Tuesday, November 04, 2008

ஆஷ்லாண்ட் லஷ்மிகோவில் தீபாவளி

ஆஷ்லாண்ட் லஷ்மி கோவிலுக்கு ஒவ்வொரு வாரயிறுதியிலும் போவதுண்டு. சென்ற ஞாயிறன்று மாலை சென்றபோது ஏகமாக வாகனங்கள் நிறைந்திருக்க கோவிலுக்குப் பின்பக்கத்திலிருக்கும் பெரிய நிறுத்துமிடத்தில் - அது இருப்பதே கூட்டம் அம்மும் நாட்களில்தான் - தேடி நிறுத்திவிட்டு “இன்று என்ன விசேஷம்?” என்று யோசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தால் ஒரு பயலையும் காணோம். எல்லாரும் கோவிலுக்கு வலப்புறம் இருக்கும் வெட்ட வெளியில் கூடியிருந்தார்கள் - பலகையில் அறிவிப்பைப் பார்த்ததும்தான் புரிந்தது தீபாவளிக்காக மத்தாப்புகள் விடப்போகிறார்கள் என்று. வருடாவருடம் தீபாவளிக்காக மத்தாப்புகள் வாங்கி, நகர நிர்வாகம், காவல்துறை அனுமதி வாங்கி, பக்தர்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் கொடுத்து விடச் சொல்லும் நல்ல காரியம்.

ஆனால் இந்தமுறை சில உறுத்தல்கள்.

சென்ற வருடம் வட்டமாக கயிறுகட்டி எல்லாரையும் சுற்றி நிற்கச் செய்து ஒவ்வொரு குழந்தைகள் கையிலும் ஒரு கம்பி மத்தாப்பு பெட்டியைக் கொடுத்தார்கள். கம்பு மத்தாப்புகள் நட்சத்திரங்களாய் சுற்றி எரிய, நடுவில் யாராவது மாமா வந்து புஸ்வாணம் (பூச்சட்டி) விடுவார் - எல்லாரும் வேடிக்கை பார்ப்பார்கள். இந்த முறை என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. வட்டக் கயிற்றைக் காணோம். எல்லாரும் சந்தை போலக் கும்பலாக நின்றுகொண்டிருக்க ஓரமாக யாரோ ஒருவர் புஸ்வாணம் ஒன்றை விட்டார்.

கோவிலின் பிரதான வாசலுக்குள் நுழைந்ததும் ஒரு ஹால் இருக்கிறது. ஹாலின் ஜன்னல் வழியாக வெளியே கூடியிருந்த கூட்டத்தையும் மத்தாப்புகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறு கும்பலிடம் அர்ச்சகர் “குழந்தைங்கள வெளில கூட்டிட்டுப் போய் மத்தாப்பு வாங்கிக் கொடுங்க” என்று சொல்ல அவர்கள் “ரொம்பக் குளிருது” என்றார்கள்.

“என்னம்மா இது! அமெரிக்கா வந்துட்டு, அதுவும் பாஸ்டன்ல இருந்துக்கிட்டு குளிருதுன்னா எப்படி?” என்றார். சரியான கேள்விதான்! இருந்தாலும்?

கூட்டத்தினருக்கிடையே ஒருவர் மத்தாப்பு விநியோகம் செய்வது போலிருக்க - குழந்தைகள் குதிக்க ஆரம்பித்துவிட்டார்கள் - அணுகிக் கேட்க நிமிர்ந்து முறைத்து “வரிசைல வாங்க“ என்றார். வரிசை என்று எதுவும் இல்லாமல் ஒருமாதிரி செவ்வகமாக ஒரு கூட்டம் நின்றிருந்தது. அவரும் - அமெரிக்கப் பொருளாதாரச் சரிவின் எதிரொலி போல - கம்பி மத்தாப்புப் பெட்டியைப் பிரித்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒக்கே ஒக்க கம்பி மத்தாப்பைப் கொடுக்க திகைப்பாக இருந்தது. அன்று பார்த்து பயங்கரக் குளிர் 30 களில் (ஃபாரன்ஹீட் ஐயா). கைக்குழந்தைகள் வீறிடுவதையும் பொருட்படுத்தாமல் மறத்தமிழச்சிகள் அந்த “வரிசை”யில் நிற்க, கால்களில் தொற்றி அடம்பிடித்த குழந்தைகளைச் சமாதானம் செய்து, நடந்து வண்டியிலேறி வீட்டுக்குத் திரும்பினேன்.

வரிசையில் கொடுக்கும் வைபவத்தை இப்படி வெட்டவெளியில் பேய்க் குளிரில்தான் செய்யவேண்டுமா? கோவிலுள் நுழைந்ததும் இருக்கும் பெரிய ஹாலில் வைத்து தரிசனம் முடிந்து வெளியே வரும் குடும்பத்தினர் கையில் மத்தாப்பைக் கொடுத்து அனுப்பினால் இம்மாதிரி வெட்டவெளிக் கும்பலையும் குளிரில் குழந்தைகளைக் காக்க வைத்ததையும் அடியோடு தவிர்த்திருக்கலாம்.

சென்ற வருடம் செய்தது போலவே கயிறு கட்டி எல்லாக் குழந்தைகளையும் வட்டமாக நிற்க வைத்து மத்தாப்பு விட வைத்திருக்கலாம்.

ஏன் இப்படிச் செய்தார்கள் என்று கோபமாக வந்தது.

***

2 comments:

துளசி கோபால் said...

குளிர்காலம் ஆரம்பமாயிருச்சே உங்களுக்கு அதான்......
அதானே..... குடுக்குற மத்தாப்பைக் கோயிலுக்குள்ளே வச்சுக் குடுத்தால் என்ன?


எங்களுக்கு இன்னும் குளிர் விடலை(-:
வசந்தகாலமுன்னு ஒரு பேச்சு போயிக்கிட்டு இருக்கு(-:

Unknown said...

குறை நிறைய சொல்றீங்களே... அதை சரி பண்ண நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சொல்லலாமே.. இந்த விழாவை நடத்துபவர்கள் அனைவரும் தன்னார்வத் தொண்டர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? சிந்திக்க (மட்டும்) இருக்கும் ஆட்கள் செயல்படவும் வந்தால் நிறைய வேலை நன்கு நடக்கும. நன்றி.