Tuesday, May 09, 2006

நீர் மூழ்கி மந்திரவாதி!


நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போதே கையில் இருக்கும் கோழியின் தலையை மட்டும் சட்டெனத் தனியே எடுத்துக் காட்டுவார். தலை மட்டும் கொக்கொக்கென சத்தமெழுப்ப பாதசாரிகள் மிரண்டு ஓடுவார்கள்.

கையில் இருக்கும் திருமண மோதிரத்தைக் கழற்றித் தரச் சொல்லிக் கையில் வாங்கிப் பார்த்த்துக் கொண்டிருக்கும் போதே நழுவவிட அது கீழே தரையில் பதிக்கப்பட்டிருக்கும் பாதாளச் சாக்கடை கம்பி மூடி வழியாக உள்ளே விழுந்துவிட மோதிரத்தைக் கொடுத்தவர் அதிர்ச்சியில் அலறுவார். இவர் சாவதானமாக நடந்துபோய் ஓரமாகக் கிடக்கும் காலி குளிர்பான பாட்டிலை எடுத்துக் காட்ட அதனுள்ளே மோதிரம் கிடக்கும் - பாட்டிலின் கழுத்தைவிட அளவில் பெரிய மோதிரம்!

சீட்டுக்கட்டை வைத்துக்கொண்டு செய்யும் மாயாஜாலங்களுக்கு அளவே கிடையாது.

எதிர்படும் ஒருவரை நிறுத்தி அவரை அவருக்குப் பிடித்தமானவரை நினைத்துக் கொள்ளச் சொல்லி, அவரது கண்களை ஊடுருவிப்பார்த்து "அவர் உங்களுக்கு வேண்டியவர்" என்று மெதுவாகச் சொல்லி, அவரது பெயரையும் சொல்ல, மனதில் நினைத்துக்கொண்டவர் நம்பமுடியாது இவரைப் பார்க்க, கடந்து செல்லும் டாக்ஸியின் இடுப்பில் நினைத்துக்கொண்ட நபரின் பெயர் எழுதப்பட்டிருக்கிறது.

திரும்பி நின்றுகொள்ள அவரது உடல் அந்தரத்தில் எழுந்து காற்றில் சில வினாடிகள் நிற்கிறது.

அவர்தான் டேவிட் ப்ளேன்


மேடையில் ஒளி வெள்ளத்திற்கிடையே கண்சிமிட்டும் நேரத்தில் என்னென்னவோ வித்தைகள் செய்யும் மாஜிக் நிபுணர்களுக்கு மத்தியில் டேவிட் ப்ளேன் வித்தியாசமானவர். இருட்டில் செயற்கை வெளிச்சத்தில் மேடையின் மீது தொலைவில், ஏகப்பட்ட உடையலங்காரங்களோடு இல்லாமல், பட்டப் பகலில் தெருவில் சாதாரணமாக ஒரு பாதசாரி போன்று உடைகளுடன் வந்து வெறுங்கைகளைக் கொண்டு இவர் செய்யும் வித்தைகள் நம்ப முடியாதவை. அதிலும் சீட்டுக்கட்டை வைத்துக்கொண்டு இவர் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை. எந்த வித லாஜிக்கும் இல்லாத பிரமிக்க வைக்கும் வித்தைகள்.

வித்தைகளோடு இவர் நிறுத்திக்கொள்ளவில்லை. உடல் வருத்தும் மிகுந்த துன்பத்தை ஏற்படுத்தும் உயிருக்கே உலை வைக்கக் கூடிய சாகஸங்களையும் அவ்வப்போது செய்து ஊடக கவனத்தைப் பெறுவது இவர் வாடிக்கை. (நம்மூர் Hussaini நினைவுக்கு வருகிறாரா?)

லண்டனின் தேம்ஸ் நதி மீது ஒரு கூண்டில் 44 நாட்கள் அன்ன ஆகாரமின்றி இருந்தார்.


துருவப் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட இயற்கையாக உருவான பனிக்கட்டியைக் குடைந்து அதற்குள் மேலாடையின்றிப் 61 மணி நேரம் இருந்தார். நமக்கு ஐந்து நிமிடங்களில் எல்லாமே விறைத்துப்போயிருக்கும்!

நேற்று நியூயார்க் நகரின் கொலம்பஸ் 9-வது அவன்யூவில் ஒரு சாகசத்தை நிகழ்த்திக்காட்ட முயன்று தோல்வியடைந்து கண்ணீருடன் விடைபெற்றுச் சென்றார். அவர் முயன்றது நீரில் மூச்சடக்கி அதிக நேரம் இருந்து உலகசாதனை புரிவது. ஏற்கெனவே இருக்கும் உலக சாதனை நேரம் 8 நி. 58 வினாடிகள்.


பெரிய கண்ணாடிப் பந்து போன்ற ஒன்றில் முதலில் கழுத்தளவு நீர் நிரப்பி உள்ளே அவர் நின்று கொள்ள, இரண்டு கைகளும் கால்களும் விலங்கிடப்பட்டிருக்க, கடைசியாக வாயைக் குவித்து மூச்சை நன்றாக இழுத்துக்கொள்ள, இன்னும் நீர் நிரம்பி அவரை மூழ்கடிக்கிறது. உள்ளடங்கிய வயிறுடன், கண்களை மூடி டேவிட் நிற்க, வினாடிகள் நகர்கின்றன. சுற்றிலும் பார்வையாளர்கள் குரலெழுப்பி கரகோஷத்துடன் உற்சாகப்படுத்துகிறார்கள்.

வெளியே பயிற்சியாளர் Kirk Krack டேவிட்டுடன் பேசிக்கொண்டே அவரை உற்சாகப்படுத்துகிறார். வினாடிகள் நிமிடங்களாக ஓட அவ்வப்போது டேவிட்டை ஏதாவது செய்கைகள் செய்யச் சொல்லி - அவர் சுயநினைவோடு இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறார். இரண்டு நிமிடங்கள் கடந்ததும் ஒரு பூர்ண அமைதி தவழ கண்களைத் திறந்து நிலைகுத்திய பார்வையுடன் சில வினாடிகள் டேவிட் பார்த்தார் பாருங்கள். அந்தக் களையை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை.

நான்கு நிமிடங்களாகின்றன. டேவிட் கண்களை மூடியிருக்கிறார். ஐந்து நிமிடங்களாகியதும் கைகளை விடுவித்துக் கொள்கிறார். ஆறு நிமிடங்களாகின்றன.


அவர் முகத்தில் வேதனை தெரிய ஏழாவது நிமிடத்தில் அவர் தவித்துப் போராடுவது தெரிய வெளியே காத்திருக்கும் இரண்டு திறமை வாய்ந்த Divers உள்ளே குதிக்கின்றனர். ஒருவர் டேவிட்டின் வாயையும் மூக்கையும் இறுக மூடிக்கொள்ள - இல்லாவிட்டால் டேவிட் அடக்கிய மூச்சை வெளியேற்றி நீரை உள்ளிழுக்க, நுரையீரலில் உடனடியாக நீர் நிரம்பி உயிருக்கு ஆபத்தாகிவிடும் - இன்னொருவர் அவரது கால்களை விடுவிக்க, மேலே தூக்கி அவரது தலையை நீர்மட்டத்திற்கு மேலே கொண்டுவந்து விட, இன்னும் இருவர் வெளியே நின்றுகொண்டு அவரை வெளியேற்றினர்.

முயற்சி தோல்வி! மொத்தமாக நீருக்குள் அமிழ்ந்திருந்த நேரம் 07:08 நிமிடங்கள்!


இச்சாதனை முயற்சிக்காக ஒருவார காலமாக அந்த எட்டடி உயர நீர் நிரம்பிய உருண்டைப் பந்தில் வாழ்ந்திருக்கிறார். உடலில் கட்டப்பட்ட 150 பவுண்டு எடையுள்ள சங்கிலிகளை விடுவித்துக் கொண்டுவிட்டாலும் ஏழுநிமிடங்களுக்கு மேல் தாக்குபிடிக்க முடியவில்லை அவரால். கண்ணீர் வழிய உற்சாகப்படுத்திய ரசிகர்களுக்கு நன்றி கூற - ஆமாங்க சுயநினைவோடுதான் இருந்தார் மனுஷன்! - அவரை மருத்துவ சோதனைக்கு அழைத்துச் சென்றனர்.

நம்மூர் முத்துக் குளிக்கும் நபர்களுக்குச் சரியான பயிற்சியும் வசதிகளும் கிடைத்தால் ஆளாளுக்குச் சாதனை செய்து காட்டிவிடுவார்களே என்ற எண்ணமும் எழாமலில்லை.

***

2 comments:

PRABHU RAJADURAI said...

தேன்கூட்டில் 'நம்ம' சுந்தரைப் பற்றி வாசித்தேன்...வாழ்த்துக்கள்!

Sundar Padmanaban said...

பிரபுஜி.

ரொம்ப நாளாச்சு ஆளையே காணோம். மடலுக்கு நன்றி. உங்க மடலைப் பாத்ததும்தான் தேன்கூட்டுல போட்ருக்காங்கன்னு தெரிஞ்சது. நன்றி.

மரத்தடிக்கு வரேன் ஓரிரு வாரங்கள்ல.