Tuesday, December 02, 2008

ஊடகத் தீவிரவாதிகள்



தீவிரவாதத் தாக்குதலின் போது ஊடகங்கள் நடந்துகொண்ட விதம் பொறுப்பற்ற தன்மையின் உச்சம். செய்தியை முந்தித் தருகிறோம் என்ற பெயரில் அநாகரிகமாக நடந்துகொண்ட அவர்களது செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எந்தவித தணிக்கையுமில்லாமல் எல்லாவற்றையும் அவர்கள் ஒளிபரப்பிக்கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டு எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்த அரசு இயந்திரங்களின் கையாலாகாதத் தனத்தை நினைத்தால் அவமானமாக இருக்கிறது.

உள்ளே எத்தனை தீவிரவாதிகள் பதுங்கியிருக்கிறார்கள் என்று தெரியாது. எத்தனை பேர் பிணைக் கைதிகளாக மாட்டியிருக்கிறார்கள் என்று தெரியாது. கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர் என்றும் தெரியாது. வந்தவர்களின் ஒரே இலக்கு முடிந்தவரை கொல்வதே. இதற்கு முன்பாக இம்மாதிரி நேரடித்தாக்குதல் எதுவும் நடைபெற்றதில்லையாதலால் இத்தாக்குதலின் தன்மையையும் வீரியத்தையும் உணர்ந்து கொண்டு அரசு இயந்திரங்கள் நடவடிக்கைகளைத் துவங்கவே பலமணி நேரமாகிவிட்டது. அதிலும் குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்த நிலை நம் கமாண்டோக்களுக்கு. அவர்களுக்கு ஹோட்டலின் வரைபடம் தரப்படவில்லை. காவல்துறையிடம் போதுமான அளவுக்கு ஆயுதங்கள் இல்லை. நிராயுதபாணியாக, அல்லது கையில் ஒரு லத்திக்கம்புடன்தான் 90 சதவீத காவலர்கள் நடமாடுகிறார்கள்.

இந்த நிலையில் காவலர்களின், காமாண்டோக்களின் ஒவ்வொரு அசைவையும் அணுவணுவாக ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள் ஊடகக்காரர்கள் - ஹெலிகாப்டரிலிருந்து கட்டடத்தின் மேலே கமாண்டோக்கள் இறக்கிவிடப்படுவதையும்கூட. சாட்டிலைட் தொலைபேசிகள், ஜிபிஎஸ் கருவிகள், நவீன ஆயுதங்கள், வெடிபொருட்களுடன், விலைமதிப்பற்ற நூற்றுக்கணக்கான மனித உயிர்களையும் கையில் வைத்துக்கொண்டு உள்ளே பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கு ஊடகங்களின் தயவில் வெளிப்புற நடவடிக்கைகள் எல்லாம் உடனுக்குடன் செய்தியாகப் போய்க்கொண்டேயிருக்க, அவர்கள் - உட்புற அமைப்பை நன்கு அறிந்து வைத்துக்கொண்டு - கமாண்டோக்களுக்கு தண்ணீர் காட்டி மேலும் கொலை வெறியாட்டத்தைத் தொடர்ந்து நடத்தியிருக்கிறார்கள். இதை நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை என்று எவன் அழுதான்? கொஞ்சம் கூட சிந்தித்து செயல்படவேண்டாமா? இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டு தேசிய பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கிவிட்டார்களே? உள்ளே அகப்பட்டிருக்கும் மனித உயிர்களைப் பற்றிக் கவலைப்படாமல், அவர்களைக்காக்க வெளியே இருந்து வந்து திக்கு தெரியாமல் திண்டாடிப் போராடும் கமாண்டோக்கள், காவலர்கள் ஆகியோரது உயிரைப்பற்றியும் கவலைப்படாமல் எத்தனை பிணங்கள் விழுந்தன, எவ்வளவு ரத்தம் சிந்தியது என்பதைப்பற்றி மட்டுமே யோசித்து 20-20 கிரிக்கெட் ஸ்கோர் மாதிரி பிணங்களின், காயமடைந்தவர்களின் எண்ணிக்கைகளை மட்டும் தங்களது ஊடகங்களால் துரத்திய இவர்கள் பிணந்தின்னிக் கழுகுகளாகத்தான் இருக்க முடியும்.

இங்கு ஆஹா எஃப்எம்மில் கோல்மால் என்று ஒரு நிகழ்ச்சி. “மும்பை மாதிரி தீவிரவாதி உங்களைத் தாக்க வந்தால் எப்படிச் சமாளிப்பீர்கள்?” என்று அறிவிப்பாளர் கேள்விகேட்டு அதற்கு நேயர்கள் “நகைச்சுவையாக” பதிலளித்து பின்னணியில் செயற்கைக்குரல்கள் சிரிப்பதையும் ஒலிபரப்பிக்கொண்டிருந்தார்கள். எவ்வளவு கேவலமான செயல்?

ஒரு படையை வழிநடத்திச் செல்லும் தலைவர் இறக்க நேரிட்டால் தளபதிகள் யுத்தத்தை முன்னெடுத்துச் செல்வார்கள். அவர்கள் மரணமடைந்தால் அடுத்த நிலையில் இருப்பவர்கள் தொடர்வார்கள். சிப்பாய்களுக்கு சண்டை ஒன்றே குறிக்கோளாக இருக்கும், தலைவர்கள் செத்த செய்தி அவர்களுக்கு உடனடியாகச் சேராது. தலைவன் செத்தான் என்றால் சிப்பாய் மனதளவில் சோர்ந்துவிடுவான் - தோல்வியைச் சந்திக்குமுன்னேயே மனதளவில் தோல்வியடைந்துவிடுவான். நம் ஊடகங்கள் என்ன செய்தன? தீவிரவாத ஒழிப்புக் குழுத் தலைவர் ஹேமந்த கார்கரேயும், என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டான விஜய் சாலாஸ்கரும் கொல்லப்பட்டதை முந்திரிக்கொட்டைகளாக அறிவித்தார்கள். அறிவுகெட்டத்தனத்தின் உச்சம்! அவர்கள் உத்தரவின் கீழே போராடிக்கொண்டிருந்த மற்ற காவலர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்?

பத்து இடங்களில் தாக்குதல் என்று செய்தி. இவர்கள் 24 மணிநேரமும் காட்டியது தாஜ் ஹோட்டலை மட்டும். அவ்வப்போது ஓபராயைக் காட்டினார்கள். பின்பு நரிமண் ஹவுஸின் மாடியில் கமாண்டோக்கள் ஹெலிகாப்டரிலிருந்து இறங்குவதைக் காட்டினார்கள். வேறு இடங்களில் நடந்தது தீவிரவாத செயலில்லையா? ரயில் நிலையத்தில் செத்தவர்கள் மனிதர்களில்லையா? ஏனென்றால் அங்கேயெல்லாம் “மேட்ச்“ முடிந்துவிட்டது. ஹைலைட்ஸைக் காட்டுவதைவிட நேரடி ஒளிபரப்பில்தான் பரபரப்பு அதிகம் - பார்வையாளர்களும் அதிகம் - ஆகவே தாஜ்!

ஆளாளுக்கு வாய்க்கு வந்ததை அறிவித்துக்கொண்டேயிருந்தார்கள். CNN-ன் தலைமைச் செய்தியதிகாரியொருவர் அமெரிக்காவில் அமர்ந்துகொண்டு மும்பை அதிகாரி ஒருவரைத் தொலைப்பேசியில் அழைத்துக் கேட்டார் “பத்தே பேர் சேர்ந்து எப்படி இத்தனை பேரைக் கொல்ல முடிந்தது?” என்று. எனக்கு வந்த ஆத்திரத்தில் உடலெல்லாம் நடுங்கியது. கொல்வது ஒன்றே நோக்கம் என்றிருப்பவர்கள் தீவிரவாதிகள். குறைந்த எண்ணிக்கையில் வந்து விமானங்களைக் கடத்தி கட்டடங்களில் மோதி மூன்றாயிரம் பேரைக் கொல்லவில்லையா? அவ்வளவு ஏன் வெர்ஜினியா டெக் பல்கலையில் ஒரு வெறி பிடித்த மாணவன் துப்பாக்கி சகிதமாக நுழைந்து இருபதுக்கும் மேற்பட்ட சக மாணவர்கள், ஆசிரியர்களைக் கொல்லவில்லையா? எதிர் பாரா தருணத்தில், எதிர் பாரா நிலையில், எதிர் பாரா முறைகளில் வெறிபிடித்த மனிதர்கள் சக மனிதர்களைத் தாக்கும்போது சேதத்தைத் தடுக்க வல்லரசுகளாலேயே முடியவில்லை.

எதுகைமோனையாகச் செய்தி போடுகிறோம் என்ற பெயரில் “இந்தியாவின் 26/11” என்று ஒரு செய்திச் சானலில் போட்டார்கள். அதாவது அமெரிக்காவுக்கு 9/11 - இந்தியாவிற்கு 26/11. இதைப் பார்க்கும் அமெரிக்கர்கள் எது 26-வது மாதம் என்று குழம்பியிருப்பார்கள். அல்லது சாதாரண இந்தியப் பொதுஜனம் “ஓஹோ அமெரிக்காவுல நவம்பர் ஒம்பதாந்தேதி ஏதோ நடந்திருக்கு போல” என்று நினைத்திருப்பார்கள்!

வலையுலகு - அட அட அட.... ஒலி, ஒளி ஊடகங்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்துக் கொண்டனர் பதிவர்களும் (மனசாட்சி: "அந்தக் கூட்டத்துல நீயும் ஒருத்தந்தேன்")

”கையில் காவிக் கயிறு - ஆக இது இந்துத் தீவிரவாதி”
”இல்லை இல்லை இஸ்லாமியத் தீவிரவாதி”
“இல்லவே இல்லை மொசாத் செயல்”

என்று பொங்கலுக்கு வெள்ளையடிக்கும் ஸ்டைலில் மத, இனச் சாயம் பூசி மகிழும் ஒரு கோஷ்டி! தீவிரவாதத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் அழிவு, கொலை, தீமை இவைதான் நோக்கங்கள் - இவர்கள் மனித வகையில் எந்த வகையிலும் சேராத கொடூர மிருகங்கள். இவர்களை இவர்கள் வழியில் அணுகி அழிப்பது ஒன்றுதான் சரியான முறை. இவர்களுக்கு மதச் சாயம் பூசுவது புண்ணைச் சொறிந்துகொள்ளத்தான் பயன்படும்.

இப்படிக் கேனத்தனமான கேள்விகள், பேட்டிகள், அறிவிப்புகள், செய்திகள் - ஊடகங்களின் வெறியாட்டத்தைத்தான் தாங்க முடியவில்லை.

தீவிரவாதிகளுக்கு பயம் தோன்றச் செய்வதைவிட, அவர்களைத் தேன்குடித்த நரிகளாக்குகின்றன நமது அரசு, ஊடக இயந்திரங்கள். டில்லியிருந்து கமாண்டோக்கள் வருவதற்கான விமானத்தின் விமானி சண்டீகரிலிருந்தாரென்றும் அவர் வந்து சேர்ந்து பின்பு விமானத்தைக் கிளப்பிக்கொண்டு மும்மையிறங்கி தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு வந்து சேர கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது என்று அறிகிறேன் - இதுவே பெரும் குறைபாடு - உடனடியாகச் சரி செய்யப் படவேண்டிய குறைபாடு.

5000 பேரை இலக்கு வைத்து வந்திருப்பார்களேயானால் இந்த இருநூறு கொலைகளைத் தோல்வியாகக் கருதி இன்னும் தீவிரமாகத் திட்டம் தீட்டித் தாக்கத் தயாராவார்கள் அவர்கள். இல்லை 200 பேரைக் கொன்றதே வெற்றியாக அவர்கள் கருதினால் இது போல இன்னும் பல தாக்குதல்களைத் தொடுக்கவும் முனைவார்கள். எப்படிப் பார்த்தாலும் தீவிரவாதிகள் சும்மா இருக்கப் போவதில்லை. மூளைச் சலவை செய்யவும் ஆயுதம் தூக்கவும் ஆட்கள் கிடைப்பதற்கா பஞ்சம்? கிடைப்பார்கள். ஆனால் இனிமேலும் அவர்களை வளரவிடாமல் நசுக்கி அழிப்பது முழுக்க முழுக்க இந்திய அரசின் கையில்தான் இருக்கிறது. வழக்கம்போலப் பாகிஸ்தான் மீது பழி போட்டுவிட்டு - அது முழுக்க முழுக்க உண்மையாகவே இருந்தாலும் - சோம்பியிருந்தார்கள் என்றால் அவர்களை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது. பாகிஸ்தான் பிடுங்குவது இருக்கட்டும். நீங்கள் என்ன பிடுங்கினீர்கள்? ஜார்ஜ் புஷ்ஷை என்னதான் திட்டினாலும் கோமாளியாகச் சித்தரித்தாலும் 9/11 க்கு பிறகு சுதாரித்துக் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்தி வேறு எந்த தீவிரவாத தாக்குதல்களும் அமெரிக்காவில் நடைபெறா வண்ணம் செய்ததை யாரும் மறுக்கமுடியாது. இந்தியாவில் எத்தனையெத்தனை தாக்குதல்கள்? மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்துகொண்டே இருக்கிறார்கள். ஏன் இவ்வளவு மெத்தனம்?

பொது மக்களைக் காக்கத் துப்பில்லாத அரசு எதற்கு? பாக்கிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவி வந்து தாக்குவது பெரும்பிரச்சினையாகவே இருந்தாலும் நம் எல்லைகளைக் காத்து உள்ளூர் ஓட்டைகள் அனைத்தையும் அடைப்பது முதல் கடைமை - அதன் முழுப் பொறுப்பும் இந்திய அரசின் கையில்தான். அதற்கு அலட்சிய மனப்பான்மையை ஒழிக்கவேண்டும். அதற்கு ரயில் நிலையத்தில் சுடப்பட்டுச் சாகும் அப்பாவி பொதுஜனத்தின் வலியை உணரவேண்டும். இரும்புக் கோட்டையாக தடுப்பு அரண் இருந்தால் எந்தத் தீவிரவாதியும் உள்ளே நுழைவதற்கு யோசிப்பான். அப்படியே நுழைந்தாலும் அவர்கள் கொட்டையைப் பிடித்து நசுக்க அதிக நேரம் ஆகக்கூடாது. அவர்களை உடனடியாக எதிர்கொண்டு அதிக சேதமில்லாமல் முறியடிக்கிற எமர்ஜென்ஸி ரெஸ்பான்ஸ் திறனை பலமடங்கு அதிகரித்துக் கொள்ளவேண்டும் - எல்லாத் திசைகளிலும். முழுமையாக தீவிரவாதத்தினை ஒழிக்க முடியாவிட்டாலும், தடுக்க முடியும். கிழிந்து தொங்குகிற புல்லட் புரூஃப் அங்கி, பழைய காலணிகள், கற்கால துப்பாக்கிகள் போன்றவற்றைத் துறந்து மொத்தத்தையும் நவீனப்படுத்த வேண்டும்.

உயிரைப்பணயம் வைத்து தீரமாகப் போராடிய காவலர்களுக்கும் கமாண்டோக்களுக்கும் தீவிரவாதிகள் தந்த நெருக்கடியைவிட அதிக நெருக்கடியை ஊடகங்கள் கொடுத்தார்கள். கிட்டத்தட்ட கட்டடங்களைச் சூழ்ந்துகொண்டு அவர்களை literally நெருக்கியடித்தார்கள். இதனால் திறம்பட எந்தத் திட்டத்தையும் வகுக்க அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்திருக்குமாவென்று தெரியவில்லை. ஊடகங்கள் பார்வையில் இருப்பதைவிட உள்ளே போய் தீவிரவாதிகளை எதிர்கொள்வது மேல் என்று நினைத்துவிட்டார்கள் போலும் - உள்ளே புகுந்துவிட்டார்கள். எவ்வளவு உயிர்ச்சேதம்? நேரடியாகக் கொன்றவர்கள் அந்த பத்து தீவிரவாதிகள். மறைமுகமாகக் கொன்றவர்கள் அனைத்து ஊடகத்தீவிரவாதிகளும்!

மும்பையில் இந்நேரம் ரத்தக்கறைகள் காய்ந்திருக்கும், அல்லது கழுவப்பட்டிருக்கும் - பிணங்களைத் துரத்திய ஊடகக்காரர்கள் இப்போது தாஜ் ஹோட்டலிலிருந்து உயிரோடு தப்பித்து ஓடிய புறாக்களையும் நாய்க்குட்டி ஒன்றையும் பேட்டியெடுத்து “மும்பைத் தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பிய அதிசயம்” என்று தலைப்புச் செய்தியாகப் போட்டுக்கொண்டிருப்பார்கள். ஓரிரு தினங்களில் அதுவும் போரடித்து குலுக்கல் நடனங்களுக்கும், கொலை, கொள்ளைகளுக்கும், வேறு எங்காவது நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கும் திரும்பிவிடுவார்கள். நாமும் வழக்கமான வேலைகளைப் பார்க்கப் போய்விடுவோம். இது வரை பரவாயில்லை. வீராப்பு வசனங்களைப் பேசிய தலைவர்களும்் மயிராப் போச்சு என்று புதிய நெருக்கடிகளுக்கும் வரப்போகும் தேர்தலுக்குத் தேவையான பகடை விளையாட்டுகளுக்கும் திரும்பிவிடுவார்கள்.

வாழ்க கருத்துச் சுதந்திரம்! வாழ்க ஊடகங்கள்!

***

17 comments:

Radha Sriram said...

சுந்தர் கொந்தளித்து போயிருக்கிரீகள்.ட்சுனாமி போதும் ஊடகவாதிகள் இதே மாதிரிதான் நடந்து கொண்டார்கள்.ஆனால் இது நேரடி ஒளிபரப்பினால் சேதம் அதிகம்.NDTV யில் நேரங் கடந்து எல்லாம் முடியும் சமயத்தில் திடீரென்று ஞானம் வந்தது போல் நடு நடுவில் நாங்கள் லாங் ஷார்டில்தான் காட்ட முடியும் ஏனென்றால் அது உள்ளே இருக்கும் தீவிரவாஅதிக்கும் தெரிந்துவிடும் என்று கேனத்தனமாக சொன்னார்கள்.மிக கேவலம்.

Anonymous said...

இந்த செய்தி தொடர்களை பார்த்த பொழுது எனக்கும் இது தான் மனதில் பட்டது. அதுவும் 5 அமெரிக்கர்கள் இறந்ததும் 9/11 என்ற வண்ணத்தில் அவர்கள் கொடுத்த வர்னனை தாங்க முடியவில்லை. இந்திய பாராளுமன்ற தாக்குதலுக்கே நாம் அந்த பெயரை கொடுக்கவில்லை, இதற்கு இப்படி பெயர் எல்லாம் சூட்டுகிறார்களே என்று இருந்தது.........

பனிமலர்.

அக்னி பார்வை said...

தீவிரவாதி தலைவன் (தீதா):

பொய்,இந்தியாவை தாக்கி, வெற்றி யுடன் திரும்பி வா, தாக்குதலின் போது நீ சரியாக வழிநடத்தபடுவாய்!

தீவிரவாதி:

என்னை நீங்கள் எப்பட் தொடர்புக் கொண்டு வழி நடத்துவீர்கள்.

தீதா: நான் வழி நடுதுகிறேன் என்று சொன்னேன?, போ, தாக்குதல் தொடங்கியவுடன் ‘டீவி’ போடு , இந்திய ஊடகம் உன்னை பத்டிரமாக வழி நடத்தும்.

தீவிரவாதி: நான் ஒரு வேளை மாட்டிக் கொண்டாள்

தீதா: பயப்படாதே, இந்திய அர்சு ஒன்ரும் செய்யாது, மீறி எதாவ்து செய்தால் நங்கள் எதையாவது கடத்தி உன்னை மீட்டு விடுகிறோம்.

தீவிரவாதி:
தூக்கு தண்டனை கொடுத்தால்

தீதா: யாராவது இந்தியர்கள் மனித உரிமை அது இது என்று சொல்லி தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்து விடுவார்கள்.

கிரி said...

//மும்பை மாதிரி தீவிரவாதி உங்களைத் தாக்க வந்தால் எப்படிச் சமாளிப்பீர்கள்?//

நேரம் காலம் தெரியாத நிகழ்ச்சி

//ஆளாளுக்கு வாய்க்கு வந்ததை அறிவித்துக்கொண்டேயிருந்தார்கள். CNN-ன் தலைமைச் செய்தியதிகாரியொருவர் அமெரிக்காவில் அமர்ந்துகொண்டு மும்பை அதிகாரி ஒருவரைத் தொலைப்பேசியில் அழைத்துக் கேட்டார் “பத்தே பேர் சேர்ந்து எப்படி இத்தனை பேரைக் கொல்ல முடிந்தது?” என்று//

இவங்க செய்ததை பார்த்து செம கடுப்பாக தான் இருந்தது..என்னமோ நமக்கு எதுவும் தெரியாதது போலவும் இவங்க எல்லாம் தெரிந்தவங்க போலவும் பேசிட்டு இருந்தாங்க..நம்மிடம் சில பிரச்சனைகள் இருந்தது உண்மை ஆனால் அதை கூறும் விதம் என்று ஒன்று உள்ளது. ஒருத்தனக்கு நேரம் சரி இல்லைனா .......

//பொது மக்களைக் காக்கத் துப்பில்லாத அரசு எதற்கு? //

இதில் என்ன கொடுமை என்றால் எந்த அரசு வந்தாலும் நமக்கு இந்த நிலைமை தான். மக்கள் மீது அக்கறை காட்டுபவர் எவரும் இல்லை.

Sundar Padmanaban said...

நன்றி ராதா ஸ்ரீராம், பனிமலர், அக்னிப் பார்வை

ஊடகங்கள் செய்து வரும் சேவை மகத்தானது - ஆனால் சமீபகாலமாக கடும் போட்டியின் விளைவாக செய்திகளை முந்தித் தருவதில் தறிகெட்டு முறைதவறி நடந்துகொள்ளும் போக்கு பரவலாக எல்லா ஊடகத்தினரிடமும் காணப்படுகிறது - இதை இப்போதே கட்டுப்படுத்தி நெறிப்படுத்த அரசு முன்வர வேண்டும். இம்மாதிரி ஊடகங்கள் நடந்துகொள்வதால் விளையம் பாதகங்களே மிக அதிகம். மிகவும் சென்ஸிடிவான செய்திகளை முறைப்படி வெளியிடாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற ரீதியில் எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றி வெளியிடுவதால் மக்கள் உணர்வு ரீதியாகத் தூண்டப்பட்டு கொந்தளித்து வன்முறையில் இறங்கும் சாத்தியங்கள் அதிகம். அதனால் ஏற்படும் சேதங்களும் அதிகம். ஆதலால் ஊடகங்கள் பொறுப்புடனும் சமூக அக்கறையுடனும் நடந்து கொள்ளவேண்டும் என்று வேண்டுகிறேன்.

Sundar Padmanaban said...

--இதில் என்ன கொடுமை என்றால் எந்த அரசு வந்தாலும் நமக்கு இந்த நிலைமை தான். மக்கள் மீது அக்கறை காட்டுபவர் எவரும் இல்லை.--

கிரி. ஆமாம். ஆனால் இம்முறை நடைபெற்றது பெரும் அளவில் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று நினைக்கிறேன். தேர்தலும் சமீபத்தில் வருவதால் மக்கள் அவர்களது கோபத்தை நன்றாகவே எதிரொலிப்பார்கள். ஆனாலும் தேசத்தை காக்கக்கூடிய இரும்புத் தலைவராக யாரையும் சுட்டிக்காட்ட முடியவில்லை என்பது சோகம்! இருக்கும் திருடர்களில் சகித்துக்கொள்ளக்கூடிய திருடனைத்தான் ஒவ்வொருமுறையும் தேர்ந்தெடுக்கவேண்டியிருப்பது பரிதாபமான நிலை. பார்க்கலாம்.

PRABHU RAJADURAI said...

சரியான கருத்துகள்....

"ஜார்ஜ் புஷ்ஷை என்னதான் திட்டினாலும் கோமாளியாகச் சித்தரித்தாலும் 9/11 க்கு பிறகு சுதாரித்துக் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்தி வேறு எந்த தீவிரவாத தாக்குதல்களும் அமெரிக்காவில் நடைபெறா வண்ணம் செய்ததை யாரும் மறுக்கமுடியாது"

அதற்கு அமெரிக்காவின் புவியியல் அமைப்பும், மக்கள் விகிதாச்சாரமும் காரணமாக இருக்கலாம்....மேலும் அமெரிக்காவைத் தவிர வெளியே அமெரிக்கர்களுக்கு ஆபத்து கூடியுள்ளதே!

Sundar Padmanaban said...

பிரபுஜி

//அதற்கு அமெரிக்காவின் புவியியல் அமைப்பும், மக்கள் விகிதாச்சாரமும் காரணமாக இருக்கலாம்....மேலும் அமெரிக்காவைத் தவிர வெளியே அமெரிக்கர்களுக்கு ஆபத்து கூடியுள்ளதே!//

இவை தவிர முக்கிய காரணமாக நான் நினைப்பது இந்தியாவைப் போல, ஜாதி, மத, மொழி ரீதியாகத் தீவிரமாக இயங்கும் குழுக்களும், அவர்களை மூட்டிவிட்டு அந்தத் தீயில் குளிர்காயும் அரசியல்வாதிகளும் இங்கு இல்லாதது. இரண்டாவதாக நமக்கிருக்கும் 'எல்லாத் திசைகளிலும் எதிரி” என்ற பூகோள ரீதியான சவால்கள் அமெரிக்காவுக்கு மிகவும் குறைவு. வடக்கில் கனடா - நட்பு நாடு. தெற்கில் மெக்ஸிகோ எல்லைதான் அமெரிக்காவுக்குப் பெரும்பிரச்சினை. அதிலும் எல்லை வழியாக ஊடுருவி வந்து எந்தத் தீவிரவாதியும் தாக்கவில்லை - சட்டத்திற்குப் புறம்பாக உள்ளே ஓடி வரும் illegal immigrants தான் இவர்களுக்குப் பெரும் தலைவலி. கிட்டத்தட்ட ஒன்றரைக்கோடி பேர் இப்படி சட்டத்திற்குப் புறம்பாக உள்ளே வந்து தங்கியிருப்பதாக அறிகிறேன். எல்லாம் அமெரிக்கர்கள் செய்ய விரும்பாத குறைந்த கூலி தரும் எடுபிடி வேலை செய்து பிழைக்கும் மக்கள் - வளைகுடா நாடுகளில் நம் தமிழன் செய்யும் அதே மாதிரி வேலைகளைத்தான் ஹிஸ்பானிக் என்றழைக்கப்படும் ஸ்பானிஷ் மொழி பேசும் தென்னமெரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் வட அமெரிக்காவுக்கு வந்து செய்வது. வட அமெரிக்கா ஒரே தேசமாக இருக்க, தென்னமெரிக்காவில் குட்டி குட்டி நாடுகள் - அந்தக் குட்டி நாடுகள் ஒரு வேளை இணைந்து ஒரு தேசமாக உருவானால் - அதை இந்தியாவிற்கு ஒப்பிடலாம் - இந்தியா இப்போது சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளும் அப்படி ஒருங்கிணைந்த தென்னமெரிக்காவுக்கு இருக்கும்!!!

நன்றி.

Sundar Padmanaban said...

பிரபுஜி

சொல்ல மறந்துவிட்டேன்.

//"ஜார்ஜ் புஷ்ஷை என்னதான் திட்டினாலும் கோமாளியாகச் சித்தரித்தாலும் 9/11 க்கு பிறகு சுதாரித்துக் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்தி வேறு எந்த தீவிரவாத தாக்குதல்களும் அமெரிக்காவில் நடைபெறா வண்ணம் செய்ததை யாரும் மறுக்கமுடியாது"/

மேற்குறிப்பிட்டதைச் சொல்லி “மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைப் போல அமெரிக்கா தாக்குதலுக்குள்ளாக வாய்ப்பு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?” என்ற கேள்வியை CNN-இன் லேரி கிங் இரண்டு பேரிடம் கேட்க அவர்களின் மறுமொழிகள் சுவாரஸ்யமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தன. இருவரில் ஒருவர் Blocking The Path To 9/11 என்ற விவரணப் படத்தை எடுப்பவர் (எடுத்தவர்?) - இன்னொருவரின் பெயரை நினைவில் நிறுத்த மறந்துவிட்டேன். அவர்களின் உரையாடலின் சாராம்சம் இதுதான்.

ஒருவர் சொன்னது “அமெரிக்கா உள்நாட்டுப் பாதுகாப்பை 9/11க்குப் பிறகு கடுமையாக பலப்படுத்திக்கொண்டதால் இம்மாதிரி தாக்குதல் வருமென்று நினைக்கவில்லை”

இன்னொருவர் ”இல்லவே இல்லை. தீவிரவாதிகள் முன்பை விட வலுவடைந்திருக்கிறார்கள். நிறைய ஆள், பண, தொழில்நுட்ப பலத்தைப் பெருக்கிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் 5 ஆண்டுகளில் தீவிரவாதிகளால் அணு ஆயுத, இல்லது உயிரியல் ஆயுத தாக்குதலுக்கு உலகம் (அமெரிக்கா) ஆளாகும் சாத்தியங்கள் மிக மிக அதிகம். அதற்கான திட்டங்கள் வெகுவேகமான, நேர்த்தியாகத் தீட்டப்பட்டு வருகின்றன என்றே நான் நம்புகிறேன் - கடந்த ஏழு ஆண்டுகளில் அமெரிக்கா தாக்கப்படவில்லை என்பதற்கு அமெரிக்காவின் தற்காப்பு ஏற்பாடுகள் காரணம் என்று சொல்வதைவிட அதைவிடப் பெரிய தாக்குதலுக்கு தீவிரவாதிகள் தயாராகி வருவதால் வேறு தாக்குதல்கள் நிகழ்த்தப்படவில்லை என்பதே முதன்மைக் காரணமாக இருக்க முடியும்” என்றார்.

முதலாமவர் ”அவர்கள் திட்டங்கள் தீட்டிக்கொண்டிருக்கலாம். ஆனால் அத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சக்தி அவர்களிடம் இப்போது இல்லை. ஈராக், ஆப்கானிஸ்தான் என்று அவர்கள் பலமுடன் விளங்கிய பகுதிகளில் அவர்களை பெரிதும் ஒடுக்கியிருக்கிறோம் - ஆதலால் திட்டங்கள் தீட்டினாலும் அதை அவர்களால் உடனடியாகச் செயல்படுத்த முடியாது” என்றார்.

தீவிரவாதிகளால் பெரும் தாக்குதலுக்கான திட்டங்கள் தீட்டப்படுகின்றன என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. எல்லாவிதங்களிலும் சிந்தித்து எம்மாதிரி தாக்குதல்களையும் எதிர்நோக்கித் தயாராக இருக்கத் தேவையான நடவடிக்கைகளை, அதுவும் உடனடியாக எடுப்பதே அமெரிக்கா செய்யக்கூடியது என்று முடித்தார்கள்.

நீதி : உறங்கும் இந்திய அரசு இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும். எங்கெங்கெல்லாம் தீவிரவாதம் தலைதூக்குகிறதோ எந்த ஓட்டு வங்கிக்கும் அஞ்சாமல், யாருக்கும் கூஜா தூக்காமல், கடுமையாக நசுக்கி அதை அழிக்க வேண்டும். இப்போது செய்யத் துவங்கினால்தான் ஒரு பயமற்ற சூழலை இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவால் உருவாக்க முடியும்!

Sundar Padmanaban said...

பிரபுஜி

Blocking the path to 9/11 பற்றி மேலதிகத் தகவல்கள் இங்கே http://www.blockingthepath.com/

நன்றி.

Anonymous said...

எங்கே குண்டு வெடிச்சாலும் "வெடிக்கப்போவுதுன்னு எனக்கு தெரியும், நாந்தேன் சொன்னேல்ல. யாருமே காது வாங்கலே" என்று ஒருத்தன் சொல்லுவான் அவன் தான் தீவிரவாதிக்கெல்லாம் தீவிர இல்ல பயங்கரவாதி. இவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுதோ?

அசோக் said...

சரியான கருத்துகள்....

Anonymous said...

I share your grief.

Can you suggest a solution for keeping this issue alive till India takes adequate steps to avoid any such fiasco in future?

All of us, media first, will forget this issue in 15 days and continue to 'live' normally till we are shaken up by the next one. I already see that the number of blogs for the pacified relationship between Karunanidhi and Maran Sons' exceeding the ones on the terrorist attack!

When are we going to approach issues for what it is really worth?

--Anvarsha

Sundar Padmanaban said...

//"வெடிக்கப்போவுதுன்னு எனக்கு தெரியும், நாந்தேன் சொன்னேல்ல. யாருமே காது வாங்கலே" என்று ஒருத்தன் சொல்லுவான் அவன் தான் தீவிரவாதிக்கெல்லாம் தீவிர இல்ல பயங்கரவாதி.//

ஆனால் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். அப்படி “எனக்குத் தெரியும்” என்று சொல்பவர் வெளியாட்கள் என்று வைத்துக்கொள்வோம் - ஏன் பாக்கிஸ்தான் என்றே வைத்துக்கொள்வோமே - அவர்களுக்குக் கிடைத்த உளவுத்துறைத் தகவல்களை வைத்து இந்தியாவை எச்சரிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் - எச்சரிப்பதோடு அவர்கள் கடமை முடியவில்லை என்றாலுங்கூட அந்த எச்சரிக்கையை மிகவும் தீவிரமாகப் பரிசீலித்து தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்யவேண்டியது யார்? நமது அரசு இயந்திரம்தானே? அதை அலட்சியப்படுத்திவிட்டு பின்பு அசம்பாவிதம் நிகழ்ந்ததும் குய்யோ முறையோ என்று கூக்குரலிடுவதிலும் வீராவேச அறிக்கை வெளியிடுவதிலும் என்ன பலன்? எவனோ எங்கோ சாகிறான் என்ற அலட்சிய மனப்பான்மைதானே? இதே தலைவரின் வீட்டிலோ அல்லது டாய்லட் சீட்டுக்குள்ளோ குண்டு வைத்திருக்கலாம் என்று ஒரு எச்சரிக்கை வந்தால் அரசு இயந்திரம் ஏனோ தானோ என்று அந்த எச்சரிக்கையை அணுகுமா?

முன்கூட்டியே தகவல்தந்து எச்சரிக்கை செய்தவர்களைக் குற்றம் சொல்வதைவிட அந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்துபவர்களைத்தான் கண்டித்து தண்டிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

Sundar Padmanaban said...

அன்வர்ஷா

நன்றி.

//Can you suggest a solution for keeping this issue alive till India takes adequate steps to avoid any such fiasco in future?

All of us, media first, will forget this issue in 15 days and continue to 'live' normally till we are shaken up by the next one. I already see that the number of blogs for the pacified relationship between Karunanidhi and Maran Sons' exceeding the ones on the terrorist attack!
//

பரபரப்புக்காக அலைவது ஒலி, ஒளி, அச்சு கூடகங்கள் மட்டுமல்ல - வலைப்பதிவர்களிலும் சிலர் என்றுதான் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேனே - உண்மை நிலவரம் மிகவும் வேதனைகரமானது அன்வர்ஷா. நம்மூரில் மனித உயிருக்கு மதிப்பு இல்லை. உயிரோடிருக்கும் சக மனிதனிடமே ஜாதி, மத கண்ணாடிகளை அணிந்துகொண்டு பார்த்து நேசம் பாராட்ட யோசிக்கும், மறுக்கும் மக்களாலான இன்றைய சமூகத்தில் இறந்த மனிதர்களுக்கான நினைவுகளை உயிரோடு வைத்திருக்கச் சொல்கிறீர்கள் - நடக்காது - அவரவர் கவலை அவரவர்க்கு என்பதுதான் நிதர்சனம். யதார்த்தம் சில நேரங்களில் மட்டுமல்ல - எல்லா நேரங்களிலும் சுடத்தான் செய்கிறது.

என்னைக் கேட்டால் ஊடகங்கள் வேறு எதிலாவது கவனத்தைத் திருப்பிக்கொள்வது நல்லதுதான். இன்னும் செய்தி தருகிறோம் என்ற பேர்வழியில் என்னென்னவெல்லாம் செய்வார்களோ? இறந்தவர்களின் உறவுகளை நிம்மதியாகத் துக்கம் அனுஷ்டிக்கக்கூட விட மாட்டார்கள் அவர்கள் - பேட்டியெடுத்து, கேள்விகள் கேட்டு - என்று. அதனால் இவர்கள் தொலையட்டும்.

ஊடகங்கள் தலைப்புச் செய்தியில் தொடர்ந்து வைத்திருந்தால் மட்டுமே அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று நீங்கள் நினைத்தால் அந்த நினைப்பை மாற்றிக்கொள்ளுங்கள். நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நினைக்கும் அரசுகள் ஊடகங்களைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை. எவன் செத்தாலென்ன என்று இருக்கும் அலட்சிய அரசுகளுக்கு ஊடகங்கள் இன்னும் இதே செய்தியை ஒரு வருடம் தாங்கியிருந்தாலும் பலனில்லை.

Sundar Padmanaban said...

அசோக்

வருகைக்கு நன்றி.

T Senthil Durai said...

சுந்தர் ,
வணக்கம்
மும்பை செயல்களை ஒளிபரப்பிய இதே ஊடகங்கள் தான் " ஈழ படுகொலைகளை" யும் வேறு விதமாக இந்த உலகினுக்கு காட்டியது.

ஊடகங்கள் செய்த இந்த ஒளிபரப்பினை ( 2008 Dec இந்தோனேசியா நாட்டில் உள்ள பிரம்பணன் கோவில்களை பார்த்துகொண்டு ) மாலை விடுதியில் காணும் போது, உங்களுக்கு ஏற்பட்ட கோபம் எனக்கும் வந்தது !

அது போல 'எல்லாத் திசைகளிலும் எதிரி " - நம் நாட்டுக்கு பொருந்தியது !

இந்து நாடான நேபாள் சீனா பக்கம் சாய விட்டது -
பர்மாவின் இராணுவ ஆட்சியாளர்கள் செய்யும் அட்டுழியங்களை கண்டும் காணாமல் இருப்பது !
ஈழ போரில் ஒன்றும் தெரியாமல் / செய்ய வேண்டியதை மனசாட்சி இல்லாமல் செய்தது !

என் நண்பர்களிடம் அடிக்கடி இதை கூறுவேன் ! ( இலங்கை வழியாக சீனனின் ஆபத்து ! )

நன்றி
த.செந்தில் துரை

www.tamiladvt.blogspot.com
www.tamilepaper.blogspot.com