Thursday, September 22, 2011

Black or White

Black or White
உச்ச நீதிமன்றம் மனுக்களை நிராகரித்த நிலையில் நேற்று இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கட்டக்கடைசி நொடியில் அமெரிக்கா மட்டுமல்லாது உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் எழுந்த எதிர்ப்புக்குரல்களையும் மீறி, கருணை மனுக்களையும், தடைஉத்தரவு கோரிய விண்ணப்பங்களெல்லாம் நிராகரிக்கப்பட்டு ட்ராய் டேவிஸ் என்ற ஆஃப்ரிக்க அமெரிக்கர் விஷஊசி செலுத்தப்பட்டு கொல்லப்பட்டது ஜார்ஜியா மாகாணத்தில்.

தென்னக மாநிலமான டெக்ஸஸில் வெள்ளையின நிறவெறிக் கும்பலின் உறுப்பினரான லாரன்ஸ் ரஸ்ஸல் ப்ரூவர் என்பவருக்குக் கருப்பரான ஜேம்ஸ் ஜூனியரைக் கொன்ற குற்றத்திற்காக நேற்றிரவு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஜேம்ஸை சரக்கு வாகனம் ஒன்றின் பின்புறம் சங்கிலியால் பிணைத்துத் தரதரவென கரடுமுரடான சாலையில் இழுத்துச்சென்று வாகனத்தை ஓட்டிக் கொன்றார் ரஸ்ஸல் என்பது குற்றம். டெக்ஸஸின் சமீப கால வரலாற்றில் மக்களை அதிரவைத்த நிறவெறித் தாக்குதல் சம்பவம் அது. விஷ ஊசி ஏற்றப்படுவதற்கு முன்பு கடைசியாக எதாவது சொல்ல விரும்புகிறாரா என்று கேட்கப்பட்டதற்கு “சொல்வதற்கு என்னிடம் எதுவுமில்லை” என்று சொல்லி ஆழ்ந்த பெருமூச்சுகளை உள்ளிழுத்து தூரத்தே ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்த பெற்றோரைப் பார்த்துவிட்டு கண்களை மூடிக்கொண்டாராம். வலது விழியோரம் லேசாகக் கண்ணீர் ததும்ப, ஊசி ஏற்றப்பட்டு பத்தாவது நிமிடத்தில் அவர் உயிர் பிரிந்தது.

 ஜேம்ஸ் கொல்லப்பட்ட தினம் ஜூன் 7, 1998. ஹூஸ்டன் நகரத்திலிருந்து நூற்றிருபத்தைந்து மைல் தூரத்திலிருக்கும் ஜாஸ்பர் என்ற குறுநகரத்தில் வசித்தவர். வேலை செய்யும் திறனிழந்தவர்களுக்கான அரசு வழங்கும் Disability கருணைத் தொகையில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தவர். சொந்தமாக வாகனம் எதுவும் இல்லாது எங்கு சென்றாலும் நடந்தே செல்லும் பழக்கத்தையுடையவர். அதிகாலை இரண்டு மணியளவில் சாலையோரமாக நடந்துகொண்டிருப்பதைச் சிலர் பார்த்திருக்கிறார்கள். சிறிது நேரம் கழித்து சரக்கு வாகனத்தின் பின் பக்கம் அவர் பயணித்ததைப் பார்த்திருக்கிறார்கள். அதற்கு ஆறுமணி நேரம் கழித்து சாலையில் அரைபட்ட சதைப்பிண்டக் குவியலைப் பார்த்தவர்கள் வழக்கமாக நெடுஞ்சாலையில் அடிபட்டுக் கிடக்கும் ஏதோவொரு பிராணி என்று நினைத்திருக்கிறார்கள். பின்பு மனித உடல் பாகங்களும் சிதறிக்கிடந்ததைப் பார்த்து அதிர்ந்து காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்துப் பார்க்க கைகலப்பு நடந்த தடயங்களும், கைரேகைகளும், ரத்தம் படிந்த கால் தடங்களும் கண்டுபிடிக்கப்பட்டு விரைவாக விசாரணை, ஆய்வகப் பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டு குற்றவாளிகளாக மூன்று பேரைப் பிடித்து வழக்கு நடத்தி குற்றம் நிரூபிக்கப்பட்டு மூவரில் ஒருவரான ரஸ்ஸலுக்கு நேற்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது. இரண்டாவதாக ஜான் வில்லியம் கிங் என்பர் மரண தண்டனை நிறைவேற்றப்படக் காத்திருக்கிறார். மூன்றாமவரான ஷான் பெர்ரிக்கு ஆயுள்தண்டனை விதித்திருக்கிறாரகள் ரஸ்ஸலுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்புக் குரல்களோ ஆர்ப்பாட்டங்களோ அவ்வளவாக எழவில்லை. அமெரிக்காவில் நிறவெறி என்பது நீறுபூத்த நெருப்பாக இருக்கும் விஷயம். நம்மூர் சாதிவெறி மாதிரி. 

ட்ராய் டேவிஸ் விஷயம் சற்று குழப்பமானது. 1989-இல் துரிதஉணவகம் ஒன்றின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மார்க் மெக்ஃபெய்ல் என்ற போலீஸ் அதிகாரியைச் சுட்டுக் கொன்றதாக டேவிஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் கொலைக்கு உபயோகிக்கப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப் படவில்லை. நேரடி சாட்சியங்கள் பலர் தங்கள் நிலையை மாற்றிக்கொண்டுவிட்டார்கள். கடைசி நேர தடையுத்தரவுகளால் இரண்டு முறையாவது கடந்தாண்டுகளில் அவர் மரணத்திலிருந்து தப்பித்திருக்கிறார். ஆணித்தரமான சாட்சியங்கள் இல்லை என்று அவர் சார்பாக வழக்கறிஞரக்ள் எவ்வளவோ வாதாடியும் கீழ், மேல்கோர்ட்டுகள் எல்லாம் தண்டனையை உறுதிசெய்துவிட, கடைசியில் உச்ச நீதி மன்றத்திற்குப் போயும் பிரயோஜனமில்லாது போயிற்று. 

ஊசியேற்றுமுன்பு டேவிஸ் சொன்னது “சம்பவம் நடந்த அன்று நான் துப்பாக்கி எதுவும் வைத்திருக்கவில்லை. மார்க்கை நான் சுடவில்லை”. பார்வையாளர்களாக வந்திருந்த அவரது சகோதரரிடமும் மகனிடமும் ”இந்த இரவு இங்கேயே இருந்து நடப்பதைப் பாருங்கள். தொடர்ந்து இந்த வழக்கை ஆழமாக விசாரித்து உண்மையை வெளிக்கொணரக் கோருங்கள்” என்றார் டேவிஸ். பின்பு தனக்கு தண்டனை நிறைவேற்ற நின்றிருந்த அதிகாரிகளைப் பார்த்துச் சொன்னது ”கடவுள் உங்களிடம் கருணை காட்டட்டும்”. சரியாக இரவு 10:54 மணிக்கு ஊசியேற்றி 11:08 மணிக்கு டேவிஸின் உயிர் பிரிந்தது. 

அதற்குச் சில மணிநேரம் முன்பாக சிறைக்கு வெளியே திரண்டிருந்த பெருங்கூட்டம் தொடர்ச்சியாக மரணதண்டனையை எதிர்த்துக் கோஷமிட்டுக்கொண்டிருந்தது. அட்லாண்ட்டா, வாஷிங்ட்டன் டிஸியின் வெள்ளை மாளிகை முன்பு என்று அமெரிக்காவின் பல நகரங்களிலும் போராட்டம் நடந்து. அது தவிர பிரான்ஸ் போன்ற தேசங்களிலும் நூற்றுக் கணக்கில் கூட்டம் கூடி "I am Troy Davis" என்று எழுதிய அட்டைகளை ஏந்தி மக்கள் போராட, மரண தண்டனையை ரத்து செய்யக் கோரிய விண்ணப்பங்களில் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் போன்ற பிரபலங்கள் உள்ளிட்ட பத்து லட்சம் பேருக்கு மேலாகக் கையெழுத்திட்டிருந்தார்கள். ஃபேஸ்புக் ட்விட்டர் வலைப்பதிவுகள் வலைத்தளங்கள் என்று அனைத்து சமூகவலைத் தளங்களிலும் எல்லாரும் எதிர்ப்புக் குரல் எழுப்பினார்கள். அன்று காலையில் கூட “உண்மையறியும் சோதனை”க்கு தன்னை உட்படுத்தக் கோரிய டேவிஸின் மனுவும் நிராகரிக்கப்பட்டது. தடைகோரிய கடைசி நேர வழக்கால் தண்டனை நான்கு மணி நேரம் தாமதமானது. அதை உச்ச நீதி மன்றம் நிராகரித்த நிலையில் இரவில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அத்தகவல் சிறைக்கு வெளியே கசிய குழுமியிருந்த நூற்றுக்கணக்கானவரிடம் கனத்த அமைதி. இரவு கரைய திரண்டிருந்த கூட்டமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து போனது. நிரபராதி தண்டிக்கப் பட்டிருக்கிறார் என்று பரவலாக அபிப்ராயம் நிலவ, இன்று காலையிலிருந்து ஊடகங்கள் இவ்விஷயங்களைக் கையிலெடுத்துக்கொண்டு இன்னும் இரண்டு வாரங்களுக்காவது பரபரப்பாக்குவார்கள்.

ஆக இரண்டு உயிர்கள் போயிருக்கின்றன. ஒன்றுக்கு வருத்தம் எழுகிறது. இன்னொன்றுக்கு இல்லை.

சாகும் நாள் தெரிந்தால் நிம்மதியாக வாழ முடியாது என்பார்கள். சரி தவறு என்பதையெல்லாம் புறக்கணித்துவிட்டுப் பார்க்கும்போது தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னதான சில மணித்துளிகளில் அம்மனிதர்களின் மனங்களில் எம்மாதிரியான எண்ண அலைகள் ஓடியிருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். கடைசி நொடியில் “யுவர் ஆனர்” யாராவது ஊசியைக் கீழே போடுங்கள் என்று சொல்லி “நிறுத்துங்கள்” என்று குரல் கேட்குமோ என்று நினைத்திருப்பார்களோ என்று தோன்றியது. கொடுங்கோலனாகச் சித்தரிக்கப்பட்ட சதாம் உசேன் நீண்ட தாடியுடன் உணர்வுகளற்ற முகத்துடன் கைகளில் விலங்குடன் முகம் மூடப்பட்டுக் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டப்பட்ட காட்சிகள் மனக்கண்ணில் நிழலாடின.

சர்வாதிகாரிகள், கொடுங்கோலர்கள், கொடூரக் குற்றவாளிகள், குற்றம் சாட்டப்பட்ட நிரபராதிகள் என்று எல்லாவித மனிதர்களும் மரண தண்டனைக்கு ஆட்படும்போது கடைசி நொடிகளில் எல்லாவற்றாலும் கைவிடப்பட்ட நிலையில் அவர்கள் கண்களில் தெரிவதென்ன - வாழும் ஆசையா?

மரணதண்டனையை எதிர்த்து உலகம் முழுவதும் குரல்கள் எழும்பிக்கொண்டுதான் இருக்கின்றன. எனக்கு அதில் தீர்மானமான கருத்து என்று இல்லை. இதைப்பற்றி எனக்குள் எழும் ஏராளமான கேள்விகள் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. உயிரைத் தருவதும் உயிரைப் பறிப்பதும் எல்லாம் வல்ல பரம்பொருளே என்று தத்துவமாகவும் யோசிக்க இயலவில்லை. இதிலெல்லாம் நடுநிலையாகக் கருத்துசொல்ல கடவுளாக இருக்க வேண்டும் போல. எனக்கு உணர்வுகள் நிரம்பிய மனிதனாக இருப்பதே சௌகர்யமாக இருக்கிறது.

 ***

1 comment:

ILA (a) இளா said...

இன்னிக்கும் ஒவ்வொரு பதிவா படிச்சுட்டு, இதுல வந்து நின்னுட்டேன். இதுக்குமேல படிக்கப்போறதில்லை. :(