Wednesday, December 30, 2009

வாழ்த்துகள்!


12/30/2009
ஒபாமா ஹவாயில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். மூன்று வாரம் ஊருக்குப்போய்விட்டு நேற்றிரவு திரும்பிய Big Boss இன்று காலை அலுவலகத்திற்கு வந்தாகிவிட்டது. நாளையிலிருந்து நாலு நாள் லீவு. Holiday lunch என்று நேட்டிக் மினர்வா இந்திய உணவு விடுதிக்கு எல்லாருமாய் சாப்பிடப் போனோம். நிறைய அமெரிக்கர்களும் ஓரிரண்டு சைனீஸ்களும் தென்பட்டு டேபிள் கிடைக்க பத்து நிமிடமாயிற்று. சென்னைப் பட்டணத்தின் அருமை பெருமைகளைப் பற்றியும் ஆயுர்வேதம், ஓமியோபதியின் மகிமைகளைப் பற்றியும் அரட்டையடித்துக்கொண்டே மூன்று ப்ளேட் வரை பஃபே லஞ்ச் சாப்பிட்டு பல்குத்திக்கொண்டே அலுவலகம் திரும்பினேன். மதியம் தூக்கம் வராமல் வேலை செய்யவேண்டும். வெளியே பத்து டிகிரி ஃபாரன்ஹீட்டில் சூரியன் வெளிச்சமாக மட்டும் இருக்க பலமாக வீசும் காற்றில் மைனஸ் இருபதைப் போல “உணர்வதாக” வானிலை ஆராய்ச்சிக் காரர்கள் நிமிடத்துக்கொருதரம் ஸாட்டிலைட் எடுத்த வடஅமெரிக்க வரைபடத்தைக் காட்டி கலர்கலரான மேகங்களைச் சுட்டிக்காட்டி வரப்போகும் பனிப்புயலைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அலுவலகம் அமைதியாக இருக்கிறது. வேட்டைக்காரன் படம் பற்றி பேச்சு வர, இட்லிவடையில் வந்திருந்த விமர்சனத்தை மற்றவர்களுக்கு மின்னஞ்சல் செய்தாயிற்று. நேற்றுதான் படித்தேன். அதற்குள் எல்லா கடிஜோக்குகளையும் (பின்னூட்டங்களில் வந்தவை உட்பட) பதிவிலிருந்து தூக்கிவிட்டு இட்லிவடை “களங்கத்தை”த் துடைக்க முயன்றிருப்பது சற்று சிறுபிள்ளைதனமாகத் தோன்றியது. குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ்க்கு முதல்நாளிலிருந்து மூணாம் தேதிவரை விடுமுறைவிட்டாயிற்று. நாளைக்கு நியூயார்க் செல்லலாம் என்று திட்டம் வீட்டில் எல்லாருக்கும் சளிபிடித்துக்கொண்டு படுத்துவதால் காலி. நல்லவேளை போன வருடம் போல பனி பெய்து தாளிக்கவில்லை. ஒரு வாரம் முன்பு அடித்த ஓரடி பனி பிறகு தொடர்ச்சியாக முப்பதுக்கு மேலே நிலவிய தட்பவெப்பத்திலும் மழையிலும் கரைந்து கிட்டத்தட்ட காணாமலேயே போய்விட்டது. இந்த வருடமும் White Chrismas ஆக அமைந்ததில் உள்ளூர்காரர்களுக்கு சந்தோஷம். புத்தாண்டிற்காக பாஸ்டன் downtown இல் ஆங்காங்கே நிறுவப்பட்டிருந்த பனிக்கட்டி சிற்பங்கள் உருகுவதாக அலகிலிருந்து சொட்டும் நீருடன் கழுகுச்சிற்பத்தின் படத்தினை பாஸ்டன்.காம்-இல் பார்த்தேன். மூக்கு ரொம்பவும் ஒழுகாமலிருந்தால் நாளை மாலை முடிந்தால் வழக்கம்போல First Night Boston-க்குச் செல்லவேண்டும்.

12/31/2009
இதை எழுதிக்கொண்டிருக்கையில் ஜன்னல் வழியாகப் பார்த்தால் மணல்மாதிரி பனி பெய்ய ஆரம்பித்துவிட்டது. Massachusetts Emission Test செய்து வண்டியின் wind shield-இல் புது ஸ்டிக்கரை ஒட்ட இன்றே கடைசி தேதி. அந்தப்பக்கம் பாடும் நிலா பாலுவை வருடம் முழுதும் உயிரோடு வைத்துக்கொண்டிருக்கும் கோவை ரவீ அவர்கள் ஆயிரமாவது பதிவை நெருங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. புத்தாண்டில் மறுபடியும் களத்தில் குதித்துவிடுகிறேன் ரவீ. பனிபெய்துகொண்டிருப்பதால் வெளியே செல்வதாயிருந்தால் இப்போதே சென்றால் உண்டு. இரண்டு மூன்று இஞ்சுகளுக்கு மேல் போய்விட்டால் அதை தள்ளிச் சுத்தப்படுத்தாமல் வண்டியை எடுக்கமுடியாது. மூக்கு வேறு நொணநொணவென்று மஹா எரிச்சல். ஸ்ரீரங்கத்திற்கு தொலைபேசி பெற்றோர்கள் உற்றோர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்து சொல்லியாகிவிட்டது. கைப்பேசிக்கு வரும் SMS-க்கு பதில் வாழ்த்து அனுப்பியாகிவிட்டது. இன்னும் சில அழைப்புகள் பாக்கி. அசதியாக இருப்பதால் நாளைக்காலை அழைத்துக்கொள்ளலாம் என்று இருக்கிறேன். 01/01/2009...சட் 01/01/2010 அன்று கூட புத்தாண்டு வாழ்த்து சொல்லலாமே. இனிமேல் தேதி எழுதும்போது 2009 என்று எழுதாமல் கவனமாக இருக்கவேண்டும். குறிப்பாக காசோலை எழுதிக் கிழிக்கும்போது. நாளைக்கு மழையும் பனியும் என்று கதம்பமாக வானிலை அறிக்கை வாசிக்கிறார்கள். பாஸ்டன் போனமாதிரிதான்.

உடம்பு சரியில்லாமல் இருக்கும் போது கூட இந்து பாழும் கம்ப்யூட்டர் எழவைக் கட்டிக்கொண்டு அழ வேண்டுமா என்று இடித்துரைத்த மனைவியின் முறைப்பு முதுகைச் சுடுவதால் இத்துடன் நிறுத்தி வலைப்பதிவர்கள் வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் சொல்லிக்கொள்கிறேன்! அடுத்த வருடம் ட்விட்டரைப் போல ஏதாவது பிறந்து iPhone போல Apple எதையாவது 4G பேசியை வெளியிட்டு எல்லாரும் அவற்றின் மேல் படையெடுத்து Gadget Geek ஆக முதலாளிகள் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக்கொண்டு அலுவல், சொந்த வேலை என்று எல்லாவற்றையும் அலுவலகக் கணிணியில் ஆழ்ந்து அரைக்கண்களுடன் செய்துகொண்டு இன்று போல் என்றும் வாழ்வோமாக!

புத்தாண்டு வாழ்த்துகள்!

No comments: