Sunday, July 25, 2004

*** ஜே.ஜே. சில குறிப்புகள் பற்றிச் சில குறிப்புகள் - 3 *** 

ஜே.ஜே. ஒரு சிறந்த கால்பந்தாட்டக் காரன் - வங்காளத்தைத் திருவிதாங்கூர் தோற்கடிகுமளவிற்குச் சிறந்த - என்பது ஒரு உபதகவல். மனதில் நூறு கால்பந்துப் போட்டிகளுக்கான ஆரவாரமும், வேகமும், முட்டி மோதுதல்களும், துரத்துதல்களும் நிறைந்திருக்கும் ஒருவன் கால்பந்தாட்ட வீரன் என்பது வினோதமாக இருக்கிறது. 

பாலு, ஜே.ஜே.யின் முதற் சந்திப்பு அவ்வளவு சிலாக்கியமாக இல்லை. புகழ்பெற்றவர்களைச் முதன்முதலில் சந்திக்கையில் மனதிலிருக்கும் பிம்பம் உடைந்துபோகும்; சந்திப்புகள் அவ்வளவு சுவாரசியமாக இருப்பதில்லை - என்று அம்பல அரட்டையில் சுஜாதா சொன்னபோது நான் நம்பவில்லை. அவரை முதன்முதலில் சந்தித்தபோது எனக்குள் அவரைப்பற்றிய எந்தவொரு பிம்பமும் உடைந்துபோகவில்லை. ஜே.ஜே.யை முதன்முதல் எழுத்தாளர் மாநாட்டில் 'தமிழ் எழுத்தாளர்' என்ற அறிமுகத்தோடு பாலு சந்தித்தபோது, ஜே.ஜே. திடீரெனச் சத்தம் போட்டுப் பரிகாசமாகச் சிரித்துக்கொண்டே கேட்டது 'சிவகாமி அம்மாள், அவளுடைய சபதத்தை நிறைவேறி விட்டாளா?' என்பதுதான். சிவகாமி சபதத்தை பாலு எழுதியிராவிட்டாலும் திருச்சூரின் மனநிலை அவனுக்கும் வந்ததில் வியப்பில்லை.  மேலும் வாய்திறப்பதற்குள் அரங்கிற்குள் நுழைந்த ஜே.ஜே.யின் நண்பனை வரவேற்க ஜே.ஜே. போய்விட்டான். அச்சந்திப்பு சட்டென முடிந்துவிட்டது. நாம் ஜே.ஜே.யை முதன்முதலில் சந்தித்து, சந்திப்பு சட்டென முடிந்ததுபோல் உணர்கிறோம். மாநாடு நடந்து (1951) ஒன்பது வருடங்கள் பிறகு ஜே.ஜே. இறந்தான். இவ்வருடங்களை அவனது பொற்காலம் என்று குறித்திருக்கிறார்கள். 'மரணத்தின் குகைவாயில் கண்ணுக்குத் தெரியும்போது, எழுத்தில் ஒளி ஊடுருவுகிறது' என்று ஜே.ஜே. நாட்குறிப்பில் குறித்து வைத்திருக்கிறானாம். 

இவை சோதனையான காலங்களும் கூட ஜே.ஜே.க்கு. வாழ்வையே சீர்குலைக்கும் சோதனைகள். குடும்பச் சிக்கல்கள்; நட்பு முறிவுகள்; குழந்தைகளின் எளிய ஆசைகளை நிறைவேற்ற இயலாமை, ஆரோக்கியச் சீர்கேடுகள், வறுமை - 'வாழ்க்கை பயங்கரமானது' என்று நாம் கத்திச் சொல்லும்படி இருந்தனவாம் அவனுடைய அனுபவங்கள். 

"'எந்தத் தளத்திலிருந்து நான் இதுகாறும் நகர்ந்து வந்துகொண்டிருந்தேனோ, அங்கிருந்து சரிந்து விழுந்துவிட்டேன். நேர்மை, ஒழுக்கம், உன்னதம் எல்லாவற்றையும் நான் முற்றாக இழந்துவிட்டேன்' என்று அழுதானாம். சில சறுக்கல்களும், சமரசங்களும் தவிர்க்கமுடியாது போனதாம். மகா புருஷர்களைக் கசக்கி, அசடு வழியச் செய்த வாழ்க்கை அதன் கைவரிசையை அவனிடத்திலும் காட்டிற்று. அவனோ பெரிய மானி. விரல்கள் அபசுரம் எழுப்பினால் வெட்டிவிடவேண்டும் என்று நினைக்கும் வைணிகனைப் போன்றவன். கீறல்களைப் பெரும் சரிவுகளாய் அவன் எடுத்துக்கொண்டதில் ஆச்சரியம் இல்லை" என்கிறார் பாலு. 

"எங்கும் இந்தக் கதைதான். பாரதி ஜமீனுக்குத் தூக்கு எழுதினான். புதுமைப்பித்தனும், எம்.கே.டி. பாகவதருக்கு வசனம் எழுதப்போனான். 'பிறந்தபோது உன் குழந்தைக்குத் தொட்டில் இல்லை. இறந்தபோது சவப்பெட்டியும் இல்லை, அதற்கு' என்று மார்க்ஸ¥க்குக் கடிதம் எழுதினாள் அவன் மனைவி. ஜேம்ஸ் ஜாயிஸை வறுமை துரத்திப் பிடித்து விரட்டிற்று. சத்தியத்தை விரட்டிக்கொண்டு போகிறவனுக்கு துக்கத்தின் பரிசுதான் எப்போதும் கிடைத்திருக்கிறது. புறக்கணிப்புகள். மன முறிவுகள். ஓட ஓட விரட்டல். ஒதுக்கி அவமானப்படுத்தும் கேவலங்கள். மிகக் கஷ்டமான காலகட்டத்திலும் ஜே.ஜே. மிக ஊக்கமாக, சூரியனை நோக்கி கருகிப்போய் விழுவது தெரிந்தும் கவலை கொள்ளாமல், பறந்து செல்லும் பறவைகள் போல, செயல்பட்டிருக்கிறான். நெருக்கடியில் எப்படி எழுதினான் என்றால் நெருக்கடியால்தான் எழுதினான் என்று சொல்லவேண்டியிருக்கும்".

மிகவும் யோசிக்க வைக்கிறது. நேர்மையாய், நியாயமாய், உண்மையாய் வாழ்வதே தவறோ என்று எண்ணம் ஓங்குகிறது. கெட்டவர்களுக்கு மட்டும் இச்சமூகம் வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்றுத் தாங்குவதேன் என்று மகாநதியில் கமல் மனம் குமுறிச் சொல்வது போல், மனம் குமுறுகிறது. மனத்துள் பல கேள்விகள் பிறக்கின்றன. விடை தேடி ஓடுகின்றன. நெரிசல் தெருக்களிலும், வாகனங்களுக்கிடையேயும் ஓடுகின்றன. மூச்சு முட்டுகிறது. காங்க்ரீட் கட்டடங்களுக்குள் புகுந்து புறப்படுகின்றன. சமூகத்தின் அத்தனை அங்கங்களையும் வருடிப் பறந்து செல்கின்றன. விடைகள் கேள்விகளைத் துரத்த, கேள்விகள் மேலெழும்பி மிதிக்க, மூச்சு முட்டுகிறது. அண்டவெளியில் காற்றில்லா, இருளிலா வெட்ட வெளியில் சென்றுவிடலாம் போலத் தோன்றுகிறது. அங்குச் சென்றாலும் நட்சத்திரங்கள் கைதட்டி, கண் சிமிட்டிப் பரிகசிக்கும் என்று பயமாக இருக்கிறது. 

அடிவருடிகள், காக்காய்க் கூட்டம், ஏமாற்றிப்பிழைப்போர், திருடி கொள்ளையடித்துப் பிழைப்போர் இவரெல்லாம் ராஜபோகமாக வாழ்வதுபோலவும், நல்லவர்கள் வாடித்துன்புறுவது போலவும் எனக்குத் தோன்றுவது நிஜமா, பிரமையா? தோற்றம் பொய்களோ? காட்சிப் பிழைதானோ? 

ஜே.ஜே.யின் சிந்தனைகள் அனைத்தும் அவன் எழுதி வந்திருக்கிறான். மொத்த நாவலையும் நாட்குறிப்புத் தொகுதிகள் என்று சிலர் சொல்கிறார்கள். எனக்கு அப்படித் தோன்றவில்லை. ஜே.ஜே. சில குறிப்புகள் ஒரு துணுக்குத் தோரணம் அல்ல என்று உறுதியாக நம்புகிறேன்.

"அவன் எழுத்து முழுவதையுமே நாட்குறிப்புகள் என்று சொல்லிவிடலாம். இதனால் சுய தெளிவுக்கு எழுத்தை ஆளும்போது, அது கொள்ளும் குணங்களோடு, நடையில் அந்தரங்கக் குரலும் ஏறியிருக்கிறது. சந்தித்த சாதாரண மனிதர்களைப் பற்றி, நண்பர்களைப் பற்றி, படித்த புத்தகங்களைப் பற்றி, விசித்திரமான தெருக்கள், படிக்கட்டுகள், குடியிருப்புப் பகுதிகள் பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக எழுதுகிறான். காட்சிப் புலன்களை அவன் வர்ணிக்கும்போது, அவனிடம் ஒளிந்துகொண்டிருக்கும் ஓவியன் வெளிப்படுவது தெரியும். வர்ணத்தை வீசிவிட்ட ஓவியன் இங்கு வார்த்தைகளால் வரைகிறான். அதன்பின் அவன் மனத்தில் குமிழியிடும் கேள்விகள், சந்தேகங்கள். விடைகாணும் முகமாய் குடையும் குடைச்சல்கள். இதில் சில சமயம் அதிக உற்சாகமடைந்து, கேள்வியை விட்டு வேறெங்கோ போய்விடுகிறான். சில சமயம் அவன் சிந்தனை சண்டிக்குதிரை போல் நடுவழியில் படுத்துக்கொண்டு விடுகிறது.

நேர் அனுபவங்கள் அவனிடம் மிகப்பெரிய ஆட்சியைச் செலுத்துகின்றன. பார்ப்பது, கேட்பது, உடல் உறவுகள் இவை தரும் முக்கியத்துவம் அதிகமாகவே இருக்கின்றன. சகஜம் ஒருபோதும் அவனுக்குச் சகஜமாவதில்லை. 'இது இப்படித்தான்' என்ற ஆசுவாசம், நிம்மதி அவனிடத்தில் ஒருபோதும் இல்லை. சுய அனுபவத்தின் கீற்றிலிருந்து ஒரு கேள்வி பிறக்கிறது. அந்தக் கேள்வியை மாறிமாறி எழுப்பி முட்டி மோதுகிறான். இந்த மோதல்கள், உயரும் மும் மைதானத்தைச் சுற்றும் விமானத்தை நம் நினைவுக்குக் கொண்டுவருகின்றன. இந்த ஈர்ப்பில் கரைந்து, நாம் பின் தொடர்ந்து போகும்போது ஒரு கட்டத்தில் விமானம் மேக மண்டலங்களில் புதையுண்டு, நம் காட்சிப் புலன்களைத் தாண்டிவிடும் ஆயாசம் நம்மைச் சோர்வில் ஆழ்த்தும்.

ஒரு நாள் அவன் ஓரிடத்தில் மழைக்கு ஒதுங்கி நிற்கும்போது, அங்கு ஒதுங்கிய ஒரு பசுவின் மேல், ஒதுங்கி நின்ற ஒருவன், மிகுந்த சிரமத்திற்குத் தன்னை ஆட்படுத்துக்கொண்டு, வெற்றிலைத்தம்பலத்தைக் குறிவைத்துத் துப்புவதைக் கண்டான். செஞ்சாறு கொழகொழவென்று பசுவின் வயிற்றோடு இரு பக்கங்களிலும் வழிந்தது. இக்காட்சியை நாட்குறிப்பில் சிக்கனமான வார்த்தைகளில் விவரித்துவிட்டு, அவ்வாறு அவன் செய்யக் காரணம் என்ன என்ற கேள்விக்கு விடை தேடிக்கொண்டு போகும் போது, மொழி, இனம், தேசத்தின் எல்லைகள், சரித்திரம் இவற்றைத் தாண்டி, மனித மனத்தின் காணத்துடிக்கும் ஆவேசத்தை அவனிடம் பார்க்க முடிகிறது. மனிதனின் கீழ்மைகள் சுயபிரக்ஞையற்றவை என்றும், தன்னைப் பற்றி அவன் அறிந்துகொள்ள, ஒழுக்கவியல் மரபுகளும், அம்மரபுகளை வற்புறுத்தும் மதச்சிந்தனைகளும் பெரும் தடையாக முனைந்துவிட்டதையும் அவன் காட்டிக்கொண்டு போகிறான். 'மனிதன் தன்னைச் சகஜமாக வெளிப்படுத்திக்கொள்ளமுடியாமல் போய்விட்டது. பரிபூரணத்தின் குரூரமான உருண்டைகள் பொறுப்பற்று அவன் முன் உருட்டப் படுகின்றன. தன்முன், தன் கழுத்திலேயே பிணைக்கப்பட்ட கழியின் எதிர்முனையில் தொங்கும் உணவை எட்ட, நிரந்தரம் ஓடிக்கொண்டிருக்கும் குதிரையின் வியர்த்தம் மனிதன் மீது குரூரமாகக் கவிழ்க்கப்பட்டுவிட்டது. கீழ்மைகள் துறந்ததான பாவனையின் போலி மரபுக்கு முன்னால், மனிதன் தன்னை மறுத்துக்கொள்ள வற்புறுத்தப்படுகிறான். இது எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டநிலை. மனிதனாய் இருப்பதன் பொருட்டே தன்னைப் பார்த்து வெட்கப்பட்டுக்கொள்ளும் மனிதனின் விசித்திரநிலை. அவன் பிராணிகளின் இனம். பாலூட்டி, தன்னைச் சிறிது அறிந்துகொள்ள சக்தி பெற்றுவிட்டபிராணி. அனுபவங்களை ஆராயத் தெரிந்த பிராணி. வழி நடக்கவும், திசை திரும்பவும், பின்னகரவும், மீண்டும் முன்னகர்ந்து செல்லவும் தெரிந்த பிராணி. சகஜமாக அவன் தாண்டல்களை நிகழ்த்திக்கொண்டு வந்தான். அவன் ஆத்மாவில் இயற்கையாகக் கனிந்த பழங்களை உண்டு அவன் பயணம் தொடர்ந்தான். நாகரிகத்தை உருவாக்க முயன்ற சட்டாம்பிள்ளை, மனிதனின் நெடுந்தூரப் பயணத்திற்குப் பின் வந்து சேர்ந்தவன். பரிபூரணத்திற்கும், மனிதனுக்குமுள்ள இடைவெளியைக் காட்டும் துரோகத்தை நிகழ்த்தியவன் இவன் தான். அடைய வேண்டியதை அடையமுடியவில்லை என்ற ஆயாசத்தையும், தனது எண்ணங்களையும் செயல்களையும் வெறுக்கும் மனநிலைகளையும், குற்றஉணர்ச்சிகளையும் உருவாக்கியவன் இவன் தான். இதனால் இயற்கையின் பேரதிசயமான ஒத்திசைவுகள் குலைக்கப்பட்டுவிட்டன. தன்னையே நிந்தித்துக்கொண்டிருப்பவன் எப்படிப் பயணத்தைத் தொடர முடியும்? இப்போது நாம் செய்யவேண்டியது இதுதான். மனிதனை உருவாக்க அவன் குரல்வளையைப் பற்றிக்கொண்டிருக்கும் கொடிய கரங்களிலிருந்து அவனுக்கு விடுதலை தேடித் தர வேண்டும். ஒவ்வொரு மனிதனிடமும் சென்று 'நீ எப்படி இருக்கவேண்டுமென விரும்புகிறாயோ அப்படியே இரு' என்று நாம் கெஞ்சிக் கேட்டுக்கொள்ள வேண்டும். இந்த இரண்டாயிரம் வருடங்களாக மனிதன் அடைந்திருக்கும் சங்கடங்கள், நிம்மதியின்மை, குற்ற உணர்ச்சிகள், பாவ உணர்ச்சிகள், அவமானங்கள், தன் கரங்களால் தன் தலைமீது போட்டுக்கொண்ட அடிகள், இவற்றிலிருந்து அவனுக்கு முற்றாக விடுதலை கிடைக்கவேண்டும். அவன் இயற்கையாகப் பயணத்தைத் தொடரட்டும். அவன் கால் சுவடுகளில் துளிர்ப்பவை எவையோ அவைதாம் நாகரிகம். அவன் பாய்ந்துபிடிக்க அடிவானத்திற்குப் பின்னால் ஏதோ தொங்கிக்கொண்டு இருக்கிறது என்ற கற்பனை இனி வேண்டாம்."

படித்துக்கொண்டிருக்கையில் பின்னங்கழுத்தில் மரண அடி விழுந்தது போன்ற உணர்வு. முகத்துக்கு நேராக நிர்தாட்சண்யமின்றி கைவிரல் நீட்டி 'நீ பொய். இவையனைத்தும் பொய்' என்று உரக்க என்முன் ஜே.ஜே. அலறுவது போல பகீரென்று இருக்கிறது எனக்கு. சன்னல் வெளியே மாலைச் சூரியனின் ஒளியில் சோம்பலாக உறங்கும் வீதிகளையும் கட்டிடங்களையும் பார்க்கிறேன். ஒரேயொரு ஒற்றைக் காகம் மட்டும் குறுக்காகப் பறந்து செல்கிறது - கரைந்துகொண்டு. நானும் காக்கையும் மட்டும் இருக்கும் ஒரு தனி உலகை உணர்கிறேன். 

தொடரும் 

***

No comments: