த நாடுகளில் மனித-விலங்குத் தம்பதிகளுக்கு முழு திருமண உரிமையும் வழங்கப்படக்கூடும்.

ஐரோப்பிய யூனியன் 2030 சார்ட்டரின்படி விலங்குகளுடன் சேர்க்கையும், விலங்குகளுடன் திருமணமும் ஒரு மனிதனின் அடிப்படை சுதந்திரமாக அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. தனிமனிதனின் படுக்கையறையில் மூக்கை நுழைக்க இனி ஐரோப்பாவில் எந்த அரசுக்கும் உரிமை இல்லை.

இப்படி ஐரோப்பா முன்னேற்றப் பாதையில் செல்ல அமெரிக்கா இன்னும் 20ம் நூற்றாண்டின் சட்டங்களையே வைத்துக் கொண்டு இருக்கிறது. இல்லினாய் உட்பட 15 மாநிலங்களில் விலங்குகளுடன் சேர்க்கையே தண்டிக்கபடக் கூடிய குற்றமாக இருக்கிறது. ஐரோப்பாவில் 20ம் நூறாண்டிலேயே விலங்குகளுடன் சேர்க்கையை குற்றப் பட்டியலிலிருந்து எடுத்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலராடோ 2012ல் 53% மெஜாரிடியோடு தனது விலங்குச் சேர்க்கை குடிமக்களுக்கு சம உரிமை வழங்கும் சட்டத்தை ரத்து செய்தது. 2009ல் மய்னும் அதே போல் ஒரு பிற்போக்கு சட்டத்தை இயற்றியது. கலிபோர்னியா போன்ற லிபெரல்கள் ஆளும் மாநிலம் கூட 2010ல் இம்மாதிரி சட்டம் போட்டது என்றால் மனித உரிமை அங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்று கேட்டால் முதலில் விலங்கினச் சேர்க்கையாளர்கள் விரல் நீட்டுவது ரிபப்ளிக்கன் கட்சியைத் தான். அபார்ஷனுக்கு அனுமதி மறுப்பு, விலங்குகளுடன் திருமணத்துக்கு தடை விதிப்பு, குளோனிங் செய்யத் தடை விதிப்பு, பரிணாமவாதத்தை பள்ளிகளில் பயிற்றுவிக்க தடை விதிப்பது போன்ற பிற்போக்கு நடவடிக்கைகளை ஆதரிப்பதில் இவர்களுக்கு அவ்வளவு ஆனந்தம்.

அமெரிக்காவில் இப்படி என்றால் இந்தியாவில் நிலமை மிக கேவலமாக உள்ளது. இன்னும் 19ம் நூற்றாண்டு பிரிட்டிஷ் சட்டங்களை வைத்துக் கொண்டு டில்லி போலிசார் சமீபத்தில் 4 விலங்கினச் சேர்க்கையாளர்களை கைது செய்தனர் (அவர்களின் துணையாக இருந்த நான்கு ஆடுகளும் பறிமுதல் செய்யப்பட்டன). சில நாடுகளில் இவர்களுக்கு திருமண அனுமதியே வழங்கப்படுகிறது. சில நாடுகளில் திருமன உறவுக்கு அனுமதி இல்லையென்றாலும் விலங்கினச் சேர்க்கை குற்றமல்ல. இந்தியாவில் விலங்கினச் சேர்க்கையே தண்டிக்கபடக் கூடிய குற்றமாக இன்னும் இருக்கிறது.

அமெரிக்க மனநல மருத்துவர் சங்கம் விலங்கினச் சேர்க்கை மன நோயல்ல, வியாதியல்ல, மனிதனின் இயற்கையான பழக்கம் என்று எப்போதோ சொல்லிவிட்டது. அமெரிக்க அரசாங்கத்தின் காதுகளிலேயே அது இன்னும் ஏறவில்லை. இந்திய அரசாங்கத்தின் காதுகளில் ஏறுவது எப்போது?

***

Thursday, February 02, 2006

தீவிரவாதத்தை நிறுத்த முப்பரிமாணத் திட்டம்!

courtesy : www.google.com

நமது முதற் குடிமகன் உலகளவில் தீவிரவாதத்தின் வேர் எது என்றும், அதை தடுத்து நிறுத்துவது எப்படி என்பதைப் பற்றியும் தெரிவித்த கருத்துகள்:



"நீண்ட வரலாறு கொண்ட சில குறிப்பிட்ட பிரச்னைகளில் இருந்து தான் தீவிரவாதம் உருவெடுப்பதாக நினைக்கிறேன். இதில் வறுமையும் அடக்கம். வறுமை இருக்கும் வரை, தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் காரணிகளும் இருப்பதை உணரலாம்.

உலகளவில் படர்ந்து அச்சுறுத்தும் இந்த தீவிரவாதத்தை சமாளிக்க மூன்று பரிமாணங்கள் கொண்ட முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

  • முதலாவது, அனைவருக்கும் தரமான கல்வி வழங்குதல்;
  • இரண்டாவது, மத அமைப்புகளின் செயல்பாடுகளை ஆன்மிக சக்தியாக மாற்றுவது;
  • மூன்றாவது, வறுமை ஒழிப்பு.

ஒருங்கிணைந்த முறையில் இவற்றை மேற்கொண்டால் நீண்ட காலத்துக்கான தீர்வு நிச்சயம் கிடைக்கும்."

நன்றி: தினமலர்.காம்

கருத்து நன்றாகத்தான் இருக்கிறது. இதைப் "பெரியண்ண"னுக்கும் யாராவது சொன்னால் நன்றாக இருக்கும்.

ஒருவன் செய்தால் குற்றம் அல்லது பழிக்குப் பழி!

ஒரு கும்பல் செய்தால் அது தீவிரவாதம்!

ஒரு இனமே செய்தால் அது புரட்சி; போராட்டம்!

ஒரு நாடே கிளர்ந்தெழுந்தால் அது யுத்தம். போர்!

பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்தான். ஆனாலும் தீவிரவாதத்தைக் கல்வியின்மை, வறுமை, அடிப்படை வாதம் போன்ற பரிமாணங்களுக்குள் மட்டும் அடக்கிவிட முடியுமா என்று தெரியவில்லை. அதன் வேர்கள் ஏகத்துக்கும் எல்லாவிடங்களிலும் ஊடுருவியிருக்கின்றன. நன்கு படித்த, வறுமையில்லாத தீவிரவாதிகளும் எங்கெங்கும் இருக்கின்றனர்.

சிலர் கோட் சூட் மாட்டிக்கொண்டு தற்காப்பு நடவடிக்கை என்ற போர்வையில் பண, படை பலங்களை வைத்துச் செய்யும் Official Terrorism-யும், செயற்கைக்கோள் தொலைபேசியிலிருந்து எல்லாவித நவீனங்களையும் கையில் வைத்துக்கொண்டு உலகளாவிய அமைப்பாக இயங்கும் கும்பல்களையும் எந்த வகையில் சேர்ப்பது? எது இவர்களைத் தூண்டுகிறது?

சுலபத்தில் தீர்வு கண்டுவிடமுடியாத பிரச்சினை இது. இருந்தாலும் திரு. கலாம் அவர்கள் மொழிந்துள்ள இந்த முப்பரிமாணங்கள் நல்ல தொடக்கமாக இருக்கும்.

அதுவரை உயரமான கட்டிடங்களில் வேலைசெய்ய நேரும்போது ஜன்னல் வழியாக விமானம் எதுவும் வருகிறதா என்று பார்த்துக்கொள்ளலாம். வீட்டில் அணு உலை வைத்துச் சமையல் செய்யாதிருக்கலாம்.

***