Tuesday, July 26, 2011

சொர்க்க வாசல்



வற்றாயிருப்பு வீட்டு எதிரே பெருமாள் கோவில் சொர்க்கவாசல். கோவில் தெருவைப் பிளந்து கிழக்கு பார்த்து இருக்கும். கோவில் முன்பு நன்னீர் கிணறும் பின்பக்கம் ஒரு தண்ணீர்க்குழாயும் இருக்கும். நான்கு தெருப்பெண்களும் அவரவர் குடங்கள், வாளிகள் கொண்டு வந்து நீர் இறைப்பார்கள். பிடிப்பார்கள். காலையில் முதலாளாகப் போய் நீர் இறைத்தால் வறண்ட கயிறு உராய்ந்து உள்ளங்கை எரியும். சற்று கழித்துப் போனால் நீரில் நனைந்து மிருதுவாகி இறைப்பது சுலபமென்பதால் தாமதமாகத்தான் போவோம். கிணற்றுக்குச் சற்று நடக்கவேண்டும். குழாய்தான் அருகில். ஆனால் கிணற்றில் நீரிறைப்பதை வேடிக்கைபார்ப்பதற்காகப் போவதுண்டு. ஆள்நடமாட்டமில்லா மதிய வேளைகளில் எட்டிப்பார்த்தால் பாதாளத்தில் நெளியும் வானமும் சில்லவுட்டாக என் உருவமும் தெரியும். லேசாக பயமாகக்கூட இருக்கும்.

சொர்க்கவாசலுக்கு முன்பு ஐந்தடி அகலத்தில் ஐந்து கற்படிக்கட்டுகள் இருந்தன. ஒவ்வொரு படிக்கும் ஒரு பெயர் வைத்து விளையாடுவோம். Bank, Ocean, River, Water, Sea என்பதே அவற்றின் பெயர்கள். தரைக்குப் பெயர் Land. டand-ஐ ஒட்டி இருந்தது Sea. மேலே இருக்கும் படி Bank. தரையில் நின்றுகொண்டு பார்த்தால் Bank என் தோளுயரத்தில் இருந்தது.

வரிசையாக படிகளின் ஓரத்தில் நின்று கொள்ள விளையாடுபவன் முதலில் வந்து Land-இல் நின்று கொள்ள எதிராள் சொல்லும் படியில் ஏற வேண்டும். வேறு எந்தப் படியிலும் உடல் படக்கூடாது என்பதே விளையாட்டு. பட்டால் அவுட். கீழே நின்றதும் முதலில் சுலபமாக Ocean என்பார்கள். ஒரே தாண்டில் அந்த மூன்றாவது படிக்குப் போய்விடலாம். பிறகு Water; அப்புறம் Bank என்று மாறி மாறி கொஞ்சநேரம் தாண்டியதும் மறுபடியும் Land-க்குப் போகச் சொல்வார்கள். அங்கிருந்து "Bank" என்பான். இதுதான் சவால். அங்கிருந்து Bank படியில் மற்ற படிகளில் உடல்படாமல் ஏறுவது என்பது அசாதாரணமான விஷயம். ஒருகாலில் நின்று கொண்டு இன்னொரு காலை நீட்டினால் Bank எட்டாது. அங்கு போவதற்கு என்னென்னமோ சர்க்கஸ் வேலைகள் செய்வார்கள்.

சற்று பின்வாங்கி கைகளைத் தரையில் ஊன்றி தலைகீழாக நின்று ஒரு தாவு தாவி Bank-இல் ஏறிவிடுவான் ஜீவா. உயரமான பையன்கள் கைகளைத் தரையிலூன்றித் திரும்பி பாதங்கள் Bank-இல் பட Land-க்கும் Bank-க்கும் பாலம் போல சாய் கோணத்தில் நிற்பார்கள். உடனே "Land" என்று அறிவிப்பு ஒலிக்க, கால்களை நெம்பி எடுக்க முடியாமல் அவுட்டாகிவிடுவார்கள். என்னால் Land-லிருந்து Ocean-க்குத்தான் பெரும்பாலும் போக முடிந்தது. வற்றாயிருப்பில் இருந்த வரை என்னால் Bank-படியை எட்டவே முடியவில்லை.

ராமகிருஷ்ணா திரையரங்கில் இரண்டாம் ஆட்டம் எம்ஜியார் படம் பார்த்துவிட்டு வீட்டுக்குள் நுழையாமல் Bank-இல் படுத்துப் பலமுறை தூங்கியிருக்கிறேன். தாத்தா டிக்கெட் கொடுத்து முடித்துவிட்டு கணக்கையெல்லாம் செட்டியாரிடம் பைசல் பண்ணிவிட்டு வந்து தங்கபஸ்பம் ”போயிலை”யை கொஞ்சநேரம் குதப்பித் துப்பிவிட்டு Ocean-மீது படுத்துத் தூங்குவார். பகல்வெயில் சூடேறிய பாறைப் படிகளின் உஷ்ணம் இரவு முழுதும் முதுகில் இதமாகப் படிந்திருக்கும். அதிகாலை விடியுமுன் தெருப்பெண்மணிகள் வாளிகளுடன் வெளிப்பட்டு மண்தரையில் பளேரென்று நீரைத் தெளித்துக் கோலமிடுவார்கள். நீர் தெளிக்கப்படும் ஓசையில் லேசாக உறக்கம் கலையும். சிலசமயம் அத்தைமார் வாசலிலிருந்து தெளிக்கும் நீரின் சில துளிகள் முகத்தில் பட்டு எரிச்சலாக முணுமுணுத்துக்கொண்டு ஒருக்களித்து முதுகுகாட்டிப் படுப்பேன். பால்காரர் சைக்கிளில் வந்து பால் ஊற்றும் போது எழுந்து தோளில் துண்டைப் போட்டுக்கொண்டு தெற்குத்தெருதாண்டி சிவன்கோவிலுக்கு அப்பால் வயல்வெளிகளில் இருக்கும் பிரம்மாண்ட விவசாயக்கிணறுகளில் குளிக்கக் கும்பலாகக் கிளம்பிவிடுவோம்.

வேலைவெட்டியில்லாத அக்ரஹாரத்து இளைஞர்கள், நடுத்தரவயதுக்காரர்கள் சொர்க்கவாசல் படிக்கட்டுகளில் அமர்ந்து அரட்டையடிப்பார்கள். நாங்கள் பள்ளி முடிந்து வந்ததும் எங்கள் விளையாட்டைத் தொடர்வதற்காக இடத்தைக் காலிசெய்துவிடுவார்கள்.

வருடத்திற்கு ஒரு முறையோ என்னவோ மட்டும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு கருடவாகனம், மயில்வாகனம் என்று வெளிவந்து பல்லக்கில் பெருமாளைத் தூக்கி வலம் வருவார்கள். எங்கள் வீட்டுமுன் கூட்டம் அம்மும். அந்தப் படிகள்தான் எங்கள் விளையாட்டு மைதானம். சொத்து. கோவிலின் பிரம்மாண்ட சுவரையொட்டி இட்லித்தட்டுபோன்று குழிகள் தோண்டி கோலிகள் எறிந்து விளையாடுவோம். “பேந்தா” என்றொரு கோலி விளையாட்டும் பிரபலம். தெருவில் கிட்டிப்புள் தூள் பறக்கும். சைக்கிள் டயர்களையும், ரிம்களையும் குச்சியொன்று வைத்துக்கொண்டு அசுரவேகத்தில் இப்புறமும் அப்புறமும் செலுத்தி ஓடுவார்கள் பையன்கள். எதிரெதிரே நின்றுகொண்டு அவரவர் “வாகனத்தை” வேகமாக உருட்டி மோதச் செய்வது பிரபலம். ஸ்கூட்டர் டயர் ஒன்றை வைத்திருந்த பையன் தான் சாம்பியன். ஸ்கூட்டர் டயருடன் மோதி சைக்கள் சக்கரங்கள் ஜெயிப்பது சாத்தியமே இல்லை. கம்பியுடைந்து உருவமிழந்த சைக்கிள் டயர்களை ஏழைப் பையன்கள் ஓட்டிக்கொண்டு போவார்கள். எட்டு மாதிரி வளைந்து வளைந்து எலும்பில்லா விலங்கு போல ஓடும் அவை.

பம்பரங்களால் பம்பரங்களைக் குத்தி ”ஆக்கர்” வைப்போம். இதயம் மாதிரி வளைவு வளைவாக சந்தனக் கலர் கட்டையில் செய்து மேலே தலையில் வண்ணங்களெல்லாம் தீட்டி அலங்காரமாக வரும் பம்பரங்கள் பார்க்கக் கவர்ச்சியாக இருந்தாலும் எங்களுக்கெல்லாம் பிரமிடைத் திருப்பிப்போட்டது போல இருக்கும் அடர்பழுப்பு கட்டையில் செய்த வளைவுகளற்ற சாதாரண தோற்றத்திலிருக்கும் பம்பரங்கள்தான் பிடித்தமானவை. குறிபார்த்துச் சுண்டி பம்பரங்களைக் குத்திப் பெயர்க்க அவை சிறந்தவையாக இருந்தன. ஜீவா அப்படியே பம்பரத்தைத் தரையில் குத்தியெழுப்பி உள்ளங்கையில் ஏந்தி என் உள்ளங்கையில் இறக்க கிர்ரென்று குறுகுறுக்கும். அதை திண்ணைத் தரையில் விட்டால் சத்தமின்றி நீண்டநேரம் ரொங்கும்.

இருபத்திநாலு மணிநேரமும் படிகள் சொர்க்கவாசலிலேயே கிடந்தன. ஊர்விட்டு வந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்களாகிவிட்டன. அதற்கப்புறம் நடுநடுவே ஓரிரு தடவைகள் மட்டுமே போக வாய்ப்புக்கிடைத்துப் போனபோதும் படிகளைப் பார்க்கவில்லை. வீட்டையும் விற்றுவிட்டதால் சொர்க்கவாசல் பக்கம் எந்த வேலையும் இல்லை.

போனவருடம் என் அண்ணன் மதுரையிலிருந்து குடும்பத்தை அழைத்துக்கொண்டு குழந்தைகளுக்கு “பிறந்த ஊரைக்” காட்டுவதற்காக வற்றாயிருப்புக்குச் சென்று விட்டு வந்தான். “எப்படி இருக்கு வற்றாப்?” என்று கேட்டதற்கு, எட்டிப்பார்த்த பெருமாள்கோவில் முன்புறக் கிணற்றின் கைப்பிடிச் சுவர் இப்போது முழங்கால் உயரமே இருக்கிறதாம். ராட்டினமெல்லாம் காணாமல் போய் கிணற்றுக்குள் போர்வெல் போட்டு குழாயில் தண்ணீர் பிடிக்கிறார்கள் என்றான்.

“நம்ம வீட்டுக்குப் போனேன். இப்ப இருக்கற வீட்டுக்காரர் நல்லா மெயின்டெய்ன் பண்றார். எங்களை வரவேற்று அப்பா பத்தி விசாரிச்சார்”.

சொர்க்கவாசல் பற்றிப் பேச்சு வந்தது.

”இப்ப பாத்தா Bank-ம் Ocean-ம் மட்டும்தான் வெளியே தெரியறது. மத்ததெல்லாம் மண்ணுக்குள். ரோட்டைப் போட்டுப்போட்டு தெருவே மேடாகி வீடெல்லாம் கீழே போயிடுச்சு” என்றான்.

சோகமாக இருந்தது.

***

1 comment:

குமரன் (Kumaran) said...

இடுகையின் முதல் வார்த்தையால் உங்கள் வீடு வற்றாயிருப்பில் எங்கே இருக்கிறது என்று ஒரு புரிதல் நன்றாகக் கிடைக்கிறது. நிறைய முறை அந்தப் பக்கமாகப் போயிருக்கிறேன். :-)

கிணறு நினைவிருக்கு. கோவில் பின்புறம் இருக்கும் குழாய் நினைவில்லை. இராமகிருஷ்ணா தியேட்டர், தெற்குத் தெரு, சிவன் கோவில், வயல் கிணறுன்னு ஒவ்வொன்னா நினைவுக்கு வருது. எனக்கும் உங்க ஊரை விட்டு வந்து 18 வருஷம் ஆச்சு. படிக்கிறப்ப 93ல போயிட்டு வந்தது.