Saturday, February 08, 2014

பகல் நேரத் தெரு


குறுகலான தெருக்கள். அடுக்கடுக்காய் அகலம் குறைந்த நீஈஈஈஈளமான கொண்ட வீடுகள். பொதுச்சுவர். ஒரு வீட்டு மொட்டை மாடிக்குப் போனால் மொத்த தெருவையும் மொட்டை மாடிகள் வழியாகவே கடந்துவிடலாம்.

திண்ணையின் தட்டிக் கதவிலிருந்து கொல்லைப்புறக் கதவுவரை சேர்த்தால் அதிகப்பட்சமாக மூன்று அல்லது நான்கு கதவுகள் ஒரே நேர்க்கோட்டில். வாசலில் நின்று பார்த்தால் கொல்லைப்புறக் கிணறு தெரியும். எல்லாக் கதவுகளும் பகல்வேளையில் திறந்தேயிருக்கும். மாலையில் கொல்லைப்புறக் கதவு மட்டும் சாத்தப் படும். வீட்டின் கடைசி நபர் உறங்கச் செல்கையில் தட்டிக்கதவு மூடப்படும். பூட்டு என்ற ஒன்றைப் பார்த்திராத கதவுகள். வீட்டில் எங்கு இருந்தாலும் வாசலில் யாராவது வந்தால் லேசாக எட்டிப் பார்த்தாலே போதுமானது. வாசலில் நின்று பார்க்கும்போது வாசலும் கொல்லைப்புறமும் பளீரென்று வெயிலுடன் இருக்க எட்டிப்பார்க்கும் வீட்டுக்காரர்களின் தலை, தோள்கள் சில்லவுட்டில் தெரியும். வற்றாயிருப்பில் நான் வசித்த வீடுகளின் அமைப்பு பெரும்பாலும் இப்படித்தான் இருந்தது. 

மதிய வேளைகளில் காலம் நின்றது போல தெருக்களும் வீடுகளும் இயக்கமின்றி காட்சியளிக்கும். உண்ட களைப்பில் திண்ணையில் படுத்திருக்கும் வயசாளிகள். அதிகாலையிலிருந்து வீட்டு வேலை செய்து உழைத்துக் களைத்துப் போன இல்லத்தரசிகள் வீட்டினுள் சிறுபலகையை தலையணையாய் வைத்து கண்ணயர்ந்திருப்பார்கள். பெரியவர்கள் வேலையிடங்களில். பிள்ளைகள் பள்ளிகளில். மூன்றாவது வீட்டில் ஆடிக்கொண்டிருக்கும் ஊஞ்சலின் கிறீச் சத்தம் காற்றில். பூனைக்குட்டி அடுக்களையில். தொழுவத்தில் நுரை ததும்ப அசைபோடும் மாடு. தெருவில் மொத்த வெயிலையும் முதுகில் வாங்கிக்கொள்ளும் உத்தேசத்துடன் நகராதிருக்கும் எருமையொன்று. 

எப்போவது ஒரு சமயம் திறந்திருக்கும் கொல்லைப்புறக் கதவு வழியாக இலக்கு தப்பி வந்த தெருநாய் ஒன்று நுழைந்து சாவதானமாக வாசற் கதவு வழியாக வெளியேறிச் செல்ல படுத்திருந்தவர்கள் எல்லாரும் அரக்கப் பறக்க எழுந்து வீறிடுவார்கள். திண்ணையில் தாத்தா “அதோட காலை ஒடி” என்று கத்த, பாட்டி தூக்கம் கலைந்து எழுந்து என்னவென்று சுதாரிப்பதற்குள் அந்த நாய் ஒரு கணம் தயங்கி நின்று பிறகு தெருவின் கோடிக்குச் சென்று காணாமல் போயிருக்கும். அமைதி கலைந்த அந்தச் சில நிமிடங்கள் சுவாரஸ்யமானவை. மூன்று மணிக்கு அலுமினிய கேன் ஒன்றை அணைத்துக் கொண்டு இன்னொரு கையால் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு பால்காரர் வந்துவிடுவார். மறுபடியும் உறக்கம் பிடிக்காமல் பெண்மணிகள் பில்டர் காஃபி போட ஆயத்தமாவார்கள். 

பிற்பகல் சாயும் வேளையில் தெரு உயிர் பெற்று எழும்.

***

No comments: