Sunday, August 15, 2010

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!





பிறந்ததிலிருந்தே சுதந்திரத்தைச் சுவாசித்துக்கொண்டிருக்கும் நாம் அதை வாங்கிக்கொடுத்தவர்கள் அனுபவித்த வலியையோ, சிந்திய வியர்வையோ சிறிதும் உணர்வதில்லை. காலில்லாதவனுக்குத்தான் தெரியும் அதன் அருமை. நாம் சுதந்திரத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை - அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதில்லை - அதை வாங்கித்தந்தவர்களை மதிப்பதில்லை - ஆகஸ்ட் 15 அன்று எந்தப் புதிய படம் வெளியாகியிருக்கிறது என்று திரையரங்கங்களுக்குப் படையெடுத்துப் போகும் அரைக்கண் இந்தியர்களாகவே இருக்கிறோம். அரசு விடுமுறைகளில் இது இன்னொரு நாள் - ஞாயிற்றுக்கிழமை வந்து தொலைத்துவிட்டது என்று கடுப்பில் இருப்பார்கள் தனியார்கள். அதனாலென்ன என்று திங்கட்கிழமை விடுமுறை விட்டிருப்பார்கள். பின்னே - அது எ்ப்படி சல்லிசாக ஒரு நாளை விட்டுக்கொடுக்க முடியும்?

குண்டூசியால் காகிதக்கொடியை சட்டையில் குத்திக்கொண்டவர்களுக்கும். ஞாயிறுதானே விடுமுறைதானே என்று இன்னும் தூங்கிக்கொண்டிருப்பவர்களுக்கும், பல்லே விளக்காது பெட்காஃபி பருகிக்கொண்டிருப்பவர்களுக்கும் FDFS போகத் திட்டமிட்டுக் கிளம்பிக்கொண்டிருக்கும் இளையபாரதத்தினாய்களுக்கும், எவன் எக்கேடு கெட்டுப் போனாலென்ன என்று நாட்டை தினமும் சுரண்டிக் கொள்ளையடித்து சொத்தை (வெளிநாட்டில்) சேர்ப்பதையே முழுநேரத் தொழிலாக வைத்திருக்கும் அரசியல் வியாதிகளுக்கும், ஊழல் விஞ்ஞானிகளுக்கும் (அதாவது விஞ்ஞான ரீதியான ஊழல் செய்வதில் Subject Matter Experts), ஓட்டுக்காக இலவசங்களைக் கொடுத்து ஏழை மக்களை ஏழையாகவே, பிச்சைக்காரர்களாகவே வைத்து, நாட்டின் கடன்சுமையை அனுதினமும் ஏற்றிக்கொண்டிருக்கும் ஓட்டுப் பொறுக்கிகளுக்கும், டாஸ்மார்க் குடிமகன்களுக்கும், இவற்றில் எதைப்பற்றியும் கவலைப்படும் நிலையில் இல்லாமல் தினமும் சோற்றுக்கு லாட்டரியடித்துக்கொண்டிருக்கும், நாளை விடிந்தால் என்ன செய்வது என்று கையைப் பிசைந்துகொண்டு, வயிற்றைப் பிடித்துக்கொண்டு, மின்வெட்டில் கொசுக்கடியில், நீர்வராத குழாயை வெறித்துப்பார்த்துக்கொண்டிருக்கும் சாதாரண இந்தியக் குடிமகன்களுக்கும்.....இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

தன்னலம் கருதாது வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி, உயிரையும் கொடுத்து நாளைய தலைமுறையாவது சுதந்திர நாட்டில் சுதந்திரமாக இருக்கட்டும் என்று நமக்குச் சுதந்திரத்தை வாங்கித்தந்துவிட்டுப் போன கடவுளுக்குச் சமமான மாமனிதர்களுக்கும், தியாகிகளுக்கும் நன்றிகள் - அஞ்சலிகள் - பிரார்த்தனைகள்.

நமக்குத்தான் பிறப்பிலிருந்து சாவு வரை சினிமா கூட வேண்டுமே. இது மட்டும் விதிவிலக்கா என்ன - இருந்தாலும் அதற்காக மன்மத ராசா பாட்டைப் போடாமல் உருப்படியாக இதைப் பதிகிறேன்.

1 comment:

கானகம் said...

அருமையான பதிவு. வித்தியாசமாய்ச் சொல்லி புரிய வைக்க முயன்றிருக்கிறீர்கள். நமது மூத்தோர்கள் பாத்திரம் அறிந்து பீச்சையிடவில்லை. தமது வாரிசுகள் இதற்குத் தகுதியானவர்களா என்பதை அவர்கள் எண்ணிப்பார்த்திருக்கலாம்..நமது ஊழல் அரசியல்வாதிகள் கொள்ளையடிப்பதற்காகவே நமது நாடு சுதந்திரம் பெற்றதுபோல் இருக்கிறது இன்றைய இந்தியா.. அடுத்த சுதந்திரதினத்தில் கொஞ்சமாவது சொரனை வந்தால் எவ்வளவு நலமாய் இருக்கும்?