Sunday, January 18, 2009

காணொளியில் கண்ணொளியற்றவர் - மனந் திறந்த பாராட்டுகள்!


மற்ற தனியார் வணிக ஊடகங்களுடன் போட்டி போட முடியாமல் கற்காலத்தில் இருப்பதாகக் கருதப்படும் தூர்தர்ஷன் இந்த விஷயத்தில் பல காததூரம் அதிரடியாக முன்னேறியிருக்கிறது. யாருடைய சிந்தையில் உதித்த யோசனை இது என்று தெரியவில்லை. யாராக இருந்தாலும் அவர் வாழ்க!

வேறு எதற்கு இல்லாவிட்டாலும் இவ்விஷயத்தில் தூர்தர்ஷன் மற்ற ஊடகங்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. தூர்தர்ஷனுக்கு மனம் நிறைந்த நன்றிகளும், பாராட்டுகளும்! இது கண்ணொளியற்ற, ஆனால் திறமை மிக்க மனிதர்களின் வாழ்வில் ஒளியேற்றும். பல கதவுகள் திறக்கும்!

”உடல் மண்ணுக்கு - மயிர்... ஸாரி.. உயிர் தமிழருக்கு” என்று முழங்கும் தலைவர்கள் சிந்திக்கட்டும் - மக்களும்தான்!

****

இந்தியாவில் முதல் முறையாக கண்பார்வையற்றவர்கள் செய்தி வாசிப்பாளர்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை அறிமுகம் செய்த, தூர்தர்ஷனின் கன்னட மண்டல சேனல், "சந்தனா'வுக்கு பாராட்டும், ஊக்குவிப்பும் குவிகிறது. மஞ்சுநாத், ஸ்ரீனிவாஸ் மூர்த்தி, அசோக் ஆகிய மூவரும் 20ம் வயதுகளில் உள்ள இளைஞர்கள். மூவருமே பிறப்பிலிருந்தே கண்பார்வையிழந்தவர்கள். கண்பார்வையற்றவர்கள் எழுதப்படிக்க உதவும் வகையில், பிரெய்லி முறையை கண்டுபிடித்த லூயிஸ் பிரெய்லி பிறந்த நாளான ஜனவரி 4ம் தேதி, கண்பார்வையற்றவர்களை செய்தி வாசிப்பாளர்களாக அறிமுகப்படுத்தியது, "சந்தனா' சேனல். இது நேயர்கள் மத்தியில் பெரிதும் உற்சாகத்தையும், பரவசத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, இனி அதிகமான எண்ணிக்கையில் செய்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப, "சந்தனா' திட்டமிட்டுள்ளது.

"கண்பார்வையற்றவர்கள் செய்தி வாசிக்கும் நிகழ்ச்சிக்கு, நாங்கள் எதிர்பாராத அளவுக்கு வரவேற்பும் ஊக்குவிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி அறிமுகமான தினத்தில் இருந்து, பாராட்டுக் கடிதங்கள் வெள்ளம் போல குவிகின்றன. இன்னும் இரண்டு மாதங்களில், மாதம் தோறும், கண்பார்வையற்ற இந்த மூன்று பேரும் இடம் பெறும் வகையில், சிறப்பு செய்தி நிகழ்ச்சியை துவக்க திட்டமிட்டுள்ளோம்,'' என்று பெங்களூரு தூர்தர்ஷன் நிகழ்ச்சி நிர்வாகி ராஜேந்திர கட்டி கூறினார். இவர்கள் மூவரும், செய்தி வாசிப்பாளர்களாக பணியமர்த்தப்படுவதற்கு முன், ஒரு மாதத்துக்கு தினமும் 30 நிமிடம் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு செய்தி வாசிக்கும் முறை, அப்போது முகபாவங் களை மாற்றும் முறை போன்ற கலைகள் கற்றுத்தரப்பட்டன.

கண்பார்வையற்ற மூர்த்தி, தற்போது பி.ஏ., முதலாண்டு மாணவர். நல்ல குரல் வளம் படைத்தவர். இப்போது, கல்லூரியில் அவர் ஒரு "ஹீரோ'வாகி விட்டார். அவரிடம் ஆட்டோகிராப் கேட்டு, சக மாணவர்கள் முற்றுகையிடுவது அன்றாடம் நடக்கும் விஷயமாக போய்விட்டது. ""மற்றவர்களைப் போலவே, என்னாலும் சிறப்பாக செய்திகளை வாசிக்க முடிகிறது என்பது பெருமையாக இருக்கிறது,'' என்கிறார் மூர்த்தி. மஞ்சுநாத் என்பவர் பி.ஏ., இரண்டாவது ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார்.

செய்தி வாசிப்பாளராக மாறியது குறித்து மஞ்சுநாத் கூறியதாவது: தூர்தர்ஷனின், "சந்தனா' சேனலில் செய்தி வாசிப்பது எனக்கு பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது. பிறப்பிலேயே, கண்பார்வையில்லாத நான், என் வாழ்க்கை முழுவதும் பல்வேறு அவமதிப்புகளையும், கடினங்களையும் சந்தித்து வந்தேன். ஆனால், செய்தி வாசிப்பாளரானதும் என் வாழ்க்கையே மாறிப்போய்விட்டது. அடுத்து வரும் மாதங்களில் மேலும், அதிக எண்ணிக்கையில் செய்தி வாசிப்பு நிகழ்ச்சிகளில், பங்கேற்க முடியும் என்று நம்புகிறேன். இவ்வாறு கூறிய மஞ்சுநாத்தின் முகத்தில் நம்பிக்கை ஒளி வீசியது.

இவர்கள் இருவர், அரசு நிறுவனமான தூர்தர்ஷனின் செய்தி வாசிப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும், தனியார் நிறுவனம் ஒன்றும், பார்வையற்ற அசோக்கை செய்தி வாசிப்பாளராக பணியமர்த்தி உள்ளது. இது தொடர்பாக அசோக் கூறியதாவது: கண்பார்வையற்றவர்கள் மீது மற்றவர்களின் கவனம் திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இது செய்தி வாசிப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள எங்கள் மூவருக்கும் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மற்றவர்களை விட நாங்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. நாங்கள் மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பது, எங்கள் வாழ்க்கையில் நாங்களும் மற்றவர்களை போல சுயமாக முன்னேற, அவர்களது அனுபவங்களைப் பற்றித்தான்; அவர்களிடம் இருந்து கருணையையோ, இரக்கத்தையோ எதிர்பார்க்கவில்லை. அசோக்கை செய்தி வாசிப்பாளராக பணியமர்த்தியுள்ள முன்னணி கன்னட சேனலுக்கும், நேயர்களிடம் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது.

-நன்றி. தினமலர்.காம்

No comments: