Thursday, September 18, 2008

மூன்று வருடங்களுக்குப் பிறகு # 4

அபார்ட்மெண்ட் வீட்டுக்குள் நுழைந்து தொலைக்காட்சியின் ஒலியளவைக் குறைத்தும் இன்னும் சத்தம் அதிகமாக இருக்கக் கவனித்தால் சத்தம் பக்கத்து வீட்டிலிருந்து வந்துகொண்டிருந்தது. எதிர் வீட்டில் வேறு ஒரு சானல் பார்க்கிறார்கள் போல - அதையும் எங்கள் வீட்டிலேயே கேட்க முடிந்தது. 'பக்கத்து வீட்டுல வயசானவங்க - காது சரியாக் கேக்காது' என்று அவ்வளவு அதிக ஒலியளவிற்கு விளக்கம் சொன்னார்கள். இரண்டு வீடுகளிலும் ஒரே சானல் ஓடும் பட்சத்தில் எங்கள் வீட்டில் ஒலியைச் சுத்தமாகக் குறைத்துவிடுவார்களாம்!

கிட்டத்தட்ட இருபது இருபத்தைந்து வருடங்களில் அதிவேகத்தில் காற்று மாசடைந்து வருவது தெரிந்த சங்கதிதான். இம்முறை நான் இருந்த நாட்களில் கவனித்தது ஒலியினால் ஏற்படும் அதிக இரைச்சல் - Noise Pollution. பொதுவாகவே எல்லாரும் உரக்கத்தான் பேசுகிறார்கள். யாரிடமும் பேச்சுக்கொடுத்தாலும் இரண்டு வாக்கியங்களுக்கு மேல் தாங்காது நாசூக்காக மெதுவாகப் பேசச் சொல்ல வேண்டியிருந்தது. சாதாரணமாக இருவர் பேசிக் கொண்டிருந்தாலும் பார்ப்பதற்கு உரத்து வாய்ச் சண்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று நினைக்குமளவிற்குச் சத்தமான பேச்சு. இது காது மந்தத்தில் கொண்டு விடும் - விட்டிருக்கிறது. எந்தக் குழந்தையிடம் எதைக் கேட்டாலும் முதல் முறையிலேயே பதில் வருவதில்லை. 'ம்?' அல்லது 'ஆ?' என்று பதில் கேள்வி - நான் முதலில் கேட்டதை இன்னும் நிதானமாக மறுபடியும் கேட்க பதில் சொன்னார்கள். சிலது என்னருகில் வந்து நிஜமாகவே காதைக் காட்டி 'என்ன கேக்கறீங்க?' என்றதில் ஆடிப்போய்விட்டேன். மெள்ளமாக உருவாகிவருகிறது செவிடாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தலைமுறை.

தசாவதாரத்தை பாஸ்டனில் வெளிவந்த நாளன்றே பார்த்துவிட்டேன். நம்மூரில் திரையரங்கத்திற்குச் சென்று வருடக்கணக்காகிறதே என்று திருவானைக்கோவில் இருக்கும் திரையரங்கத்திற்கு 20 டிக்கெட்டுகள் வாங்கி மொத்த குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு சென்றேன். திரையரங்கம் பக்கமே 20-30 வருடங்களாக வந்திராத என் தந்தையையும் 'பெருமாள் படம் முழுக்க வர்றாரு' அழைத்துச் செல்ல அவர் படம் முழுதும் காதுகளை அழுந்த மூடிக்கொண்டு பார்க்க நேர்ந்தது. அவ்வளவு அதிபயங்கர ஒலியளவை வைத்திருந்தார்கள். நாங்கள் அமர்ந்திருந்தது Box-இல். Sound Effects என்பதை தப்பாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாக இம்மாதிரி திரையரங்குகளில் அதிக ஒலியளவில் நான்கைந்து முறை பார்த்தாலே காது மந்தமாகிவிடுவது நிச்சயம். நல்லவேளை அந்த அரங்கத்தில் படத்தில் ஆழ்ந்து இருக்கையில் ஏஸியை அணைத்துவிடவில்லை.

வாகன ஓட்டிகள் ஓயாது ஒலிப்பானை ஒலித்துக்கொண்டே இருக்கிறார்கள். கிளம்பும்போது பீங்க். பின்பு சாலையில் செல்கையில் பீங்க் பீங்க். சிக்னலில் பீங்க். முன்னால் வண்டி போனால் பீங்க். நின்றால் பீங்க். நகர்ந்தால் பீங்க். செல்லுமிடம் சேர்ந்ததும் பீங்க். வீட்டிலுள்ளவர்களுக்கு வந்ததைத் தெரிவிக்க பீங்க். வண்டியே ஓட்டாமல் சும்மா உட்கார்ந்திருந்தால் அவர்களது விரல்கள் காற்றில் ஒலிப்பானை அமுக்கிக் கொண்டேயிருக்கின்றன. இப்படி ஆயிரக்கணக்கான வாகனங்கள் அல்லும் பகலும் ஒலிப்பானை ஒலித்துக்கொண்டு இருந்தால் பாம்புக்கும் காது இப்போதெல்லாம் மந்தமாகியிருக்கும்! எதையாவது சொன்னால் 'ஆ ஊ ன்னா அமெரிக்கா ஆப்பிரிக்கான்னு அலட்டிக்கிறான்யா' என்று சொல்லிவிடுவார்கள் என்பதால் தயங்கியே இருக்க வேண்டியிருந்தது. வரையறையற்ற சாலைப்போக்குவரத்தில் எவ்விதகளும் கடைபிடிக்கப்படாமல் சர்க்கரையைக் கண்ட பிள்ளையார் எறும்புகளைப்போல வாகனங்கள் எல்லாத் திசைகளிலும் பறக்கின்றன. விபத்துகள் அனுதினமும். மக்கள் கொத்து கொத்தாகச் சாகிறார்கள். இதைப்பற்றி எந்த மசிரான்களும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

மாம்பழச் சாலையைத்தாண்டி காவிரிப்பாலத்தில் நண்பனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்க நடுப்பாலத்தில் இருக்கும்போது எதிர் திசையில் வந்த காரோட்டி என்ன செய்தார் என்பதைக் கீழே பாருங்கள்! இம்மாதிரி இருந்தால் ஏன் விபத்து நடக்காது?



உயிரைக் கையில்பிடித்துக்கொண்டுதான் சாலையில் இறங்க வேண்டியிருக்கிறது. ஆனால் என்னைத்தவிர எல்லாரும் சாதாரணமாகத்தான் போய் வந்துகொண்டு இருக்கிறார்கள். எல்லாருக்கும் பழகிவிட்டது. நான் அங்கு இருந்தால் ஓரிரு மாதங்களில் எனக்கும் பழகிவிடும். ஆனால் ஏன் இப்படி இருக்கவேண்டும்?. முன்பு இருந்ததை விட சாலைகள் எல்லா இடங்களிலும் இப்போது நன்றாகவே இருக்கின்றன. திருச்சியிலிருந்து மதுரைக்கு அனைத்து சாலை வேலைகளையும் மிஞ்சி இரண்டரை மணிநேரத்தில் சென்றுவிடமுடிகிறது. சாலை வேலைகள் நிறைவு பெற்றால் ஒன்றரை மணிநேரத்தில் சென்றுவிடலாம். திருச்சியிலிருந்து சென்னைக்கு ஐந்து அல்லது ஆறரை மணிநேரத்தில் சென்றுவிட முடிகிறது. முன்பெல்லாம் 8-9 மணி நேரம் ஆகும்.

பிரச்சினை அதிக அளவிலான வாகனங்கள். அதையும் மிஞ்சி முறைப்படி ஓட்டாத, ஓட்டக் கற்றுக்கொள்ளாமல் ஓட்டுனர் உரிமத்தை 'வாங்கி' வண்டியோட்டும் பொது ஜனங்கள். சாலைவிதிகளின் அடிப்படை அறிவுகூட பெரும்பாலானோரிடம் இல்லை. எல்லாரும் ஒரே ஒரு விதியைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். அது "முன்னால் செல்லும் வாகனம் - சிறிதோ, பெரிதோ - அதை உடனடியாக முந்திச் செல், பின்னால் வருபவனுக்கு வழிவிடாதே" என்பதுதான். இந்தியச் சாலைகளின் போக்குவரத்தைப் பற்றி ஏகப்பட்ட நகைச்சுவைத்துணுக்குகள், ஒலி, ஒளித் துணுக்குகள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால் அவற்றைப் பார்த்துச் சிரிக்க முடியவில்லை. அவமானமாகத்தான் ஒவ்வொருமுறையும் உணர நேரிடுகிறது. 'ஏழை நாடு' 'வளரும் நாடு' என்று நிரந்தரமாக ஜல்லியடிப்புகளைச் செய்துகொண்டே குட்டிச்சுவராக விட்டுக்கொண்டிருக்கிறார்கள். RTO அலுவலகம் என்றொரு செவ்வாய்கிரம் இருக்கிறதே - அங்குதான் பிரச்சினையின் ஊற்று துவங்குகிறது. ஓட்டுனர் உரிமத்திற்கான தேர்வுகளைக் கடுமையாக்கி அதில் முறைப்படித் தேர்ச்சியடைந்தவர்களுக்கு மட்டுமே உரிமம் என்பதைக் கடுமையாக அமல்படுத்தினாலே சில வருடங்களில் முன்னேற்றம் கண்டுவிடலாம் என்பதை நான் தீவிரமாக நம்புகிறேன். அங்கு செல்லாமலே இடைத்தரகர்களிடம் பணம், போட்டோ, கையெழுத்து என்று கொடுத்து உரிமத்தை வாங்கும் நிலை வேரறுக்கப்படவேண்டும். இதை ஒழுங்காகச் செய்து சாலைப் போக்குவரத்தைக் கடுமையாகக் கண்காணித்து சரிப்படுத்தினால் முன்னேற்றம் நி்ச்சயம்.

சாக்கடையாக இருந்த சத்திரம் பேருந்து நிலையம் இப்போது எவ்வளவோ பரவாயில்லை. சாலையை நன்றாக அகலப்படுத்தியிருக்கிறார்கள். முன்பே சொன்னது போல சாலைகள் பிரமாதமாகவே இருக்கின்றன. ஆனால் போக்குவரத்து. நிறுத்தங்களில் நிறுத்தாமல் ஆங்காங்கே சாலையில் நிறுத்தப்படும் பேருந்துகளால் நெரிசல் ஏற்படுகிறது. கேமராவில் கண்காணித்து, ஒலிபெருக்கியில் அவ்வப்போது வாகன ஓட்டிகளை எச்சரித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின், காவலர்களின் பணி மிகவும் பாராட்டத்தக்கது. நடுச்சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆனால் அவர்களுக்குத் தேவையான அதிகாரங்களும், கருவிகளும், வசதிகளும் குறைவாக இருக்கும்போது வாகன ஓட்டிகள் அவர்களை மதியாது செல்லும் போக்கு பரவலாகக் காணப்படுகிறது. இதைப்பற்றி விவரிக்க ஆரம்பித்தால் இக்கட்டுரை பாதை மாறி வேறெங்கோ சென்றுவிடும் என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

ஒழுங்காகச் சாலை விதிகளை மதித்து ஓட்டினால் இவ்வளவு 'பீங்க்' தேவையில்லை - ஏன் தேவையே இல்லை. எனது 10 வருட வெளிநாட்டு அனுபவத்தில் அதிக பட்சமாக பத்து முறைக்குள்ளேதான் ஒலிப்பானை உபயோகித்திருப்பேன் - அதுவும் மற்ற ஓட்டுனர்களை ஏதாவது விஷயத்துக்காக எச்சரிக்கத்தான். இதைப்பற்றி விவாதித்து நேரத்தை விரயம் செய்து கடைசியில் நண்பனை உட்காரச்சொல்லிவிட்டு ஸ்ரீரங்கத்திலிருந்து ஜங்ஷனுக்குச் சென்று திரும்ப வீட்டுக்கு வரும்வரை ஒரு முறை கூட ஒலிப்பானை ஒலிக்காது ஓட்டிச் சென்று வந்து காட்டியதும்தான் அவன் யோசிக்க ஆரம்பித்தான்.

இன்னும் வரும்....

மூன்று வருடங்களுக்குப் பிறகு # 3

ரிங் டோன் என்ற இம்சை போதாதென்று யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்று காலர் டோன் என்று ஒன்றை வைத்திருக்கிறார்கள். கைப்பேசியில் காலர் டோனும் ரிங்டோனும் சினிமாப் பாடல்களை வைத்துக்கொள்ளாதவர்கள் கற்காலத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் மட்டுமே. 'பேரக்கேட்டா அதிருதுல்ல' என்பதிலிருந்து 'You're the south end of the north side facing horse' என்பது வரை பல்வேறு காலர் டோன்கள் - அழைப்பவர் காலரைப் பிடித்து யார்ரா என்னைக் கூப்பிர்ரது என்று கேட்பது போல இருந்தது சிலவற்றைக் கேட்க. பால்ய நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் மத்தியில் இருந்த டேபிளில் இருந்த காப்பிக் கோப்பைகளின் எண்ணிக்கையில் கைப்பேசிகளும் இருந்தன. திடீரென்று நாய் குலைக்கும் சத்தம் கேட்க ஒருத்தன் அவனது போனை லாவிக்கொண்டு 'வீட்லருந்துடா' என்று சொல்லிவிட்டு வாயருகில் கையை வைத்துக்கொண்டு பவ்யமாகப் பேசிக்கொண்டே எழுந்து அறையைவிட்டு வெளியே சென்றான். பெரிசுகள் கந்த சஷ்டி கவசமும் சுப்ரபாதமும் வைத்துக்கொண்டிருக்கின்றன.

சிலரை அழைத்தால் முழுப்பாடலே ஓடுகிறது. ரீமிக்ஸ்ஸே இல்லாத அசல் 'பொதுவாக என் மனசு தங்கம்' என்று மலேசியாவின் கணீர்க் குரல் பாடலைக்கூட இளைஞர்கள் வைத்திருக்கிறார்கள். குழந்தையின் குரல், காதலி சிரிப்பது என்று வித்தியாசமான காலர் டோன்கள். சுவாரஸ்யமாக இருந்தாலும் சில நேரங்களில் மகா இம்சை. தொலைபேசியில் இண்ட்டர்வ்யூ செய்வதற்காக விண்ணப்பித்தவரை அழைத்தாலும் முழுப்பாடல் ஒலித்ததும்தான் 'அலோ யாருங்க' கேட்கிறது. எரிச்சல்! 1980-களின் இறுதியில் வேலை தேடி நிறுவனங்களை எம்மாதிரி அணுகவேண்டியிருந்தது என்பதையும் இப்போது நிறுவனங்கள் நல்ல வேலையாட்களை எவ்வாறு தாஜா செய்து அணுகவேண்டியிருக்கிறது என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டேன்.

முக்கியமான சந்திப்புகளில்கூட கைப்பேசியை அணைத்தோ அல்லது ம்யூட் செய்தோ வைக்கும் நாகரிகம் 90% உபயோகிப்பாரிடம் இல்லை. கல்வியகங்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள், ஆலயங்கள் என்று எல்லாவிடங்களிலும் கைப்பேசி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. சிலர் இரண்டு மூன்று கைப்பேசிகளைக்கூட வைத்திருக்கிறார்கள். இருசக்கர வாகனத்தில் கழுத்தைச் சாய்த்துக்கொண்டோ அல்லது ஒரு கையாலோ பேசிக்கொண்டே ஓட்டுபவர்களைப் பார்த்தால் எனக்குத்தான் பயமாக இருந்தது. அலட்சியம்.

ஆனால் கைப்பேசி இன்று ஊடுருவியிருக்குமளவிற்கு வேறு எந்த மின்னணு சாதனமும் எல்லாத்தட்டு மக்களிடமும் ஊடுருவியிருக்கவில்லை என்று அடித்துச் சொல்வேன் - தொலைதொடர்பில் இது சந்தேகமில்லாமல் ஒரு மாபெரும் புரட்சி. கூலித் தொழிலாளியிலிருந்து கோடீஸ்வரன்வரை எல்லாரும் கைப்பேசி வைத்திருக்கிறார்கள். வத்திராயிருப்பு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலைப்பற்றி குமுதம் பக்தியிலோ எதிலோ விஸ்தாரமான கட்டுரை வந்திருந்தது. அதில் மலையின் கீழேயிருந்து மேலே வயதானவர்கள் செல்ல டோலி சேவை புரியும் மூன்று கூலித்தொழிலாளர்களின் போட்டோக்களை வெளியிட்டு அவர்களது பைப்பேசி எண்ணையும் (முன்கூட்டியே அழைத்து ஏற்பாடு செய்ய) வெளியிட்டிருந்தார்கள். இது கைப்பேசி எந்த அளவு பயன்பாட்டிலிருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம்.

மிஸ்டு கால் மாஃபியா என்றொரு கூட்டம் இருக்கிறது. கைப்பேசிச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு இந்த மி.கா.மா. பெரிய தலைவலியாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். மிஸ்டு கால்களுக்குக் கட்டணம் கிடையாது என்பதை வைத்துக்கொண்டு நம்மாட்கள் பேயாட்டம் ஆடுகிறார்கள். காலையில் எழுந்ததும் காதலிக்கு ஒரு மிஸ்டு கால். அதிலும் ஏகப்பட்ட சங்கேதங்கள். ஒரு தடவை, இரண்டு தடவை என்று மிஸ்டுகால்களின் எண்ணிக்கை அடிப்படையில் சங்கேத வார்த்தைகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள். அலுவலகத்தை அடைந்ததும் ஒரு மிஸ்டுகால் வீட்டிற்கு. ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும் மிஸ்டுகால். காரியம் முடிந்ததும் மிஸ்டுகால் என்று ஒரு நூறு காரியங்களுக்கு மிஸ்டுகால் பயன்படுத்துவது நம்மூரில் மட்டும்தான் நடக்கிறது என்று நினைக்கிறேன்.

நான்கூட பொதுக்கழிப்பறையில் எனக்கு முன் நின்றவரின் எண்ணை வாங்கிக்கொண்டு ஐந்து நிமிடம் கழித்து ஒரு மி்ஸ்டு கால் விட (ஆச்சா?), ஐந்தாவது நொடியில் ஒரு மிஸ்டு கால் (ஆயிக்கிட்டே இருக்கு). 30வது நொடியில் இன்னொரு மிஸ்டு கால் (ஆச்சு) - ஆசாமி கதவைத் திறந்து வெளியேறிப் போனார்.

இன்னும் வரும்... அட அடுத்த பகுதியைச் சொல்றேங்க!

***

Tuesday, September 16, 2008

மூன்று வருடங்களுக்குப் பிறகு # 2

தொலைக்காட்சியின் தொகுப்பாளப் பெருமக்களைப் பற்றிச் சொல்லாமல் இருக்கவே முடியவில்லை. சிற்றலை வானொலிகள் ஒரு பக்கம், தொலைக்காட்சிச் சானல்கள் மறுபக்கம் என்று 24 மணி நேரமும் ஆங்கிலம் 4 தேக்கரண்டி, தமிழ் ஒரு சிட்டிகை என்ற விகிதத்தில் கலந்து தடித்த நாக்குடன் ஒரு கூட்டமே தமிழைச் சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது. கலைஞர், அலைஞர் என்று எல்லாத் தொலைக்காட்சிகளிலும் இடையறாத தமிழ்க் கொலை. விதிவிலக்காக மக்கள் தொலைக்காட்சியில் வேட்டி சட்டை போட்டுக்கொண்டு அறிவிப்பாளர் அடித்தட்டு வர்க்க மக்கள் வசிக்கும் பகுதியில் யார் ஒரு நிமிடத்தில் அதிக எண்ணிக்கையில் வறட்டி தட்டுகிறார் என்று பெண்மணிகளுக்கிடையில் நடத்திய போட்டி சுவாரஸ்யமாக இருந்தது. வறட்டி தட்டுவதற்காக சாணியைக் கையிலள்ளும் காட்சியைப் பார்த்த மாத்திரத்தில் என் இரண்டு குட்டீஸும் ஒரே நேரத்தில் 'யக்' என அலற, தொலைக்காட்சியை அணைத்துவிட்டு அடுத்த அரை மணி நேரத்திற்குச் சாணி கரைத்து நீர் தெளிப்பதற்கான காரணங்களை விளக்கி வறட்டியின் பெருமைகளையும் சொல்ல, சின்னவள் Can we buy it in Wal-Mart? எனக் கேட்டாள். கவலையாக இருந்தது.

Sun Music என்று துவங்கி ஒரு இருபது முப்பது இசைச் சானல்கள் இருக்கின்றன. பெரிய நிறுவனங்கள் நடத்தும் தொலைக்காட்சிகளைத் தவிர விண் டிவி, மண் டிவி, மலைக்கோட்டை டிவி என்ற வகையில் வட்டாரச் சானல்கள் தமிழகத்தில் மட்டும் ஒரு ஆயிரம் இருக்கும் என்று நினைக்கிறேன். நிறைய இளைஞர்களும், இளைஞிகளும் ஓயாது பேசுகிறார்கள். அவர்கள் பேசியதில் பெரும்பாலானவற்றைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அது தமிழ் போலவும் இல்லை, ஆங்கிலம் போலவும் இல்லை - கடும் காய்ச்சலில் ஈன ஸ்வரத்தில் உளறுவது எப்படிப் புரியாதோ அப்படி அவர்கள் பேசுவதும் புரியவில்லை.

இது தவிர SMS Mafia என்று வேரூன்றிப் பரவியிருக்கும் இன்னொரு கலாச்சாரம். எல்லா இசைச் சேனல்களிலும் திரைக்குக் கீழே இரண்டு அங்குலத்திற்கு ஓயாது குறுஞ்செய்திகள். புனைப்பெயர் பூனைப்பெயர் என்று எதையும் வைத்துக்கொள்ளாமல் நிசப் பெயர்களிலேயே இளைஞர்களும், யுவதிகளும் நாள் பூரா சாட்டுகிறார்கள். அவர்கள் கொடுத்த எண்ணிற்கு ஏர் டெல் கைப்பேசியிலிருந்து ஒரு சோதனைச் செய்தி அனுப்ப ஐந்தாவது வினாடியில் திரையில் அது வந்தது ஆச்சரியமாக இருந்தது. சன் ம்யூசிக்கில் 'Hi da..'. உதயாவில் 'Kano..' ஜெமினியில் 'Hi ra..' சூர்யாவில் 'ஞிங்களைப் பிரேமிக்கு' என்று மொழி காலாச்சார வித்தியாசமில்லாமல் வயதுக்கு வந்தவர்கள், வராதவர்கள், என்று எல்லாரும் SMS-இல் மூழ்கியிருக்கிறார்கள். பக்கத்து வீட்டுப் பெண், கூடப் படித்த பெண், பிரயாணத்தில் சந்தித்த பெண் என்று எல்லாருக்கும் பெயரைக் குறிப்பிட்டுக் காதலைத் தெரிவிக்க, அவர்கள் 'யா யா' என்று சளைக்காமல் பதில்செய்தி அனுப்புகிறார்கள். Love Meter என்று ஒன்று ஆண் பெண் பெயரை வைத்து அவர்களது ஜோடிப் பொருத்த சதவீதத்தை 'இணைபிரியாது இருப்பார்கள்' என்பது போன்ற கிளி ஜோசியக் கருத்துகளுடன் இன்னொரு சானலில் ஓடிக்கொண்டே இருக்கிறது. இது தவிர தொலை பேசி அழைப்புகள். இவற்றையும் மிஞ்சி் இன்னும் கடிதம் அனுப்பி பாடல் கேட்கும் ஆசாமிகள் கூட இருக்கிறார்கள். இணையக்குழுக்களை விஞ்சியிருக்கிறது தொலைக்காட்சி மூலமாக உரையாடும் குழுக்கள்.

ஆபாசப் பாடல்கள், SMS உரையாடல்கள், காதல் என்ற பெயரில் இச்சை பரிமாற்றங்கள் என்று இசைச்சானல்களில் இளையவர்கள் இருக்க நாற்பது + வயதில் மாமாக்களும் மாமிகளும் மெகா சீரியல்கள் என்ற பயங்கர போதை வஸ்துகளுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். 25க்கும் 35க்கும் இடைப்பட்டவர்களுக்கு என்று பெரிதாக எதுவும் நிகழ்ச்சிகள் இருப்பது போலத் தெரியவில்லை. ஒரு வேளை அவர்கள் வட இந்திய மேற்கத்திய சானல்களில் வரும் பிறன்மனை நோக்குவதை இயல்பாக, யதார்த்தமாகக் காட்டும் நிகழ்ச்சிகளில் இரவு 10 மணிக்கு மேல் மூழ்கியிருக்கிறார்களோ என்னவோ?

காதலை எப்படி தெரிவிப்பீர்கள் என்ற ஒரு நிகழ்ச்சியில் ஒரு இளைஞன் சாஷ்டாங்கமாக ஒரு பெண்ணின் காலில் விழுந்தான் - அதைப்பார்த்து ஆஹாகாரம் செய்தார்கள் பார்வையாளர்கள். எனக்கு நிஜமாகவே புல்லரித்தது. அவ்விளைஞனைப் பெற்றவர்கள் அநேகமாகக் குஷ்புவுக்குக் கோவில் கட்டிய திருப்பணிக்குழு உறுப்பினர்களாக இருந்திருப்பார்கள். இளைய பாரதத்தினாய் வா என்று பாடியவர் நல்ல வேளை இன்று உயிரோடு இல்லை. இருந்திருந்தால் வெறுப்புடன் இளைய பாரதத்தி நாய் போ போ என்று திட்டியிருப்பார். இல்லாவிட்டால் இக்கண்றாவிகளையெல்லாம் பார்த்துத் தற்கொலை செய்துகொண்டிருப்பார்.

மொத்தத்தில் களேபரம்.

இளைஞர்கள் ஒரு நாட்டிற்கு, சமுதாயத்திற்கு மிகப்பெரிய பலம். இந்திய போன்ற தேசத்தின் அபரிமிதமான இளைய சமுதாயத்தின் மனிதவளமும் சக்தியும் இப்படி உப்புப் பெறாத வெட்டிச் செயல்களில் எவ்வளவு அநியாயமாக வீணாக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது என்று வேதனையாக இருந்தது. 84-இல் சொற்ப பதக்கங்களுடனிருந்த சீனா இன்று உலகிலேயே அதிக தங்கப்பதக்கங்களை வென்றிருக்கிறது. இந்தியா? இம்மாதிரி தொலைக்காட்சிகள் இளைய சமுதாயத்தினைக் குறிவைத்து அவர்களது சக்தி முழுவதையும் அணுஅணுவாக அனுதினமும் உறிஞ்சிக்கொண்டிருக்கையில் பதக்கம் என்பது வெறும் கனவாகவே இன்னும் பல தலைமுறைகளுக்கு இருக்கும். சுதந்திரம் என்ற மாலையைக் கையிலெடுத்துக் கொண்டிருக்கும் குரங்கின் நிலையாக இருக்கிறது இன்றைய தலைமுறை. ஆக்கப்பூர்வமான வழிகளில் நேரத்தைச் செலவழிக்காமல் இப்படி அநியாயமாக எல்லாவற்றையும் கோட்டைவிட்டு மூழ்கியிருக்கிறார்களே என்று கவலையாக இருந்தது.

இன்னும் வரும்...

மூன்று வருடங்களுக்குப் பிறகு # 1

தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் இப்படி வெளியே இருந்ததில்லை - ஆதலால் இம்முறை விடுமுறையில் இந்தியா வந்த போது கிடைத்த அனுபவங்கள் மிகவும் வித்தியாசமானவை. நான்கு வாரங்களில் என்னென்னவோ செய்யவேண்டும் என்று வழக்கம்போல அட்டகாசமாகத் திட்டம்போட்டுக்கொண்டு வந்து, வழக்கம்போலவே எதையும் செயல்படுத்த இயலவில்லை. நாமொன்று நினைக்க நம்மாட்கள் வேறொன்று நினைக்கிறார்கள்!

சென்னை பன்னாட்டு விமானநிலையத்தின் உள் வளாகத்தைப் புதுப்பித்து இழைத்திருக்கிறார்கள். அட்டகாசம். நான் வந்த விமானம் அதிகாலை மூன்றரை மணிக்கு வந்திறங்க, அந்நேரத்தில் வேறு விமானங்கள் எதுவும் வரவி்ல்லையாதலால் குடியுரிமைச் சோதனைகளை முடித்து பெட்டிகள் வரும் Baggage Claims area-வுக்கு 10 நிமிடங்களில் வந்து விட்டேன். அமெரிக்காவின் பல நகரங்களிலிருந்து லண்டன் வரும் விமானங்களில் சென்னைப் பயணிகளைப் பிரித்து ஒரு விமானத்தில் போட்டு அனுப்புவதால் பெட்டிகள் எல்லாம் சீட்டுக் குலுக்கலைப் போலப் பிரிந்து பிரிந்து, என் முதல் பெட்டி உடனேயும், இரண்டாம் பெட்டி ஒரு மணிநேரம் கழித்தும் வந்தது. மற்ற மாநிலங்களில் - குறிப்பாக மும்பை - உள்ள நிலையங்களைப் போலல்லாது, சென்னை விமான நிலையம் எப்போதுமே இனிதான அனுபவத்தைத்தான் தந்திருக்கிறது. இம்முறையும் சுங்கச் சோதனை இனிதாகவே முடிய - அந்த அதிகாரியிடம் விசாரித்தபோது, முனையத்தைப் புதுப்பித்து இரண்டு வருடங்களாகிவிட்டன என்றார். நன்றாகவே பராமரிக்கிறார்கள். பாராட்டுகள்.

நிலையத்திலிருந்து வெளியேறி வந்தால் கையில் பஸ் டிக்கெட்டுகளைப் போல டாலர்களையும் ரூபாய்களையும் வைத்துக்கொண்டு 'FC, FC, FC மாத்தணுமா சார்' என்ற விசாரிப்புகளையும் ஆட்டோ டாக்ஸி அழைப்புகளையும் தாண்டி - நண்பர்கள் கால் டாக்ஸியில் வந்து காத்திருந்தார்கள் - வண்டியிலேறி பிரதான சாலையை அடைய ஏதோ பாலம் அரைகுறையாக அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்க அப்பகுதி முழுதும் மூத்திர நாற்றமடித்தது! ஒரு வழியாக அதை விட்டு விலகி உள்ளகரத்தில் இருக்கும் நண்பனின் வீட்டுக்குச் சென்று ஒரு காபியைக் குடித்துவிட்டு, குளித்துவிட்டு திருச்சி கிளம்பினேன். எட்டரைக்கு தாம்பரத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸில் முன்பதிவு செய்த பெட்டியில் ஏறினால் வெள்ளையுஞ் சொள்ளையுமாக ஒரு கோஷ்டியே அங்கு எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தது. 'இதுல ஒக்காருங்க' என்று நல்ல தமிழில் காலியாக இருந்த Middle Berth காட்டியவர் மார்வாரி. பெட்டிகளை வைக்க இடமில்லாமல் அதில் ஏற்றி வைத்துவிட்டு Aisle-இல் நின்று கொண்டேன். வாடி வாசலைப் பிரித்து வைத்துக்கொண்டு - அட்டைப்படத்திலிருந்து முதற் பக்கத்திற்குச் செல்லவே அரைமணி நேரமாகிவிட்டது. அற்புதமான படம் - அதையும் எழுதிய செல்லப்பாவே எடுத்திருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருந்தது - படிக்க ஆரம்பித்தேன். பத்து நொடிக்கு ஒருவராக வந்து போய்க்கொண்டேயிருந்தார்கள். விழுப்புரத்தில் சிலர் இறங்கிக்கொள்ள ஜன்னலோர இருக்கையில் சிறிது நேரம் அமர முடிந்தது. மிகவும் அயர்வாக இருந்தது. வெளியே காட்சிகளை வெற்றுச் சிந்தனையுடன் கவனித்துக்கொண்டே இருந்தேன். நிறைய வயல்களில் வெள்ளைக் கற்கள் 60 x 40 களில். அதன் பிறகு ஒரு வழியாக விவசாயத்திலிருக்கும் நிலங்களில் பசுமையைக் காண சற்று ஆறுதலாக இருந்தது. என்னுடன் பயணித்த ஆறு பேரும் கைப்பேசியில் ஓயாது திருச்சிவரைப் பேசிக்கொண்டேயிருந்தார்கள். இந்த கைப்பேசிப் புரட்சியைப் பற்றி பிற்பாடு.

ஸ்ரீரங்கத்தில் இறங்கி வீடு வந்து சேர்ந்ததும் குழந்தைகள் - ஒரு மாதம் முன்னதாகவே சென்றிருந்தார்கள் - ஓடி வந்து கட்டிக்கொண்டார்கள். லேசாக இளைத்திருந்து, களைத்திருந்தார்கள். ஆனால் தாத்தா, பாட்டி, மாமா, அத்தை என்று நிறைய உறவினர்கள் மத்தியில் உற்சாகமாக, சந்தோஷமாக, சுதந்திரமாக ஓடியாடினார்கள்.

அலறிக்கொண்டிருந்த தொலைக்காட்சியின் ஒலியளவைக் குறைத்தேன்.

இன்னும் வரும்...